Loading

உத்ராவை படிக்கட்டு ஏறச் சொன்னதில் அனைவரும் துருவை முறைத்தனர். அர்ஜுனும் விதுனும் “அடப்பாவி” என்று திட்ட, அஜய் இறுகிப்  போய் நின்றிருந்தான்.

அர்ஜுன் “அவளை நாங்க கால்ல முள்ளு குத்த கூட விட்டது இல்லடா… அந்தப் பச்சை மண்ணை போய் இத்தனை மாடி ஏற விட்ருக்க” என்றான் கடுப்புடன்.

துருவ் மெலிதாய் இதழ் விரித்து, “யாரு உன் அத்தை பொண்ணு பச்சை மண்ணா? அவள் மாடி ஏறுனா ஆனா எதுல ஏறுனா தெரியுமா?” எனக் கேட்க, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.

உத்ரா கடுப்புடன் படிக்கட்டில் நின்று கொண்டு, பாவமாய் துருவை திரும்பிப் பார்க்க, அவன் ‘இறங்கு’ என்று கண்ணாலேயே சைகை செய்ய, முகத்தைச் சுருக்கி கொண்டு இறங்கப்போனாள்.

அப்பொழுது அஜய் போன் செய்திட, அதனை எடுத்து “பங்கு” என்று பேசவருகையில் துருவ் அவளிடமிருந்து போனை வெடுக்கென வாங்கி விட்டு, “என் ஆஃபீஸ்ல, செல்ஃபோன் நாட் அலோவ்ட்” என்றான் அழுத்தமாக..

அவள் சுற்றி முற்றி மற்றவர்களைப் பார்க்க, அனைவரும் போன் உபயோகித்து கொண்டு தான் இருந்தனர்.

அதில் அவனை முறைத்து விட்டு, படிகளில் இறங்கினாள். அவள் சென்றதும் அவன் அறைக்கு வந்த துருவ், “இப்போ ஏறி இறங்குறதுக்கு, ஒரு மாசத்துக்கு எந்திரிக்க மாட்டாள்” என்று ஆசுவாசமாய் அமர்ந்தான்.

ஆனால் அது ஒரு ஐந்து நிமிடம் தான். ஃபைலுக்குள் தலையை விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவன் எதேச்சையாய் நிமிர, எதிரில் உத்ரா அமர்ந்து லெமன் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள்.

அதனைப் பார்த்தவன் முழித்து விட்டு, “உன்னை நான் என்ன சொன்னேன் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கடுப்புடன் கேட்க, உத்ரா “நீங்க சொன்னதை நான் பண்ணிட்டேன் பாஸ்” என்றாள் இளித்து கொண்டு.

அவனோ குழம்பி “16 மாடியை 5 நிமிஷத்துல அதுவும் 32 தடவை எப்படி ஏறி இறங்குன? என்கிட்டயே பொய் சொல்றியா” என்றான் கோபமாக.

அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “நோ பாஸ். நான் உண்மையிலேயே 32 டைம்ஸ் ஏறி இறங்குனேன்” என்றாள் ஸ்டராவில் ஜூஸை உறிஞ்சி கொண்டே.

அவன் மொத்தமாகக் குழம்பி “எப்படி?” எனக் கேட்க,

அவள் “அட என்ன பாஸ் நீங்க… இங்க வாங்க” என்று வெளியில் அழைத்துச் சென்றவள், அங்கு இருந்த அந்த பில்டிங்கின் மாடலைக் காட்டி அதனை காலுக்குக் கீழே வைத்து, “இதுல தான் பாஸ் நான் ஏறி ஏறி இறங்குனேன்… பட் பாஸ், பில்டிங் மாதிரியே உங்க பில்டிங் மாடலும் செம்ம ஸ்ட்ராங். நான் ஏறி நின்னேன் உடையவே இல்லை…” என்று யோசித்தவாறு பாவனை செய்ய, துருவ் தான் ‘ஐயோ ஒரு லூசு கிட்ட வந்து மாட்டிகிட்டோமே’ என்று நொந்தான்.

பின், கோபமாக அவள் ஒரு விரலைப் பிடித்து வளைத்து, “இதுல இதுல ஏறி நின்னியா? மண்டைல ஏதாவது மசாலா இருக்கா… மெண்டல் மெண்டல்” என்று அதட்டினான்.

உத்ரா வலியில் கத்தியபடி “ஆ ஆ பாஸ் பாஸ்… உங்க நல்லதுக்காகத்தான் பாஸ் நான் இப்படி பண்ணுனேன்” என்று சொல்ல, அவன் அவள் கையை விட்டு விட்டு “என் நல்லதுக்கா?” என்றான் புரியாமல்.

“எஸ் பாஸ். நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சுருந்தேன்னு வைங்க… இந்நேரம் நான் போய்ச் சேர்ந்துருப்பேன். அப்பறம் உங்க மேல கொலை கேஸ் விழுந்து, உங்க பிசினெஸ் எல்லாம் ஒன்னும் இல்லாம போய்… உங்களைத் தூக்குல போட்டு…” என்று அவள் சொல்லிக்கொண்டே போக,

துருவ் “போதும்… போதும் உன் விளக்கம்… போ உள்ள” என்றான் எரிச்சலாக.

உத்ரா, கட்டை விரலைக் காட்டி “போதுமா பாஸ் விளக்கம்? சூப்பர் பாஸ்! இப்படியே ஃபிக்ஸ் ஆகிக்கோங்க” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து நகர்ந்தவள் ‘ஷப்பா… வந்த அன்னைக்கே என்னை லூசு மாதிரி புலம்ப விட்டுட்டான்’ என்று அவன் அறைக்குள் சென்றவளுக்கு பசி வந்ததில், அவள் பேகில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து, அவனின் லேப்டாப் டேபிளில் ஏறி அமர்ந்து, முகப்புத்தகத்தை பார்த்துக் கொண்டே உண்ணத் தொடங்கினாள்.

உத்ரா தூக்கு தண்டனை அளவுக்குப் பேசியதில் மிரண்டிருந்த துருவ், ரிஷிக்குப் போன் அடித்து, “டேய் என்னடா உன் தங்கச்சி என்னை சாவடிக்கிறா” என்று கத்த, அவன் “என்ன நண்பா ஆச்சு?” என்றான். துருவ் நடந்ததை கூறியதும், கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தான்.

பின், “அவள் பயங்கரமான ஆளுடா. அவள் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுலா வே இரு… என்ன இருந்தாலும் அவள் விஷம் தான்” என்று மேலும், அவனுக்கு விஷத்தை ஏற்றி விட்டுப் போனை வைத்தான்.

அவள் பேசியதில் துருவுக்கு சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு, அவளை ரசித்தவன், ரிஷியின் இந்தக் கூற்றில் மறுபடியும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு உள்ளே செல்ல, அங்கு அவள் அமர்ந்திருந்த தோரணையை கண்டு அவளிடம் சென்று கத்த ஆரம்பித்தான்.

“இதென்ன உங்க அப்பாவோட ஆஃபீஸ்ஸா, உன் இஷ்டத்துக்கு இருக்க… கொஞ்சங்கூட டீசன்ஸி இல்ல. இடியட்!” என்று திட்ட,

அவள் ‘இப்போ எதுக்கு இவன் நம்மளை திட்டுறான்?’ என ‘பே’ வென பார்த்தாள்.

“முதல்ல கீழ இறங்கு!” என்று கையை நீட்டிக் கட்டளையாய் சொல்ல,

‘இந்த டேபிள்ல உட்காந்ததுக்கா திட்டுறான்… ரொம்ப கோவக்காரரா இருப்பாரு போல’ என்றெண்ணி முகத்தை சுளித்தபடி நின்றாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்தவன், “நீ இந்த ட்ரைனிங் முடியிற வரைக்கும் என் கண் முன்னாடி தான் இருக்கணும். நான் என்ன சொல்றேனோ அதைத்தான் கேட்கணும். காட் இட்!” என வினவ, அவள் “ம்ம்” என்று தலையை உருட்டினாள்.

பின், அவன் சேரில் சென்று அமர்ந்தவன், சேரை சுற்றிக் கொண்டே யோசித்து விட்டு, “தென், ஒரு முக்கியமான விஷயம். இந்த ட்ரைனிங் முடியிற வரைக்கும் நீ இங்க தான் இருக்கன்னு யாருகிட்டயும் சொல்லக் கூடாது. அண்ட் உன் அப்பாகிட்டயும் பேசக் கூடாது. எனக்கு உன்னோட ஃபுல் கான்சன்டரேஷன் இங்க தான் இருக்கணும் புரியுதா?” என்றான் உத்தரவாக.

உத்ரா, “என் அப்பாகிட்ட ஏன் பேசக் கூடாது?” என்று கேள்வியாய் கேட்டு விட்டு, “சரி உங்ககிட்ட தான் நான் ட்ரைனிங் வரேன்னு எங்க அப்பாவுக்குத் தான் தெரியுமே” எனக் கேட்டாள் குழப்பமாக.

துருவ் “அவருக்குத் தெரியும்னு எனக்குத் தெரியாதா? அவரைத் தவிர…” என்றான் இவளை எப்படியாவது சமாளிக்கணுமே என்ற ரீதியில்.

அவளோ “பட் இன்னேரம் என் சித்திக்குத் தெரிஞ்சுருக்குமே” என்றிட, அவன் “ப்ச் அவங்களை தவிர” என்றான் சிறிது எரிச்சலுடன்.

அவள் மேலும் விடாமல், “ம்ம்ம்ம் அப்போ ரிஷிக்கும் தெரிஞ்சுருக்குமே” என்று கேட்க, அவன் கடுப்பாகி விட்டான். “இடியட் அவங்களை தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. ஐ மீன் இந்தியால இருக்குற யாருக்கும் தெரியக் கூடாது” என்றான்.

அவள் அசால்டாக “அதான் இவங்களுக்கே தெரிஞ்சுருச்சுல்ல… நான் என் பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை, அகிலன் அண்ணா, அண்ணி, விது, அர்ஜுன், அஜய் இவங்ககிட்ட மட்டும் சொல்றேன்”. என்று அடுக்கியவள் ரகசியமாக “வேற யார் கிட்டயும் சொல்லமாட்டேன்” என உதட்டில் விரல் வைத்தாள்.

அவனோ சினத்துடன், “அப்டியே உன் வீட்டுக்கு நாய் குட்டி, எதிர்த்த வீடு, பக்கத்துக்கு வீடு எல்லார்கிட்டயும் சொல்லேன்” என்று பெருமூச்சுகளை விட, அவள் “டன் பாஸ்! இப்பவே சொல்றேன்” என போனை எடுக்க, அவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

‘இரிடேடிங் கேர்ள்…’ என்று மனதில் அவளைத் திட்டி விட்டு, “உனக்கு பிசினஸ் கத்துக்கணுமா வேணாமா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டவனிடம், ‘வேண்டாம்! நானே ஊர் சுத்தி பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூற வந்தவளுக்கு, ஏனோ அவன் என்னதான் செய்யப் போகிறான் என்ற ஆர்வம் தோன்ற, ‘வேண்டும்’ என்று தலை ஆட்டினாள்.

“அப்படினா எந்தக் கேள்வியும் கேட்காம நான் என்ன சொல்றேனோ அதைத்தான் நீ செய்யணும் ஏதாவது பேசுன…” என்று மிரட்ட, அவன் கோபத்தில் சற்று நடுங்கி விட்டதென்னவோ உண்மைதான்.

பின், அவனே தன்னை சமன்படுத்திக்கொண்டு, “ஓகே நாளைல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். நீ டெயிலி 2 ஹர்ஸ் டிராவல் பண்ணி வர முடியாது. சோ… நீ என் வீடு பக்கத்துல தான் தங்கப்போற” என்றதும், “என் டிரஸ்லாம் என் வீட்ல இருக்கு பாஸ்” என்றாள் பாவமாக.

அவன் “ஏன்? நீ என்ன தண்ணி இல்லா காட்டுலயா இருக்க. இங்க உனக்கு வேணும்ங்கிறத வாங்கிக்க” என்றவன், இரவுவரை அவளை சும்மாவே அமர வைத்து விட்டு, வேண்டும் என்பதை வாங்க சொல்லிவிட்டு, அவனே வீட்டிற்கு கூட்டிச்சென்றான். அவன் அபார்ட்மெண்ட்க்கு பக்கத்திலேயே ஒரு அபார்ட்மெண்டில் அவளைத் தங்கவைத்தான்.

ஒரு படுக்கை அறை கொண்ட பிளாட்டை சிறிது நேரம் சுற்றி பார்த்தவள், வீட்டிற்கு போன் செய்து பேசினாள். இன்று நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தவளுக்கு அவனை பற்றி சொல்லத் தோன்றவில்லை. மேலும், அவன் சொல்லக் கூடாது என்றது வேறு காதில் கேட்டுக் கொண்டே இருக்க அவனைப் பற்றி பேச மறுத்து விட்டாள்.

சிறிது நேரத்தில் வெளியில் காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்து பார்த்தவள், வெளியில் துருவ் நிற்பதை கண்டு, என்னவென்று பார்த்தாள்.

துருவ் “நான் சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு 4 மணிக்குலாம் ரெடியா இரு” என்றதும், அவள் “ஓகே பாஸ். நாளைக்கு லண்டனை சுத்திப்பார்த்துட்டு சாயந்தரம் 4 மணிக்கு நான் ரெடியா இருக்கேன். எங்க போறோம் பாஸ்?” என்று கேட்க,

அவன் பார்வையாலேயே சுட்டெரித்து, “இடியட்! இடியட்! சாயந்தரம் 4 மணி இல்லை. இயர்லி மார்னிங் 4 மணிக்கு” என்றிட, அவள் “என்னாது மிட் நைட் 4 மணியா?” என்று விழியை விரித்தாள்.

அவன் அதற்கும் மேல் அதிர்ந்து “என்னது 4 மணி மிட் நைட்டா கொடுமைடா சாமி…” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சு நான் என்ன பாஸ் பண்ணப்போறேன்” என்று கேட்க,

“4-5 ஜாக்கிங்… தென் மெடிடேஷன், அப்பறம்…” என்று  துருவ் பேசபோகையில், அவனைத் தடுத்தவள், “பாஸ் நான் உங்ககிட்ட பிசினெஸ் கத்துக்க தான வந்தேன். பட் எனக்கு என்னம்மோ மிலிட்டரில சேர்ந்த மாதிரியே ஒரு ஃபீலிங்கு” என்றாள் பீதியுடன்.

அவன் அவளை முறைத்து, “லுக், எனக்கு பெர்ஃபக்ஷன், டிசிப்ளின், பங்க்சுவாலிட்டி இது எல்லாமே ரொம்ப முக்கியம். இதெல்லாம் முதல்ல நீ நல்லா கத்துக்கோ. அப்போதான் பிசினெஸ் கத்துத்தருவேன்” என்று தீர்மானமாய் கூறி விட்டுச் சென்றான்.

உத்ராதான் இவனுக்கு எங்க பெரியப்பாவே பரவாயில்லை போலயே. இவன் என்ன நமக்கு இல்லாததை எல்லாம் சொல்லிட்டு போறான்… என்று நொந்தவள், அதனை நினைத்துக் கொண்டு உறங்கியும் போனாள்.

அதிகாலையில், விடாமல் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, “அய்யோஓஒ!” என்று காதைப் பொத்திக்கொண்டு, தூங்க முயன்றவளுக்கு அந்தச் சத்தத்தில் கோபம் தான் வந்தது.

கோபமாக கதவைத் திறந்து, “எதுக்கு பாஸ் இப்படி பெல் அடிச்சுக்கிட்டே இருக்கீங்க? எனக்கு பெட் காஃபீலாம் வேணாம். நான் தூங்கபோறேன்” என்றாள்.

அவன் அதற்குமேல் கோபமாக “எவ்ளோ நேரம் பெல் அடிக்கிறது? நான்தான் நேத்தே சொன்னேன்ல சீக்கிரம் எந்திரிக்கணும்னு போய் ரெடி ஆகு போ!” என்று அடிக்குரலில் திட்ட, அவள் “தூக்கம் வருது பாஸ்” என்றாள் கண்ணைத் திறக்கமுடியாமல்.

அவன் நக்கலாக, “நோகாம சொத்து மட்டும் வேணும் அப்படித்தான. எந்த வேலையும் பார்க்காம சாப்புட்றதுலாம் எப்படித்தான் உடம்புல ஒட்டுதோ” என்று முணுமுணுத்திட, அவளுக்கு அது நன்றாகவே கேட்டது.

‘உன் அப்பன் சொத்தையா நான் வாங்கப்போறேன்’ என்று வாய்வரைக்கும் வந்தாலும் அதனை முழுங்கிக் கொண்டு, “நான் கிளம்பி வரேன்” என்று பட்டென்று கதவைச் சாத்தினாள்.

சில நிமிடங்களில் ட்ராக் ஷூட்டில், ஷூவை மாட்டிக்கொண்டு அவனை முறைத்து கொண்டு வந்தாள். அவன் அதனைக் கண்டுகொள்ளாமல், ‘ரன்’ என்று கண்ணைக்காட்ட, ‘கடவுளே இந்தக் கிறுக்கன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து’ எனத் தன்னை நொந்து ஓடினாள்.

அலுவலகம் சென்றதும், அவளுக்கு எந்த வேலையும் சொல்லிக் குடுக்காமல், அவனாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, அவள் அப்பா கொடுத்த ஃபைலை படிப்போம் என்று அதனை எடுத்தாள். துருவ் வெடுக்கென்று அதனைக் கையில் வாங்கி கொண்டு, “நான் உன்னை இதை படிக்கச் சொன்னேனா? கீப் கொயட்!” என்று ஃபைலை டிராயரில் போட்டுட்டுக்கொண்டான்.

உத்ரா “பாஸ் அதைப் படிச்சா ப்ரொஜெக்ட் பத்தி தெரிஞ்சுக்கலாம்ல?” என்று கேட்க, அவன், “நீ ப்ராஜெக்ட் பத்தி அப்பறமா தெரிஞ்சுக்கோ, முதல்ல பிசினெஸ்ல வர்ற பிரச்சனையா ஸ்மார்ட் ஆ எப்படி சரி பண்றதுன்னு தெரிஞ்சுக்கோ” என்று விட்டு, எண் புதிர்(number puzzle) ஒன்றை அவளிடம் கொடுத்து அவளை அதனை ‘சால்வ்’ செய்யுமாறு கூறினான்.

அவள் திருதிருவென முழித்து, “ஐயோ பாஸ் எனக்கு இந்த ‘பஸ்ஸில்’ னாலே ரொம்ப அலர்ஜி. எனக்கு வரவே வராது” என்று கதற, ‘அதான்டி எனக்கும் வேணும்’ என்று நினைத்து விட்டு, “அப்போ கண்டிப்பா நீ இதை முடிச்சே ஆகணும்” என்றான்.

“இதுக்கும் பிஸினஸுக்கும் என்ன சம்பந்தம் பாஸ்?” என அவள் புரியாமல் வினவ,

“இதுல வர்ற மாதிரிதான் பிசினெஸ்ளையும் சிக்கலான பிரச்சனை வரும். இதுல எப்படி ஸ்மார்ட்டா சால்வ் பண்றன்னு பார்த்ததுக்கு அப்பறம் தான் உனக்கு எந்த மாதிரி ட்ரைனிங் கொடுக்கணும்னு நான் யோசிக்கணும்” என்றான்.

அவளோ, “ஹக்கும்! இந்த ஜென்மத்துல நான் இதை ‘சால்வ்’ பண்ண போறதும் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை முடிச்சு பிசினெஸ் கத்துக்க போறதும் இல்லை” என்று நொந்தவள், கிட்டத்தட்ட ஒரு வாரமாய் அதனை முடிக்க முடியாமல் திணறினாள். இணையத்திலும் தேடக் கூடாது என்றும், தானும் சொல்லித்தரமாட்டேன் என்றும், அவளைப் பாடாய் படுத்தினான்.

“பாஸ்! பாஸ்! இந்த ஒரு பஸ்ஸில் மட்டும் சொல்லிகுடுங்க. அடுத்த பஸ்ஸில் நானே சால்வ் பண்றேன்” என்று அவள் கெஞ்ச அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

பின், அவனே “சரி இதை மட்டும் நான் பண்றேன்” எனக் கூறி, அவனாகவே ஏதோ யோசித்து அதனை ‘சால்வ்’ செய்தான். அவன் விரல்களையும், அவன் சால்வ் செய்யும் விதத்தையும் பார்த்து வியந்தவள் அதனை நன்றாகக் கவனித்துக் கொண்டாள்.

‘இப்படி நான் பண்றதை பார்த்தா அப்படியே அடுத்தது பண்றது மாதிரி தான்’ என மனதினுள்ளேயே அவளைச் சிறுமையாக எண்ணியவன், எப்படியும் முடிக்கமாட்டாள் என்று நினைத்து மற்றொரு புதிரைக் கொடுக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனை ‘சால்வ்’ செய்து அவனிடம் கொடுத்தாள்.

அவன், திகைத்து விட்டு, “நீயா பண்ணுன? எப்படி” என்று புரியாமல் கேட்க, அவள் “நீங்க பண்ணுனதை பார்த்தேன்ல பாஸ். அதே மாதிரி இதை ட்ரை பண்ணுனேன்” என்றாள் வெகுளியாக.

அதில் துருவ் தான் ‘நான் அவளுக்குச் சொல்லிக் குடுக்க கூட இல்லை. நான் செஞ்சதை பார்த்தே காத்துக்கிட்டான்னா… பிரில்லியண்ட் தான். இவள் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல் ஆவே இருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான்.

முதல் பத்து நாளில் அவன் இம்ஸை அவளுக்குப் பழகி விட்டதில் அவன் சொல்லாமலேயே எல்லாம் செய்ய ஆரம்பித்தாள். ஆனால் பல மணி நேரம் சும்மாவே தான் இருக்க வைத்தான். அவளும் அவனிடம் எதைப் பற்றியும் கேட்கவில்லை.

அன்று அந்த ஊரில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு ஒரு மீட்டிங் நடந்திட, துருவ் உத்ராவையும் அழைத்துச் சென்றான். “பாஸ் பாஸ்” என்று அவளை அவள் கூப்பிட்டதில், அவன் “நான் என்ன கொள்ளைக்கூட்டத்து தலைவனா பாசு பாஸுன்னுகிட்டு இருக்க… என் பேரைச் சொல்லியே கூப்பிடு” என்றதும், அவள் தயங்காமல், “ஓகே Mr. துருவேந்திரன்” என்றதில் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியானான்.

ஒரு மாதம் லிசாவுடன் சென்ற பயணம் 10 நாட்களில் போர் அடித்து விட, சைதன்யா ஊருக்கு வந்திருந்தான். அவனும் ரிஷியும் சேர்ந்து அந்த மீட்டிங்கிற்கு வந்திருந்தனர்.

ரிஷி, “என்னடா தாய்லாந்து போர் அடிச்சுடுச்சா என்ன?” என்று கேட்க, சைதன்யா “இல்ல நண்பா. லிசா போர் அடிச்சுட்டா.” என்று சலிப்பாகச் சொன்னவன் எதிரில் துருவுடன் வந்த உத்ராவை கண்டு விழி விரித்தான்.

ரிஷி அவன் காதருகில் “அவள் தான்டா உத்ரா” என்றதும்,

“நண்பா உனக்கு இப்படியொரு தங்கச்சி இருக்கான்னு நீ சொல்லவே இல்லை” என்றவன், அவளை முழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு, “செம்ம கட்டைடா!” என அவனிடமே சொல்ல, “டேய்! அவள் என் தங்கச்சிடா!” என்றான் சற்று கோபமாக.

சைதன்யா அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு, “அவள் உனக்குத் தங்கச்சியே இல்லைன்னு சொன்ன இப்ப எதுக்கு உனக்குக் கோபம் வருது?” எனக் கேட்டதும், அவன் வீம்பாக “எனக்கு எதுக்கு கோபம் வருது? அவளுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன?” என்று வேண்டும் என்றே அவள்மீது பகையை வளர்த்துக் கொண்டான்.

அங்கு ரிஷியைப் பார்த்த உத்ரா, அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டாள். ஆனால் அவன் அருகில் நிற்பவனின் பார்வை அவளுக்கு ஏனென்றே தெரியாமல் ஒரு கோபத்தை கொடுக்க, அவனை வாய்க்குள்ளேயே திட்டிக்கொண்டாள்.

மீட்டிங் முடிந்து ‘பார்ட்டி மோட்’ ஆரம்பிக்க, அனைவரும் ஜோடி ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்தனர். துருவ் வேறொரு நபரிடம் பேசிக்கொண்டிருக்க, உத்ரா அங்கிருக்கும் பஃபே உணவுகளை மிகவும் ரசித்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அவள் அருகில் வந்த சைதன்யா கையில் விஸ்கியுடன் “ஹாய் ஸ்வீட்டி! ஷால் வி டேன்ஸ் டுகெதர்?” என்று கையை நீட்ட, அவள் அவனை முறைத்து விட்டு, “சாரி நோ இண்டரெஸ்ட்!” என்று உண்ணுவதில் கவனமானாள்.

அவன் விடாமல், “ஹே! கம் ஆன். டார்லிங்!” என்று அவள் கையை பிடிக்கப் போனது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. கையில் சுள்ளென்ற வலி எழ, கையைப் பார்த்தவனுக்கு உள்ளங்கையில் ஃபோர்க் ஸ்பூன் குத்தி இருப்பதையும், அவள் எதுவுமே நடவாதமாதிரி மீண்டும் சாப்பிட்டு கொண்டிருப்பதையும் பார்த்து “யூ…” என்று அவளை நெருங்கினான்.

அவன் உத்ராவை நோக்கி வருவதை ஏற்கனவே துருவ் கவனித்து கொண்டுதான் இருந்தான். இவன் வேற எதுவும் ஏழரையை இழுத்துட கூடாதே என்று அவசரமாய் அருகில் வருகையில், உத்ரா அவன் கையில் ஃபோர்க்கை வைத்துக் குத்தியதை பார்த்துத் திகைத்து விட்டான்.

அவன் நெருங்குகையில், அவள் முட்டியை வைத்து அவன் அடி வயிற்றிலேயே நங்கென்று ஒரு பன்ச் வைக்க, சைதன்யா சுருண்டு விட்டான்.

துருவ் சைதன்யாவை தூக்கி, உத்ராவை முறைக்க, அவள் சைதன்யாவை முறைத்து கொண்டிருந்தாள்.

பின், அடிக்குரலில் “உன் கண்ணு என் கண்ணைத் தாண்டி கீழ இறங்குச்சு… மகனே உன் கண்ணை நோண்டி அதைக் குழம்பா வச்சு நானே சாப்ட்ருவேன். கண்ணு தெரியாம நடுத்தெருவில பிச்சை தான் எடுக்கணும்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு, அவனை மிரட்டியதில் துருவே மிரண்டு விட்டான்.

சிறு பிள்ளைத்தனமாய், எந்தப் பொறுப்பும் இல்லாமல், ஏனோ தானோவென்று இருக்கிறாளென அவன் நினைத்திருக்க, அவளின் இந்த அவதாரத்தில், இவளைச் சாதாரணமாய் எடை போட்டு விட்டோமோ என்று அப்பொழுது தான் யோசித்தான்.

இதில் சைதன்யா அவள்மேல் கொண்ட வெறியை அவன் கவனிக்கவில்லை. துருவை தள்ளி விட்டு அவன் கோபமாகச் செல்ல, துருவ் உத்ராவிடம், “கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம்ல” என்றான்.

அவள் கோபமாக, “என்ன பொறுமையா இருக்குறது? நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் அவன் பார்வையே சரி இல்லை. அதுவும் என்னைத் தொட வந்தான். அப்பறம் எப்படி என்னால சும்மா விட முடியும்” என்று கேட்க,

“ப்ச், இந்த மாதிரி பப்ளிக் பிளேஸ்ல இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா? எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ணி அனுப்பிட்ட… அவன் உன்னைத் திரும்ப ரிவெஞ்ச் எடுத்தா என்ன பண்ணுவ?” என்றான் கடுப்புடன்.

உத்ராவோ, “கண்டிப்பா உங்களை ஹெல்ப்க்கு கூப்பிட மாட்டேன். என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும். அப்படி அவன் வந்தால், அவன் எலும்பை உடைச்சு, நாய்க்குப் போட்டுடுவேன். நான் பாக்சிங்ல நேஷனல் லெவல் சாம்பியன்” என்று திமிராய் சொல்ல, அவளின் நிமிர்வில் வியந்து விட்டான்.

அவனுக்கும் சைதன்யா அவளை அப்படி பார்த்தது பிடிக்கவில்லை தான். அவளின் தைரியத்தில் ‘சபாஷ்’ போட வேண்டும் என்று நினைத்த மனதினை அடக்கி விட்டு, ‘டேய் நண்பா இவளுக்கு பாக்சிங் தெரியும்னு நீ எங்ககிட்ட சொல்லவே இல்லையடா துரோகி!’ என ரிஷியை திட்டிக் கொண்டிருந்தான்.

அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு, சைதன்யாவை பார்க்க வர, ரிஷி அவன் கைக்கு மருந்து போட்டு விட்டுக் கொண்டிருந்தான். சைதன்யா உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்து கொண்டிருந்தான்.

இதில் துருவ் வேறு “லூசா டா நீ! மத்த பொண்ணுங்களுக்கும் ப்ரெண்ட் ஓட தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? அவள்கிட்ட போய் எதுக்கு பேசிகிட்டு இருக்க?” என்றான் கோபமாக.

ரிஷி “அவள் ஒன்னும் என் தங்கச்சி இல்ல. அது எப்படி அவள் இவனை அடிக்கலாம் எல்லாம் திமிரு” என்று கடுப்படித்தான்.

துருவிற்கு இது நியாயமாய் படவில்லை அவளைக் காப்பாற்றிக்கொள்ள அவள் அடித்தாள் என்று நினைத்தவன் வெளியில் சொல்லாமல், “ஹ்ம்ம்! அவள் ரொம்ப பிரில்லியண்ட்டா… நான் சொல்லித்தரலாம் தேவையில்லை. கொஞ்சம் அவள் விளையாட்டுத்தனத்த விட்டாலே அவளே கத்துக்குவா” என்று நற்சான்றிதழ் வழங்கியதில்,

ரிஷி கோபமாக “அவளுக்குக் கத்துக்குடுக்கவாடா உனக்கிட்ட அனுப்புனேன்? இதுல சர்டிபிகேட் வேற குடுக்குற” என்று பொரிய,

துருவ் “இல்ல நண்பா… நான் அவளுக்கு எதுவும் சொல்லித்தரல. பட் நான் ஒர்க் பண்றதை பார்த்து அவளே கத்துக்குறா. இதுக்கு அப்பறம் அவளை எப்படி ஹோல்டு பண்றதுன்னு எனக்குப் புரியல” என்றான் சற்று குழப்பமாக.

சைதன்யா சிறிது யோசித்தவன் விஷமமாக, “நீ சொல்றதை பார்க்கும்போது, அவளுக்கு மன தைரியம் ரொம்ப ஜாஸ்திடா. நீ அவகிட்ட ஸ்ட்ரிக்ட் ஆ நடந்துக்கிட்டாலும், அதை சாலஞ்ச்சா எடுத்துக்கிட்டு 6 மாசம் கஷ்டப்படுவோம்னு நினைச்சு நீ சொல்றதை எல்லாம் கேக்குறாள். அவள் மன தைரியத்தை உடைச்சா…” என்று கேள்வியாய் கேட்டு ரிஷியைப் பார்க்க,

அவன், “அவள் வீட்ல அவளுக்கு அன்பை தான் விஷமா குடுத்துருக்காங்க. அவகிட்ட கொஞ்சம் கேரிங்கா பேசி, அன்பா பழகுனா அவங்களுக்காக அவள் என்ன வேணும்னாலும் செய்வாள்” என்றவன், துருவிடம் “நீ அவகிட்ட அன்பா பழகுடா! அவளைக் கூட்டிகிட்டு லண்டனை சுத்து!” என்றான் விஷமாக.

துருவோ “ஆமா நான் இருக்குற வேலைய விட்டுட்டு அவளைக் கூட்டிகிட்டு சுத்தவா?” என்று கடுப்படித்தவனிடம், ரிஷி “நண்பா ப்ளீஸ் டா எனக்காக!” என்று கெஞ்சினான்.

துருவ் “சரிடா அவகிட்ட நான் கேரிங்கா நடந்துகிட்டா என்ன ஆகும்?” எனப் புரியாமல் கேட்க, சைதன்யாவும் ரிஷியும் மர்மமாகச் சிரித்து கொண்டு, “நீ பழகுடா! அப்பறம் உனக்கே தெரியும்” என்றனர்.

உறைதல் தொடரும்…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
59
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்