‘ஐயோ இந்த கலவரத்துலயும் சிரிக்குதுங்களே! சைக்கோ கில்லர் நேரா வந்தா இதுங்களே நம்மளைத் தூக்கிக் குடுத்துடுங்க போல’ என நொந்த ஷைலேந்தரி, “நீ மூடு. நீயும் தான் அவன் டார்கெட்டாம்” என்றாள் விஸ்வயுகாவிடம்.
“நான் குடும்பம் நடத்துறதே ஒரு சைக்கோ கூட தான். இதுல வெளில இருந்து தான் ஒரு சைக்கோ வரணுமாக்கும்” என விஸ்வயுகா தன்னவனை வார, இடுப்பில் கையூன்றி அவளை முறைத்தான் யுக்தா சாகித்யன்.
மைத்ரேயன் தான், “அது சரி இவளை ஏன் டார்கெட் பண்ணிருக்கான் யுக்தா?” எனக் கேட்க,
“மேட்ரிமோனி ஸ்டார்ட் பண்ணது இவள் தான. இவள் அந்த நேரத்துல அதை கிரியேட் பண்ணாம இருந்திருந்தா அபர்ணா அவனுக்கு ஓகே சொல்லிருப்பான்ற கோபமா இருக்கலாம். என் கெஸ் தான். அவனைப் பிடிச்சா தான் அந்த பைத்தியம் என்ன நினைக்குதுன்னு தெரியும்” என்றான்.
விஸ்வயுகா தலையில் கை வைத்து, “நானே மெய்ன் சப்ஜெக்ட்ல ஆவரேஜ் மார்க் வாங்கிட்டு, வேற எந்த பீல்டுக்கும் போக பிடிக்காம தானடா இதை ஆரம்பிச்சேன்…” என்றதில்
“நீ படிக்காம போனதுல எவ்ளோ ட்ராபேக் பாத்தியா? ஒருத்தனை சீரியல் கில்லர் ஆக்கி வச்சுருக்க” என்ற ஷைலேந்தரியை முதுகிலேயே அடித்தாள்.
“அப்படி பார்த்தா அந்த ஆப் பண்ணுனது நீயும் இவனும் தான…” என மைத்ரேயனைக் கை காட்டியவள், “அவனுக்கு ஆம்பளையை கொல்ற ஐடியா இல்லையோ?” என்றாள் யோசனையுடன்.
யுக்தாவிற்கு நால்வரையும் என்ன தான் செய்வதோ என்ற கடுப்பே வந்தது.
“சீரியஸ்னெஸ் இல்லாம இதுல எல்லாம் என்ன விளையாட்டு” எனக் கத்தி விட்டதில், விஸ்வயுகா தவிர்த்து மூவரும் உள்ளே ஓடி விட்டனர்.
அவளை இழுத்துக்கொண்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றவன், கதவை அடைத்து விட்டு பாவையைக் கட்டிக்கொண்டு நின்றான்.
அவனது இதயத்துடிப்பின் வேகம் உணர்ந்தவள், “என்னடா சைக்கோ புருஷா ஓவர் டென்ஷன்?” என அவன் மீசையை முறுக்கியபடி கேட்க, கழுத்தை அலங்கரித்த பொன்தாலியின் மினுமினுப்பு அவளது முகத்திலும் பிரதிபலித்தது.
சட்டென கோபம் வடிய, அவளை ரசித்தவன் “பயமே இல்லையாடி…” என்றான் ஐந்து விரல்களும் அவள் கழுத்தில் பதிய.
“எதுக்கு? நீ கூட இருக்கும் போது அது வேற அசிங்கமா!” எனப் புருவம் உயர்த்திக் காட்டியதில் மென்னகை அவனிடத்தில்.
“கல்யாணம் பண்ணுனது கண்டவனைப் பத்தி பேசவா?” அவன் இதழருகில் நெருங்கி வெப்ப மூச்சுத் தீண்ட கேட்டாள்.
கப்பலின் அறையில் ஒளிர்ந்த மஞ்சள் விளக்குகள் மங்கையின் அழகை ஆர்பாட்டமாகக் காட்ட, அவளை அள்ளிப் பருகிடவே பேராவல் கொண்டான் யுக்தா சாகித்யன்.
நெற்றி மத்தியில் ஒற்றை விரலை வைத்தவன், அங்கிருந்து தொடங்கி மெல்ல மெல்ல ஊர்வலம் நடத்திட, “விரல் படுற இடமெல்லாம் என் லிப்ஸ் டேஸ்ட் பண்ண சொல்லுதுடி…” என்றான் கிறக்கமாக.
ஒற்றை விரல் ஊர்வலத்திலேயே உருகி உருக்குலைந்த விஸ்வயுகா, “யுகி ப்ளீஸ்!” என வெட்கி விலக, நங்கையின் நயனங்களில் நாணத்தின் தாக்கம்.
“உன் வெக்கம் எனக்கு துக்கம்டி பொண்டாட்டி. இன்னும் நான் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே!” செவிமடல்கள் கூசிச் சிவக்க ரகசிய மொழிகளில் அவளைக் குறுக வைத்தான்.
முன்னோக்கி அவன் நடக்க, பின்னோக்கி அவள் நகர…
கண்ணோக்கி காதல் மொழி கதைத்தான் கண்ணனவன்!
“நீ… நான்… இனி தனி தனி தூக்கம் தேவை இல்லைல ஏஞ்சல். தனி தனி சிரிப்பில்ல. தனி தனி உயிர் இல்ல. இனி எல்லாமே ஒண்ணா… நீ எனக்குள்ள. நான் உனக்குள்ள… மொத்தமா! ரொம்ப வருஷத்துக்கான ஏக்கம்டி நீ” அவர்களுக்கான தனிமைப் பொழுது கொடுத்த மோகத்தீயும் காதல்தீயும் அவனைப் பித்தாக்கியது.
முதல் முத்தத்தையே சங்கு கழுத்தில் ஆரம்பித்து வைத்தான். அம்முத்தத்தின் வீரியத்தில் மெல்லப் பின்னால் வளைந்தவள், அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றி,
“என் பல ஜென்மத்துக்கான தவம்டா நீ…” என்றாள் கண்கள் மயங்க.
அத்துடன் நிரம்பி வழிந்த காதல் நெஞ்சின் கனம் தாளாது, “யுகா!” எனத் தாபத்துடன் அவள் பெயரை உச்சரித்தவன் வேகத்துடன் அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.
முத்தத்தின் வேகமும் குறையாது, மென்மையின் எல்லையும் தாண்டாது, நொடிக்கு நொடி தீண்டல்கள் தந்த இதத்தில் அவளது இதயத்துடிப்பை நிறுத்தி துடிக்க வைத்தான்.
இச்சைகளுக்கு இரையானவள் தான்! அவளவனின் மோக நேசத்திற்கு தன்னையே அர்பணித்தவள், அவன் காட்டும் தாபத்தை அவளும் காட்டத் தவறவில்லை.
தங்களுக்கென தாங்களே அமைத்துக்கொண்ட இனிய நிமிடங்கள். தழுவல்களில் தொலைந்து ஒன்றுடன் ஒன்றாய் கலக்கும் சமயம், அறையிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைந்து விட்டது.
தன் மீது பரவியிருந்தவனை நொடியும் யோசியாமல் தள்ளி விட்ட விஸ்வயுகா, உடலைக் குறுக்கி கட்டிலோடு ஒட்டி அமர்ந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, சில நொடிகளில் மீண்டும் விளக்குகள் எரிந்து விட்டன.
‘எஞ்சின் மெயின்டனன்ஸ்’ காரணமாக இந்த சிறிய தொந்தரவு என அறை வாயிலில் பேசிக்கொள்வது கேட்டது.
அவர்களுக்கு தானே சிறியது. ஆனால், உள்ளார்ந்த நேசத்துடன் இணையத் துடித்த இரு உள்ளங்களும் கொதிநிலைக்குச் சென்றதை யாரும் அறியவில்லை.
தன்னவள் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு, தாபம் முற்றிலும் வடிந்து, கண்கள் சிவந்து நெஞ்சம் வலித்தது யுக்தாவிற்கு.
யார் யாரோ செய்த பிழைக்கு பழி சுமக்க இவளை ஏன் விதி தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஆதங்கம் அடங்க மறுக்க, வெளிச்சம் வந்த பின்னே தான் செய்த முட்டாள்தனம் உறைத்தது விஸ்வயுகாவிற்கு.
அவனை நிமிர்ந்து பார்க்கத் திராணியின்றி, “ச… சாரி யுகி… லைட் ஆஃப் ஆகிட்டா இந்த பயம் மட்டும் போக மாட்டுது. சா… ரி” மீண்டும் அவள் மன்னிப்பை வேண்டும் முன்னே, அவளை அள்ளி மடியில் கிடத்தியவன், போர்வையால் இருவரையும் மூடிக்கொண்டான்.
தன் நெஞ்சில் அவள் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டவனின் இதயத்துடிப்பு வேதனையின் வெளிப்பாடாக சீரற்று துடித்தது.
அதில் கண் கலங்கிட, “இதெல்லாம் தேவையா யுகி. என்னைக்கு இருந்தாலும் என்னால இந்த ட்ராமாவை மறக்க முடியாது. உன்கிட்ட மட்டுமாவது எல்லாத்தையும் மறக்கணும்னு தான், நமக்குள்ள எதுவும் சரி இல்லாதப்ப கூட அழுத்தம் தாங்காம என்னை எடுத்துக்க சொன்னேன். அப்ப கூட, அந்த ஒரு நாளோட உன்னோட உறவை முறிச்சுக்க தான் நினைச்சேன். அதனால வராத தைரியத்தை வர வச்சுக்கிட்டேன். இப்போ தினம் தினம்… என் ட்ராமா கூட நீயும் போராடணுமா. படிச்சு படிச்சு சொன்னேன்ல என்னை விட்டுடுன்னு…” ஆதங்கத்தின் வெளிப்பாடே அவளது புலம்பல்.
கதறல் எல்லாம் தோன்றவில்லை. அவனுடன், முழுக்க முழுக்க அவனது உயிராகவே வாழ இயலாதோ என்ற ஆற்றாமையின் அழுத்தம் அது.
அவளை நிதானமாக ஏறிட்டவன், “எனக்குப் போராட்டம் ரொம்ப பிடிக்கும் ஏஞ்சல். என் போராட்டமே உன் கூடதான்றப்போ, தினம் தினம் போராட்டிக்கிட்டே இருப்பேன். நீயும் என்கிட்ட போராடி தான் ஆகணும்…
சில விஷயங்கள் வடுவாவே என்னைக்கும் இருக்குறது இல்ல ஏஞ்சல். என் காதல் உயிர்ப்போட இருக்குறவரைக்கும் காலப்போக்குல எல்லாமே மாறும். வடுக்களும் மாறும். பயங்களும் மாறும். சில நிகழ்வுகள் நினைவை விட்டே ரொம்ப தூரம் போய்டும். அப்படி போகும் போது, என் காதல் மட்டும் தான் உன் நினைவுல நிறைஞ்சிருக்கும். உன் நினைவுலயும் நெஞ்சுலயும் என் காதல மட்டும் சுமக்கும் போது, உலகமே இருண்டாலும் அங்க நான் மட்டும் தான் தெரியுவேன் ஏஞ்சல்!” என்றவனின் இறுக்கம் அதிகரிக்க, அவனுள் உடைந்து கலக்கும் அளவு அவளும் அவனுடன் புதைந்தாள்.
“யுகி…”
“ம்ம்!”
“லவ் யூ டா!” நெஞ்சில் பொதிந்த பூனை முடிகளைக் கோதி விட்டு முத்தமிட்டாள்.
இதழோரம் சிறு புன்னகை சிந்தயவன், “ஐ லவ் யூ அ லாட் யுகா…” என்றான் உச்சியில் முத்தமிட்டு.
“இப்போ கரண்ட் வந்துடுச்சு. பயம் இல்ல…” கீழுதட்டைக் கடித்தபடி மெல்ல நிமிர்ந்தவளிடம்,
“என்னை சாக்ரிபைஸ் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு, நீ எனக்காக சாக்ரிபைஸ் பண்றியோ?” கேட்டவனின் அழுத்தம் நிறைந்த வார்த்தைகளில் தவித்துப் போனாள்.
“உன்னை எனக்காக எடுத்துக்கணும்னு ஆசை இல்லடி. நமக்காக எடுத்துக்கணும்… கடமைக்காக காதலிக்க என்னால முடியாது. என்னைப் பார்த்து சொல்லு, இப்போ உனக்கு இதை கன்டின்யூ பண்ண ஓகே வா?” எனக் கேட்டான் புருவம் இடுங்க.
அவளுக்கு அறை இருளடைந்தபோதே உணர்வுகள் வற்றி விட்டது. அதைக் கண்டுகொண்டவனிடம் இருந்து எங்கிருந்து அவள் தப்பிக்க?
அவள் பதில் கூறாது அமைதியை நாட, “பதில்?” என்றான் அதட்டலாக.
மறுப்பாக தலையசைத்தவள் அவனிடம் இருந்து விலகி, உடையை அணிந்து கொள்ள, அவன் முறைத்து வைத்தான்.
அவனும் சட்டையை அணிந்தபிறகு மீண்டும் அவனருகில் வந்தவள், “கோபமாடா?” எனக் கேட்க,
“ரொம்ப! மைண்ட்செட் இல்லாம எனக்காக எதுவும் செய்யாத ஏஞ்சல். ரொம்ப ஹர்ட் ஆகுது” என்றான் வலிமிகுந்த குரலில்.
அவளுக்கும் கண் கலங்கி விட, “சரி சாரி…” எனத் தலையை ஆட்டிக்கூறிட, கோபத்தையும் பிடித்து வைக்க இயலவில்லை.
“இது தான வேணாம். வா லவ் பண்ணலாம்!” கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழைத்ததில், அவளைத் தூக்கிக்கொண்டு பிரைவேட் பால்கனிக்கு விரைந்தான். இருவரின் முகமும் அறையை விட்டு வெளியில் வந்த பிறகே சற்று இயல்பானது.
கருநீல வானத்தையும், அதில் மின்னும் முழு நிலவையும் தன்னுள் எதிரொலித்து தானும் தகதகவென மின்னியது பரந்த பெருங்கடல்.
கரையிலிருந்து வெகு தூரத்திற்கு வந்து விட்டதன் அறிகுறியாக, செவியினுள் அலைச்சத்தம் மட்டுமே ரீங்காரமிட, சொகுசுக் கப்பல் தனது இலக்கை நோக்கி கடலில் காதலுடன் பயணித்துக் கொண்டிருந்தது.
அவளது தோள் மீது கை போட்டு, கடலை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கும் தங்களுள் இருக்கும் அமைதி பிடிக்கவில்லை. அதில் அவனே தொடங்கினான்.
“கடல் அழகா? கடலை ரசிக்கும் இந்த கடல்புறா அழகா?” பால்கனியின் கம்பியில் கையை ஊன்றி வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வயுகாவின் காதோரம் கிசுகிசுத்தான் யுக்தா சாகித்யன்.
இதழோரம் தானாக புன்னகையில் விரிந்திட, “இந்த ஆழியரசன் தான் எல்லாத்தை விட அழகாமே…” அவன் புறம் திரும்பி அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
கண்ணோரம் சுருங்க யுக்தாவிற்கும் புன்னகை மலர்ந்தது.
அவள் அணிந்திருந்த டீ – ஷர்ட்டின் இடைப்பகுதியை வருடியவன், “ஏஞ்சலை விட கம்மி தான்” எனக் கண் சிமிட்டினான்.
ஆடவனின் தீண்டலில் நெளிந்தவள், “எனக்கு மீன் சாப்பிடணும் போல இருக்கு” என அவன் மீசையை முறுக்கி விட,
“கிட்சன்ல இருக்குமே. எடுத்துட்டு வரவா?” என அவளுக்கு சேவகனாக மாறி விடத் துடித்தான்.
“ப்ச் கிட்சன்ல இருக்குறது வேணாம்” என்றபடி கடலைக் கை காட்டியவள், “இங்க இருந்து பிரெஷா வேணும்” என்றாள்.
“இங்க இருந்தா?” யுக்தா விழிக்க,
அவனது கன்னத்தை தனது இதழால் வருடிய படி, அவனது தடித்த இதழ்களுக்கு அருகில் நெருங்கியவள், “ஹே ஃபிஷர்மேன், ஃபிஷ் பிடிச்சுக் குடு…” எனக் கட்டளையிட்டாள் செல்லமாக.
தன்னை சோதிக்கும் அதரங்களை சிறைபிடித்து விடுவித்தவன், “இப்பவாடி?” என்றான் மோகம் பொங்க.
“இப்பவே தான்… வா!” என எடுத்து வைத்திருந்த தூண்டிலை அவனிடம் வீசினாள்.
அதனைப் பிடித்துக் கொண்டவன் ஒரு கையால் அவளை இழுத்து அணைத்து “சேர்ந்து பிடிக்கலாமா?” என விஷமத்துடன் கேட்க, “ஹான்?” என்று விழிகளை உருட்டினாள்.
“மீனை சொன்னேன் பொண்டாட்டி…” என அவள் மூக்கோடு மூக்கை வைத்து உரசியவன், “உனக்கு பிடிக்கக் கத்துக் கொடுக்கவா?” மீண்டும் குறும்பு நகை அவனிடம்.
“நீ என்ன பேசுனாலும் எனக்கு இஸ்கு இஸ்குன்னு கேக்குதுடா சைக்கோ புருஷா!” என அவன் மார் மீது கை வைத்து செல்லமாக தள்ளி விட்டாள்.
‘இஸ்கு இஸ்குன்னு தான பேசுறேன்…’ என பின்னந்தலைக் கோதி முணுமுணுத்துக் கொண்டான்.
“என்னது?”என இடுப்பில் கையூன்றி உதட்டைக் குவித்துக் கேட்டவளிடம்,
“மீன்… பிடி… க்க…லாமா?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் ரசனையுடன் கூறி முடித்தவன், அவள் கையில் தூண்டிலைக் கொடுத்து மீன் பிடிக்க சொல்லிக் கொடுத்தான்.
அவள் கடலைப் பார்த்து மீன் பிடிக்க, அவன் அவளைப் பார்த்தபடி, அவள் முதுகுப்புறம் முழுதும் யுக்தாவின் மீது படிவது போல இறுக்கிக் கொண்டான்.
“என்னடா ஒரு மீனும் வரல…” அவனது நெருக்கத்தில் சிக்கித் தவித்தவளுக்கு மீனும் சதி செய்தது.
“கொஞ்சம் தூண்டிலை நகட்டு” என உத்தரவிட்டு உதவி செய்தவன் வாய்ப்பை நழுவ விடாமல் பாவையின் செவியில் இதழ் பதித்து அவளை உருக்கினான்.
மேலும் முன்னேற்றம் கண்டு அவளது கழுத்தினுள் புதைய, முற்றிலும் அவள் வசமிழந்து போனாள்.
சில நிமிடங்கள் தொடர்ந்த தாபத்தின் விளைவில் அவள் மொத்தமாக அவன் மீது சாய, யுக்தா தூண்டிலையும் அவளைத் தூண்டி விடுவதையும் தனதாக்கிக் கொண்டான்.
“பிடிச்சாச்சு…” கிறக்கத்துடன் யுக்தா உரைக்க, “என் என்ன?”அவளும் தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“மீன் டி ஏஞ்சல். அதோ!” என அவளைக் கண்டு எழுந்த ரசனைப் புன்னகையுடன் தூண்டிலைக் காட்ட, அங்கு ஒரு மீன் துள்ளிக் கொண்டிருந்தது.
“வாவ்!” என அவள் விழி விரிக்க, அவர்களைத் தேடி வந்த நந்தேஷ் திகைத்தான்.
“டேய் மச்சான் என்னடா பண்ணிட்டு இருக்க?”
“பார்த்தா தெரியல… மீன் பிடி ரொமான்ஸ்டா மச்சான்” என இலேசாக வெட்கப்பட்டு விட்டு, “நான் போய் ஃப்ரை பண்ணிட்டு வரேன் ஏஞ்சல்” என்று வேகமாக உள்ளே செல்ல,
நந்தேஷோ, “சைக்கோ கொலைகாரனைக் கண்டுபிடிக்க இவனை கூட்டிட்டு வந்தா இவன் என்ன மீன் பிடிச்சு விளையாடிட்டு இருக்கான்…” என நொந்து போனான்.
மோகம் வலுக்கும்
மேகா