Loading

ஷைலேந்தரியுடன் அறைக்குள் நுழைந்த மைத்ரேயனின் முகம் அத்தனை நேரம் இருந்த இளக்கத்தை இழந்திருந்தது.

அவனைக் கண்டவள், “என்ன ஆச்சுடா?” எனக் கேட்க,

“பயமா இருக்குடி. பத்திரமா இரு. மேக்சிமம் என் கூடவே இரு” என்று அவள் கையை இறுக பற்றிக்கொண்டான்.

“என்னவோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கலாய்ச்ச” ஷைலேந்தரி சிலுப்பிக்கொள்ள,

“ப்ச், ஏய்… அப்பவே பயம் தான்டி. நேரம் ஆக ஆக அதிகமா இருக்கு” என்றவனுக்கு நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்பியது.

“அட மைதா… அப்படிலாம் உங்களை மீறி அவன் என்னையும் விஸ்வூவையும் தொட முடியுமா. அத்தானும் இருக்காங்கள்ல”

“அவன் நார்மலா வீட்லயே இருந்திருந்தா கூட நான் தைரியமா தான் இருந்துருப்பேன். அந்த சீரியல் கில்லர்ட்ட மாட்டக்கூடாதுன்னு நடு கடல்ல கொண்டு வந்து விட்டுருக்கான். அதான் எனக்கு பயமே. அபர்ணா விஷயத்துல ஸ்டார்டிங்க்ல இருந்தே சொன்னான். அவகிட்ட இருந்து தான் எல்லாமே ஸ்டார்ட் ஆகிருக்குன்னு. அப்பல்லாம் நம்பவே இல்ல. இப்போ அவன் இவ்ளோ சீரியஸா இங்க கொண்டு வந்து விட்டுருக்கறதை பார்த்தா தான்…” எனக் கவலையாய் தன்னவளைப் பார்த்தான்.

“எனக்கும் உள்ளுக்குள்ள பயம் இருக்கு தான். நீ வேற தூண்டி விடாத. செத்த சும்மா இரு…” என நகத்தைக் கடித்தபடி அமர்ந்தாள்.

அவனும் கன்னத்தில் கை வைத்து யோசனையுடன் அமர்ந்திருக்க, “மைதா” என அழைத்தாள் மிரட்சியுடன்.

“என்னடி?”

“இல்ல… இந்த மாதிரி கஷ்டமான நேரத்துல ரொமான்ஸ் பண்ணுனா எல்லாம் மறந்துடுமாமே. ட்ரை பண்ணி பார்ப்போமா?”

“மனுஷனை கண்டதை சொல்லி மூட் அவுட் பண்ணிட்டு…” எனக் கெட்ட வார்த்தையில் ஏதோ சொல்ல வந்தவன் விழுங்கி விட்டு, “மூடிட்டு படுத்து தூங்குடி… நானே எங்க இருந்து எவன் வருவான்னு பதட்டத்துல இருக்கேன்” என்றான் கடுப்பாக.

“ம்ம்க்கும் போடா டொமேட்டோ” என நொடித்துக்கொண்டவள், அவனுக்கு முதுகு காட்டி மெத்தையில் படுத்தாள்.

நெற்றியில் கை வைத்து புன்னகைத்த மைத்ரேயன், ‘இவளுக்கு இருக்குற திமிரு இருக்கே… நம்மளை வேற துருவி விட்டுட்டடா’ எனப் புலம்பியபடி பூனை போல அவளருகில் படுத்து பின்னிருந்து அணைத்தான்.

“பக்கத்துல வந்த பால்டாயில எடுத்து வாயில ஊத்திடுவேன்…” ஷைலேந்தரி கண்டிக்க,

“நீ பால்டாயில் குடுத்தாலும் பால் பாயாசமா நினைச்சு குடிப்பேன்டி. ஏன்னு சொல்லு” என்றபடியே அவளது வயிற்றில் அழுத்தம் கொடுத்து இன்னும் அவனுடன் இறுக்கினான்.

இதழ்கள் அவளது செவியுடன் உறவாட, நொடிநேர தீண்டலிலேயே அவள் கரைந்தாள்.

“ஏ…. ஏன்?”

“ஏன்னா, நீ குடுக்குற பால் பாயசமே அப்படி தான் இருக்கும்” எனக் கேலி செய்ய, கழுத்தைத் திருப்பி முறைத்து வைத்தவளின் இதழ்களில் முத்தப்போரை தொடங்கி வைத்தான்.

—–

ஒருமுறை கப்பலில் இருக்கும் அனைத்து அறைகளுக்கும் சென்று சோதனை செய்தாள் குறிஞ்சி.

ப்ளூடூத் வழியே, அருணுக்கும் சில கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க, எதிரில் நந்தேஷ் வந்தான்.

குறிஞ்சியைக் கண்டதும் முகத்தில் ஆயிரம் விளக்குகள் ஒன்றாய் எரிய, “எங்க போன அழகி. லவ் பண்ண ஆள் இருந்தும் தனிக்கட்டையா கப்பல்ல அலைஞ்சுட்டு இருக்கேன்” என்றவனிடம், “அச்சோ… டார்லிங் நான் இருக்கேன்ல” என்று விரல்களைக் குவித்துக் கொஞ்சினாள்.

“மேம்?”

அருண் அந்தப்பக்கமிருந்து அதிர்ந்து கத்த, “ஐயோ” எனத் தலையில் அடித்துக் கொண்டவள், “உங்களை இல்ல அருண்… ஹான் சொல்லுங்க” என்று பேச்சைத் தொடர்ந்தவள், நந்தேஷிடம் இரண்டு விரல்களைக் காட்டி “2 மினிட்ஸ்” என்றாள் வாயசைவில்.

இரு பக்கமும் கண்ணாடி தடுப்புகள் இருக்க, அவளை ரசித்தபடியே கண்ணாடியின் மீது சாய்ந்து நின்றவன் அவள் பேசி முடிக்கும் வரையிலும் அவளது உச்சி முதல் பாதம் வரை கண்களாலேயே அளவெடுத்தான்.

அவனது பார்வைச் சூட்டில் உருகியபடி அருணிடம் சில உத்தரவுகளைக் கொடுத்து விட்டு வைத்தவள், “என்ன பார்வை தூக்கலா இருக்கு?” என்றாள் ஒரு புருவம் உயர்த்தி.

“உன்னைத் தூக்க தான்…” அவனும் குறும்பாய் பதில் அளித்தான்.

“தூக்கலாமே” குறிஞ்சி அனுமதி அளித்ததும் அவளைக் கையில் அள்ளி இருந்தான் நந்தேஷ்.

“ஐயோ நந்தா… இறக்கி விடுங்க. யாராச்சும் பார்க்க போறாங்க” என்றவளின் சிணுங்கல்களெல்லாம் அவனுக்குள் இன்னிசையாய் இறங்கின.

கப்பலின் அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் வெளியில் அனுப்பினான் யுக்தா சாகித்யன். அவன் பிடித்த மீனை கடாயில் பரப்பியவனின் கண்கள் மட்டுமல்ல மூளையும் தீவிர யோசனையில் இருந்தது.

பின் பக்கமிருந்து ஏதோ நகரும் சத்தம் கேட்க, மீனில் உப்பைத் தூவிக்கொண்டிருந்தவனின் இதழ்களில் கோரப்புன்னகை.

பேண்ட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து மேடை மீது வைத்த யுக்தா, “இந்த மீன்களுக்குன்னு தனி டேலண்ட் இருக்கு. சும்மா பிடிக்க நினைச்சா நழுவிப் போய்டும். தூண்டில்ல பிடிச்சு கைல அடக்குறதும் சாதாரண விஷயம் இல்ல. உப்பைத் தூவி ஊற வச்சு செதிலை எல்லாம் பிச்சு, மசாலா தேய்ச்சு எண்ணெய் சட்டில போட்டு பொறிக்கனும். வயித்துப் பசிக்காக குட்டி மீனை எல்லாம் கொன்ன இந்த மீனுக்கே இவ்ளோ பெரிய தண்டனைன்னா, ஆசைப் பசிக்கு அப்பாவி பொண்ணுங்களை கொன்ன உனக்கு எவ்ளோ பெரிய தண்டனை தரணும்…” எனும் போதே அத்தனை நேரம் மறைந்திருந்த இளங்கோ எனும் ஷ்யாம் கண் சிவக்க யுக்தாவை நோக்கி ஆவேசமாக வர, அடுப்பில் காய வைத்திருந்த பெரிய கரண்டியை வைத்து அவன் தலையில் அடித்திருந்தான் யுக்தா சாகித்யன்.

இளங்கோவின் தலையில் இருந்து குருதி கொட்டினாலும் அவனால் வெறியை அடக்க இயலவில்லை.

தனது ஆட்டத்தை பாதியில் முடித்துக்கொள்ள அவன் என்ன மடையனா? எத்தனை மாநிலங்களை ஆட்டிப்படைத்து விட்டு வந்திருக்கிறான். அதிலும் பெரிய அதிகாரிகளைக் கூட சத்தமில்லாது முடித்து வைத்தவனாகிற்றே. அவன் நினைத்த பெண்களை காவு வாங்காமல் நிறுத்த அவனது மனம் முற்றிலும் அனுமதிக்காது. இது தீராப்பிணி. வெறிப்பசி. அத்தனை இலகுவாக அவனைக் கட்டி அடக்க இயலாது.

ஷைலேந்தரியையும் விஸ்வயுகாவையும் ஆசை தீர கொன்ற பிறகே, அவன் மனம் அமைதி அடையும் அப்போதைக்கு. தன்னைப்போல ஒன்றும் அறியாத அப்பாவிகளின் குடும்பத்தை நாசமாக்கிய பெண்கள், இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலைப்பாடு அவனது மனதில் வெகு தீவிரமாய் இறங்கி நோயாகி மிருகமாக்கி விட்டது.

இனி மிருகவதை மட்டுமே இவனுக்கு சரியென்றே முடிவெடுத்திருந்தான் யுக்தா சாகித்யன்.

அவனைப் பிடிக்க வேண்டும். எப்படியும் எங்கும் தப்பித்து செல்லாத வண்ணம் பிடித்து அவனது அத்தியாத்தை முடிக்க வேண்டுமென்ற பிடிவாதத்தால் தானே, மீனுக்குத் தூண்டில் போடுவது போல இரு பெண்களையும் இங்கு வரவழைத்து அவனுக்குத் தூண்டில் போட்டான்.

இப்படிப்பட்ட மன வியாதியில் மற்றவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பவர்கள், அவர்களது திட்டத்தில் ஏற்படும் பின்னடைவை துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தான்.

எப்படியும் மோப்பம் பிடித்து அவன் வந்து சேருவான் என்ற கணிப்பிலேயே கப்பலில் வேலை செய்பவர்கள் போலவே அவனது ஆள்களை நிறுவி இருந்தான்.

எளிதாய் அவன் உள்ளே நுழைய வேண்டும். ஆனால், உயிருடன் திரும்பக் கூடாது என்ற உறுதியுடனே அனைத்தும் செய்தான்.

எந்த வழியாக அவன் உள்நுழைய முடியுமென்ற கணிப்பில் இன்னும் அதிகமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டவன், இளங்கோ கப்பலினுள் நுழைந்து விட்டதன் அறிகுறியாகவே விளக்கை ஒரு நொடி அணைத்து குறிப்பு காட்ட கூறி இருந்தான்.

ஒரு பணியாளரை அடித்துப் போட்டு விட்டு, அவனது உடையை நேர்த்தியாய் அணிந்து கொண்டவன் எதிலும் கலப்படம் செய்து விடும் முன் பிடித்து விட ஆயத்தம் கொண்டான்.

மீண்டும் இளங்கோவை அடிக்கும் முன், கையில் வைத்திருந்த ஆணி கொண்டு யுக்தாவின் காலில் குத்தி பல்லைக்காட்டிச் சிரித்தவனின் முகமெங்கும் ரத்தம்.

—-

“யுகி… எங்கடா போன?” யுக்தாவை அறையிலும் வாயிலிலும் தேடிய விஸ்வயுகா அடுக்களையிலும் சோதித்து விட்டாள்.

எங்குமே அவன் இல்லை.

தேவையற்று யுக்தாவின் வாசகங்கள் வேறு நினைவு வந்து தொலைத்தது.

“அந்த இளங்கோ, அவனைக் கண்டுபிடிச்ச ஆபிசர்சை துன்புறுத்தியே கொன்னுருக்கான்…”

நெஞ்சை கொய்யும் வலி மெல்ல மெல்ல உடலெங்கிலும் ஊடுருவியது பெண்ணவளுக்கு.

கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், ‘இல்ல என் யுகியை எவனாலும் தொட முடியாது’ எனத் தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டவளுக்கு அவனைக் காணாத சில நிமிடங்களில் உள்ளமே வெடிக்கும் படி ஆர்ப்பரித்தது.

“மைதா…” என மைத்ரேயனின் அறைக்கதவைத் தட்டியவள், சற்று கப்பலினுள் நகர்ந்து சென்று நந்தேஷைத் தேட, அவன் குறிஞ்சியைக் கையில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தான்.

அதில் நின்ற விஸ்வயுகா, “சாரி…” என மறுபுறம் திரும்பிட, அவசரமாக குறிஞ்சியைக் கீழே இறக்கி விட்டவன், “என்ன ஆச்சு விஸ்வூ?” என்றான் அவள் வியர்த்திருப்பதைக் கண்டு.

“யுகி… யுகியைக் காணோம்டா” எனப் பரிதவித்தவளுக்கு குரல் நடுங்கியது.

இதழணைப்பில் மூழ்கி இருந்த ஷைலேந்தரியும் மைத்ரேயனும் துரிதமாக வெளியில் வந்து விஷயம் அறிந்து பதறினர்.

நந்தேஷோ, “இவ்ளோ நேரம் மீன் பிடிச்சுட்டு தான இருந்தான். ஒருவேளை பெரிய மீனா பிடிக்க கடல்ல இறங்கிருப்பான்” என்று கூறி தங்கையிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான்.

குறிஞ்சி அனைவரையும் அமைதிப்படுத்தி, “மே பி அவன் கில்லரை நெருங்கி இருக்கலாம் கைஸ். உங்க உங்க ரூம்ல இருங்க. சேஃபா இருங்க…” என்றபடி ப்ளூடூத்தை ஆன் செய்து கப்பலில் இருக்கும் அவர்களது ஆள்களை அலர்ட் செய்தபடி அங்கிருந்து விரைந்தாள்.

மைத்ரேயன், “வா விஸ்வூ ரூம்ல இருக்கலாம்” என்றிட,

“அவன் டேஞ்சர்ல இருக்கான். என்னை ரூமுக்குள்ள இருக்க சொல்றியா?” விஸ்வயுகா எகிறினாள்.

நந்தேஷ், “லூசு மாறி பேசாத. அவன் பிளான் பண்ணிருப்பான் ஏதாச்சு. நம்ம இடைல போய் அவனுக்கு கூட கொஞ்சம் டேஞ்சரை இழுத்து விட வேணாம். நீ வா” என்றதில், “இல்ல… எனக்கு அவனைப் பார்க்கணும். இப்பவே…” என்றவளுக்கு தன்னை மீறி கண் கலங்கியது.

ஷைலேந்தரியும், “அத்தான் வந்துடுவாங்க விஸ்வூ. அடம்பிடிக்காத. நீயும் நானும் கில்லர்கிட்ட மாட்டக்கூடாது…” என்றபோதே அவள் மீண்டும் அடுக்களை நோக்கிச் சென்றாள்.

“ஐயோ இவளை…” என நொந்த நந்தேஷ், “மைதா நீ ஷைலுவை எக்காரணம் கொண்டு வெளில கூட்டிட்டு வராத. ரெண்டு பேரும் ரூம்லயே இருங்க…” என்று விட்டு தங்கைக்குப் பின்னே சென்றான்.

அடுக்களைக்குச் சென்ற விஸ்வயுகாவின் புருவம் சுருங்கியது. சொட்டு சொட்டாக குருதி பரவி இருந்தது. யாருடைய ரத்தமென்று தெரியவில்லை.

ஆனாலும் படபடத்தாள். யுக்தாவின் துப்பாக்கி அடுப்பு மேடை மீது இருக்க, அதனை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டவள், “யுகி” என அழைக்க ஒரு சத்தமும் இல்லை.

எச்சிலை விழுங்கியவள், குருதி கொட்டிய திசையிலேயே நடந்து சென்றாள். அடுக்களையைத் தாண்டிய அறை ஸ்டோர் ரூமாக இருக்க, அதனுள் சென்று பார்த்தவளுக்கும் அங்கு யுக்தா இல்லை எனப் புரிந்தது.

ஆனால் குருதியின் வழிகாட்டலுடன் மேலும் முன்னேறினாள்.

அவள் பின்னால் வந்த நந்தேஷிற்கு சமையலறைக்குள் இருக்கும் ஸ்டோர் ரூம் பற்றி தெரியாது வெளியில் தேடிக்கொண்டிருந்தான்.

இறுதியில் இரத்த துளிகள் ஒரு அறை வாயிலில் முற்றுப்பெற்றிருக்க, அங்கு யுக்தாவின் கைக்கடிகாரம் ரத்தம் படிந்து கீழே கிடந்தது. கைகள் நடுங்க அதனை எடுத்துப் பார்த்த விஸ்வயுகாவின் நெஞ்சத்தில் அத்தனை பதற்றம். அந்த அறைக்குள்ளே கும்மிருட்டு. டார்ச் அடிக்க அலைபேசியைத் தேடியவளுக்கு அதனை அறையிலேயே வைத்து விட்டு வந்தது அப்போது தான் உறைத்தது.

அதற்காக இருட்டிற்கு பயந்து அப்படியே விட்டுச் செல்ல இயலுமா? தன்னவன் ஆபத்தில் இருந்தால்… மூச்சு பலமாக வாங்கியது அவளுக்கு.

உள்ளங்கையும் வியர்த்து இருக்க, யுக்தாவின் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டாள். என்னவோ அவன் அதனை எப்போதும் வைத்துக்கொண்டே இருந்ததை பார்த்து விட்டு, இப்போது அதை பிடித்ததும் அவன் கையையே பிடிப்பது போலொரு கற்பனை அவளுக்கு. சற்றே தைரியம் வந்தது.

“யுகி…” அவன் பெயரை முணுமுணுத்தபடி துப்பாக்கியால் இருளைக் கிழிக்க முயன்று இருட்டு அறைக்குள் நுழைந்தாள்.

ஸ்விட்ச் போர்டைத் தேடிப் பார்த்தாள். எதுவும் கிட்டவில்லை. சில நொடிகளில் இருட்டு பழகியது. அவளது எண்ணமெங்கிலும் யுக்தாவே நிறைந்திருப்பதால், அந்த இருளிலிருந்து அவன் ஓடி வந்து விட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவளைக் கொன்றது.

“உலகமே இருண்டாலும் உன் நினைவுல நான் நிறைஞ்சுருப்பேன் ஏஞ்சல்…” சற்று நேரத்திற்கு முன் அவன் வாயால் கூறிய சத்தியமான வார்த்தைகள்.

அந்த அறையைக் கடந்து சுவரில் முட்டி நிற்கும் போது தான் அங்கு ஒரு கதவு இருப்பதை உணர்ந்தாள். அதனைத் திறக்க மற்றொரு அறை இருந்தது. அதுவும் ஸ்டோர் ரூம் போல இருக்க, அங்கு வெளிச்சம் இருந்ததில் “யுகி!” எனச் சத்தம் கொடுத்தபடி தரையில் குருதியை ஆராய்ந்தாள்.

பக்கவாட்டிலேயே ஒரு கதவு இருந்தது. கைகள் நடுங்க அக்கதவை திறக்கப்போகும்போதே படக்கென அந்தக் கதவு திறந்து விட, துப்பாக்கியை முன்னால் காட்டி ட்ரிக்கரில் கையை வைத்து எச்சரிக்கையாய் அதே நேரம் அழுத்தமாய் நின்றாள்.

“ஏய் உன் புருஷனைப் போட்டுத்தள்ளிடாதடி…” எதிரில் யுக்தா இருப்பதையே அதன்பிறகே உணர்ந்தவள், துப்பாக்கியை இறக்கி விட்டு அவனைத் தாவி கட்டிக்கொண்டாள்.

“சைக்கோப்பயலே! எங்கடா போய் தொலைஞ்ச?” கேட்கும் போதே நடுக்கத்தின் பலனாக கேவினாள்.

“ஒரு பெரிய மீனை வலை வீசிப் பிடிக்கப் போனேன் ஏஞ்சல்” விஷமத்துடன் கூறியவன், “பயந்துட்டியா?” என்றான் மென்மையாக.

“செத்துட்டு இருந்தேன்டா” உதடு துடிக்க நின்றவளை மார்போடு புதைத்துக் கொண்டவன், “இந்த வழியாவா வந்த?” என வியப்பில் விழி உயர்த்தினான்.

“ம்ம்…” தலையை மேலும் கீழும் ஆட்டியவளிடம்,

“டார்க் ரூம் இருந்துச்சே யுகா?” எனக் கேட்டான் புருவம் சுருக்கி.

“இருந்துச்சு. ஆனா என் எண்ணம் முழுக்க நீ இருந்தியே. ப்ளட் எல்லாம் வேற கொட்டி இருந்துச்சு. என் உலகம் மொத்தமா இருளுறதுக்குள்ள உன்னை பார்த்துடனும்னு வந்துட்டேன்” என்றவளின் நேசத்தின் ஆழம் அவனைப் பேச்சிழக்க வைத்தது.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
30
+1
201
+1
4
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்