Loading

விடிந்ததும் ரகுவீர் பரபரப்பாக இருந்தான். “டைம் ஆச்சு மைத்தி. பிரேக் பாஸ்ட் ரெடியா?” என சாதாரணமாக வந்து நின்றவனின் முகத்தில் ஒரு துளி அளவு கூட வருத்தம் இல்லை.

அவளுக்குத் தான் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

“ரெடி தான்” என்றவள், தட்டில் உப்புமாவை நிரப்பிக் கொடுத்தாள்.

“ஐ வில் மிஸ் திஸ் தங்கம்ஸ்” என்றவனிடம் அதற்கு மேல் முடியாமல், நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.

“ப்ளீஸ் ரகு என்னை விட்டுட்டுப் போகாதீங்க. என்னால இங்க தனியா இருக்க முடியாது ரகு. ப்ளீஸ்… இந்த வேலை வேணாமே.” என்று மீண்டும் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

அதில் தட்டை டேபிளில் வைத்தவன், “என்ன மைதிலி… நேத்து நைட்டே நமக்குள்ள எல்லாம் சரி ஆகிடுச்சு தான. இப்போ ஏன் மறுபடியும் இப்படி ஆரம்பிக்கிற?” என்றான் சலிப்பாக.

அவள் சட்டென விலகி, “நமக்குள்ள எப்ப எல்லாம் சரி ஆச்சு?” எனப் புருவம் சுருக்கி கேட்டவளிடம்,

“நேத்து நைட்டு எல்லாம் மறந்துட்டு நம்ம லவ் மேக் பண்ணோம்ல. அதுலயே எல்லாம் சரி ஆகிடுச்சு தான…” என்று தீர்மானமாக கூறினான் ரகுவீர்.

அவளுக்குத் தான் ஐயோ என்றிருந்தது.

“நான் வேணாம்னு சொன்னேன். நீங்க போர்ஸ் பண்ணீங்க. உங்களைக் கஷ்டப்படுத்த வேணாம்னு நான் அமைதியா இருந்தேன். அதுக்காக எல்லாம் சரி ஆகிடுச்சுன்னா என்ன அர்த்தம் ரகு” பாதி வார்த்தைகளில் காற்று தான் வந்தது அவளுக்கு.

அவ்வளவு தான் ரகுவீர் சினம் கொண்டு பொங்கி விட்டான்.

“ஓ… பிடிக்காம உன்னை ரேப் பண்ற அளவு நான் கேவலமானவன் இல்லை மைதிலி. நேத்து தான் முதல் தடவை உன்னை தொட்டேனா? வாட் தி ஃபக் ஆர் யூ டாக்கிங்…” என்று உறுமிட, அவள் வெளிறி நடுங்கினாள்.

“அப்படி சொல்லல ரகு” அப்போதும் எதிர்த்துப் பேசிட தைரியமின்றி அவள் திணற,

“தொடும் போது இனிக்க தான செஞ்சுச்சு. அப்பறம் வந்துட்டு நான் போர்ஸ் பண்ணேன்னு சொல்ற. ஆர் யூ மேட்?” எனக் கர்ஜித்தான்.

ஏற்கனவே உடைந்திருந்த மனம் தான், இன்னும் சில்லு சில்லாகி இருந்தது.

அவன் தான் கூறும் எதையுமே திரித்து புரிந்து கொள்ள தான் விழைகிறான், இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று புரிந்து அமைதியாகி விட்டாள்.

அப்போதும் அவனுக்கு கோபம் குறைந்தபாடில்லை. உணவுத் தட்டை தரையில் கிடாசியவன், “நான் அடுத்த லீவ்க்கு வரும் போது, கொஞ்சமாவது இந்த சைல்டிஷ் பிஹேவியர்ல இருந்து வெளில வா மைதிலி. உன்னை ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ ஏன் பண்ணுனேன்னு இருக்கு…” இறுதி வரியை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் அவளுக்கும் அது தெளிவாகவே கேட்டது.

அதற்கும் கண்ணீரே வந்தது. வேறு என்ன செய்ய முடியும் அவளால். காதலையும் இழக்க மனம் வராமல், காதலானவன் கொடுக்கும் காயத்தையும் தடுக்க இயலாமல், எதிர்பார்த்த வாழ்வில் ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு இனி வாழ்ந்தாக வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.

அவனுக்கு தாமதமானதால் “நான் போன் பண்றேன்” என்று விட்டு கிளம்பியே விட்டான்.

உண்மையில் சென்று விட்டானா? இதுவரை நடந்தது எல்லாம் வெறும் விளையாட்டு என்று கண் சிமிட்டி மீண்டும் தன்னிடம் வந்து விட மாட்டானா என்று வெகு நேரம் வாசலையே பார்த்தபடி நின்றிருந்தாள் பாவை.

கணவனை அனுப்பி விட்டு வீட்டினுள் செல்லப் போன ஷோமாவிற்கு மைதிலியின் நிலை புரிந்தது.

“மைதிலி எவ்ளோ நேரம் வாசல்ல நிப்ப. உள்ள போய் ரெஸ்ட் எடுமா” என்று அனுப்பிட, தேம்பி தேம்பி அழுதபடியே வீட்டிற்குள் வந்தாள். சில நொடிகளில் காலிங் பெல் சத்தம் கேட்டதில், எதையும் யோசியாமல், “ரகு” என முணுமுணுத்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்.

வந்தது ஷோமா தான். “நாளைல இருந்து நீ காலேஜ் போகணும்ல. இங்க இருந்து ஆட்டோல போ மைதிலி. தெரிஞ்ச தம்பி தான். அதான் நம்பர் குடுக்க வந்தேன்” என்று ஒரு தாளை கொடுத்தவர், “இதெல்லாம் பழகிடும் மைதிலி” என்று அவள் தலையை தடவிக் கொடுத்து விட்டு கிளம்பினார்.

அதன் பிறகு, கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், பெற்றவளாக இல்லையென்றாலும் மல்லிகா இன்முகத்துடன் அவளை வரவேற்பார். உடன் பிறந்தவனை ஒதுக்கினாலும், உடன் பிறவா சகோதரனைப் போல ரவி அன்பு காட்டுவான். தோழி போல பழகுவாள் அண்ணி ரியா. உற்ற உறவினர்கள் இல்லையென்றாலும், நான்கு பேர் முகத்தையாவது பார்த்து கொண்டிருந்தாள்.

இங்கோ, எங்கும் தனிமை. அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்து கூட பல நாட்கள் ஆகி இருந்தது.

சமைத்து சாப்பிட கூட, அத்தனை சோர்வாக இருந்தது. மூன்று வேளை உணவை இருவேளையாக்கி கொண்டாள். ரகுவுடன் வாழ்ந்த சில இன்ப நாட்களும், இறுதியில் அவன் கொடுத்த வலியும் மாறி மாறி அவளை சுருட்டியது.

தினமும் ரகு அவளுக்கு போன் செய்து பேசுவான். கடமைக்கென இரு நிமிடம் “ம்ம்” கொட்டுபவள் பின் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள்.

“போன்ல பேச கூட வலிக்குதா உனக்கு?” ஒரு முறை ரகு கத்தி விட்டான்.

“ப்ளீஸ் ரகு. போன்ல பேசுனா எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு. எனக்காக நீங்க கிளம்பியா வர போறீங்க. இல்லைல. போன்ல ரொம்ப பேச வேணாம் ரகு… ரொம்ப லோன்லியா இருக்கு” என்று கேவலுடன் அழுது விட்டாள்.

“எனக்கும் நீ இல்லாம அப்படி தான் இருக்கு மைதிலி. அதுக்காக உன்கூட போன் பேசாம என்னால எப்படி இருக்க முடியும் சொல்லு. உன்கிட்ட பேசிட்டு தான் நான் தூங்கவே போவேன். கஷ்டமா தான் இருக்கும் போனை வைக்கும் போது, அதுக்காக நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா?” என்று கொஞ்சலுடன் கேட்பவனிடம் என்னதான் சொல்லிப் புரிய வைக்க இயலும்.

“நான் எப்படி இருக்கேன்னு சொல்ல வேற செய்யணுமா? தனிமை கொல்லுது” என்றாள் வேதனையாக.

“ஏன் ஷோமா ஆண்ட்டி எங்க மைத்தி? நீ அவங்க கூட போய் இரு. தூங்க மட்டும் நம்ம வீட்டுக்கு வா. காலேஜ்க்கு கரெக்ட்டா போற தான. இல்ல கூட ஆள் இல்லைனு கட் அடிச்சுட்டு வீட்ல உட்காந்து இருக்கியா?” அவளைக் கேலி செய்கிறானாம். என்னவோ எதுவுமே அவளுக்கு ரசிக்கவில்லை.

தனிமைக்கும் தனியாய் இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பேசி பேசி அவளுக்கு சலித்து விட்டது.

இப்போதெல்லாம் அவனிடம் எதிர்த்து வாதாடுவது இல்லை. போன் செய்தால் பேசிக்கொள்வாள். அவளாக அழைப்பதில்லை. அவன் உருகி கொஞ்சலாய் பேசும் சமயம் அவளே வகுப்பிற்கு செல்ல வேண்டுமென அழைப்பை துண்டித்து விடுவாள்.

சில நாட்களில் இன்பம் கொடுத்து, ஆனந்தத்தில் திளைக்க வைத்த உணர்வுகளின் வீரியம் ஆண்களுக்கு மட்டும் தான் உண்டா என்ன? அவளுக்கும் அந்நேரத்தின் உணர்வுகள் வரத்தானே செய்யும். அவளொன்றும் முற்றும் துறந்த துறவி அல்லவே!

அதைக் கீறி காயப்படுத்தி, மோகத்தீயில் எரிய வைக்காதே என்று பட்டும் படாமல் ரகுவிடம் கூறி விட்டாள். அதற்கும் “நான் அடுத்த லீவ்க்கு வரும் போது வட்டியும் முதலுமா இந்த நேரத்தை எல்லாம் காம்பென்சேட் பண்ணிடலாம் தங்கம்ஸ்” என்று பதில் கூறி விட, உணர்வுகளை அடக்கி அவன் பேசும் சில கிசுகிசுக்களையும் கேட்டுக் கொள்வாள். ஒரு கட்டத்தில் அடக்கப்பட்ட உணர்வுகள் மரத்தும் விட்டது.

நாட்களும் மெல்ல மெல்ல நகர, அன்று மைதிலிக்கு முக்கியமான வைவா இருந்தது. அதனை முந்தைய நாளே ரகுவீரிடம் கூறி இருந்தாள்.

அவனும் அவள் வைவா முடியும் நேரத்தை கணக்கிட்டு அவளுக்கு அழைத்திருக்க, அவளது அழைப்போ எடுக்கப்படவே இல்லை.

இரண்டு மூன்று முறை அழைத்தபிறகே போனை எடுத்தவள், உறக்க கலக்கத்தில் “ஹெலோ” என்றாள்.

“மைத்தி தூங்கிட்டு இருக்கியா?” ரகுவீர் கேட்டதில்,

“ம்ம் என்ன காலைல போன் பண்ணிருக்கீங்க” என்று சோர்வாகக் கேட்டாள்.

“மணியைப் பாத்தியா பன்னெண்டு. இன்னுமா தூங்கிட்டு இருக்க. வைவா போகல.” என்றதும் தான் அடித்து விழுந்து எழுந்தாள்.

மணி பன்னிரெண்டை தொட்டிருக்க, அவளுக்கு கண்ணில் நீர் கட்டியது.

“அய்யயோ தூங்கிட்டேன் ரகு ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு. ஐயோ போச்சு இன்னைக்கு வைவா” என்று அழுகுரலில் கூறியவளுக்கு தலை கிண்ணென வலிக்க, நீர் அருந்தும் பொருட்டு அடுக்களைக்கு வந்தாள்.

“உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா மைதிலி. வைவாவை வச்சுட்டு அசால்ட்டா தூங்கிட்டு இருக்க. அப்படி என்ன டயர்டு. கல்லு உடைக்கிற வேலையா பார்த்துட்டு வந்த… மெச்சூரிட்டி என்ன விலைன்னு கேட்ப போல. இடியட்.” என்று சரமாரியாக திட்டி விட்டான்.

ஏற்கனவே குடித்த தண்ணீர் வயிற்றில் நுழைந்து பிசைய உடலே வலித்தது அவளுக்கு. உடல் சோர்வு ஒரு புறமும் அவன் கொடுத்த அழுத்தம் ஒருபுறமும் தாக்க, போனை தூக்கி எறிந்து விட்டவள், அடுப்பு மேடையில் இருந்த பாத்திரங்களை எல்லாம் வெறிப்பிடித்தது போல தள்ளி விட்டாள்.

“ஆஆஆஆ… ஆஆஆ” என தலையைப் பிடித்துக்கொண்டு அழுத்தம் தாளாமல் கத்தியவள், மயங்கி சரிந்து விட்டாள்.

அதன்பிறகு ஷோமா வந்து தான் அவளை பார்த்து அதிர்ந்து மயக்கம் தெளிய வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவளுக்கு குழந்தை உருவாகி இருப்பது உறுதியாக, ஷோமா அவளை மகிழ்வுடன் கட்டிக்கொண்டார்.

அதற்கு எதிர்வினை ஆற்றாதவள், “தலையெல்லாம் பாரமா இருக்கு ஆண்ட்டி, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு” என்று தலையைப் பிடிக்க,

“இந்த நேரத்தில அப்படி தான் இருக்கும் மைதிலி. இனி வீட்ல தனியா இருக்காத. என்கூடவே இரு…” என்று அவளை தன் வீட்டில் இருக்க வைத்துக்கொண்டார்.

வீட்டிற்கு வந்து சிதறிய போனை ஒருங்கிணைத்து, ரகுவிற்கு போன் செய்தாள் மைதிலி.

அவளுக்கு இதை மகிழ்வுடன் பகிரத் தோன்றவில்லை தான். ஆனால், ஷோமா விடவில்லை. ரகுவிற்கு போன் செய்யச் சொல்லி துருவினார்.

மைதிலி எடுத்ததும், “நான் ப்ரெக்னன்ட்” என்று கடமையாக கூறி இருக்க, “வாவ்… அதான் டயர்டா. காங்கிரேட்ஸ் தங்கம்ஸ். பேபி எப்படி இருக்கு. இனி அன்டைம்ல சாப்பிடாத. நேரத்துக்கு சாப்பிட்டு, நேரத்துக்கு தூங்கு. சரியா. உம்மா” என்று போனிலேயே முத்தம் கொடுத்தான்.

அப்போதும், “ரகு நீங்க இல்லாம என்னால முடியல ரகு. யார் வீட்லயோ என்னால இருக்க முடியாது. ப்ளீஸ் நீங்க வந்துடுங்களேன். எனக்கு வயிறுலாம் பிரட்டிக்கிட்டே இருக்கு” மூக்கை உறிஞ்சி தேம்பினாள்.

“கடவுளே உனக்கே பேபி வர போகுது இன்னும் நீ பேபியாவே இருக்கியே மைதிலி. பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ. இனிமே தான் உனக்குத் துணைக்கு ஆள் இருக்கே” என்று குறும்பாய் கூறியதில், அவளுக்கு எரிச்சல் மண்டியது.

“ம்ம்க்கும் கூட ஆள் இருக்கணும்னு எதுக்கு கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்கணும். எங்கயாவது ரெட் லைட் ஏரியாவுக்கு போனாலே போதுமே” பேசி விட்டு உதட்டை இறுக்கி கடித்துக்கொண்டாள்.

எதிர்முனையில் பலத்த அமைதி நிலவ, “சாரி…  ர… ரகு உங்களை மிஸ் பண்றேன் ரகு. ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டுறீங்க. எனக்கு இந்த லைஃப் கொடுமையா இருக்கு” என்றாள் நொந்து.

“கொடுமையா இருந்தா ஏன் இங்க இருக்க. ஏதாவது ரெட் லைட் ஏரியாவுக்குப் போய் முந்தானையை காட்டு… சரியாப் போய்டும்” ஆதங்கத்தில் அவள் பேசிய வார்த்தைகளை வைத்து அவளையே இடிய வைத்தான் ரகுவீர்.

நிலைகுலைந்து போன மைதிலிக்கு, சோதனை அத்துடன் நின்று விடவில்லை. அதன்பிறகு எத்தனை முறை ரகு போன் செய்தாலும், அத்தனை முறையும் “இன்னும் நீ ரெட்லைட் ஏரியாவுக்குப் போகலையா?” எனக் கேட்டு குதறுவான்.

ஒரு கட்டத்தில், “ஐயோ நான் ஒரு ஆதங்கத்துல சொன்னேன். உங்களால தான இப்படி தனியா இருக்கேன். இப்படி நான் என்ன சொன்னாலும் அதுல குத்தம் கண்டுபிடிச்சுட்டே இருந்தா நான் என்ன தான் பேசுறது…” என்று குமுறிட,

“அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா?” ரகு எகிறினான்.

“தப்பு தான் ரகு சாரி” என்று அவள் மன்னிப்பு வேண்டியும், அவன் குற்றம் சுமத்துவதை நிறுத்துவதாக இல்லை.

ஐந்து மாத சிசுவை சுமந்து கொண்டிருந்தவள், வேறு வழியற்று அதையும் பொறுத்துக் கொண்டாள். அவனது அழைப்பைப் பார்த்தாலே பயம் வரத் தொடங்கியது.

“மிஸ் பண்றேன்” எனக் கூறினால் கூட, அதற்கும் ரெட் லைட் ஏரியாவையே இழுப்பவனிடம் மூச்சு விடவே பயமாக இருந்தது அவளுக்கு.

ஒருமுறை இவனது பேச்சை கேட்டு விட்ட சஞ்சீவ் ரகுவை அறைந்து விட்டான்.

“சின்னப்பொண்ணுகிட்ட என்னடா பேச்சு பேசுற. அறிவை எங்கயும் அடமான வச்சுட்டு கல்யாணம் பண்ணிட்டியா?” என்ற சஞ்சீவிற்கு உள்ளம் மைதிலிக்காக துடித்தது.

“நானா சொன்னேன். அவ தான் சொன்னா. என்கிட்ட எதுக்கு எகிறுற?” என்று ரகு அவனிடம் சண்டை பிடிக்க,

“நீயும் தான் அவளை டைவர்ஸ் வாங்கிட்டு போக சொன்ன, வேலை தான் முக்கியம் அவள் ரெண்டாம்பட்சம்னு சொன்ன, உண்மையை மறைச்சு  கல்யாணம் பண்ணிக்கிட்ட, நீ பேசுறது எல்லாம் கணக்குல எடுக்க கூடாது. ஆனா அவள் ஒன்னு சொல்லிட்டா அதை பிடிச்சு தொங்கிக்கிட்டே இருப்பியா? விட்டுத் தொலையேன். ஊருக்குப் போற வரை தயவு செஞ்சு அவளுக்கு போன் செய்யாத. புள்ளத்தாச்சி பொண்ணு, நிம்மதியாவாவது இருக்கட்டும்” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

“இனிமே அவளுக்கு போன் பண்ணுனா என்னை செருப்பால அடி. போனா போகுதுனு இருக்குற வேலையை விட்டுட்டு தனியா இருக்காளேன்னு போன் பண்றேன்ல என்னை சொல்லணும்” என்றவனுக்கு அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டி நிற்க, அடுத்த நான்கு நாட்கள் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.

உண்மையில் அந்த நான்கு நாட்களாக தான் மைதிலி நிம்மதியாக மூச்சு விட்டாள்.

காதல் என்ற பெயரால் புரிதலின்மையின் உச்சமாக திகழ்பவனுடன் போராடுவது கொடுமையாக இருந்தது. இப்போதைக்கு இந்த தனிமையே பரவாயில்லை என்று தோன்ற வைத்து விட்டான்.

அடுத்து அவனது அலைபேசி அழைப்பு வரவில்லை. அவனது இறப்பு செய்தி தான் வந்தது. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த வீரனுக்கு செய்ய வேண்டிய மரியாதையைச் செய்து, அவனது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

அவன் இறப்பு செய்து கேட்டு சிலையானவள் தான் மைதிலி. ஒரு எதிர்வினையும் காட்ட விழையவில்லை. சொல்லப்போனால் என்ன எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை அவளுக்கு.

அவனது உயிரற்ற முகத்தையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தாள்.

காதெலென்ற உணர்வை முதன் முறை தன்னுள் புகுத்தியவன், சில நாட்கள் என்றாலும் தன்னை ராணியாகப் பார்த்துக் கொண்டவன், இறுதியில் அவனது எதிர்பார்ப்பிற்கு தகுந்த மாதிரி தானில்லை என்ற ஏமாற்றத்தில் புத்தி மாறிப் போனான். தனது எதிர்பார்ப்பிற்கு சிறிதும் தகுதி இல்லாதவனாக அவன் மாறி விட்டதை பாவம் உணராமலேயே தியாகியாகி இறந்து விட்டான்.

காதலும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் போது ஏமாற்றமும் கண்ணீருமே மிஞ்சும் என அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டவள், இனி அவனது குரலும் தனக்கு துணையில்லை என்ற நிஜம் உணர்ந்து விரக்தி நகை பூத்தாள்.

சதாசிவம் அவளது முகத்தைப் பார்க்க கூட விழையவில்லை. குற்ற உணர்வு அவரை கொன்று எடுத்தது. மல்லிகா மகளின் வாழ்வை எண்ணி அழுது தீர்க்க, ரியாவோ அவளுக்கு ஆறுதல் கூற முயன்று தோற்றாள்.

அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை. மல்லிகா அவளை தன்னுடன் வரக்கூற, முடிவாக மறுத்தவள், “நான் தனிமையை பழகிக்கிட்டேன். எனக்கு இங்க இருக்குறதே பிடிச்சுருக்குமா” என்று ஒரேடியாக மறுத்து விட்டாள்.

தன்னை ஒரு பார்வை கூட பாராத மகளின் செயலில் உருக்குலைந்த சதாசிவம் நெஞ்சு வலியில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

அதன்பிறகு ஷோமாவின் உதவியைக் கூட அவள் நாடவில்லை. இயந்திரமாக சமைப்பாள், பிள்ளைக்காக கடமைக்கென உண்பாள். சுவற்றை பார்த்தபடி அமர்ந்திருப்பாள். படிப்பும் முடிந்திருந்தது அவளுக்கு. அடுத்து எதையும் செய்ய தோன்றவில்லை. விரக்தியிலேயே நாளும் கழிய, அவளுக்கு பிரசவ நேரம் வரும் போது சதாசிவம் உயிர் துறந்திருந்தார்.

அதில் அனைவரும் இடிந்திருக்க, ஷோமாவும் அந்நேரம் கடும் காய்ச்சலில் இருந்ததில், பிரசவத்திலும் மருத்துவமனைக்கு தனியாகவே சென்று பிள்ளை பெற்றுக்கொண்டாள்.

மல்லிகா கணவனை எண்ணி கலங்கினாலும் தனியாக கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாளோ என்ற பதற்றம் அதிகரித்தது.

அதனால், அடுத்த பத்து நாட்களிலேயே மைதிலிக்கு துணையாக வந்து விட்டார். ரவிக்கும் அலுவலகத்திலிருந்து வெளிநாட்டு வாய்ப்பு வர, குடும்பத்துடன் அங்கு செல்ல திட்டமிட்டான். தங்கையையும் உடன் அழைக்க அவள் மறுத்து விட்டாள். மல்லிகா இம்முறை அவள் தடுத்தும், “உன்னை விட்டுட்டுப் போறதா இல்லை மைதிலி. நானும் உன்கூட இருக்கேன். என்னை பார்த்துக்க மாட்டியா?” என்று விட, அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த விடுமுறைக்கு வந்த மோனி ஜாய் தான், ரகுவின் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.

மல்லிகாவும் அடுக்களையில் வேலையாக இருக்க, அவர் அழுவதை எவ்வித உணர்வும் அற்று பார்த்தாள் மைதிலி.

அவரோ, “எப்பவும் வேலைல கவனம் சிதறுனது இல்ல அவனுக்கு. கல்யாணத்துக்கு அப்பறம், நீ புருஞ்சுக்கலைன்னு அப்போ அப்போ புலம்புவான். எப்பவும் இந்த மாதிரி முக்கிய வேலைல இருக்குறவங்களுக்கு குடும்பத்தோட ஆதரவு தான் வேணும். நீ தேவையான சப்போர்ட் குடுத்துருந்தா அவன் கவனம் சிதறி இருக்காது. இனிமே மெச்சூர்ரா இருந்து பழகு மைதிலி. இனி உன் பொண்ணையும் நீ தான பொறுப்பா பார்க்கனும்” அறிவுரை சொல்கிறேன் பேர்வழியென ஏற்கனவே அனைத்தும் இழந்திருந்தவளிடம் குற்ற உணர்வையும் சொருகி விட்டுச் சென்றார் மோனி.

தொட்டிலில் இருந்த குழந்தையை வெகு நேரமாக பார்த்தவள், மெல்ல நடந்து அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு மல்லிகா வரவேற்பறைக்கு வந்து குழந்தையை தூக்கிக் கொண்டவர், “மைதிலி… குழந்தை பசில அழுகுது பாரு” எனக் கதவைத் தட்டினார்.

மூன்று முறை தட்டியும் சத்தமின்றி போக, பயந்து போனவர், ஜன்னலை திறந்து பார்த்து அதிர்ந்து விட்டார்.

கை நரம்பு அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் மைதிலி.

“ஐயோ மைதிலி” என கத்தியவர், அக்கம் பக்கத்தின் துணையுடன் அறைக்கதவை உடைத்து அவளை மருத்துவமனையில் சேர்த்தார்.

வெகு தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்து கட்டத்தை தாண்டி இருந்தவளுக்கு, இன்னும் தான் சாகவில்லை என்ற நிஜத்தில் விரக்தி அதிகரித்தது.

“ஏண்டி இப்படி செஞ்ச?” மல்லிகா அழுகையுடன் கேட்க,

“எனக்கு வாழ பிடிக்கலைம்மா!” ஈனக் குரலில் கூறினாள்.

தாயுள்ளம் வலித்தது.

“பாப்பாவை நினைச்சு பார்த்தியா மைதிலி?”

“பாப்பாவை நீங்க பாத்துக்கோங்க. இல்லன்னா என் அண்ணன்கிட்ட குடுங்க. அவன் வளர்க்க மாட்டேன்னு சொன்னா, அநாதை ஆஸ்ரமத்துல சேர்த்துடுங்க. என்கிட்ட வளர்ந்து பாவப்படுறதுக்கு எங்கயாவது நிம்மதியா வளரட்டும். என்னால அவளை வளர்க்க முடியும்னு தோணலமா” என்றாள் விழி கலங்க.

தலையில் அடித்துக்கொண்டு அழுது அரற்றிய மல்லிகா, “வேணாம் மைதிலி. இப்படி எல்லாம் பேசாத. என்னால தாங்க முடியல. இது உன் குழந்தை மைதிலி. நீ தான் வளர்க்கணும். என் கண்ணுல… எல்லாத்துக்கும் தற்கொலை தீர்வு இல்லைமா. வாழ வெறுப்பு வரும் தான். வெறுப்பை தாண்டி வாழ்ந்துடேன். ஏன் சின்னபிள்ளைத்தனமா சாகப்போறேன்னு நிக்கிற” என்றதில், அந்த ‘சின்னப்பிளைத்தனம்’ என்ற வார்த்தை அவளுக்கு கோபத்தை கிளறியது.

“நான் சாகமாட்டேன்” என்று முகம் இறுக முடிவாய் கூறி விட்டவள், அதன் பிறகு, தொழிலில் கவனத்தை செலுத்தி அதில் பெரும் வெற்றி கண்டாள்.

——

சலசலவென மென்காற்று முகத்துல மோதி, பிரஷாந்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை தட்டி விட்டுச் சென்றது. அவன் பேயறைந்தது போல அப்படியே நின்றான். உள்ளுக்குள் எதுவோ நொறுங்கி கொண்டிருந்தது. கண்ணீரை துடைத்தாலும் மீண்டும் மீண்டும் கண்ணை நிறைத்தது விழிநீர். அவளது மனநிலை அனைத்தும் துல்லியமாகப் புரிந்தாலும், நடந்தவற்றை மாற்ற இயலும் வல்லமை பெற்றவன் இல்லையே அவன்.

அப்படியொரு சக்தி கிடைத்தால், ஐந்து வருடங்களுக்கு முன்பே, அவளை கடத்தி வந்திருப்பானே. ரகு என்பவனின் உயிர் பருகும் வலியை அவள் அனுபவிக்காமலே இருந்திருப்பாளே.

அவளது அழுத்தத்திற்கான காரணம் இப்போது தெள்ளந்தெளிவாக புரிந்தது பிரஷாந்திற்கு.

இத்தனை கூறியவளுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. வெற்றுப் புன்னகை மட்டுமே இதழ்களை அலங்கரித்தது.

மைதிலி முகத்தில் வந்து விழுந்த கூந்தலை பின்னால் நகற்றியபடி, “சிண்ட்ரல்லா கதைல வர்ற பிரின்ஸ், ஒரு ஏழைப்பொண்ணை காதலிக்கிறதை பெருசா சொல்ற யாரும், கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஆகும்னு சொல்ல மாட்டாங்க பிரஷாந்த்.

ஒரு பிரின்ஸ்ஸோட வேலை நாட்டை காப்பாத்துறது. அவனுக்கு ஒரு இளவரசி வேணும் அவன் வம்சம் தழைக்க… அவ்வளவு தான். அவளோட மனநிலை எல்லாம் அந்த பிரின்ஸ்க்கு தேவை இல்லாதது. அதான் அவளுக்கு இளவரசி பட்டம் குடுத்து இருக்கானே அதை விட வேற என்ன வேணும்ன்ற தலைக்கணம்… ப்ச், பேண்டஸி கதைகள் காதலோடு முடிஞ்சு போய்டுறதுல அதுக்கு அப்பறம் வரப்போற ரியல் லைஃப் பத்தி நமக்கு தெரியாமயே போய்டுது” என்றாள் பெருமூச்சுடன்.

மூச்சு விடவே சிரமாக இருந்தது பிரஷாந்திற்கு. கண்ணை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், “முதல்ல என் வாயை ஆசிட் ஊத்தி கழுவனும்” எனக் கோபத்துடன் கூறினான்.

பழையதில் இருந்து மெல்ல மீண்டவள், நிமிர்ந்து பிரஷாந்தைப் பார்த்து அதிர்ந்தாள். அவன் முகத்தில் வேதனை அப்பி இருக்க, விழிகள் இரத்த நிறத்தில் சிவந்திருந்தது.

“எதுக்கு ஆசிட் ஊத்த போறீங்க?” புரியாமல் மைதிலி கேட்க,

“நேத்துல இருந்து ரகு க்ரேட், ம**று மட்டைன்னு சொன்னேன்ல அதுக்கு தான். இந்த லட்சணத்துல அவனுக்கு ஸ்பீச் குடுக்க வேற சொன்னேனே. அந்த நாயைப் பத்தி நீ முன்னாடியே சொல்லிருந்தா, நான் மகி பேபியை சென்னைல வச்சுருப்பேன்” என்றான் சினத்துடன்.

இதழ்களை அழுந்தக் கடித்தவள், “பிரஷாந்த் ப்ளீஸ், என் முன்னாடி அவரைத் திட்டாதீங்க. என்னால அப்படி அவாய்ட் பண்ண முடியாது.” என்றவளின் கண்களில் கெஞ்சில் நிரம்பி இருக்க,

அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “நான் மகியை தான் விட்டுருக்க மாட்டேன்னு சொன்னேன். உன்னை இங்க வரவேணாம்னு சொல்லிருக்க மாட்டேன் மைலி. ஐ நோ, யூ ஸ்டில் லவ் ஹிம்” என்றவனின் வார்த்தைகளில் கூட ஏனோ ஒரு வித வலி.

அவ்வலி அவளுக்கும் கடத்தப்பட்டிருக்க, “தெரியல… மே பி. எனக்கு நல்லவரா இல்ல. பட் நாட்டுக்கு நல்லவரா தான இருந்து இருக்காரு. அதுக்கு வேண்டிய மரியாதையை குடுக்கணும்ல. அவர் விஷயத்துல இப்ப வரை என்னால போல்டா இருக்க முடியல. இட்ஸ் வியர்ட்ல” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

தலையாட்டி புன்னகைத்த பிரஷாந்த், “போல்ட் எல்லாம் நிறையவே இருக்கு. உனக்கு பயம். அவன் நினைப்புல இருந்து மீண்டு வர்றதுக்கு பயம். குற்ற உணர்ச்சி, உன்கூட சண்டை போட்டு கவனம் இல்லாம செத்துட்டான்ற குற்ற உணர்ச்சி.

பர்ஸ்ட் லவ் எபெக்ட், முதன்முதலா உன்னைக் கவர்ந்தவன்ற சாப்ட் கார்னர், இதெல்லாம் உன்னை விட்டுப் போற வரை, உன்னால அவன் விஷயத்துல எந்த தெளிவான முடிவும் எடுக்க முடியாது மைலி. ஒன்னு அவன் செத்ததுக்கு அழு, இல்லன்னா அவன் செத்துட்டான்னு நிம்மதியா பீல் ஆகு. ரெண்டுமே இல்லாம, உன்னை நீயே துன்புறுத்திக்காத. இட்ஸ் செல்ப் வயலன்ஸ் மைலி. 

என்னால உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறதை பார்க்க முடியாது. நான் பிரின்ஸ் எல்லாம் இல்லை. சாதாரண அன்பை எதிர்பார்க்குற ஒரு நார்மல் பெர்சன் அவ்வளவு தான். ஆனா இனியொரு முறை நீ உன்னை கஷ்டப்படுத்திக்கிறதை என்னால பார்க்க முடியாது. உன் காதல் அவனாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா, என் காதல் நீ தான். பிரின்ஸோட காதலைப் பார்த்து இருக்க, ஒரு சாதாரண மனுஷனோட காதலை நீ பார்த்தது இல்லைல. இனி பார்ப்ப!” என்று மென்மையிலும் மென்மை கலந்து, அவளது குழப்பத்திற்கான காரணத்தையும் தனது காதலில் வீரியத்தையும் காட்டியவனை பேச்சற்று திகைத்துப் பார்த்தாள் மைதிலி.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
81
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்