Loading

மறுநாள் காலை வெகு நேரம் கடந்தும் கூட, பாவையின் துயில் கலையவில்லை. ஆனால், அவளால் கலையப்பட்ட உறக்கம் ஆடவனுக்கு வராமல் அடம்பிடித்தது.

மீண்டும் மீண்டும் வசீகரன் பற்றியான தகவல்கள் அடங்கிய தாள்களை திருப்பி திருப்பிப் பார்த்தவனுக்கு ஒருமுறை கூட அதில் ஒரு வரியும்  மனதில் பதியவில்லை.

மெத்தை மீது உறங்கிக் கொண்டிருந்த பெண்ணவளின் முகத்தில் மட்டுமே விழிகள் நிலைத்து நிற்க, தலையை உலுக்கிக் கொண்டவன், கவனத்தை நிலை நிறுத்த ஹால் சோஃபாவில் வந்தமர்ந்து மீண்டும் படிக்க எத்தனித்து தோற்றுப் போனான்.

“ச்சே…” என அந்த தாள்களையே தலையில் வைத்து நொந்து அமர்ந்திருந்தான் தஷ்வந்த்.

சோம்பல் முறித்து அப்போது தான் வெளியில் வந்த மாதவ், தஷ்வந்த் அமர்ந்திருந்த நிலை கண்டு, “என்ன பாஸ்… காலைலயே பேப்பரும் கையுமா உட்காந்துருக்க?” என்ற கேள்வியுடன் அவன் அருகில் அமர்ந்தான்.

பெருமூச்சுடனும் குழம்பிய முகத்துடனும், அந்த தாள்களை அவனிடம் நீட்டியவன், “மாம்ஸ் பத்தின டீடெய்ல்ஸ்.” என்றிட,

அதில் வேகமாக, அதனை வாங்கிப் பார்த்து விட்டு, “எப்படிடா கலெக்ட் பண்ணுன?” எனக் கேட்டான் ஆர்வத்துடன்.

அன்று, மஹாபத்ரா ஆர்வமின்றி போனை வைத்ததில், மாதவிற்கும் பெரியதாக நம்பிக்கை இல்லை.

“பத்ரா…” ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டதில், வியப்பானவன், “நான் தான் சொன்னேன்ல. உன் கேர்ள் ஃப்ரெண்ட், நீ மலையை பேத்து எடுத்துட்டு வர சொன்னா கூட எடுத்துட்டு வருவா…” என்றதில், அவனை முறைத்து வைத்தான்.

அதன் பிறகு, அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவன். அவளும் அவ்விஷயத்தைப் பற்றி பேசவில்லை.

அன்று எப்போதும் போல தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு கிளம்பி கீழிறங்கி வந்த மஹாபத்ரா, டைனிங் டேபிளில் தனது தந்தையும் கேசவனும் ஒரு சேர அமர்ந்திருப்பதைக் கண்டு,” குட் மார்னிங் நானா, ஹாய் அங்கிள்.” என்றவள், தட்டை எடுத்து உணவை வைக்கத் தொடங்கினாள்.

இருவரும் அவளை முறைப்பதை உணர்ந்தும் அதனை கண்டுகொள்ளாதவள், “என்ன அங்கிள். ரொம்ப நாளா உங்களை பாக்கவே முடியல. ரொம்ப பிசியா?” எனக் கேட்டிட,

“மணிமேகலை ஒரு இடத்துல இருக்குறதா நியூஸ் வந்துச்சு. அதான் உன் அம்மாவை தேடி போயிருந்தேன்.” என்றதில், வாய்க்கு சென்ற உணவு பாதியிலேயே நின்று விட, விழியை நிமிர்த்தி மனதிலிருந்த ஆர்வத்தை வெளிக்காட்டாமல் கேள்வியாக பார்த்தாள்.

அப்பார்வையில், “ஆனா, கிடைச்ச நியூஸ் தான் தப்பு போல. அவள் அங்க இல்ல.” என வருத்தம் தோய்ந்த குரலில் கேசவன் கூற, எப்போதும் ஏற்படும் ஏமாற்றத்தை துடைத்து எறிந்து விட்டு, இயல்பாக உண்டாள்.

கேசவனே மீண்டும், “அவளை விடு. நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என சற்றே ஆதங்கத்துடன் வினவ,

“பார்த்தா தெரியல சாப்பிட்டுட்டு இருக்கேன் அங்கிள்.” என புன்சிரிப்புடன் பார்த்தாள்.

ஹர்மேந்திரன் தான் பொறுமை இழந்து, “அவன் அதை பத்தி கேக்கலைன்னு உனக்கு தெரியும் மஹா.” என்று சற்று அழுத்தம் பொங்க கூற,

“வேற எதை பத்தின்னு கேட்டா தான சொல்ல முடியும் நானா.” என அவளும் நாசுக்காக பேசினாள்.

அதில் பெருமூச்சு விட்ட கேசவன், “அந்த தஷ்வந்த் பயலோட உனக்கு என்ன பழக்க வழக்கம் வேண்டியது இருக்கு?” இம்முறை கோபத்துடன் கேட்க, அதே கோபம் தந்தையின் முகத்திலும் இருப்பதைக் கண்டவள்,

“இதென்ன கேள்வி அங்கிள். நானும் அவனும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்.” என அசட்டையாக பதிலுரைத்தாள்.

“இதுக்கு முன்னாடி நீ இப்படி இருந்தது இல்லையே மஹா…” சினத்துடன் கூறிய ஹர்மேந்திரனுக்கு, அவள் முறையற்று பேசுவது பெரியதாக தெரியவில்லை. அதற்காக தேர்ந்தெடுத்த ஆளை தான் பிடிக்கவில்லை.

“இதுக்கு முன்னாடி நான் அவனை பார்க்கலயே நானா” அவளும் உதட்டைப் பிதுக்கி பதில் அளிக்க, அவர் பல்லைக்கடித்தார்.

கேசவன் தான், “சரி என்னவோ போகட்டும். அவனுக்கு எதுக்கு பாடி கார்டு, வீடு, கார் எல்லாம்?” எரிச்சலாக கேட்க,

பக்கென சிரித்தவள், “சோ, இப்ப உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை நான் லிவ் இன்ல இருக்குறது இல்ல. அவன் கூட இருக்குறதுல தான்…” என அர்த்தப்பார்வை வீச, இரு பெரியவர்களும் திணறினர்.

பின் அவளே, “அவன் என் பாய் ஃப்ரெண்ட். என் கூட இருக்குற வரை, நான் அவன் நிழல் மாதிரி தான் இருப்பேன். தென், எப்போ பிரேக் – அப் பண்ண தோணுதோ பண்ணிடுவேன். தட்ஸ் இட். இதுக்கு ஏன் இவ்ளோ டிஸ்கஷன்?” என்பது போல பார்த்தவள், கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, ஹர்மேந்திரன் அவளைத் தடுத்தார்.

“இது லிவ் இன் ரிலேஷன்ஷிப்போட முடிஞ்சு போறது வரை, அவனுக்கு நல்லது மஹா. அதை தாண்டி காதல் கல்யாணம்ன்னு வந்து நின்னுச்சு…” என்றவர் வார்த்தையை முற்றுப்படுத்தாமல் பார்வையாலேயே எச்சரிக்கை செய்தார்.

“இதுக்கு இவ்ளோ சீன் இல்ல நானா…” என ஒரு நொடி உள்ளுக்குள் சுருக்கென வைத்தாலும் அதனையும் ஒதுக்கி தள்ளி விட்டு வாசல் நோக்கி நடந்தவள், மீண்டும் அவள் தந்தையிடம் வந்தாள்.

இம்முறை அதில் குறும்பு இல்லை. அதீத அழுத்தமே இருந்தது.

“அவன் என் கூட இருக்குற வரை, அவன் மேல சின்ன கீறல் பட்டா கூட, அதை செஞ்சவங்களுக்கும், செய்ய சொன்னவங்களுக்கும் நான் மிருகமா மாறிடுவேன். அது யாருன்னு பாக்குற அளவு எனக்கு பொறுமை இல்லை.” என நேரடியாகவே தந்தையையும் கேசவனையும் மிரட்டி வைத்தவளின் முகத்தில் ரௌத்திரம் ஜொலிக்க, அவர்கள் திகைத்திருக்கும் போதே, நொடியில் அதனை சமன்செய்தவள், “பை நானா, பை அங்கிள்” என்று இனிமையாக கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

ஆனால், உள்ளுக்குள் கனன்ற கோபம் ஏனோ குறையமாட்டேன் என அடம்பிடித்தது. அதை ஸ்டியரிங்கில் காட்டியவள், கோபம் குறையும் வரை, சாலையில் முரட்டுத்தனமாக காரை ஓட்டி, சில நிமிடங்களில் தன்னிலை பெற்றாள்.

மீண்டும், அவர்களது கல்லூரி வாழ்க்கை சீராகவே சென்றது. கேலியும் குறும்பும் வழியும் அந்நாட்கள் சீனியர்களுக்கும் ஜுனியர்களுக்கும் இனிமையாக அமைந்தது.

இப்போதெல்லாம், தஷ்வந்த்தும் மஹாபத்ரா எது செய்தாலும் கண்டுகொள்வதில்லை. அவள் முத்தமிட்டாலும் சரி, வளவளவென பேசினாலும் சரி, இது எதுவும் என்னை பாதிக்காது என்ற இறுமாப்புடனே அவளுடன் பட்டும் படாமல் இருந்து கொண்டான்.

முக்கியமாக அவளிடம் தேவையற்று வீண் வாதங்களும் செய்வதில்லை. அவ்வாதங்களால், அவனது மனநிலை சீர்குழைவது பிடிக்கவில்லை. ஒவ்வொரு நேரமும், அவள் புறம் அல்லவா மனம் சாய்ந்து தொலைக்கிறது என்ற பயம் அவனுக்கு.

அவன் அவளை தவிர்ப்பது புரிந்தாலும், அதை எல்லாம் கணக்கில் எடுக்காமல், அதே முரட்டுத்தனமும் அதே குறும்பும் கொண்டு வளைய வந்த மஹாபத்ரா, அவனை ரசிப்பதை மட்டும் விடவேயில்லை.

இங்கோ, அமிஷ் தங்கையை அழைத்துக் கொண்டு மந்த்ராவின் வீட்டிற்கு வந்தாலும், அங்கு பச்சை தண்ணீர் கூட அருந்துவதில்லை. அவள் மீதான பார்வையும் அறவே இல்லை.

முதலில் அதை பெரியதாக எடுக்காதவளுக்கு, நாட்கள் செல்ல செல்ல, அவனது ஒதுக்கம் ஒரு வருத்தத்தை கொடுத்தது உண்மை தான். ஆனால், அதனை புரிந்து கொள்ளும் நிலையில் தான் அவள் இல்லை.

பத்மாவும் மகளை அதட்டினார். “நீ அன்னைக்கு அந்த தம்பியை அப்படி பேசுனதுனால தான், இப்ப ஒரு வாய் காபி கூட குடிக்காம இருக்கு. உன் அப்பாவுக்கும் அமிஷ் தம்பி கூட பேசுற நேரம்லாம் மனசு லேசாகுதுன்னு பெருமையா சொல்லிப்பாரு தெரியுமா. இப்ப அவரும் ரொம்ப வருத்தப்படுறாரு. வீட்டுப்பிள்ளை மாதிரி இருந்த தம்பியை இப்படி ஒதுங்க வச்சுட்ட மந்த்ரா நீ.” என விவரம் தெரியாமல் அவர் ஆதங்கத்தை கொட்டினார்.

அவன் வரவை தந்தை மிகவும் விரும்புவது அவளுக்கு தெரியும் தான். ஆனால், தானும் அல்லவோ விரும்புகிறோம் அது தானே பிரச்சனையே… என மனம் புலம்பியதில் ஒரு நொடி திகைத்தவள், ‘அவன் உன்ன அடிச்சு இருக்கான். உனக்குலாம் வெட்கமே இல்லைல.’ என்று அதட்டி அவ்வெண்ணத்தை குழி தோண்டி புதைத்தாள்.

ஆனாலும் தந்தையின் வருத்தம் அவளையும் தாக்க, அவளே அமிஷிடம் பேசினாள்.

“சாரி.” அவள் எங்கோ பார்த்து கூற,

அப்போது தான் கல்லூரிக்கு வந்து வண்டியை நிறுத்தியவன், சுற்றி முற்றி பார்த்து விட்டு, “நீ வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசுறன்னு நினைக்கிறேன்” என்றான் கிண்டலாக.

அதில் முறைத்தவள், “நான் உங்ககிட்ட தான் சொல்றேன். சாரி. இனிமே நீங்க என் வீட்ல எப்பவும் போல இருங்க.” என்றதில், அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவளோ வேகமாக, “அப்பா வருத்தப்படுறாரு. என்னால தான் நீங்க வீட்ல எதுவும் சாப்பிட மாட்டுறீங்கன்னு, அம்மா என்னை திட்டுறாங்க.” என்றாள் முணுமுணுப்பாக.

“ஓ! அவங்க திட்டுனதுனால தான் மேடம்க்கு உறுத்துது. இல்லன்னா, உனக்கு பேச தோணிருக்காது அப்டி தான?” எனக் கேட்டவனின் குரலில் இருந்தது ஏமாற்றமா? கேலியா? வருத்தமா என்பதை பிரித்தறிய இயலாமல் அவள் விழித்தாள்.

அவ்விழிகளுக்குள் மீண்டுமொரு முறை தன்னை தொலைத்தவன், “சரி உன் அப்பாவுக்காக நானும் எப்பவும் போல இருக்கேன். ஆனா, உன் வீட்ல எது சாப்பிட்டாலும், அதுக்கு ‘பே’ பண்ணிடுவேன். ஓகே வா” என்றதில், அவளுக்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது.

“இல்ல” எனப் பேச வரும்போதே, அதனைக் காதில் வாங்காமல் சென்று விட்டவனை தவிப்புடன் பார்த்தாள் மந்த்ரா.

“இதோ வந்துட்டான் காதல் ரோமியோ…” முகத்தில் கோபமும் ஆற்றாமையும் பொங்க வந்தவனைக் கண்ட ஆஷா கேலி செய்ய,

“யாரு நானு. அதை நீ பார்த்த…?” என்று முறைத்தான்.

“நீ தான் டியூஷன்லயே காதலை வளக்குறியேடா.” மஹாவும் தன்பங்கிற்கு வாரியதில், “நானே மண்டை சூடாகி இருக்கேன். ரெண்டு பேரும் சும்மா இருந்துடுங்க.” என்றவனின் குரலில் இருந்த வாடலில் இருவரும் விளையாட்டை கை விட்டு,

“என்னடா ஆச்சு?” என்றனர்.

அவனும் நடந்ததை கூறி, “அவள் வேணும்ன்னே என்னை அவாய்ட் பண்றா. அவள் என்னை லவ் பண்ணலைன்னா கூட, நான் சும்மா இருந்துடுவேன். ஆனா, மனசுல ஒண்ண வச்சுக்கிட்டு வெளில ஒண்ணு பேசுறா” என்றான் கடுப்பாக.

மஹாபத்ரா தான், “அவளுக்கு என்னதான் பிரச்சனையாம்?” எனக் கேட்டதில்,

“ப்ச். நான் ஒன்னு கெஸ் பண்ணிருக்கேன். கண்டிப்பா அதுவா தான் இருக்கும்…” என்றவன்,

அவள் அப்பா அம்மாவுக்கு லேட் மேரேஜ். அது போக, அவங்க மேரேஜ் முடிஞ்சு 15 வருஷம் கழிச்சு தான் இவளே பிறந்து இருக்கா. சோ, இப்போ அவங்களுக்கு பேரன் பேத்தியை கல்யாணம் பண்ணிக் குடுக்குற வயசு. பெருசா ரிலேட்டிவ்ஸ்ன்னு யாரும் இல்ல. அதான், மேடம் மனசை இரும்பு போட்டு பூட்டி வைக்கிறாங்களாம்.” என்றான் இறுதியில் நக்கலாக.

முதன் முறை அவளது பெற்றோரைக் கண்டு, அவனுக்கு குழப்பமே வந்தது. அதன்பிறகு அவளது தந்தை தான் இக்கதையை கூறினார்.

“காலேஜ் முடிக்கிற வரை அவளுக்கு டைம். அப்பவும் அவள் இதே மாதிரி பண்ணிட்டு இருந்தான்னா, கடத்திட்டு போய் உங்க ரெண்டு பேர் முன்னாடியும் கல்யாணம் பண்ணிடுவேன்…” என்று உறுதியாக கூறியவனும் அறியவில்லை, அவளை விட்டு தானே விலகப் போவதை.

அவன் கூற்றில், மஹாபத்ரா சிரித்து வைக்க, ஆஷா அவனை முறைத்து, “அதான் பிரச்சனை என்னன்னு உனக்கே தெரிஞ்சுடுச்சே. நீயே பேச வேண்டியது தான” என்றதில்,

“நானா போய் பேசுனா, அவள் என்னை கண்டுக்கவே மாட்டா. அவளாவே சொல்லட்டும். எங்க போயிட போறா…” என சாவகாசமாக கூறியவனுக்கு, எப்படியும் அவள் மனதை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

அதில் தலையில் அடித்துக் கொண்ட ஆஷா, மேலும் அந்த பேச்சில் ஈடுபட இயலாமல், “மஹூ என் வண்டியை சர்விஸ்க்கு விட்டுருக்கேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும். மதனை கூட்டிட்டு போக சொல்லு.” என்றாள்.

சற்று யோசித்த மஹாபத்ரா, “மதன் இருக்கட்டும் ஆஷா. நீ காரை எடுத்துட்டு போயிட்டு வா.” என்றதில்,

“ஐயோ, இது பீக் அவர்டி. க்ளச்ச மிதிச்சு பிரேக் போட்டு பிரேக் போட்டு, ஷாப்பிங் போறதுக்குள்ள கால் வலி வந்துடும். மதனையும் என் கூட அனுப்பு மஹூ. அவன் தான் ஷாப்பிங்கு ஏத்த கரெக்ட் பீஸ்.” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

அதற்குள் கார் சாவியை எடுத்துக் கொண்டு மதனை வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியதில், அவனும் உடனே வந்து விட்டான்.

அமிஷ் தான், “அப்படி என்ன அவன் ஷாப்பிங் பீஸ்?” என யோசித்தவாறு கேட்க,

“என்னை ஒரு பேக் கூட தூக்க விடமாட்டான் தெரியுமா. கஃபட்டேரியா போனா, நான் போய் உட்கார்துறதுக்குள்ள, எனக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி அவனே கொண்டு வந்துடுவான். இப்ப நானா ஷாப்பிங் போகலாம் என்னால முடியாது…” என்று ஜகா வாங்கினாள்.

எப்போதுமே, வெளியில் செல்ல வேண்டுமென்றால், மதனுடன் தான் செல்வாள். அது போலவே இன்றும் கூற, அமிஷ் தான் “அடப்பாவி மதன், நான் ஷாப்பிங் போறப்ப, நீ கார விட்டே வரமாட்டியேடா” என வாயில் கை வைத்தான்.

மதனோ நெளிந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஓரளவு தான் தெலுங்கு தெரியும். ஆஷா பேசியது கொஞ்சம் புரிந்திட, அமிஷ் கூறியதை அவனது உடல்மொழியை வைத்தே புரிந்து கொண்டவன்,

“என்ன அமி… நம்ம பசங்க பையை தூக்கிட்டு வருவோம். பொண்ணுங்க எப்படி தூக்கிட்டு வருவாங்க. அதுவும் இல்லாம, மஹா என்னை நம்பி தான இவங்களை என் கூட அனுப்புறா. அப்போ நான் தான பாத்துக்கணும்” என அரை குறை தெலுங்கில் கூறியதில்,

“ஸ்ஸ்… ப்பா… புல்லரிக்குது…” என கிண்டலாக கரத்தை சொறிந்து கொண்ட ஆஷா, “மஹூ, ப்ளீஸ் இந்த பீசை நான் கொஞ்ச நேரம் தத்து எடுத்துக்குறேன்” என்றாள் கெஞ்சலாக. அவள் கேட்டது என்னவோ சாதாரணமாக தான், ஆனால், மஹாபத்ராவின் பார்வை மதனை துளைத்தது.

“நானும் தான் ஷாப்பிங் போவேன். அப்பவும் நீ கார்ல தான இருப்ப. அப்போ நான் பொண்ணு இல்லையோ” அவனுக்கு புரியும்படி தமிழிலேயே கேட்டு, அவனை மேலும் கீழும் பார்த்து வைக்க, மதனுக்கு இதயமே நின்று விட்டது.

அவள் பேசிய மொழியால் மற்ற இருவருக்கும் அவள் கேட்டது புரியவில்லை. அதில் ஆஷா, “ப்ச், எத்தனை டைம் சொல்லிருக்கேன். நாங்க இருக்கும் போது டமிழ்ல பேசாதேன்னு. ஒண்ணுமே புரியல.” என முகத்தை சுருக்கிட,

“எமி லேது… ஷாப்பிங்க்கு நானும் வரேன்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்றவள், மதனை காரை எடுக்க சொல்லி கண்ணை காட்ட, அவன் அங்கிருந்து ஓடியே விட்டான்.

“ஹே. சூப்பர். வா போகலாம்.” ஆஷா கூறியதில், “ஆமா வாங்க போகலாம்” என்று முதல் ஆளாக அமிஷ் கிளம்பினான்.

அதில் திகைத்த ஆஷா, “நீ எங்க வர்ற? நீ போய் உன் ஆளை கரெக்ட் பண்ற வழியை பாரு. ஷாப்பிங் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு…” என மிரட்டியவள், ஏதேதோ பேசி அவனைக் கத்தரித்து விட்டாள்.

அவனது காதல் தனதில்லை என்று ஏற்றுக்கொள்ள அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்த திடீர் ஷாப்பிங். அதிலும் இவன் உடன் வந்தால், மேலும் காயமே அதிகமாகும் என்றே அவனை தவிர்த்தாள்.

அதனை புரிந்து கொள்ளாத அமிஷோ, “போங்கடி என்னை கழட்டி விட்டுட்டா போறீங்க. போற வழில கார் பஞ்சர் ஆகி நின்னுடும். ஷாப்பிங் பண்ணதை பில் போட முடியாமல் கார்ட் க்ரேஷ் ஆகிடனும்.” என சாபமிட்டபடி அங்கிருந்து செல்ல, ஆஷா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இதற்கிடையில், தஷ்வந்திற்கு போன் செய்த மஹாபத்ரா, “எங்க இருக்க அமுலு?” எனக் கேட்க, “வீட்டுக்கு போக போறேன்” என்றான்.

“நம்ம ஷாப்பிங் போகணும். சோ, என் காரை எடுத்துட்டு மாதவை வீட்டுக்கு போக சொல்லு.” என்றவள், அவன் பேச்சை கேளாமல் வைத்து விட, அவன் போனை முறைத்துக் கொண்டிருந்தான். 

“என்னடா… போனை முறைச்சுட்டு இருக்க?” மாதவ் கேட்டதில்,

“அவளை முறைக்க முடியல. அதான்” என்றான் கடுப்பாக.

அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவன், அவள் தோள் மீது கை போட்டு, “பாஸ்… நான் ஒன்னு சொல்லட்டா?” என பீடிகையுடன் ஆரம்பித்தான்.

தஷ்வந்த் என்னவென்று பார்க்க, “இப்ப வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போனதும் சொல்றேன்” என்று யோசிப்பது போன்ற பாவனையுடன் கூறி, நண்பனின் தீப்பார்வையை பரிசாக பெற்றுக் கொண்டான்.

சிறிது நேரத்தில், நால்வரும் ஃபோரம் சுஜானா மால் நோக்கி பயணித்தனர்.

தஷ்வந்த் காரின் அருகில் வந்ததுமே, தெளிவாக மதனுக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள, மஹாபத்ரா முறைத்ததையும் கண்டுகொள்ளாதது போல மதனிடம் பேசினான்.

பின் பெண்கள் இருவரும் பின்னால் அமர, அயன் செய்யப்பட நீள கூந்தலை முன்னாடி போட்டபடி மஹாபத்ராவிடம் தெலுங்கில் ஏதோ விதாதித்துக் கொண்டிருந்த ஆஷாவை, கண்ணாடி வழியே அவ்வப்பொழுது பார்த்தபடி வந்தது மதனின் விழிகள்.

இருவரும் பேசும் தெலுங்கில் கடியான தஷ்வந்த், எஃப். எம் – ஐ ஆன் செய்ய அதிலும் தெலுங்கு பாடலே ஓடி மேலும் கடுப்பேற்றியது.

அதிலேயே மதன் பென்ட்ரைவை மாட்டி இருந்ததில், அதன் மூலம் தமிழ் பாடலை போட்டு அலற விட்டான்.

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான்

காதல் வராதா காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா

காதல் வராதா காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு… காதல் வராதா…

என்ற பாடல் அடைத்த கதவை தாண்டியும் வெளியில் கேட்டது.

“ச்சை இதுலயும் காதலா…?” என தலையில் அடித்துக் கொண்டவன், வேறு பாடலை மாற்ற,

அடியே அடியே

இவளே அடி என் வாழ்க்க

பாழாக்க பொறந்தவளே

அடியே அடியே இவளே

அடி என் வாழ்க்க பாழாக்க

பொறந்தவளே…

பொண்ணுங்களை எல்லாம் குத்தம் சொல்லமாட்டேன்…

நீ மட்டும் தான் மோசம்.

என அந்தோணி தாசன் உச்சஸ்தாதியில் கத்திட, “ம்ம் இது ஓகே. சிட்டுவேஷன் லிரிக்ஸ்.” என்று திருப்திக் கொண்டவன், கையை கட்டிக்கொண்டு அமர, சத்தம் காதை கிழித்ததில், ஆஷா முகத்தை சுருக்கினாள்.

மஹாபத்ரா, காதை பொத்திக் கொண்டு, “தஷ்வா ரெடியூஸ் த வால்யூம்!” என்றதில்,

“எனக்கு இவ்ளோ சத்தமா கேட்க தான் பிடிக்கும்…” என்று தோளை குலுக்கினான் அவளைப் போன்றே.

அந்த பாவனைகளும் பாவையின் மனதில் படமாக, ஆஷா தான், “ஓ! ஷிட். ஸ்டாப் திஸ் நியூசன்ஸ் தஷ்வந்த்…” என்றதில், இன்னும் சத்தத்தை கூட்டினான்.

அரக்கி உன்ன

உன்ன உன்ன மறக்க

சர சர சர சரக்க மொத

மொத மொற ஊத்தி குடிச்சேன்

கிறுக்கி உன்ன உன்ன உன்ன

வெறுக்க முடி முடியல அடியே

அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

“ஐயோ… மஹூ!” என தோழியிடம் குறைபட, அவளோ “வேணும்ன்னா உன் காதுல பஞ்சு வச்சுக்கோ.” என அசட்டையாக கூறி விட்டு ஜன்னல் வழியே விழிகளைப் பதிக்க, “என்னது?” என திகைத்தாள்.

குறைந்தபட்சம், அவனை ஒரு அறையாவது அறைவாள் என எதிர்பார்த்தவளுக்கோ, அவளது மாற்றம் கண்டு வயிற்றில் புளியை கரைத்தது.

மதனால் தான், சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை நிலை.

ஆஷாவைப் பார்ப்பதற்கு கேடயமாக உபயோப்படுத்திக் கொண்டிருந்த கண்ணாடியை திருப்பிய தஷ்வந்த், மஹாபத்ராவின் கோப முகத்தை காண ஆர்வமாக பார்க்க, அவளோ அவன் ஏதோ சாஃப்ட் ரொமான்டிக் பாடலை போட்ட ரீதியில் ரசித்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம், எதேச்சையாக அவளும் கண்ணாடியில் தஷ்வந்தின் விழிகளைக் காண, அவனோ ‘இவள் என்ன கோபப்படாம உட்காந்துருக்கா’ என விழித்தான்.

அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவள், சிறு புன்னகையுடன் கண்ணை சிமிட்டினாள். அதில் பட்டென பார்வையை திருப்பியவன், என்ன நினைத்தானோ, சத்தத்தை குறைத்து பாடலையும் மாற்றினான்.

காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தர போகிறாய்

கிள்ளுவதை கிள்ளி விட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

எஸ். பி. பி. உருகும் குரலில் அனைவரையும் உருக வைக்க, அர்த்தம் புரியாவிடினும், அந்த இன்னிசையில் ஆஷாவும் அமைதி பெற்று, அதனை ரசித்துக் கேட்டாள். மஹாபத்ராவோ சொல்லவே வேண்டாம். அவளது கவனம் முழுக்க ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதிலும், அதோடு அவ்வப்பொழுது தஷ்வந்தின் அழகை களவாடுவதிலும் தான் இருந்தது.

அவளது பார்வை அவனுள் ஏதோ செய்ய, சட்டென கண்ணாடியை அவள் முகம் தெரியாவாறு திருப்பி விட்டான்.

இத்தனை நேரமும், ‘அடப்பாவி தஷு. கண்ணாடியை திருப்பி விட்டுட்டியே’ என ஆஷாவை காண முடியாத குமுறலில் இருந்த மதன், இப்போது அவள் முகம் தெரிந்ததில் நிம்மதியாகி, எப்போதும் போல அவளறியாமல் கள்ளத்தனமாக பார்த்திருந்தான்.

தஷ்வந்தை பார்க்கும் பொருட்டு, முன்னாடி பார்த்த மஹாபத்ராவிற்கு, அங்கு மதன் ஆஷாவை காதல் வழியும் கண்களோடு காண்பதை கண்டு, அவளுள் குழப்பம்.

கண்ணை சுருக்கி, ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தவள், “மதன்… ரோடு முன்னாடி இருக்கு!” என கண்டிப்புடன் கூற, அதில் பதறியவன், பிரேக்கை அழுத்தி விட்டான்.

மஹா உடன் வருவதை அறிந்தும், தான் செய்த முட்டாள்தனத்தில் தன்னை நொந்தவன், அதன் பிறகு மறந்தும் கூட ஆஷாவைப் பார்க்கவில்லை.

பல பார்வை பரிமாற்றங்களுடன் நால்வரும் மாலுக்குள் நுழைய, மஹாபத்ராவின் முறைப்பில் பதறிய மதன் உள்ளே வரவில்லை என்று மறுக்க, ஆஷா தான், வம்படியாக அழைத்தாள்.

அதில் வேறுவழியற்று அவனும் வர, நால்வரும் எக்ஸ்கலேட்டரில் ஏற எத்தனிக்கும் போது, மஹாபத்ரா தஷ்வந்தின் கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.

அவன் என்னவென பார்க்க, அவளோ ஆஷாவிடம், “நீ மதன் கூட போய் உனக்கு வேணும்ன்றதை வாங்கு. நான் கஃபட்டேரியா போய் ஒரு காபி குடிச்சுட்டு ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றதில், மற்ற இருவரும் கிளம்பினர்.

தஷ்வந்த் தான் புரியாமல், “காஃபி குடிக்கவும் மேல தான போகணும்” என்று வினவ, “நம்ம லிஃப்ட்ல போகலாம்” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.

அங்கோ, கூட்டமாக இருந்ததில், “இதுல வெய்ட் பண்ணி போறதுக்குள்ள உண்மையாவே தலைவலி வந்துடும் பத்ரா. எஸ்கலேட்டர்ல போகலாம்” என்றதில், “முடியாது நான் லிஃப்ட்ல தான் வருவேன்” என்று வீம்பாக நின்றாள்.

அங்கோ கூட்டம் குறைந்தபாடில்லை. அடுத்து அடுத்து ஆட்கள் வர, அத்தனை கூட்டத்தினுள் செல்லவும் பிடிக்காமல், மஹாபத்ரா பத்து நிமிடமாக காத்திருக்க, பொறுமை இழந்த தஷ்வந்த்,

“வர வர உனக்கு எதுல பிடிவாதம் பிடிக்கிறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு பத்ரா.” என சலித்துக்கொண்டு தரதரவென இழுத்துச் சென்றான் எஸ்கலேட்டருக்கு.

அவளோ, “விடுடா என்னை. உன்னை கொன்றுவேன். நான் லிஃப்ட்ல தான் வருவேன். விடு” என அவள் கதறுவதை காதில் வாங்காமல், அதில் ஏற்றி விட, முதலில் விழித்தவள், பின் கண்ணை மூடி அவன் கையை இறுக்கி பற்றிக்கொண்டாள்.

‘பொது இடத்தில இப்படி பிடிக்கிறாளே’, என எரிச்சலுற்று திரும்பி அவளைப் பார்த்தவன், பார்த்த நொடியில் சிரித்து விட்டான்.

அவளுக்கு எஸ்கலேட்டரில் செல்வதானால் மட்டும் சிறிது அடிவயிறு கலங்கும். எப்போதும் மின்தூக்கியை மட்டுமே உபயோகிப்பவள், இன்றும் வயிறு கூசியதில் நெளிந்து கொண்டு அவனை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, அவனுக்கு தான் அவளது பதற்றத்தைக் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

முதல் தளத்தை வந்தடைந்ததும் தான், அவள் கண்ணை விழித்துப் பார்க்க, கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்த தஷ்வந்த், மீண்டும் அவளை இழுத்துச் சென்று இரண்டாம் தளம் செல்லும் பொருட்டு, எஸ்கலேட்டரில் ஏற்ற, “அடேய்…” என பல்லைக்கடித்தாள்.

அவனுக்கோ ஒரே குதூகலமாக இருந்தது. இம்முறை கரத்தை விட்டு ஆடவனையே இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அதில் தடுமாறினாலும், அதனை கருத்தில் கொள்ளாமல், “உனக்கு பயமா இருக்கா பத்ரா…” என அவள் காதோரம் குனிந்து கேலியாக கேட்டான்.

அப்பொழுது தான், சிலிர்த்து நிமிர்ந்தவள், அவனது விழிகளில் தெறித்த கிண்டலில், சிவந்து, “யாருக்குடா பயம் எனக்கு பயம்லாம் இல்லையே…” என தோளைக் குலுக்கி, எஸ்கலேட்டரில் இருந்து தப்பித்து இரண்டாவது தளத்தில் நின்றாள்.

“ஓ… அப்போ நான் பயப்பட கூடாதுன்னு என்னை கட்டி பிடிச்சு இருக்கியா?” மீண்டும் அதே நக்கல் தொனி.

கண்ணை மூடித் திறந்து நாக்கை கடித்துக் கொண்டவள், கெத்தை மட்டும் விடாமல், “ஆ… ஆமா. உன்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்ல” என லேசாக உளறி விட்டு, அப்போது தான், அவனை அண்டி இருப்பதும் புரிந்து, மெல்ல விலகினாள்.

ஏனோ, அவளது கன்னங்கள் இரத்த சிவப்பாகி இருந்தது. எப்போதும் அவனை நேராய் பார்க்கும் கண்கள், தன்னை கண்டுகொண்டதாலோ அல்லது இன்று கட்டி அணைத்தும் கூட, அவன் மறுப்பு கூறாததாலோ, அவனைப் பாராமல் தவிர்த்தது.

அத்தவிப்பு அவனுக்குள்ளும் குறுகுறுப்பை மூட்ட, மெல்ல அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன், அவள் மீதிருந்த பார்வையை சற்றும் மாற்றாமல், “பத்ரா” என கிசுகிசுப்பாக அழைக்க, அவளுக்கோ மொத்தமும் மறந்தே விட்டது அவனது இந்த செயல்களில்.

விரிந்த விழிகளுடன், அவனை வியப்பாக பார்த்ததில், “நம்ம தர்ட் ஃப்ளோர் போகணும்… சோ!” என குறும்பு சிரிப்புடன் கூறியவன், மீண்டுமாக தரதரவென எஸ்கலேட்டர் நோக்கி, இழுத்துச் சென்றதில், கிறக்கம் துறந்து, “டேய்! விடுடா.” என கத்தத் தொடங்கினாள் மஹாபத்ரா.

காயம் தீரும்!

மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
36
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்