Loading

வானம் – 10

“லூசு அம்மா… இத வச்சுக்கிட்டு என்னதான் பண்றது” எனப் புலம்பியவாறே தலையில் அடித்துக் கொண்டாள் சரயு. ஏதோ ஒரு பொருளை எடுக்க வந்தவனின் காதுகளில் விழுந்தது இவளின் புலம்பல்.

“யாரையாச்சும் தொந்தரவு பண்ணலனா உனக்கு பொழுது போகாதா?” என்ற வார்த்தைகள் அவள் காதருகே ஒலிக்க, வேகமாய் திரும்பியவள் எதிரே நின்றிருந்த சித்தார்த்தை கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தாள் சரயு.

அவனோ கைக்கட்டி அவள் எதிரே நிற்க, ‘இப்ப எதுக்கு இவரு ஹீரோ மாதிரி கைக்கட்டி நம்மள லுக்கு விடறாரு’ என்ற மனசாட்சியை அடக்கியவள், “என்ன சொன்னீங்க, புரியல… நான் யார தொந்தரவு பண்ணேன்?” என்றாள் புரியாமல்.

“இல்ல ஃபோன்ல யாரையோ திட்டிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அதான் யாரையாச்சும் டென்ஷன் படுத்தலனா உனக்கு பொழுது போகாதானு கேட்டேன்” என்றவனின் வார்த்தைகளோடு ‘என்னைப் போல் உன்னிடம் சிக்கிக் கொண்ட அந்த இன்னொரு ஜீவன் யார்?’ என்ற கேள்வியை அவனது விழிகள் வினவியது.

“ஒட்டுக் கேட்கிறதே தப்பு… இதுல கேள்வி வேற” என அவன் காதுபடவே முணுமுணுத்தவள், “ஹலோ, உங்கள நான் எதும் டிஸ்டர்ப் பண்ணனா… என் அம்மாட்ட நான் என்ன வேணும்னாலும் பேசுவேன்” என வேகமாய் சிலிப்பிக் கொண்டாள் கோபத்தினூடே அவனது கேள்விக்கும் பதில் அளித்த வண்ணம்.

“உன் அம்மாட்ட என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா இது வேலை டைம், அதுனால வேலைய மட்டும் தான் இங்க பாக்கணும்” என்றவனின் வார்த்தைகளில் அழுத்தம் கூடியிருக்க, “ஸாரி, இனி இப்படி நடக்காது” என முணுமுணுத்தவள் தன் வேலையை பார்க்க செல்ல, அவளது பின்னே “தேங்க்ஸ் சரயு” என்ற சித்தார்த்தின் வார்த்தைகளும் மிதந்து வந்தன.

அவளோ அதனை கேட்டும் கேளாதது போல் தன் வேலையை செய்யத் துவங்க, அவனது இதழ்கள் லேசாய் மலர்ந்தன.

பிரஷாந்தின் வருகையை எதிர்பார்த்து திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் தங்கம்மாள். வீட்டிற்கு வரும்போதே பக்கத்து வீட்டை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டவாறே வந்துக் கொண்டிருந்தவனின் மனதில், ‘ரேவதி எங்க போனா? ஏன் ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கிறா’ என்ற யோசனையும் படர்ந்திருந்தது.

“வா கண்ணா, வேல எல்லாம் முடிஞ்சுதா?” என வரவேற்ற தன் தாயிடம், “ம்…” என பதிலளித்தவன் வாசலில் வைத்திருத்த தண்ணீரில் முகம், கைகால் கழுவியவன் தன் கழுத்தில் இருந்த துண்டில் முகத்தை துடைத்தவாறே ரேவதியின் வீட்டிற்கு செல்ல எத்தனிக்க, “எங்க பா போற?” என்ற தங்கம்மாளின் வார்த்தைகள் தடுத்தது.

“ரேவதிய பார்க்க தான் மா. ஏதோ நோட்டு புஸ்தகம் வேணும்னு கேட்டுச்சு. நாளைக்கு வெள்ளனே டவுனுக்கு போற வேல இருக்கு
இப்பவே கேட்டு வச்சுக்கிட்டா நாளைக்கு வாங்கிட்டு வந்துருவேன்ல” என்றவன் தன் தாயின் மறுவார்த்தைகளை கேட்க நேரமில்லாதது போல் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

“ரேவதி, ரேவதி” என்றவாறே உள்ளே நுழைந்தவனை எதிர்கொண்டது வாணி தான். “ஏன் பா?” என வினவியவரிடம், “அத்த ரேவதி எங்கத்த, ஆளயே காணோம்” என்றவாறே கண்களாலே வீட்டினுள் துழாவிக் கொண்டிருந்தான் பிரஷாந்த்.

“அவ உள்ள ரூம்ல தூங்கிறா பா, ஏதாச்சும் சொல்லணுமா…” என்றவரிடம், “நோட்டு புஸ்தகம் வாங்கணும்னு சொன்னா. அதான் என்னென்ன வேணும்னு கேட்டு போகலாம்னு வந்தேன் அத்தை…” என தன் தாயிடம் கூறிய அதே பொய்யை இங்கும் எடுத்துரைக்க, “தூங்கிறவள எழுப்ப வேண்டாம் பா. ஏதாச்சும் வேணும்னா அவ அப்பாவ வாங்கிட்டு வர சொல்லிக்கிறோம். உனக்கு எதுக்கு பா சிரமம்” என்றவரின் வார்த்தைகள் ஏதோ மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் இருக்க தன் அத்தை ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறார் எனப் புரிபடாமல், “இதுல என்ன சிரமம் அத்த, நாளைக்கு டவுனுக்கு போற வேல இருக்கு. அதான் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று கூறியவன், “சரிங்கத்த, அவ எந்திரிச்சோனே நான் வந்து விசாரிச்சுட்டு போனதா சொல்லுங்க” என்றவன் தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

“கூப்பிட கூப்பிட அம்புட்டு அவசரமா அங்க போகணுமா கண்ணா…” என்ற தங்கம்மாளிடம், “என்ன ம்மா, அதான் சொல்லிட்டு தான போனேன் ரேவதிகிட்ட என்ன வேணும்னு கேட்க போறேனு. அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு” என்றவனின் வார்த்தைகள் சற்று சலிப்புத் தட்டின.

“சரி சரி பா, செத்த இங்க வந்து உக்காரு. அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தங்கம்மாள். “சொல்லு மா” என்றவனின் மனதில், ‘இப்ப என்ன ஏழரைய கூட்டப் போகுதோ!’ என ஓடியது.

“நம்ம சரயுகூட படிச்ச ரம்யாவ தெரியுமா கண்ணா உனக்கு. அதான் நம்ம பக்கத்தூரு நாட்டாமை பொண்ணு” என்க, சற்று யோசித்தவன், அப்படி ஒரு பெண்ணின் முகத்தை பார்த்ததாக நினைவில் இல்லாததால், “தெரியலயே மா… ஏன், அந்த பொண்ணுக்கு என்னவாம்?” என்றான் பிரஷாந்த்.

“இல்ல பா, அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கிறாங்களாம்…” என நிறுத்த, “அதுக்கு” என்ற வார்த்தை வேகமாக வந்தது பிரஷாந்திடமிருந்து.

“உன் ஜாதகத்தை பாக்கலாம்னு அப்பா பிரியப்படறாரு” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கோர்த்துக் கூற, அவனோ அமைதியாக இருந்தான். “உன் சம்மதம் இல்லாம அம்மா அப்படி எதுவும் பாக்க முடியாதுனு சொல்லிட்டேன் கண்ணா… அதான் அப்பா உன்கிட்ட கேட்க சொன்னாரு” என அப்பாவியாய் தன் கணவன் மேல் பழியை போட, தன் தாயின் சாமர்த்திய நகர்வை புரிந்துக் கொண்டவன்,

“இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் மா… மொதல்ல சரயு படிப்பு முடிக்கட்டும், அவளுக்கு ஒரு நல்லது பண்ணிட்டு அப்புறமா என்னை பத்தி யோசிக்கலாம். இப்போதிக்க இந்த பேச்ச எடுக்க வேண்டாம்னு அப்பாட்ட சொல்லி நீயே புரிய வை ம்மா” என அவர் போட்ட பந்தை அவருக்கே திருப்பி அடித்தான் பிரஷாந்த்.

“இல்ல பா அதுவந்து…” என மேலும் பேச முயன்றவரை தடுத்தவன், “இப்போதிக்க கல்யாணத்த பத்தின எந்த ஐடியாவும் எனக்கு இல்ல ம்மா. கொஞ்ச நாள் போகட்டும். ப்ளீஸ்” என்றவன் வேகமாய் தன் அறைக்குச் செல்ல, இதனை எதிர்பார்த்து தான் இருந்ததால் தனது அடுத்த கட்ட நகர்வை யார்மூலம் நடத்தலாம் என மனதினுள் திட்டமிட ஆரம்பித்தார் தங்கம்மாள்.

தன் அறைக்குள் வந்தவனுக்கு ஏன் ரேவதி தனது ஃபோனை எடுக்கவில்லை என்பது புலப்பட, ‘இதுதான் காரணமா’ என நினைத்தவன் மீண்டும் மீண்டும் அவளுக்கு அலைப்பேசியில் தொடர்புகொள்ள, கிட்டத்தட்ட அவனது பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளை நிராகரித்திருந்தாள் ரேவதி. ஆனால் இவனோ விடாது அழைக்க, ஒருக்கட்டத்தில் அழைப்பை ஏற்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

“ஏன் இப்போ ஃபோன எடுக்காம இருக்க ரேவதி… போன எடுக்காம இருந்தா பிரச்சினை எல்லாம் தீர்ந்திருமா?” என்றான் பிரஷாந்த் சற்று கோபமாய்.

அதற்கும் அமைதியே பதிலாக கிடைக்க, “ஏதாச்சும் பேசி தான் தொலையேன் டி. இப்படி உம்முனு இருந்தா என்ன அர்த்தம்” என்றவனுக்கு பதிலாக, “இனி என்கிட்ட பேசாதீங்க அத்தான்” என வந்தது ரேவதியிடமிருந்து.

“பேசாதீங்கன்னா… என்ன அர்த்தம்?” என வார்த்தைகள் கடுமையாக, “பேசாதீங்கன்னா பேசாதீங்க, அவ்ளோ தான்” என்றாள் ரேவதி அழுகையை அடக்கிய வண்ணம்.

“அவ்ளோ தானா… அப்போ நான் அம்மா சொல்ற புள்ளைய கட்டிக்கவா?” என வர, அவளோ உடைந்து அழுதே விட்டாள். “லூசா டி நீ… உனக்கு எத்தனவாட்டி தான் சொல்றது, இப்படி பைத்தியக்காரத்தனமா பேசாதனு. அம்மாவ பத்தி தான் தெரியும்ல, அப்புறம் ஏன் இத இவ்ளோ சீரியஸ்ஸா எடுத்துக்கிற… என்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா ரேவதி?” என்றவனின் கடைசி வரிகளில் அவள் வேகமாக மறுக்க முயன்றாள்.

“அப்படி இல்ல அத்தான்… இன்னிக்கு என்கிட்டயே அத்த அந்த ரம்யாவ பத்தி விசாரிக்கிறாங்க, அதும் உங்களுக்கு ஏத்தவளா, அப்படி இப்படினு ஆயிரம் கேள்வி. எனக்கு அப்படியே செத்தற்லாம் போல இருந்துச்சு அத்தான்” என்றவளின் வார்த்தைகளில் தெரிந்த வலியை உணர்ந்தவனுக்கு உடனே அவளை நேரில் பார்க்க வேண்டும் என மனம் உந்த,

“ஒரு நிமிஷம்” என்றவன், தன் வீட்டின் பின்கட்டு வழியே சென்று ரேவதி வீட்டின் கொல்லைப்புறம் வழியாக அவளது அறையை அடைந்திருந்தான்.

“கதவ திற” என கட்டளையாய் வார்த்தைகள் வர ஒருநிமிடம் திடுக்கிட்டவள் பின் எழுந்து சென்று கதவைத் திறந்தாள் ரேவதி. அவள் திறந்த அடுத்த நொடியே அறைக்குள் நுழைந்திருந்தவன் வேகமாய் கதவை சாற்றிவிட்டு அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்துக்கொள்ள, அவனது நெஞ்சினோரம் ஈரம் படர்ந்தது.

“அத்தான்” என அவனது முகம் பார்க்க முயல, “ஷ்” என வாயில் விரல் வைத்தவன் அவளை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டான். அவனது அணைப்பு நொடிக்கு நொடி அதிகரித்ததே தவிர குறையவில்லை. சில நொடிகளில் அவளை விலக்கியவன், “கண்டதையும் யோசிக்காம தூங்கு. என்ன நடந்தாலும் கண்டுக்காம இருக்கணும், உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் புள்ள. சரியா” என்றவன், “ரொம்ப நேரம் நான் இங்க இருக்கிறது சரி வராது. நான் போய்ட்டு வரேன்” என்றவன் அறையை விட்டு வெளியேற முற்பட, அவளோ அவனை பிரிய மனமில்லாமல் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“அம்மா எது கேட்டாலும், சொன்னாலும் இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்றணும்” என்றவன், “சரி, அத்த வந்தற போறாங்க. நான் கிளம்பறேன்” என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து கிளம்பியும் இருந்தான்.

தீக்காயத்திற்கு மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது அவனின் வருகையும் அணைப்பும். படுக்கையில் விழுந்தவள் தனது அலைப்பேசி தொடுதிரையில் மின்னிய பிரஷாந்தின் புகைப்படத்தை வருடியவாறே அவன் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தாள் ரேவதி.

_தொடரும்

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment