1,150 views

மகேஷ் நடத்திய கலவரத்தில் நள்ளிரவை தொட்டு விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் சூரியன் வந்து விடும் சூழ்நிலையில் அவனை எப்படி அனுப்புவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். தொந்தரவாக இருப்பது தெரியாமல்,
 
“சித் பிரண்ட்ஸ் கால் பண்ணிட்டே இருக்காங்க இப்ப நீ கிளம்புறியா இல்லையா.” என்றான் பிடிவாதமாக. 
 
அன்பினி யாருக்கோ மெசேஜ் செய்வது போல், “அடிமை இவன எப்படியாது அனுப்பிடு இல்லன்னா என்னை பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிடுவான். அப்புறம் நாளைக்கு  மீட்டிங் அட்டென்ட் பண்ண முடியாது.” என்று அக்னிக்கு அனுப்பினாள்‌.
 
 
நோட்டிபிகேஷன் ஓசையில் கைபேசியை எடுத்தவன் முழுவதையும் வாசித்தான். பதிலுக்காக அன்பினி காத்துக் கொண்டிருக்க, கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான் அக்னிசந்திரன். அவன் செயலில் பற்களை கடித்தவள்,
 
“அடிமை கொன்றுவேன் உன்ன” என்று அனுப்பினாள்.
 
“அறிவில்ல உனக்கு. அவன் தான் லூசுன்னு தெரியுதுல அப்புறம் எதுக்கு கூட சுத்திட்டு இருக்க. என்னால ஒன்னும் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சா அவன துரத்தி விடு நான் தூங்க போறேன்.” என்று  முறையாக பதில் அனுப்பியவன் உண்மையாகவே தூங்கச் சென்றான் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில்.
 
 
“நான் எங்கடா அவன் பின்னாடி சுத்தினேன் அவன் தான் நான் போற இடத்துக்கு எல்லாம் வரான். அடிக்கடி பாவமா பேசியே துரத்தி விடாம பண்ணிடுறான். காப்பாத்து அக்னி நாளைக்கு மட்டும் மீட்டிங் அட்டென்ட் பண்ணலன்னா அப்பா திட்டிடுவாரு.” என்றதோடு இன்னும் பல குறுஞ்செய்திகளை அவனிடம் பறக்க விட, எதையும் ஓபன் செய்யவில்லை அக்னிசந்திரன். 
 
 
அன்பினியின் நடவடிக்கையை பார்த்த மகேஷ் உள்ளுக்குள் வசை பாடிக் கொண்டிருந்தான் நன்றாக. அக்னி சந்தேகப்பட்டது போல் அன்பினி முத்தம் கொடுக்கும் நேரமே வந்துவிட்டான் அலுவலகத்திற்கு. நடந்ததைப் பார்த்தவன் நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தவன் போல் நின்றிருந்தான். இருவரும் பேசும் சத்தத்தை கேட்டு நடப்புக்கு வந்தவன் இத்தனை நாள் பழகும் தன்னிடம் நெருங்கி பழகாத அன்பினி அவனுக்கு இடம் கொடுத்ததை நினைத்து பொல்லாத கோபத்தை உருவாக்கிக் கொண்டான் அக்னி மீது. அவன் தான் அன்பினியை மயக்கி இருக்கிறான் என்று தவறாக நம்பியவன் எப்படியாவது அவளை அவனிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று சபதம் செய்துக் கொண்டான்.
 
 
“சித்! இதுக்கு மேலயும் என்னால கெஞ்ச முடியாது. உனக்கு என்ன பிடிக்கலைன்னு நினைக்கிறேன். பரவால்ல இனிமே உன்ன எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றவன் முகத்தை அந்தோ பரிதாபமாக வைத்துக் கொண்டு “செத்தாலும்” என்று பேச,
 
“இதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வார்த்தை மகேஷ். காலையில மீட்டிங் இருக்கு அதனால தான் யோசிச்சிட்டு இருந்தேன். எப்ப பாரு இதே மாதிரி பாசமா பேசியே பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்க என்னை. இதான் உனக்கு கடைசி இனிமே இந்த மாதிரி என்கிட்ட பேசாத.” என்று கண்டித்தவள் பத்து நிமிடம் டைம் கேட்டாள் ரெடியாக.
 
அன்பினி வார்த்தை கொதிப்பை கொடுத்தாலும் கோபத்தை காட்டாமல் அவள் காலை சுத்தும் பூனையாக தலையாட்டினான். வெளியில் வந்தவள் அக்னி அறைக்குள் நுழைந்தாள். அறையில் இருக்கும் உள் அறையில் இரவு விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டிருந்தான் அக்னி. கதவு திறக்கும் ஓசையில் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தவன் அமைதியாக படுத்திருக்க, நேராக உள் அறை கதவை திறந்தவள் படுத்துக் கொண்டிருந்தவன் மேல் ஏறி அமர்ந்தாள். 
 
 
அவள் அமர்ந்த அடுத்த நொடி தரையில் விழுந்தாள் அக்னி தள்ளி விட்டதில். இடுப்பு பலமாக சுளுக்கி கொண்டதும், “அடிமை வலிக்குது இப்படியா தள்ளி விடுவ.” என்று புலம்பினாள்.
 
 
“ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க முடியாது என்கிட்ட நெருங்காத. வந்தா இப்படி தான் வலிய அனுபவிக்க வேண்டியதா இருக்கும்.” 
 
“நீ என்ன சைக்கோவாடா? நேரத்துக்கு ஒரு முகத்தை காட்டுற. எந்த முகம் உண்மைன்னு கண்டுபிடிக்கிற வரைக்கும் உன்னை விட்டு நகர மாட்டேன்.” என்றதும் அவளை முறைத்தவன்,
 
“அப்படியே ஓங்கி மிதிச்சேன் அடுத்த வார்த்தை பேச வாய் இருக்காது கிளம்புடி.” என்றான்.
 
 
அவள் அசராமல் இருக்க லேசாக அடிப்பது போல் காலை தூக்கினான். அடித்தாலும் அடித்து விடுவான் என்று பயந்தவள் தற்காத்துக் கொள்ள கைகளை பாதுகாப்பு கவசமாக உபயோகித்துக் கொண்டாள். 
 
“பயம் இருக்குதுல  உயிர காப்பாத்திட்டு கிளம்பு.” என்றவன் கால்களை கீழே போட,
 
“அடிமை நீயும் என் கூட பார்ட்டிக்கு வா. ஒரு ஒன் ஹவர் தான் எப்படியாது இவனை அங்க விட்டுட்டு வந்துடலாம். இல்லன்னா சத்தியமா இந்த இடத்தை விட்டு அவன் நகர மாட்டான்.” என்றாள் பொறுமையாக.
 
“ஏற்கனவே கோபத்துல இருக்கேன். இதுல அவன பத்தி பேசி வெறி ஆக்காம போய்டு‌.” 
 
“ப்ச்! அவன் மேல என்ன கோபம்?”
 
“அவன் மேல உனக்கு என்ன பாசம்” எதிர் கேள்வி கேட்டான்.
 
“நான் அப்படி சொன்னனா”
 
“சொல்லி தெரியுற மாதிரியா இருக்கு. நீங்க பண்றதை பார்த்தாலே தெரியுது. எப்ப பாரு சித் சித்’னு  ச்சைக் கடுப்பா இருக்கு.”
 
அவன் பேச்சில் சிரித்தவள் தோளில் கை போட்டு கொண்டு, “அக்னிக்கு பொறாமை கூட வருமா” என்று தோளை இழுத்தாள்.
 
 
“அடி வாங்காம போக மாட்ட அப்படி தான.” என்று அக்னி கோபமாக வார்த்தை உதிக்க,
 
எழுந்து நின்றவள் “என்னடா நானும் பார்க்கிறேன் சும்மா அடிப்ப அடிப்பன்னு  மிரட்டுற.” என்று சட்டையை மடித்து விட்டு கைகளை முறுக்குவது போல் “எங்க அடிச்சி பாரு அப்புறம் தெரியும் அன்பினி யாருன்னு.” என்று சவால் விட்டாள்.
 
எழுந்தமர்ந்தவன் மேல் இருந்து கீழாக ஸ்கேன் செய்ய, “இந்த முறைப்பு எல்லாம் இங்க ஆகாது. மரியாதையா என் கூட வா. இல்லன்னா என்னை தோற்கடிச்சிட்டு தூங்கு.” என்று அவன் அருகில் கால் வைத்தவள் முகத்துக்கு நேராக சொடக்கிட்டாள்.
 
அவளைப் பார்க்காமல் அக்னி திரும்பி கொள்ள, “என்னடா பயந்துட்டியா உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் தைரியமா இரு.” என்று அவன் தோள்களை தட்டினாள்.
 
 
அதில் அக்னியின் வெப்பம் அதிகரிக்க, முகத்தை திருப்பாமல் உள்ளங்கையை அவள் வலது புற கன்னத்தில் வைத்து  முகத்தை திருப்பி விட்டான் மெத்தையில். சாய்த்தது என்னவோ சாதாரணமாக இருந்தாலும் மெத்தையோடு அழுத்தி மூச்சு விட முடியாதபடி செய்தான். 
 
 
“டேய் கொலைகாரா விடுடா!.” என்று  அவன் மார்பில் அடித்துக் கொண்டிருக்க, அதையும் மற்றொரு கையால் பிடித்துக் கொண்டு,
 
“நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவரா ஆடிக்கிட்டு இருக்க. நீ எல்லாம் ஒரு ஆளு அப்படியே இன்னும் சேர்த்து அழுத்தினேன்னு வை செத்துப்போன உங்க தாத்தன் கிட்ட போய் சேர்ந்துடுவ. இதான் கடைசி அவன உன் கூட பார்க்க கூடாது.” என்றான் அவனுக்கு அவனே போட்ட எல்லையை கடந்து.
 
இப்போது அவனின் முரட்டுத்தனம் வலியை கொடுப்பதற்கு பதில் சிரிப்பை கொடுத்தது. 
உடல் அசைவை பார்த்த அக்னி, “உடம்பெல்லாம் கொழுப்பு டி உனக்கு.”என்று இன்னும் மெத்தையோடு அழுத்தினான்.
 
கையும், தலையும் அவனிடம் சிக்கி படாதப்பாடு பட்டு கொண்டிருக்க, கால்கள் மட்டும் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் துடிப்பதை பார்த்து கொஞ்சம் இரக்கம் வந்தது அக்னியின் மனதில். கைகளை விட்டவன் அடுத்ததாக முகத்தையும் விட,  கோபத்தோடு அவன் தலைமுடியை பற்றிக் கொண்டாள். அக்னி தள்ளிவிட முயற்சிக்க… தோற்கக் கூடாது என்ற பிடிவாதத்தோடு வேதாளம் போல் அவன் மேல் ஏறிக்கொண்டாள்.
 
 
அவள் மேனி தன் மேனியோடு உரச கோபம் கொண்டவன் பலத்தோடு தள்ளிவிட, பசை போல் ஒட்டிக் கொண்டாள் அவன் முடிகளை பற்றிக்கொண்டு.  கோபம் தீரும்வரை முடிகளைப் பிடித்து ஆட்ட ஆரம்பிக்க, வலி எடுத்தது அக்னிக்கு.
 
“ஆஆஆஹா! எருமை மாடே வலிக்குதுடி பிசாசு.” என்றவன் முடிகளை காப்பாற்றிக்கொள்ள போராட,
 
“சாவு என்னை இப்படி தான பண்ண.” என்று விடாமல் அவனை சித்திரவதை செய்தாள். வலி பொறுக்காமல் அக்னி மெத்தையில் சாய்ந்து விட, அவளும் அவனை மெத்தையாக்கிக் கொண்டாள். நடக்கும் கலபரத்தில் அதை உணரும் நிலையில் இல்லாத அக்னி போராட முயற்சித்தான். 
 
 
“சித் இன்னுமா ரெடி ஆகுற.” என்ற மகேஷின் வார்த்தையில் அரண்ட அன்பினி கைகளை தளர்த்தி அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.
 
அன்பினியை காணாததால் தேடி வந்த மகேஷின் காதுகளில் இருவரின் சம்பாஷனைகள் விழ, உச்ச கடுப்பில் நின்றான். அவன் கற்பனையில் இருவரும் வேறு ஏதோ செய்துக் கொண்டிருப்பதாக காட்சிகள் வர, அந்த கடுப்பில் அழைத்து விட்டான்.
 
 
திட்ட வரும் அக்னியிடம், “உஷ்! உஷ்! கத்தாதடா அவன் இங்கையும் வந்திடுவான்.” என்றாள் காற்றுக்கு கூட கேட்காதபடி. 
 
“எழுந்துடு முதல்ல.” என்றவன் எழ முயற்சிக்க,
 
“சத்தம் போடாதடா வந்து தொலைஞ்சிட போறான்.” என்று அவன் வாயை பொத்தினாள் அன்பினி.
 
அப்போதுதான் உணர்ந்தான் அவள் முகம் தன் முகத்தோடு நெருக்கமாக இருப்பதை. தலையை திருப்பிக் கொள்ள, அந்த அசைவு உணர்த்தியது அவள் தன் மேல் தான் இருக்கிறாள் என்று. கோபமும் சங்கடமும் சரிபாதியாக அவனை வாட்ட, 
 
“அவன் எப்படி இங்க வந்தான்.” என்றான்.
 
“சும்மா கால் பண்ணிட்டே இருந்தான் அதான் ஆபீஸ்ல இருக்கன்னு மெசேஜ் பண்ண வந்து நின்னுட்டான்டா” என்று பாவமாக முகத்தை வைக்க, இருட்டில் அந்த அழகை ரசிக்க முடியாமல் போனது அக்னியால்.
 
 
“எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை சாவடிக்கிற தள்ளு டி.”  அவளை தள்ளி விட்டவன் வெளியில் வந்தான்.
 
அவனைப் பார்த்த மகேஷ் அமைதியாக நிற்க, “மேடம் உள்ள ரெடி ஆகிட்டு இருக்காங்க நீ வெளிய நில்லு.” என்று விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டான்.
 
 
‘பண்றதெல்லாம் பண்ணிட்டு மேடமா? இருடா உனக்கு சரியான நேரம் பார்த்து ஆப்பு வைக்கிறேன். என்கிட்ட இருந்து அவளை யாராலையும் பிரிக்க முடியாது. நான் கல்யாணம் பண்ற வரைக்கும் கொஞ்ச நாள் ஒட்டிக்கிட்டு இரு.’ என்று உள்ளுக்குள் அக்னி மீதான வன்மத்தை ஆலமரமாக வளர்த்துக் கொண்டவன் தனக்கான நேரம் இது இல்லை என்பதால் வெளியில் நின்றான்.
 
 
உள்ளே வந்த அக்னி லைட்டை போட்டு, “அவனை வெளிய அனுப்பிட்டேன் மரியாதையா நீயும் வெளிய போயிடு.” என கட்டளையிட்டான். 
 
 
“நீயும் வா அடிமை.” என்றவள் சோர்வாக மெத்தையில் படுத்தாள்.
 
“பொறுமையா பேசிக்கிட்டு இருக்கிறதால தலைக்கு மேல ஏறி உட்காராத. ஏற்கனவே நீ பண்ணதுல செம கடுப்புல இருக்கேன் வாங்கி கட்டிக்காத.” 
 
“அக்னி மதியமே சாப்பிடல இவ்ளோ நேரம் தூங்காம ரொம்ப டயர்டா இருக்கு. இதுல அவன் கூட போனா எனர்ஜி இல்லாம போயிடும். கூட நீ வந்தா ஏதாச்சும் சாக்கு சொல்லிட்டு வந்துடுவேன் ப்ளீஸ்டா பாவம் பாரு அன்பு பாவம்ல.”என்று மெத்தையில் கண்மூடி படுத்தபடி கெஞ்சினாள்.
 
 
அவளின் “அன்பு” என்ற வார்த்தையில் சில மணி நேரத்திற்கு முன்பு… தான் அழைத்தது ஞாபகத்திற்கு வர, அதை அவள் மனதில் இருந்து அழிக்கும் எண்ணத்தோடு, “அவன கிளம்ப சொல்லாம எதுக்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிற. அப்படி என்ன அவன் உனக்கு முக்கியம்.” 
 
“அவனுக்கு அம்மா அப்பா யாரும் இல்ல அக்னி. நிறைய வசதி இருந்தும் யாரும் இல்லாததால சித்தி வீட்டுல  இருக்கான். காலேஜ்ல ஃப்ரெண்ட் ஆனதுல இருந்து என் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டான். பாவம் அக்னி யாரும் இல்லாம என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் எப்படி துரத்தி விட முடியும்.” 
 
 
சொல்லி முடித்ததும் சோர்வில் கண் சொக்க ஆரம்பித்தது அவளுக்கு. சிறிது நேரம் யோசித்துக் கொண்டு நின்ற அக்னி, “சரி நானும் வரேன் சொன்ன மாதிரி ஒன் ஹவர்ல கிளம்பிடனும். ஆனா இனி அவனோட நீ பேச கூடாது.முக்கியமா  குடிக்க கூடாது.”என்று கட்டளையிட்டான்.
 
 
விழி திறக்காமல் சிரித்தவள், “என்னை பத்தி ஏன் இவ்ளோ தப்பா புரிஞ்சு வச்சிருக்க. குடி மட்டும் இல்ல வேற எந்த பழக்கமும் இல்ல எனக்கு.” தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தும் நம்ப மறுத்தான் அக்னி.
 
 
ஒரு வழியாக இருவரும் அறையை விட்டு வெளியில் வர, மகேஷின் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் பதிவாகியது. அன்பினியோடு செல்ல இவ்வளவு நேரம் அவன் தன்மானத்தையும் மறந்து அடம் பிடிக்க, அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது அக்னி வருவதால். அவன் வரவை பிடிக்காமல் மகேஷ் சண்டையிட,
 
“மார்னிங் மீட்டிங் இருக்கு மகேஷ். நீ பார்ட்டிக்கு போன குடிச்சுட்டு மட்டை ஆக்கிடுவ உன்னை நம்பி வர முடியாது.” என்றதோடு பேச்சை நிறுத்திக் கொண்டு கிளம்பினாள்.
 
***
 
பப்புக்கு வெளியில் காரை நிறுத்திய அன்பினி, “அக்னி வா” என்று அழைத்தவாறு இறங்கினாள்.
 
 
அவளோடு சேர்ந்து செல்ல மகேஷ் முதலில் இறங்கி விட, பின்னால் இறங்கினான் அக்னி. “நான் வரல நீ போ.” என்று வர மறுத்தவனை வலுக்கட்டாயமாக கைபிடித்து அழைத்துச் சென்றாள். பின்னால் இருவரையும் முறைத்துக் கொண்டு வந்தான் மகேஷ்.
 
 
பாட்டு சத்தங்களும் மது போதை ஆட்களும் அங்கு பஞ்சம் இல்லாமல் இருக்க, “ஏய்! பைத்தியக்காரி இவனுங்களை பார்த்தா அருவருப்பா இருக்கு விடு நான் வெளிய போற.” என்று  கைகளை உதற,
 
“வாடா கொஞ்ச நேரம் தான.” என்று உதறும் கைகளை  கெட்டியாக பிடித்துக் கொண்டு நடந்தாள். 
 
இதையெல்லாம் பார்த்த மகேஷூக்கு பொறாமை தீ நாடு விட்டு நாடு கடக்கும் அளவிற்கு எகிறியது. அன்பினியை பார்த்த நண்பர்கள் வட்டம் கத்தி கூச்சலிட்டது. அவள் ஒருவனின் கைப்பிடித்து வருவதைப் பார்த்து அந்த கூச்சல் ஆச்சரியத்தோடு அடங்கியது. யாருக்கும் தொட்டு பேசும் உரிமையை கொடுத்ததில்லை அவள். தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விட்டாள் அடி நிச்சயம் கிடைக்கும் அவள் காலணிகள் புண்ணியத்தில். அப்படி இருக்க ஒருவன் அவளோடு வர, 
 
“சித் யாருடி இவன் பார்க்க செமையா இருக்கான்.” என்றதும் நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டாள். பார்வை அனலாக சுட அடங்கி விட்டார்கள் அனைவரும். மகேஷ் அவள் பக்கத்தில் அமர முயற்சிக்க, “அக்னி வா அங்க உட்காரலாம்” என்றவள் தனியாக அமர்த்திக் கொண்டாள் அவனை. 
 
 
கும்மாளம் போட்ட நவீன மனிதர்கள் ஆளுக்கொரு உலகில் சுழல, மகேஷ் அதில் மூழ்கியே விட்டான். மதுவில் மிதந்தவன் பார்வை அக்னியை தான் சபித்துக் கொண்டிருந்தது‌. 
 
 
தோழிகளோடு கதை அளந்துக் கொண்டிருந்தவளின் காதில், “நான் கார்ல இருக்க நீ முடிச்சிட்டு வா.” என்று அக்னி வெளியேற, 
 
“இரு அக்னி கொஞ்ச நேரத்துல போயிடலாம்.” கைப்பிடித்து தடுத்தாள்.
 
“எனக்கு இங்க இருக்க பிடிக்கல  நான் போறேன்.” என்றவன் கிளம்பினான்.
 
அன்பினியின் செய்கைகளை பார்த்த நண்பிகள் வட்டம் பேச்சிழந்து போனார்கள். எதாவது கேட்டாள் சாமி ஆடி விடுவாள் என்ற பயத்தில் எதுவும் கேட்காமல் கடந்து விட்டனர்.
 
செல்லும் அக்னியின் நடையை ரசித்த அன்பினி தோழிகள் பக்கம் திரும்ப, அவளை விட அதிகமாக ஒருத்தி ரசித்துக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் கையில் இருக்கும் கைபேசி சந்தேகத்தை கிளப்பியது. 
 
அவளிடம் சென்றவள் “அக்னிய ஃபோட்டோ எடுத்திங்களா”  கையில் இருக்கும் ஃபோனை பார்த்தவாறு கேட்க,
 
“யா!”என்று குழைந்து ஃபோனை பார்தாள் அங்கிருந்த யுவதி.
 
அதற்கே புகை கிளம்பியது அன்பினி காதில் இருந்து. உதடுகள் இரண்டும் கோபத்தில் புடைத்துக் கொண்டு நிற்க, கைபேசியில் இருக்கும் புகைப்படத்தை அவள் முன்பு நீட்டிய யுவதி,
 
 
“இங்க பாரு எப்படி இருக்கான். இவன மாதிரி ஒருத்தன சைட் அடிக்காம இருந்தா எப்படி ” என்றாள் அன்பினி சூடாகிறாள் என்பது தெரியாமல்.
 
“ஆமா அவன்  உன்னோட பாய் பிரண்டா.” என்று மதுவை விழுங்கிய யுவதி, “லக்கி கேர்ள். பட் அவனுக்கு உன்ன விட நான் சரியா இருப்பேன்.” என்றாள்.
 
அத்தோடு நிறுத்தி இருந்தால் கூட அன்பினி அவ்வளவு கொதித்திருக்க மாட்டாள் போல. இவ்வளவு நேரமாக அக்னியை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்த அத்தனை போட்டோக்களையும் அவள் முன்பு காட்டி வர்ணனை செய்தாள்.
 
புகை மண்டலம் உடல் முழுவதும் பரவ,தன் முன்னாள் நீட்டப்பட்டிருக்கும் ஃபோனை தூக்கி அடித்தாள். அந்த பாட்டு சத்தத்திலும் சிலர் திரும்பி பார்த்தார்கள். போன் உடைந்ததும் கோபம் கொண்ட பெண் பேச வருவதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அன்பினிசித்திரை.
 
வாங்கிய அடியில் தலைக்கு ஏறிய போதை அனைத்தும் வடிந்து விட, அதிர்வோடு எழுந்து நின்று, “ஹேய்! ஹொவ் …” என்று ஆரம்பிப்பதற்குள் இன்னொரு அடி கொடுக்க, தரையில் விழுந்தாள் அப்பெண்.
 
நிமிர்ந்து பார்க்க சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அன்பினிசித்திரை,  ‘எழும்படி’ சைகை செய்ய, பயத்தோடு எழுந்து நின்றாள் அப்பெண்.
 
“ஃபோன எடுத்துட்டு வா!” என்பவளை பார்த்து புரியாது முழித்த அந்தப் பெண் சொன்னதை செய்து முடிக்க, உடைந்த டிஸ்ப்ளேவை ஆன் செய்து கேலரியை ஓபன் செய்தாள். உள்ளிருந்த சில போட்டோக்களை டெலிட் செய்தவள் வேறு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.
 
அனைத்து ஆராய்ச்சிகளும் முடிந்த பின் ஃபோனை முன்பு அடித்ததை விட வேகமாக தூக்கி எறிந்தாள்.  “இனி ஒரு தடவை அக்னி மேல உன் கண்ணு போச்சி அந்தக் கண்ணை நோண்டி  எடுத்துடுவேன்.” என்றவள் கைகளை சொடக்கிட்டு, “அவுட் ” என்று கையசைத்தாள். 
 
அப்பெண் நகர, மீண்டும் அழைத்தவள், “அவன் வெளிய தான் இருப்பான் தப்பி தவறி பார்த்திடாத. அப்புறம் அந்த ஃபோன் நிலைமை தான் உனக்கும் இருக்கும்.” என்ற அன்பினி முகத்தில் சிவப்பு சாயம் உற்பத்தி ஆகி எதிரில் இருப்பவளை நடுங்க வைத்தது.
 
வெளியில் வந்தவள் காரில் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்த அக்னியின் சட்டையை பிடித்து வெறி வந்தது போல் கலைத்து விட்டாள்.
 
“பைத்தியம் என்ன பண்ற?” என்று தன் சட்டையை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க,
 
“அவ உன்ன பார்க்கிறான்னு தெரியும் தான. கன்னத்துல ஒரு அடி விட்டு ஏன் டி என்னை பார்க்கிறேன்னு  கேட்க தெரியாது. அவ முன்னாடி சீன் போட்டுட்டா நிக்கிற…. இருடா இனிமே சீன் போட மூஞ்சி இல்லாம பண்றேன்.” என்று சட்டையை கலைத்தது போல் அவன் தலை முடியையும் கலைத்து தன் கோபத்தை தீர்த்துக் கொண்டாள்.
 
 
அக்னி தடுத்துக் கொண்டிருப்பதையும் மீறி அவள் போக்கில் அவனை செய்வினை பொம்மை போல் மாற்றி விட்டாள். இருந்தும் கோபம் தீராதவள் கலைத்த சட்டையை திரும்ப கலைக்க,
 
பொறுமை இழந்தவன் அவள் தலை முடியை சேர்த்து பிடித்து, “குடிகாரி வா நம்ம இடத்துக்கு போய் சண்ட போடலாம்.”  என்று காரில் தள்ளி கடத்திச் சென்றான் அலுவலகத்திற்கு. 
 
***
 
காலை விடியல் மீட்டிங் ஹாலில் தான் பிறந்தது இருவருக்கும். செல்வகுமார் தன் கனவு ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் உற்சாகத்தோடு பேசினார். இன்று ஒப்பந்தத்தை அனுப்பினால் இன்னும் ஆறு நாட்களில் முடிவு தெரிந்து விடும். அக்னியிடம் அந்த பொறுப்பை கொடுத்தவர் சென்னைக்கு கிளம்ப தயாரானார். 
 
 
மீட்டிங்கை முடித்தவன் வீட்டிற்கு சென்று வந்தான். அவனுக்காக காத்திருந்த பரமேஸ்வரி பெண்ணுக்கு புடவை எடுக்க அழைக்க, அக்னி வேலை இருப்பதாக மறுத்து விட்டான். 
 
“அக்னி அந்த பொண்ண உனக்கு பிடிக்கலையா.” என்ற கேள்வியில் திடுக்கிட்டு அன்னையை பார்த்தவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.  மனதில் அன்பினி முகம் தோன்றியது உடனே. அன்னைக்கு பின் தான் அனைத்தும் என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டவன் பதில் சொல்லும் முன்,
 
“என்ன பரமு இது அவன் தான் தெளிவா சொல்லிட்டானே நம்ம விருப்பம் தான் அவன் விருப்பம்னு.” என்றார் மணிவண்ணன் 
 
“நம்மளாங்க வாழ போறோம் அவன் தான. எனக்கு என்னமோ விருப்பமே இல்லாம நமக்காக தலையாட்டின மாதிரி இருக்கு.” என்று முகம் வாட,
 
 
“அம்மா அதெல்லாம் இல்ல உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும். கொஞ்சம் ஆபீஸ் வேலையா அலைஞ்சிட்டு இருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு நீங்க ஆசைப்பட்ட மாதிரி உங்க கூட இருக்கேன்.”என்று உறுதி அளித்துவிட்டு புறப்பட்டான். 
 
 
***
 
மதியம்  அலுவலகத்திற்கு வந்தவன் அனைவரும் சாப்பிடுகிறார்களா என்பதை கவனிக்க ஆறாம் தளத்திற்கு சென்றான். அங்கு யாரும் இல்லாமல் வெறும் இருக்கைகளே காட்சியளித்தது. குழம்பியவன் பணிபுரிபவர்களை தேடினான். 
 
ப்ரொடக்ஷன் இடத்திற்கு வந்தவன் விசாரிக்க, “மேடம் ரொம்ப நல்லவங்க சார். இத்தனை வருஷமா யாரும் செய்யாத ஒன்ன செஞ்சிருக்காங்க.” என்று ஒருவர் கூற,
 
“என்ன செஞ்சாங்க சார்” விளக்கம் கேட்டான் அக்னிசந்திரன்.
 
“நான் சொல்லிக்கிறேன் நீங்க வேலைய பாருங்க சார்.” என்று அக்னியின் பின்னால் நின்றிருந்த அன்பினி கூற, திரும்பினான்.
 
பணிபுரிபவர்கள் இருவரையும் பார்க்காமல் தங்கள் வேலையை கவனிக்க, அக்னி தோள் மீது கை போட்டாள் அன்பினி. உடனே எடுத்து விட்டவன் நாக்கை கடிக்க,
 
 
“அட! வாங்க ஆங்கிரி பேர்ட்.” என்று மீண்டும் தோள் மீது கை போட்டுக்கொண்டு, “இனிமே இந்த ஆபீஸ்ல ஆண்களுக்கு தனியா பெண்களுக்கு தனியா உணவு அறை ஒதுக்கப்பட்டிருக்கு. அதுக்கான வேலை தான் ஆறாவது மடியில நடந்துட்டு இருக்கு. அது முடியிற வரைக்கும் எல்லாரும் கிரௌண்ட் ப்ளோர்ல சாப்பிடுவாங்க.” என்றவள் அவன் சட்டை பட்டனை சுழற்றி,
 
“ஃபேன் காத்துல உக்கார்ந்து சட்டை வீணாக கூடாது பாரு அதான் ஃபுல்லா ஏசி போட சொல்லி இருக்கேன். இனிமே சமத்து பையனா ஆம்பளைங்க கூட உக்கார்ந்து சாப்பிடு சரியா.” என்றாள் நல்ல மனம் படைத்த தெய்வீக பெண்ணாக. 
அக்னியின் புருவம் மேல் ஏறி கீழ் இறக்க, அன்பினியின் இமைகள் இரு முறை அசைந்து படபடத்தது.
 
ஆண்கள் அனைவரும் இதை வரவேற்று கொண்டாட, சில பெண்கள் மட்டுமே உணர்ந்தார்கள் அக்னியை கழுகு பார்வையால் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று.
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
32
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *