அத்தியாயம் 101
“யுகி சித்தியையும் எதுக்கு ஷிப்க்கு? ஷீ நீட்ஸ் ரெஸ்ட்” அப்போது தான் வீட்டினுள் நுழைந்த யுக்தாவிடம் விஸ்வயுகா வினவினாள்.
“அவங்களோட மெடிசின் எல்லாம் எடுத்துக்கலாம். எல்லாருமே கிளம்புறோம்” என அழுத்தமாக கூறியதில், அசோக் காயத்ரி முதற்கொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.
மாலை தாண்டும் நேரம். நந்தேஷ் பெரியவர்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல, அஸ்வினி அவ்வப்பொழுது மகனை ஏறிட்டுக்கொண்டார்.
அவனும் கண்ணாடி வழியே அவரைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாதது போல இருந்துகொள்ள, வெளிக்காற்று ஒப்புக்கொள்ளாமல் அஸ்வினிக்கு இருமல் வந்து விட்டது.
சௌந்தர் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட, அவர் குடிக்க மறுத்து விட்டார்.
“இருமல் சிவியர் ஆகுது பாருமா. கொஞ்சம் குடி” என்றிட, அவர் “எனக்கு ஒன்னும் வேணாம்” என்றார் நந்தேஷைப் பார்த்தபடி.
அவனும் கவனித்து விட்டு அமைதியாக இருக்க முயன்றாலும் அவரது தொடர் இருமலைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
“ஏன் சித்தி அடம்பிடிக்கிறீங்க. தண்ணியைக் குடிங்க” என நந்தேஷ் கூறிட, “இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த தண்டனைன்னு சொல்லிடு நந்து” என்றார் கண்கலங்க.
சௌந்தருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. அவர் எப்போதுமே அவனைத் தனது மகனாகத் தான் நினைத்தார். இதில் அவரது இரத்த சொந்தமென்றதும் நெஞ்சினுள் சிறு நெகிழ்ச்சி வந்தது அவ்வளவே!
அவரது கலக்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் வலித்தது அவனுக்கு. காரை ஓரங்கட்டியவன் பின்னால் திரும்பி சௌந்தரிடமிருந்து நீர் பாட்டிலை வாங்கி அவரிடம் கொடுத்தவன், “சித்தின்னு கூப்புட்றனாலயோ அம்மான்னு கூப்புடுறனாலயோ என் மனசுல உள்ள பாசம் துளியளவும் மாறப்போறது இல்லை. என் அம்மான்னு நினைச்சவங்களுக்கு ஈடா தான் உங்களையும் வச்சுருந்தேன். இப்பவும் வச்சுருக்கேன். இருந்தாலும், என்னை நீங்க உங்க மகனா வளர்த்துருக்கலாம்ன்ற ஆதங்கம் வர்றத தடுக்க முடியலம்மா” என்றவனின் பிசிறடித்த குரல் அவரைக் கலங்கடித்தது.
அவன் கையைப் பிடித்து நெற்றியில் ஒற்றிக்கொண்டவர் மீண்டும் மன்னிப்பையே வேண்ட, “ப்ச்… ஏன்மா… விடுங்க. இப்போ எனக்கு நீங்க கிடைச்சுட்டீங்க. அதுவும் அம்மாவா கிடைச்சு இருக்கீங்க. இனிமேலும் எதுக்காகவும் என்னை வீட்டுக்குடுத்துடாதீங்க” என்றதில் அவரிடம் ஆனந்த கண்ணீர்.
பின் நீரைக் குடித்து அவரை சமன்செய்த பிறகே காரைக் கிளப்பினான்.
சில நிமிடங்கள் கழித்து, “இந்த சீனை எல்லாம் யுக்தாகிட்ட போட்டுடாதீங்க. அவன் இருமுங்கன்னு விட்டுட்டுப் போயிடுவான்” என வாரினான்.
யுக்தாவை நினைத்து கதி கலங்கினாலும், “என் யுகி முதல் தடவை இருமும் போதே தண்ணியை எடுத்து நீட்டிடுவான்” எனப் பெருமை பீத்திக்கொண்டு நந்தேஷின் முறைப்பில் மூழ்கினார்.
யுக்தா காரை கடற்கரையில் வந்து நிறுத்தினான். பின்னால் அமர்ந்திருந்த மைத்ரேயனுக்கும் ஷைலேந்தரிக்கும் கண்ணைக் காட்ட, அவர்களும் குறும்பு மின்ன அவனிடம் கண்ணசைத்தனர்.
“ஹே விஸ்வூ… இங்க பாரேன். பீச்ல டெக்கரேஷன் பண்ணிருக்காங்க. பீச் வ்யூ மேரேஜ் போல இருக்கு” என்று ஷைலேந்தரி காட்டிட, விஸ்வயுகாவும் கவனித்தாள்.
கடற்கரையின் குறிப்பிட்ட இடத்தில் மேடை போல அமைத்து, விளக்குகளும் பூக்களுமாக அவ்விடத்தையே அழகுற வடிவமைத்து இருந்தனர்.
“ஆமா, ஏதோ நல்ல ஈவண்ட் மேனேஜர்ட்ட குடுத்து இருப்பாங்க போல” என தனது தமையனை வாரிக்கொண்டதில் இருவரும் சிரித்தனர்.
“பிடிச்சிருக்கா ஏஞ்சல்?” ஸ்டியரிங்கைத் தட்டியபடி யுக்தா ரசனையுடன் கேட்க,
“ம்ம் பிடிச்சுருக்கே. நல்லா கலர்ஃபுல்லா இருக்கு. லைட்டிங்கும் செம்ம. இன்னும் இருட்டுனதும் பளிச்சுன்னு தெரியும் போல…” என்றதில், “அப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் ஹஸ்கி குரலில்.
மைத்ரேயனும் ஷைலேந்தரியும் காரை விட்டு இறங்கி இருக்க, விஸ்வயுகா விழித்தாள்.
“என்ன சொல்ற? ஏதோ ஷிப் டிராவல்னு தான கூட்டிட்டு வந்த…” புரியாமல் கேட்டவளிடம், “ஷிப் ட்ராவலை ஏன் கபிள்ஸா என்ஜாய் பண்ணக்கூடாது…” ஒற்றை விரலால் பாவையின் மென்னிதழ்களை சுண்டி விட்டான்.
மனதில் சாரல் துளிகள் வீச, கன்னம் சிவந்தது.
“நிஜமா இது நமக்கு பண்ணுன டெக்கரேஷனா யுகி?” என நம்ப இயலாமல் கேட்டவளுக்கு சிறு கீற்றுப்புன்னகையையே பதிலாகத் தந்தான்.
“அங்க ஒரு கேரவன் நிக்குது. பிஃப்ட்டின் மினிட்ஸ்ல சிம்பிளா ரெடியாகிட்டு வருவோமாம். மேரேஜை முடிப்போமாம். ஓகே வாடி பொண்டாட்டி…” என எதிர்பார்ப்பு மிகுந்த குரலில் கேட்க, பேச்சின்றி அவன் தோளைத் தாவிக் கட்டிக்கொண்டாள்.
“எனக்கு ஓகே தான். சித்தி சித்தப்பாட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. சித்தி பாவம் யுகி… கோபத்தைக் குறைக்கலாமே” என்றாள் அவன் கன்னத்தில் மென்முத்தம் வைத்து.
“உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்ச யாரையும் எனக்கு மன்னிக்க தோணல. என்னை எனக்கே மன்னிக்கப் பிடிக்கலைங்கும் போது, அவங்கள எப்படி…” இறுகிய குரலில் காதலின் ஆழத்தைத் தொட்டவனை ரசித்தது அவள் விழிகள்.
“உங்கிட்ட இருந்து பிரிஞ்சு போகணும்னு நானும் தான் நினைச்சேன். அப்போ என்னையும் மன்னிக்க மாட்டியோ?” அவன் நெஞ்சை வருடி குறும்பாய் கேட்க, “இன்னொரு தடவை அப்படி நினைச்சா மன்னிப்புக்குலாம் வேலை இல்லை. டைரக்ட்டா தண்டனை தான். தண்டனைல கொஞ்சம் சாம்பிள் காட்டட்டா?” என்றவனின் விழிகளும் குறும்பைத் தத்தெடுத்தது.
“சைக்கோ புருஷா… நீ பேச்சை மாத்துற” அவள் சிணுங்கிட, அவன் கரைந்தான்.
“உன் சித்தி நமக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துக்கு அப்பறம் தான், நான் அவசரமா இந்த ஏற்பாடையே செஞ்சேன். கல்யாணம் பண்றதுக்கு மனசு வந்து ஒத்துக்கிட்டதுக்கு அப்பறம், நாளைக்கு வரை வெய்ட் பண்ணனும்னு அவசியம் இல்லையே!” என்றவனை மீண்டுமொரு முறை அழுத்திக் கட்டிக்கொண்டாள்.
“ஆனா எல்லாரும் கல்யாணம் காலைல தான பண்ணுவாங்க” விஸ்வயுகா சந்தேகமாகக் கேட்டாள்.
“ஆமா தான். பட் காலைல கல்யாணம் பண்ணுனா நைட்டு வர்றதுக்கு ரொம்ப லேட் ஆகும். ஈவ்னிங் பண்ணிட்டா, நைட்டும் சீக்கிரம் வந்துடுமே…” ஆழ்ந்த தாபத்துடன் நொடி நேரம் இதழணைப்பில் மூழ்கி விட்டு விலகியவன் செந்தூரமாய் சிவந்து போனவளை ரசித்து ருசித்தான்.
“நீ ரொம்ப மோசம்டா” வெட்கம் தாளாமல் அவனை அடித்தவள், பின் கேரவனுக்குள் நுழைய அங்கு அவளுக்காக எடுத்து வைக்கப்பட்ட புடவையும் இருந்தது. பியூட்டிஷியன்களும் இருக்க, ஷைலேந்தரி கண் சிமிட்டி தமக்கையை வரவேற்றாள்.
“வா வா சேரி பின் பண்ணி தான் இருக்கு. டக்குன்னு கட்டிக்கோ. டைம் இல்ல…” என அவசரப்படுத்த, அவர்கள் பின்னே நந்தேஷுடன் வந்த பெரியவர்களும் விஷயம் அறிந்து ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
எப்படியோ யுக்தாவிற்கும் விஸ்வயுகாவிற்கும் திருமணம் நிகழ்ந்து விட்டால் தனது மன பாரம் குறைந்து விடுமென்ற நம்பிக்கை இருந்தது அஸ்வினிக்கு. சௌந்தரோ “என்னடா சாயந்தரம் கல்யாணமா?” எனத் திகைத்தாலும் அவருக்கும் மகிழ்வே.
அசோக்கிற்கும் காயத்ரிக்கும் ஒன்றுமே புரியவில்லை. என்ன திடீர்னு கல்யாணம்னு சொல்றானுங்க, திடீர்னு கப்பல்ல போகலாம்னு உருட்டுறானுங்க என நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
குறிஞ்சியும் வந்து சேர்ந்து விட, “வாவ் நந்தா ஷார்ட் டைம்ல நல்லா ரெடி பண்ணிட்டீங்க… டெக்கரேஷன் சூப்பர்” எனப் புகழ்ந்தாள்.
“நம்ம மேரேஜ்க்கு இன்னும் க்ராண்டா ரெடி பண்ணிடலாம் அழகி” எனக் காதல் வழியக் கூறியதில், “நீங்க டெக்கரேஷனை பார்த்துக்கிட்டா என்னை யாரும் பாக்குறதாம்?” என்றாள் புருவம் உயர்த்தி.
“மல்டி டேலன்டட் அழகி நானு. ரெண்டையும் பாத்துப்பேன்” என ரகசியக்குரலில் அவளை சிவக்க வைத்தான்.
“ஷ்ஷ்… இந்தப் புது காதலர்கள் தொல்லை தாங்கலைப்பா…” என்று இருவருக்கும் நடுவில் இருந்த இடைவெளி வழியே நடந்த மைத்ரேயன், “அய்யர் வந்துட்டாரா” என யாரிடமோ கேட்டபடி செல்ல, “பொறாமை பிடிச்ச கைஸ்” என சிலுப்பினான்.
சொன்னது போன்றே எளிமையாய் அதே நேரம் தேவதையாகவே தயாராகி வந்தாள் விஸ்வயுகா. சிவப்பும் தங்க ஜரிகையும் கலந்த பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்தில் அழகுப்பதுமையாய் கடற்கரை மணலில் நடந்து வந்தவளைக் கண்டு கண்ணிமைக்க மறந்து போனான் யுக்தா சாகித்யன்.
அவனும் வெண் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரத்துடன் மிடுக்கு குறையாது மிளிர்ந்தான்.
அவனை விழி விரித்துப் பார்த்த விஸ்வயுகா, “இன்னைக்கு தான் பார்க்க நீ மனுஷன் மாதிரி இருக்க யுகி” என வாரியதில், அவனோ புன்னகையை மாற்றாமல், “நீ இன்னைக்கு ரெக்கை இல்லாத ஏஞ்சலா தெரியுறியே. உள்ளுக்குள்ள ஹாட்டா ஒன்னு எரிஞ்சுக்கிட்டே இருக்குடி. காண்ட் கண்ட்ரோல்” என்றான் அவள் காதோரம்.
“டேய்… வாயை மூடு” எனக் கண்டித்தவளைக் கண்ணெடுக்காமல் ரசித்தே அவளை சிறையெடுத்தான்.
அய்யரும் வந்திருக்க, அவர் மந்திரத்தில் மூழ்கிப்போனார். அவளுக்கு ஏற்கனவே அவன் கட்டிய சொக்கநாதர் மீனாக்ஷி திருவுருவம் கொண்ட மாங்கல்யம் அட்சதைத் தட்டில் நிறைந்திருந்தது.
அதனைக் கண்டு அவளுள் நெகிழ்ச்சி சாரல். பெரியவர்கள் நால்வரும் மாங்கல்யத்தை தொட்டு ஆசீர்வதித்துக் கொடுக்க, அய்யர் தாலியை எடுத்துக் கொடுத்தார். யுக்தா அதனை வாங்காமல் அமர்ந்திருக்க, சௌந்தர் “என்னடா இப்ப வந்து பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்க. தாலியை வாங்கு” என்றார் அதட்டலாக.
அவனோ அப்போதும் அமர்த்தலாகவே தோளைக் குலுக்கினான்.
“யுகி என்ன இது?” அஸ்வினி சங்கடமாகக் கேட்க, “ப்பா தாலியை எடுத்துக்கொடுக்க வெளில இருந்து யாரையாவது வர சொல்லட்டா” என்றான் குத்தலாக.
“எடுத்துக் குடுக்க வேண்டியவங்க குடுத்தா இப்போ எங்க கல்யாணம் நடக்கும்” என முடிவாய் கூறி விட்டதில், அஸ்வினி அவசரமாக அய்யரிடம் இருந்து மாங்கல்யத்தை வாங்கி கைகள் நடுங்க யுக்தாவிடம் கொடுத்தார்.
கண்கள் குளம் கட்டி இருந்தது. “இப்படி அழுதுட்டே குடுத்தா நான் எப்படி கல்யாணம் பண்றது?” யுக்தா மீண்டும் பிகு செய்து கொள்ள, விஸ்வயுகா அவனது குறும்புத்தனம் புரிந்து உதட்டுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
வேக வேகமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர், “நான் சந்தோஷத்துல தான் அழுகுறேன் யுகி” என்றார் பரிதாபமாக.
“சந்தோஷத்துல சிரிக்கலாம் தப்பில்ல…”
அவன் சொன்னதில் மெல்ல சிரித்தவர், “நீ என்னை அம்மான்னு திரும்ப கூப்புடுற வரை என்கிட்ட உண்மையான சிரிப்பை எதிர்பார்க்காத யுகி” என்று விட்டார்.
“ஓ! மிரட்டுறீங்களோ?” ஒற்றைப்புருவம் உயர்த்தி அவன் வினவ, “இல்ல. மனசு கேட்கல…” என்றவர் இன்னும் தாலியை நீட்டிக்கொண்டே இருந்தார்.
“சரி நீங்க பேசி முடிங்க. டேய் வாங்கடா நம்ம ஒரு வாக்கிங் போயிட்டு வருவோம்” என ஷைலேந்தரி கேலி செய்தாள்.
யுக்தா முறைத்ததும், “பீச்சு காத்துல மேக் அப் கலையிறதுக்குள்ள கல்யாணம் பண்ணி நாலஞ்சு போட்டு எடுத்துடலாம் அத்தான்…” எனப் பாவமாகக் கூறியதும் தான், அஸ்வினியிடம் இருந்து மாங்கல்யத்தை வாங்கியவன், “உங்களுக்கு முழு சம்மதம் தானம்மா?” என்றான் தலை சாய்த்து.
அகம் நிறைந்து, முகமும் மலர்ந்தது அவருக்கு.
“சாரி…” என்றதை தவிர அவரால் வேறு எதுவும் பேச இயலவில்லை.
“உனக்கு?” இவர்களது அன்புத் தூறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விஸ்வயுகாவிடமும் வினவினான் யுக்தா.
“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் கல்யாணம் பண்ணுற மாதிரி கேள்வியைப் பாரு” உதட்டைச் சுளித்தவளிடம், “அப்போ நடந்ததுக்கும் சேர்த்து இப்போ பெர்மிஷன் கேட்குறேன் ஏஞ்சல்… ஷேல் ஐ?” என்றான் ஏக்கத்துடன்.
தலையைக் குனிந்து காட்டி அவளது சம்மதத்தைக் காட்ட, மனநிறைவுடன் அவளைத் தன் மனையாள் ஆக்கிக்கொண்டான் இரண்டாம் முறையாக.
தங்கச் சரடாக மின்னிய பொன் தாலி, அவளுள் பலவித உணர்வுகளை ஆர்பரிக்கச் செய்ய, இந்நொடி அவளுள் மறையா மகிழ்வை அள்ளித்தந்தது.
பெற்றோராக தனது தாயும் தந்தையும் உடன் இல்லாத வலி ஒரு கணம் மின்னலாய் வந்து சென்றது தான். தகுதியை இழந்தவர்களிடம் உரிமைக்கு என்ன வேலை?
நெற்றி வகுட்டில் குங்குமமிட்ட யுக்தா சாகித்யன், முத்தமிட்டு அவளது மனதை அமைதி பெறச் செய்ய, “சரி சரி உங்க ரொமான்ஸை எல்லாம் ஷிப்ல வச்சுக்கோங்க” என்ற மைத்ரேயன் அவர்களது இனிய நிகழ்வை படம்பிடித்துக் கொண்டான்.
பெரியவர்களிடம் ஆசி வாங்கி, அந்த நொடிகளை ஒருவரை ஒருவரின் வருடும் பார்வையில் நெஞ்சில் சேமித்துக் கொண்டனர்.
அத்தியாயம் 102
ஷைலேந்தரியின் காற்றிலாடும் துப்பட்டாவைப் பிடித்து அவள் கழுத்தோடு சுற்றிக்கொண்ட மைத்ரேயன் தன்னவளுடன் புகைப்படத்தில் மூழ்க, நந்தேஷ் அப்போது தான் குறிஞ்சியின் அருகில் வந்தான்.
அவன் காதலாகப் பேச ஆரம்பிக்கும் போதே, “கிளம்பலாம். டைம் ஆகிடுச்சு” என்ற யுக்தாவின் குரலில் அவனை முறைத்தான்.
‘இவனுங்க லவ் பண்றப்ப மட்டும் டைம் ஆகாது…’ என முணுமுணுத்ததில் குறிஞ்சி பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்.
விஸ்வயுகாவையும் உடையை மாற்ற வைத்து விட்டே க்ரூஸ் கப்பலில் ஏற்றினான். ஒவ்வொன்றிலும் அதீத கவனமும் இருந்தது அவனுக்கு.
“என்னடா எங்களை நாடு எதுவும் கடத்துறியா?” கப்பலில் ஏறியதும் நந்தேஷ் விழித்தபடி கேட்க,
சௌந்தர், “எதுவும் பெரிய பிரச்சினையா யுகி” என்றார். எதற்கும் பதில் சொல்லாதவன், “ப்பா ஒரு நாள் நைட்டு ஸ்டே பண்ணிட்டு கிளம்ப போறோம் தட்ஸ் இட்…” எனத் தோளைக்குலுக்கி விட்டு குறிஞ்சிக்கு கண் காட்டினான்.
அவள் தலையை மெல்ல ஆட்டிவிட்டு, “வாங்க… எல்லாருக்கும் ரூமைக் காட்டுறேன்” என்றதும் அனைவரும் அவள் பின் செல்ல, விஸ்வயுகாவை மட்டும் தன்னருகில் நிறுத்திக்கொண்டான்.
மைத்ரேயன், அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, “எங்களை மட்டும் உன் வீட்ல விட்டுட்டு வந்துருக்கலாம்…” எனக் குறையாக கூற, ஷைலேந்தரி குப்பென சிவந்து, “அடேய்” என அவன் காலை மிதித்தாள்.
“எதுக்குடா?” விஸ்வயுகா சட்டென எழுந்த குழப்பத்துடன் கேட்க, ‘இவள் வேற…’ என ஷைலேந்தரி நெளிந்ததில் மைத்ரேயனின் தலையில் தட்டிய யுக்தா, “நீ இன்னைக்கு என்கூட தான் தூங்குற. நீ மட்டும் போ” என்றவன் ஷைலேந்தரியை இருக்கச் சொன்னதில், அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
“டேய் இது அநியாயம்” மைத்ரேயன் கத்தி விட, “இப்ப போறியா கல்லைக் கட்டி கடல்ல இறக்கி விடவா…” ஒற்றைப்புருவம் உயர்த்தி யுக்தா முறைத்ததில், ஷைலேந்தரி பதறி “ஐயோ வேணாம் அத்தான். பாவம்… கல்லைக் கட்டாம இறக்கி விடுங்க. அப்பவும் தப்பிச்சு வர மாட்டான். ஸ்விம்மிங் தெரியாத சில்லி கை” என்றாள் கிண்டலாக.
“அடிப்பாவி… கட்டுன புருஷனை கொலை பண்ணுவேன்னு சொல்றான். அதுல கரெக்ஷன் வேற பண்றியா…” என அவளை அடிக்கப்போக, அவள் விஸ்வயுகாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
நந்தேஷும் அவர்களுடன் இணைந்து கொள்ள,
விஸ்வயுகா யுக்தாவை யோசனையாகப் பார்த்து, “பெரிய ப்ராப்ளாமா யுகி?” என்றாள்.
“நாட் லைக் தட்!” என்றவனை அழுத்தமாக ஏறிட்டாள்.
“ஏதாச்சு சொல்லனுமா அத்தான்?” ஷைலேந்தரியும் குழப்பமாகக் கேட்டாள்.
“அவன் டார்கெட் நீங்க ரெண்டு பேரும் தான். எக்ஸ்டரா கேர்ஃபுலா இருங்க” என எச்சரித்தான்.
மைத்ரேயன், “ஆனா அந்த கில்லருக்கு அபர்ணா மேலயும் நாச்சியப்பன் மேலயும் தான யுக்தா கோபம். வெறுப்பு. இவங்களை ஏன் டார்கெட் பண்ணனும்?” எனக் கேட்டான்.
யுக்தா அழுத்தக்குரலில் பதில் அளித்தான்.
“ஆல்மோஸ்ட் அவனைப் பிடிக்க, அவன் இருந்த இடத்துக்கு போனோம். ஆளு அப்ஸ்காண்ட் ஆகிட்டான். ஆனா நினைச்சதை விட மோசமானவனா இருக்கான்.
ஷ்யாம் அலைஸ் இளங்கோ. கத்தார் போறேன்னு வீட்ல பொய் சொல்லிட்டு சென்னைலயே ஒரு சீக்ரட் இடத்தை உருவாக்கி இருந்துருக்கான். கெமிஸ்ட்ரில ரேங்க் ஹோல்டர். சைன்ஸ் அண்ட் ரிசர்ச்ல பி. எச். டி பண்ணிருக்கான். சைன்டிஸ்ட் பாஜிக்கிட்ட கொஞ்ச நாள் அஸிஸ்டண்ட்டா வேலை பாத்துருக்கான். அதுவும் அவர் ஸ்லோ பாய்சன் பத்தி ரிசர்ச் பண்றதை தெரிஞ்சே அவர்கிட்ட சேர்ந்துருக்கான்.
அவனோட அப்பா ராஜமூர்த்தி இறந்ததுல, அவன் மனரீதியா பாதிக்கப்பட்டதும் டெல்லில ஒரு டாப் சைக்காலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் பண்ணுனதும் இன்வெஸ்டிகேஷன்ல தெரிஞ்சுது. அதுக்கு முன்னாடி இருந்தே தோல்விகளை சந்திக்காதவன். ஸ்கூல், காலேஜ்ன்னு எல்லா எக்ஸாம்லையும் முதல் மார்க் வாங்கிப் பழக்கப்பட்டவன். பணத்துக்கும் பெருசா பஞ்சம் கிடையாது. ராஜமூர்த்தி, மகன் என்ன கேட்டாலும் உடனே செஞ்சுக் குடுத்துடுவாரு. அவன் சந்திச்ச முதல் தோல்வி. அபர்ணா தான்.
டெல்லில இருந்து லீவுக்கு சென்னைக்கு அவன் வந்தப்ப தான் அபர்ணாவும் கனடால இருந்து வந்துருக்கா. அப்பவே அவளைப் பார்த்து அவனுக்குப் பிடிச்சுருக்கு. ரெண்டு பேரோட பிளைட் ட்ரைவல் டீடெய்ல் வச்சு, புட் ஏஜ் எடுத்தோம். அதுக்கு அப்பறம் அவள் வேற ஒருத்தனை விரும்புறது தெரிஞ்சு, ஐ மீன் நரேஷை விரும்புறது தெரிஞ்சதுமே அவனுக்குள்ள ஒரு ஏமாற்றம் இருந்துருக்கு.
ஆனா, நரேஷோட லவ்வ பிரேக் அப் பண்ணதுக்கு அப்பறம், அவளை அப்ரோச் பண்ண ட்ரை பண்ணிருக்கான். அபர்ணா அவனைக் கண்டுக்கல. சோ, ராஜமூர்த்தி மூலமா நாச்சியப்பன்கிட்ட பேச வச்சிருக்கான். ஆனா நாச்சியப்பனுக்கு இவன் டாக்டரேட் வாங்கி நல்லா படிச்சுருக்குறதும் தெரியல. கண் மூடித்தனமா தனக்கு கீழ இருக்கறவன் சம்பந்தியாக நினைக்கிறது பிடிக்காம அவமானப்படுத்தி அனுப்பிருக்கான். அப்பவே அந்த மறுப்பை ஏத்துக்க முடியாம இளங்கோவுக்கு கட்டுப்பாடு இல்லாத கோபம் வந்துருக்கு. அந்தக் கோபத்தை அவனோட ரூம் சுவத்துல காட்டி இருக்கான்.
அப்பறம் ராஜமூர்த்தியை பொய் கேஸ்ல ஜெயில்ல போடும் போதும், அவர் அங்கேயே இறக்கும் போதும் ஒவ்வொரு இழப்பையும் ஏத்துக்க முடியாம அவனையே அழிச்சுக்க நினைச்சுருக்கான். அவனோட அம்மாவும் தங்கச்சியும் தான் அவனைக் காப்பாத்தி இருக்காங்க.
ஒரு மனுஷன் வாழ்க்கைல தோல்வியே சந்திக்காதபோது வர்ற அழுத்தம். அவனுக்கு அளவுக்கு அதிகமா வந்துருக்கு. வெறிப்பிடிக்க வச்சுருக்கு. கொஞ்ச கொஞ்சமா அவங்களோட சொத்து கரையும் போது, அவனால அவனோட வேலைல கவனம் செலுத்த முடியாம மூளையைக் குழப்பி இருக்கு.
கோபம். ஏமாற்றம். அதை எப்படி காட்டுறதுன்னு தெரியாத வெறி. அபர்ணா மேட்ரிமோனி மூலமா மாப்பிள்ளையை செலக்ட் பண்ணுனதுல அவனோட வாழ்க்கை முறையையே மாத்துன அபர்ணா மேல கோபம் வந்துருக்கு, தனக்கு முதல் தோல்வியை குடுத்தவ மேல தன்னோட வெறியை தீர்த்துக்க அவள்கூடவே சேர்ந்து சாகுறதுக்காக தான் பேச்சுலர் பார்ட்டி நடக்கும் போது, சிசிடிவில பதியாத மாதிரி உள்ள புகுந்து சைன்டிஸ்ட் பாஜியோட தியரியை யூஸ் செஞ்சு, அவனாவே உருவாக்கின ஸ்லோ பாய்சனை அவளோட ட்ரிங்க்ல கலந்துருக்கான். போதைல காருக்கு வந்த அபர்ணா அவனைப் பார்த்து ஷாக் ஆகிருக்கணும். அப்படியும் போதைல அவளுக்கு ஆபத்து புரியல. அவனுக்கு பக்கத்துல உக்கார்ந்து அவன்கிட்ட சண்டை போட்டுருக்கணும்.
அவன் அதை ஆக்சிடெண்ட்டா மாத்த, காரை கிராஷ் பண்ணிருக்கான். அவள் அதுக்கு முன்னாடியே அவன் குடுத்த விஷத்துனால உயிருக்குப் போராடி துடிச்சுருக்கா. அதைப் பார்த்து அவனுக்கே தெரியாம அவனோட கோபமும் வெறியும் குறைஞ்சுருக்கு. மனசுல எதையோ சாதிச்ச திருப்தி. அவள் சாகுறதைக் கண்ணால பாக்குற நொடிகளை தன்னோட தோல்விக்கான வெற்றியா நினைச்சுக்கிட்டான். தனக்கு எதுல சந்தோசம் கிடைக்குதுன்னு புரிஞ்சதும் தன்னோட இறப்பை ஒத்திப்போட்டு அங்க இருந்து தப்பிச்சுட்டான்.
சைண்டிஸ்ட் பாஜியோட தியரியை அவர் பக்கத்துல இருந்தே கலெக்ட் பண்ணுனவன், அவரோட தியரியை யூஸ் பண்ணி, இன்னுமே அதை பத்தி ஆராய்ச்சி செய்றதுக்காக, தன்னோட டாக்டரேட் பட்டத்தை மறைச்சு சாதாரண ஆளா லைப்ரரில வேலைக்குச் சேர்ந்தான். அங்க இருந்து நிறைய தகவல்களை எடுத்தவன், தனக்கு தானே குறிப்பெடுத்து புத்தகமா ரெடி செஞ்சு வச்சுருக்கும் போது தான் அந்த புக் உன் கைல கிடைச்சு இருக்கணும்” என்று விஸ்வயுகாவைப் பார்க்க, அவளோ கண் சிமிட்ட மறந்திருந்தாள்.
நந்தேஷ், “இதெல்லாம் உன் கெஸ்ஸா இல்ல கன்பார்மா சொல்றியா? நேர்ல பார்த்த மாதிரி பேசுற…” என்றான் தலையைச் சொரிந்து.
“சிலது என் கெஸ். சிலது இன்வெஸ்டிகேஷன்ல கிடைச்ச க்ளூஸ். ஆள் மட்டும் சிக்கி இருந்திருந்தா இன்னைக்கே எல்லாம் முடிஞ்சு இருக்கும். மிஸ் ஆகிட்டான். ஆனா கண்டிப்பா இவங்களைத் தேடி வருவான். ஒவ்வொரு ஸ்டேட்லயும் போய் பொண்ணுங்களைக் கொலை செஞ்சவன் மேல என்னை போல ஒரு சில ஆபிஸர்ஸ்க்கு டவுட் வந்துருக்கு. இவனை நெருங்கி இருக்காங்க. அப்படி இவன் மேல சந்தேகம் வந்த ஆபிஸர்ஸ சந்தேகமே வெளில வராத அளவுக்கு கடத்தி, துன்புறுத்தி கொலை செஞ்சு, வீட்லயே ஆசிட்ல முக்கி வச்சிருக்கான்” என்றதும் ஷைலேந்தரிக்கு குடலைப் பிரட்டியது.
“இப்போ தான் மத்த ஸ்டேட்ல மிஸ் ஆன ஆபிஸர்ஸ் பத்தின தகவல்களை சேகரிச்சு டி. என். ஏ டெஸ்ட்க்கு குடுத்து இருக்கோம். அவன்கிட்ட இருந்த போட்டோஸ் வச்சு, யார் யாரை கொலை செஞ்சுருக்கான்னு அனலைஸ் பண்ணியாச்சு. அந்த போட்டோஸ் லிஸ்ட்ல நீங்க ரெண்டு பேருமே இருக்கீங்க. ஆல்ரெடி அந்தப் பொண்ணைக் கொலை செய்யாம விட்டதுல அவனோட மனநிலை அழுத்தத்துக்குப் போயிருக்கலாம். ஒருவகையான மெடிக்கல் ஸ்டேட் அவனோடது. அவனுக்கு சரியான நேரத்துல டாக்டர் அசிஸ்டன்ட் கிடைச்சுருந்தா மே பி குணப்படுத்தி இருக்கலாம். பட், இதைக் காரணமா வச்சு அவனை குற்றவாளி லிஸ்ட்ல இருந்து தூக்க முடியாது. அவன் எப்பவோ அந்த மெடிக்கல் கண்டிஷனைத் தாண்டி, குரூரமான மிருகமா மாறிட்டான். உங்களை இப்போதைக்கு வீட்டில இருக்க வைக்கிறது கூட சேஃப் இல்லைன்னு தோணுச்சு. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். உங்களைத் தேடி நீங்க கிடைக்காம அவன் தடுமாறுவான். நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க உங்களைத் தேடி வருவான். வரணும் என்றான் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து.
சுற்றிலும் இருளடைந்த கடற்கரையின் சத்தம் வேறு விஸ்வயுகா தவிர்த்து மூவருக்கும் பயத்தைக் கிளறியது.
“என்னடா ரொம்ப பயமுறுத்துறீங்க” என்ற மைத்ரேயன், “நான் கொஞ்ச நேரம் என் ஆளோட குஜால் பண்ணுனதுக்கு அப்பறம் இந்த பிளேஷ்பேக் சொல்லிருக்கலாம் சகல. இப்ப எவன் எங்க இருந்து வருவான்னு தெரியாம இந்த நடுக்கடல்ல குத்த வச்சு உக்காந்து இருக்கனும் நாங்க. அதான…” என்றான் எச்சிலை விழுங்கி.
“தட்ஸ் யுவர் சாய்ஸ்” நக்கலாய் கூறிய யுக்தாவை நொந்து பார்த்தான்.
ஷைலேந்தரி தான், “அடேய் ஒருத்தன் என்னைக் கொலை செய்யப் போறதா இருக்கான். உனக்கு குஜால் கேட்குதா?” என அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்க்க,
“அவன் மட்டும் உன்னைக் கொல்ல வந்தா, நீ அவனையும் சைட் அடிச்சு பாய் பெஸ்டி ஆக்கி ஓட விட்டுடுவ. வந்தா அவனுக்கு தான் லாஸ்!” எனக் கேலி செய்தவனை முறைத்தவள், “நான் அந்த கௌதமையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என அவனைச் சீண்டி விட்டாள்.
விஸ்வயுகா “எந்த கெளதம்?” எனக் குழப்பமாகக் கேட்க, அவள் விவரம் கூறியதும், ‘அடி அற்ப பதரே’ என்ற ரீதியில் பார்த்தனர் நந்தேஷும் விஸ்வயுகாவும்.
“உங்க தங்கச்சியை வச்சுட்டு நான் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு இப்ப புரியுதா மச்சீஸ்…” என மைத்ரேயன் வெகுவாய் வருத்தம் கொண்டு கூற,
நந்தேஷ் “சாரி மச்சான். எனக்கே கடுப்பா தான் இருக்கு. விடு அடுத்த ஜென்மத்துல நல்ல தங்கச்சி பிறக்கணும்னு வேண்டிக்கிறேன்” என்றதில், “எதே அடுத்த ஜென்மத்துலயும் உனக்கு ப்ரெண்டா வருவேன்னு நினைக்கிறயா. ஆளை விடுங்க சாமிகளா” என்றான் கையெடுத்துக் கும்பிட்டு.
“ஹே ஸ்டாப்” யுக்தா தீவிரத்துடன், “என்ன ப்ரொபைல் அது. காட்டு” என்று ஷைலேந்தரியிடம் கேட்க,
“ஐயோ அத்தான்… நீங்க என்ன எல்லா விஷயத்துக்கும் ஆபிசரா மாறி இன்வெஸ்டிகேட் பண்றீங்க” என்றவளிடம் “காட்டுன்னு சொன்னேன்” என்றான் முறைப்பாக.
அவளும் அலைபேசியில் கௌதமின் தகவலை எடுத்துக் காட்ட, கூர்மையாக அதனை ஆராய்ந்தான். புகைப்படத்தையும் கவனத்துடன் நோட்டமிட, விஸ்வயுகாவும் புருவம் சுருக்கிப் பாரத்தாள்.
“யுகி… இவன் இளங்கோவே தான?” என அதிர்வுடன் விஸ்வயுகா கேட்க,
“எஸ். ஃபேஸ்ல ஏதோ பட்டிங் டிங்கரிங் பண்ணிருக்கான்” என்றபடி ஷைலேந்தரியைப் பார்த்தத்தில் அவளோ திருதிருவென விழித்தாள்.
மைத்ரேயனுக்கு ‘எப்படி சிக்கி இருக்கா பாரு’ என்ற பயம் எழுந்தாலும் கூட, “அடியேய் அங்க சுத்தி இங்க சுத்தி சைக்கோ கில்லர்கிட்டேயே ஃப்ளர்ட் பண்ணி வச்சுருக்கியே… தலைக்கு தில்ல பார்த்தீங்களா” என்றான் வாயில் கை வைத்து.
“அடேய் செத்த சும்மா இருடா. இனி பாக்க அழகா இருக்கான்னு எவன் ப்ரொஃபைலையும் நோண்ட கூடாது போல. அய்யய்யயோ அப்போ அவன்கிட்ட மேரேஜ் ரிலேட்டடா பேசிட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணுனதுனால தான் என்னை டார்கெட் பண்ணிருக்கானா… அடப்பாவி காதலிக்கிறேன்னு அப்பவே சொல்லிருந்தா, கண்ணை கண்ட்ரோல் பண்ணிட்டு கழுத உன்னையவே கட்டிருப்பேன். எந்த சோத்துல விஷம் வைக்கப்போறானோ தெரியலையே…” எனக் கண்ணைக் கசக்கி ஒப்பாரி வைத்தவளைக் கண்டு விஸ்வயுகாவும் நந்தேஷும் சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் சத்தமாக சிரித்து விட்டனர்.
மோகம் வலுக்கும்
மேகா