1,883 views

உயிருக்கு சேதாரம் இல்லை என்பதை அறிந்தவர்கள் இருவரையும் காரை விட்டு வெளியேற்றினார்கள். காவலர்கள் போக்குவரத்து நெரிசலை ஒரு பக்கம் சரி செய்து கொண்டிருக்க, அகல்யாவிற்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது மறுபக்கம். இத்தனை போராட்டங்கள் அங்கு நடந்து கொண்டிருக்க, கண்ணில் கொஞ்சமும் வெறி குறையாமல் எதையோ  முறைத்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

அவனிடம் சென்ற காவலர்கள் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதை பற்றி விசாரிக்க, பதில் கொடுக்காமல் நொடிக்கு நொடி வேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்தான் கோப பார்வையில். சற்று தள்ளி இருந்த அகல்யாவின் விழியில் அவை விழ, அவளுக்கும் கோபம் வந்தது கணவன் மீது.

“அறிவு இருக்கா உனக்கு? சாகுறதா இருந்தா நீ மட்டும் போய் சாக வேண்டியது தான. என்னையும் எதுக்கு கொல்ல பார்க்குற. பைத்தியக்காரா! ஐந்தறிவு ஜீவன் கூட உன்ன மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் குணம் மாறாது.” என்று கத்தத்துவங்க, பக்கத்தில் இருந்த காவலர் அவளை அடக்கி விட்டு விசாரித்தார்.

“கார்ல பிரேக் பிடிக்கல சார்.” என்ற பொய்யைச் சொல்லியவள் அவர் கேட்ட அனைத்திற்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். பத்து நிமிடங்களுக்கு மேலாக விசாரித்தவர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்தார். வருவதாக தலையசைத்தவள் அவனை அழைக்க, இன்னும் பார்வை மாறவில்லை அவனிடம்.

“உன்ன தான கூப்டுட்டு இருக்கேன் காதுல விழல?” என்ற வார்த்தை உண்மையாகவே ஆடவன் செவியில் விழவில்லை. அவளின் பொறுமை கூடுவிட்டு கூடு மறைந்திருந்தது. வேகமாக அவனைத் திருப்ப, சுவற்றில் அடித்த பந்து போல் மனைவி பக்கம் திரும்பியவன் உடனே முறைத்துக் கொண்டு நின்ற பக்கம் திரும்பி விட்டான்.

அப்படி எதைத்தான் பார்க்கிறான் என்று அவன் விழி போகும் திசைக்கு அவள் விழி போக, அவர்களை விட்டு சிறிது தூரம் தள்ளி ஒரு பெண் நின்றிருந்தாள். அந்தப் பெண்ணும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையையும் வைத்து சந்தேகம் கொண்டவள்,

“யார் அவங்க?” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருக்க, எதிரில் நின்றிருந்த பெண் தரணியோடு நிற்கும் பெண் தன்னைத்தான் பார்த்து எதுவோ கேட்கிறாள் என்பதை புரிந்து  அவசரமாக இடத்தை காலி செய்ய முயன்றாள்.

அவள் நகர்வதைப் பார்த்தவன் ஆக்ரோஷத்தோடு அவளை நோக்கி ஓடினான். பின்னால் ஓடிய அகல்யா அவன் சட்டை காலரை பிடித்து, “சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ணாத. அவங்க யாருன்னு கேக்குறல பதில் சொல்லு.” என்று சட்டையை உலுக்கினாள்.

“போடி!” என அகல்யாவை தள்ளி விட்டவன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணை பிடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

விழாமல் சுதாரித்துக் கொண்டவள் அவனுக்கு ஈடு கொடுத்து மடக்கி பிடித்தாள். “விடு என்னை! எல்லாத்துக்கும் அவ தான் காரணம் இன்னைக்கு அவளை நான் கொல்லாம விட மாட்டேன்.” வெறி பிடித்தவன் போல் சத்தம் போட்டான்.

அவன் வார்த்தையில்  புரிந்து போனது இவ்வளவு நேரம் நின்றிருந்த பெண் சிவானி என்று. “அவளை கொன்னு என்ன ஆகப்போகுது? இப்போ அவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ ஊதாரியா குடிச்சிட்டு இருந்தா அவ எப்படி பொறுப்பாவா.” என்றதும் மனைவி மீது கோபம் கொண்டவன்,

“நான் குடிக்கிறதுக்கு காரணமே அவ தான்டி. அவளை மாதிரி ஒரு பொண்ணு கூட வாழ்ந்தா எவனா இருந்தாலும் இப்படித்தான் இருப்பான். அவளை கொன்னா தான் என் மனசு நிம்மதியாகும்.” அவளைப் போல் சத்தமிட்டு பதில் கொடுத்தவன் சிவானியைத் தேட, அவள் அங்கு இல்லை.

கைக்கு கிடைத்தவளை விட்டு விட்டோம் என்ற ஆதங்கம் முழுவதும் மனைவியிடம் திரும்பியது. நடு ரோட்டில் கோப வார்த்தைகளை வீசினான். அங்கிருக்கும் அனைவரும் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தின் முன்பு குறுகி நின்றவள்,

“உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழ முடியாம தான் அவ ஓடிப்போயிட்டா. நாய் மாதிரி பின்னாடியே போகாம உன் வேலைய பாரு. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா அவளை மாதிரி நானும் ஓட வேண்டியதா தான் இருக்கும்.” என்றதும் அகல்யாவின் கழுத்தை வேகமாக தன் உள்ளங்கையில் அடக்கினான்.

சுற்றி இருந்த அனைவரும் தரணீஸ்வரனை அடக்க, யாருக்கும் அடங்கி போகவில்லை. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, “யாரு என்னால அவ ஓடு போனாளா… அவ என்ன பண்ணான்னு உனக்கு தெரியுமாடி?” என்றவன் வேகமாக அகல்யாவை தள்ளிவிட்டு, “………………” குரல் வளையம் கிழிந்து தொங்கும் அளவிற்கு கத்தினான்.

அவன் தள்ளி விட்டதில் கீழே விழுந்தவள் சொன்ன வாசகத்தை கேட்டதும் அதிர்ந்தாள். காவலர்கள் வந்துவிட, இருவரையும் அழைத்துச் சென்றார்கள் அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு. மன கொதிப்பு அடங்காமல் தரணி முகம் சிவந்து நின்றிருக்க, அனைத்து வேலைகளையும் முடித்து வெளியில் அழைத்து வந்தாள்.

“விடு என்னை!” என்றவன் கைகளை உதற, அதையும் மீறி வலுக்கட்டாயமாக பிடித்தவள் ஆட்டோ ஒன்றை பிடித்து விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள். பெரிய சேதாரம் எதுவும் இல்லை என்றாலும் முன் பக்கம் சிறிது காயம் பட்டிருந்தது காருக்கு. அங்கிருந்தவர்களிடம் விசாரித்து மெக்கானிக் ஒருவரிடம் காரை ஒப்படைத்தாள்.

எது வேணாலும் தன்னை சுற்றி நடக்கட்டும் தன் செயலில் மாற்றம் இல்லை என்பது போல் கடற்கரை ஒட்டி இருந்த தார் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அனைத்து வேலைகளையும் முடித்தவள் அவன் அருகில் நெருங்க,

“அவளை மாதிரி நீயும் பண்ணுவியா? பண்ணி பாரு அப்போ தெரியும் இந்த தரணி யாருன்னு. ஒரு தடவ இளிச்சவாயனா விட்டுட்டேன் திரும்பவும் அதே மாதிரி எனக்கு நடந்துச்சு இந்த உலகத்துல யாரையும் உயிரோடு விட்டு வைக்க மாட்டேன்.” என்று இந்த முறையும் சத்தமாக கத்தி அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்கச் செய்தான்.

முதலில் அவனின் கோபத்தை குறைக்க வேண்டும் என்று நினைத்தவள் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டே கடற்கரை வரை வந்து விட்டாள். கோபம் அங்கிருக்கும் லைட் ஹவுஸ் போல் உயர்ந்து கொண்டே இருந்தது.

“இன்னொரு தடவை அவளுக்கு சப்போர்ட் பண்ண உன்னை என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது.” என்றவன் சட்டை காலரை பிடித்து வேகமாக தள்ளினாள்  கடல் மாதாவிடம். திடீரென்று நீரில் விழுந்தவன் சுதாரித்துக் கொண்டு  எழுவதற்குள் அலை ஒன்று அடித்து சென்றது. முழுவதும் நனைந்து விட்டான் அதில்.

அடுத்த அலை வருவதற்குள் எழ நினைத்தவனின் எண்ணத்தை முறியடித்து கடல் நீரில் முக்கி எடுத்தாள் மனைவி. “இவ்ளோ கோபம் வருமா உனக்கு. அவதான் நீ வேணாம்னு போய்ட்டாலடா. அப்புறம் இன்னும் இதுக்குடா தேவதாஸ் ரேஞ்சுக்கு சிவா சிவான்னு புலம்புற.”   நீரில் விழுந்தவன் மூச்சு திணற அவளை முறைத்தான்.

  • அவன் முறைப்பில் பேச்சை குறைத்தவள் கரையில் உட்கார, கோபத்தோடு அவளை நோக்கி வந்தான். மீண்டும் சாமி ஆடி விடுவான் என்று பயந்து,
    “தரணி பசிக்குது சாப்டுட்டே சண்ட போடலாமா.” என்றிட,  வந்தவன் முறைத்தான்.

“காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல. தலைல ரத்தம் வந்ததால மயக்கமா இருக்கு.” என நெற்றியில் கை வைக்க, அப்போது தான் அதை கவனிக்கவே செய்தான் தரணீஸ்வரன்.

கொதித்துக் கொண்டிருக்கும் உள்ளத்தை சற்று அடக்கியவன், “சாரி..சாரி!” என்று அந்த இடத்தில் கை வைக்க, அவன் இருக்கும் நிலைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அந்நியனாக மாறுவான் என்ற பயத்தில் பின் நகர்ந்தாள்.

பெண்ணின் பயத்தை புரிந்து கொண்டவன் முற்றிலும் கோபத்தை மறந்து சாதாரண நிலைக்கு திரும்பினான். அங்கிருக்கும் இருக்கையில் அமர்த்தியவன் ஒடிச்சென்று தண்ணீரோடு உணவையும் வாங்கி வந்தான். கடற்கரை ஒட்டி இருக்கும் தார் சாலை இருக்கையில் இருவரும் அமர்ந்தார்கள். நல்ல இருட்டு கடற்கரை குளிரோடு இருவரையும் ஆக்கிரமித்தது.

அவள் சாப்பிடாமல் கணவனையே பார்த்துக் கொண்டிருக்க, “எதுக்கு இப்படி பாவமா பார்க்குற? இந்த மாதிரி என்னை மத்தவங்க பார்க்குறது பிடிக்காம தான் என் வட்டத்தை நானே சுருக்கிக்கிட்டேன். ஓவரா சீன் போடாம தின்னு.” என்றவன் அவளை விட்டு நகர்ந்து ஓரிடத்தில் நின்றுக் கொண்டான்.

சாப்பாட்டை இருக்கையில் வைத்தவள் அவன் பக்கத்தில் நெருங்கி நிற்க, “எதுனால அப்படி பண்ணான்னு காரணம் தெரியணுமா?” அவள் முகம் பார்க்காமல் எதற்காக தன்னிடம் வந்தாள் என்பதை தெரிவித்தான்.

“இல்ல” என்றதும் மனைவியை அவன் திரும்பிப் பார்க்க,

“நீ இவ்ளோ பேக்கான்னு கேட்க வந்தேன்.” என்றதும் அவன் அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று மணலை நோட்டமிட்டான்.

புரிந்து கொண்டவள் புன்னகையோடு, “சரி சொல்லுங்க என்ன நடந்துச்சு?” என்றிட, மனதில் இருந்த மொத்தத்தையும் கொட்டினான். உப்பு நீரோடு அவன் கண்ணீரும் காற்றில் கரைந்தது.

சொல்லி முடித்தவன் இருட்டில் கேட்கும் கடல் ஓசையை மனதுக்கு இதமான மருந்தாக மாற்றிக் கொண்டிருக்க, அகல்யா இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நேரம் தேவைப்பட்டது. கையில் இருக்கும் கைபேசி ஒலியில் இருவரும் நிகழ்விற்கு வந்தார்கள்.

அப்பொழுது தான் என்ன காரணத்திற்காக கிளம்பினோம் என்பது உணர, மூன்று சக்கர வாகனத்தை விலை பேசி வீட்டை அடைந்தார்கள்.

அத்தைக்கு போன் செய்தவள் அவருக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க, தேவையானதை சொன்னார். மாமனார் மாமியாருக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டவள் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்ள அறைக்கு நுழைந்தாள்.

குளியலறை நுழைந்தவள் திடுக்கிட்டுப் போனாள் அங்கிருக்கும் தரணீஸ்வரனை பார்த்து. ஷவரை திறந்து விட்டு கால் மடக்கி அமர்ந்திருந்தான். வீட்டிற்கு வந்ததிலிருந்து இங்கு தான் இருக்கிறான் போல தொப்பலாக நனைந்திருந்தான்.

“என்னங்க இது!” என்றவள் அவனை எழ வைக்க முயற்சிக்க, உடல் நடுக்கத்தை வைத்து புரிந்து கொண்டாள்  நாள் முழுவதும் மதுவை தொடாததால் அவன் உள்ளம் படுத்துகிறது உடலை என்று.

கட்டுப்படுத்த வழி தெரியாதவன் நீரை நாடினான். உள்ளே செல்லும் மதுவிற்கு பதில் வெளியில் கொட்டும் நீர் மனதை கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தோடு அவன் அமர்ந்திருக்க, உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்தது. நடுங்கிய உடலோடு கால் மடக்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது அகல்யாவிற்கு.

ஷவரின் குழாயை நிறுத்தியவள், “தரணி நீங்க உங்க அப்பாவ பார்த்தா சரியாகிடுவீங்க. சீக்கிரம் கிளம்புங்க ஹாஸ்பிடல் போகலாம்.” என்று அழைத்தாள்.

ஒத்துழைக்கவோ… தடுக்கவோ தைரியம் இல்லாதவன் அவள் சொன்ன அனைத்தையும் செய்தான். கார் இல்லாததால் ஆட்டோ ஒன்றை விலை பேசினாள். இயக்கும் வேலை இல்லாததால் அவளோடு அமர்ந்து வந்த தரணீஸ்வரன் நிலைமை மோசமானது.

தலைவலி அதிகமாகி உள்ளத்தை வதைத்தது. ஆட்டோவில் இருந்து குதித்து விடுலாமா என்றெல்லாம் எண்ணம் தோன்றியது. கை இரண்டையும் கட்டிக்கொண்டு சாய்ந்தவன் ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் தோள் மீது சாய்ந்துக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் மடியில் படுக்க வைத்துக் கொள்ள, “முடியல அகல் என்னை கொன்னுடு.” என்று மடியை நனைத்தான்.

***

மருத்துவமனைக்கு வருவதற்குள் தயாளன் புது அறைக்கு மாற்றப்பட்டிருந்தார். வலது காலில் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. அவை சரியாகி மீண்டும் நடக்க ஒரு வருடம் ஆகலாம் என்று இருக்கிறார்கள். கணவன் உயிரோடு இருப்பதே நிம்மதி என்ற நிலையில் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார் ஆதிலட்சுமி. முடிந்தவரை வலியை மறைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னார் தயாளன்.

உடல் நடுக்கத்தோடு உள்ளே வந்தவன் தந்தையை பார்த்து அழ துவங்கி விட்டான். ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டிட, ஒவ்வொரு முறையும் அதை நிராகரித்து மகனை ஆறுதல் படுத்தினார். எவ்வளவு கலவரங்கள் மகன் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டேன் என்பது போல் அமர்ந்திருந்தார் ஆதிலட்சுமி. மாமனாரை நலம் விசாரித்தவள் மாமியாருக்கு சாப்பாடு கொடுத்தாள்.

அவர் இருக்கும் நிலைக்கு உணவு தேவைப்படாமல் போக, மறுத்தார். முடியாமல் படுத்திருந்தவர் கட்டாயப்படுத்தி மனைவியை சாப்பிட வைக்க, மனம் உடைந்து வெளியில் வந்தான் தரணீஸ்வரன். சிறிது நேரம் கழித்து வெளியில் சென்றவள்,

“சாப்பிடுங்க” எனத் தட்டை அவன் புறம் நீட்டினாள். தலை குனிந்து இருந்தவன் நிமிர்ந்து பார்க்க, “உங்க மேல பாவப்பட்டோ இல்ல கூட சேர்ந்து வாழலாம்னு எண்ணத்துலயோ இதெல்லாம் பண்ணல. என் முன்னாடி இப்படி இருக்க உங்க கிட்ட கோபத்தை காட்ட மனசு வரல.

காலையில இருந்து சாப்பிடாம இருக்கீங்க. ஏற்கனவே உங்க மனநிலை சரி இல்ல. இதுல பசியும் சேர்ந்தா நிக்க கூட தெம்பு இல்லாம போய்டும். உங்க நிலைமைக்கு சாப்பிடுறது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் ட்ரை பண்ணுங்க.” என்றவள் வார்த்தையில் தட்டை வாங்கியவன் சாப்பிட ஆரம்பித்தான்.

முதல் வாய் எடுத்து வாய் அருகே கொண்டு செல்ல, அவன் கை கொடுத்த நடுக்கத்தில் உணவு தட்டில் விழுந்தது. மீண்டும் எடுத்து உண்ண முயற்சிக்க, உதடு வரை வந்த உணவு உள்ளே செல்ல முடியாமல் மீண்டும் தட்டில் விழுந்தது. மனதை ஒருநிலைப்படுத்தியவன் பலமுறை முயன்று விட்டான் சாப்பிட. உடலும் மனமும் இது வேண்டாம் எப்பொழுதும் கொடுக்கும் உணவை கொடு என்று வற்புறுத்தியது. கண்ணில் இருந்து உவர் நீர் வெளியேறி சாப்பாட்டில் விழ, உணவு அவன் வாய அருகே நின்றது.

விழி உயர்த்தி மனைவியை பார்த்தவன் தலையசைத்து மறுக்க, “வயிறு நிறைஞ்சா மனசு தொந்தரவு பண்ணாம இருக்கும். மாறனும்னு முடிவு பண்ணிட்டீங்க அப்ப அதுக்கான வழியையும் கடைப்பிடிக்கணும். ஒரு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கும் அதுக்கு அப்புறம் எல்லாம் பழகிடும்.” என்று மறுக்கும் அவனையும் மீறி உதட்டில் சாதத்தை திணித்தாள்.

வாய் திறந்து வாங்கிக் கொண்டவன், “தேங்க்ஸ்!” என்றான். பாதி உணவை கூட முடித்திருக்க மாட்டான் உணவுக் குழாய் அதை ஏற்க மறுத்தது. முதல் நாளே தொந்தரவு செய்ய விரும்பாதவள் குடிக்க தண்ணீர் கொடுத்தாள்‌‌.

வாயில் வைத்ததும் குமட்டிக் கொண்டு மனைவியை பார்க்க, “துளசி, கருஞ்சீரகம் ரெண்டையும் போட்டு இருக்கேன். இனிமே தினமும் இதை குடிங்க கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண முடியும்.” என்றவள் பேச்சில் அவன் கையில் இருந்ததை மனைவியிடமே கொடுக்க,  முறைத்துக் கொண்டு நின்றாள்.

“சத்தியமா குடிக்க முடியல.” என்று முகத்தை பாவமாக வைக்க, “கண்ட கருமத்தை எல்லாம் குடிக்கும் போது இனிச்சுதா நாக்கு. இன்னைக்கு ஒரு நாள் விடுறேன் நாளைல‌ இருந்து இதைத்தான் நீங்க குடிக்கணும்.” என்ற நிபந்தனையோடு நகர்ந்தாள்.

****

இருபது நாட்கள் ஆகிவிட்டது தயாளன் மருத்துவமனையில் அனுமதித்து. இன்னும் இரு மாத காலம் மருத்துவமனையில் தான் இருந்தாக வேண்டும் அவர். இந்த இருபது நாட்களும் தரணீஸ்வரன் மருத்துவமனையில் தான் இருந்தான். அடிப்பட்டு படுத்த படிக்கையாக இருக்கும் தயாளன் கூட இந்த அளவிற்கு நொந்து இருக்க மாட்டார்.

தன் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைக்க பெரும் யுத்தமே நடத்திவிட்டான். ஆதிலட்சுமி மகனை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அத்தோடு அவனிடம் இருந்த அனைத்து பண பற்று, வரவு அட்டைகளையும் வாங்கி விட்டார். மருத்துவ செலவிற்கு அவரே பணத்தை கொடுத்து விட, குடும்ப செலவிற்கு மருமகளிடம் சிறு தொகையை கொடுப்பார்.

பகல் பொழுது வந்ததும் மருத்துவமனைக்கு வந்து விடுபவன் இரவில் தாய் தந்தையின் கண்ணுக்கு சிக்காமல் வீட்டிற்கு ஓடி விடுவான். ஏன் அவ்வாறு செய்கிறான் என்பதை அகல்யா மட்டுமே அறிவாள். இன்றும் இரண்டு மணி ஆனதும் ஓடிவிட்டான் வீட்டிற்கு. அவன் ஓடியதை உணர்ந்து சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்பினாள் அகல்யா. அம்மாவாசை இரவு போல் இருந்தது வீடு. கலைந்திருக்கும் அவன் காலணிகளை பார்த்தவாறு உள்ளே சென்றவள் அறைக்குள் நுழைந்தாள்.

அறை விளக்கை ஒளிரவிட்டவள் அவன் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தாள். கட்டில் ஓரத்தில் அமர்ந்தவள், “தரணி!” என ஓசை கொடுக்க, “முடியல எனக்கு குடிக்கணும். எதாச்சும் பண்ணு ப்ளீஸ்!” வழக்கம் போல் அழுது கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

கட்டிலுக்கு அடியில் குனிந்தவள் அவனைப் பார்க்க, கை கால்கள் குறுகி ஆடை இல்லாமல் வயிற்றில் இருக்கும் சிசு போல் கட்டிலுக்கு அடியில் படுத்து கொண்டிருந்தான். இருபது நாட்களாக பார்த்துக் கொண்டிருப்பதால் பெரிய வருத்தம் இல்லை அவளிடம்.

கைநீட்டி அவனை வெளியில் இழுக்க, நகராமல் அவள் கையை தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டு புலம்பினான். சிறு இடைவெளி கொடுத்தவள், “குடிக்கலாம் வெளிய வா தரணி.” என்றிட, வேகமாக எழ நினைத்து கட்டிலில் முட்டிக்கொண்டு தரையில் படுத்தான்.

பதறியவள் அவன் தலையை நன்கு தேய்த்து விட்டபடி வெளியில் இழுக்க, ஆர்வத்தோடு அவள் முகம் பார்த்தான். வேதனையாக இருந்தது அவனைப் பார்க்க. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ இவன் குடிப்பதை மறக்க என்று எண்ணியவள் சுவற்றில் சாய்ந்துக் கொண்டு தன் மீது சாய்த்துக் கொண்டாள்.

குடிக்கக்கூடாது என்று முடிவெடுத்தவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் அடுத்த நாளே குடித்து விட்டான். லேசாக விஷயம் தெரிந்த ஆதிலட்சுமி நானும் கணவனும் வரும்பொழுது வீட்டில் இருக்கக் கூடாது என்றிட, கடைசியாக அவர் தலையில் சத்தியம் செய்து போராடிக் கொண்டிருக்கிறான்.

பகல் பொழுதில் மருத்துவமனையில் நிமிடங்கள் ஓடிவிட, இரவில் மரண வேதனையை அனுபவிக்க ஆரம்பித்தான். எப்படி எல்லாம் பழக்கத்தை மறக்க வேண்டும் என்று ஆராய்ந்தவன் தோல்வியை சந்தித்தான் அனைத்து நடவடிக்கையிலும். இப்படியே விட்டால் அன்னை மன்னிக்க மாட்டார் என்று உணர்ந்து தன்னைத்தானே வருத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

இருட்டில் இருப்பது, ஆடை இல்லாமல் ஏசி அறையில் படுத்து இருப்பது, நீரில் நனைவது, கை கால்களை இறுக்க கட்டிப்போட்டு சிவக்க விடுவது, சுவற்றில் முட்டிக் கொள்வது என்ற அனைத்தையும் நாள் தவறாமல் செய்து கொண்டிருக்கிறான். முதலில் கோபம் கொண்டவள் பின் பயந்து அவனை தடுக்க ஆரம்பித்தாள்.

இயலாமையை கோபத்தோடு காட்டினான் அவளிடம். இதற்குமேல் தடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் விலக, “முடியல அகல் என்னை கொன்னுடு!” என்று அவளிடம் சரண் அடைந்து விட, மனதளவில் பெருமளவு சிதைந்து இருக்கிறான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள்.

தன் கோபம், பிடித்தமின்மை அனைத்தையும் ஓரம் ஒதுக்கி வைத்தவள் கண் முன் சித்திரவதை அனுபவிக்கும் அவனை தேற்ற ஆரம்பித்தாள். தன்னோடு சேர்த்துக் கொண்டு குழந்தையை சமாதானப்படுத்துவது போல் இரவெல்லாம் அவனோடு நேரம் செலவழித்தாள். இந்த இருபது நாளில் உடல் எடை முற்றிலும் குறைந்து போனது.

மணி ஆவதை உணர்ந்தவள் சாப்பாடு எடுத்து வர நகர, “போகாத” என இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

“இங்க பாருங்க” என்றவள் முகம் உயர்த்தி, “இந்த இருபது நாள் உங்கள உங்களால கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னா இனிமே எது வேணாலும் தாங்கிக்க முடியும். முன்ன விட இப்ப நீங்க இன்னும் தைரியமா இருக்கீங்க. ஒரு பத்து நிமிஷம் நான் விலகி போறதால தரணி தோத்துட மாட்டான்.

எத்தனை நாளைக்கு இப்படி பயந்து பயந்து வாழ்றதா உத்தேசம்? தப்பு பண்ண அவளே நல்லா இருக்கும்போது உங்களுக்கு என்ன. என்னோட கிளம்புங்க வெளிய எங்கயாது போயிட்டு வரலாம்.” என்று சமாதானம் செய்ய, இரவில் எங்கும் செல்ல விரும்பவில்லை அவன் மனம்.

வரமாட்டேன் என்பவனை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாள் கடற்கரைக்கு. கழுத்து வரை முட்டிக் கொண்டிருந்த மூச்சிற்கு விடுதலை கொடுத்தது போல் உணர்ந்தான். தண்ணீர் காலை நனைக்கும் அளவிற்கு கடல் அன்னையோடு நெருங்கி அமர்ந்தவன் அவள் மடிமீது படுத்துக்கொண்டான். இப்பொழுதெல்லாம் இதுவும் பழகி போனது இருவருக்கும்.

தலைக்கோதிக் கொண்டிருந்தவள் அவனை மாற்றுவதற்கான அனைத்து வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். தினமும் கேட்கும் வார்த்தை என்றாலும் அவன் மனம் ஆழமாக அவற்றை உள்வாங்கிக் கொண்டது.

“நாளைல இருந்து நீங்க ஹாஸ்பிடல் வர வேண்டாம்.” என்றவளை அவன் பார்க்க, “கம்பெனி போங்க. மாமா இல்லாம இந்த இருபது நாள் நிச்சயம் அங்க எதுவும் சரியா நடந்திருக்காது. அவர் முழுசா சரியாக இன்னும் ஒரு வருஷம் ஆகும்னு சொல்லி இருக்காங்க. அதுவரைக்கும் அப்படியே விட்டா கம்பெனி உரு தெரியாம அழிஞ்சு போய்டும்.” என்றாள்.

“புரியுது அகல். ஆனா, என்னால முன்ன மாதிரி எதுவும் பண்ண முடியும்னு தோணல.”

“செஞ்சி பார்க்காம எப்படி முடிவு எடுக்குறீங்க? உங்களால எல்லாம் முடியும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க இவ்ளோ வளர்ந்ததுக்கு அப்புறமும் அம்மா அப்பா காசுல சாப்பிடுறது அசிங்கம் இல்லையா. ஒரு தண்ணீர் பாட்டில் வாங்க கூட வழியில்லாம அம்மா முன்னாடி நிக்கிறீங்க.

அப்புறம் எப்படி அவங்க உங்கள நம்புவாங்க. உங்க அம்மா நம்பனும்னா நீங்க கம்பெனிக்கு போகணும். உங்களோட சேர்ந்து நானும் வரேன். உங்களால எவ்ளோ நேரம் அங்கு இருக்க முடியுதோ இருங்க. மீதி நேரம் நான் பார்த்துக்கிறேன்.” என்றவளுக்கு சம்மதம் சொல்லவில்லை என்றாலும் அவள் வார்த்தையை கேட்க முடிவெடுத்தான்.

இரவு நேர கடல் காற்று இருவரையும் அங்கிருந்து நகர்த்தியது. வீட்டிற்கு வந்ததும் அவன் தனக்குள் குறுகிக் கொள்ள, சாப்பாடு ஊட்ட துவங்கினாள். ஒரு இட்லிய கூட முழுதாக முடிக்காதவன் போதும் என்று படுத்து விட, காலை சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவளும் அவனோடு படுத்து உறங்கினாள்.

பாதி இரவில் தரணீஸ்வரன் எழுந்து விட, சுவற்றில் முட்டிக் கொள்ளும் ஓசையை வைத்து அவளும் எழுந்து விட்டாள். எவ்வளவு தடுத்தும் முட்டுவதை நிறுத்தவில்லை. அவன் அடிக்கும் பக்கத்தில் கைகளை வைக்க, மனைவியின் கையில் ஓங்கி முட்டினான். வலி பொறுக்க முடியாமல் அவள் அலற, குற்ற உணர்வோடு மன்னிப்பு கேட்டான்.

“அழாம வந்து படுங்க” என அதட்டி படுக்க வைத்தவள் அவன் பக்கத்தில் படுக்க, “முடியல அகல் என்னை கொன்னுடு.” என்றவனை பேச விடாமல் தன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். எப்பொழுது தூங்கினானோ தெரியவில்லை. விடியல் அறிந்து அவள் எழும் பொழுது தூங்கிக் கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
53
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *