Loading

ஊஞ்சல் 11

 

காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து அவனோடு ஒட்டி உறவாடாது, மனதில் உறவாடி வெகு வருடம் வாழ்ந்தவளுக்கு, இந்த இரண்டு நாள்களைக் கடக்கப் பெரும் பாடாகிவிட்டது. திருமேனி ஆவுடையப்பன் இல்லாத வீடு நரகமானது அவனது மனையாளுக்கு. 

 

அவன் வரும் நாளுக்காக ஒவ்வொரு நொடியும் காத்துக் கொண்டிருந்தவள் செயலைப் பார்த்த அவனது பெற்றோர்கள் அவள் வீட்டிற்குச் சென்று வரக் கூறியும் கேட்கவில்லை.

 

“இங்க அவனையே நினைச்சுட்டு இருக்குறதுக்கு அம்மா அப்பாவைப் போய் பார்த்துட்டு வரலாம்ல.” 

 

“வேணாம் மாமா, இங்க நீங்க தனியா இருப்பீங்க”

 

“எங்களுக்கு இதெல்லாம் புதுசு இல்லம்மா. உனக்குப் பழகக் கொஞ்சம் டைம் ஆகும். அதுவரைக்கும் உன் வீட்டுக்குப் போயிட்டு வா. ஒரே இடத்துல இருந்தா பொழுது போகாது.”

 

“நானும் இதெல்லாம் பழகி தான ஆகணும் அத்தை. இப்ப இதைச் சமாளிக்க முடியாம அம்மா வீட்டுக்குப் போனா இதே பழக்கம் ஆகிடும்.” 

 

புகுந்த வீட்டு ஆள்கள் எவ்வளவு சொல்லியும் செல்ல மனம் வராமல் பொழுதைக் கழித்தாள் அவன் அறையில். பொறுத்துப் பார்த்தவர்கள் மருமகளுக்காக மகனைத் தொடர்பு கொண்டு பேச, மறுநாள் மனைவியை அழைத்தான்.

 

“உன்னை பிக்கப் பண்ண வண்டி வரும், ஒன் ஹவர்ல ரெடி ஆகிடனும்.”

 

“எதுக்குத் திரும்மா?”

 

“எதுக்கா இருந்தா உனக்கு என்ன? எந்தக் கேள்வியும் கேட்காமல் கிளம்பி மட்டும் இரு.” 

 

“சர்ப்ரைஸா?”

 

“ஆர்வக்கோளாறு பொண்டாட்டி. கொஞ்சம் வாய மூடிட்டு சொன்னதை மட்டும் செய்.”

 

“திரும்மா ப்ளீஸ்… ப்ளீஸ்… எங்க என்னைக் கூட்டிட்டுப் போகப் போறீங்கன்னு மட்டும் சொல்லுங்க, ப்ளீஸ்.”

 

“முடியவே முடியாது.”

 

“ப்ளீஸ்…”

 

“சான்சே இல்ல!”

 

“சரி ஏதாச்சும் க்ளூ குடுங்க…”

 

“ஓய்! என் வாயில இருந்து எதுவும் பிடுங்க முடியாது. ஒன் ஹவர்ல கிளம்பி இருக்கணும், அவ்ளோதான்.” 

 

அவன் அழைப்பைத் துண்டித்ததும் மாமனாரிடம் ஓடியவள், “உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா மாமா” என்று கேட்க, 

 

“எங்களுக்குத் தெரியும். ஆனா, சொல்ல மாட்டோம்.” மருமகளை வெறுப்பேற்றினார் ராணி.

 

“என் செல்ல அத்தைல, ப்ளீஸ்…”

 

“என் மகன் சொல்லக் கூடாதுனு சொல்லி இருக்கான்.”

 

“மாமா நீங்களாச்சம்”

 

“நான் இந்த விளையாட்டுக்கு வரல, மருமகளே.”

 

“போங்க. ரெண்டு பேரும் என்கிட்டப் பேசாதீங்க.”

 

சிறுபிள்ளை போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு செல்லும் மருமகளைக் கண்டு இருவரும் புன்னகைக்க, அந்த ஓசையில் கடுப்பானவள் திரும்பி முறைத்தாள். இருவரின் வாயும் தன்னால் மூடிக்கொள்ள பார்த்திகா தயாராகி வந்தாள் பல கற்பனைகளோடு.

 

அவன் சொல்லிய நேரத்துக்கு முன்பாகவே தயாராகி விட்டவள் ஓயாமல் அவனை அழைத்துத் தொந்தரவு செய்ய, “இப்படியே பண்ணிட்டு இருந்தா அப்புறம் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுவேன்.” என்ற மிரட்டலில் வாயை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டாள்.

 

“போலாமா?” என தினேஷ் அங்கு வர, “ம்ம்… ம்ம்” பட்டாம்பூச்சியாய் பறந்தாள். 

 

போகும் வழி எங்கும் தினேஷைத் தொந்தரவு செய்தவள் பரபரப்புக் குறையாது வண்டி நின்றதும் எட்டிப் பார்க்க, புன்னகை ததும்பியது உள்ளத்தில். வந்த இடத்தை வைத்து என்னவாக இருக்கும்? என்பதைக் கண்டு பிடித்தவள் கணவனை அழைத்து, 

 

“லவ் யூ சோ மச்” என்றிட, 

 

“உனக்குன்னு ஒரு பேஷன் இருக்கு பாரு. அதை நீ எனக்காக விடுறதுல விருப்பம் இல்லை. எனக்குத் தெரியும், டீச்சர் வேலை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு. அதுவுமில்லாம உன்னை மாதிரி ஒரு லவ்வபிள் பர்சன் குழந்தைகளுக்கு டீச்சரா கிடைச்சா அவங்க லைஃப் ரொம்ப நல்லா இருக்கும். என்னை நினைச்சு வீட்லயே உன் வாழ்க்கையைச் சுருக்கிக்காமல் பறந்து போ.” என்றான்.

 

“நீங்க என் கூட இல்லாத ஏக்கத்தைச் சின்னப் பிள்ளைங்க தீர்த்திருக்காங்க. அதனாலயே என்ன கஷ்டம் வந்தாலும் ஸ்கூலுக்கு ஓடி வந்திடுவேன். திரும்ப நீங்க வந்ததுல இருந்து தான் எல்லாம் மாறிடுச்சு.”

 

“எதுவும் மாற வேணாம் பாரு. நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி இரு. நான் எப்படி இருக்கனோ அப்படியே இருக்கேன். நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற காதல் நம்ம வாழ்க்கையை அழகா கொண்டு போகும்.”

 

“ரொம்ப தேங்க்ஸ் திரும்மா”

 

“வெல்கம் அண்ட் பெஸ்ட் விஷஸ்.”

 

அவனிடம் பேசி முடித்தவள் தினேஷைக் கண்டு, “நீங்க என் வாழ்க்கைல நடந்த பல முக்கியமான தருணங்கள்ல கூட இருந்திருக்கீங்க. உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்.” என்றவளின் பூரிப்பு மகிழ்வைக் கொடுத்தது.

 

“நேத்து நைட்டு போனைப் போட்டு, உடனே என் பொண்டாட்டிக்கு அவ வேலை பார்த்த ஸ்கூல்ல பேசி வேலை வாங்கிக் குடுன்னு சொன்னான். எதுக்கு அவ்ளோ அவசரப்பட்டான்னு அப்போ புரியல, இப்போ தான் புரியுது.”

 

“எனக்காக என் திரும்மா இவ்ளோ தூரம் யோசிச்சதை நினைச்சாலே என்னமோ பண்ணுது அண்ணா.” என்றவள் கண்ணில் ததும்பிய காதலோடு, “அவரும் என்னை லவ் பண்றாரு இல்லண்ணா, ரொம்ப ரொம்ப லவ் பண்றாரு.” சிலாகித்தாள். 

 

அவளை வழி அனுப்பி வைத்தவன் நேராக நண்பன் வீட்டிற்குச் சென்றான். அங்கு ராணியும், நடராஜும் ஒரு காகிதத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, “என்னப்பா, சின்னஞ்சிறுசுங்கள பிரிச்சு விட்டுட்டு ரொமான்ஸா?” என்றதும்,

 

“எது! உங்க அம்மா கூட…” என வாய்விட்டு மனைவியிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டார். அவர்களைக் கேலி செய்து சண்டை மூட்டி விட்டுக் குளிர் காய்ந்த தினேஷ், அவர்கள் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த காகிதத்தைக் கையில் எடுத்தான். 

 

“காலம் கடந்தும் காத்திருப்பேன்…

என்னவனே உன் கைகோர்க்கும் நாள் வரை.

மூச்சற்ற உடலானாலும் உயிர் நீயாகிட…

உனக்காக உயிர் பெறுவேன்.

என் நித்திரை இல்லா வாழ்விற்கு

விடுதலை நீயே…” 

 

கவிதையைப் படித்ததுமே பார்த்திகாவின் வேலை என்பதைக் கண்டு பிடித்தவன் அதை ஒரு புகைப்படம் எடுத்து நண்பனுக்கு அனுப்பி வைத்தான். 

 

“இப்படித்தான் காலேஜ்ல படிக்கும் போது கவிதையா எழுதி வச்சிருக்கான்னு நியூஸ் வரும்.” 

 

“என் மருமக செமையா கவிதை எழுதுறால.”

 

“பின்ன… இந்தக் கவிதையால தான இன்னைக்கு இவங்க புருஷன் பொண்டாட்டி.” 

 

“அப்படியா!” என்ற நடராஜரிடம் அதன் பின்னணியை விவரிக்க, நண்பன் வாழ்வில் நுழைந்த பார்த்திகாவின் தருணத்தைக் கூறத் துவங்கினான்.

 

முதல் நாள் கல்லூரி அன்று பெய்யும் மழையைத் திட்டியபடி கல்லூரி வளாகத்தில் கால் வைத்தவளைக் கடந்து சென்றான் திருமேனி ஆவுடையப்பன். இவன்தான் தனக்கான வருங்காலம் என்பதை அறியாது ஆடிட்டோரியம் சென்று கொண்டிருந்தாள்.

 

பழக்கப்படாத இடத்திற்கு மனைவி அலைந்து திரிந்து வந்து கொண்டிருக்க, பழகிய இடம் என்பதால் நண்பனோடு வேகமாக வந்து சேர்ந்தான். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வேகமாக உள்ளே வந்தவன் செவியில்,

 

“திருமேனி ஆவுடையப்பன்” என்ற பெயர் விழ, கவிதை சொல்வதற்காக மேடை ஏறினான்.

 

கவிதை என்றால் என்னவென்று கேட்கும் நம் நாயகனை சதி செய்து இதில் மாட்டி விட்ட தினேஷ் பல்லைக் காட்டிக் கொண்டிருக்க, இரண்டு நாள்களாகப் படாத பாடுபட்டு எழுதிய வரியை எப்படிப் படிக்கப் போகிறோம்? என்ற கடுப்பில் மைக்கைப் பிடித்தான்.

 

“காற்றே என்னவள் 

கூந்தலைத் தீண்டாதே என்றேன். 

பேச்சைக் கேட்காமல் தீண்டியது… 

ராவணன் வேடம் 

தரிக்காத என் கோபம் 

சுட்டெரிப்பதற்குள் 

தணிந்து விட்டது… 

குடை பிடிக்காத 

மழை அவள் தூறலில்!” 

 

திருமேனி ஆவுடையப்பனின் கவிதையில் அரங்கம் கைதட்டி ஆரவாரம் செய்தது. 

 

‘இது கவிதையா?’ என்ற சந்தேகத்தில் இன்னும் அவன் அப்படியே நின்று இருக்க, “திரு, இந்தக் கவிதையை யாரை நினைச்சு எழுதின? உண்மையச் சொல்லிடு” நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அவன் வகுப்பு நண்பன் கேட்டான். 

 

இந்தக் கவிதையை எழுதி முடிப்பதற்குள் எத்தனை புத்தகத்தைப் புரட்டி இருப்பானோ, அவன் மட்டுமே அறிந்த ரகசியம். அப்படி இருக்க யாரை நினைத்து எழுதியிருப்பான் வருங்காலக் காக்கி உடை அதிகாரி? 

 

அவன் நிலை தெரியாது கேலி செய்கிறேன் என்று தினேஷும் கீழே நின்று உசுப்பேத்தி விட, திருமேனி காதலிக்கும் பெண்ணை நினைத்து எழுதி இருக்கிறான் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டனர். 

 

விடாமல் அந்தப் பெண் யார் என்று கேட்டு நச்சரிக்க, “சும்மா இருங்கடா” என்று மேடை நாகரிகத்திற்காக நழுவப் பார்த்தான். 

 

இது அவர்களுக்கான நாள் என்பதால் தடை ஏதும் இல்லை அவர்கள் பேச்சிற்கு. அந்தத் தைரியத்தில் இன்னும் அவனைக் கேலி செய்து சொல்லியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த, அப்பொழுதுதான் நீல நிறச் சல்வாரில் பாதி நனைந்தும் நனையாத கோலத்தில் அரங்கம் வாசலில் வந்து நின்றாள் பார்த்திகா.

 

இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தவன் கீழே இறங்கும் பொழுது, எதார்த்தமாக அவன் பார்வையில் முதல் முறை விழுந்தாள். செல்லும் அவனைத் தடுத்த நண்பன்,

 

“திரு, யாருன்னு சொல்லிட்டுப் போ.” என்றான்.

 

“சத்தியமா அப்படி யாரும் இல்லடா.”

 

“அப்போ இங்க இருக்கற பொண்ணுங்கள்ல யாருக்காவது ஒருத்தருக்கு இந்தக் கவிதையை டெடிகேட் பண்ணு.”

 

“ஏன்டா வம்புல மாட்டி விடுற”

 

“அப்போ யாரோ இருக்காங்க?”

 

இவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தவன் பார்வையில் இரண்டாவது முறையாக அவனது வருங்கால மனைவி விழ, அழகாகத்தான் தெரிந்தாள் அவள். உண்மையாக அந்த நொடி கண்ணியமான பார்வையோடு அழகாகத் தெரிந்த பார்த்திகாவிற்கு இந்தக் கவிதை பொருந்தும் என்று நம்பினான். அதற்கேற்றார் போல் அவளும் நனைந்த கோலத்தில் வந்து நிற்க,

 

“அந்தப் பொண்ணுக்கு” என்று கை காட்டினான்.

 

மொத்த அரங்கமும் அவன் கை காட்டிய பக்கம் திரும்ப, திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள் திருமேனியின் காதலி. அங்கு நடந்து கொண்டிருந்த கலவரம் புரியாது தன்னைத் தானா என்று திரும்பிப் பார்த்துக் கொள்ள, கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவர்கள் காதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள் சுற்றி இருந்தவர்கள்.

 

விட்டால் போதும் என்று திருமேனி நண்பனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட, கூச்சப்பட்டுக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள். அந்த நிகழ்விற்கு பின் அவளது தோழிகள் அனைவரும் திருமேனியை அவளது காதலன் ஆக்கி விட்டார்கள். 

 

பொதுவெளியில் நடந்த சம்பவம் என்பதால் திருமேனியின் நண்பர்கள் பார்த்திகா வரும் பொழுதெல்லாம் திருவைக் கலாய்க்க ஆரம்பித்தார்கள். 

 

 

சம்பந்தப்பட்டவன் அந்த நிகழ்வை அந்த இடத்தோடு முடித்து விட, எல்லாம் மாறிப்போனது இவள் வாழ்வில். முதலில் கோபம் கொண்டு அந்த வார்த்தைகளைத் தவிர்க்க நினைத்தவள் தொடர்ந்து தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வால் அமைதியாகத் துவங்கினாள்.

 

தினேஷ் அவள் முன்பாகவே, “மச்சான் உன் ஆளு வருதுடா” என்று கேலி செய்ய, “சும்மா இருடா” தொடையைக் கிள்ளி விட்டான்.

 

“பாருடா இவனுக்கு வெட்கத்தை” 

 

அவர்கள் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் அனைத்தும் இவள் காதில் தெளிவாக விழுந்தது. சற்று தூரம் சென்றவள் திரும்பி அவனைப் பார்க்க, எதார்த்தமாகத் திருமேனியும் இவளைப் பார்த்து விட்டான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகக் கலாய்த்தார்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள். 

 

அன்று முதல் விரும்பியே அவனைத் தன் காதலன் ஆக்கிக் கொண்டாள். இவளது தோழிகளும் விடாமல் அவன் எங்கிருந்தாலும், “பாரு” என இவள் பெயரை அழைத்துக் கலாய்க்க, மொத்தக் கல்லூரிக்கும் இவர்கள் பெயரும், உறவும் படம் போட்டுக் காட்டப்பட்டது.

 

உச்சபட்சமாக கேன்டீன் உள்ளே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. பார்த்திகாவின் தோழிகள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் சண்டை பிடித்துக் கொண்டிருக்க, தோழிகளைத் தடுத்துக் கொண்டிருந்தாள். தினேஷ் என்னவென்று விசாரித்தான்.

 

“பாரு தெரியாம காபியைக் கீழ கொட்டிட்டா. அதுக்கும் சேர்த்துக் காசு கேக்குறாரு. கைல குடுக்காம இங்க வச்சது அவரோட தப்பு தான?” 

 

தினேஷ் எவ்வளவு சமாதானம் செய்தும் இரு தரப்பும் சமாதானமாகவில்லை. நண்பனை அழைத்துச் செல்ல வந்தவனிடம், “அண்ணா, உங்க ஆளைத் திட்டுறாரு என்னன்னு கேளுங்க.” எனக் கோர்த்து விட, நாகரிகம் கருதி பார்த்திகாவிற்காகப் பேசினான்.

 

பல வருடமாக இருந்த கேண்டீன், வேறொரு நபருக்குக் கைமாறி இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை எவராலும். வாக்குவாதம் புரியவும் விருப்பமில்லாதவன் கொட்டிய காபிக்குப் பணம் கொடுத்து அந்தப் பிரச்சனையை முடித்து வைத்தான்.

 

“என்னடா மச்சான், உன் ஆளைத் திட்டுனதும் கோபம் வந்துடுச்சா?”

 

வெகு நேரமாக அழைத்தும் வராத நண்பனின் மீது இருந்த கடுப்பில், “ஆமாடா வெண்ண” எனச் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

 

அவன் சொன்ன “ஆமா” இவள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்கள் காதலை வளர்த்து விட்டது சுற்றி இருந்தவர்களும் சந்தர்ப்பங்களும் மட்டுமே தவிர திருமேனி ஆவுடையப்பன் இல்லை. அதைப் புரிந்து கொள்ள முடியாத மாய உலகிற்குச் சென்றவள் அவனைத் தன் வாழ்வாகவே வாழ ஆரம்பித்து விட்டாள்.

 

 

தன்னவனைப் பார்ப்பதற்காகச் சீக்கிரமாகக் கல்லூரி வருபவள் அவன் மட்டுமே உலகம் என்று பின்னால் சுற்றி வர ஆரம்பித்தாள். சுற்றி இருந்தவர்கள் செய்யும் கேலி எல்லாம் காதலை வளர்க்கும் உணவானது. அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண் காணித்து தனக்குள் சேகரித்துக் கொண்டவள் காதலை வெளிப்படுத்தப் பல முறை முயன்றிருக்கிறாள்.

 

ஒவ்வொரு முறையும் அதைச் செய்ய முடியாமல் வருத்தத்தோடு வீடு வந்து சேர்பவள் நிலை அறியாது, தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வருங்காலத்தை நோக்கிச் சென்றான் திருமேனி. அவன் சென்ற பின்னும் அவன் இருந்த வகுப்பறையும், அவன் இருந்த இடங்களும் அவளுக்குத் தீனியானது. 

 

திருமேனியைப் பற்றி விசாரிக்க அவன் சென்னையில் இல்லை என்ற தகவல் எட்டியது. இல்லாதவனோடு கற்பனையில் வாழ ஆரம்பித்தாள். இது தவறு என்று மூளை உணர்த்தினாலும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை அவளால். அறிவிற்கும் மனதிற்கும் இடையில் சிக்கிக் கடைசியில் காதலே வென்றது. 

 

 

ஊஞ்சல் ஆடும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்