Loading

11 – விடா ரதி… 

 

ரகு கடைக்குச் சென்ற பிறகும் மனைவியின் செயலில் உவகைப் பொங்க, சிரிப்புடன் கடையை வலம் வந்துக் கொண்டிருந்தான். 

 

அந்நேரம் அவனது அம்மா அவனை அழைத்தார். 

 

“என்னடா ஏதோ பிரச்சனையாம்…. “, எனத் தன் செவிகளுக்கு வந்த விசயத்தைப் பற்றிக் கேட்டார். 

 

“இன்னிக்கி உன் மருமக என்ன பண்ணினா தெரியுமா?”, என ஆரம்பித்து நடந்த விசயங்களைக் கூறினான். 

 

“நிஜமா அவனை அடிச்சாளா டா?”, அவன் தாயின் குரலில் சந்தோசமும், நிம்மதியும் கலந்து ஒலித்தது. 

 

“ஆமா மா….. கண்டிப்பா அவனுக்கு ஒரு பக்கம் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்….”,

 

“அவனுக்கு ஜவ்வு இருந்தா என்ன இல்லைன்னா என்ன….. உனக்காக அவ நின்னது தான் டா இப்ப எனக்கு அம்புட்டு சந்தோசமா இருக்கு.. நீ அவளத்தான் கட்டுவேன்னு சொன்னப்ப கூட நான் அவ இந்த அளவுக்கு உன்ன நேசிப்பான்னு நினைக்கல டா….. இப்ப என் மனசு குளிர்ந்து போச்சி…. வர வாரமே அவள கூட்டிட்டு இங்க வா.. நம்ம 18ஆம் படி கருப்புக்கு கெடாவெட்டி ஊருக்கே நான் விருந்து வைக்கப்போறேன்…”

 

“அவன அடிச்சதுக்கா?”

 

“உனக்காக அவ அடிச்சதுக்கு டா….”

 

“அப்ப நாளைக்கு என்னையும் உன் மருமக அடிச்சா கெடா வெட்டுவியா மா?”, அப்பாவிப் போலக் கேட்டான். 

 

“பொண்டாட்டி கையால அடிவாங்காம புருஷனுங்க உருப்பட்டதா சரித்திரம் இல்லடா மகனே…. உனக்காக இன்னிக்கி ஒருத்தன அடிக்கறவ, உன்ன கொடுமை பண்ண எல்லாம் அடிக்கமாட்டா.. நீ தப்பு செஞ்சா கண்டிப்பா அடிச்சி தான் திருத்தோணும்…..”

 

“என்னம்மா நீ? மருமககிட்ட சண்டை போடமாட்டியா?”

 

“இப்போ எதுக்குடா எங்களுக்குள்ள கோல்மூட்டற? எங்களுக்கு நடுவுல நீ வராத.. புரிஞ்சுதா?”

 

“பாக்கறேன் ….”

 

“சரி வீட்ல காவலுக்கு ஆள் போடு இனிமே….. அவ வேலைக்கு போகனும்னு சொல்றாளா என்ன பண்றா?”, அடுத்த கேள்விக்கு தாவினார். 

 

“இப்போ பண்ணிட்டு இருக்க புரோஜெக்ட் முடியனும்-ன்னு சொல்றா… அவ இஸ்டப்பட்டா வேலை பாக்கட்டும்ன்னு சொல்லிட்டேன்… “

 

“அதெப்படி நீ அப்புடி சொல்லலாம்? அவ பாட்டுக்கு வேலைக்கு போகனும்னு கெளம்பி போயிட்டா நீ தனியால்ல இருப்ப…. இப்பவே ரெண்டு பேருக்கும் வயசு 30 ஆச்சி… உனக்கு 33… இப்ப ஒரு கொழந்தை பெத்தா தான் டா அவளுக்கும் பரவால்ல… “

 

“மா…. ஏன் மா?”

 

“என்ன ஏன் மா? வயசு ஆகுது ஞாபகம் இருக்கா?”

 

“இப்ப தான் உன்ன நல்ல மாமியார்ன்னு நெனைச்சேன்… அதுக்குள்ள ஆரம்பிக்கிற பாரு….”, சலிப்புடன் கூறினான். 

 

“உன் வேலைய ஒழுங்கா பாரு.. நான் என் மருமககிட்ட பேசிக்கறேன்…….“, என வைத்துவிட்டார். 

 

இங்கே வைத்ததும் அங்கே அவளுக்கு அழைத்துவிட்டார் அவனின் அம்மா சாந்தாதேவி. 

 

“அம்மாடி…. என்ன பண்ற? நல்லா இருக்கியா? வீடு எல்லாம் பழகிட்டியா?”, என வாஞ்சையுடன் ஆரம்பித்தார். 

 

“இப்பதான் அத்த பழகிட்டே இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்காரு? சாப்டீங்களா?”

 

“நாங்க சொகமா தான்டி இருக்கோம்… காலைல அந்த வீராசாமி பையன அடிச்சியாம் அப்படியா?”, ஒன்றும் அறியாதவர் போல கேட்டார். 

 

“உங்க பையன்கிட்ட பேசிட்டு தானே இப்ப எனக்கு ஃபோன் பண்றீங்க…. அவரே எல்லாம் சொல்லி இருப்பாறே…’, எனச் சிரிப்புடன் கேட்டாள். 

 

“அவன் சொன்னானோ இல்லையோ நான் இப்ப உன்ன தானே கேக்கறேன் நீ பதில் சொல்லுடி….”, சற்று அதிகாரமாக தான் கேட்டார். 

 

“என்ன சாந்தம்மாத்த…. மாமியார் அதிகாரமோ?”, அவளும் அவரிடம் வம்பிலுத்தாள். 

 

“ஆமா அப்படி தான் வச்சிக்க…. கேட்டதுக்கு பதில் சொல்லுடின்னா சும்மா நசநசன்னு பேசிட்டு….”

 

“ஆமா அடிச்சேன்.. என் புருஷனை தரக்கொறவா பேசினா விடுவேனா? அதான் ஒன்னு வச்சேன்….”, பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறினாள். 

 

“அதென்னடி சட்டுன்னு கைய நீட்டற பழக்கம்?”, சந்தோஷமாகவே கேட்டார். 

 

“உங்க புள்ளைய நீங்க ஒழுங்கா வளத்து இருந்தா நான் ஏன் கைய நீட்ட போறேன்? அவன் அவ்ளோ பேசறான் இவரு கம்முன்னு நின்னா என்ன அர்த்தம்… கழுத்த திருப்பி இருந்தா நானும் சந்தோஷப்பட்டு இருப்பேன்…”

 

“என்னடி செய்ய.. .அவனுக்கு அவங்கப்பன் கொணம்…. அதான் கொஞ்சம் அமைதியா இருக்கான்…. “

 

“எனக்கு என் கொணம் தான். அதான் அடிச்சேன்…. “, மென்னகையுடன் கூறினாள். 

 

“சரி சரி… அடுத்த வாரம் கருப்பனுக்கு கெடா வெட்டணும்…. வெரசா அவன இழுத்துட்டு வந்து சேரு.. நீ தான் இங்க ஒரே மருமக…. எல்லாத்தையும் நீ தான் இழுத்துப்போட்டு செய்யணும்…. குடும்ப பழக்கவழக்கம் எல்லாம் வந்து தெரிஞ்சிக்கிடணும்…. வேலை செய்ய சொணங்க கூடாது சொல்லிட்டேன். அப்பறம் நான் மாமியார் கொடுமைய காட்ட வேண்டியதா இருக்கும்….”

 

“வந்து இங்க தான் இருங்களேன்… வேலை எப்படி செய்யறேன்னு சொல்லுங்க…”

 

“என்னடி மொட்டையா பேசற… அத்தைன்னு சொன்னா முத்து உதுந்துறுமா?”

 

“சரி சொல்லுங்க அத்த… என்ன விசயம்?”

 

“சீக்கிரம் எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து குடுக்கற வழிய பாக்காம நீ வேலைக்கு போறேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?”

 

“கைல குடுத்த வேலைய முடிச்சி குடுக்கணும்ல அத்த….. தவிர வேலைய பாத்துட்டே புள்ளைய பெத்தா நீங்க வந்து பாத்துக்க மாட்டீங்களா?”, என வம்பாக தான் தயார் என்று கூறினாள். 

 

“அடியாத்தாடி…. இந்த நாளுக்காக தான்டி நான் ஏங்கி கெடக்கேன்…. நீ மட்டும் நாளு தள்ளி போச்சுன்னு சொல்லு அடுத்த பஸ்ல அங்க வந்து நிப்பேன்ல…. “

 

“சரி சரி நான் சொன்னதும் கிளம்பி வந்துடுங்க.. அதுக்கு முன்ன உங்க புள்ளகிட்ட என்னைய ஹனிமூன் கூட்டிட்டு போக சொல்லுங்க….”

 

“அதென்னாடி மூணு?”

 

“ரெண்டா இருக்கிறவங்க மூனாவனும்னா அந்த மூனுக்கு போகணுங்க அத்த… “

 

“நாங்க எல்லாம் எந்த மூனுக்கு போனோமாம்? இங்கேயே நாலு புள்ள பெத்தோம் டி….”

 

“இப்படி பேசினா எல்லாம் தொட்டில் ஆட்ட முடியாது அத்த… நீங்களே உங்க புள்ளைக்கு எடுத்து சொல்லுங்க.. இங்க என் கூட படிச்ச புள்ளைங்க எல்லாம் வந்திருக்காங்க.. நான் அப்பறமா உங்ககிட்ட பேசறேன்… வச்சிடறேன் அத்த….”, எனக் கூறி வைத்தாள். 

 

இத்தனை நேரம் அவள் பேசியவற்றை எல்லாம் மீனாவும், பிரியாவும் கேட்டுக் கொண்டு தான் அமர்ந்து இருந்தனர். ஸ்வேதாவும், சவிதாவும் பேசிக்கொண்டே மற்றவர்களைப் பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். 

 

பிரியாவிற்கு ரதியின் மீது பெரிதாக விருப்பமும் இல்லை, வெறுப்பும் இல்லை. ஆனாலும் அவளை அவளின் தோழியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டு காலமாக ரதி நட்பென நினைத்து மதித்துப் போற்றியதை, பிரியா நீ நட்பே இல்லை என்பது போல செய்துவிட்டாள். சமீபத்தில் உணர்ந்து கொண்டதால், அந்த வலியும் இன்னும் ரதியின் உள்ளே கனத்துக் கொண்டிருக்கிறது.    

 

மீனாவிற்கு தான் பொறாமையில் காதில் இருந்து புகை வந்தது. அவள் கட்டி சென்ற மாமியார் வீட்டில் யாரும் அத்தனை கரிசனமும் இல்லை, அக்கறையும் படுவதில்லை. கணவனும் வார இறுதியில் பெற்றவர்களைக் காணச் சென்றுவிடுகிறார். ஏகப்பட்ட மனத்தாங்கல்கள், முரண்பாடுகள் என வாழ்க்கைச் சென்றுக் கொண்டிருக்கிறது. 

 

“என்ன ரதி ஒரே கொஞ்சலா இருக்கு ? என்ன சொல்றாங்க உன் மாமியார்?”, என நக்கலாகக் கேட்டாள். 

 

“வீட்டு பழக்க வழக்கம், முறை எல்லாம் தெரிஞ்சுக்கணும்-ன்னு சொல்றாங்க…. அடுத்த வாரம் மதுரை வர சொல்றாங்க….”, அவர்களுக்கு பழரசம் கொடுத்தபடிக் கூறினாள். 

 

“நீ போகணுமா?”, மீனா. 

 

“ஆமா… போகணும் தானே… நானும் அதுலாம் தெரிஞ்சுக்கணும்..”

 

“உன் வேலைய விட்டுட்டு எதுக்கு அவ்ளோ நாள் லீவ் போட்டுட்டு போகணும்? உனக்கு வேலை இருக்குன்னு சொல்லு…. உன் புருஷன இப்பவே கைக்குள்ள போட்டு வச்சா தான். இல்லைன்னா அம்மா பின்னாடி தான் சுத்துவாங்க…. நம்ம சொல்றத காது குடுத்து கேக்க கூட மாட்டாங்க….. அப்பறம் அவங்க சொல்றதுக்கு எல்லாம் நீ தான் வளைஞ்சு போகணும்…. “

 

“நீ இப்டி தான் அண்ணன கைக்குள்ள வச்சிருக்கியா மீனா?”

 

“எல்லாம் ஆரம்பத்துல தான்.. ஒரு புள்ள பிறந்ததும் அந்த கிரிப் இருக்கறது இல்ல…. நீ வேற லேட்டா தான் கல்யாணமே செஞ்சிருக்க… 30 ஆகிரிச்சி… கொஞ்சம் கஷ்டம் தான்…. “, எனக் கூறிச் சிரித்தாள். அவளின் சிரிப்பில் சவிதா கடுப்பாகி அவளை முறைக்க, ஸ்வேதா அவளைத் திட்டினாள்.

 

“மீனா.. கொஞ்சமாவது டீசென்டா பேசு…. அவளே இப்பதான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு சந்தோசம் படாம அவளுக்கு ஏன் தப்பு தப்பா அட்வைஸ் பண்ணிட்டு இருக்க?”

 

“நான் இருக்கறத தானே சொன்னேன்… வயசு இருக்கற வரைக்கும் தான் எந்த ஆம்பளையும் மயங்கி கெறங்குவான்… இல்லன்னா யாரு திரும்பி பாப்பா?”

 

“என் புருஷன் என்னை பொண்டாட்டிங்கற அன்போட பாத்தாலே எனக்கு போதும் மீனா… உடம்ப காட்டி மயக்க நான் ஒன்னும்….. அந்த வார்த்தைய சொல்ல விரும்பல….‌ நீ என்மேல இருக்கற பொறாமைல பேசுறன்னு அப்பட்டமா தெரியுது…. அன்னிக்கி உன் பேச்ச கேட்டு தான் நான் நேரடியாக அவர்கிட்ட பேசாம போய் இத்தன வருஷம் நரகத்த அனுபவிச்சேன்…. உன்ன பொறுத்தவரைக்கும் கல்யாண வாழ்க்கை எப்படியோ எனக்கு தெரியாது. இது எனக்கு ரொம்ப பெருசு, இந்த வாழ்க்கை எனக்கு கிடைக்காதுன்னு நினைச்சி, நொந்து நான் பல வருசம் கண்ணீர் சிந்தி இருக்கேன். தெய்வாதீனமா இன்னிக்கி அமைஞ்சி இருக்கு. அதை நான் சரியா வாழனும், எனக்கு பொறுப்பு இருக்கு, இந்த குடும்பத்தை மேல கொண்டு போகணும், இங்க நாங்கன்னா என் மாமனார், மாமியாரும் தான். நாளைக்கு புள்ளைங்க வந்தா அவங்க கைல குடுத்து வளத்தனும்ன்னு தான் ஆசைப்படறேன் . என் மாமியார் சாதாரணமான ஆளு இல்ல. அவங்க அந்த சின்ன வயசுல பொறுப்புணர்ந்து, குடும்ப சுமைய தோள்ல தூக்கி இன்னிக்கி இந்த அளவுக்கு இந்த குடும்பத்த உயர்த்தி இருக்காங்க…. அவங்களுக்கு குடுக்க வேண்டிய மதிப்பு குடுத்தாலே போதும் அவங்க சந்தோசமா ஆசிர்வதிப்பாங்க .. கண்டிப்பானவங்க தான். அப்படி இருந்ததால தான் இன்னிக்கி இத்தன மதிப்பு மரியாதைய சேத்தி இருக்காங்க… எங்க குடும்பத்த எப்படி நடத்தணும்ன்னு எங்களுக்கு தெரியும்….”

 

“இன்னிக்கி எல்லா மாமியாரும் கொஞ்சி தான் பேசுவாங்க… கொஞ்ச நாள் போனா தானே தெரியும்…. ஊருல இல்லாத மாமியார் தான் அவங்க….”

 

“ஆமா மீனா…. எங்கேயும் இல்லாத மாமியார் தான். அவங்க வொர்த் உனக்கு தெரியல…. மிதிச்சா எதுக்கலாம், மிதிச்சிருவாங்களோன்னு எதுத்துட்டு நிக்க கூடாது எப்பவும்…. நீ சரியா கையாண்டு இருந்தா உன் புருஷன் ஏன் லீவு வந்தாலே அம்மா வீட்டுக்கு போறாரு? பொறுமையும், அக்கறையும், இது நம்ம குடும்பம்ங்கற எண்ணமும் தான் அடிப்படையா வேணும். ஒரு சிலர் சுயநலமா இருக்காங்க தான். ஆனா எல்லாரையும் அதே மாறி பாக்ககூடாது…”

 

“சரி நீயாச்சி, உன் குடும்பமாச்சி….. நான் கிளம்பறேன்… நீ வரியா ப்ரியா?”

 

“ஒரு நிமிஷம்…. பிரியா…. நாம காலேஜ் படிச்சப்போ ரகு உன்கிட்ட எதாவது என்னைப்பத்தி கேட்டாறா?”

 

“பத்து வருஷத்துக்கு முந்தின கதைய இப்ப கேட்டா அவ எப்படி சொல்லுவா?”, மீனாதான் பதில் கொடுத்தாள் இதற்கும். 

 

“நான் உன்ன கேக்கல…பிரியா என் மூஞ்ச பாத்து பதில் சொல்லு…..”

 

“இல்ல… எதுவும் கேக்கல….”, திணறியபடிக் கூறினாள். 

 

“நல்லா யோசிச்சு சொல்லு ஒன்னும் அவசரம் இல்ல… “, என அவளின் எதிரே அமர்ந்துக் கொண்டாள். 

 

“இல்ல…..”

 

“என்கிட்ட சொல்ல சொல்லி ஏதாவது சொன்னாறா ?”

 

“இல்ல ரதி….”, கைக்குட்டையைக் கசக்கியபடிக் கூறினாள். 

 

“அப்ப நீ உன் ப்ரெண்ட் சுகன்யா பத்தி அவர்கிட்ட சொன்னியா?”

 

“இ…. இல்ல….”

 

“பொய் சொல்லாத பிரியா….”

 

“இல்ல.. அவர்கிட்ட நான் பேசினதே இல்ல….”

 

“ஹோ… அப்போ நான் அவர லவ் பண்றேனான்னு உன்கிட்ட கேக்கவே இல்ல…. அப்படி தானே? “,‌எனக் கேட்டபடி பிரியாவின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். 

 

“……………”

 

“நீ என்ன சொன்ன தெரியுமா? அவ சும்மா டைம்பாஸுக்கு பாக்குறா…. என் பிரெண்ட் சுகன்யா தான் உங்கள லவ் பண்றான்னு சொல்லவே இல்லைல?”

 

“……..”, எதுவும் கூறாமல் அவள் அமைதியாக கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தாள். சவிதா அதிர்ந்து அவள் அருகில் சென்று அழைக்க, “என்னடி இது? உனக்கு அவள பிடிக்காது தான். அதுக்காக இப்படியா பண்ணுவ?”, எனக் கேட்டதும் பிரியா அழுகையுடன் அவளை அணைத்துக் கொண்டாள். 

 

“பிடிக்கல…. இந்த வார்த்தைய நீ 15 வருசம் முன்ன சொல்லலன்னாலும் காலேஜ்ல சொல்லி இருந்தா நான் உன்ன விட்டு மொத்தமா விலகி இருப்பேனே பிரியா… எனக்கு அறிவும், உங்கள போல நாசுக்கும் கம்மி தான். உன் விலகல எல்லாம் நான் விளையாட்டா தான் நெனைச்சேன்…. இப்படி இருக்கும்ன்னு யோசிக்கவே இல்ல…. உன்னை ப்ரெண்ட்ன்னு நெனைச்சதுக்கு நல்லாவே செஞ்சிட்ட….. ரொம்ப நன்றி.. இனிமே என் வாழ்நாள்ல என் கண் முன்னாடி வந்துடாத…. என்னால உன்ன திட்டமுடியல… என் அன்பு உனக்கு புரியவே இல்லைல…. மீனா நீயும் இனிமே ப்ரெண்ட்ன்னு சொல்லிகிட்டு என்கிட்ட நடிக்க வேணாம்…. ரெண்டு பேரும் கிளம்பலாம்….”, என வாசல் பக்கம் கைநீட்டினாள். 

 

பிரியா அழுதபடி செல்ல, மீனாவும் அதிர்வோடு மனதில் அடிபட்ட உணர்வுடன் வெளியே சென்றாள். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
13
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்