310 views

அத்தியாயம் 11

விழித்துப் பல மணித்துளிகள் ஆன போதும் ஏனோ இளந்தளிருக்கு படுக்கையில் இருந்து எழ மனம் வராமல் இருந்தது.

அன்று காலையே அவளுக்கு மனம் முழுவதும் , இனம்புரியாத தவிப்பு ஏற்பட , இன்று அலுவலகம் போய்த்தான் ஆக வேண்டுமா ? என்பதைப் பற்றி முதல் தடவையாக யோசித்திருந்தாள்.

ஏனெனில் , இதற்கு முன்பெல்லாம் தினமும் வேலைக்குப் போவதென்றால் அவளுக்குச் சலிப்புத் தட்டியதில்லை. 

இதுவே முதல்முறையாக இருக்க , 

இப்படி தோன்றுவது அவளைப் பொறுத்தவரை சரியில்லை என்பது தான் ! 

தனக்குப் பிடித்தமான ஒன்றில் , 

மனம் ஒன்றாமல் போவதற்குக் காரணமென்ன ? என்பதைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தாள்.

அப்போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த தங்கை சுபா கண் விழித்த அடுத்த நொடியிலேயே ,

” அக்கா  ! நான் இன்னைக்குக் காலேஜ் போகல ! அம்மாகிட்ட நான் காலேஜூக்கு லீவ் போட்றதுக்குப் பர்மிஷன் கேக்றியா ப்ளீஸ் ? ” 

அவளும் அதையே வெளிப்படையாக ராகம் பாடிவிட ,

‘ என்ன நம்மளை மாதிரியே இவளும் இப்படி சொல்றா ! ‘ 

சுபாஷினியைப் பார்த்த இளந்தளிரின் முகத்தில் சந்தேகத்தின் சாயல்கள்.

” ப்ளீஸ்  க்கா ! ” அவளது தாடையைச் செல்லமாய்ப் பற்றி , உதவி கேட்டாள் .

” ஏன் லீவ் போட்றேன்னு சொல்ற ? “

“என்னமோ தெரிலக்கா. காலைல எழுந்தா மைண்ட் ஃப்ரஷ்ஷா இருக்கனும்.இப்போ என்னடான்னா இன்னைக்குக் கொஞ்சம் மந்தமா இருக்கு.யூஷ்வலா கிளம்பற நேரத்தை விட எக்ஸ்ட்ரா டைம் எடுத்து , கிளம்பனுமோன்னு ஃபீல் வருது. அதான் நீ அம்மாகிட்ட எனக்காகப் பேசு க்கா ” 

இளந்தளிருக்கோ தன் அகத்தில் இருந்த அனைத்தும் தங்கையின் வாயிலிருந்து அட்சர சுத்தமாய் வந்தது கண்டு மலைப்பாய் இருந்தது.

அவளது கெஞ்சல் பார்வையைப் பார்த்து ,

” எனக்குமே அப்படித்தான் தோனுது. வா அம்மாகிட்ட கேட்டுப் பார்ப்போம் ” 

அறையிலிருந்து வெளிப்பட்டு ஹாலில் அமர்ந்து அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த சிவசங்கரியின் முன்னால் நின்றனர் பெண்கள் இருவரும்.

அவர்களது நிழலைக் கண்டு தலையுயர்த்திப் பார்த்தவர் ,

” ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க ? எழுந்ததும் போய் ப்ரஷ் பண்ணிட்டு ,

மாடிக்குத் தானே போவீங்க ? இப்போ என்ன ஆச்சு ? “

அவர்களை விசாரிக்கத் தொடங்கி விட்டார். 

” அம்மா ! நானும் , இவளும் லீவ் போடலாம்ன்னு இருக்கோம்மா “

தயக்கமாகக் கூறினாள் தளிர்.

” ஏன் இளா ? உனக்கு ஆஃபிஸ் போறது அவ்ளோ பிடிக்கும்னு சொல்வியே ! நீயா லீவ் போட்றேன்னு சொல்ற ? ” மூத்தவளைக் கேட்டு விட்டு , 

இளையவளிடம் திரும்பி 

” உனக்கு செமஸ்டர் வரப் போகுதே. இப்போ போய் லீவ் போட்றேன்னு சொல்ற ! ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தாட் எப்படி வந்துச்சு ? ” 

சுபாஷினி கூட விடுப்பு எடுக்க நினைத்து அவ்வப்போது சாக்குச் சொல்லி இருக்கிறாள். ஆனால் , இன்று இளந்தளிரும் இவ்வாறு வந்து நிற்பது தான் இவருக்கு ஆச்சர்யம் ! 

” ஏதோ ஒரு அழுத்தம் மனசு

 ஃபுல்லா நிறைஞ்சிருக்கு ம்மா. அது என்னன்னு சொல்லத் தெரியல ம்மா. இதோட நான் ஆஃபிஸ் போக விரும்பல. நீங்க சரின்னு சொன்னா தான் லீவ் லெட்டர் டைப் பண்ணி , மெயில் பண்ணுவேன். வேணாம்னாலும் நோ ப்ராப்ளம் ம்மா கிளம்பிடுறேன் ” 

என்று அவரிடம் தனக்குத் தோன்றியதை அப்படியே விவரித்தாள்.

அடுத்து சுபாஷினி ,

” எனக்கு அப்படில்லாம் இல்ல ம்மா. பட் இவ்ளோ நாளா படிச்சுட்டு இருந்ததால ஒரு ப்ரேக் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்குத் தான் இந்த லீவ். அக்கா சொன்ன மாதிரி உங்களுக்கு ஓகே இல்லன்னா தாராளமாக காலேஜூக்குக் கிளம்பறேன் ” என்று அக்காவைப் பின்பற்றி அதே பதிலைக் கூறினாள்.

இரு மகள்களும் ஒரு சேர இம்மாதிரி கூறிட  , 

” லீவ் போட்டுக்கோங்க. இளா ! நீ போய் லீவ் லெட்டரை மெயில் பண்ணிடு. சுபா நீ உங்க ஹெச்.ஓ.டி – க்குக் கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணு. வேலை முடிஞ்சதும் ஃப்ரஷ் ஆகுங்க. டீ போட்டு எடுத்துக்கிட்டு  மாடிக்குப் போகலாம் ” 

உடனே ஒப்புதல் அளித்தவர் கையில் வைத்திருந்த நாளிதழை மடித்து வைத்து விட்டு , மகள்களுக்காக இதமான சுவையில் ,இஞ்சி டீ போட்டு தயாராய் வைத்தார்.

அவர் கூறியபடியே காலைக்கடன்களை முடித்த சகோதரிகள் ,

இளந்தளிர் தனது விடுப்பு விண்ணப்பத்தை மின்னஞ்சல் செய்து விட்டு, மிதுனாவிடமும் அதை தெரிவித்து விட்டாள். 

சுபாஷினி, தன் துறைத்தலைவருக்கு அழைத்துப் பேசி விடுப்பு எடுத்துக் கொண்டாள். 

அதற்குப் பிறகு இருவரும் தாயிடம் வந்தனர்.

” கிச்சன்ல டீ போட்டு வச்சுருக்கேன். ஆளுக்கு ஒரு தம்ளர்ல ஊத்தி எடுத்துட்டு மாடிக்கு வாங்க ” 

என்று தன்னுடைய தம்ளரை எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறினார்.

தங்களது தம்ளரில் தேநீரை நிரப்பிக் கொண்டு , மாடியை அடைந்தனர் இளந்தளிரும் , சுபாஷினியும்.

அங்கே தேநீரைக் குடித்துக் கொண்டு அதிகாலைச் சூரியனை அண்ணாந்து பார்த்துக் கொண்டே , மகள்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் சிவசங்கரி.

முகத்தை குளிர் நீரில் கழுவிக் கொண்டு , சூரியக் கதிர்கள் படுமாறு வாகாக நின்ற மகள்களிடம் ,

“டீயைக் குடிச்சுட்டே நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லுங்கள் ” 

தம்ளரில் இருந்த திரவத்தை இரண்டு மிடறு பருகிய இரு மகள்களையும் பார்த்து ,

” விடியற்காலையில் சூரியனைப் பாக்குறது , ஆகாயத்தோட அழகை ரசிக்கிறது , பறவைகளைப் பாத்து சந்தோஷப்பட்றதுன்னு எப்பவும் எந்திரிச்சதும் இங்கே வந்துடுவீங்க. ஆனா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எழுந்ததுமே லீவ் போட்றதைப் பத்தி என்கிட்ட டிஸ்கஸ் பண்ண வந்தீங்க ! உங்களுக்கு இப்படி ஆகுறது முதல் தடவை இல்லை. ஸ்கூல் படிக்கும் போது ஒரு தடவை இந்த மாதிரி நடந்துருக்கு. அதுக்காக இது நார்மல் தானேன்னு விட முடியாது. இவளைக் கூட விடு. பிரேக் எடுக்கலாம்ன்னு லீவ் போட்றா , உனக்கு என்னாச்சு இளா ? மன அழுத்தம்ன்ற வார்த்தையை நீ சொல்லி ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் கேக்குறேன். திடீர்னு உனக்கு அப்படி என்ன மன அழுத்தம் ? ஆஃபிஸ்ல எதாவது பிரச்சினையா ? இல்லை ஆஃபிஸூக்குப் போற வழியில் எதாவது பிரச்சனை வருதா ? நீ வெளிப்படையாக சொன்னால் தான் என்னால எதுவும் வழி சொல்ல முடியும்” 

இளந்தளிர் அவர் கேட்ட கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கத் தொடங்க , அதை அமைதியாக நின்று கேட்க ஆரம்பித்தாள் சுபாஷினி.

” சிம்பிளா சொல்லனும்னா வொர்க் ப்ரஷர் ம்மா. அதைத் தவிர வேறெதுவும் எனக்கு இல்லை. எனக்குப் பிடிச்ச இந்த வேலையே சில நேரத்துல ஸ்ட்ரெஸ் – ஐக் கொடுக்குது. நானும் பிடிச்சதை , பிடிச்ச மாதிரி செய்து , ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு விதமான விஷயங்களைக் கத்துக்கிட்டு தான் இருக்கேன். ஆனாலும் ஏதோ அழுத்துது. அதை ஸ்ட்ரெஸ்ன்னு தான் நினைக்கிறேன் ” என்று கூறி முடித்திருந்தாள்.

” ம்ம். ஸ்ட்ரெஸ் ! அதுவும் உனக்குப் பிடிச்ச வேலையை செய்யும் போது வருதுன்னா ! அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான். உனக்கு இந்த வேலையைத் தவிர பிடிச்ச விஷயம் என்னதுன்னு தெரியுமே ? “

” பாட்டுக் கேக்குறதும்மா ” 

மெலிதான புன்னகையுடன் ,

” அதே தான் ! எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லாம செய்ற வேலையில் கான்ஸன்ட்ரேஷன் இருக்கனும்னு சிலர் அந்த வேலையை மட்டுமே செய்வாங்க.ஆனா ஒரு சிலர் பாட்டுக் கேட்டுட்டு , ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு , காஃபி அல்லது ஜூஸ் குடிச்சுட்டு செய்துட்டு இருப்பாங்க. அதாவது உன்னைப்போல சிலர். சோ இனிமே உன்னோட வொர்க் டைம்ல ஸ்ட்ரெஸ் ஆகுதுன்னு தோனுச்சுன்னா தயங்காம ஹெட்செட்டை மாட்டிட்டு , பாட்டுக் கேட்டுட்டே கம்ப்யூட்டரை ஹேண்டில் பண்ணு.வீட்ல இருந்தா இதோ இவ கூட பேசிட்டே வேலையைப் பாரு. அவ்ளோதான் இதுக்குப் போய் உன்னை நீயே குழப்பிக்கிட்டு இருக்காத ” 

அத்தனை சுலபமாக அன்னை அவளுக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்து போதித்தார்.

மகள்களின் அப்பழுக்கற்ற முகத்தில் , இப்போது புன்னகையின் பிரதிபலிப்புகளைப் பார்த்தவுடன் தாய் மனம் தெளிந்தது.

” டீ ஆறிப் போகுறதுக்குள்ள குடிச்சுட்டு, காலைச் சாப்பாடு முடிச்சுட்டு , மதியானத்துக்குச் சமைக்க ஆரம்பிங்க. இன்னைக்கு ஒரு சேஞ்ச்க்கு நீங்க சேர்ந்து சமைங்க ” என்று கூறி விட்டு மிச்சமிருக்கும் தேநீரைக் குடித்து முடித்திருந்தனர் மூவரும்.

அப்பாவைப் பற்றிய ஞாபகங்கள் சில நேரங்களில் ஏற்பட்டாலும் அதை தன்னிடம் காட்டிக் கொள்ளாது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கும் தன் செல்ல , செல்வ மகள்களைப் பார்த்துப் பெருமையும் , உவகையும் கொண்டார் சிவசங்கரி. 

இவர்களது மனம் நோகும் படியான விஷயங்கள் நடந்தேறினால் அதை கண்டிப்பாக அறிந்து வைத்துக் கொள்ள நினைப்பார்.

இன்னும் இளந்தளிரின் திருமணம் உரிய நேரத்தில் , நடக்க வேண்டும் என்பதே இவரது தற்போதைய வேண்டுதல். அவளது சம்மதத்திற்காகத் தான் சிவசங்கரி காத்துக் கொண்டிருக்கிறார்.

மனதளவில் மகளது சம்மதம் , ஒப்புதல் இருந்தால் தானே திருமண வாழ்வும் சிறக்கும் ! 

விரைவில் அந்த சம்மதமும் கிடைக்கப் பெற்ற பின்னர் , மூத்த மகளின் வாழ்வில் வரும் இன்னொரு வசந்தத்தையும் , வாஞ்சையாய் நடத்தி முடிக்க மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது அவருக்கு.

” ஓகே ஓகேம்மா ! அக்கா வா குளிச்சுட்டு வேலையைப் பாப்போம்”

தளிரின் கரங்களைப் பிடித்துக் கீழே அழைத்துச் சென்றாள். 

சிவசங்கரியும் மகள்களைப் பின்தொடர்ந்து , வீட்டிற்குள் நுழைந்தார்.

ஒருவர் மாற்றி ஒருவர் குளித்து முடித்து வந்ததும் , காலை உணவை உட்கொண்டு விட்டு , மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க , மகள்களின் புறம் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே , நாளிதழைப் படித்து முடித்திருந்தார் சிவசங்கரி.

இங்கு , சமையல்கட்டில் 

” ஏன்க்கா ! உண்மையிலயே உங்களுக்கு வேலை தர்ற மன அழுத்தம் தானா ? ” 

ஐயமாய்க் கேட்ட சுபாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

“ஆமா. அதுல உனக்கு என்ன டவ்ட்?”

அடுப்பைப் பற்ற வைத்துக் குழம்பைத் தயாரிக்க யத்தனித்த இளந்தளிர் தங்கை கேட்டதும் அதை அணைத்து விட்டு , கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ஏறிட்டாள்.

” கோவர்த்தனன் சார் பத்தி நான் கடைசியா உனக்கு ஞாபகப்படுத்தி விட்டுட்டேன். ஒருவேளை அதை நினைச்சு எதுவும் ஃபீல் பண்றியான்னு தான் கேட்டேன் !”

அவள் கேட்டது என்னவோ தேவையில்லாமல் , அவரைப் பற்றி அன்று ஒருநாள் அக்காவிடம் பேசி விட்டோமே என்று தான். ஆனால் இளந்தளிர் அதை தவறாக புரிந்து கொண்டாள்.

” உன் கற்பனைக்கு ஒரு எல்லை க்கோடு ரெடி பண்ணி, ஃபிக்ஸ் பண்ணிடு சுபா. ஏன்னா உன்னை விட அது எனக்குத் தான் தொல்லையா இருக்கு ” 

அணைத்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்துக் காரியத்தில் இறங்க ,அவளை முறைத்த சுபாஷினியோ ,

” மிஸ்அண்டர்ஸ்டேண்ட் பண்ணிட்டியேக்கா . நான் கேட்டது வேற பாய்ண்ட் ஆஃப் வியூ – ல , நீ  ஆப்போசிட் ஆக வேற ஒன்னை நினைச்சுத் திட்டிட்டு இருக்க ” 

என்று தான் நினைத்ததை அவளிடம் கூறினாள்.

‘ நமக்கு நிதானமா யோசிக்கிறது கூட குறைஞ்சுப் போச்சு. அது முழுசா மறைஞ்சுப் போகாம பாத்துக்கனும் ‘ 

அறிவுரை சொல்லிக் கொண்டு தங்கையிடம் ,

” சாரி சுபா. நான் தான் இப்படி யோசிச்சுட்டேன் ” 

மறக்காமல் மன்னிப்புக் கேட்டு விட ,

” அந்த சாரை அதுக்கப்புறம் நீ மீட் பண்ணியாக்கா ? ” அவள் எதேச்சையாக கேட்டது இவளுக்குத் தான் அதிக அதிர்ச்சிகள் , திடுக்கிடல்கள்.

” மீட் பண்ணலயே டி. ப்ச் ! நான் எதுக்கு அவரைப் பாத்துப் பேசனும்.அன்னைக்கு ஹெல்ப் பண்ணதோட சரி . வேற எங்கயும் நாங்க பாத்துக்கவே இல்லை ” 

இந்த சமாளிப்புகள் அவளுக்கே அநியாயம் என்று தெரிந்தும் வேறு வழி இல்லாது தங்கையிடம் கூறியிருந்தாள்.

விரைவில் அவளிடம் மாட்டிக் கொள்வோம் என்பது தெரிந்திருந்தால் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டாளோ ?

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்