1,852 views

கன்னங்கள் கதகதவென எரிந்தது சஹஸ்ராவிற்கு. கூடவே, தீரன் அடித்த அடியில் மயக்கமே வரும் போல் இருக்க, பால்கனி கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

தீரனோ அவளை கவனிக்கவே இல்லை.
அவள் கூறிய ஒற்றை சொல் உள்ளுக்குள் கடும் சீறலை வரவழைக்க, ‘விலை பேசி இருக்கேனாம்… விலை… என்ன வார்த்தை சொல்லிட்டா. அவளை நான் அப்படியா நினைச்சு இருக்கேன். எவனோ சொல்றான்னு என்னை இவளோ கீழ்த்தரமா நினைச்சுட்டாளே’ என்ற ஆதங்கம் அவனுக்கு ஆறவே இல்லை.

அவன் கோபம் அவளை வெகுவாய் பாதிக்க, மெல்ல விசும்பியவள், “உங்களுக்கு ராவ் யாருன்னு தெரியுமா தெரியாதா?” என்றாள் மீண்டும். இம்முறை குரல் கம்மியது.

அவளை அழுத்தத்துடன் ஏறிட்டவன், “தெரியாது. அவன் யாரு, உன் எக்ஸ் பாய் ஃப்ரெண்டா” என கேலியாய் எரிந்து விழுந்தவன், மேலும் பேச விருப்பமின்றி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

முகத்திலும் கண்களிலும் அத்தனை சோர்வு. தலையைப் பிடித்து அமர்ந்திருந்தவனின் கோலமே அவள் மனதைப் பிசைய, இருந்தும் ராவ் கூறிய விஷயத்தை அத்தனை எளிதாக கடந்து வர முடியவில்லை.

இவ்வளவு தான் உன் நம்பிக்கையா என மனசாட்சி ஏளனம் செய்தாலும், நிதானமிழந்து அவனிடம் கேட்டு விட்டாள்.

ஆனால், அதற்கு எதிர்வினை இத்தனை பலமாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க, இருந்தும் தீரன் தன் மீது காட்டிய இத்தனை சினத்தின் அதிர்வில் இருந்து இன்னும் மீறாதவள் சிலையாக நின்றிருந்தாள்.

கதவு மேலும் தட்டப்பட்டதில், “ப்ச்… ஏய் கதவ தட்டுறது கேட்கல. காது செவுடா. போய் திற.” என தீரன் கடுப்படிக்க, அவனுக்கும் பொறுமை முற்றிலும் இல்லை.

அவன் திட்டியதில் மேலும் அழுகை பொத்துக் கொண்டு வந்தாலும், அது சவிதாவாக தான் இருக்கும் என்று உணர்ந்தவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு, கதவைத் திறந்தாள்.

அங்கு சவிதா கலவரத்துடன் நிற்க, “என்ன சவி” என்றாள் அவளைக் காண சங்கடப்பட்டு.

அழுது வீங்கிய முகம் தான் அவளை அப்பட்டமாக காட்டிக் கொடுத்து விடுமே.

“அக்கா…” சவிதாவின் குரல் பயத்துடன் வெளிவந்த பிறகே அவள் முகம் பார்த்த சஹஸ்ரா, “என்ன ஆச்சுடா. ஏன் ஒரு மாதிரி இருக்க” எனக் கேட்க,

“வயிறு வலிக்குதுக்கா.” என்றாள் உதடு பிதுக்கி.

ஒரு நொடி குழம்பியவள், பின் சவிதாவின் அறைக்கு சென்று மீண்டும் விசாரித்த பின்னே தெரிந்தது அவள் வயது வந்து விட்டாள் என.

மகிழ்ச்சியுடன் தங்கையை கட்டிக் கொண்டவள், அவளுக்கு அறிவுரைகளையும் தைரியத்தையும் கூறிட, அவளோ மிரண்டு தலையாட்டினாள்.

சஹஸ்ராவிற்குமே மேலும் என்ன செய்வதென்று தெரியவில்லை தான். அதனால் சுலோச்சனாவிற்கே போன் செய்திட, அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.

லேசாய் சலித்தவள், தங்கையை குளிப்பாட்டி வேண்டியதை செய்தாள்.

பின், “உனக்கு சாப்ட ஏதாவது எடுத்துட்டு வரேன் சவி. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்றிட,

“அக்கா என் கூடவே இருக்கா…” என்றவளின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

“நான் உன் கூடவே தான் இருக்கேன்டா.” என பரிவுடன் தலையை கோதி விட்டவள், அவசரமாக சமையலறைக்குள் புகுந்தாள்.

வெகுநேரம் கடந்தும் தீரன் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தான். பிறகே, கோபத்தில் தன்னவளை காயப்படுத்தியதை எண்ணி வருந்தியவனுக்கு, தன்னை நோக்கி அப்படி ஒரு வார்த்தைக் கூற காரணம் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.

சற்று கோபம் இறங்கிய பிறகே, சவிதா தான் கதவை தட்டி இருப்பாள் என்று அறிந்தவன், என்னவென்று பார்க்க கீழே சென்றான்.

என்னதான் சவிதாவிடம் உரிமையாக பழகினாலும், அவள் இருக்கும் அறைப் பக்கம் கூட சென்றதில்லை அவன். அதனால், இப்போதும் அடுக்களையில் சத்தம் கேட்டதும் அங்கு சென்று பார்க்க, அங்கு அவனின் மனையாள் தான், சிவந்து கைத்தடம் பதிந்து எரிந்து கொண்டிருந்த கன்னத்தை தடவியபடி ஏதோ சமைத்துக் கொண்டிருந்தாள்.

அங்கு அனைத்து வேலைக்கும் ஆட்கள் இருக்க, அப்போது தான் சமையல் வேலை முடிந்து வேலையாட்கள் கிளம்பி இருந்தனர்.

அவளைக் கண்டு பரிதவித்தவன், அதனை வெளிப்படுத்தாமல், “இங்க என்ன பண்ற?” என்றான் இறுகிய குரலுடன்.

தீரனின் குரல் கேட்டதுமே, ஒரு நொடி அவளது கரங்கள் வேலை நிறுத்தம் செய்து பிறகு தொடர்ந்தது.

“உன்ன தான் கேக்குறேன்.” அவன் மீண்டும் அழுத்திக் கேட்க,

அவள் திரும்பி, தரையில் விழியை பதித்த படி, “சவி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா.” எனக் கூற, அவனுக்கும் என்ன பதில் அளிப்பது என்று புரியவில்லை.

பெண் தோழிகள் கூட இல்லாமல் வளர்ந்தவன் ஆகிற்றே!

“ஓ… இப்ப என்ன செய்யணும்?” அவன் புரியாமல் கேட்க,

“எனக்கும் தெரியல. அம்மாவுக்கு போன் பண்ணுனேன். எடுக்கவே இல்ல.” என்றாள் முகம் வாடி.

“எடுத்துட்டா மட்டும்…” என முணுமுணுத்தவன் இடைப்பட்ட நாட்களில் அவளின் குடும்பம் பற்றி நன்கு அறிந்து கொண்டான்.

“நான் அவளை பார்க்கவா?” அவன் எங்கோ பார்த்து வினவ, “ம்ம்.” என தலையை உருட்டியதும், தீரன் சவிதாவின் அறைக்கு சென்றான்.

அங்கு, எப்போதும் மலர்ந்து இருக்கும் குழந்தை முகம் பயத்தில் வெளிறி இருந்ததில், அவனுக்கும் ஏதோ போல ஆகி விட, இயல்பாக அவளுடன் சற்று நேரம் பேச்சுக் கொடுத்தான்.

அவளும் அதில் இலகுவாகி, பயம் மறந்து பேசத் தொடங்க, உணவுத் தட்டுடன் உள்ளே வந்த சஹஸ்ராவிற்கு தான், யாரோ சொல்வதை நம்பி தவறாக எண்ணி விட்டோமோ என உள்ளம் குறுகுறுத்தது.

அதனை ஒதுக்கி விட்டு, தங்கைக்கு உணவளிக்க, சவிதா உறங்கும் வரை தீரனும் அங்கேயே தான் இருந்தான்.

ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

சவிதா உறங்கியதும் இருக்கையில் இருந்து எழுந்தவனிடம், “நான் இன்னைக்கு சவி கூட தூங்குறேன்” என்றாள் வேகமாக.

அதில் ஒரு கணம் அவளை உறுத்து விழித்த விழிகளைக் கண்டு, “அவள் தனியா இருக்க பயப்படுறா. அதான்…” என தன்னை மீறி விளக்கமும் கொடுக்க,

“நீ எங்க வேணாலும் இருந்துக்க. என்கூட இருந்தா தான், உன்ன வித்துடுவேனே…” எனக் கோபத்தையும் அள்ளி வீசி விட்டே நகர்ந்தான்.

சுருக்கென வலித்த பாவனையுடன் வெகு நேரம் அப்படியே நின்றிருந்தாள் சஹஸ்ரா.

அதன் பிறகு ஒரு வாரமும் இருவரிடமும் பேச்சு வார்த்தை அறவே இல்லை. அவன் தொழிலை கவனித்துக் கொள்ள, இவளும் சிறிது நேரம் அலுவலகம் சென்று விட்டு உடனே வந்து விடுவாள். அப்படியே சென்றாலும் சவிதாவின் நினைவு அவளை வீட்டிற்கு இழுத்து சென்று விடும்.

அத்தனை நாள் வரையில் சுலோச்சனாவும் அவளை அழைக்கவில்லை.

ஆனால், தினமும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் தீரன், மறக்காமல் சவிதாவிற்கு ஆடைகளும், நகைகளும் வாங்கி வந்து விடுவான் பரிசாக.

அவன் விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி வருவதில் தயக்கம் ஏற்பட்டாலும், தந்தைக்கு அடுத்து தன்னிடம் அக்கறை  காட்டும் அவனது அன்பே சவிதாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதனை அவனிடமே கூறியும் இருக்க, அதற்கு மென் முறுவல் ஒன்றை மட்டுமே பதிலாக தருவான்.

சஹஸ்ராவிற்கு தான் முள் மேல் நிற்பது போல இருக்கும் அவன் ஒவ்வொரு நாளும் வாங்கி வரும் பொருட்களை பார்த்து.

உண்மையிலேயே அவன் கணவனாக இருந்தால், அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வாள் தான். ஆனால், இருவருக்கும் நிகழ்ந்தது ஒப்பந்த திருமணம் ஆகிற்றே!

அனைத்தும் நினைவு வந்த பின், “நான் தான் அறிவில்லாமல் எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன்னா உனக்கு எங்க போச்சு அறிவு” என அவன் கேட்டு விட்டால்!

நினைக்கவே உள்ளம் பதறியது. அதனாலேயே, மனம் கேட்காமல் அவனிடம், இது போல் எதுவும் வாங்கி வர வேண்டாம் எனக் கூறி விட, அவனோ கண்களின் வழியே அத்தனை ஆத்திரத்தையும் காட்டினான்.

அவளுக்குத் தான் பெரும் சோதனையாகி விட்டது. “இ… இல்ல தீரன்….வந்து… உங்களுக்கு ஞாபகம் வந்ததும்” எனத் தட்டு தடுமாறி அவள் ஆரம்பிக்க,

“அப்படி ஞாபகம் வந்தாலும் உன்கிட்ட இதுக்கு கணக்கு கேட்க மாட்டேன் போதுமா?” என்றான் சுள்ளென.

இருதலை கொள்ளியாய் தவித்துப் போவது என்னமோ அவள் தான். இதற்கு உண்மையையே கூறி விடலாமே! என நொந்தவளுக்கு, இனியும் பொய் கூறுவதில் பலனில்லை என உணர்ந்து தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாள்.

அதன் பிறகு, அவன் அன்பை இழக்க நேரிடுமோ என்ற நிஜம் ஊசியாய் ஒரு பக்கம் குத்த, இப்ப மட்டும் என்ன பாசமழையா பொழியிறாரு என ஏக்கமாய் சலித்தது மற்றொரு மனம்.

‘பின்ன, எதுவுமே ஞாபகம் இல்லாதவர்கிட்ட போய் இப்படி கேட்டு வச்சா கோபம் வர தான செய்யும்!’ என்ற உண்மை தாமதமாகவே புரிந்தாலும், ராவ் பேசியது மனதை உறுத்தவும் தவறவில்லை. அதே நேரம் அவனை சந்தேகிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

அந்த வாரத்திலேயே சவிதாவிற்கு சடங்கு ஏற்பாடு செய்தவள், வீட்டிலேயே சிறியதாக நண்பர்களை மட்டும் அழைத்து விழா வைத்தாள்.

அப்போதும் தாய்க்கு அழைத்துப் பார்த்து சோர்ந்து போனவள் அழைப்பதை நிறுத்திக் கொண்டாள். சவிதாவும் இப்பொழுது ஓரளவு சாதாரணமாகி விட அன்று இரவு சஹஸ்ரா தீரனின் அறைக்குச் சென்றாள்.

அங்கு தீரனின் நிலையோ வெகு மோசமாக இருந்தது. முதல் இரு நாட்கள் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்தவனுக்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை.

அவளும் சவிதாவின் அறைக்குள்ளேயே இருந்து கொண்டு அவனுடன் கண்ணாமூச்சி விளையாட, வெகுவாய் ஏங்கிப் போனான் அவளது ஸ்பரிசம் இன்றி.

சவிதாவிற்காக என்று இத்தனை நாட்கள் தன்னை கட்டுப்படுத்தியவனுக்கு, இன்று நிச்சயம் அவளின்றி சிறிதளவும் உறங்க இயலாது என்று புரிந்து காதல் நோயில் கரைந்தான்.

ஆனால், அவளை வம்படியாக அழைக்க, கோபமும் வீம்பும் முன் வந்து நின்று முரண்டு பிடித்தது.

பின் அவனே, பாவம்… ஏதோ குழப்பத்துல பேசிட்டா. என எண்ணிக் கொண்டாலும், ஈகோ தடுத்தது.

அவனை வெகுநேரம் தவிக்க விடாமல் சஹஸ்ராவே அவன் முன் வந்து விட, அணைக்கத் துடித்த கரங்களை அடக்க தான் சிரமமாக இருந்தது ஆடவனுக்கு.

அன்றென, மயில் நிறப் புடவை அணிந்து அழகு மயில் போல அவள் காட்சியளிக்க, அவளறியாமல் பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து விட்டு, தன்னை நிதானப்படுத்த முயன்றான்.

அதுவோ தோல்வியில் முடிய, அவனின் தடுமாற்றம் புரியாத பாவை தான், “நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்” என ஆரம்பிக்க, அவளை பேச விடாமல்,

“அதுக்கு முதல்ல என் மேல ஏன் இவளோ பெரிய பழி போட்டன்னு சொல்லு!” என்றான் முகம் இறுக.

அக்கேள்வியில் சொல்ல வந்த விஷயத்தை விடுத்து, ராவை பற்றியும், அவன் அவளிடம் தவறாக நடந்து கொண்டது பற்றியும், அதற்கு தீரனின் பதிலையும் அவனுக்கு கூறியவள், இறுதியாக ராவ் பேசிய வார்த்தைகளையும் கூறிட, அவன் நெற்றி நடுவில் சிறு முடிச்சு விழுந்தது.

அதனைப் பற்றி பேசும் போதே, ராவ் தான் தன்னை குழப்பி இருக்கிறான் என உறுதியாக நம்பிய சஹஸ்ரா,

“சாரி… தீரன். அவன் அப்படி சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. என் அக்கா மாப்பிள்ளை பாக்குறேன் பேர்வழின்னு பொறுக்கி பசங்களை வீடு வரைக்கும் கூட்டிட்டு வருவா. டு பீ ஃபிராங்க். என்னால… என்னால தனியா என்னையும் சவியையும் பாதுகாக்க முடியும்ன்னு தோணல தீரன். அதான் அவசரமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுவும் உங்க மேல இருக்குற முழு நம்பிக்கைல தான்.” என கண்ணில் துளிர்த்த நீருடன் பேசியவளுக்கு அப்போதும் ஒப்பந்த திருமணம் பற்றிக் கூற நாக்கு ஒத்துழைக்க மறுத்தது.

அவனை இழந்து விடுவோம் என்ற வலி அப்பட்டமாக மனமெங்கும் நிறைந்தாலும், தைரியத்தை வரவழைத்து, “அது மட்டும் இல்ல….நம்ம நம்ம ரெண்டு பேரும்…” எனக் கூற வரும் முன், தீரன் அவசரமாக எங்கோ கிளம்பிச் சென்று விட்டான்.

அவள் அழைத்த அவனது பெயர் காற்றோடு கலக்க, அவன் எப்போதோ காரை எடுத்துக் கொண்டு சென்றிருந்தான்.

‘இவளோ வேகமா எங்க போறாரு? ஒருவேளை எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?’ என எண்ணும் போதே, சந்தோஷமும், கலக்கமும் ஒருங்கே தோன்றி வதைத்தது.

நள்ளிரவு ஆகிய பின்னும் அவன் வராது போக, அவளும் தன்னை மீறி கண்ணயர்ந்தாள்.

மறுநாள் கண் விழிக்கும் போது அவள் கண்டது, அவளுக்கு மிக அருகில் உறக்கத்தில் தவழ்ந்திருந்த கணவனின் முகத்தை தான்.

வாகாய் அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

ஒரு வாரம் கடந்த அவ்வணைப்பு அவளுக்கும் தேவையானதாக இருக்க, அதில் கிறங்கியவள், அவனது கன்னத்தை வருடினாள்.

‘கொஞ்சம் கோபம் அதிகமா தான் வரும் போல. இந்த கண்ணை பார்த்தா தான் லைட்டா பயமா இருக்கு. ஆனாலும், அது தான் பிடிச்சு இருக்கு.’ தன் போக்கில் ‘மைண்ட் வாய்ஸ்’ என எண்ணி சத்தமாக பேசிக் கொண்டிருந்தவள், விரல்களால் அவனின் அழுத்த விழிகளையும் வில்லாய் வளைந்த புருவத்தையும் தடவிக் கொண்டிருந்தாள்.

“பிடிச்சு இருந்தா இன்னும் பக்கத்துல வந்து கட்டிக்க பிரின்ஸஸ்.” கண்ணை விழிக்காமல், இதழ்களை மட்டும் மெல்ல விரித்துப் பேசியவன், அவளை மேலும் நெருங்கி இருக்க, அவளுக்கு தான் தூக்கி வாரிப் போட்டது.

“அட திருடா… நீங்க தூங்குற மாதிரி நடிச்சுட்டு இருந்தீங்களா?” முணுமுணுத்தபடி அவசரமாக அவள் எழ முயற்சிக்க, அதற்கு அனுமதி அவனும் தந்தாக வேண்டுமே!

“யாரு நான் திருடனா? நீ தான்டி திருடி. தூங்கும் போது சைட் அடிக்கிற, என்னை பேட் டச் பண்ற…” எனக் கேட்டவன், இப்போது கண்ணைத் திறந்து காதல் வழிய அவளைப் பார்த்திருந்தான்.

அக்கண்களின் குறும்பில் தன்னை இழந்தவளுக்கு வெட்கமாகி விட, அவனது கூற்றில், “என்னது பேட் டச் – ஆ?” என்றாள் விழித்து.

உதடு பிதுக்கியவன், “ம்ம்… ஆமா. என்னை இங்கலாம் தொட்ட தான…” என அவள் தொட்ட இடங்களை பாவம் போல காட்ட, அடப்பாவி என்றிருந்தது அவளுக்கு.

ஆனால், அவன் கரங்கள் அவளது இடுப்பின் அளவை அளந்து கொண்டிருக்க, அவஸ்தையுடன் நெளிந்தவள்,

“நான் பண்ணதுக்கு பேர் ‘பேட் டச்’ன்னா. இப்ப நீங்க பண்றதுக்கு பேர் என்னவாம்?” என சிலுப்பலுடன் அவனது கையை தட்டி விட்டவள், அவன் அசரும் நேரத்தில் கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள்.

அதில் போலிக் கோபம் கொண்டவன், “உனக்கு கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸ் – ஏ இல்லையாடி. ஒரு வாரமா என்கிட்ட பேசல. ஏன் ஒரு சின்ன ஹக் கூட இல்ல. என்னை மிஸ் பண்ணவே இல்லையா நீ. இப்போ கூட தப்பிச்சு போக தான் பாக்குற. நீ ஆசையா என்னை தொடவும், கிஸ் பண்ண போறியோன்னு ஆர்வமா வெயிட் பண்ணுனா… நீ சுத்த வேஸ்ட்டி.” என பேசிக் கொண்டே சென்றவனை, தடுக்கும் விதமாக அவள் ஏதோ பேச வர அவனோ கை நீட்டி அமர்த்தினான்.

“என்ன சொல்ல போற. தேய்ஞ்சு போன ரெகார்ட் மாதிரி ஞாபகம் வந்ததும் பாத்துக்கலாம்ன்னு சொல்லுவ அதான… இதுக்கு நீ என்னை சந்நியாசமே போக சொல்லலாம்…” சட்டமாக அமர்ந்து தலையணையை கட்டிப் பிடித்தபடி அவன் புலம்பிட, அவளுக்கு தான் சிரிப்பு பீறிட்டது.

“எதுக்குடி சிரிக்கிற?” தீரன் கடுப்பாக கேட்க,

சிரிப்பை அடக்க இயலாமல், அவனை ஓரக்கண்ணால் ரசித்தவள், “அது… நீங்க காவி ட்ரெஸ் போட்டுட்டு சந்நியாசம் போனா எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன்” எனக் கூறும் போதே வாய் விட்டு சிரித்து விட்டாள்.

‘விட்டா இவளே அனுப்பிடுவா போல’ என்பது போல முறைத்தவன், “உன்ன…” என அடிக்கத் துரத்த, அந்நேரம் சஹஸ்ராவின் அலைபேசி அழைத்ததில் போனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

கீழே சென்று தான், ஓட்டத்தை நிறுத்தியவளுக்கு, மீண்டும் அவனது நெருக்கம் உணர்ந்து இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

அக்கிறக்கத்தை மீண்டும் ஒலித்த அலைபேசி கலைக்க, தேவிகாவின் எண்ணைக் கண்டதும் அழைப்பை ஏற்றாள்.

சஹஸ்ரா பேசும் முன், தேவிகாவே, “ஹே சஹா. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்த ராவ் இருக்கான்ல, அவனை யாரோ கையை உடைச்சு அடிச்சு போட்டு இருக்காங்க.

விஷயம் தெரிஞ்சு நம்ம கிளையண்ட் ஆச்சேன்னு நான் காலைல ஹாஸ்பிடல்ல பாக்க போனேன். என்ன பார்த்ததும் ராவ் பதறிட்டாரு.

‘இனிமே அந்த சஹஸ்ராவை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அவள் இருக்குற திசை பக்கம் கூட வர மாட்டேன்’னு உளருறாரு. பாவம் மனுசனுக்கு கைல அடிபட்டுச்சா தலைல அடிபட்டுச்சான்னு தெரியல சஹா. எங்க அடிபட்டாலும் நம்ம பேலன்ஸ் அமௌண்ட் – அ செட்டில் பண்ணிடுங்க ராவ்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றாள் கிண்டலாக.

சற்றே திகைப்புடன் இணைப்பை துண்டித்த சஹஸ்ரா, குழப்பத்துடன் திரும்ப, அங்கு கையை கட்டியபடி அவளை சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்த தீரனைக் கண்டாள்.

“எனி நியூஸ்?” அவன் தோளைக் குலுக்கிய படி நக்கலாக கேட்க,

“தீரன்… நீங்க…” எனக் கேட்க வந்தவள், “ராவ் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காராம்.” என்றாள் புரியாமல்.

“ப்ச்…  இது நேத்து நைட்டே தெரிஞ்ச நியூஸ் ஆச்சே” என நெற்றியை தடவ,

“உங்களுக்கு எப்படி தெரியும்?” அவள் ஒரு மாதிரியாக பார்த்தபடி கேட்டாள்.

“ஏன்னா அடிச்சதே நான் தான…” என அசட்டையாக பதில் கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்.

“ஏன் அடிச்சீங்க?” அவளுக்கு வெறும் காற்று மட்டுமே வந்தது.

அவனோ முறைப்புடன், “இதென்ன கேள்வி? உன்ன கஷ்டப்படுத்தணும்ன்னு நினச்சவன அப்படியே விட்டுடுவேனா சஹி… உன் நிழலை தொடக் கூட என்னை தவிர வேற யாருக்கும் உரிமை இல்ல. பிகாஸ் யூ ஆர் மை பிரின்ஸஸ்!” எனக் கோபத்துடன் ஆரம்பித்து, அவள் காதோரம் கிசுகிசுப்புடன் முடித்திருந்தான் அக்கள்வன்.

ஒரு கணம் ஆணவனின் ஆளுமையில் உறைந்தவள், மறு நொடியே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

இப்போது திகைப்பது அவன் முறையாக, பின் மெல்ல முறுவலித்தவன், மனையாளின் கூந்தல் தந்த நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்து, “இப்படி கட்டிப்பிடிப்பன்னு தெரிஞ்சு இருந்தா இன்னும் நாலு பேரை அடிச்சு இருப்பேனே சஹி…” எனக் குறும்பாய் கூறினான்.

அதில் அவனை நிமிர்ந்து முறைத்தவளைக் கண்டு கண் சிமிட்டியவன், “ஆனாலும் நீ ரொம்ப கஞ்சம்டி. வெறும் ஹக் மட்டும் தானா… நான் கூட பெருசா ஏதாவது கிடைக்கும்ன்னு நினைச்சேன்.” என்றான் அவனது கன்னத்தை தேய்த்தபடி.

அவன் பார்வை பாவைக்கு வெட்கப் புன்னகையை தோற்றுவிக்க, மறுக்காமல் எக்கி அவனின் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள் அழுத்தமாக.

அம்முத்தம் அக்காதல் கயவனின் இனிய கூடலுக்கு அச்சாரம் என்று உணராமல் போனது யாரின் பிழையோ!

யாரோ இவள்(ன்)
மேகா…

அடுத்த பதிவு வியாழன் drs…😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
29
+1
76
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்