பெண்ணவளின் பயம், ஆடவனுக்கு குதூகலமாக இருந்தது. ‘எத்தனை நாள் என்னை பயமுறுத்தி இருப்ப. இன்னைக்கு முழுக்க உன்னை எஸ்கலேட்டர்ல ஏத்தி ஏத்தி இறக்குறேன் இருடி.’ என சபதம் எடுத்துக் கொண்டவன், அதனை செயல்படுத்தவும் செய்தான்.
“இதுக்கு மேல என்னை எஸ்கலேட்டர்ல ஏத்துன உன்னை அப்படியே உருட்டி விட்டுடுவேன். வாடா லிஃப்ட்ல போகலாம்” என பத்தாவது முறையாக அழைத்து விட்டாள் மஹாபத்ரா.
“உனக்கு லிஃப்ட்ல போகணும்ன்னா நீ போ. அதுக்கு என்னை ஏன் கூப்புடுற?” என அசட்டையாகக் கூறியவனை முறைத்தவள், “நான் போகமாட்டேன்ற தைரியத்துல பேசுற… “எனப் பல்லைக்கடித்தாள்.
தஷ்வந்த் தான் நமுட்டு சிரிப்புடன், “அய்யயோ, கீழ இருக்குற கடைல தான் எனக்கு ஒன்னு பர்ச்சேஸ் பண்ணனும்ன்னு நினைச்சேன். மறந்துட்டு மேல வந்துட்டேன்.” எனப் போலியாய் அதிர்ந்தவன், :சரி வா. போயிட்டு வருவோம்” என அவளை இழுக்க, அவளோ வெறியாய் முறைத்தாள்.
இத்தோடு, பதினைந்து முறை அவளை கீழேயும் மேலேயுமாக அலைய விட்டவன், வாங்கியது என்னவோ சின்ன சைஸ் கர்சீப் மட்டுமே.
ஒரு கட்டத்தில், அவன் வீம்பிற்கு செய்கிறான் எனப் புரிந்து கொண்டவள், அதன் பிறகு மறுக்காமல் அவனுடன் வந்தாள்.
மஹாபத்ரா அமைதியான பின்பும் கூட அவன் அவளை விடவில்லை. எவ்வளவு அலைக்கழிக்க இயலுமோ அவ்வளவு செய்தான்.
சிறிது நேரத்தில் அவளே, “எனக்கு தலை சுத்துது தஷ்வா!” என சோர்வுடன் கூற, அதனை கவனித்தான் இல்லை.
அவளைப் பார்த்தால் தானே அவளது சோர்வு தெரியும். அவன் தான் அவளைக் கண்டால் மனது மாறிவிடுவோம் என்றெண்ணி, அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லையே.
ஷாப்பிங் முடிந்து ஆஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு, மூவரும் அபார்ட்மெண்டிற்கு செல்ல, வீட்டினுள் நுழைந்த மறுகணமே அவசரமாக குளியலறை நோக்கி சென்ற மஹாபத்ரா, வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.
முதலில் அவளைக் கண்டுகொள்ளாதவன், அவளது சத்தம் கேட்ட பிறகே திடுக்கிட்டு பதறினான்.
இருந்தும், உள்ளே செல்ல தயக்கம் கொண்டவன், சில நொடிகள் அப்படியே நிற்க, அவளது குமட்டல் சத்தம் நிற்காமல் போனதில், எதையும் யோசியாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“என்ன ஆச்சு பத்ரா?” என்றபடி, அவளது தலையைப் பிடித்தவனின் குரலில் அத்தனை பதற்றம்.
“ஒன்னும் இல்ல அமுலு…” என மூச்சு வாங்கியபடி கூறியவள், மீண்டும் வாந்தி எடுத்திட, அவனுக்கு தான் குற்ற உணர்ச்சியாகி விட்டது. அவள் மறுத்தும், தான் செய்த வினையால் தான் அவளுக்கு தலை சுற்றி இருக்கிறது எனப் புரிந்து கொண்டவன், செய்தவறியாமல் நின்றான்.
அவளோ, “நீ போ அமுலு. ஐ வில் பீ பேக்…” என்றபோதே மீண்டும் குடலைப் பிரட்ட, அவளை ஆசுவாசப்படுத்தி, வாந்தி நிற்கும் வரை அவளருகிலேயே நின்றான் அவள் வெளியே போக சொன்னதையும் காதில் வாங்காமல்.
சிறிது நேரத்தில் அவளே, “இப்ப பெட்டர் தஷ்வா” என்றபடி நடக்க எத்தனிக்க, வயிறு காலியானதில், கண்ணை இருட்டியது. அவள் தள்ளாடுவதை உணர்ந்து, மறுநொடி கையில் ஏந்திக் கொண்டான்.
அதில் தான் சுயநினைவு பெற்றவள், அவனை விழி விரித்து பார்க்க, அவனோ கருமமே கண்ணாக, அவளை மெல்ல படுக்கையில் சாய்ந்து அமர செய்து விட்டு, “இரு வரேன்.” என்று வெளியில் சென்றான்.
சில நிமிடங்களில், கையில் லெமன் ஜுஸ்ஸுடன் அவளருகில் வந்தவன், “இதை குடி” எனக் கொடுக்க,
எலுமிச்சை சாறுடன் சேர்த்து, அவனையும் பருகினாள் விழிகளால்.
அவன் தான், ஒரு நிலையில் இல்லை. முகமே வாடி இருந்தது.
மஹாபத்ரா குடித்து முடித்ததும், கிளாஸை வாங்கி டேபிள் மீது வைத்தவன், “கொஞ்ச நேரம் தூங்கு.” என்று போர்வையை போர்த்த போக, அவளோ மேலும் வியந்து, “இன்னைக்கு வீக் எண்ட் இல்லையே தஷ்வா?” எனக் கேட்டாள் மெலிதான குறும்புடன்.
அக்குறும்பை உணராதவன், “இப்ப ட்ரைவல் பண்ணாத, இன்னைக்கு இங்கயே தூங்கு” என்றான்.
“பட், நானா என்னை தேடுவாரே.” என உதட்டைப் பிதுக்கியதில், அவளை முறைத்தவன், “வீக் எண்ட் இங்க டேரா போடும் போது மட்டும் உன் நானா கோமாக்கு போய்டுவாரா? ஓவரா சீன் போடாம தூங்கு.” என்றான் கடுப்புடன்.
சிரிப்பை அடக்கியவள், “அப்ப இங்க வந்து பக்கத்துல உட்காரு.” என தனக்கு அருகில் கை காட்ட, அதற்கும் முறைத்தான்.
“சும்மா முறைக்காதடா. எனக்கு மயக்க மயக்கமா வருது தெரியுமா… அதான் ஒரு சப்போர்ட்டுக்கு” எனக் கூறி முடிக்கும் முன்பே, அதிலிருந்த விளையாட்டை உணராமல், அவளருகில் அமர்ந்து விட்டவன், “ஹாஸ்பிடல் போகலாமா பத்ரா. இன்னும் வாமிட் சென்சேஷன் இருக்கா” எனத் தவிப்புடன் கேட்டான்.
அத்தவிப்பை ரசித்த மஹாபத்ரா, “ம்ம்ஹும்” என தலையாட்டி விட்டு அவன் தோள் மீது சாய்ந்து கொள்ள,
“சாரி…” என்றான் முணுமுணுப்பாக.
அவளோ நிமிர்ந்து, ‘எதற்கு’ என்பது போல கேள்வியாக பார்க்க, “உனக்கு ஹெல்த் இஸ்ஸியூ ஆகும்ன்னு தெரியாது பத்ரா. சும்மா உன்னை டீஸ் பண்ணத்தான் அப்படி பண்ணுனேன். சாரி.” என்றவனின் குரலில் அத்தனை தடுமாற்றம்.
அதில் புன்னகைத்தவள், “போடா பைத்தியம்! எனக்கு லிஃப்ட்ல ரெண்டு மூணு தடவை போனா கூட இதே மாதிரி தான் ஆகும். நான் மேக்சிமம் ஸ்டெப்ஸ் தான் ப்ரிஃபர் பண்ணுவேன்.” என அவன் தலையை கலைத்து விட்டாள்.
தனக்காக தான் கூறுகிறாள் என்றுணர்ந்தாலும் ஆற்றாமை தாளாமல், “நான் தான் உன்னை லிப்ட்ல போக சொன்னேன்ல அப்பறமும் ஏன் என் கூடவே வந்த?” என சற்று எரிச்சலாகவே கேட்டான். குற்ற உணர்வின் அடுத்த படியாக அவன் மீதே கோபம் வந்திருந்தது.
“நீ வந்துருந்தா போயிருப்பேன்.” என அசட்டையாக கூறியதில், பல்லைக் கடித்தான். அவனைத் திட்டி, அடித்து இருந்தால் கூட இந்நேரம் இதனை கடந்து சென்றிருப்பான்.
ஆனால், அப்போதும் அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வந்தது போதாதென்று, வாந்தி எடுத்தப் பின்பும் கூட, ‘உன்னால தான்’ என்று ஒரு பார்வை கூட பார்க்காமல் இருந்ததில் அவனுக்கு நெஞ்செல்லாம் ஏதோ செய்தது.
அவன் அறிந்த மஹாபத்ரா இவளில்லையே.
மனதைப் பிசையும் உணர்வுடன், “உனக்கு வாமிட் வரும்ன்னு தெரிஞ்சும், நான் கூப்பிட்டப்போ எல்லாம் ஏன் வந்த. அப்பவே ஹார்ஷா சொல்லிருக்கலாம்ல.” எனக் கேட்டான்.
தஷ்வந்தின் குழி விழும் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவள், அவன் காதோரம் எக்கி, “ஏன்னா, கூப்பிட்டது நீயாச்சே…” என்றாள் ஹஸ்கி குரலில்.
கூடவே, ஒரு அழுத்த முத்தத்தையும் வைத்தவள், வாகாக அவன் மீது சாய்ந்து, சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
தஷ்வந்த் தான், உறைந்திருந்தான். சில நிமிடங்களுக்கு பேச்சே எழவில்லை. அவன் மீது அவள் கொண்ட இந்த அன்பை எண்ணி வியப்பதா அல்லது பைத்தியக்காரத்தனம் என்று உதறுவதா எனப் புரியாமல் திகைத்தவனுக்கு, அச்சம் மட்டுமே எழுந்தது.
நடுங்கும் கைகளுடன், அவளைத் தலையணையில் படுக்க வைத்தவனும், தரையில் படுத்து சிந்தனையுடனே உறங்கியும் விட்டான்.
மறுநாள் காலையில், நெஞ்சத்தை ஏதோ அழுத்துவது போல இருக்க, அப்போது தான் மஹாபத்ரா அன்றிரவு அங்கு இருப்பதை உணர்ந்து, ‘இவளுக்கு வேற வேலையே இல்ல. எப்ப வந்து என் பக்கத்துல படுக்குறான்னே தெரியல… இவளோட…’ என சலித்துக் கொண்டான்.
வார இறுதியில், அங்கு தங்குபவள், இரவு படுத்திருப்பது என்னவோ கட்டிலில் தான். ஆனால், அடுத்த நாள் காலையில், தஷ்வந்த்தின் அருகில் அவன் நெஞ்சில் தலை வைத்து தான் படுத்திருப்பாள்.
முதலில் அதட்டி பார்த்தான். பின் கெஞ்சி பார்த்தான். பின் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டான்.
இன்றும் அதே சலிப்புடன் கண்ணைப் பிரித்தவனுக்கு அதன் பிறகே, அது பிரம்மை என்று புரிந்தது. படக்கென எழுந்து கட்டிலில் பார்க்க அங்கு அவள் இல்லை. அறை முழுக்க தேடிய பிறகே அவள் கிளம்பி இருப்பது புரிய, அவசரமாக போனை எடுத்தவன், அவளுக்கு அழைக்க எத்தனித்து அப்படியே நிறுத்திக் கொண்டான்.
‘பத்ரகாளி. கிளம்பும் போது எழுப்பி சொல்லிட்டுப் போகணும்ன்னு தெரியல… எப்படியோ போறா!’ என லேசான கோபம் எழ, போனை மெத்தையில் போட்டவன், பின் அதனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான்.
அவனை மேலும் சோதிக்காமல், அவளே அழைக்க, யோசியாமல் எடுத்தவன், “அறிவில்ல. போறதுன்னா சொல்லிட்டு போக மாட்டியா…?” எனக் கடித்தான்.
ஒரு கண அமைதிக்கு பிறகு, “உன் பக்கத்துல இல்லைன்னு என்னை தேடுனியா அமுல் பேபி?” ஆழந்த குரலில் மஹாபத்ரா கேட்டு வைக்க, அவனுக்குள் திகைப்பு.
பேந்த பேந்த விழித்த, தஷ்வந்த், “அது… இ…” என ஆரம்பித்து, பின் சதி செய்த தொண்டையை செருமி, “இல்லையே!” என்றான்.
எதிர்முனையில், மஹாபத்ரா சிரிப்பை அடக்குவது புரிய, “உன்னை ஒன்னும் நான் தேடல. எங்க போய் எவனை அடிச்சு போட்டுட்டு இருக்கியோன்னு தான் நினைச்சேன்.” என தானாக வாயைக் கொடுத்தான்.
அவளோ, புருவம் உயர்த்தி அமைதி காக்க, அவனும் சில நிமிடம் பொறுத்து, பின் “சரிஇஇ. தேடி தொலைஞ்சேன் போதுமா.” என்றதில்,
“போதுமே!” என்றாள் குறும்புடன்.
அதில் அவனை மீறி புன்னகை தோன்ற, மெல்ல கனிந்தவன், “எப்போ கிளம்புன. இப்ப வாமிட் நின்றுச்சா?” எனக் கேட்டான் மென்மையாக.
அம்மென்மை அவளையும் கொய்ய, “ம்ம்” என்று நிறுத்தினாள்.
மேலும் சில நொடிகள் அமைதியில் கழிய, அதனை கலைக்கவென்றே, “தினமும் வாமிட் பண்ண, நான் ப்ரெக்னன்ட்டாவா இருக்கேன் அமுலு? உன்கிட்ட ஒரு கிஸ்ஸுக்கே வழி இல்ல. ப்ச்…” எனப் போலியாய் வருந்தினாள்.
தஷ்வந்த் சற்று திகைத்து, பின், “உங்கிட்ட போய் கேட்டேன் பாரு… போடி.” என்று திட்டிவிட்டு போனை வைத்திட, அங்கு அவள் தான் பக்கென புன்னகைத்தாள்.
இங்கு இவனும் பின்னந்தலையை கோதியபடி, ‘இவளை எல்லாம் என்ன பண்றதுன்னு தெரியல…’ என ஏதோ ஒரு அவஸ்தை தாக்க புலம்பியவனின், எண்ணத்தில் மீண்டும் அவளது கூற்று வலம் வர, தலையை ஆட்டி சிரித்துக் கொண்டான் நளினத்துடன்.
அதன் பிறகு, கவனமாக அவளை தவிர்க்க முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது அவனால். ஒரு வித இளக்கம் அவள் மீது இழையோடுவது புரிந்தவனுக்கு அது நல்லதில்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
ஆனால், அந்த உணர்வும் அடுத்து அவள் செய்த காரியத்தில் கோபத்தில் வந்து முடிந்தது.
அன்று சனிக்கிழமை, கல்லூரி முடிந்து நேராக அவன் அபார்ட்மெண்டிற்கு சென்ற மஹாபத்ரா, பையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு கேள்வியாக நோக்கினாள்.
அவனோ அவளுக்கு பதில் கூறாமல், பேக் செய்வதில் கவனமாக, “எங்க போற?” என்றாள்.
“பார்த்தா தெரியல. ஊருக்கு போறேன். சம்மர் ஹாலிடேஸ்ல. நைட்டு ட்ரெயின்.” எனப் பதில் கூறிட,
“யாரை கேட்டு நீ போற?” மஹாபத்ராவின் முகத்தில் மீண்டும் பழைய ரௌத்திரம்.
“யாரை கேக்கணும்?” என்ற தஷ்வந்தின் கேள்வி, பெண்ணவளின் விழிகள் காட்டிய சினத்தில், அத்தனை அழுத்தமாக வரவில்லை.
“என்னை கேக்கணும் தஷ்வா. நீ எங்கயும் போக போறது இல்ல.” என்று கண்டிப்புடன் கூறியவள், “டிக்கட்ட கேன்சல் பண்ணிடு.” என உத்தரவிட்டு குளியலறைக்குள் செல்ல, அவனுக்கோ சுறுசுறுவென கோபம் வந்தது.
‘இவள் யாரு என்னை என் வீட்டுக்கு போகாதன்னு சொல்றதுக்கு… பெருசா வந்துட்டா அதிகாரம் பண்ண…’ என அவளைத் திட்டியவாறே, உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அவள் வெளியில் வந்தும் அவனது முடிவில் மாற்றம் இல்லாது போக, அந்த பையை தூக்கி எறிந்தவள்,
“நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். சொன்னது காதுல விழுகல. நீ எங்கயும் போக போறது இல்ல. அப்படி என்னை மீறி நீ போகணும்ன்னு நினைச்ச…” என அனல் தெறிக்க மிரட்டியதில், அவனுள் ஏமாற்றமும் வலியும் பொங்கியது.
‘இவள் ஏன் தான் இப்படி இருக்கிறாள்’ என்ற ஆற்றாமை பொங்க, “நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ நான் போக தான் போறேன்.” என்று அவனும் முடிவாக கூறி விட்டு, குளியலறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாத்தினான்.
சிறிது நேரத்தில் கட்டிலில் கை கட்டி அமர்ந்திருந்தவளை முறைத்தபடி வெளியில் வந்தவன், “ஐயோ! அம்மா!” என்ற மாதவின் குரலில் பதறி அவனறை நோக்கி சென்றான்.
அங்கு குளியலறையில் வழுக்கி விழுந்து நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது மாதவிற்கு.
தஷ்வந்திற்கு முன்பே, மதன் மாதவை தூக்கி விட முயற்சி செய்து கொண்டிருக்க, தரையில் ஷாம்பூ கொட்டிக் கிடந்தது.
அதிலேயே நடந்ததை யூகித்துக் கொண்டவன், இறுகினான்.
அவசரமாக, மாதவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற செய்தவன், வெளியில் சோர்வுடன் அமர்ந்திருந்தான்.
அவனுக்குப் பின் தான் மதனும் மஹாபத்ராவும் வந்திருக்க, தஷ்வந்திற்கோ கடும் கோபம்.
மஹாபத்ராவை பார்வையால் எரித்தபடியே, மதனை சப்பென அறைந்திருந்தான்.
அதில் பத்ரா தான், ஆச்சர்யத்துடன் பார்க்க, அவனோ மதனிடம், “துரோகி! கூடவே இருந்துட்டு, அவனை கொலை பண்ண பாக்குறள்ல?” என சுளித்த முகத்துடன் கேட்க, மதன் பத்ராவை பார்த்தான்.
அவளோ, தஷ்வந்தின் கோப முகத்தை ரசித்திருக்க, மதனின் பார்வையில், தஷ்வந்த், “அவளை ஏன் பாக்குற? அவளுக்கு தான் யாரை பத்தியும் எந்த கவலையும் இல்ல. எவன் செத்தா அவளுக்கு என்ன. அவளுக்கு அவள் நினைக்கிறது நடக்கணும். அதுக்காக, என்னையும் கூட கொல்ல தயங்க மாட்டா. இந்த லிவ் இன் போர் அடிச்சா, அடுத்த ஒருத்தனோட இன்னொரு லிவ் இன். அதுக்காக எந்த வருத்தமும் அவளுக்கு இருக்காது. ஃபீலிங்ஸ்ஸும் இருக்காது. ஆனா, ஃபிரெண்டு மாதிரி எங்க கூடவே இருந்துட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, அவள் சொல்றதை எப்படிடா உன்னால செய்ய முடியுது.
மாதவ்க்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்… பாத்துக்குறேன்…” என வஞ்சகமில்லாமல் மனதிலிருந்த கோபத்தை கொட்டித் தீர்த்திட, மதனுக்கு அவன் அடியை விட, வார்த்தைகளே வலித்தது.
மஹாபத்ராவிடமோ அப்போதும் எந்த மாற்றமும் இல்லை. ரசனைப் பார்வை சற்று இறுகி இருந்தது அவ்வளவே!
அதற்குள் மருத்துவர் வந்து, “பயப்பட ஒன்னும் இல்ல. ஸ்டிட்ச்ஸ் போட்டு இருக்கோம். ஹீ வில் பீ ஃபைன் சூன்.” என்று விட்டு செல்ல, தஷ்வந்த் வேகமாக நண்பனைக் காண சென்றான்.
தலைவலியில் சோர்ந்து அமர்ந்திருந்த மாதவ், தஷ்வந்தைக் கண்டதும், மெலிதாய் புன்னகைக்க, அவனுக்கோ குற்ற உணர்ச்சி பொங்கியது.
கலங்கிய கண்களுடன், “சாரி பாஸ். என்னால தான் உனக்கு இவ்ளோ கஷ்டம். நம்ம இங்க இருக்க வேணாம். ஹாஸ்டல் போய்டலாம். இல்ல அந்த பத்ரகாளி என்னை ஃபோர்ஸ் பண்ணுனா, நான் மட்டும் இருக்கேன். நீ போய்டு…” என்று எங்கோ வெறித்துக் கொண்டு கூற, மாதவ் குழம்பினான்.
“எனக்கு தான பாஸ் தலைல அடிபட்டு இருக்கு. நீ ஏன் உளறுற?” எனக் கேட்டதில், “அவள் தான் என்னை ஊருக்கு போக விடாம பண்றதுக்கு, உன்னை வழுக்கி விழுக வச்சா, மதன யூஸ் பண்ணி…” என்றான் கோபமாக.
ஒரு கணம் விழித்த மாதவ், “ஹே தஷு… நீ நினைக்கிற மாதிரி இல்ல. நானா தான் வழுக்கி விழுந்தேன்.” என்றவுடன், பொய் சொல்றியா என்பது போல பார்த்தான்.
அதனை புரிந்து கொண்டவன், “நிஜமா தஷு. நான் இன்னைக்கு நைட்டு ஊருக்கு போறதுக்காக கிளம்பிட்டு இருந்தேன்ல. ட்ரெஸ் பேக் பண்ணும் போது, பேக் அந்துருச்சு. அதை வாங்க கீழ போகும் போது, மதன் தான் அவனே வாங்கிட்டு வரேன்னு சொன்னான்.
அப்பறம் குளிக்க போனப்ப, தெரியாம ஷாம்பூவை கொட்டிக்கிட்டேன். குளிச்சுட்டு க்ளீன் பண்ணலாம்ன்னு ரெடியாகிட்டு இருக்கும் போது, வீட்டுல இருந்து கால் வந்ததுல ஷாம்பூவை கொட்டுனதை சுத்தமா மறந்துட்டேன். திரும்பி உள்ள போகும் போது வழுக்கி விழுந்துட்டேன். அந்த டைம் தான் மதனும் பேக் வாங்கிட்டு வந்துருப்பான் போல. நான் விழுந்தது தெரிஞ்சதும் என்னை தூக்குனான். அதுக்குள்ள நீ என்னென்னமோ யோசிச்சுட்ட போ.” என்று சிரித்தான்.
தஷ்வந்திற்கு ஐயோ என்றிருந்தது. மதனை அடித்ததும் அல்லாமல், கண்டமேனிக்கு அல்லவா பேசிவிட்டோம்…! இப்போது யோசிக்கும் போது தான், அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் வதைத்தது.
அவனது பாவனையில், “என்னடா பண்ணி வச்ச?” என மாதவ் கேட்க, “எருமை, கண்ணு அவிஞ்சு போயிருக்கா உனக்கு. பார்த்து நடக்காம மண்ணை கவ்வி, என்னை குழப்பி விட்டுட்டு, இப்ப வந்து என்ன பண்ணுன, நொண்ண பண்ணுனன்னு கேள்வி கேட்குறான்.” என அவனையும் திட்டி விட்டு வெளியில் வந்தான்.
மதன் அங்கு இல்லை. மஹாபத்ரா மட்டுமே போனில் மூழ்கி இருந்தாள்.
தயக்கத்துடனும், சிறிதான பயத்துடனும் அவளருகில் வந்தவனை, நிமிர்ந்து பார்த்த மஹாபத்ரா, “இஸ் ஹீ ஆல்ரைட் அமுலு?” என இயல்பாகக் கேட்க, அவனோ நொந்து அமர்ந்தான்.
“டேய்… என்ன ஆச்சு? அவன் ஓகே தான? எண்ணைல போட்ட கடுகாட்டம் பொரிஞ்சுட்டு இருந்த, இப்ப ஏன் டல் ஆகிட்ட?” என்று அவனது தோள்பட்டையைப் பற்றிட, அதனை உதறி விட்டவன்,
“ஒன்னு என்னை அடி. இல்ல திட்டு. ஆர் அட்லீஸ்ட், நான் பேசுனதுக்கு என் மேல கோபப்பட்டு என்னை விட்டு போ! எதுவுமே செய்யாம ஏண்டி என்னை கொல்ற…” இம்முறை ஆயாசமாக வெளிவந்தது அவனது பாவனைகள்.
அவளோ அதனை கண்டுகொள்ளாமல், “என்னை ஏன் அடிக்கல?” என சம்பந்தமின்றி கேட்க, “என்ன?” எனக் கேட்டான் புரியாமல்.
“அவ்ளோ கோபத்துலயும் என்னை ஏன் அடிக்கல தஷ்வா…” விழி உயர்த்தி அவள் கேட்டதில், அவன் அமைதியானான்.
“உன்னால என்மேல முழுசா கோபப்பட கூட முடியல அமுல் பேபி. மத்தபடி நீ பேசுனது எல்லாம், உன் கோபத்துல வந்த வார்த்தைகள். உன் கோபம் அழகா தான் இருக்கு. ஆனா, உன்கிட்ட பிடிச்சதே உன்னோட இன்னசன்ட் தான். சோ, அப்படியே இரு அமுலு.” எனக் கண் சிமிட்டியவள்,
இறுதியில், “உன் அளவுக்கு வேற யாரையும் பிடிக்குமான்னு தெரியல. சோ, என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லிவ் இன் உன் கூட மட்டும் தான்.” என்றாள் அவனது விழிகளுக்குள் தன் விழிகளை புகுத்தியபடி.
அப்பார்வையில், சுயம் மறந்து அவளுக்குள் தொலைந்தவன், சட்டென நிகழ்வுணர்ந்து திரும்பிக் கொண்டான்.
பின், “இருந்தாலும் நான் தப்பா நினைச்சது, பேசுனது, தப்பு தான். சாரி…” என எங்கோ பார்த்துக் கொண்டு கூற,
தஷ்வந்தின் கன்னத்தை பற்றிக் கிள்ளியவள், “ரொம்ப ஃபீல் ஆகாத அமுலு. நான் சொன்னதை மீறி நீ ஊருக்கு கிளம்பி இருந்தா, கண்டிப்பா அவனை அட்டேக் பண்ணிருப்பேன். என்ன இப்ப அவனாவே வந்து ஹாஸ்பிடல்ல படுத்து, என் வேலையை மிச்சம் ஆக்கிட்டான்” என நமுட்டு சிரிப்புடன் கூறிட,
உதட்டைக் குவித்து அவளை முறைக்க முயன்று முடியாமல், இதழோரம் மென்னகை புரிந்தான் பத்ராவின் அமுல் பேபி.
காயம் ஆறும்!
மேகா.