Loading

அத்தியாயம் 10

 

இரவு நேர தனிமை மயூரனை அவன் வாழ்வினை திரும்பி பார்க்க வைத்தது.

 

சிறுவயது நினைவுகள் அனைத்திலும் அவன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது தான் பொட்டில் அடித்தது போல நினைவுக்கு வந்தது. அதை தவிர, அவன் அன்னை மற்றும் பாட்டியிடம் அவன் செய்த குறும்புகள் மட்டுமே நினைவுச் சின்னங்களாக எஞ்சி இருந்தன.

 

அதுவும் குறிப்பிட்ட வயது வரை தான்!

 

அதற்கு பிறகு ஓட்டம் தான்!

 

இதோ, ஓட்டத்தை நிறுத்தி நிம்மதியாக இருக்கலாம் என்றாலும் விடாமல் துரத்தி வருகின்றனரே என்ற ஆயாசம் ஒருபுறம் எழ, மறுபுறம் அதில் தேவையில்லாமல் சிக்கிக் கொண்ட துவாராகவின் நினைவும் ஒட்டிக்கொண்டு வந்தது.

 

அவளை முதலில் பார்த்த தருணம், அவளிடமிருந்து ஓடிய தருணங்கள் என்று துவங்கி, இதோ இன்று அவளையே ஓட வைத்த சம்பவங்கள் வரை அனைத்தும் பளிச்சென்று நினைவில் வந்தன.

 

முன்பு தொல்லைகளாக தெரிந்தவை எல்லாம் இப்போது குறும்புகளாக தெரிந்து சிரிக்க வைக்க, அதற்கான காரணம் என்னவென்று அவன் மனதிடம் கேட்க, அதற்கான பதில் கிடைப்பதற்குள், அவனின் அலைபேசி ஒலியெழுப்பி விட்டது.

 

அவன் எதிர்பார்த்த அழைப்பு தான். அவனின் தாத்தா, சக்கரவர்த்தி தான் அழைத்திருந்தார்.

 

ஒரு பெருமூச்சுடன் அதை மயூரன் ஏற்க, மறுமுனையில் இருந்தவரோ, “மயூரா…” என்று பாசமாக அழைத்தார்.

 

அதில் எல்லாம் குறை சொல்லிவிட முடியாது தான். அதுவும், மயூரன் அவரின் மிகவும் பிரியத்திற்குரிய பேரனாகிற்றே!

 

“தாத்தா எப்படி இருக்கீங்க?” என்று சம்பிரதாயத்திற்காக அல்லாமல் உண்மையான பாசத்துடனே கேட்டான் மயூரன்.

 

“ஹ்ம்ம் இருக்கேன் மயூரா. இத்தனை பேரு சுத்தி இருந்தும் தனிமைல இருக்கேன். உன் பாட்டி போனப்பவே நானும் போயிருக்கணும். பிசினஸ், குடும்பம்னு ஓடி ஓடி உழைச்சு என்ன பிரயோஜனம்? இப்போ என்னை கண்டுக்க கூட நாதியில்லாம இருக்கேன்.” என்றார் சக்கரவர்த்தி.

 

ஒரு காலத்தில் கம்பீரமாக ஒலித்த அவரின் குரல் இப்போது தேய்ந்து ஒலிப்பது மயூரனுக்கு கவலையளித்தாலும், அவர் செய்த பாவங்களின் எதிர்வினை அவை என்பதை உணர்ந்து தான் இருந்தான்.

 

அதனாலேயே, “ஏன் உங்க மூணு பசங்க உங்களை பார்த்துக்குறது இல்லையா?” என்று நக்கலாகவே மயூரன் பதில் கேள்வி கேட்க, விரக்தியாக சிரித்த அந்த முதியவரோ, “நீ எங்க வரேன்னு எனக்கு நல்லாவே தெரியுது மயூரா. என்ன செய்ய? அப்போ அது புத்தில உரைக்கல. நான் தான் பெரியவங்கிற ஆணவத்துல ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டேன். இப்போ… பசங்கன்னு மூணு பேரு… ஹ்ம்ம், வந்து பார்ப்பானுங்க… என்னால ஏதாவது  காரியம் ஆகணும்னா மட்டும்! அதுவும் அவங்களோட பசங்களோட அனுமதியோட!” என்று நொந்து கொண்டார் சக்கரவர்த்தி.

 

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மயூரன் அமைதியாக இருக்க, “சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம, ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்ல?” என்ற சக்கரவர்த்தி, “மயூரா, நான் உருவாக்கின நம்ம பிசினஸை இவனுங்க எல்லாரும் சேர்ந்து கெடுத்துடுவானுங்க போல. உள்ளுக்குள்ள அவ்ளோ கோல்மால் நடக்குது. பணம் காசுன்னு அதுக்கு பின்னாடி போய், மொத்தமா அழிக்க பார்க்குறானுங்க.” என்று புலம்பினார் அவர்.

 

அதற்கும் அவன் பதில் பேசாமல் இருக்க, “எனக்கு தெரியும் மயூரா, உனக்கு இங்க பிடிக்கலன்னு. ஆனா, நீ வந்தா தான் நம்ம பிராண்ட் நேமை கொஞ்சமாச்சும் காப்பாத்த முடியும். இந்த கெழவனோட கடைசி ஆசைன்னு வச்சுக்கோயேன்… நான் ஆரம்பிச்சதை நான் இருக்கும் வரை மட்டும் காப்பாத்தி குடு மயூரா.” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் சக்கரவர்த்தி.

 

முதலிலேயே முடிவெடுத்து விட்டவன் தான். தாத்தாவின் பேச்சு அவன் முடிவை ஸ்திரப்படுத்த, “இந்த முறை மட்டும் உங்க பேச்சை கேட்குறேன் தாத்தா. எனக்கும் அங்க முடிக்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கு.” என்று பல்லைக் கடித்து கூறியவன், “ஆனா, இது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். மேக்சிமம் ஒரு வாரத்துல அங்க வந்துடுவேன். நான் வரும்போதே எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்.” என்று நிர்மலமான குரலில் கூறினான் மயூரன்.

 

அவன் வருகிறேன் என்று சொன்னதே அந்த பெரியவருக்கு அத்தனை ஆனந்தத்தை தந்தது. எனினும், எதற்காக மறைக்க சொல்கிறான் என்பதை பற்றி யோசித்தவருக்கு காரணத்தை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.

 

“இவனுங்க ஏதாவது சொன்னாங்களா மயூரா?” என்று சக்கரவர்த்தி கோபத்துடன் வினவ, துவாரகாவை பற்றி சொல்ல விரும்பவில்லை என்பதால், “வழக்கம் போல தான்! வரக்கூடாதுன்னு மிரட்டுனாங்க. நானும் எத்தனை முறை தான் ஒதுங்கிப் போறது? அதான் நேரடியா மோதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றான் மயூரன்.

 

“அது தான் சரி மயூரா! சின்னவனுங்க ரெண்டு பேரும், உன் அப்பனையும் ஏதேதோ சொல்லி மயக்கி வச்சுருக்காங்க மயூரா. அவனும் மகுடிக்கு ஆடுற பாம்பு மாதிரி அவனுங்க சொல்றதெல்லாம் நம்புறான். இப்போ என்னடான்னா, அவனோட பேர்ல இருக்க ஹோட்டல் பிசினஸை அவனுங்க பேர்ல எழுதப் போறானாம். கேட்டா, நீதான் எதுவும் வேண்டாம்னு தனியா போயிட்டியேன்னு சொல்றான். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!” என்றவர், “சீக்கிரமா வா மயூரா. பிசினஸுக்காக மட்டுமில்ல, இந்த கெழவனுக்காகவும் தான்!” என்றார்.

 

அவரிடம் மேலும் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன், ‘நீங்க ஏன் எல்லாருக்கும் நல்லவரா இல்லாம போயிட்டீங்க தாத்தா?’ என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டான்.

 

பழைய நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க பார்க்க, அதற்குள் சிக்கிக்கொள்ள விரும்பாதவன், எண்ணத்தின் திசையை மாற்ற அவனின் சரிபாதியாகப் போகிறவளை நோக்கி எண்ண அலைகளை செலுத்தி, அதில் வெற்றியும் கண்டான்.

 

ஆனால், மறுபுறமிருந்து எவ்வித எதிர்வினையும் வந்த பாடில்லை. அவள் தான் சிந்தனை செய்து செய்தே சோர்ந்து போய், இழுத்து போர்த்தி படுத்து விட்டாளே!

 

  1. *****

 

மறுநாள் காலையிலேயே துவாரகாவின் வீட்டிற்கு வந்து விட்டான் மயூரன். கோபிநாத் தான், திருமணத்தைப் பற்றி பேச அழைத்திருந்தார்.

 

அப்போது தான் குழப்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு, வயிற்றைக் கவனிக்கலாம் என்று சாப்பிடும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள் துவாரகா.

 

அதே சமயம் உள்ளே நுழைந்தவனை கண்டதும், அவளோ அலறியடித்து, ‘ஹையையோ, இப்போவே வந்துட்டானா?’ என்று எண்ண, ‘ஒரு நாளைக்கே இப்படி அலறுற. அந்த மனுஷனை எத்தனை நாள் இப்படி அலற விட்டிருப்ப? இப்போ அவரோட டர்ன் போல!’ என்று கெக்கலித்தது அவளின் மனசாட்சி.

 

“வாங்க வாங்க.” என்று மகிழ்ச்சியாகவே அவனை வரவேற்ற கோபிநாத், “சாப்பிடுங்க மயூரன்.” என்றும் கூற, மறுக்க வந்தவன், உணவுண்ணும் மேஜையில் அமர்ந்து அவனையே கலவரமாக பார்த்துக் கொண்டிருப்பவளை கண்டதும் நமுட்டுச் சிரிப்புடன், “சாப்பிடலாமே.” என்று அவளருகே வந்து அமர்ந்து விட்டான்.

 

அதில் அவள் அதிர்ச்சியில் கண்களை விரிக்க, “என்ன ஷாக்கு? வேண்டாம்னு சொல்லிடுவேன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தியோ?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் பேசி மீண்டும் ஒரு அதிர்ச்சியை தந்தான் மயூரன்.

 

“ரெண்டு நாள்ல எவ்ளோ ஷாக்கை தான்டா தருவீங்க? சுகர் பேஷண்ட்டாவே ஆக்கிடுவானுங்க போலயே!” என்று மெல்ல முணுமுணுத்தாள் துவாரகா.

 

இருவரோடும் இணைந்து கொள்ள வந்த கோபிநாத்தை அலுவலக அழைப்பு இழுத்துக் கொள்ள, “ஒரு முக்கியமான கால். நீங்க சாப்பிட்டுட்டு இருங்க.” என்று மயூரனிடம் கூறியவர், “துவாம்மா, கவனிச்சுக்கோ.” என்று கூறிவிட்டு சென்று விட, “க்கும், இது எல்லாத்துக்கும் காரணமே நான் கவனிச்சதால தான்!” என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

 

அதுவும் அவனுக்கு கேட்க, சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவளின் பேச்சும் செயலும் முன்பை விட அதிகம் கவர்வது போல இருக்கிறது அவனுக்கு! 

 

மேலும், அவளின் பேச்சுகளும் நடவடிக்கைகளும், அழுத்தத்துடன் இருக்கும் அவனின் மனதை லேசாக்குவது போல இருக்க, அவற்றை விரும்பியே தேடினான் என்றே கூற வேண்டும்!

 

கோபிநாத் அங்கிருந்து சென்று விட்டார் என்பதை உறுதிபடுத்திக் கொண்டவன், மெல்ல அவளருகே சென்று, “மே ஐ ஹெல்ப் யூ?” என்று வினவ, உதட்டை சுழித்துக் கொண்டவளோ, “நோ தேங்க்ஸ்.” என்று திரும்பிக் கொண்டாள்.

 

அத்தனை எளிதில் அவளை விட்டு விடுவானா என்ன?

 

சில நொடிகள் கழித்து, “துவா…” என்று அவன் முடிப்பதற்குள், “ஹலோ, எதுக்கு இப்படி சும்மா சும்மா தொந்தரவு செஞ்சுட்டே இருக்கீங்க?” என்று ஆரம்பித்து விட்டாள் அவள்.

 

அவனோ மற்றதை கண்டு கொள்ளாமல், “என் பேரு ஹலோ இல்ல துவா…ரகா…” என்று அவளின் பெயரை ஜவ்வு போல இழுத்துக் கூற, “ப்ச், இப்போ பேரு தான் பிரச்சனையா?” என்று நொடித்துக் கொண்டாள் அவள்.

 

“பிரச்சனையா? என் பேரு தான் பிரச்சனைன்னா, உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடேன். மிஸ்டர். துவாரகா கூட எனக்கு ஓகே தான்!” என்று அவன் கண்ணடிக்க, ஒரு நொடி அதில் திகைத்தவள், மறுநொடியே சுதாரித்துக் கொண்டு,  “ஷப்பா, இல்ல தெரியாம தான் கேட்குறேன்… ஒரே நாள்ல எப்படி உங்களுக்கு இப்படி காதல் பொங்கி வழியுது?” என்று முன்தினத்திலிருந்து அவளின் மனதை அரித்த சந்தேகத்தை கேட்டே விட்டாள்.

 

“காதல்னாலே அப்படி தான? ஏன், நீ கூட, என்னை பார்த்த அன்னைக்கே விழுந்துட்ட தான… காதல்ல?” என்று அவன் மீண்டும் அவளை மடக்க, “ஐயா சாமி, தெரியாம உங்களை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்!” என்று கையெடுத்து கும்பிடாத குறையாக கூறினாள் அவள்.

 

அவை எல்லாம் அவனுக்கு வேடிக்கையாக இருக்க, பேச்சை வளர்க்க எண்ணி, “ஆனா, நான் தெரிஞ்சே தான் கல்யாணம் பண்ணிக்க கேட்குறேன்.” என்று கூற,  அவனை முறைத்து பார்த்தவள், “என்ன பழிக்கு பழியா?” என்றாள்.

 

“அப்படியும் வச்சுக்கலாம். உனக்கு பழி வாங்கணும்னு தோணுச்சுனா, கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் பழி வாங்கு.” என்று அவன் தோளை குலுக்க, “ஆக, பழி வாங்க தான் கல்யாணம்?” என்று எதையோ கண்டுபிடித்ததை போல கேட்டாள் அவள்.

 

“மொத்தமா அப்படி சொல்லிட முடியாது. பழி வாங்குறதுக்கு இடையில இருக்க கேப்ல வாழவும் செய்யலாமே… காதலோட!” என்று அவன் இம்முறை தீவிரமாக அவளின் கண்களை பார்த்துக் கூற, அது பெண்ணவளை ஏதோ செய்தது.

 

அதிலிருந்து தப்பிக்க வேண்டி, இமைகளை மூடி திறந்தவள், ஒரு பெருமூச்சுடன், “தப்பிக்க வாய்ப்பே இல்லையா?” என்று வினவ, நமுட்டுச் சிரிப்புடன், “முன்னாடி இருந்துச்சு. இப்போ நோ சான்ஸ்!” என்றான் மயூரன்.

 

அவளுக்கும் தப்பிக்க மனமில்லையோ என்னவோ, அதற்கு மேல் திருமணத்தை தடுக்க பெரிய முயற்சிகளை எல்லாம் செய்ய முற்படவில்லை.

 

அவளுக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங்கின் விளைவோ என்னவோ? 

 

அதற்காக திருமணத்தையும் அவனையும் முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்றில்லை.

 

அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அவளின் ஆழ்மனதில் இன்னும் பத்திரமாக சேமிக்கப்பட்டு தான் இருந்தன.

 

வருங்காலத்தில் பூகம்பமாக வெடிக்குமோ என்னவோ?

 

ஆனால், தற்சமயம் அவர்களை கடக்கும்போது எல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல பழகி விட்டாள். ஏற்றுக்கொள்ளுதலின் முதல் படி இது தானோ?

 

மற்றபடி, திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோபிநாத்தும் மயூரனும் சேர்ந்தே முடிவு செய்தனர்.

 

கோவிலில் திருமணம் முடித்து பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ளலாம் என்று மயூரன் கூற, ஒரே மகளின் திருமணத்தை எப்படி எல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்த கோபிநாத்திற்கு அது ஒப்பவில்லை.

 

மயூரன் தான், இரு குடும்பத்தினரும் இணைந்து திருமண வரவேற்பை பெரிதாக செய்து கொள்ளலாம் என்று யோசனை கூறினான். மேலும், திருமணத்தன்று மயூரன் பக்க உறவினர்கள் வரவில்லை என்றால் அதுவும் பேசுபொருள் ஆகும் என்றும் கூற, அரைமனதாகவே சம்மதித்தார் கோபிநாத்.

 

எளிய முறையில் திருமணம் என்பதால் அத்தனை வேலைகள் எதுவும் இருக்கவில்லை. 

 

கோபிநாத்தின் ஆஸ்தான ஜோசியரிடம் இருவரின் ஜாதகத்தை கொடுத்து, நல்ல நாள் பார்த்து தர சொல்ல, அவரும் இரு நாட்களுக்கு பிறகு வரும் முகூர்த்த நாளை குறித்துக் கொடுத்தார்.

 

ஆக, மயூரன் எண்ணியபடி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே இருவரின் திருமண நாள் குறிக்கப்பட்டது.

 

அதை அறிந்து கொண்ட துவாரகா தான் கோபத்தில் கொந்தளித்தாள்.

 

“எது ரெண்டு நாள்ல கல்யாணமா? என்ன விளையாடுறீங்களா? இப்போ எதுக்கு இவ்ளோ அவசர அவசரமா என்னை பேக்கப் பண்ணப் பார்க்குறீங்க? அப்படி என்ன அவசரமாம் அந்த திடீர் லவர் பாய்க்கு?” என்று கோபிநாத்தை பிடித்து கத்திக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டான் மயூரன்.

 

“லவர் பாய்க்கு என்ன அவசரம்னு என்கிட்ட தான கேட்கணும் துவா…ரகா?” என்று மயூரன் கேட்டுக் கொண்டே வர, அவனை அங்கு எதிர்பார்க்காமல் ஒருநொடி மௌனமாகி விட்டாள் துவாரகா.

 

கோபிநாத்தோ தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து சென்று விட்டார். இந்த இரு நாட்களாக மகளை மருமகனிடம் கோர்த்து விட்டு இப்படி தான் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

 

“என்ன சத்ததையே காணோம் துவா…ரகா?” என்று மயூரன் வினவ, சுதாரித்த துவாரகாவோ, “முதல்ல என் பேரை இப்படி இழுத்து இழுத்து கூப்பிடுறதை நிறுத்துங்க.” என்று எரிச்சலுடன் கூறினாள். 

 

“ஓஹ், உனக்கு பிடிக்கலையா? நான் கூட உனக்கு அப்படி கூப்பிட தான் பிடிக்கும்னு நினைச்சேனே.” என்று நமுட்டுச் சிரிப்புடன், அவள் அவனை ‘மய்யூ…ரன்’ என்று கூப்பிட்டதை நினைவுபடுத்தி கூற, “ஹையோ, அதை விடவே மாட்டிங்களா? அறியா பிள்ளை தெரியாம செஞ்ச தவறு அது!” என்று தலையில் கைவைத்துக் கொண்டாள்.

 

“ஓஹோ, இப்போ மட்டும் எல்லாம் அறிஞ்சுக்கிட்டியாக்கும்?” என்று மெல்லிய குரலில் அவன் கேட்க, கண்களை மறைந்திருந்த கைகளை எடுத்து அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

 

அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் சந்தேகம் வந்திருக்காதோ என்னவோ. அவனின் ‘ஹஸ்கி’ குரல், அந்த கேள்விக்கு வேறு சாயம் பூச அல்லவா முற்பட்டிருந்து!

 

அவளின் பார்வையை வைத்தே எண்ணத்தை அறிந்து கொண்டவன் சிரிப்புடன், “நான் சிங்கில் மீனிங்ல தான் சொன்னேன். நீ டெர்ட்டியா யோசிச்சா, அதுக்கு நான் பொறுப்பில்ல.” என்றான்.

 

“எதே, நான் டெர்ட்டியா யோசிக்குறேனா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டவள், “ரொம்ப தான் கனவு கண்டுட்டு இருக்கீங்க மிஸ்டர். இந்த கல்யாணம் கடைசி நிமிஷம் கூட நின்னு போகலாம்.” என்று வேண்டுமென்றே அவனை மிரட்டுவதற்காக அவள் கூற, அப்போதென்று பார்த்து அங்கு வந்த கோபிநாத், “துவா, என்ன இது? இப்படி பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் தான?” என்று மகளை கண்டித்து விட்டார்.

 

‘இப்போ யாரு உங்களை இங்க வர சொன்னது?’ என்பது போல தந்தையை முறைத்து வைத்தவள், அங்கிருந்து செல்ல முற்பட, ஒரு நிமிடம் கூட அவளின் மீது கோபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத அந்த பாசமான தந்தையோ, “துவாம்மா…” என்று சமாதானத்திற்கு தூது செல்ல ஆரம்பித்து விட்டார்.

 

நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மயூரனோ, ‘க்கும், இப்படி செல்லம் கொஞ்சி கொஞ்சி தான் இப்படி இருக்கா?’ என்று நினைத்துக் கொள்ள, ‘அது ஒன்னும் உனக்கு பிடிக்காத மாதிரி தெரியலையே!’ என்று பதில் கொடுத்தது அவனின் மனம்!

 

“துவாம்மா, மயூரனோட போய் உங்க கல்யாணத்துக்கான டிரெஸ்ஸை வாங்கிட்டு வந்துடும்மா.” என்று கோபிநாத் மகளிடம் கூற, “ஏன், அதையும் நீங்களே பண்ண வேண்டியது தான?” என்று முணுமுணுத்தவள், “நீங்களும் வாங்கப்பா.” என்றாள்.

 

கோபிநாத்திற்கு மகளின் ‘வார்ட்ரோப் அலப்பறைகள்’ மனதிற்குள் வந்து போக, அதில் சுதாரித்தவர், “எனக்கு முக்கியமான ஆஃபிஸ் மீட்டிங் இருக்கு துவாம்மா. நீங்க போயிட்டு வாங்க.” என்று கையோடு அவளை மயூரனிடம் அழைத்துச் சென்று விட்டார்.

 

“சண்டே அப்படி என்ன வேலை உங்களுக்கு?” என்றவளின் குரல் காற்றோடு கரைந்து போனது.

 

மயூரன் அதையும் ஒருவித சுவாரசியத்துடன் பார்க்க, “க்கும், நான் வேணும்னு நினைக்குறப்போ எதுவும் நடக்குறதில்ல. வேண்டாம்னு நினைக்க ஆரம்பிக்குறதுக்குள்ள சிறப்பா நடந்து முடிஞ்சுடுது. என்ன ஸ்கிரிப்ட்டோ!” என்று புலம்பிக் கொண்டே, அவளின் வருங்கால கணவனுடன் பயணத்தை ஆரம்பித்து விட்டாள் துவாரகா.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ரைட்டர் வேலை தான் இது