470 views

தேவன் 11

யார் எவ்வளவு நேரம் கழித்து தூங்கி இருந்தாலும் சரியான நேரத்தில் அவர்களை எழுப்பவே உதயமானான் கதிரவன். ஒவ்வொரு நாளும் சூரியனுக்கு ஏற்றார் போல் தேவநந்தனும் பரபரப்பாக வேலையை கவனிக்க செல்வான். இன்றோ இரவெல்லாம் மாமன் மகளோடு அடித்த கூத்தில் எழ முடியாமல் வெளித் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

மகனை பார்த்த அன்னம் தொந்தரவு  செய்யாமல் வாசலை பெருக்கி கூட்ட, “அக்கா அவரு உன்னை வீட்டுக்கு வர சொன்னாரு.” விடிந்ததும் விடியாதமாக அக்கா வீட்டு முன்பு நின்றார் வள்ளி.

“எதுக்கு வள்ளி.”

“தெரியல க்கா. உன்கிட்ட பேசணும்னு கூட்டி வரச் சொன்னாரு.” என்றவர் பெரிய மகன் இன்னும் எழாமல் இருப்பதை பார்த்து,

“என்ன பெரியவன் இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்கான். உடம்புக்கு ஏதும் முடியலையா.” என்று அவன் பக்கத்தில் அமர்ந்தார்.

“என்னன்னு தெரியல என்னைக்கும் வெள்ளன எழுந்திடுவான். இன்னைக்கு இம்புட்டு நேரம் தூங்குறான்.” என்ற அன்னம் சேலையை மாற்றிக்கொண்டு தங்கை கணவனை பார்க்க தயாரானார்.

குப்புற படுத்திருந்த தேவநந்தனின் தலையை வருடிக் கொண்டிருந்த வள்ளியின் பார்வையில் அவன் முதுகில் இருக்கும் கொப்பளம் தெரிய, “ஏங்க்கா புள்ள முதுகுல இவ்ளோ பெரிய கொப்பளம் இருக்கே பார்த்து கொஞ்சம் மஞ்சள் வைக்க கூடாதா.” என்றார் கவலையாக.

“என்னை எங்க பண்ண விடுது சாமி. ஏதாச்சும் சொன்னா எனக்கு ஒண்ணும் இல்லம்மான்னு ஒத்த வார்த்தையில என் வாய அடைச்சிடுது.” உள்ளிருந்து கவலையாக அன்னம் குரல் கொடுத்தார்.

தலையை வருடிக் கொண்டிருந்தவர் அடுப்பங்கரை சென்று மஞ்சள் எடுத்து வந்தார். தலைமாட்டில் அமர்ந்தவர் அந்த கொப்பளத்தை லேசாக கீறி விட,

“யம்மா…” என சினுங்கினான் தேவநந்தன்.

“செத்த நேரம் அப்படியே படுய்யா.” தூக்கிய தலையை மீண்டும் தலகாணியில் அழுத்தி பிடித்துக் கொண்டு, “உடம்ப கவனிக்கணும்னு அக்கறையே இல்ல சாமி உனக்கு. இவ்ளோ தண்டி இருக்கே பின்னாடி ஏதாச்சும் வேலை வச்சா என்ன பண்ணுவ. தினமும் சந்தைக்கு போற அப்படியே ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கு போயி இதை என்னன்னு பார்த்தா என்ன.” என பேசிக்கொண்டு இருந்தவர் அதை இன்னும் கீறி விட, வலியில் துடித்தான் தேவநந்தன்.

மகன் துடிப்பதை உணர்ந்த வள்ளி, “சேரிய்யா எதுவும் பண்ணல. நீ சட்டைய  மாத்திக்கிட்டு கிளம்பு. சித்தப்பாவ வர சொல்ற  ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்க.” என்றவரின் மடியில் தலை நுழைத்து இரு கைகளால் வளைத்துக் கொண்டவன்,

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சின்னம்மா. நேத்து பூரா உங்க அக்கா இதுக்கு பாட்டு படிச்சு ஒப்பாரி வச்சிட்டாங்க. நீங்க திரும்பவும் ஆரம்பிச்சு விடாதீங்க.” என்றவன் கண்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து எழவில்லை.

“ஒத்த பிள்ளைய பெத்து வச்சுக்கிட்டு இதெல்லாம் பார்த்துட்டு சும்மா இருப்பாளா. ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு என்ன உனக்கு நோவு.” என்றார்.

“கொப்புளத்துக்கு எல்லாம் யாராவது அங்க போவாங்களா சின்னம்மா.”

“இந்த நோய்க்கு தான் ஆஸ்பத்திரிக்கு போகணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்காய்யா. தொட்டதுக்கே இப்படி கத்துற உள்ள ஆழமா ஏதாச்சும் ஆகிட போகுது. முதல்ல நீ எந்திரிச்சு கிளம்புய்யா. ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்.” என்று அவன் முதுகை தட்டி, எழுப்ப துவங்கினார்.

“வேலை கிடக்கு சின்னம்மா. வாழை தோப்ப வெட்ட ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன். இன்னைக்குள்ள கேட்டவங்களுக்கு ஏத்தி ஆகணும்.”  தேவநந்தன் வர பிடிவாதம் பிடிக்க, அதற்குள் தயாராகி வந்தார் அன்னம் .

“நீ என்ன சொன்னாலும் சாமி காதுல வாங்காது. நீ வா நம்ம கிளம்புவோம்.” இரண்டு நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தும் கேட்காமல் இருக்கும் மகனின் மீது இருக்கும் கோபத்தை அவர் வார்த்தைகளால் கொட்ட,

“எங்க ம்மா இவ்ளோ காலையில கிளம்பிட்ட.” என்று அவர் கோபத்தை அறியாதவாறு கேட்டான்.

“சித்தப்பா கூட்டி வர சொன்னாங்க.” என்றவர் அக்காவோடு கிளம்ப தயாராக,

“எதுக்கு சின்னம்மா ஏதாச்சும் பிரச்சனையா.” என்றான் தீவிரமாக.

“அதெல்லாம் எதுவும் இல்லைய்யா. வேற ஏதோ பேசுறதுக்காக கூட்டி வர சொன்னாங்க.” என்றவரை தாயோடு அனுப்பி வைத்தான்.

உடலை முறுக்கி சோம்பல் முறித்தவன் அன்னை வருவதற்குள் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். அன்னம் ஏற்கனவே வீட்டை கூட்டி முடித்திருக்க, மாடுகளின் சாணத்தை அள்ளி துவாரத்தில் அடைத்து வைத்தவன் அதை மேய்ச்சலுக்கு பின்னால் இருக்கும் காலி நிலத்தில் விட்டான்.

இந்த வேலைகளை செய்து முடிப்பதற்குள் மணி எட்டாகி விட, சூனாம்பேடு கிராமத்தில் இருக்கும் தண்ணீர் பிடிக்கும் குழாய்கள் அனைத்திலும் நீர் கொட்ட ஆரம்பித்தது. காலி தவளைகள் அனைத்தையும் நீரைக் கொண்டு நிரப்பியவன் தொட்டிகளை நிரப்பினான்.  நீண்ட ஹோல்ஸ் குழாயை பொருத்தி அங்கிருக்கும் பயிறு வகை செடிகளுக்கும், கீரைகளுக்கும் நீர் பாய்ச்சினான்.

அடுப்பங்கரை உள்ளே நுழைந்தவன் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இட்லி ஊத்த ஆரம்பித்தான். அன்னம் வருவதற்குள் செய்து முடித்தாக வேண்டும் இல்லை என்றால்   குதிக்க ஆரம்பித்து விடுவார். அதனாலயே வேக வேகமாக செய்து முடித்தான். இட்லி ரெடி ஆவதற்குள் நேற்று இரவு வைத்த கருவாட்டு குழம்பை சூடு படுத்தினான்.

அனைத்து வேலைகளையும் முடித்தவன் ஒருமுறை வீட்டை சுத்தி பார்த்து விட்டு குளிக்கச் சென்றான். மகன் இங்கு இவ்வளவு வேலைகளை செய்து முடித்திருக்க, தங்கை வீட்டிற்கு சென்றதிலிருந்து அமைதியாக நின்று கொண்டிருந்தார் அன்னம்.

பெரியம்மாவை கண்ட கண்ணன் அன்போடு  வரவேற்க, “கண்ணா நீ நம்ம தோட்டத்து பக்கம் வரைக்கும் போயிட்டு வா.” என அவனை வெளியேற்ற பாண்டியன் முற்பட,

“என்னால அங்க எல்லாம் போக முடியாது ப்பா.” என்றவன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

“என்னப்பா விஷயம் நான் வேணா போயிட்டு வரட்டுமா.” ஆண் பிள்ளை கேட்காத வார்த்தையை பெண் பிள்ளை கேட்க, பாண்டியன் மகனின் அறையை எட்டிப் பார்த்தார்.

“ஒண்ணும் இல்லடா செடிங்களுக்கு ரெண்டு நாளா தண்ணி விடாம இன்னைக்கு தான் திருப்பி விட்டு இருக்கேன். ரொம்ப நேரம் ஆயிடுச்சு அதை நிறுத்திட்டு வரணும் அவ்ளோ தான்.” என்ற தந்தைக்கு,

“இதுக்கு எதுக்குப்பா அண்ணனை அனுப்புறீங்க நான் போயிட்டு வரேன்.” என்று கிளம்பினாள்.

உள்ளிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் வெளியில் வந்து, “நீ எதுக்கு அங்கெல்லாம் போயிட்டு இருக்க? வீட்டுல இரு, நான் போறேன்.”  என்றவன் தந்தையை முறைத்துக் கொண்டு கிளம்பினான்.

“இவன் என்ன விசித்திர பிறவியா இருக்கான்.” வள்ளி மகனை குறைபட்டுக் கொள்ள,

“தன்ன போகச் சொல்லும் போது இருந்த விம்பு தங்கச்சிய போகச் சொல்லும் போது இல்ல அவ்ளோ தான். புள்ளைய புரிஞ்சுக்காம பேசாத வள்ளி.” என்ற அக்காவின் வார்த்தையில் வக்கனை மட்டுமே செய்ய முடிந்தது அவரால்.

“காபி குடிங்க பெரியம்மா.” என்ற ஆராதனா பெரியவர்கள் ஏதோ பேசுகிறார்கள் என்று உணர்ந்து,

“அப்பா யாழு வந்ததுல இருந்து நான்  பார்க்காம இருக்கேன். ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்.” என்று வருங்கால வீட்டிற்கு கிளம்பினாள்.

மகளின் செய்கைகளை கணித்த பாண்டியன் முகத்தில் பூரிப்பு. ஆண் பிள்ளை என்ன பெண் பிள்ளை என்ன பெற்றோர்களின் உணர்வை புரிந்து தங்களின் செயல்களை மாற்றிக் கொள்ளும் அனைத்து பிள்ளைகளும் வரம் தான்.

“உங்க அண்ணன் நேத்து என்னை பார்க்க வந்திருந்தாரு அன்னம்.” என்றதும் அக்கா தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“யாழு கல்யாண விஷயத்தை பத்தி பேசினாரு.” என்றதும் அன்னத்தின் மனதில் ஏமாற்றம் உண்டானது.

அதனால் அவர் எதுவும் பேசாமல் தங்கையின் கணவர் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, “யாழுக்கு கண்ணனை கல்யாணம் பண்ணி கொடுக்கறது பத்தி பேசினாரு.” என்றவர் அன்னம் முகத்தை ஆராய, எதையும் பிரதிபலிக்காமல் அமர்ந்திருந்தார்.

“இப்ப என்னவாங்க அவசரம் ரெண்டு பேரும் படிச்சிட்டு தான இருக்காங்க.” என்ற மனைவிக்கு,

“தெரியல வள்ளி. ஒருவேளை நேத்து ஆஸ்பத்திரியில நடந்ததை வைச்சு கேட்டாரோ என்னவோ.” என்றார் பாண்டியன்.

“நீ என்னம்மா சொல்ற. நேத்து மச்சான் கேட்டதுக்கு அப்புறம் பேசிக்கலாம்னு அனுப்பி வச்சிட்டேன். நீ சொல்லப் போறத வச்சு தான் இனிமே அவர் கிட்ட பேசணும்.” அன்னத்திடம் அவர் நேரடியாக தன் மனதில் இருப்பதைக் கேட்க,

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு. பையன் கேட்டு வராங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா கொடுங்க.” என்றதோடு பேச்சை முடித்தார்.

“அதை எங்களுக்கு பண்ண தெரியாதா அன்னம். பெரியவன வச்சுக்கிட்டு சின்னவனுக்கு பொண்ணு கேட்டு வரது நல்லா இல்ல. அதே மாதிரி தேவநந்தனுக்கு கல்யாணம் ஆகாம சின்னவனுக்கு கல்யாணம் பண்ற ஐடியாவும் எனக்கு இல்ல. நீ ஒரு வார்த்தை சொன்னா உன் சார்பா மச்சான் கிட்ட பேசி பார்ப்பேன்.” என்றார்.

“யார் என்ன பேசுனாலும் அண்ணன் ஒத்துக்க மாட்டாரு. எங்களுக்காக பேச போய் நீங்க யாரும் பகைச்சுக்க வேணாம் அவரை. ஏற்கனவே எங்களுக்காக பேசப் போய் தான் இப்போ வரி பணம் கட்டாம தனியா இருக்கீங்க. இதுக்கு மேலயும் எந்த பேச்சு வார்த்தையும் வேணாம்.” என்றவர் உள்ளம் கண்ணீர் வடித்தது தன் மகனுக்கு பெண் கேட்காமல் போனதில்.

“ஒரு தடவை பேசி பார்த்துக்கலாமே க்கா. எங்களுக்கும் யாழு மருமகளா வர்றதுல முழு சம்மதம் தான். அது பெரியவனுக்கா இருந்தாலும் சரி, சின்னவனுக்கா இருந்தாலும் சரி. சின்னவனை விட பெரியவன் கிட்ட யாழு ரொம்ப உரிமையா பழகுறா. ஒருவேளை அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா அண்ணன் மனசு மாறவும் வாய்ப்பு இருக்கு. நீ ஒரு வார்த்தை யோசிச்சு சொல்லு க்கா.” என்ற தங்கையை பார்த்து விரக்தியாக சிரித்தவர்,

“அண்ணன பத்தி தெரிஞ்சும் இந்த வார்த்தைய கேக்குறியே வள்ளி. ரோட்ல போற யாராது ஒருத்தனுக்கு கூட அவர் மகளை கட்டி தருவாரு என் மகனைத் தவிர. பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் மன கஷ்டம் வேணாம் விட்டுடுங்க. என் மகனுக்கு ஒருத்தி பிறக்காமையா இருப்பா.” என்றவர் இப்போது மறைக்காமல் தன் வருத்தத்தை வெளிக்காட்டினார் கண் கசங்கி.

“உன் முடிவு இதுவாக இருந்தா மறுப்பு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அன்னம். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. பெரியவனுக்கு கல்யாணம் ஆகாம சின்னவனுக்கு பண்ண மாட்டேன்.” உறுதியோடு கூறினார் பாண்டியன்.

பெறாத பிள்ளைக்காக தங்கையும் அவள் கணவனும் பேசும் பேச்சைக் கேட்டு மகிழ்வதா இல்லை தன் பிள்ளை ஆதரவின்றி அனாதையாக நிற்பதை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை அன்னத்திற்கு.

தாயின் கண்ணீருக்கு முன் கடவுளே ஒன்றும் இல்லை என்றபோது பலன் இல்லாமல் போகுமா! துயர் துடைக்க தேவநந்தனின் துணைவி வரப்போகிறாள்.

*****

“மாமா எங்க இருக்கீங்க.” வீட்டை விட்டு வெளியில் வந்ததும் உடனே அழைத்து விட்டாள் கிருஷ்ணனுக்கு ஆராதனா.

“எதுக்குடா? இப்ப தான் அப்பா கூட சந்தை வரைக்கும் வந்தேன்.”

“நம்ம வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் மாமா. அதான் இருக்கியான்னு கேட்டேன்.” காதலியின் வார்த்தையில் ஏமாற்றம் அடைந்தான்.

“முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா ஆரு. இப்ப தான் அப்பா கூட கிளம்பினேன்.” என்றவன் சலித்துக் கொண்டு கேட்டான்,

“சரி எவ்ளோ நேரம் இருப்ப.” என்று.

“கொஞ்ச நேரம் தான் மாமா இருப்பேன். பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தாங்க அப்பா கிட்ட ஏதோ பேசணும்னு. அதான் தொந்தரவு பண்ண வேணாம்னு காலேஜ் பேக் எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். யாழுவ ஒரு எட்டு பார்த்துட்டு அப்படியே காலேஜ் கிளம்பிடுவேன்.” என்றவள் கிருஷ்ணன் வீட்டை நெருங்கி விட்டாள்.

திட்ட வாய் எடுத்த கிருஷ்ணனின் அருகில் சண்முகம் வர, “என்னடா  வீட்டுக்கு வரன்னு இப்ப சொல்ற! முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா. இப்ப தான் அப்பா கூட சந்தைக்கு வந்தேன்.” என்றவனை பார்த்த சண்முகம் ‘யார்’ என்று சைகையில் விசாரிக்க,

கைபேசியை காதில் இருந்து தள்ளி வைத்தவன், “என் ஃப்ரெண்ட் ப்பா. அவனுக்கு கல்யாணமாம் பத்திரிக்கை வைக்க வந்திருக்கான்.” என்றான் பொறுமையாக.

சொல்லி முடித்தவன் காதில் கைபேசியை வைத்து, “நீ ஒண்ணு பண்ணுடா சூனாம்பேடு பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்று அவளுக்கு சிக்னல் கொடுத்தான்.

“அதெல்லாம் முடியாது மாமா. நான் வரும்போது அண்ணனுக்கு கால் பண்ணி காலேஜ் கூட்டிட்டு போக சொல்லிட்டேன்.”  அவசரமாக பதில் கூறினாள் ஆராதனா.

“உனக்கு ரொம்ப திமிராயிடுச்சுடா. நான் கூப்பிட்டும் வர மாட்றல. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நேர்ல பார்க்கும் போது இருக்கு.” என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு மாமன் வீட்டிற்குள் நுழைந்தாள் ஆராதனா.

“வீட்டுக்கு வந்துட்டேன் மாமா வைக்கிறேன்.” என்றவள் துண்டிக்கச் செல்லும் நேரம்,

“சரிடா நம்ம சாந்தரம் மீட் பண்ணிக்கலாம் நீ பார்த்து காலேஜுக்கு போ.” என்றவன் போனை கட் செய்து விட்டு பாக்கெட்டில் வைத்தான்.

“என்னடா பத்திரிகை வைக்க வரான்னு சொல்லிட்டு இப்போ பார்த்து காலேஜுக்கு போன்னு சொல்ற.” என்ற சண்முகத்தின் வார்த்தையில் அலறியவன்,

“அது ஒண்ணும் இல்லப்பா எங்க பிரெண்ட்ஸ் இன்னும் அதே காலேஜ்ல அடுத்த டிகிரி படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு பத்திரிக்கை வைக்க போறன்னு சொன்னான். அதான் பார்த்து போகச் சொன்னேன்.” என்று சமாளித்தான் மனதிற்குள் பயந்து கொண்டு.

மாமன் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்ததும் நடுங்க ஆரம்பித்தது ஆராதனாக்கு. கிருஷ்ணன், சண்முகம் இருவரும் வீட்டில் இல்லை என்பதை அறிந்தாலும் ஏனோ நடுக்கம் உண்டாவதை தடுக்க முடியவில்லை அவளால்.

மருமகள் வருகையை அறிந்த பரிமளம், “இப்ப தான் இந்த வீட்டுக்கு உனக்கு வழி தெரிஞ்சுதாக்கும்” என கொனட்ட,

“வீட்டுக்கு வந்த பிள்ளை கிட்ட இப்படி தான் கேப்பீங்களா அத்தை.” என்றவள் யாழினியை தேடினாள்.

“அப்படியே அத்தை மேல ஆசைப்பட்டு தினமும் வந்து பார்த்துட்டு போற பாரு உன்னைய கேக்குறாங்க கேள்வி. இந்தா இருக்க பக்கத்து தெருவுல… ஆனா பார்த்து பல வருஷம் ஆன மாதிரி இருக்கு. நானே கூப்பிட்டாலும் ஏதாச்சும் காரணம் சொல்லி நழுவிடுற.” என்று குறைப்பட்டுக் கொண்டாலும் அவளுக்கு தண்ணீர் கொடுத்தார் குடிக்க.

“காலேஜ் போறதால டைம் இருக்க மாட்டேங்குது அத்தை. அண்ணன் வேற இனிமே இங்க இருக்க பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுன்னு வேற சொல்லிட்டான். நானே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று ஆராதனா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில் வந்த யாழினி,

“ஆமா ம்மா மேடம்க்கு டைம் இல்ல. பாவம் காலையில காலேஜ் போகணும், சாயந்திரம் டியூஷன் எடுக்கணும், அப்புறம் டியூஷன் கத்துக்கணும் எவ்ளோ வேலை இருக்கு.” என்று மறைமுகமாக நக்கல் அடித்தாள்.

“என்னடி அது டியூஷன் கத்துக்கணும்னு சொல்ற. அவ தான சொல்லி கொடுக்க போறா. எதுக்கு கத்துக்கணும்.” மகளின் வார்த்தையில் உண்டான சந்தேகத்தை பரிமளம் கேட்க,

“இது வேற ஒரு டியூஷன் ம்மா. மேடம் அதுல தான் இப்ப ரொம்ப பிசியா இருக்காங்க.” என்றவளுக்கு கண்ணை காட்டிக் கொண்டிருந்தாள் ஆராதனா.

அவளின் கெஞ்சல் மொழிகளைக் கேட்ட பின் கேலி செய்வதை நிறுத்தியவள் அவளோடு கதை அளக்க தொடங்கினாள்.

“காலேஜ்க்கு எப்படி போவ‌ ஆரு? மாமா வரேன்னு சொன்னாரா?.”

“அண்ணா கிட்ட போன் போட்டு சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துட்டுவாரு.”

“அதுக்குள்ள ஒரு வாய் சாப்பிடு.” என்ற பரிமளம் இருவருக்கும் காலை உணவை எடுத்து வைக்க, “மாமாக்கு சோறு கட்டி வை ம்மா.” என்றவள் வருங்கால அண்ணியிடம்,

“மாமா கிட்ட கொடுத்து சாப்பிட சொல்லு.” என்றாள்.

“நான் சொல்லி கேட்டுடுமாக்கும் அண்ணா. ரெண்டு நாளா பெரியம்மா ஆஸ்பத்திரிக்கு போக சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்காங்க போல. அண்ணா அசராம போக்கு கட்டிக்கிட்டு இருக்கு.” என்றதும்,

“எதுக்கு ஆஸ்பத்திரிக்கு? மாமனுக்கு ஏதாவது உடம்பு முடியலையா! என்கிட்ட எதுவுமே சொல்லலையே.” என்றவள் கேட்டதுக்கான பதிலை தெரிந்து கொள்ளாமல், உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
எடுக்கவில்லை தேவநந்தன்.

“தெரியல ஏதோ முதுகுல கொப்பளம் போல. பெரியம்மா தான் ரொம்ப வருத்தப்பட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க.” என்றதும் சாப்பிடாமல் பின்னால் ஓடியவள் கை கழுவிக்கொண்டு,

“நீ சாப்பிட்டு வா ஆரு நான் மாமா வீட்டுக்கு போறேன்.” என்றவள் பரிமளம் கத்துவதைக் கூட காதில் வாங்காமல் பறந்து விட்டாள்.

***

குளித்து முடித்து வந்தவன் தலையை துவட்டி கொண்டிருக்கும் நேரம், “மாமா” என்று கத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் யாழினி.

அவளைக் கண்டதும் அரக்கப் பறக்க அறைக்குள் ஓடியவன் இடுப்பில் கட்டி இருக்கும் துண்டை மாற்ற கதவை சாற்றும் நேரம் சரியாக அவன் அறைக்குள் நுழைந்தவள்,

“மாமா ஏதோ கொப்பளம் வந்திருக்காமே எங்க காட்டு.” என்றவள் பரபரப்பாக தேடினாள் அவன் உடலை திருப்பி.

“பாப்பா கொஞ்ச நேரம் வெளிய இரு வந்துடுறேன்.” என்றவனின் வார்த்தை அவள் செவியில் விழவே இல்லை.

முதுகை திருப்பியவள், “என்ன மாமா இது? இவ்ளோ பெரிய கொப்பளமா இருக்கு. பார்க்காம என்ன பண்ணிட்டு இருக்க. நேத்து கூட ஹாஸ்பிடலுக்கு தான போனோம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா பார்த்துட்டு வந்து இருக்கலாம்ல. லைட்டா சீழ் வேற பிடிச்சிருக்கு. இதோட  குளிச்சிட்டு வேற வந்திருக்க. இந்த மாதிரி இருக்கும் போது தண்ணி படக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு. இன்னும் என்ன மாமா குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்க.” என்று அவன் முதுகில் இருக்கும் காயத்தை பார்த்தவள் பயந்து கொண்டு பேச, அவன் இம்சையாக உணர்ந்து கொண்டிருந்தான் அவள் முன்பு ஆடையில்லாமல் இருப்பதால்.

அவனைத் திருப்பி, “டிரஸ் போட்டுட்டு கிளம்பு மாமா ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்.” என்றாள்.

“பாப்பா நீ வெளிய போனா தான டிரஸ் மாத்த முடியும்.”  நெளிந்து கொண்டு பேச, அப்போது தான் கவனித்தாள் மாமனின் மேனியை.

வாயில் கை வைத்து சிரித்தவள், “ஷேம்! ஷேம்!! பப்பி ஷேம்.” என்றாள்.

“ப்ச்! நீ மொத வெளிய போ பாப்பா.” என்றவன் யாழினியை வேகமாக அறையிலிருந்து வெளியேற்ற,

“இதுக்கு எதுக்கு மாமா இப்படி நெளிஞ்சு நிக்கிற. நான் தான… ” என்று சிரித்தவாறு வெளியில் வந்துவிட்டாள்.

அவள் சென்றதும் வேகமாக கதவை சாற்றியவன் ஆடையை மாற்றத் துவங்கினான். அவன் அறை கதவு திறக்கும் வரை பொறுமை காத்தவள் திறந்து கொண்டதும் புயலாய் நுழைந்து,

“இந்த அறிவெல்லாம் கரெக்டா இருக்கு இருக்க வேண்டிய அறிவு எங்க போச்சு மாமா.” என்ற யாழினியை முறைத்தவன்,

“என் அறிவுக்கு என்ன பாப்பா.” என கேட்டான்.

“என்னவா! முதுக பாரு மாமா எவ்ளோ பெரிய கொப்பளம் இருக்கு. அதை கவனிக்காம அப்படி என்ன வேலை உனக்கு.” என்றவள் பேசிக் கொண்டிருக்க, தலைவாரி முடித்தவன்,

“சாப்டியா பாப்பா.” என்றான் அவள் வார்த்தையை கண்டும் காணாமலும்.

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன கேட்டுட்டு இருக்க மாமா. கிளம்பு ஹாஸ்பிடலுக்கு போகலாம்.” என்று ஒற்றை காலில் நின்றாள்.

தேவநந்தன் ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுத்துக் கொண்டே இருக்க , “இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா.” என்று சத்தமிட்டாள்.

“நேத்து தான் மாமா கூட பிரச்சினையாச்சு. திரும்பவும் நம்ம ஒண்ணா ஆஸ்பத்திரிக்கு போனா அவ்ளோ தான் பாப்பா.” மாமனை மனதில் வைத்து அவளோடு செல்ல மறுத்தான்.

“அவர் கிடக்காரு. ஏதாச்சும் பிரச்சனை பண்ணா நான் பார்த்துக்கிறேன். நீ முதலில் கிளம்பு மாமா.” என்ற பின்னும் அவன் நகராமல் அடம்பிடிக்க,

“இப்படி எல்லாம் பண்ணா இனிமே உன் கூட பேச மாட்டேன் மாமா.” என்று மிரட்டினாள்.

“என் கூட பேசாம உன்னால இருக்க முடியுமா பாப்பா.” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள்,

“நீ சொன்னா கேக்க மாட்ட மாமா. நானே இழுத்துட்டு போய் நாலு ஊசி போட்டு கூட்டிட்டு வரேன்.” என்றவள் அவன் கை பிடித்து இழுக்க, அசைக்க முடியவில்லை தேவநந்தனை.

இழுத்து  பார்த்தவள் சோர்ந்து போய் முறைக்க, சத்தமிட்டு சிரித்தான். “சிரிக்காத மாமா கோபம் வந்துரும்.” என்றவள் முகத்தை சுருக்கிக்கொள்ள இன்னும் சிரித்து வெறுப்பேற்றினான் அவளை.

கோபம் கொண்ட யாழினி அமைதியாக வெளி திண்ணையில் அமர்ந்து கொள்ள, “இதுக்கெல்லாம் யாராது கோவிச்சுப்பாங்களா பாப்பா. நீ வீட்டுக்கு கிளம்பு வேலை எல்லாம் முடிச்சுட்டு சாந்தரமா ஆஸ்பத்திரிக்கு போறேன்.” என்று சமாதானப்படுத்தினான் அவளை.

“அதெல்லாம் முடியாது நீ இப்போ வந்தே ஆகணும்.”

“வாழைத் தோப்ப வெட்ட ஆள் சொல்லி இருக்கேன் பாப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.”

“அதான் ஆள் சொல்லி இருக்கல மாமா. வந்தவங்க வேலைய முடிப்பாங்க நீ கிளம்பு ஹாஸ்பிடலுக்கு.”

“பக்கத்துல ஆள் இல்லன்னா வேலைய சரியா முடிக்க மாட்டாங்க.” அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு எடுத்துக்கூற,

“அத்தையோ இல்ல சின்ன மாமாவோ அதை பார்த்துப்பாங்க.” அவளும் அவனுக்கு புரிய வைத்தாள் செல்ல வேண்டிய அவசியத்தை.

அவள் பேசும் பேச்சுக்கு இவன் காரணம் சொன்னானே தவிர கிளம்பவில்லை. ஒரு கட்டத்தில் யாழினி அமைதியாக திண்ணையில் அமர்ந்து கொள்ள, “பாப்பா” என்று அழைத்தான்.

அந்த அழைப்பு பத்து முறைக்கு மேலாக சென்ற பின்னும் அவள் அமைதிக்காக்க,

“சரி வா ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று பெருமூச்சு விட்டான் தேவநந்தன்.

***

இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பும் நேரம் வீட்டிற்கு வந்தார் அன்னம். கிளம்புவதை பார்த்து, “எங்க சாமி” என்று கேட்டார்.

“ஹாஸ்பிடலுக்கு போறோம் அத்தை. மாமாக்கு இப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. ரெண்டு நாளா நீங்களும் மாமா பேச்சை கேட்டுக்கிட்டு அமைதியா இருந்திருக்கீங்க. யாருக்கு யார் இங்க அம்மா.” படபடவென்று பட்டாசாய் அவள் வெடிக்க,

“கொஞ்சம் மூச்சு வாங்கு யாழு.” என சிரித்தார் அன்னம்.

“இந்த சிரிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அம்மாவுக்கும் பையனுக்கும். பையனை அதட்டி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்னு இல்லாம காலையிலயே தங்கச்சி வீட்டுக்கு டேரா போட போயிட்டீங்க.” என்று அத்தையிடம் சிலுப்பி கொண்டவள்,

“நீ என்ன மாமா உங்க அம்மா வாய பார்த்துட்டு இருக்க கிளம்பு, போலாம்.” அதட்டினாள் தேவநந்தனை.

“ஆத்தாடி! என் பிள்ளைய என் முன்னாடியே எப்படி மிரட்டுறா பாரு.” என்று அன்னம் வாயில் கை வைத்து ஆச்சரியப்பட,

“அப்படியே வாய பிளந்துட்டு நில்லுங்க நாங்க போறோம்.” மாமனின் கைப்பிடித்து சென்று விட்டாள்.

“சாப்ட்டியா சாமி.” என்றதும் திரும்பி அத்தையை முறைத்தவள்,

“உங்க மகன் சாப்பிட்டு இருப்பாருன்னு நம்பியா இந்த கேள்விய கேக்குறீங்க. சோறு போட்டுக் கொண்டாங்க அத்தை.” அவள் வார்த்தையை கேட்டவர் முழித்துக் கொண்டே மகனை பார்க்க, அவனோ புன்னகை மாறாமல் நின்றிருந்தார்.

இட்லி தட்டோடு வந்தவர் மகனுக்கு சாப்பிட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, யாழினியோடு அமர்ந்தான் சாப்பிட.

“எத்தனை தடவை சொல்றது சாமி இந்த வேலையெல்லாம் நீ பண்ணாதன்னு.” மகன் செய்திருக்கும் வேலைகளை கவனித்தவர் பொறுமையாக அவனிடம் பேச,

“இதுல என்ன ம்மா குறைஞ்சு போயிட்டேன் நானு.” என்று சாப்பிட ஆரம்பித்தான்.

“ஆம்பள பிள்ளைங்க இந்த வேலையெல்லாம் செஞ்சா நல்லாவா சாமி இருக்கும்.” என்ற அன்னையை அதே புன்னகை மாறாமல் பார்த்தவன்,

“வேலை செய்ய தெம்பும், மனசும் இருந்தா போது ம்மா யாரு வேணா எந்த வேலைய வேணா செய்யலாம். வேலையில என்ன ஆம்பள பொம்பளன்னு. இப்பல்லாம் ஆம்பளைங்கள விட பொம்பள பிள்ளைங்க தான் அதிகமா வேலையில சாதிக்கிறாங்க. அதுவுமில்லாம எத்தனையோ ஆம்பளைங்க சமையல் கலைஞரா உருவாக்கிட்டிருக்காங்க. காலம் ரொம்ப மாறி போச்சு ம்மா.” என்றவன் ஒருவாய் இட்லியை பிய்த்து அன்னம் வாயில் திணித்தான்.

“எனக்கு பதிலா உனக்கு ஒரு பொண்ணு பிறந்திருந்தா இந்த வேலையெல்லாம் உன்ன செய்ய விட்டு சும்மா இருக்குமா. உனக்கு பொண்ணு பையன் எல்லாமே நான் தான் ம்மா.” என்றவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.

“பாப்பா ஆருவ காலேஜ் கூட்டிட்டு போகணுமே…” என அவன் இழுக்க,

“சின்ன மாமா கிட்ட பேசிட்டேன். நீங்க கிளம்புங்க.” என்று இழுத்து வந்தாள்.

வழியனுப்ப அன்னம் வாசல் வரை வர, “போயிட்டு வரோம் ம்மா.” என்றவன் தன் வாகனத்தை நகர்த்தி வந்தான்.

யாழினி கண்ணெல்லாம் அந்த வாகனத்தின் மீது இருந்தது. மாமன் மகளின் எண்ணத்தை உணர்ந்தவன், “பாப்பா வண்டி ஓட்டுறியா.” என்றிட, கண்கள் விரிய தலையசைத்தாள்.

“மாமா போலாம்மாமா….” என்றவள் குதூகலத்தோடு வண்டியை இயக்கினாள்.

“கொப்பளம் சரியாக தான் ஆஸ்பத்திரிக்கு போறோம் பாப்பா மொத்தமா படுக்க வைச்சுடாத.” என்ற கேலியில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு,

“மாம்மாமா.”  என சிணுங்கினாள்.

கண்ணாடி வழியாக  பார்த்தவன் சத்தமிட்டு சிரித்துக்கொண்டு, “சும்மா பாப்பா நீ ஓட்டு.”‌ என்று அவள் தோளை தட்ட, பறந்தது மருத்துவமனைக்கு வண்டி.

***

“இந்த சின்ன காயத்துக்கு ஆஸ்பத்திரிக்கு போறதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியுது பாப்பா.” என்றவனை அதே கண்ணாடி வழியாக முறைத்தவள்,

“பேசாம வா மாமா இல்லை எங்கயாது தள்ளி விட்டு தையல் போட்டு விட்டுருவேன்.” என்றாள்.

மருத்துவமனை பக்கம் தான் என்பதால் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் வந்துவிட்டனர். கொப்பளத்தில் சீழ் பிடித்து இருப்பதால் சின்னதாக அதைக் கீறி  தையல் போட வேண்டும் என மருத்துவர் கூறியதும்,

“தையலா! அதெல்லாம் வேணாம். ஊசி ஏதாவது போட்டு சரி பண்ணுங்க.” தையல் போட வேண்டியவனே அமைதியாக இருக்க, பயந்து நடுங்கினாள் யாழினி.

“தையல்’னா பெருசா எதுவும் இல்லமா சும்மா ரெண்டு அவ்ளோ தான். கொப்புளம் உள்ள ரொம்ப ஆழமா இருக்கு. டிரெஸ்ஸிங் பண்றது மட்டும் சரி வராது. அப்படியே குழியா இருக்கும்.” என்று உரைத்த பின்னரும் அவள் வேண்டாம் என்றே பிடிவாதம் பிடித்தாள்.

“என்னமா நீ அந்தப் பைய உடம்புக்கு ரெண்டு தையல் எல்லாம் எங்கத்தி மூலைக்கோ.  அதுவுமில்லாம அந்த பையனே அமைதியா நிக்கிறான் கூட நிக்க போற நீ என்னமோ குதிக்கிற.” மருத்துவர் பக்கத்தில் நின்றிருந்த செவிலியர் அவள் கோபத்தை கிளறுமாறு பேச,

“என் மாமன் உடம்ப பார்த்து கண்ணு வைக்கிறீங்களா. உங்களுக்கு என்ன தெரியும் தாங்குவாங்கன்னு. நான் குதிக்காம வேற யார் குதிப்பா.” அவரிடம் சண்டைக்கு பாய்ந்த யாழினியை அடக்க பெரும் பாடுபட்டான் தேவநந்தன்.

ஒரு வழியாக மாமன் மகளை அடக்கியவன், “இதுக்குத்தான் பாப்பா நான் வர மாட்டேன்னு சொன்னேன். இவ்ளோ தூரம் கூட்டி வந்துட்டு  ஆர்ப்பாட்டம் பண்ணா என்ன அர்த்தம்‌ . அவங்க பண்றதை பண்ணட்டும் அமைதியா இரு.” என்றதும் ஐம்புலன்களையும் சுருக்கி கொண்டு அமர்ந்து விட்டாள் வெளியில். ‌

நொடிக்கு ஒரு தடவை உள்ளே எட்டிப் பார்த்தவள் தவித்துக் கொண்டிருந்தாள் தேவநந்தனை பார்க்க. இருபது நிமிடங்களில் வெளியில் வந்த மருத்துவர்,

“அவ்ளோ தான் முடிஞ்சிருச்சு கூட்டிட்டு போங்க.” என்று முடிக்கும் முன்னே மாமன் அருகில் சென்று விட்டாள்.

தையல் போட்டு இருப்பதால் அந்த இடத்தை பஞ்சு வைத்து டேப் ஒட்டி இருக்க, “என்ன மாமா இவ்ளோ பெருசா போட்டு இருக்காங்க.” கண்களை விரித்துக்கொண்டு பயந்தாள்.

“இது உனக்கு பெருசா பாப்பா.” என்றதும், “ம்ம்ம்!” என்றாள் சோகமாக.

தேவநந்தனுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கிக் கொண்டவள் பாம்பு போல் ஊர்ந்து கொண்டு இருந்தாள் சாலையில்.  நடந்து சென்று இருந்தால் கூட இந்நேரம் வீடு போய் சேர்ந்திருப்பான் போல. யாழினி செயல்களை பொறுத்துக் கொண்டு வந்தவன் நடந்து கொண்டிருப்பவர் கூட தங்களை கடந்து சென்றதும்,

“பாப்பா இந்த மாதிரி வண்டி ஓட்டுனா பத்து வருஷம் ஆகும் ஊர் போய் சேர.” என்றான் நொந்து கொண்டு.

“தையல் போட்டு இருக்காங்க மாமா அசைஞ்சா வலிக்கும்.” என்று வண்டியை தள்ளிக் கொண்டு செல்வதில் கவனமானாள்.

“இது ஒரு தையல் இதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்.” என்று நொந்து கொண்டவன் ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மகனைப் பார்த்ததும் அன்னம் வருத்தப்பட, “நீங்களாது கொஞ்சம் சும்மா இருங்க ம்மா. பாப்பா தான் புரியாம பண்ணுதுன்னா…” என்று இழுத்தவன் அமைதியாகி விட்டான் அவள் முறைப்பதை உணர்ந்து.

“அத்தை இந்த மாத்திரை எல்லாம் மாமா சரியா போடுதான்னு பாருங்க. இல்லன்னா என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்குறேன்.” என்ற மருமகளிடம் எந்தெந்த மாத்திரை எப்பொழுது போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அன்னம்.

“மாமா மூனு நாளைக்கு எங்கயும் வேலைக்கு போகக்கூடாது. முக்கியமா முதுகுல தண்ணி படக்கூடாது. என் வார்த்தைய மீறி ஏதாச்சும் பண்ணிங்க அவ்ளோ தான்.” என்ற யாழினி அங்கிருந்து புறப்பட, அன்னம் மனதில் பேராசை எழுந்தது.

***

“யாழு  கண்ணன் வந்திருக்கான்
பார்க்க அப்பா உன்ன கூப்பிடுறாரு வா.” தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பிக் கொண்டிருந்தார் பரிமளம்.

தூக்க கலக்கத்தில் இருந்தவள் எழாமல் அடம் பிடிக்க, “சொன்னா கேளு யாழு. உங்க அப்பா கிட்ட திட்டு வாங்காத எழுந்திடு.” என்று கெஞ்சி கூத்தாடி மகளை எழுப்பி விட்டார்.

தூக்கத்தில் கை கால்களை உதைத்து கோபத்தை காட்டியவள் முகம் கழுவிக் கொண்டு வந்து தயாராகினாள். கண்ணனை பிடிக்காது என்றெல்லாம் இல்லை. சிறுவயதிலிருந்தே இவனைத்தான் திருமணம் செய்ய போகிறாய் என்று சொல்லி சொல்லியே தந்தை மூலம் வளர்க்கப்பட்டாள் யாழினி. பருவ வயது எட்டும் போது கூட கண்ணனிடம் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தாள்.

வயது முதிர்வு அடைந்ததும் இந்த குடும்ப வழக்கத்தில் இருந்து தப்பிக்க நினைத்தவள் கண்ணனை ஒதுக்கி வைத்தாள். கூடவே தேவநந்தனை மதிக்காத தந்தை கண்ணனை மதிப்பதை அவள் விரும்பவில்லை. அதனாலயே அவன் மீது ஒரு கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

இப்போது இருந்தே அவனிடம் ஒதுக்கத்தை காண்பித்தாள் தான் பின்னாளில் திருமணம் நடக்கும் பொழுது அவனும் சம்மதம் சொல்ல மாட்டான் என்ற நினைப்பில் அவள் ஒதுங்கி நின்று கொள்ள, சண்முகம் விடுவதாய் இல்லை.

வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தவள் அவனைப் பார்க்காமல் தலை குனிந்து கொண்டு நின்றிருக்க, “என்ன யாழு கழுத்துல சுளுக்கு பிடிச்சிருச்சா நிமிராம நிக்கிற.” என்ற கண்ணனின் வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது.

அதன் பின்னரும் அவள் தலை நிமிராமல் இருக்க, “மாப்பிள்ளைய பார்த்ததும் என் பொண்ணுக்கு வெட்கம் வந்துருச்சு.” என்றார்  சண்முகம் சிரிப்போடு.

அந்தப் பேச்சை பொய் ஆக்குவதற்காகவே நிமிர்ந்தவள் அப்படியே அசையாமல் நின்று விட்டாள் கண்ணனைப் பார்த்து. அவள் நினைவில் இருந்த கண்ணனுக்கும் எதிரில் இருக்கும் கண்ணனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அவன் தானா இவன் என்பதை யூகிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு.

ஊரை விட்டு படிக்க வந்தவள் உலகம் வேறு என்று மாறியிருக்க, அவளது எண்ணங்களும் மாறியது வருங்கால கணவன் மீது. தன்னை விட உயரமாக இருக்க வேண்டும், தாடி மீசை முகம் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும், உடுத்தும் உடை மனதைக் கவர வேண்டும், வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் வர வேண்டும், அனைத்திலும் ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும் என்று மனதில் ஒவ்வொரு விஷயமாக சேர்த்து வைத்திருந்தாள்.

கண்ணனை முழுதாக பார்க்கும் முன் அவன் இருக்கும் காட்சி அவள் மனதோடு சேர்த்து வைத்த எண்ணங்களில் புகுந்து விட, செய்வதறியாது திகைத்து நின்றாள் பெண்ணவள். அவன் வேண்டாம் என்று மூளை உரைத்துக் கொண்டே இருக்க, தான் எதிர்பார்த்த ஒருவன் நேரில் இருக்கிறான் என்று மனம் ரசித்தது.

“என்ன யாழு உனக்கு வெட்கம் எல்லாம் வருமா.” என்று மீண்டும் கண்ணனின் குரல் கேட்டதும் அவள் மனதில் அந்த குரல் சங்கீதமாக ஒலிக்க ஆரம்பித்தது. மனதின் உள் ஆயிரம் எரிமலைகள் வெடித்து சிதற, மௌனம் கட்டி போட்டது வாயை.

இமை சிமிட்டாமல் இருந்தாலும் கண்கள் ஊடுருவியது அவனை. அவன் தோற்றம் மீது அவளையும் அறியாமல் முதல் ஈர்ப்பு தோன்றியது. வந்ததும் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வந்தவள் நகர மனமில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் இன்னும் ரசிக்க சொல்லி மன்றாட, செவி மடுத்தாள்.

அவளுக்கென்று மனதில் தனக்கானவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தோரணையில்  கண்ணன் இருப்பதால்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
19
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *