அத்தியாயம் 11
மயூரனுடன் மகிழுந்தில் செல்லும்போது உம்மென்று தான் வந்தாள் துவாரகா. மயூரனுக்கு தான் அவளின் அமைதி இப்போது பிடிப்பதில்லையே. அதனால், அவளை ஏதாவது வம்பிழுத்துக் கொண்டே வாகனத்தை இயக்கினான்.
ஒரு கட்டத்தில் அவனின் அலப்பறைகளை தாங்க முடியாதவள், “கடவுளே, இப்படியெல்லாம் ரோல் ஸ்வாப்பாகும்னு தெரிஞ்சுருந்தா, லவ்வே பண்ணியிருந்துருக்க மாட்டேன்!” என்று ஆயிரமாவது முறையாக வாய்விட்டே கூறினாள்.
அவளுக்கு தான் அவனிடம் மறைக்க தோன்றவில்லையே!
அவனுக்கும் அது சுவாரசியமாகவே இருக்க, “ஆனா, எனக்கு ஜாலியா தான் இருக்கு.” என்று சொல்லிக் கொண்டான்.
அதில், அவள் அவனை முறைக்க, தற்காலிமாக அவனை காப்பாற்றும் வண்ணம் வாகனம் அந்த பெரிய ஜவுளிக்கடையின் வாகன தறிப்பிடத்தில் வந்து நின்றது.
‘என்னையா அலற விடுற? இந்த பர்சேஸ் முடியுறதுக்குள்ள உன்னை அலைய விடல… மவனே என் பேரு துவாரகா இல்ல!’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டவள், அவனை ‘வில்லி’ப் பார்வை கொண்டு பார்க்க, மயூரன் அவளின் பார்வையிலேயே உஷாராகி விட்டான்.
‘ஏதோ பிளான் பண்ணிட்டா போல! லவ் ப்ரொபோசலுக்கே தலை கீழா தொங்க விட்டவ இவ. எதுக்கும் உஷாராவே இருப்போம்.’ என்று எண்ணியபடி, அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ஃபர்ஸ்ட் உனக்கு பர்சேஸ் முடிச்சுடலாம் துவா.” என்று அவன் கூற, அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அவள் தான் பழிவாங்கும் படலத்தை திட்டமிடுவதில் தீவிரமாக இருந்தாளே!
அவளை இருமுறை அழைத்தும் எவ்வித எதிர்வினையும் இல்லாததால், இருபக்கமும் தலையசைத்தவன், அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு பட்டுப்புடவை பிரிவிற்கு சென்றான்.
அடுத்த அரை மணி நேரங்கள், மயூரனுக்கு புடவையை தேர்ந்தெடுப்பதில் கழிய, அத்தனை நேரமும் துவாரகா இவ்வுலகத்திலேயே இல்லை. அவள் மனதுடன் பட்டிமன்றம் அல்லவா நடத்திக் கொண்டிருந்தாள்.
அதற்குள் மயூரனே, அவனுக்கு பிடித்திருந்த புடவைகளை தேர்ந்தெடுத்து, அவளின் இறுதி முடிவுக்காக வைத்து விட்டான்.
அப்போதும் அவள் நிகழ்விற்கு வராமல் இருக்க, இருமுறை உலுக்கி அவளை சுயமடைய செய்தான்.
பழிவாங்கும் திட்டத்தை கெடுத்ததால் உண்டான கோபத்துடன் திரும்பியவள், “என்ன?” என்று கேட்க, “ப்ச், இங்க எதுக்கு வந்துருக்கோம், நீ என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க? சேரீஸ் நானே செலக்ட் பண்ணிட்டேன். நல்லா இருக்கான்னு பாரு.” என்றான்.
அதில் அதிர்ந்து போனவள், “அவ்ளோ நேரமாகிடுச்சா என்ன?” என்று நேரத்தை பார்க்க, அதுவோ அரை மணி நேரம் தான் ஆகியிருப்பதாக கூறியது.
அதில் மேலும் அதிர்ந்தவள், “அதுக்குள்ளயா?” என்று விழிகள் விரித்து வினவ, அவளின் இந்த எதிர்வினை எதற்கு என்று புரியாதவனோ, கண்களை சுருக்கியபடி, ஆமென்று தலையசைக்க, “ஹவ் இஸ் திஸ் பாசிபில்?” என்ற முணுமுணுப்புடனே, அவன் தேர்வு செய்த புடவைகளை பார்த்தாள்.
அனைத்தும் நன்றாக இருப்பதாகவே பட்டது துவாரகாவிற்கு. இதற்கு முன்னர், புடவை எடுத்திருந்தால் குற்றம் குறை சொல்லியிருப்பாளோ என்னவோ!
எனினும், அவன் எடுத்து வைத்ததை அப்படியே ஏற்றுக்கொள்ள மனம் வராதவள், “ச்சு, இதென்ன பிரமாதமான செலக்ஷன்?” என்று மயூரனை பார்த்து கேட்டவள், அங்கிருந்த விற்பனையாளரிடம், “இதோ, இந்த டிசைன், இந்த கலர்ல இருக்க மாதிரி சேரி இருக்கா? இந்த கலர் சேரில, இந்த கலர் பார்டர் வருமா?” என்று இஷ்டத்திற்கு கேள்வி கேட்டு, அவரை படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிய, “ப்ச், எதுவும் நல்லாவே இல்ல. நான் இதையே எடுத்துக்குறேன்.” என்று மயூரன் தேர்வு செய்தவற்றை காட்டிக் கூற, ‘யாருமா நீ?’ என்பது போல பார்த்த அந்த விற்பனையாளர், விட்டால் போதும் என்பது போல அங்கிருந்து ஓடி விட்டார்.
‘இவருக்கு என்ன அவசரம்?’ என்ற ரீதியில் அவள் அவர் சென்ற திசையை பார்க்க, “என்னை பழிவாங்குறேன்னு அவரை இத்தனை நேரம் திணற வச்சுட்ட. நீ இங்க இருக்க வரை, அந்த மனுஷன் இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டார் போல.” என்றான் மயூரன் அவள் செவிகளில் அவனின் மூச்சுக்காற்று உரச பேசினான்.
அவன் திட்டம் போட்டு எல்லாம் செய்யவில்லை. தற்செயலாக நடந்தது இருவருக்கும் உள்ளுக்குள்ளே ஒருவித அவஸ்தையை ஏற்படுத்த, இம்முறை முதலில் அதிலிருந்து வெளிவந்தவள் துவாரகா தான்.
சட்டென்று அவனிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி நிற்க, அவனோ இடது புருவத்தை விரலால் வருடியபடி அவளை பார்த்து சிரித்தவன், எதுவும் கூறாமல், புடவைகளை பில் போட சென்றான்.
அவளோ கவனமாக இரண்டு அடிகள் இடைவெளி விட்டே அவனை பின்தொடர்ந்து சென்றாள்.
மயூரன் வரிசையில் காத்திருக்க, துவாரகாவோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அப்போது தான் அந்த மர்ம நபரை பார்த்தாள்.
முதலில், அசுவாரசியமாக சுற்றி வந்த அவளின் பார்வை, அந்த நபரை சந்தேகமாக பார்க்க ஆரம்பித்தது. காரணம், அவரின் பார்வை மயூரன் மற்றும் துவாரகாவையே குறுகுறுவென பார்ப்பதை போலிருந்தது.
அவளின் சந்தேகம் வலுக்க, அதை தீர்த்துக்கொள்ள மயூரனிடம் சென்றாள், அவள் கடைபிடித்து வந்த இடைவெளியை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு!
“மிஸ்டர். மயூரன், அதோ அங்க இருக்காரே… அவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கண்களால் சுட்டிக்காட்டி அவள் வினவ, அப்போது தான் அந்த மர்ம நபரை பார்த்தவனின் உடல்மொழியில் உண்டான மாற்றத்தையும் குறித்து வைத்துக் கொண்டாள்.
பதில் சொல்லாமல் இருப்பவனை உலுக்கியவள், “என்னாச்சு? தெரியுமா தெரியாதா? அப்போ இருந்து நம்மளையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்காரு.” என்று வினவ, அவனோ ஒரு பெருமூச்சுடன், “ஃபேமிலி ஃபிரெண்ட்.” என்றான்.
“உங்களுக்கு ஃபேமிலி இருக்கா?” என்று அபத்தமான கேள்வியை அசால்ட்டாக அவள் கேட்க, அவளை ஒருமாதிரி பார்த்தவன், “ஏன் இருக்கக் கூடாதா?” என்றான்.
அப்போது தான் அவளின் கேள்வியை உணர்ந்தவளாக, “இதுவரை உங்க ஃபேமிலியை பத்தி சொன்னது இல்லையே. அதனால தான்…” என்று சமாளித்தவள், “ஆமா, இந்த கல்யாணம் உங்க குடும்பத்துக்கு தெரியாதா? அப்போ திருட்டுக் கல்யாணமா?” என்று கிசுகிசுப்பாக வினவினாள்.
‘எங்க வச்சு எதை விசாரிச்சுட்டு இருக்கா?’ என்று தோன்றினாலும், அவளே நெருங்கி வரும் சந்தர்ப்பத்தை கெடுக்க விரும்பாதவனாக அவளின் கேள்விகளுக்கு, அவளை போலவே பதில் சொல்ல ஆரம்பித்தான், அவளை நெருங்கி கிசுகிசுப்பான குரலில்!
“உங்க அப்பாக்கு தெரிஞ்சு தான நம்ம கல்யாணம் நடக்கப் போகுது. அப்பறம் எப்படி திருட்டுக் கல்யாணமாகும்? கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதும், என் குடும்பத்துக்கு சொல்லிக்கலாம்.” என்றான் அவன்.
“ஏன், உங்க குடும்பம் ரொம்ப ஸ்டிரிக்ட்டோ?” என்று அவள் எதையோ மனதில் வைத்து அடுத்த கேள்வியை தொடுக்க, பில்லிங்கில் கவனமாக இருந்தவனோ, “ஆமா, கொஞ்சம் ஸ்டிரிக்ட் தான்.” என்று கூறியிருந்தான்.
அதில் பாவைக்கு தான் பரவசமானது. அவனை பதற்றப்படுத்தி பார்க்க ஒரு திட்டம் சிக்கி விட்டதே என்று!
“போலாமா?” என்று அவன் வினவ, ‘நாசமா போச்சு!’ என்று எண்ணியவள், “அதுக்குள்ள எங்க? உங்களுக்கு எடுக்க வேண்டாமா?” என்று அவள் தான் பதற்றமானாள்.
அதில் அவளை சந்தேகமாக பார்த்தான் அவன்.
‘ஹையோ! சொதப்பாத துவா.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், “என்ன அப்படி பார்க்குறீங்க? எனக்கு நீங்க தான செலக்ட் பண்ணீங்க? அப்படின்னா, உங்களுக்கு நான் தான செலக்ட் பண்ணனும். வாங்க போலாம்.” என்று அவன் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.
‘இவ திடீர்னு ஏன் இப்படி பிஹேவ் பண்றா? ஏதோ இருக்கு.’ என்ற யோசனையுடன் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான் மயூரன்.
ஆண்கள் பிரிவிற்கு வந்தவள், சுற்றிலும் பார்த்தபடி நின்றுவிட , அவனோ கரங்களை கட்டிக்கொண்டு, “ஹலோ மேடம், டிரெஸ் இங்க இருக்கு. அங்க என்ன பார்த்துட்டு இருக்க?” என்றான்.
அவளோ பார்வையை விலக்காமல், கைக்கு அகப்பட்ட ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து, “ட்ரையல் பாருங்க.” என்றாள்.
அவள் கொடுத்ததை பார்த்தவன் மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “எது இதையா? இதையா கல்யாணத்துக்கு போட?” என்றான் அவன்.
அப்போதும் அவனைக் காணாமல், “ஆமா, நான் மட்டும் நீங்க செலக்ட் பண்ணதை தான போட போறேன். சோ, நீங்களும் நான் செலக்ட் பண்றதை தான் போடணும்.” என்றாள் அவள்.
“நான் போட்டுடுவேன். ஆனா, மத்தவங்க நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்கு!” என்றவனை திரும்பி பார்த்தவள், அவன் கையிலிருந்த உள்ளாடையையும் மேலாடையையும் பார்த்து ஒருநொடி பதறி, சொதப்பிட்டே இருக்கியே டி!’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், பின்னர் அவள் செய்து வைத்ததை சமாளிக்க வேண்டி,
“ஹலோ, நான் என்னமோ இதை மட்டும் போட சொன்ன மாதிரி பேசிட்டு இருக்கீங்க? எப்படியும் இது யூஸாகும் தான?” என்று கூறிக் கொண்டிருக்க, மேலும் எதையாவது உளறி வைக்கப் போகிறாள் என்று அவசரமாக அவளின் வாயை அடைத்தவன், சுற்றிலும் யாரும் அவர்களை கவனிக்கவில்லை என்பதை பார்த்த பின்னர் தான் ஆசுவாமானான்.
அதற்குள் அடைபட்ட வாயை விடுவிக்க வேண்டி, “ம்ம் ம்ம்…” என்று அவள் அனத்த, “எம்மா தாயே, நானே எனக்கு செலக்ட் பண்ணிக்குறேன். நீ கொஞ்ச நேரம் பேசாம மட்டும் இரு.” என்று கூறியே கையை எடுத்தான்.
அவளுக்கும் அது வசதியாக போய் விட, அவள் வேலையை தொடர்ந்தாள்.
அவனோ பத்து நிமிடங்களில் எல்லாம் முடித்து விட, “துவா, வா பில் போட போலாம்?” என்று அவளை அழைக்க, “என்ன அதுக்குள்ள எடுத்து முடிச்சுட்டீங்களா?” என்றவள், ‘ஹையோ, அந்த ஆளை வேற காணோமே!’ என்று பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தாள்.
“ம்ம்ம், முடிச்சுட்டேன். போலாம்.” என்று அவன் மீண்டும் கூற, “ப்ச், இவ்ளோ ஃபாஸ்ட்டா இருந்தா எப்படி? எனக்கு தான் கஷ்டம்!” என்று அவள் பேசி வைக்க, அவள் பேசிய தொனி அதற்கு வேறு அர்த்தத்தை கொடுக்க, மயூரன் தான் தலையை உலுக்கிக் கொண்டான்.
அவளை திருப்பி தன்னை பார்க்க செய்தவன், “ரொம்ப நேரமா யாரை தேடிட்டு இருக்க?” என்று சரியாக கேட்க, சற்று பதறினாலும், மீசையில் மண் ஒட்டாத கணக்காக, “நான் யாரை தேடப் போறேன்? ஃபர்ஸ்ட் போய் ட்ரையல் பாருங்க, போங்க.” என்று அவனை பிடித்து தள்ளினாள்.
“ட்ரையல் எல்லாம் பார்க்க வேண்டாம். சரியான சைஸ் தான்.” என்று அவன் கூறுவதை எல்லாம் பொருட்படுத்தாமல், அவளே ட்ரையல் ரூம் வரை சென்று விட்டு வந்தாள்.
“ஷப்பா, ஒரு பிளானை எக்ஸிக்யூட் பண்றதுக்குள்ள எவ்ளோ டிஸ்டர்பன்ஸ்?” என்றவாறே அவளின் தேடலை தொடர்ந்தாள்.
மயூரன் உடையை போட்டு பார்த்து விட்டு வெளியே வரும் நேரம், அந்த மர்ம ஆசாமியை கண்டு கொண்டாள் துவாரகா.
அவரோ, இருவரையும் திருட்டுத்தனமாக படம் எடுக்க முயற்சிப்பதையும் கண்டு கொண்டவள், தன் வேலை சுலபமென எண்ணி, மயூரனை கையோடு அழைத்துக் கொண்டு அந்த மர்ம நபரை நோக்கி நடந்தாள்.
மாட்டிக்கொண்டோமோ என்று அந்த மர்ம நபர் பதறியபடி பின்னே செல்ல ஆரம்பிக்க, “ஹலோ சார், நில்லுங்க… எங்களை தான கஷ்டப்பட்டு ஃபோட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருந்தீங்க? நாங்களே போஸ் குடுக்குறோம்.” என்ற துவாரகாவின் பேச்சில் அரண்டு தான் போனார்.
அவர் மட்டுமல்ல, அவளுடன் நின்றிருந்த மயூரனும் தான்!
‘அடிப்பாவி! இதுக்கு தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தாளா?’ என்று அவன் சிந்திக்கும் வேளையில், எதிரிலிருந்தவரின் அலைபேசியை பறித்து, இருவரையும் சுயமிப்படம் எடுத்தவள், மீண்டும் அதை அந்த மர்ம நபரிடம் கொடுத்து, “இதோ ஃபோட்டோ ரெடி. சரியா குடுத்துவீங்கள?” என்று கேட்டாள்.
அவரோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்று விட்டார்.
அதில் வெற்றி சிரிப்புடன் திரும்பி மயூரனை மிதப்பாக பார்த்து வைக்க, அவனுக்கும் அவளின் செயல்கள் எல்லாம் சிரிப்பாக தான் இருந்தது.
‘சோ ஸ்வீட்!’ என்று கொஞ்சிக் கொள்ள கூட தோன்றியது.
அந்த நபரை அங்கு பார்த்தபோதே விஷயம் வீட்டிற்கு தெரிந்து விடும் என்று நன்கறிவான் மயூரன். அவர் இருவரையும் பின்தொடர்ந்து, புகைப்படம் எடுக்கிறார் என்பதில் எரிச்சல் உண்டானாலும், விஷயம் குடும்பத்தினருக்கு தெரியட்டும் என்று தான் விட்டு வைத்திருந்தான்.
ஆனால், அவனவள் இப்படி அவரை திணற விடுவாள் என்று அவன் எண்ணவில்லை.
அதை எண்ணி, ஒரு சிரிப்புடன் அவன் நகர, ‘இவ்ளோ தான் ரியாக்ஷனா?’ என்று சோர்ந்து போனாள் துவாரகா.
அதற்குள் வீட்டிற்கு வந்த இருவரையும் ஆச்சரியமாக பார்த்த கோபிநாத்தோ, “என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க? கலெக்ஷன் எதுவும் பிடிக்கலையா என்ன?” என்றவாறே இருவரின் கரங்களிலும் இருந்த பைகளை பார்த்தார்.
“ஷாப்பிங் முடிச்சாச்சுப்பா.” என்று துவாரகா அலுப்பாக கூறிவிட்டு தந்தையின் அருகே அமர, “அது தான் ஷாக்கிங்கா இருக்கு துவாம்மா.” என்று இன்னமும் நம்ப முடியாமல் மகளை பார்த்து கோபிநாத் வினவ, மகளோ தந்தையை முறைத்தாள்.
துவாரகாவின் ‘வார்ட்ரோப் அலப்பறை’களை பற்றி தெரியாத மயூரனோ, “ஏன் மாமா?” என்று வருங்கால மாமனாரிடம் வினவ, மகளை பற்றி மருமகனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ‘நல்ல’ எண்ணத்தில், “என்ன மயூரன், இப்படி கேட்டுட்டீங்க? சாதாரணமா வெளிய போகணும்னாலே, துவா டிரெஸ் செலக்ட் பண்ண குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனா, கல்யாணத்துக்கு ஷாப்பிங் பண்ண போன நீங்க ஒரு மணி நேரத்துலயே முடிச்சுட்டு வந்துட்டீங்களே, அந்த அதிர்ச்சி தான்.” என்றார், மகளின் முறைப்பை கவனிக்காமல்.
அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்த மயூரனையும் முறைத்துக் கொண்டே, “ப்ச், இப்போ யாராவது அதை கேட்டாங்களா?” என்று தந்தையை மிரட்டினாள் துவாரகா.
மயூரனோ அதே சிரிப்புடன், “உங்க பொண்ணு செலக்ட் பண்ணியிருந்தா ஒரு மணி நேரமாகி இருக்குமா இருக்கும். ஆனா, அவளுக்கு செலக்ட் பண்ணது நானாச்சே.” என்று கூற, ‘அப்படியா?’ என்று மகளை பார்த்து மகிழ்ச்சியுற்றார் அந்த தந்தை.
அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்ற வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தவளை மேலும் பரிதவிக்க செய்யும் முனைப்புடன், “அது மட்டுமா, எனக்கு கூட முதல்ல துவா தான் டிரெஸ் செலக்ட் பண்ணா.” என்று அவன் கூற, அதில் அதிர்ந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து ‘வேண்டாம்’ என்று சைகை செய்ய, அவனோ அதை மதிப்பானா என்ன?
“அதை டிரெஸ்னு சொல்ல முடி…” என்று அவன் கூறும்போதே, அவனின் வாயை அடைத்தவள், “முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு இங்க என்ன அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க?” என்று மயூரனிடம் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவாறே, அவனை அங்கிருந்து வெளியே அழைத்து சென்றாள்.
இருவரின் விளையாட்டை ரசித்த கோபிநாத்திற்கு, அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.
அவனை வெளியே இழுத்து வந்தவள், “எதை யாருக்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” என்று கோபமாக கேட்க, “ஓஹ், அப்போ அது நம்ம ‘பெர்சனலா’?” என்று நமுட்டுச் சிரிப்புடன் வினவினான் மயூரன்.
“மண்ணாங்கட்டி!” என்றவள், கோபத்தில் ஏதோ கூற வந்து, பின்னர் அதற்கும் பின்விளைவுகள் ஏதாவது உண்டாகி விடப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையுடன், தன்னைத்தானே கட்டுப்படுத்தியவள், வீட்டிற்குள் செல்ல முற்பட்டாள்.
அப்போது அவளை தடுத்த மயூரன், “இதுக்கப்பறம் நாம கல்யாணத்தன்னைக்கு தான் மீட் பண்ண முடியும்.” என்று கூற, “க்கும், என்னமோ கல்யாணத்துக்கு ஆறு மாசம் இருக்க மாதிரி டையலாக் வேற!” என்று உதட்டை சுழித்து, அவனுக்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாக கூறினாள்.
அதில் வாய்விட்டே சிரித்தவன், “நம்ம லைஃப் அ…மோகமா போகும்னு தோணுது. உனக்கும் அப்படி தோணுதான்னு யோசிச்சு வை. கல்யாணத்தப்போ கேட்டுக்குறேன்.” என்று கண்ணடித்துக் கூறிவிட்டு சென்று விட, ‘இவன் என்ன சொல்றான்?’ என்ற குழப்பத்துடன் அங்கேயே நின்று விட்டாள்.
*****
மயூரன் மற்றும் துவாரகாவின் புகைப்படம் (சுயமிப்படம்) சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்திருக்க, அதை எடுத்துக் கொண்டு நேராக சக்கரவர்த்தியிடம் வந்தனர் கார்த்திகேயன் மற்றும் குமரகுருபரன்.
வந்ததும் வராததுமாக, அந்த பெரியவரை விசாரிக்க கூட செய்யாமல், “இங்க பாருங்க தாத்தா, உங்க அருமை பேரன் மயூரன் பண்ற காரியத்தை!” என்ற கார்த்திகேயன், அலைபேசியை சக்கரவர்த்தியிடம் நீட்ட, அவரோ அதில் தெரிந்த புகைப்படத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
“உங்க பேரனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணமாம். உங்ககிட்ட சொன்னானா உங்க பேரன்?” என்று அவன் பங்கிற்கு கேட்டான் குமரகுருபரன்.
ஆனால், சக்கரவர்த்தியிடம் மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
“எங்களைன்னா மட்டும் அந்த பேச்சு பேசுறீங்கள, இப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?” என்று அவரின் மௌனத்தை சகிக்க முடியாமல் கார்த்திகேயன் வினவ, “என்ன சொல்லுவாரு… வழக்கம்போல, அவனுக்கு கூஜா தூக்கிட்டு வருவாரு.” என்று நக்கலாக கூறிய குமரகுருபரன் அங்கிருந்து சென்று விட, கார்த்திகேயனும் அங்கிருக்க பிடிக்காமல் சென்று விட்டான்.
அத்தனை நேரம் அமைதியாக இருந்த சக்கரவர்த்தி, ஒரு பெருமூச்சுடன் மயூரனை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவர் எதற்காக அழைத்திருப்பார் என்பதை சரியாக யூகித்த மயூரனோ, அழைப்பை ஏற்றதும், “எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது துவாரகா கூட தான் தாத்தா.” என்று அவனின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தான்.
தொடரும்…
மயூரன் 😁😁
😍😍😍