Loading

சாரி சாரி சாரி டியர் ப்ரெண்ட்ஸ். ஒரு வாரமா வீட்ல கெஸ்ட் வந்து செம்ம ஒர்க். போன் கூட எடுக்க முடியல. அன்னைக்கே டைப் பண்ணி வைச்சுட்டேன். எடிட் பண்ண முடியாம, இவ்ளோ நாள் ஆகிடுச்சு. இன்னைக்கு நைட்டு இன்னொரு யூடி போட்டு சஸ்பென்ஸை ரிவீல் பண்றேன்…

அத்தியாயம் 10

அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜிஷ்ணுவும் அவர்களை தாக்கியவர்கள் பற்றி கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு, அடுத்த ஒன்றரை வருடங்கள் கண் மூடி திறக்கும் நேரம் ஓடியது போன்றதொரு பிரம்மை தான் நால்வருக்கும்.

ஐந்தாம் வருடம், வக்கீல் மாணவர்களுக்கு பிசியாகவே  நகர்ந்தது. ரெகார்ட் சப்மிட் செய்வதும், சட்ட பாடங்களில் இன்னும் மூழ்வதுமாக இருந்தவர்களுக்கு, ஐந்தாம் வருடத்தின் முதல் செமஸ்டர் நடக்கத் தொடங்கியது.

மரத்தின் அடியில் அமர்ந்து, தீவிர படிப்பில் மூழ்கி இருந்த வசுந்தராவை ஜிஷ்ணுவின் விழிகள் அவ்வப்பொழுது தீண்டி விலக, முதலில் கவனியாதவள், பின் கண்களாலேயே “என்ன” என்றாள்.

“ஒண்ணும் இல்ல” என்ற ரீதியில் தோளைக் குலுக்கியவன், புத்தகத்திற்குள் தலையைக் கொடுக்க, நைசாக நகர்ந்து அவன் புறம் வந்தவள், “என்னடா?” என்றாள் குரலை தாழ்த்தி.

“நாளைக்கு எக்ஸாம் மதியமே முடிஞ்சுடும்…” என்றவன் குறும்புடன் புன்னகைக்க, அவளோ புரியாமல் “ஆமா, அதுக்கு என்ன?” என்றாள்.

“மலை ஏறுவோமா?” கிசுகிசுப்பாக வெளிவந்தது ஜிஷ்ணுவின் வார்த்தைகள்.

குப்பென சிவந்தவள், “அடி வாங்குவ. காலேஜ்ல உட்காந்துட்டு என்ன பேச்சு பேசுற? எக்ஸாம்லாம் முடியட்டும் அப்பறம் போலாம்” என மறுத்து விட்டு, கருமமே கண்ணாக படிக்க ஆரம்பிக்க, அவன் முறைத்தான்.

முதலில், வாரா வாரம் கன்னிமனூருக்கு படையெடுத்துக் கொண்டிருந்தவள், பின் படிக்கும் வேலை நிறைய இருந்ததில், மாதம் ஒரு முறையாக மாற்றி இருந்தாள்.

இப்போதோ இருவரும் தனியாக சந்தித்தே இரு மாதங்கள் கடந்திருக்க, அவனுக்கோ பைத்தியம் பிடிக்காத நிலை தான் அவளின் நெருக்கமின்றி. ஏனோ, இருவருமே கல்லூரி என்று வந்து விட்டால், காதல் பார்வைகளைக் கூட அறவே தவிர்த்து விடுவர். சில நேரம், குமரனுக்கே குழப்பம் வந்து விடும். ஆனால், கன்னிமனூர் சென்றதும், இருவரின் உலகமும் முற்றிலும் வேறு.

இப்போதோ தாக்குப் பிடிக்க இயலாமல், அவன் வாய் விட்டே கேட்டு விட, அவள் மறுத்ததில், “மவளே நீ வரல… நானே தூக்கிட்டு போய்டுவேன்” என காதோரம் அவளை மிரட்டி விட்டே எழுந்தான்.

மறுநாள், இதழ்களில் சிறு நகையை படர விட்டபடியே தான் கிளம்பினாள் வசுந்தரா. அவளுக்குமே, அவனின் உரசல் இன்றி நாட்கள் வெறுமையாக தான் கழிந்தது.

‘படிப்பு முடியட்டும்… முதல்ல உன்ன எங்கயாவது கடத்திட்டு போயிடுறேன்’ என தனக்குள் புன்னகைத்துக் கொண்டவள், தேர்வு என்ற பதற்றம் இன்றி, அவனுடன் ஊருக்கு செல்லும் கனவிலேயே கிளம்பினாள்.

தேர்வு தொடங்க ஐந்து நிமிடமே இருக்க, வகுப்பறை வாசலில் நின்று இரு ஆடவர்களையும் தான் தேடிக்கொண்டிருந்தாள். குமரன் அவசரமாக ஓடி வந்ததை கண்டதும் நிம்மதி ஆனவள், “ஏன்டா இவ்ளோ நேரம்?” என முறைத்து விட்டு, “ஜிஷு எங்க?” என்று வினவ,

“அவன் மினிஸ்டர் அவசரமா கூப்பிட்டாருன்னு போய்ட்டான் வசு. எக்ஸாம் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வந்துடுறேன்னு சொன்னான். இடைல பஸ் வேற பிரேக் டௌன். நீ வா அவன் வந்துடுவான்…” என வற்புறுத்தி உள்ளே அழைக்க, வசுந்தராவிற்கு லேசாக எரிச்சல் தோன்றியது.

பின், வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் தேர்வையும் எழுதத் தொடங்கியவளுக்கு ஒரு வார்த்தை கூட எழுத இயலவில்லை. விழிகள் வாசலிலேயே தவம் இருந்தது அவளவனுக்காக.

அவள் எழுதாமல் இருந்ததை கண்ட குமரன், “ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்” என அவளை அழைத்து, “நீ எழுது…” என்றான் சைகையில். ஆனால், நேரம் செல்ல செல்ல அவளுக்கு கோபம் தீயாக கனன்றது.

ஒன்றரை மணி நேரம் கடந்தும் கூட அவன் வராது போக, விறுவிறுவென ஏதோ எழுதி வைத்தவள், தாள்களை கொடுத்து விட்டு எழ, குமரனும் புரியாமல் எழப் போனான்.

கையை நீட்டி, அவனை அமர சொன்னவள், “எந்திரிச்சு வந்த… கொன்றுவேன்” என்ற ரீதியில் உறுத்து விழித்து விட்டு செல்ல, அவனுக்கோ ஐயோ என்றிருந்தது.

அடுத்து அவள் சென்றது கன்னிமனூருக்கு தான். அப்போது தான், வெளியில் சென்று வந்திருப்பான் போலும். வாசலில் இருந்த நீர் தொட்டியில் தண்ணீர் மோண்டு, முகம் கழுவிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு தர்மன்.

பார்வையில் அனலடிக்க அவன் பின் வந்து நின்ற வசுந்தராவை அப்போது தான் கவனித்தவன், “ஏய்… எக்ஸாம வச்சுட்டு நீ இங்க என்னடி பண்ற?” என அவன் திகைக்க, ஓங்கி அவன் கன்னத்திலேயே ஒரு அறை விட்டாள்.

அதில், உள்ளிருந்து அலமேலு அடித்து பிடித்து வெளியில் வந்து விழிக்க, ஜிஷ்ணு அவளை முறைத்து விட்டு, “ம்மா… உள்ள போங்க.” என்றான் அமைதியாக.

வசுந்தராவோ மீண்டும் அவன் கன்னத்தை பதம் பார்த்து, “எக்ஸாமை விட அப்படி என்னடா உனக்கு மினிஸ்டர் முக்கியமா போய்ட்டாரு. ஏன் இன்னைக்கு வரல?” எனக் கேட்டவள் காளியாக நின்றிருந்தாள்.

அவனோ எழுந்த பெரும் கோபத்தை அடக்கிவிட்டு, “ம்மா உள்ள போங்கன்னு சொன்னேன்…” என்றவனை பாவமாக பார்த்தபடி அலமேலு உள்ளே செல்ல,

சோலையம்மாவோ, “நல்லா வாங்கட்டும்… காலைலயே சொன்னேன். ‘பரிட்சையை வைச்சுட்டு காலேசுக்கு போ’ன்னு. கேட்டானா உன் மவன்… நீ தான் அடிச்சு வளக்கல. வர்றவளாவது அடிச்சு…” எனக் கூறும் போதே, ஜிஷ்ணு தீயாக முறைத்து உள்ளே பார்க்க, சோலையம்மா சட்டென பேச்சை நிறுத்தி, “அலமேலு… அந்த கீரைய கொண்டா உருவி தாரேன்…” என அப்படியே நழுவி விட்டார்.

வசுந்தராவோ நிதானத்திலேயே இல்லை. “சொல்லுடா ஏண்டா வரல. எவனை அடிக்க போன? ஹான்?” என அவன் சட்டையைப் பிடித்திருக்க, அதற்கு மேல் பொறுமை இழந்தவன், அவளின் கையைப் பிடித்து முறுக்கினான்.

“எனக்கு வேலை இருந்துச்சு போனேன். அதை உங்கிட்ட விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…” என்றவனின் முகம் ரௌத்திரத்தில் மின்ன, அவள் அவனிடம் இருந்து கையை விடுவிக்க போராடினாள்.

நேரம் செல்ல செல்ல பிடி இறுகியதே தவிர தளரவில்லை. “விடுடா. விடுடா…” என்று ஒற்றைக் கையால் அவனை படபடவென அடித்தவளின் மற்றொரு கையையும் பிடித்து லேசாக முறுக்கியவன், “என் விஷயத்துக்குள்ள தேவை இல்லாம தலையிடாத வக்கீலு.” என்றான் அதிகாரமாக.

பல்லைக்கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு, இரு கையிலும் வலி எழுந்தது. அது தன்னிச்சையாக அவளின் விழிகளில் கண்ணீரை உருப்பெற செய்ய, அதனை சிறிதும் வெளியில் காட்டாமல் திணக்கமாக நின்றாள்.

சில நொடிகளில் கரங்களுக்கு விடுதலை கொடுத்தவனிடம் இருந்து நகன்றவளுக்கு, இடது பக்க கரத்தில் கையே உடைந்தது போன்றதொரு வலி.

உதட்டைக்கடித்து கையைப் பிடித்துக்கொண்டவள், அவனை உணர்வற்று விழித்து, “இங்க பாரு… இப்பவும் சொல்றேன். நான் பழகுறது கருப்பு கோர்ட்டு போட்டு இருக்குறவன்கிட்ட தான். அடியாள்கிட்ட இல்ல. இந்த கருப்பு கோர்ட்டு உங்கிட்ட இருக்குற வரை தான், நானும் உன்கூட இருப்பேன். இத சேதாரப்படுத்தி உன் அரசியல்க்குள்ள நுழையணும்ன்னு நினைச்ச… அதுக்கு அப்பறம்… நான் இங்க இருக்க மாட்டேன்” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கடினமாக கூறினாள்.

அவன் அசைவற்று அவளை பார்த்திட, அதனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள்.

“ப்ச்…” எனத் தலையை அழுந்தக் கோதிய ஜிஷ்ணு, வேகமாக அவள் பின்னால் சென்று, “ஏய் நில்லுடி…” என அவள் கையைப் பிடிக்க, ஏற்கனவே வலியில் தோய்ந்திருக்க கை இன்னும் வலி எடுத்தது.

அதில் “ஸ்ஸ்ஸ்…” என முகத்தை சுருக்கியவள், “பேசாம போய்டு” என்றாள் எரிச்சலாக.

“வசு பேப்… நில்லேன். சாரி டி…” என்றவனுக்கு கோபத்தில் அவளைக் காயப்படுத்தி விட்டது ஏதோ போல் ஆகிவிட்டது.

“இப்ப போக போறியா இல்லையா?” ஒரு நொடி நின்று அவனை அழுத்தமாக முறைத்தவள், மேலும் நடக்க எத்தனிக்க,

ஜிஷ்ணு அவள் முன் சென்று நின்று, “சாரி பேப். நான் காலைல போகும் போது சீக்கிரம் வந்துடலாம்ன்னு நினைச்சு தான் போனேன். கட்சி ஆளுங்களுக்குள்ள ஒரு பிரச்சனை அதான்…” என அவன் கூறும் போதே, “உன் விளக்கம் எனக்கு அவசியமில்ல…” என்றாள் அவனைப் போன்றே.

“சரிஇஇஇ… கோபமா இருக்க… புரியுது. வா வீட்டுக்கு வந்து கைல ஒத்தடம் குடுத்துட்டு போ!” என்று ஜிஷ்ணு அழைக்க, “மூடிட்டு போடா முதல்ல” என்றவளை தூக்கி இருந்தவன்,

“சாரி பேப். ரொம்ப ரொம்ப சாரி. கை ரொம்ப வலிக்குதா?” என மென்மையாக கேட்டபடி, அவளின் துள்ளலைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் நுழைந்திருந்தான்.

அவளைக் கண்ட அலமேலு பதறி, “என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி தூக்கியாற?” எனக் கேட்க,

“சுடுதண்ணி வைங்கம்மா…” என்றவன், அவளை அறைக்குள் தூக்கிச் செல்ல, “டேய்… இறக்கி விடுடா. உன் அக்கறை ஒன்னும் எனக்கு தேவை இல்ல!” என்று கத்தியவளை, அங்கிருந்த கயிற்று கட்டிலில் இறக்கி விட்டவன், “பொறுடி!” என் அதட்டும் போதே, அலமேலு சுடுநீரைக் கொண்டு வந்து உள்ளே வைத்தார்.

“என்னய்யா ஆச்சு புள்ளைக்கு.” என அவர் கேட்க, “ஒன்னும் இல்லம்மா. நான் பாத்துக்குறேன்” என்றதில் குழம்பியவர்,

“உன் அப்பா வயல்ல தான் நிக்கிறாரு. நான் சாப்பாடு குடுத்துட்டு வந்து சாப்பாடு எடுத்து வைக்கவா?” எனக் கேட்க, “ம்ம்… நீங்க போங்க. நாங்க சாப்ட்டுக்குறோம்.” என அவரை அனுப்பி வைத்தவன், வாசலில் அமர்ந்து அவன் அறையையே முறைத்துக்கொண்டிருந்த சோலையம்மாவை கண்டுகொள்ளாமல் கதவை சாத்தினான்.

“ம்ம்க்கும்… என் புருஷன்லாம் கல்யாணம் ஆகி அஞ்சு நாள் கழிச்சு தான் என் மூஞ்சியவே பாத்தாரு. இப்ப இருக்குறதுக அப்படியா இருக்குதுக…” என சலித்துக் கொள்ள, “உன் மூஞ்ச பாக்க முடியாம தாத்தா பாக்காம இருந்துருப்பாரு கெழவி” என ஜிஷ்ணுவிடம் இருந்து பதில் வந்தது.

இவை எதையும் வசுந்தரா கருத்தில் நிறையவில்லை. மனமெங்கும் சினம் மட்டுமே மிஞ்சியது. கூடவே சிறிய ஏமாற்றமும் வலியும்.

“பேப்… கைய காட்டு.” என்றவன் அருகில் வர, அவனை தள்ளி விட்டவள், “பக்கத்துல வந்த கொன்றுவேன்…” என்றாள் கடுப்பாக.

மெலிதாய் புன்னகைத்து, “சரிடி. மலை இறங்கு… அதான் சாரி சொல்றேன்ல. ம்ம்?” என அவளை கட்டிக்கொள்ள வந்தவனை பளாரென அறைந்தாள், “தொடாத” என்று.

அதில் பெருமூச்சு விட்டவன், “சரி தொடல. கையை காட்டு ஒத்தடம் குடுக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக பிடித்து, சுடிதாரின் தோள்பட்டை பகுதியை விலக்கினான்.

அதனை தடுக்காதவளின் பார்வை மட்டும் அவன் மீது கனலாக படிய, அவனோ வேலையில் கண்ணாக இருந்தான்.

வெற்றுத் தோள்பட்டையை மெல்ல அமுக்கி விட்டவன், கை முழுதும் ஒத்தடம் கொடுத்து விட்டு, “இப்ப பரவாயில்லையாடி?” எனக் கேட்க, அதற்கு பதில் அளிக்காமல் உடையை சரி செய்தவள், “இந்த கையையும் உடைச்சுருக்க வேண்டியது தான?” எனப் பல்லைக்கடித்தாள்.

“உடைச்சுருப்பேன். நீ எக்ஸாம் எழுதணுமேன்ற ஒரே நல்ல எண்ணத்துல விட்டுட்டேன்” என்றவனின் இதழ்கள் மென்னகையைத் தாங்க, அவள் இறுகி தான் இருந்தாள்.

அவனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை. “அடுத்த தடவை விட்டுப் போன எக்ஸாமை எழுதிடுவேன் பேப்” என சமாதானம் செய்ய முயன்று, அவளுக்கு முத்தமிட வர, வெடுக்கென அவனை தள்ளி விட்டவள்,

“எனக்கு பிடிக்கல…!” என்று விட, ஒரு நொடி முகம் சுருங்கினான். ஆனால், அதன் பிறகு அவளை நெருங்கவில்லை.

“சரி வா… உன்ன ஊர்ல விட்டுட்டு வரேன்”அவன் இயல்பாக அழைக்க, “வந்த எனக்கு போக தெரியும்…” என்றவள் அவனைப் பாராமல் கிளம்பி விட்டாள்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிற்று அவள் அவனுடன் சகஜமாக பேச. அவளும் நேரடியாக கோபத்தைக் காட்டவில்லை. அவனும் காலில் விழுந்து சமாதானம் எல்லாம் செய்யவும் இல்லை. அந்த ஐந்து மாதங்களும், அவர்களுக்குள் சாதாரண கல்லூரி பற்றிய பேச்சை தவிர வேறு பேச்சுக்களும் இல்லை. மயக்கும் முத்தங்களும் இல்லை.

பொதுவாகவே அவனிடம் அனாவசிய கேள்விகளோ, இப்படி தான் இருக்க வேண்டும் என்ற அளவுகோள்களையோ விதிக்க மாட்டாள். அவனும் அப்படி தான். அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்றாலும், போதிய இடைவெளியும் இருந்தது. உரிமையை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள், அதை பிடுங்க நினைக்க மாட்டார்கள்.

அதே நேரம், அவர்களுக்குள் இருந்த நேச உறவை அழுது பிழிந்தோ, கொஞ்சியோ, அடக்குமுறையிலோ பகிர்ந்தது இல்லை. இயல்பாகவே உருவான உறவை இயல்புடனே கையாண்ட இருவருக்குள்ளும் மெல்லிய திரை விழுந்தது.

இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமான அந்த விடுபட்ட தேர்வை அவன் எழுதி தேர்ச்சியும் பெற்று விட்டான். அதில் ஒருவாறாக சமாதானம் ஆனவள், அலமேலுவை தான் திட்டித் தீர்ப்பாள்.

“இவன் இப்படி அடிதடின்னு சுத்துறானே. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டிங்களா அத்த…” என்று கேட்க,

“தோளுக்கு மேல வளந்த புள்ளய எப்படித்தா வையிறது. தம்பி எது செஞ்சாலும் காரணத்தோட தான் செய்யும்” என்று தன் மகனுக்கு கொடி பிடிக்க, “தம்பி தொம்பின்னுட்டு” என்று அவரை முறைத்து வைப்பாள்.

இந்நிலையில், ‘மூட் கோர்ட்’ எனப்படும், இறுதி வருட ப்ராஜெக்ட்டினுள் நுழைந்தவர்கள், அவர்களுக்கென கொடுக்கப்பட்ட வழக்குகளுக்கான வேலையில் மூழ்கினர்.

இதில் அவர்கள் எடுத்துக்கொண்ட வித்தியாசமான வழக்குகளை பற்றி ஆராய்ந்து, பேசி சிரித்து என அவர்களின் நாட்கள் இறுதி கட்ட பரீட்சைக்கும் வந்தது.

அப்போது தான் வசுந்தராவின் பிறந்தநாளும் வர, முந்தைய வருடம் அவளின் சித்தப்பாவின் இருப்பிடத்திற்கு சென்று விட்டவளை, இம்முறை குமரன் “நம்மளே கொண்டாடலாமா வசு” எனக் கேட்க, சரியென ஒப்புக்கொண்டாள்.

அலமேலு தான், வசுந்தராவின் பிறந்த நாளை கேள்விப்பட்டதும், அவளுக்காக உடை வாங்கி ஜிஷ்ணுவிடமே கொடுத்து விட்டார்.

அவனும் அலட்டாமல் வாங்கிக்கொண்டு வசுந்தராவிடம் நீட்ட, அவள் விழி விரித்து “அத்தை குடுத்து விட்டாங்களா ஜிஷு?” என வியப்புடன் கேட்டு விட்டு, வாங்கி பார்க்க, உள்ளே இளம்பச்சையும் நீலமும் கலந்த பாவடை தாவணி இருந்தது.

அதை பார்த்ததும் சத்தமாக சிரித்து விட்டவள், “அத்தைக்கு என்ன நான் பதினாறு வயசு டீன் ஏஜ் பொண்ணுன்னு நினைப்பா…?” எனக் கேட்க, “பின்ன, அறுபது வயசு கெழவியா நீ…” என்றான் முறைப்பாக.

“இல்லடா… இருந்தாலும் இப்போ போய் பாவாடை தாவணி எல்லாம் போட்டா காமெடியா இருக்காது.” என தலையை சொறிந்தவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த ஜிஷ்ணு, “பாக்குறவங்களுக்கு கொஞ்சம் கொடுமையா தான் இருக்கும்… பட் வேற வழி” என சலித்ததில், அவனை போலியாய் முறைத்து வைத்தாள்.

ஆனாலும், அவளுக்கு அந்த உடை பிடித்தே இருந்தது. சற்றே கூச்சமாக இருந்தாலும் பிறந்த நாள் அன்று அதையே உடுத்திக் கொண்டவளை, ராஜசேகரும், மரகதமும் ஆச்சர்யமாக பார்க்க, அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

“ஏண்டி, நான் எத்தனை தடவ பாவாடை தாவணி கட்ட சொல்லிருக்கேன். அப்பல்லாம் கட்டி இருக்கியா?” என மரகதம் இடுப்பில் கை வைத்து கேட்க, அசடு வழிந்தவள் மதியம் வரை வீட்டிலேயே பொழுதை கடத்தி விட்டு, மதியத்திற்கு மேல் கன்னிமனூருக்கு கிளம்பினாள்.

ஜிஷ்ணுவே வந்து அழைத்துச் செல்வதாகக் கூற, வசுந்தரா மறுத்து விட்டாள். அதன் பிறகு அவனும் வற்புறுத்தவில்லை.

“அத்தை… எப்படி இருக்கு?” என்று பாவாடையை விரித்து காட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு நெட்டி முறித்த அலமேலு, “என் மருவளுக்கு எது போட்டாலும் அழகா தான்தா இருக்கும்…” என்றதில், இன்னுமாக நெளிந்தவள், விழிகளால் ஜிஷ்ணுவை தான் துழாவினாள்.

அவள் விழிகளின் அலைப்புறுதல் புரிந்தது போல, சோலையம்மா “என் பேரன் பின்னால தான் இலை எடுத்துட்டு நிக்கிறான்” என்றிட, “குட் கெழவி” என அவர் கன்னத்தை கிள்ளி விட்டு, கொலுசோசை ஜொலிக்க, வீட்டின் பின் புறம் சென்றாள்.

உள்பனியனோடு, படிக்கட்டுக்கள் கொண்ட புஜங்கள் அவளை ஈர்க்க, எப்போதும் போல அதனை ரசித்தவள், தீவிரமாக இலையை நறுக்கிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்று நின்று குரலை கணைத்தாள்.

எதேச்சையாக திரும்பிய ஜிஷ்ணுவின் விழிகள் சற்றே விரிவடைய, மறு நொடியே இயல்பாகி “ஏன்டி இவளோ நேரம்” என்று முறைத்து விட்டு, “வா சாப்டலாம்…” என்று அழைக்க, அவனிடம் சிறு தாபப் பார்வையை எதிர்பார்த்த பாவையோ சற்று வாடி, “எனக்கு வேணாம். இப்ப தான் சாப்ட்டு வந்தேன்” என்றாள்.

“ஓ! சரி…” என்றவன், இலை பறிப்பதில் கவனத்தை செலுத்தி, உண்டும் முடித்தான். இதற்கிடையில், “ஒரு வாயாவது சாப்டேன்த்தா…” என்ற அலமேலுவிற்கு மறுப்பாக தலையசைத்தவள், சற்றே கடுப்பாக அமர்ந்திருக்க, 

பின் ஏதோ நினைவு வந்து, “எப்படி அத்தை ப்ளௌஸ் அளவுலாம் கரெக்ட் – ஆ தைக்க சொன்னீங்க. பக்காவா இருக்கு” என ஆச்சர்யமாய் கேட்டவளை புரியாமல் பார்த்த அலமேலு,

“என்னத்தா சொல்ற… தம்பிகிட்ட உன் அளவு ஜாக்கெட் கேட்க சொன்னதுக்கு, நீயே போன்ல அளவு அனுப்பிட்டன்னு தம்பியே தையக்காரம்மாட்ட காட்டுச்சே.” என்று விழிக்க அவளோ அதற்கு மேல் விழித்தாள்.

“என் ப்ளௌஸ் அளவு இவனுக்கு எப்படி தெரியும்?” என்ற குழப்பம், மேலோங்கினலும், ஒரு வித தவிப்பும், வெட்கமும், குறுகுறுப்பும் மேனி எங்கும் ஓடியது அவளுக்கு.

“ஆ… ஆமா அத்த… நான் தான் சொன்னேன். ஆனா… சொன்னாலும் எப்படி இவளோ பெர்ஃபக்ட்டா தைச்சு இருக்காங்கன்னு கேட்டேன்” என சமாளித்தவளைக் கண்டு நக்கல் புன்னகை பூத்தான் ஜிஷ்ணு.

அத்தியாயம் 11

வசுந்தரா அவனை முறைத்து வைக்க, அதனை கண்டுகொள்ளாதவன், “வா… வயலு வரை போயிட்டு வரலாம்.” என்று அழைத்ததில், முதலில் முறுக்கிக் கொண்டவள், பிறகு தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக அவனுடன் சென்றாள்.

இத்தனை நாட்களும் இவர்களுக்கிடையில் பேச்சு வளர்ப்பதற்காக குமரன் இருந்தான். இன்றோ அவனும் அருகில் இல்லாது போக, “குமரா எங்க?” எனக் கேட்டாள்.

“நான் தான் ஒரு வேலையா வெள்ளப்பாளையம் அனுப்பிருக்கேன்” என்றவன், வயலுக்கு அருகில் இருக்கும் மோட்டார் அறையில் சென்று ஏதோ வேலை பார்த்த்திட அவனை வழி மறித்தாள்.

“என் பிளவுஸ் அளவு உனக்கு எப்படிடா தெரியும்?” புருவம் உயர்த்தி அவள் எகத்தாளமாக கேட்க, அவனோ அசராமல், “ரெண்டு வருஷமா எத்தனை தடவ உன்ன கட்டிப்பிடிச்சு இருக்கேன்…” என சிறு நகையுடன் கூற வந்தவன், மேலும் என்ன சொல்லி இருப்பானோ, சட்டென அவன் வாயைப் பொத்தினாள் வசுந்தரா.

விழிகள் அவனை சாடியபடி இருக்க, ஜிஷ்ணுவோ பொங்கிய சிரிப்பை அடக்கியபடி, “கண்ணாலேயே அளந்துடுவேன் பேப்” என்று கண் சிமிட்டினான்.

அதில் அவளுக்கும் புன்னகை எழ, “கண்ணை நோண்டுனா தான் நீ சரிப்படுவ…” எனப் போலியாய் எச்சரித்தாள்.

அவன் தோளைக் குலுக்கி, “கண்ணில்லைன்னா என்ன… அதான் கை இருக்கே…!” என்றபடி, அவளை தன்னருகே இழுத்தவன், அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

உள்ளுக்குள் தாபம் தீயாக பரவியது அவனுக்கு. ஆனாலும் முத்தம் கொடுக்காமல் விலகியவன், திரும்பி நடக்க எத்தனிக்க, வசுந்தரா அவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.

இழுத்த கணத்தில் அவனது கன்னத்தில் அழுத்த முத்தமிட, அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “இப்ப மட்டும் பிடிச்சு இருக்கோ?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

“கொஞ்சமா…” என்றவளின் சுருங்கிய மூக்கைப் பிடித்து ஆட்டியவன், இப்போது முற்றலும் தன்னை இழந்து அவசரத்துடன் அவள் அதரங்களை நாடினான்.

என்னுள் தோன்றும் மின்னல் யாவும்…
உந்தன் சின்னம் என்று ஆன பின்பும்…
ஏனிந்த விலகளோ…?

பல நாட்களின் பிரிவை பார்த்திருந்த முத்தங்கள் நிறைவை அடையாது போக, பெண்மையின் மென்மை அறியாத கரங்கள் எல்லையை உணராது போக, பாவையின் தாவணி மறைப்பில் வெளிப்பட்ட இடையை மீட்டியதோடு, மேலும் அடங்க மறுத்தது. ஆடவனும் தான்.

“ஜிஷு…” கிணற்றுக்கடியில் இருந்து அவனவள் அழைப்பது போலிருக்க, “பேப்… இன்னைக்கு ரொம்ப ஹாட்டா இருக்க” என்றவனின் கிசுகிசுப்பான குரல் அவளை கிறங்க வைக்க, அவன் கரங்கள் செய்த மாயத்தில் தாவணியும் நழுவியது.

படக்கென அதனை பிடித்துக்கொண்டவள், ஜிஷ்ணுவை தள்ளி விட்டு, “கொன்றுவேன் ராஸ்கல்…!” என்றாள் சிவந்திருந்த அதரங்களை சுளித்து.

லேசாக குருதி வெளிப்பட்ட இதழ்கள் அவனை மேலும் பித்து பிடிக்க வைக்க, வேகமாக அவளை நெருங்கியவனை தடுத்தவள், “டேய்… லிப்ஸ் எரியுதுடா. உனக்கு சாஃப்ட்டாவே கிஸ் பண்ண தெரியாதா? எப்ப பார்த்தாலும் கடிச்சு வைக்கிற?” என முறைக்க, அதில் சிரித்து விட்டவன்,

“எரியணும்ன்னு தான் பேப் கடிக்கிறேன். அப்ப தான சாப்பிடும் போது காரம் பட்டு லிப்ஸ் எரியிறப்போ என்னையவே நினைச்சுப்ப. இந்த காயத்தை பாக்கும் போதெல்லாம் நான் கிஸ் பண்ணது தான ஞாபகம் வரும்” என்று குறும்பு மின்ன கூறியதில்,

“ஓ… இப்படி ஒண்ணு இருக்கா?” என அவன் தோள் மீது கரங்களை மாலையாக்கி குறுஞ்சிரிப்புடன் கேட்ட வசுந்தரா, இப்போது அவன் பணியை அவள் எடுத்துக்கொண்டாள்.

ஆடவனின் முரட்டு இதழ்கள் அவளின் பட்டு இதழ்களுக்குள் அடக்கமாக, பாரபட்சம் இன்றியே அவனை காயமாக்கினாள்.

பட்டு இதழ்களை சுவைக்கும் போது…
பட்டுப் போகுதடி என் இதழ்களும்…!!!

நேரம் கடந்தும் இவர்களின் கொஞ்சல்களும், மிஞ்சல்களும் குறையாது போக, அதனை தடுக்கும் விதமாக ஜிஷ்ணுவின் அலைபேசி அழைத்தது.

அமைச்சர் நீலகண்டன் தான் அழைத்திருந்தார். அதில் அவளிடம் இருந்து விலகியவன், “வந்துட்டேன் தலைவரே…” என்று விட்டு நிமிர, வசுந்தரா அடக்கப்பட்ட சினத்துடன் நின்றிருந்தாள்.

“இன்னும் நாலு நாள்ல ஃபைனல் எக்ஸாம்ஸ் இருக்கு ஜிஷு. இந்த நேரத்துல பிரச்சனையை இழுத்துக்காத” என்றாள் பல்லைக்கடித்து.

“அரசியல்வாதி ஆகணும்ன்னா பிரச்சனையை பால்கோவா மாதிரி ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் பேப்…!” என்றவனின் விழிகள் அழுத்தம் பெற,

“இங்க பாரு ஜிஷு. நீ அரசியல்வாதி ஆகு… என்ன வேணாலும் பண்ணு. ஐ டோன்ட் கேர். ஆனா, எனக்கு அந்த மினிஸ்டரை சுத்தமா பிடிக்கல. அவனை பார்த்தா நல்ல எண்ணம் சுத்தமாவே வரல. அவன் கூட சேர்ந்தா நீயும் ரொம்ப அடமெண்டா இருக்க…” என கரித்து கொட்டியவள், “ஏற்கனவே அப்படி தான் இருக்க…” என்று முணுமுணுத்தாள்.

இன்றோ அவனுக்கு கோபமெல்லாம் வரவில்லை. அவனே, மோகம் தலைக்கேறி அதனை வெளிப்படுத்த இயலாமல் தன்னை அடக்கிக்கொண்டிருக்க, அவள் பேசியதெல்லாம் அவன் மனதில் பதியவில்லை.

“நீ மட்டும் அடமெண்ட் இல்லையாடி. அஞ்சு மாசமா உன் வாசத்தை கூட காட்டாம என்ன பைத்தியக்காரனாக்கிட்ட…” என்றவன் அவள் கூந்தலில் மூக்கை நுழைத்து வாசம் பிடிக்க, அவனை தள்ளி விட்டவள்,

“ப்ச்… இப்ப என்ன நீ கிளம்ப போற அதான. கிளம்பி போ! நான் வீட்டுக்கு போறேன் இப்பவே அஞ்சு மணி ஆச்சு…” என வெடுக்கென கத்தியவள், நகரப் போக, அடுத்த நொடி அவனின் மென்மையான அணைப்பில் சிக்குண்டு இருந்தாள்.

“இன்னைக்கு பொறந்த நாள் பாப்பாவை விட்டுட்டு நான் எங்கயும் போறதா இல்ல…” பெண்ணவளின் செவி மடல்கள் கூசும் அளவு ஹஸ்கி குரலில் கிசுகிசுத்து, அதன் அளவை அளந்து, அணைப்பை இன்னும் மென்மையாக்கி, பாவையின் கேசத்தை மெல்ல கோதி விட்டான்.

இன்று அவனது செயல்கள் யாவும் அவளுக்கு புதிதாய் தோன்ற, தனக்காக அவன் செல்லவில்லை என்ற நினைவே அவளை மேலும் பரவசமாக்க, அதனை வெளிப்படையாய் காட்ட விரும்பாதவள், கூச்சத்தில் நெளிந்து விலகி, “கட்டிப்பிடிக்காத” என்றாள் அவனைப் பாராமல்.

முதலில் புரியாமல் விழித்தவன், “ஏன் பேப்?” எனக் கேட்க, “ப்ச்… கட்டிப்பிடிக்காதன்னா பிடிக்காத. அவ்ளோ தான்.” என வீம்பாக கூறியவள், அவனின் குழம்பிய முகம் கண்டு, அவன் முகம் முழுதும் முரட்டுத்தனமாக முத்தமிட்டாள்.

அதில் மற்றவை மறந்தவன், அதே முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தி, சுவற்றோரம் சாய்ந்து தரையில் அமர்ந்தான்.  

அமர்ந்த நிலையிலேயே, அவளை இழுத்து மடியில் அமர வைத்தவன், எப்போது அவள் மீது பரவினான் என அவனும் அறியவில்லை. அவளும் அறியவில்லை.

மோக முத்தங்கள் வலுப்பெற, கரங்கள் தயக்கமின்றி பெண்ணின் தேகத்தில் அலைபாய, முதலில் கிறங்கி, முனகத் தொடங்கியவள் பின் நிலை உணர்ந்து “ஜிஷு… நோ!” என்றாள் பலவீனமாக.

பலவீனமாக இருந்தாலும், அதில் இருந்த அழுத்தத்தை உணர்ந்தவன், சட்டென நகர்ந்து அவளுக்கு பக்கவாட்டில் படுத்துக்கொண்டான்.

இருவரும் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு, தன்னை நிதானப்படுத்த முயன்றும், அது கடினமாக இருக்க, அவன் புறம் திரும்பி அவனது நெஞ்சில் தலையை வைத்து படுத்துக்கொண்டவள், மனதை மாற்றும் விதமாக “ஜிஷு…” என்றழைத்தாள் ரகசியமாக.

தாபத்தீ மூட்டும் பாவையே, தன் நெஞ்சில் தஞ்சமாகும் போது அத்தாபம் மெல்ல மெல்ல குறைவதை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டவன், “என்ன பேப்?” என்றான் கூந்தலை வருடி விட்டு.

அதில் தலையை வெடுக்கென தூக்கி அவனை முறைத்தவள், தலையில் வைத்திருந்த அவன் கரத்தை எடுத்து விட, அவனுக்கு அப்போதும் அவள் செயல்கள் புரியவில்லை.

“என்ன ஆச்சுடி?” எனக் கேட்க, “நத்திங். நீ முரட்டுத்தனமா நடந்தே பழகிடுச்சா. திடீர்னு சாஃப்ட்டா நடந்துக்கிட்டா வித்தியாசமா இருக்கு…” என்று வாய்க்கு வந்ததை உளறியவள், “நான் இதை பத்தி பேச வரல…” எனப் பேச்சை திசை திருப்பினாள்.

அதற்குமேல் அதனைப் பற்றி ஆழமாக விசாரிக்காமல் போனவன், அமைதி காக்க, கரங்களோ மென்மையை விடுத்து, கரடுமுரடாக அவளது கூந்தலை பற்றிப் பிடித்திருந்தது.

அதனை அவளும் கண்டுகொண்டது போல தெரியவில்லை. அவனது சட்டை பட்டனை வருடியபடியே,

“ஜிஷு… நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கனவு கண்டேன்…” என நிறுத்தியவள், மெல்ல நிமிர்ந்து அவன் கன்னத்தில் முளைத்திருந்த லேசான தாடியை பிடித்து இழுத்து,

“நம்ம ஏதோ ஒரு பெரிய பொருட்காட்சில இருக்கோம். அப்போ அங்க ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி ஒரு ராட்டினம் இருக்கு. அதுல உன்ன போகாதன்னு நான் தடுக்குறேன். ஆனா, நீ என் பேச்சை கேட்காம என் கையை விட்டுட்டு போய்டுற. அதுக்கு அப்பறம் என்னை தேடி நீ வரவே இல்ல… உன்ன காணோம்ன்னு நான் எல்லா இடத்துலயும் தேடுறேன். ஆனா நீ என் கண்ணு முன்னாடி வரவேயில்லை” எனக் கூறிக்கொண்டே வந்தவள் அதனை சாதாரணமாக தான் கூற விழைந்தாள். ஆனால், அது ஏக்கத்துடன் வெளிவந்திருந்தது.

அவள் கூற்றில் இதழ்கடையோரம் புன்னகை பூக்க, “ஒருவேளை ரெண்டு பேருக்கும் பிரேக் அப் ஆகி இருக்குமோ. நான் கனவுல கூட க்ரேட் எஸ்கேப் ஆகிட்டேன் பாரு…” என்றான் அவளின் மனநிலை புரியாமல்.

ஏனோ அக்கனவை பற்றிக் கூறும் போதே, அவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணில் நீர் தேங்கி இருக்க, இப்போதோ சட்டென கண்ணை சிமிட்டி தன்னை மீட்டுக்கொண்டவள், அவனை முறைத்து, “அப்படி பிரேக் அப் ஆனா கூட எனக்கு எந்த லாஸும் இல்ல. உனக்கு தான்…” என்றாள் தெனாவெட்டாக.

“ஏன்… எனக்கு என்ன லாஸ்?” ஜிஷ்ணு அமர்த்தலாக வினவ,

அவளோ அவன் முகத்தருகில் நெருங்கி, முறுக்கி இருந்த அவனது மீசையை மேலும் முறுக்கிவிட்டு, “ஏன்னா, நான் கிஸ் பண்ணும் போது வர்ற கிக், வேற எவகிட்டயும் கிடைக்காது…” என்றாள் தன்னை மறைத்துக்கொண்டு.

அதில் விழி உயர்த்தியவன், பதில் கூறாமல் அவளையே ஆராய, “வேணும்ன்னா டெஸ்ட் பண்ணி பாரு” என்றாள் குறும்பாக.

ஜிஷ்ணு தான், “ஏண்டி, எவளுக்காவது கிஸ் குடுத்து அவள் என்னை துரத்தி துரத்தி அடிக்கவா?” என்று முறைப்பாக கேட்க, அவள் ‘கிளுக்’ என சிரித்து விட்டதில், அவனும் புன்னகைத்தான்.

அதன் பிறகு, இதை பற்றி இருவருமே பேசிக்கொள்ளவில்லை. சிறிது நேரம் அந்த மோன நிலையை ரசித்தவர்கள், இருட்டத் தொடங்கிய பிறகே எழுந்தனர்.

வசுந்தரா, “அய்யயோ… ரொம்ப லேட் ஆகிடுச்சு ஜிஷு!” என்று மணியைப் பார்க்க அது 6.30 எனக் காட்டியது.

“நான் பைக்ல விடுறேன்டி” என்றவன், கலைந்திருந்த அவள் தாவணியை சரி செய்து, தன்னால் பிசிறி இருந்த கூந்தலையும் கையாலேயே சீவி விட்டான். கூடவே சில முத்தங்களும்…

அவனையே ரசித்திருந்தவள், காற்றியிலேயே முத்தத்தை பறக்க விட்டு, “கிளம்பலாம்டா டைம் ஆச்சு.” என்றாள் வேகமாக.

அப்போதும் குமரன் இன்னும் வராதிருக்க, “இந்த குமரா தான இன்னைக்கு என்ன வரச்சொன்னான். ஒரு விஷ் கூட பண்ணாம போய்ட்டான் பாரேன்” என்று அவனைத் திட்ட, ஜிஷ்ணு மர்மமாக புன்னகைத்துக்கொண்டான்.

பின், இருவரும் வண்டியில் பயணம் செய்ய, அந்த குளிர் காற்று இருவரையும் மயங்க வைத்தது.

அதிலும், ஜிஷ்ணுவை கட்டிப் பிடித்தபடி வந்த வசுந்தரா, அவனது பின்னங்கழுத்தில் அவ்வப்பொழுது சின்னம் வைக்க, “ஏய் சும்மா இருடி” என்று அதட்டினான்.

ஆனால், அதனைக் கேளாமல் மேலும் அவள் அவனை சோதித்திட, சட்டென வண்டியை நிறுத்தியவன், திரும்பி இதழ்களை அழுத்திப் பிடித்து, “ஏண்டி மனுஷனை சூடேத்துற?” என்றான் கடுப்பாக.

“நீ ஏன் ஹாண்ட்ஸம்மா இருக்க? அதான், முத்தம் குடுத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு…” என அவள் சிலுப்ப, ஆணுக்கும் லேசான வெட்கம் எழ, பின்னந்தலையை அழகாய் கோதிக் கொண்டவன், “என் கியூட் பேப்டி நீ.” என்று சில பல முத்தங்களை வாரி வழங்கி விட்டே, மீண்டும் வண்டியை கிளப்பினான்.

ஆனாலும் இடை இடையே, சில சில்மிஷங்கள் நடைபெற, மனமின்றியே அவளது வீட்டின் பின் புறம் வண்டியை நிறுத்தினான்.

அந்த நேரத்தில் வீட்டினர் பின் பக்கம் வரமாட்டார்கள் என உறுதியாய் தெரியும் இருவருக்கும். வண்டியில் இருந்து இறங்கியவளுக்கு, வீட்டினுள் செல்ல விருப்பமே இல்லை. ஏதோ தடுத்தது.

“சரி… காலேஜ்ல பாப்போம். ஒழுங்கா படிச்சுட்டு வா. அந்த கும்பகர்ணனையும் படிக்க வை சரியா?” என ஜிஷ்ணுவிற்கு உத்தரவிட்டவள், சுற்றி முற்றி பார்த்து விட்டு, அவன் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு நகரப் போக, அவனோ அவள் கையைப் பற்றி இழுத்து, இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

சில நொடிகளில் திமிறியவள், “டேய்… என்ன பண்ற? யாராவது பார்த்துற போறாங்க” என விழிகளால் அவள் வீட்டை வேகமாக ஆராய்ந்து விட்டு, “ஒழுங்கா கிளம்பு” என்றாள் அதட்டி.

“பேப்… இன்னும் ஒன்னு மட்டும் குடுத்துட்டு போறேன்” என அனுமதி கேட்டவன், அவள் பதில் கூறும் முன்னே, மொத்த அவசரத்தையும் ஆசையையும் கூட்டி, இதழ்களை வதைக்க, அப்போதும் இருவரும் உணரவில்லை. அதுவே அவர்களின் இறுதி முத்தமென.

நீண்ட அந்த முத்தத்தை முடிக்க, அவனுக்கு சுத்தமாக மனதில்லை. அவளுக்கும் தான். ஆனாலும், “ஜிஷு போதும் விடு” என விலகியவள், “கிளம்புடா போதும்… இனிமே நீ என்னை பார்க்கவே மாட்டியா என்ன?” என பொய்யாக முறைத்தவள், திரும்பி நடக்க எண்ண, இப்போதும் அவன் அழைத்தான் “வசு பேப்!” என்று.

“ப்ச்… என்னடா…?” என்று இடுப்பில் கை வைத்து இப்போது அவள் உண்மையாகவே முறைக்க, அவளது பாவனைகளை ரசித்தவன், வண்டி பௌச்சில் இருந்து ஒரு பரிசு பொருளை எடுத்து நீட்டினான்.

அதில் அவள் விழிகள் விரிய, “பாருடா… கிஃப்ட் எல்லாம் குடுக்க தெரியுமா உனக்கு?” என நக்கலாக வியந்தவள், அது ஏதோ ஒரு அட்டை போல இருக்க, “என்னடா, வெறும் அட்டையை கிப்ட் ராஃப்ட் பண்ணி குடுத்துட்டியா? கஞ்சம்…” என கேலி செய்ய, அவளை முறைத்து வைத்தவன், “வீட்டுக்கு போய் பிரிச்சு பார்த்துட்டு கால் பண்ணுடி…” என்று விட்டு கிளம்பினான்.

சில நொடிகள் அவன் சென்ற திசையையே பார்த்தவளுக்கு, குறுகுறுவென இருக்க, வேகமாக வீட்டினுள் சென்று அறைக்குள் புகுந்தாள். ரிப்பன் கட்டப்பட்டு இருந்த அந்த பரிசுப் பொருளை பிரிக்கும் போதே, அவளின் சித்தப்பா போன் செய்ததில், அவரிடம் பேசியே அரை மணி நேரத்திற்கு மேல் கழிந்தது.

அவளால், அந்த பரிசுப்பொருளில் இருந்து கண்ணைப் பிரிக்கவே இயலவில்லை. அதற்கு மேல் பொறுமை இழந்து, தானாக போனை வைத்து விட்டவள், ஆர்வமாக அதனைப் பிரித்து திகைத்து விட்டாள்.

“வசுந்தரா பி.ஏ. பி. எல்(வக்கீலு) வெட்ஸ் ஜிஷ்ணு தர்மன் எம். எல். ஏ (அரசியல்வாதி அடியாளு)” எனப் பொறிக்கப்பட்ட கல்யாண பத்திரிக்கை இருக்க, அதன் முகப்பில், ஒருமுறை அவள் அவனுக்கு கன்னத்தில் முத்தமிடும் போது, ஜிஷ்ணு விளையாட்டாக அதனை செல்ஃபி எடுத்து வைத்திருக்க, அப்புகைப்படத்தையும் அங்கு பொறித்திருந்தான்.

மேலும், கல்யாண தேதி இருக்கும் இடத்தில், கேள்விக்குறி (?) இருக்க, அதற்கு கீழேயே “ஓடிப்போலாமா?” என்ற கேள்வி இருக்க, அவளுக்கோ கால்கள் தரையில் நிற்கவே இல்லை.

‘ஓடிப்போறவன் எதுக்குடா கல்யாண பத்திரிக்கை எல்லாம் பிரிண்ட் பண்ணிருக்க?’ என கிண்டலாக நினைத்தாலும், இதழ்கள் சிரித்தபடியே இருந்தது.

வெகு நேரம் அந்த பத்திரிக்கையை வருடினாள். அவனாக எண்ணி முத்தமிட்டாள். அப்போது, அவன் செய்த காயத்தில் இதழ்கள் சுருக்கென எரிந்தாலும், வெட்கம் அத்து மீறி சூழ்ந்து தொலைத்தது அவளுக்கு.

“லூசாடா நீ. இதை கன்னிமனூர்ல இருக்கும் போதே குடுத்து இருக்கலாம்ல. அப்படியே கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணிருப்பேன்…” என்றவளுக்கு குதூகலமாக இருந்தது.

அந்த முத்தங்கள் இருவரையும் வேறு ஒரு பாதைக்கு அழைத்து சென்றதை உணர்ந்தவள், கன்னம் சிவந்து, “நீ குடுக்காதது கூட நல்லது தான். இதை அப்பவே பார்த்திருந்தா நான் நோ கூட சொல்லிருப்பேனோ மாட்டேனோ. கள்ளன்டா நீ.” என அந்த பத்திரிக்கையை பார்த்தே கொஞ்சிக் கொண்டிருந்தவளின் அழகான தருணத்தை மொத்தமாக குழைத்தது, வாசலில் கேட்ட அலறல் சத்தம்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
93
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்