Loading

ஊஞ்சல் 10

 

“இல்ல நான் எதுவும் பண்ணல… நான் தெரியாமல் பண்ணிட்டேன்.”

 

“ஸ்டாப் இட்! பொண்ணா நீயெல்லாம்? கூடப் பிறந்தவளைக் கொன்னுட்டு இப்படி மனசாட்சியே இல்லாமல் அவளுக்குப் பார்த்தவனைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கியே.”

 

“இல்ல திரும்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க.”

 

“இனி ஒரு வார்த்தை பேசின, போலீஸ்காரனா நடந்துக்க வேண்டியது வரும். மரியாதையா என் கூட ஸ்டேஷனுக்கு வந்துடு.”

 

“ப்ளீஸ், கொஞ்சம் கேளுங்க”

 

“லேடி போலீஸைக் கூட்டிட்டு வந்து தரதரன்னு இழுத்துட்டுப் போக வைப்பேன்.” 

 

தன் பக்க வாதத்தைத் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தாள் பார்த்திகா. அவள் மீது இருந்த ஆத்திரத்தில் எதையும் காது கொடுத்துக் கேட்காதவன் தர தரவென்று இழுத்துச் சென்றான். அவள் அழுகைச் சத்தத்தில் பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த நடராஜ், ராணி தம்பதிகள் ஓடி வந்து தடுக்க,

 

“ஒரு கொலைகாரிக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என அவர்கள் வாயை அடைத்தான்.

 

ஒரு நொடி அதிர்ந்து பின் இயல்புக்குத் திரும்பிய நடராஜ், “என்னடா சொல்ற?” விசாரிக்க, “சொந்தத் தங்கச்சியவே கொலை பண்ணிருக்கா அப்பா.” என மீண்டும் அதிரவிட்டான்.

 

“என்னடா லூசு மாதிரிப் பேசுற? இவ எதுக்குத் தங்கச்சியைக் கொலை பண்ணப் போறா?”

 

“என் மேல இருக்க வெறி ம்மா. என்னைக் கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்ணி தங்கச்சியைக் கொலை பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத நல்லவ மாதிரி இத்தனை நாளா நடிச்சிருக்கா.” 

 

“சத்தியமா இல்ல அத்தை. அவர் சொல்ற எதையும் நம்பாதீங்க.”

 

அசுர வேகத்தில் அவளை இழுத்து முன்னுக்குத் தள்ளியவன், “என்னடி நம்பாதீங்க? ஹான், அந்த பிளட் சாம்பிள் உன்னோடதுன்னு ரிப்போர்ட் சொல்லுது. அதுக்கு ஆதாரமா உன்னோட மோதிரக்கல் உடைந்து அங்க இருந்துச்சு. நான் அப்பக் கேட்டதுக்கு என்னமா நடிச்ச? ச்சீ!” என அடிக்கக் கை ஓங்கியவன் அன்னையின் அதட்டலில் கோபத்தைக் கட்டுப்படுத்தத் திரும்பி தலையை அழுந்தக் கோதி விட்டான்.

 

“நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க. சத்தியமா என் தங்கச்சியை நான் கொலை பண்ணல”

 

“திரும்பத் திரும்ப என்னை முட்டாளாக்கப் பார்த்த, மனுஷனா இருக்க மாட்டேன். கிளம்புடி போலீஸ் ஸ்டேஷனுக்கு.” 

 

அவனது பெற்றோர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காதவன் போலீஸ் ஜீப்பில் பிடித்துத் தள்ளினான். அதில் மோதிக் கீழே விழுந்தவள்,

 

“திரும்மா, உங்களுக்காகத் தான் பண்ணேன், என்னை மன்னிச்சிடுங்க. சத்தியமா வேற எந்த நோக்கமும் இல்லை. நான் உங்க கூட வாழனும், என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போகாதீங்க, ப்ளீஸ்… என்னை எங்கயும் கூட்டிட்டுப் போகாதீங்க.” கையெடுத்துக் கும்பிட்டுக் கதறினாள்.

 

“ஹேய்!”

 

“ஹேய்… பாரு” 

 

கட்டிலில் இருந்து கீழே விழுந்தவளைக் கண்டு பதறியவன் எழுப்ப முயன்றான். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “திரும்மா, கூட்டிட்டுப் போகாதீங்க. நான் உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன்.” கண்டபடி புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

“பாரு…” சத்தமாகச் சிங்கம் போல் கத்த, அந்தச் சத்தத்தில் அடித்துப் பிடித்து விழி திறந்தவள் திருத்திருவென முழித்தாள்.

 

“கட்டில்ல இருந்து கீழ விழுந்தது கூடத் தெரியாம என்ன புலம்பிட்டு இருக்க?”

 

“ஹான்…”

 

“உன்ன தான் கேட்கிறேன்.”

 

மெல்லத் தான் இருக்கும் இடத்தையும், அவனையும் சுற்றிப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ, வேகமாக அவன் மார்பில் புகுந்து கொண்டாள். புருவச் சுருக்கத்தோடு ஆறுதலுக்காக அணைத்தவன் இன்னும் யோசனைக்கு ஆளானான் அவள் அழுகையில்.

 

“என்னம்மா ஆச்சு? கனவு ஏதாச்சும் கண்டியா?” 

 

“ம்ம்…”

 

“என்ன கனவு?”

 

“நா…நான் வந்து… நீங்க என்னை வேணாம்னு…” 

 

முழுதாகச் சொல்ல முடியாமல் தடுமாறியவளைச் சேர்த்தணைத்து முதுகை நீவி விட்டவன், “ஒன்னும் இல்ல, ரிலாக்ஸா இரு. நீ நம்ம வீட்ல இருக்க, நான் உன் கூட இருக்கேன். பயப்படாம கொஞ்ச நேரம் அமைதியா கண்ணை மூடு. ஒன்னும் இல்ல, சாதாரணக் கனவு தான்.” என்றதும் கொஞ்சம் முன்னேறி இருந்தது அவள் மனநிலை.

 

அவனை விட்டு விலகாது சேர்த்தணைத்தவாறு படுத்துக் கொண்டவள், ‘உண்மை தெரிஞ்சா நீங்க என்னை ஏத்துப்பீங்களா திரும்மா?’ கேள்விக்கு விடை தெரியாது உறங்கியும் போனாள்.

 

ஒரு மணி நேரம் கழித்து அவளாகவே கண் திறக்கும் வரை அவளை விட்டு நகரவில்லை திருமேனி. இந்த முறை சாதாரணமாகக் கண் திறந்தவள் தன்னோடு படுத்திருக்கும் தன்னவனைக் கண்டு மகிழ, “மேடம் இப்போ ஓகேவா?” கேட்டான்.

 

கண்ட கனவு மூளையின் ஒரு ஓரம் உதித்தாலும் பெரிது படுத்தாமல், “என் திரும்மா இருக்க என்ன கவலை?” என அவன் மார்பில் படர்ந்தாள்.

 

“தட்ஸ் மை ஸ்வீட் கேர்ள்” 

 

அவள் எதுவும் பேசிக் கொள்ளாமல் அந்த நிமிடங்களை ரசிக்க, “உனக்கு ஒரு வாரம் ரெஸ்ட்.” என்றான்.

 

“ஏன்?”

 

“ஒரு வாரத்துக்குக் காலைல நாலு மணிக்கு எந்திரிக்க வேண்டாம். கிரீன் டீ போட்டுத் தர வேண்டாம். எனக்கு என்ன பிடிக்கும்னு மெனக்கெட்டுச் சமைக்க வேண்டாம். துணியை அயன் பண்ணித் தர வேண்டாம். என்னோட பர்ஃப்யூம் முதல் கொண்டு எதையும் பெட் மேல பரப்பி வைக்க வேண்டாம். தெருமுனையைத் தாண்டுற வரைக்கும் வாசல்ல நின்னு கையசைக்க வேண்டாம். நான் வரும்போது வாசல்ல நிக்க வேண்டாம்.” என அவன் பேசிக் கொண்டே செல்ல,

 

“என்னங்க சொல்றீங்க? ஒன்னும் புரியல” புரியாத முகபாவனையோடு பார்த்தாள்.

 

“ஒரு வாரம் நான் வெளியூர் போறேன்”

 

“என்ன திடீர்னு…” 

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நியூஸ் வந்துச்சு”

 

“நீங்கதான் போகணுமா, உங்களுக்குப் பதிலா வேற யாரையும் அனுப்ப முடியாதா?”

 

“கண்டிப்பா நான் தான் போய் ஆகணும்.”

 

“ப்ளீஸ்ங்க… வேற யாரையாது அனுப்பி விடுங்களேன்.” 

 

முக வாட்டத்தை வைத்து அவள் மனதைப் படித்தவன் ஆதரவாகக் கை வளைவுக்குள் கொண்டு வந்து, “இந்த மாதிரி அடிக்கடி போக வேண்டியது வரும். ஒவ்வொரு தடவையும் உன்னை இப்படிச் சமாதானப் படுத்திட்டு இருக்க முடியாது பாரு. நீதான் இது எல்லாத்துக்கும் பழகிக்கணும். உன் புருஷனோட வேலை அந்த மாதிரி.” புரிய வைக்க முயல, 

 

“அதெல்லாம் புரியுதுங்க இருந்தாலும்…” இழுத்தாள்.

 

“இருந்தாலும்…”

 

“இப்பதான் நீங்க என்னை ஏத்துக்க ஆரம்பிச்சு இருக்கீங்க. இந்த மாதிரி நேரத்துல ஒரு வாரம் ரெண்டு பேரும் பார்த்துக்காம இருக்குறது சரியா வரும்னு தோணல.”

 

சத்தம் வராமல் சிரித்தவன் அவள் முகத்தைக் கையில் ஏந்தி, “அவ்ளோ தான், என்னோட அன்பு மேல நீ வச்சிருக்கற நம்பிக்கையா? இந்த ஒரு வாரப் பிரிவு உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுடுமா?” எனக் கேட்க,

 

“ஒரு மாதிரி பயமா இருக்கு திரும்மா.” என்றாள்.

 

“தேவையில்லாத பயம் பாரு உனக்கு. ஒரு வாரம் இல்லை ஒரு வருஷம் பார்க்காமல் இருந்தாலும் உன் மேல நான் வச்சிருக்கற அன்பு அப்படியே தான் இருக்கும். எத்தனையோ தடவை சொல்லிட்டேன், உன் காதல் புரியாத வரைக்கும் நீ எனக்குச் சாதாரணமானவளா தெரிஞ்ச. இப்போ அப்படி இல்ல. நீயே என்னை வேணாம்னு சொன்னாலும் உன்னை விட நான் தயாரா இல்லை.”

 

கணவன் வார்த்தையில் மகிழ்ந்தவள் தோள் மீது சாய்ந்து கொள்ள, “ஒரு வாரம் உன்னை விட நான் அதிகமா மிஸ் பண்ணுவேன். குழந்தை மாதிரி என்னை நீ பாட்டுக்கு வளர்த்து விட்டுட்ட. என்னென்ன செஞ்சுக்கணும்னு மறந்து போயிடுச்சு எனக்கு. இப்ப முதல்ல இருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்.” சலித்துக் கொண்டான்.

 

“நான் உங்க கூட வரவா?”

 

“அது முடியாது பாரு. நான் வேலை விஷயமா எங்க தங்கப் போறேன், என்ன ஏதுன்னு தெரியல. உன்னைக் கூட்டிட்டுப் போயி தேவையில்லாத டென்ஷனைத் தலைல ஏத்திக்க முடியாது.”

 

“ஒரு வாரத்துல வந்துடுவீங்களா?”

 

“கண்டிப்பா வந்துருவேன். என் அழகுப் பொண்டாட்டியப் பார்க்கணும்ல.”

 

“என்னை நிஜமா மிஸ் பண்ணுவீங்களா?”

 

ஒருவிதப் பரிதவிப்போடு கேட்கும் மனைவியின் விழிகளில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு சிரிப்பு தான் வந்தது காவலனுக்கு. ‘இவளைப் பொறுத்தவரை இன்னும் என் மீது நம்பிக்கை வரவில்லை. அதற்குக் காரணமும் தான் தான் என்பதை நன்கறிந்தவன் அந்த அளவுக்கு அவளை நோகடித்து இருக்கிறோம்’ என வருந்தவும் செய்தான். 

 

இப்பொழுது அவள் இல்லாத ஒரு நாளைக் கூட நினைக்க முடியாத தன் நிலையை எப்படிப் புரிய வைப்பது? என்று தெரியாமல் மடி மீது அமர வைத்து இடையில் கை போட்டான். பார்த்திகா தன் கைகள் இரண்டையும் அவன் கழுத்தில் மாலையாக்கிக் கொள்ள, 

 

“லவ் யூ பாரு.” முத்தம் கொடுத்து, “நீ செய்கையால காட்டுற காதலை உன்னோட வாழ்ந்து காட்டி நிரூபிக்கணும்னு ஆசைப்படுறேன். நமக்குள்ள இருந்த இடைவெளி எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி நீ பயப்படுற மாதிரி எப்பவும் எதுவும் நடக்காது. ஊருக்குப் போய்ட்டு வந்ததும் நம்ம நேரா ஹனிமூன் போறோம்.” என்றும் நம்பாதவள் முன்பு டிக்கெட்டை நீட்டி ஆச்சரியப்படுத்தினான்.

 

அவன் செல்லும் சோகத்தை எல்லாம் மறந்து தன்னோடு பயணிக்க விரும்பியவனின் மனதை நினைத்துத் துள்ளல் போட்டாள். தன்னவள் முகத்தில் தாண்டவம் ஆடும் மகிழ்வைப் பார்த்த பின், சின்ன கர்வம் எழுந்தது தன் மீது அவள் கொண்டுள்ள காதலின் அளவை எண்ணி.

 

எப்படிப்பட்ட காதல் தனக்குக் கிடைத்திருக்கிறது என்று பெருமை கொண்டான். எந்த ஆணுக்கும் தன்னை அளவு கடந்து நேசிக்கும் துணைவி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இவனுக்கு மட்டும் அந்த எதிர்பார்ப்பு மீது எந்த நாட்டமும் இருந்ததில்லை. அப்படி எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தவன் வாழ்வில் தேவதையாக வந்தவள் பார்த்திகா. 

 

கடந்த ஐந்து மாதத்தில் அவன் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்கள். பலமுறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் பொழுது இது நான் தானா என்று கூடக் கேட்டுப் பார்த்திருக்கிறான். அத்தனை மாற்றங்களை அவனுக்குள் விதைத்தவள் மனநிலை தான் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு கெட்ட எண்ணம் மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறது.

 

“நான் ரெடி ஆகவா?”

 

“இப்பவேவா?”

 

“நீ இல்லாமல் இருந்திருந்தா அப்படியே கிளம்பிப் போயிருப்பேன். என் அழகுப் பொண்டாட்டி என்னைத் தேடுவானு தான் வீட்டுக்கு வந்து சொல்லிட்டுப் போறேன்.”

 

“இதெல்லாம் ரொம்ப ஓவர். இப்படி வந்த கையோட போனா நான் என்ன பண்ணுவேன்.”

 

“நான் வர வரைக்கும் உன் வீட்ல வேணா இருக்கியா?”

 

“வேணாம் திரும்மா. இங்க இருந்தாலாவது உங்க போட்டோ, திங்க்ஸ்னு எல்லாத்தையும் பார்த்து வாரத்தைக் கடத்திடுவேன்.” 

 

“ஒரு வாரம் சட்டுனு முடிஞ்சுரும். நான் அடிக்கடி போன் பண்றேன். என்னையே நினைச்சுட்டு இருக்காம நேரத்துக்குச் சாப்பிட்டு நல்லாத் தூங்கு.” 

 

“ம்ம்…” என அவன் மடியில் படுத்துக் கொண்டாள். சிறுபிள்ளைத் தனமான தன்னவள் செயலில் புன்னகை ததும்ப தடவிக் கொடுத்தவனுக்குத் தினேஷின் அழைப்பு வந்தது.

 

“என்னடா சொன்னாங்க?”

 

“ஒரு வாரத்துல ரெக்கவரி பண்ணிடலாம்னு சொல்லி இருக்காங்க.”

 

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் ரெக்கவரி பண்ணச் சொல்லு. அந்த போனைத் திறந்தா தான் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்.” 

 

அவன் செல்லும் வருத்தத்தில் படுத்திருந்தவளை இவ்வார்த்தை  திடுக்கிட வைத்தது. அவசரமாக எழுந்து கண்கள் விரியப் பார்க்க, “நான் ஊருக்குப் போயிட்டு வந்ததும், ஆனந்தி கேஸை முடிக்கணும்.” அழைப்பைத் துண்டித்தான்.

 

“ஆனந்தி போன் கிடைச்சிடுச்சா?”

 

“ஆமா பாரு. அதைதான் முதல்ல சொல்ல வந்தேன். நான் வந்த நேரம் நீ சரியா கட்டில்ல இருந்து விழுந்து என்னத்தையோ புலம்பிட்டு இருந்த. அதுல எல்லாத்தையும் மறந்துட்டேன்.”

 

“எங்க கிடைச்சுது? யார் குடுத்தா? யாரு கொலை பண்ணதுன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?” 

 

“கொலையா?”

 

“இல்ல… அது..அது… நீங்க சந்தேகப்பட்டீங்களே, அதுக்காகச் சொன்னேன்.” 

 

“ஆமாம் பாரு, எனக்கு இது கொலையா இருக்குமோன்னு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருக்கு. கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்துல ஒரு பெரிய பில்டிங் கட்டிட்டு இருந்தாங்கல்ல, அங்க சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவுல இருந்திருக்கு. 

 

நம்ம கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அங்க ஏதோ தகராறு வந்து கட்டிட வேலைய நிறுத்தி இருக்காங்க. தொடர்ந்து மழை பெஞ்சு சிமெண்ட் எல்லாம் வீணாப் போறதால ஆள விட்டு உள்ள எடுத்து வைக்கப் போகும் போது தான் இந்த போன் கிடைச்சிருக்கு. ஏற்கனவே நாங்க  விசாரிச்சதால எங்களைக் கூப்பிட்டு இன்பார்ம் பண்ணாங்க.” 

 

“ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா?”

 

“ஃபோனை ரெக்கவரி பண்ணக் குடுத்திருக்கேன். அது விஷயமா தான் தினேஷ் போன் பண்ணான்.” 

 

அவன் வார்த்தைக்குப் பின் பார்த்திகா அமைதியாகி விட, “ஆனந்தி கைல இருந்த போன் அங்க எப்படிப் போச்சு? இதுக்கான பதில்ல தான் எல்லாமே அடங்கி இருக்கு. அனேகமா நான் ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள பதில் கிடைச்சிடும்.” என அவன் கிளம்பத் தயாராக, கண்ட கனவு பலித்து விடுமோ என்ற அச்சத்தில் அசையாது அமர்ந்திருந்தாள் திருமேனியின் மனையாள்.

 

ஊஞ்சல் ஆடும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்