540 views
அத்தியாயம் 11
தன் கல்லூரிக் காலத்தை நினைவு கூர்ந்துப் பார்த்தாள் அதிரூபா.
பிரித்வியும், அதிரூபாவும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்பதை தாங்கள் படிக்கும் இடத்தில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
சக நண்பர்களுடன் சகஜமாகப் பழகும், இயல்பானவர்களாகவே இருந்தார்கள்.
இருவரும் ஒரே துறை என்பதால், ஒரே வகுப்பில் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும் அல்லவா!
ஆனாலும், கண்ணியமாகத் தங்களுக்குள் பேசிப், பழகிக் கொண்டார்கள்.
இருவருக்கும் பொதுவான நண்பர்கள் என்று யாரும் இல்லை.
பிரித்விக்கு ஆண் நண்பர்கள் மட்டுமில்லாமல், இரண்டு பெண் தோழிகளும் இருந்தனர். அதுபோல தான், அதிரூபாவிற்கும்.
வகுப்பைத் தாண்டி பிரித்வி மற்றும் அதிரூபாவிற்குள் எந்தவித உரையாடல்களும் இருந்ததில்லை.
இருவருக்குள்ளும் எந்த ஈர்ப்பும் இருக்கவில்லை. அப்படி இருந்தும் எப்படி இவர்களுக்குள் காதல் மலர்ந்தது?
“வர்ற எக்ஸாமில் எனக்குத் தெரிஞ்சதைத் தான் எழுதனும் ரூபா! நான் வேற எக்கச்சக்கமான லீவ் எடுத்து வச்சிட்டேனா! நம்ம க்ளாஸ் இன்சார்ஜ் பிடிச்சுப் பேசி விட்டுட்டாங்க”
தன் தோழி கவிதா இவ்வாறு கூறவும்,
“கவி! நீ லீவ் போட்டதுனால தான் கவனம் போகுது. ஏன் இப்படி லீவ் அதிகமாக எடுக்கிற?” என்று கேட்டாள் அதிரூபா.
“நான் வேணும்னே ஆ லீவ் போட்றேன். உடம்பு சரியில்லை ரூபா. கம்ப்ளீட் செக்கப் பண்ணனும்” என்று தன் நிலையை உணர்த்தினாள் கவிதா.
“அதுவும் சரி தான். நீ முதல்லச் செக்கப் பாரு. எக்ஸாம் வர்றதுக்குள்ள அதைப் பார்த்துட்டா தேவலை” என்று அதிரூபாவும் ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்.
இங்கு பிரித்வியோ, விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டிருந்ததால்,
அவனாலும் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், குறிப்புகளும் அவ்வளவாக கை வசத்தில் இல்லை.
உடனிருக்கும் நண்பர்களும் கூட பிரித்வியுடன் போட்டியில் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கும் அதே நிலை தான்!
அந்த சமயத்தில் தான் அதிரூபாவிடம் உதவி கேட்கலாம் என்று பிரித்விக்கு யோசனை தோன்றியது. ஓரிரு முறை பேசிக் கொண்டு உள்ளோம். ஆனால் உதவி கேட்கச் செல்வது இதுதான் முதல் தடவை.
சற்றே தயக்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் அதிரூபாவை நோக்கிச் சென்றான் பிரித்வி.
கவிதாவுடனான உரையாடலில் மூழ்கியிருந்த அதிரூபாவிற்குப் பிரித்வி தன்னிடம் வந்து நிற்பது கவனத்திற்கு எட்டவில்லை.
தயக்கத்தைக் களைந்து,
“அதிரூபா” என்று தன் பெயர் சொல்லி அழைத்தப் பிரித்வியை, ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்.
கவிதாவும் வியந்து பார்க்க,
“என்ன அப்படி பார்க்கிறீங்க? உங்ககிட்ட வந்துப் பேசக் கூடாதா?”என்று மென்மையான புன்னகையை உதிர்த்தான் பிரித்வி.
“அப்படியில்லை பிரித்வி. சொல்லுங்க?” என்று சுதாரித்தவாறே கேட்டாள் அதிரூபா.
“நான் கொஞ்ச நாட்களாக விளையாட்டுப் போட்டியில் கவனமாக இருந்துட்டேன். பாடத்தை எதுவும் ஃபாலோ பண்ண முடியல. நோட்ஸ் எதுவும் எங்கிட்ட சரியாக இல்லை.அதனால் அதிரூபா உங்ககிட்ட நோட்ஸ் கேட்கலாம்ன்னு வந்தேன்” என்றான்.
“ஓஹ்! எந்தப் பேப்பர்?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டவள் அதற்கான குறிப்பேட்டைக் கொடுத்தாள் அதிரூபா.
“நன்றி அதிரூபா” என்று அதைப் பெற்றுக் கொண்டு, நகர்ந்து விட்டான் பிரித்வி.
அதைப் பார்த்த கவிதா, “பார்றா! பிரித்வி ஃபர்ஸ்ட் டைம் உங்கிட்ட ஹெல்ப் கேட்டு இருக்கான் ரூபா” என்று ஏதோ அதிசயத்தைக் கண்டது போல், பேசினாள்.
“இதில் என்னடி இருக்கு? வா உனக்கு பாடத்தைச் சொல்லித் தர்றேன்” என்று அதிரூபா அவளை அடக்கி விட்டாள்.
முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும், “அவனே உங்கிட்ட வந்து பேசறான்டி! பாரேன்! நீ குடுத்த ஸ்நாக்ஸை வாங்கிட்டான்! உன்னைப் பார்த்துச் சிரிக்கிறான் பாரு!” என்று தூபம் போடும் வேலைகளை அறிந்தோ, அறியாமலோ சில நண்பர்கள் செய்து விடுவர்.
அதிலிருக்கும் பாதகங்களை நினைத்துப் பார்ப்பது எல்லாம் இல்லை.அப்படியான பேச்சைத் தான் கவிதா ஆரம்பித்து வைத்தாள்.
ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டிருந்தாள் அதிரூபா.பிரித்வியின் மீது எந்தவித ஈர்ப்பும் அவளுக்கு ஏற்படவில்லை. இனி ஏற்படுமா என்பதும் இருவர் கையிலும் இல்லை.
உடனே காதல் பூ மலர்ந்து விட வேண்டுமா என்ன?
புரிதல் இல்லாத எதையும் அதிரூபா உடனே ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
அவளுக்குக் காதலும் அதே போல தான் !
அந்தப் புரிதலையும் அதிரூபாவிற்கு ஒருநாள் உணர்த்தி, காதலை மலரவும் செய்திருந்தான் பிரித்வி.
🌸🌸🌸
இன்றோ, பிரித்வியின் காதல் ததும்பும் விழிகளை தன் மனக்கண்ணில் கொண்டு வந்தவள், மனதிற்குள்,
‘அந்தப் பிரித்வி எங்கே போய்ட்டான்?’ அவளது தவிப்பை யாரிடம் சொல்லி அழுவது? என்று அழுகையை விழுங்கிக் கொண்டாள் அதிரூபா.
அந்நேரத்தில்,
மருத்துவர், “பிரித்வி அபாயக் கட்டம் தாண்டிட்டார். இரண்டு நாள் கழித்து, நார்மல் வார்ட்டுக்கு கொண்டு போன பிறகு எல்லாரும் பாருங்க” என்று கூறி அங்கிருப்போரை ஆசுவாசப்படுத்தி இருந்தார்.
மகேஸ்வரனும், சகுந்தலாவும் இப்போது கொஞ்சம் மனதளவில் தேறி இருந்தனர்.
அதிரூபாவின் பெற்றோரும் சற்றே நிம்மதி கொண்டனர்.
லயாவுக்குமே அண்ணனுக்கு எந்த ஆபத்தும் இனி இல்லை என்று அழுகை மட்டுப்பட்டிருந்தது.
இவர்களை விட மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த அதிரூபா தான் விழிநீரை வெளிப்படுத்தி தன் நிம்மதியை உணர்த்தினாள்.
“ரூபா!” என்று மொத்த குடும்பமும் அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தனர்.
“அண்ணி!! உங்கள் வார்த்தைகள் தான் எல்லாருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துச்சு” என்று லயா அவளை உயர்த்திப் பேசினாள்.
“இனிமேல் யாரும் துவண்டு போகவே கூடாது. சம்பந்தி நீங்க வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வாங்க.லயா நீயும் தான் ம்மா.ரூபா நீ தான் ரொம்ப சோர்வாக இருக்க. போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா”
என்று அதிரூபா வேண்டாம் என மறுத்தப் போதும் அவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் தீனதயாளும், கிருஷ்ணவேணியும்.
வீட்டிற்கு வந்தவர்கள், மறுபடியும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதால், அதிவிரைவாக குளிக்கச் சென்றனர்.
நீராடி விட்டு வந்த அதிரூபாவோ,
“இந்த தன்வந்த் இன்னும் அமைதியாகவே இருக்கானே? இந்நேரம் அவன் நமக்குத் தொல்லைக் கொடுத்து இருக்கனுமே? ஏன் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கான்?” என்று குழம்பிப் போனாள்.
இதற்கு முன், பிரித்வியின் நிலை அதிரூபாவின் கவனம் எதன் மீதும் செல்லாத வகையில் இருந்தது. இப்போது தான் ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கலானாள்.
ஓரிரு முறைகள் பிரித்விக்கு இவன் மீதான கோபத்தையும் பார்த்திருக்கிறாள் தானே!
கணவனுடைய சமூக வலைதளப் பக்கங்களையும் அலசி ஆராய முடிவெடுத்தாள் அதிரூபா.
அதற்குள், “ரூபா!” அத்தை சகுந்தலாவின் குரல் கேட்டு, பிரித்வியின் செல்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டு வேகமாக கீழிறங்கி வந்தாள்.
“அத்தை! கிளம்பிட்டீங்களா? போகலாமா?” என்று கேட்டாள்.
” போகலாம் ரூபா. வந்து காரில் ஏறு” என்று மருத்துவமனையை நோக்கி பயணித்தனர்.
அதிரூபாவின் பெற்றோர் இவர்களுக்காக இப்போதும் வீட்டிலிருந்து உணவை வரவழைத்திருந்தனர்.
“சாப்பிடுங்க” என அவர்கள் மறுப்பதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உணவு பரிமாறி வயிராற உண்ண வைத்தனர்.
“நான் தனியாகப் போய் உட்கார்ந்து இருக்கேன். நீங்க இங்கே பேசிட்டு இருங்க” என்று நழுவிக் கொண்டாள் அதிரூபா.
தன் கைகளில் அடக்கி வைத்திருந்த பிரித்வியின் செல்பேசியைப் பரிசோதிக்கும் வேலையில் இறங்கி விட்டாள்.
அவனது எல்லா சமூக வலைதள பக்கங்களையும் இவள் பின்பற்றுகிறாள் தான்! ஆனால் பிரித்வியின் பக்கமிருந்து தன்வந்த்திற்கு எவ்வாறு பதிலும், பின்னூட்டமும் சென்றுள்ளது என்பதைத் தான் தெரிந்து கொள்ள நினைத்தாள் அதிரூபா.
பெரும்பாலானோர் பொதுவாகவே, தங்களுடைய எல்லா சமூக வலைதளப் பக்கங்களையும் ஒன்றோடொன்று இணைத்து வைத்திருப்பார்கள்.
உதாரணமாக, ஒரு பதிவை இட்டால் , அது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்று எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் பதிவாகி விடும்.
அதைத் தான் பிரித்வியும் தன் செல்பேசியில் அமைத்து வைத்திருந்தான்.
இருந்தாலும் , அதிரூபா அலட்சியமாக இருக்கலாகாது என்று மொத்தத்தையும் தூண்டித் துருவி பார்த்து விட எண்ணினாள்.
கணவனுடைய செல்பேசியின் கடவுச்சொல் அனைத்தும் மனைவிக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்புக் குறைவு.
பிரித்வியின் செல்பேசியின் ஒட்டுமொத்த கடவுச் சொற்களும் அதிரூபாவிற்கு அத்துப்படி.
அதனால் சிரமமே இல்லாமல், சமூக வலைதளப் பக்கத்தில் பார்வையை ஓட விட்டாள்.
புலனம் (WhatsApp) பரவலாக உபயோகிக்கும் ஒரு சமூக வலைதளம்.
செய்திகளை மட்டுமில்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள் என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்ள உதவும் செயலி.
துரதிர்ஷ்டவசமாக பிரித்வி அந்தச் செயலியில் தன்வந்த்தின் எண்ணை ப்ளாக் செய்து வைத்திருந்தான்.
இப்போது அதிரூபா அந்த எண்ணை அன்ப்ளாக் செய்தாலும், அதை தன்வந்த் எப்படியாவது கண்டு கொள்வான்! ஏனென்றால், பிரித்வி அடிபட்டுக் கிடக்கும் போது, அவனது செல்பேசியை எடுத்துப் பார்ப்பது இவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற யூகம் அவனுக்கு வருமே!
ஆனாலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விட அதிரூபாவிற்கு மனம் வரவில்லை.
புலனச் செயலியில் இருந்து வெளியே வந்தாள்.
கணவனின் முகப்புத்தகப் பக்கத்திற்குள் நுழைந்தாள்.
இவர்களது திருமணப் புகைப்படங்களைத் தான் இறுதியாக அவன் பதிவிட்டு இருந்தான்.
அதற்குத் தன்வந்த் அனுப்பிய வாழ்த்துகளை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தாள்.
‘கங்கிராட்ஸ் பிரித்வி சா….ர்’ ஏளனமாகப் போட்ட பின்னூட்டம் என்பதை இவள் அறியாமல் இருப்பாளா என்ன?
அதற்குப் பிறகு ஒவ்வொரு பதிவிற்கும் வெளிப்படையான நக்கல் தொனியில் பின்னூட்டம் அளித்திருந்தான் தன்வந்த்.
அதைப் பார்க்கும் போதே, பிரித்விக்கு அவன் மேல் கோபம் வந்தது நியாயம் தான் என்று அதிரூபாவிற்குத் தோன்றியது.
தவறு செய்த தன்வந்த் தெனாவெட்டாகப் பதிவு செய்திருந்த விமர்சனங்களும், பின்னூட்டங்களும் இவளுக்குள்ளும் மிகுந்த எரிச்சலை வாரி இறைத்தது.
“இதையெல்லாம் செய்து விட்டு, வெளியே சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அந்த விஷமியை என்ன செய்தால் தகும்?” என்று உட்பட்ச ஆத்திரம் கொண்டாள் அதிரூபா.
அத்தனை வன்மம் கொண்டவன் நேருக்கு நேர் மோத வேண்டும் தானே?
கோழை போல் இப்படி செய்துள்ளான்! இவனை இத்தனை நாட்கள் பிரித்வி சும்மா விட்டு வைத்திருந்தது மாபெரும் தவறு என்று அதிரூபாவிற்குச் சினம் கொப்பளித்தது.
அடுத்தச் செயலி : இன்ஸ்டாகிராம்
அதை ஆராய்ந்ததில், பெரும்பானமையான நேரத்தைப் பிரித்வி இந்தச் செயலியில் தான் செலவிட்டு உள்ளான்.
எந்தவித பிரத்தியேகமானப் பதிவுகள் இல்லாமல், திருமணப் புகைப்படங்களையும் அழித்து வைத்திருந்தான் போலும்.
முகப்புத்தகச் செயலியை அவன் லாகின் செய்ததே இவர்கள் திருமணம் முடிந்த பின்னர் தான். புகைப்படங்களைப் பகிர்ந்து விட்டு, லாக் அவுட் செய்திருந்தான்.
அதற்குப் பிறகு , இடையில் வேறெந்த நாட்களிலும் அதை உபயோகித்திருக்கவில்லை.
தன்வந்த்தின் ஒரு பின்னூட்டம் அதிரூபாவினுள் தலைகால் புரியாத கோபத்தைத் தோற்றுவித்திருந்தது.
– தொடரும்.
அந்தப் பின்னூட்டம் என்னவென்று அடுத்தப் பதிவில் பார்ப்போம்.