“சத்யா… என்னை மன்னிச்சுரு.” தயங்கியபடியே வைஷாலி பேசியதில்,
“உன்னை மன்னிக்க நான் யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கூர்மையாய் கேட்டதில், அவள் விக்கித்து நின்றாள்.
கலங்கிய கண்களில் இருந்து ஒரு துளி நீர் கன்னம் வழியே பயணிக்க, “சத்யா… நான்…” என்று பேச வரும் போதே,
“தயவு செஞ்சு போறியா… ஏதாவது பேசி விட்டுற போறேன். மூணு நாளைக்கு நிம்மதியா இருந்துட்டு, போயிடுறேன். என் நிம்மதியை கெடுக்கணும்ன்னா, வந்து உன் மூஞ்சியைக் காட்டிட்டு போ.” என எரிச்சலுடன் கூற, அதற்கு மேல் அவளிடம் சமாதானம் செய்யும் வழி தெரியாமல்,
“என்னால உன் நிம்மதி கெட வேணாம்…” என்று விட்டு, அழுதபடியே அவள் அறைக்கு சென்று விட்டாள்.
தோளைக் குலுக்கிக்கொண்ட சத்யாவை அதிருப்தியாய் பார்த்த இந்திரஜித், “அவள் லவ் பண்ணுனா… கல்யாணம் பண்ணிக்கிட்டா.” என்றதும், அவனை முறைத்ததில்,
“தப்பு தான். அதுக்காக இப்படி ஹர்ட் பண்ணனுமா சத்யா.” என்றான் கண்டிப்புடன்.
“என்னை பார்த்தா பைத்தியக்காரின்னு நெத்தில எழுதி ஒட்டி இருக்கா இந்தர்? மூணு வருஷமா அவளுக்காக மாப்பிள்ளை பார்க்க நாயா அலைஞ்சேன். உடம்பு சரி இல்லாத அப்பவும், அம்மா அவளுக்கு கல்யாணம் நடக்கணும்ன்னு கோவில் கோவிலா வேண்டுதல் வச்சுக்கிட்டாங்க.
லவ் பண்ணுனா? மூளை அவிஞ்சு போய்டுமா…
காதலுக்காக உலகத்தையே எதிர்க்கிறதுலாம் சுத்த பைத்தியக்காரத்தனம் இந்தர். நிதர்சனம் என்ன தெரியுமா… காலம் முழுக்க அவள் பேர் ஓடுகாலியா தான் இருக்கும். பொண்ணை ஒழுங்கா வளர்க்கலைன்னு, என் அம்மா சாகுற வரை, எல்லாரும் அவங்க தலையை உருட்டுவாங்க. ஆனந்தி அத்தை, காலத்துக்கும் அவளை குட்டிக்கிட்டே இருப்பாங்க. அவளும் வாங்கிக்கிட்டே இருப்பா. இந்த ஜென்மத்துல அவளோட நான் உறவாட போறது இல்ல. இதான் நடக்க போகுது. நடந்துட்டும் இருக்கு.
ஒரு சிங்கிள் பேரண்டா வயசுப்பொண்ணுங்களை வளர்க்குறது ரொம்ப சவாலான விஷயம். அது உங்களுக்கு புரியாது… விடுங்க!” என்றவளுக்கு நெஞ்சம் உலைக்களமாக கொதித்தது.
மறந்தும், எழிலழகனைப் பற்றி பேசவில்லை. தன்னை வெறுப்பேற்றவென்றே நீல நிற சட்டையை அணிந்து கொண்டு வந்திருக்கிறான் என்று புரிந்தது. அதில் மனதில் ஒரு வெறுமையும் தாக்கியது.
“எனக்கு புரியுது சத்யா. நீ மெதுவா பேசுனாலும் எனக்கு கேட்கும். சென்னைல இருக்குற என் அம்மாவுக்கே கேட்குற மாதிரி கத்தாத. அப்பறம் அவங்க ஒரு வண்டி அட்வைஸை தூக்கிக்கிட்டு வருவாங்க. வயசுப்பசங்களை இந்த உலகம் லவ் பண்ண விடுதா… ப்ச்…” என சலித்துக் கொள்வது போல, அவளை அமைதிபடுத்த முயன்றான்.
அவளோ மூக்கு முட்ட முறைத்திட, “ஆனாலும், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை இங்க யாரும் சரியா கவனிக்கிறதே இல்லடி…” கையைக்கட்டிக்கொண்டு இந்திரஜித் கோபமாய் முகத்தை திருப்பினான்.
“என்ன கவனிக்கல? இப்போ தான நாலு பஜ்ஜி, அஞ்சு உளுந்த வடையை உள்ள தள்ளுன?” அவன் “டி” என்றதில், அவளும் மரியாதையை விடுத்தாள்.
“அடிப்பாவி… நான் சாப்பிடும் போது எண்ணிட்டு இருந்தியா. எனக்கு வயிறு வலிச்சா அதுக்கு நீ தான் காரணம்.” என்று கண்ணை சுருக்கி முறைத்ததில்,
“இப்போ யாரு உன்னை கவனிக்கல?” என்றாள் அவளும்.
“நீ பஸ்ல வரும் போது என்ன சொன்ன?” என்று மூச்சிரைக்க கேட்டவனிடம்,
“என்ன சொன்னேன்…” எனப் புரியாமல் பார்த்தாள் சத்யரூபா.
“அறுவடை பண்ணனும்ன்னு சொன்னியா இல்லையா…” கோபத் தொனி மாறாமல், இந்திரஜித் கேட்டிட,
“ஆமா… அதுக்கு என்ன இப்ப?”
“எனக்கு வந்ததுல இருந்து அந்த வடையை கொடுக்கவே இல்லை.” கையை விரித்து சிரிப்பை அடக்கிட,
முதலில் புரியாமல் விழித்தவள், புரிந்த பின்னே, “ஐயோ!” எனத் தலையில் அடித்துக்கொண்டாள்.
இரவு உணவின் போது, வைஷாலி வேண்டாம் என மறுத்து விட, எழிலழகனும் வெளியில் சென்று விட்டான்.
சத்யாவும் அறையை விட்டு வெளியில் வராமல், “சாயந்தரம் சாப்பிட்ட வடையே வயிறு ஃபுல்லா இருக்குமா” என்று விட்டாள்.
“மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிட்டு, நீயும் கொஞ்சமாவது சாப்பிடு சத்யா…” என்றதில், அவள் மறுத்து விட்டு, கணவனை உண்ண அழைத்தாள்.
இந்திரஜித் தான், மருமகன்களுக்காக தயார் செய்திருந்த இட்லி, தோசை, சாம்பார், சட்னி, பாயசம் என அனைத்தையும் வயிறார சாப்பிட்டான்.
அவனருகில் அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சத்யரூபாவிற்கே அவன் உண்டதைப் பார்த்து லேசாய் பசிக்கத் தொடங்கியது.
தாமரையோ, “இன்னும் கொஞ்சம் வைக்கிறேன் தம்பி” என தோசையை வைக்கப் போக,” நான் வச்சுக்குறேன் அத்தை…” என தடுத்து அவனே வேண்டியதை எடுத்துக்கொண்டான்.
இந்திரஜித்தின் வீட்டில், பரிமாறும் பழக்கமெல்லாம் இல்லை. அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நீர் வேண்டுமென்றால் கூட, அவர்களே தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரம், டீ காபி தயாரிப்பதும் உண்டு. காலை உணவிற்கும் மதியத்திற்கும் சமைக்க ஆள் வருவதால், அந்த விஷப் பரீட்சையை எடுத்துக்கொள்வதில்லை.
பானுரேகாவும் கார்மெண்ட்ஸ் செல்லாத நாட்களில், அவரே குடும்பத்தினருக்காக சமைத்துக் கொள்வார். எந்த வேலையாக இருந்தாலும், மூன்று நேர உணவை தவிர்க்காமல் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். அதுவும் வீட்டில் வந்து தான் சாப்பிட வேண்டும். எத்தனை மணி நேரம் ஆனாலும்…
அலுவலகத்திற்கு சென்றாலும், காலையில் டிபன் பாக்சில் மதிய உணவு தயாராக இருக்கும்.
“நான் என்ன ஸ்கூல் பையனா, கையில கேரியரோட போறதுக்கு. திஸ் இஸ் டூ மச் மம்மி.” இந்திரஜித் கத்தி கதறினாலும், பானுரேகா கண்டுகொள்வதில்லை.
அப்படியும் இடையில், வீம்பாக கேன்டீனில் இரு நாட்கள் சாப்பிட்டவன், இதுக்கு வீட்டு சாப்பாடே பரவாயில்ல என்று சமத்தாக எடுத்து சென்று விடுவான். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே, உணவகத்தில் சாப்பிட அனுமதி. அதுவும், குடும்பமாக சென்றால் மட்டுமே!
இப்படி கணக்கில் வராத ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸை, சில நேரம் இந்திரஜித் திருட்டுத்தனமாக உடைப்பதும் உண்டு. பிறகு, பானுரேகாவிடம் பிடிபட்டு, திட்டு வாங்குவதும் உண்டு.
சோகமாகவோ, கோபமாகவோ எப்படி இருந்தாலும் சரி, அதனை உணவின் மீது காட்டுவது இல்லை. நெருக்கமானவர்கள் இறந்தால் கூட, மனதின் துயரம் அதீத எல்லைக்கு சென்றால் கூட, அடுத்த வேளை பசித்து விடும். அவ்வளவு தான் மனித வாழ்வு. என்பதே பானுரேகாவின் கூற்று.
‘ஒருத்தி சாப்பிடாம இருக்கேனே. ஏன் சாப்பிடலைன்னாவது கேக்குறானா? அவனா கொட்டிக்கிறான்.’ எனக் கடுப்பானவளை ஓரக்கண்ணில் ரசித்து வைத்தவன், புன்னகையை உதட்டினுள் ஒளித்தபடி, வேறொரு தட்டில் இட்லிகளை அடுக்கி, அவள் முன் வைத்தான்.
“இப்படி வெறிச்சு பார்த்து வைக்காத… எனக்கு கூச்சமா இருக்கு.” என நக்கலடிக்க, அவள் அவனை முறைத்தபடி எழுந்தாள்.
“எங்க போற?” சாப்பிடாமல் எழுந்ததில், சற்று கோபம் எட்டிப்பார்க்க,
“கை கழுவ வேணாமா…?” என்று சிலுப்பிக் கொண்டதில், “கரடியெல்லாம் கை கழுவிட்டா சாப்பிடுது.” என வாரினான். அதில் அவனை பார்வையால் எரித்தவள், அவன் வைத்த இட்லிகளை உண்டு விட்டே எழுந்தாள்.
சாவித்ரியும் தாமரையும் தான் ஒருவரை ஒருவர் அர்த்தப்பார்வை வீசி புன்னகைத்துக் கொண்டனர். பின் இருவரும் அருகில் இருந்த சாவித்ரியின் வீட்டில் சென்று படுத்துக்கொள்ள, எழிலழகனும் இரவு நடுநிசி தாண்டியே வீட்டிற்கு வந்தான்.
அதுவரை வைஷாலியும் உறங்கவில்லை. அவளைக் கண்டுகொள்ளாமல், தரையில் படுத்துக்கொண்டவன், அவள் கேள்வி கேட்கும் முன் கண்ணை இறுக்கி மூடி உறங்கி விட்டான்.
வைஷாலிக்கு தான் அவளை சுற்றி நிகழும் முடிச்சுகள் எதுவும் புரியவே இல்லை. அனைவரிடமும் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட உணர்வு. அதில் கண்ணீர் வடித்தபடி உறங்கிப் போனாள்.
இங்கோ, சத்யரூபாவும் தரையில் பாயை விரித்து படுத்தாள். முதலிரவு அன்றும், தரையில் தான் படுத்துக்கொண்டாள். அவனும் அருகில் உறங்கச் சொல்லி அழைக்கவில்லை.
இப்போதும் அமைதியாக பார்த்தவன், அவளுக்கு அருகில் தலையணையைப் போட்டு படுத்திட, விருட்டென எழுந்தவள், “என்… என்ன? எதுக்கு இங்க வந்து படுக்குறீங்க?” எனக் கேட்டாள் தடுமாறி.
இந்திரஜித் தான், “எனக்கு ஒரு ஃபோபியா இருக்கு ரூப்ஸ். புது இடத்துல தனியா படுத்தா பயந்துக்குவேன். எப்பவும், என் அண்ணன் கூட படுத்துக்குவேன். இப்போ அவனும் கமிட் ஆகிட்டான். சோ, உன் பக்கத்துல படுத்துக்குறேன்” எனப் பாவம் போல கூறியவன், போர்வை போர்த்தி நல்ல பையனாக படுத்துக் கொண்டான்.
“உங்களுக்கு பயமா?” நம்பிக்கையற்ற தோரணையில் சத்யா வினவ,
“ப்ராமிஸ் ரூப்ஸ். வேணும்ன்னா என் அம்மாவுக்கு போன் பண்ணி கேளு.” வேகமாக போனை எடுத்ததில், பதறிப் பிடுங்கினாள்.
“இந்த நேரத்தில அத்தைக்கு எதுக்கு போன் பண்ற இந்தர்…” பல்லைக்கடித்தவளிடம்,
“நீ என் பக்கத்துல படுக்க மாட்டேங்குற. எனக்கு பயந்து பயந்து வருது. அதனால, என்னை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றேன் ரூப்ஸ்…” விழிகளை உருட்டி இந்திரஜித் அப்பாவியாய் கூறியதில், நொந்து போனாள்.
“கடவுளே… அப்படி எதுவும் அத்தைகிட்ட சொல்லி வச்சுறாதீங்க.” என்று விட்டு, அவளும் படுத்துக்கொள்ள, எழுந்த சிரிப்பை அடக்க தான் அவனுக்கு பெரும் பாடாக இருந்தது.
“யாருகிட்ட, இந்திரஜித்கிட்டயேவா. என்னை உரசிக்கிட்டே தான் நீ தூங்கியாகணும் புஜுலி.” என மனதினுள் குத்து பாட்டை ஓட விட்டு, அவளை ஒட்டிக்கொண்டே உறங்கிப்போனான்.
அவளுக்குத்தான், உறக்கம் வர மறுத்தது. ‘அத்தை இவனை பெத்தாங்களா… இல்ல, ஹாஸ்பிடல்ல ஆர்டர் பண்ணி வாங்குனாங்களான்னு தெரியல. உசுர வாங்குறான்.’ அவனை வறுத்து எடுத்தாள்.
நேரம் தாண்டி உறங்கியவளுக்கு, விழிப்பு தட்டியபோது, வயிற்றில் கனமான உணர்வு.
கண்ணைக் கசக்கிக் குனிந்து பார்த்திட, தனது நீண்ட கைகளை அவள் வயிற்றின் மீது போட்டு, குப்புறடித்துத் தூங்கிக்கொண்டிருந்தான் ஆடவன்.
“காண்டாமிருகம்…” எழும்போதே அவனை திட்டியபடி தான் எழுந்தாள்.
பின்கட்டில் குளித்து முடித்து, புடவையை உடுத்திக்கொண்டு அறைக்கு அவள் வரும்போதே மணி 9 க்கு மேல் ஆனது.
இந்திரஜித் இன்னும் சொகுசாக உறங்கிக்கொண்டிருக்க, ‘9 மணி வரை தூக்கம் கேட்குதா உனக்கு… செத்தடா நீ.’ எனக் கறுவியவள், பானுரேகாவிற்கு வீடியோ கால் செய்தாள்.
முகத்தை அவனைப் போலவே பாவமாக வைத்துக் கொண்டவள், “அத்தை… இவர எழுப்புனா எந்திரிக்கவே மாட்டுறாரு. இன்னைக்கு கோவிலுக்கு வேற போகணும். நீங்க கொஞ்சம் சொல்லுங்க அத்தை.” வெகு பவ்யமாய் மாமியாரின் முன் பேச,
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்த பானுரேகா, “நான் அவனுக்கு போன் பண்றேன்…” என்று விட்டு, மகனின் எண்ணிற்கே அழைத்தார்.
தாயின் எண்ணைக் கண்டதும், அடித்து பிடித்து எழுந்தவன், தொண்டையை செருமிக்கொண்டு, “ஹெலோ மம்மி…” என உற்சாகமாய் பேசிட,
“இன்னும் தூங்கிட்டு இருக்கியா?” என்றார் அவர்.
“இல்லையேம்மா. நான் காலைல சீக்கிரமே எந்திரிச்சு, வாசல் தெளிச்சு கோலம் போட்டு, காபி போட்டுக்குடுத்து, வீட்டுக்கு அடக்கமான மருமகனான மாறிட்டேனே.” என வெகு தீவிரமாகப் பேசியதில், சத்யாவே வாயைப் பிளந்து பார்த்தாள்.
“டேய். இப்ப தான் உன் பொண்டாட்டி எனக்கு வீடியோ கால் பண்ணுனா.” பானுரேகா அமர்த்தலாகக் கூறியதில், நிமிர்ந்து மனைவியை பார்வையால் சுட்டவன்,
“ஒரு மனுஷனை மறுவீட்டுக்கு வந்தாலும் தூங்க விடமாட்டீங்களா?” என மூச்சிரைக்க கடியானவன், “கரடி… உன்னை…” என்று சத்யாவை பல்லிடுக்கில் திட்டியபடி, அவளை அடிக்கத் துரத்தினான்.
அதில், பதறிக்கொண்டு அவள் வெளியில் ஓடி வர, அவனும் விடவில்லை.
“ஒழுங்கா நில்லுடி. அம்மாகிட்ட போட்டா குடுக்குற… மரியாதையா நில்லு.” என்று மிரட்டியபடி ஹாலில் இருந்த நாற்காலிகளை இருவரும் சுற்ற,
“வேணாம் இந்தர்… நான் நல்ல மருமகளா நடந்துக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் அத்தைக்கு போன் பண்ணுனேன். ப்ளீஸ்…” என்று அவனிடம் சிக்காமல் நழுவியவளுக்கு, சிரிப்பும் வந்து விட்டது.
“நானும் நல்ல புருஷனா நடந்துக்குறேன் கரடி. வா…” என வில்லங்கமாக அழைக்க,
“காண்டாமிருகம்… ஹால்ல நின்னுட்டு என்ன பேசுற. என்னை விடுயா.” என்று அவள் மிரட்ட, இந்திரஜித் அவள் கையைப் பற்றினான்.
“நோ வே… தண்டனைக்கு தண்டனை குடுத்தே தீருவேன்.” என்று அவளை நெருங்கும்போதே, அவளுக்கு சில்லிட்டது.
“இந்தர் வேணாம்…” அவனது நெருக்கத்தில் பதறிய மனதுடன் அவள் தவிக்க,
அவன் பேச்சற்று, சுவற்றோரம் அவளை நெருக்கி நின்று, செவியில் ஊதிட, அந்த சூடான மூச்சுக்காற்றில் அவளுக்கு சர்வமும் சிலிர்த்தது.
முத்தமிடும் நோக்கில், அவள் இதழ் நோக்கி குனிந்தவனை, தள்ளக் கூட தோன்றாமல், மிரட்சியுடன் நின்றிருந்தாள்.
இருவருக்கும் நூலளவு இடைவெளி இருக்கும் நிலையில், “தண்டனையை குடுத்துடவா ரூப்ஸ்…” கண்ணில் மின்னும் குறும்புடன் கேட்டான் இந்திரஜித்.
அதில் தான், அவனது விளையாட்டுப் புரிய, “உன்ன கொன்றுவேன் இந்தர்…” என அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள், விலகிச் செல்ல, மீண்டும் அவளைப் பிடிக்க முயன்றான்.
சத்யாவும் ஓடிய பொழுது, வைஷாலியின் அறையில் இருந்து, வெளியில் வந்த எழிலழகன் மீது இடித்து நின்று விட்டாள்.
எழிலழகன் அவளை அழுத்தமாக ஏறிட, அத்தனை நேரமும் இருந்த இதம் முற்றிலும் மாறியது அவளுக்கு. சத்யா உணர்ச்சி துடைத்த முகத்துடன் இறுகி நின்றிட,
“இப்படியா பொசுக்குன்னு கதவை திறக்குறது! நியூ கபிள்ஸ் ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்கோம்ல. இனிமே கதவை தட்டிட்டு வெளியில வா பங்காளி…” என்று எழிலுக்கு இலவச அறிவுரையைக் கொடுத்துவிட்டு போனான் இந்திரஜித்.
அதில் ஒரு நொடி விழித்த எழில் தான், ‘ரூமுக்குள்ள வர்றதுக்கு தான கதவை தட்டுவாங்க. வெளில வர்றதுக்கு நான் ஏன்டா கதவை தட்டணும்.’ என்று நெற்றியை சுளித்தான்.
மனையாளின் வாசத்தை நாசியில் சுவாசித்தபடி, குளியலறைக்குள் புகுந்த இந்திரஜித்தின் உற்சாகம், அந்நாள் முழுதும் அப்படியே இருந்தது, தன்னவளின் காதல் மனதை அறியும் வரை.
அலைபாயும்
மேகா!