462 views

மகளைக் கண்டதும் தந்தையின் மனம் பதை பதைக்க, அதை  மறைக்காமல் மகளிடத்தில் காட்டி விசாரித்தார். பரிமளம் அவரை சமாதானப்படுத்தி நடந்ததை விவரிக்க, சுள்ளென்ற கோபம் அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது.

 

“இதுக்கா இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிங்க.” என்று கோபம் கொண்டவர்  அனைவரையும் விளாச ஆரம்பித்தார்.

 

அவர் கொடுக்கும் அனைத்து திட்டுக்களையும் வாங்கிக் கொண்டிருந்த யாழினி அமைதியாக நின்றிருக்க, ஊர்மக்கள் சிலர் பதட்டத்தோடு வந்தார்கள் மருத்துவமனைக்கு. முதலில் யாழினியை நலம் விசாரிக்க,  செய்தி கேட்டதும் வம்பு பேச ஆரம்பித்தனர்.

 

 

“ஏம்பா இதுக்கா இந்த பிள்ளைய அத்தனை பேர் பார்க்க தூக்கிட்டு வந்த.” என்று ஒருவர் கேட்க,

 

“அவன் ஓடி வந்ததை பார்த்து எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.” என்றார் மற்றொருவர்.

 

“அதான்பா! எனக்கும் கொஞ்ச நேரத்துல ஒண்ணுமே புரியல.” ஆள் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க, சண்முகத்தின் கோபம் மொத்தமும் மருமகனின் மீது திரும்பியது.

 

“நீ எதுக்குடா என் மகளை தூக்கிட்டு வந்த.” என்று தேவநந்தனை சாட,

 

“கதறிட்டு இருந்த பிள்ளைய தூக்கிட்டு வந்ததுக்கு நன்றி சொல்லாம எதுக்கு மச்சான் திட்றீங்க.” மகனுக்கு ஆதரவாக நின்றார் பாண்டியன்.

 

“சும்மா இருங்க மச்சான் உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இவன் வேணும்னே என் பொண்ண தூக்கிட்டு வந்திருப்பான்.” என்றவர் மீண்டும் அவனிடம்,

 

“இன்னொரு தடவை என் பொண்ணு கூட உன்னை பார்த்தேன் மனுஷனா இருக்க மாட்டேன், கிளம்புடா.” என்று கர்ஜித்தார்.

 

“இப்ப எதுக்கு மாமாவ திட்டிட்டு இருக்கீங்க. நான் தான் என்ன கடிச்சுதுன்னு தெரியாம அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன். எனக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் மாமா தூக்கிட்டு வந்தாங்க.” மாமன் திட்டு வாங்குவதை ஏற்க முடியாது  தந்தை எதிர்த்து பேசினாள் யாழினி.

 

“நீ எதுக்கு அவன் கிட்ட ஆர்ப்பாட்டம் பண்ண. பெத்தவங்க நாங்க என்ன செத்தா போயிட்டோம். அத்தனை பேருக்கு முன்னாடி உன்னை தூக்கிட்டு வர அளவுக்கு உரிமைய அவனுக்கு யார் கொடுத்தது.” மகளை திட்டிக் கொண்டிருக்கும் சண்முகத்தின் பேச்சில் மனம் வருந்திய அன்னம் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரானார்.

 

“சும்மா கத்தாதிங்க ப்பா. மாமா மட்டும் தான் அங்க இருந்தாங்க. எனக்கு எதுவோ ஆகிடுச்சுன்னு எவ்ளோ பதட்டமா தூக்கிட்டு வந்தாங்க தெரியுமா. பாராட்ட வேணாம் அட்லீஸ்ட் திட்டமையாது இருங்க.” என்றாள்.

 

 

மற்றவர்கள் முன்னால் தன்னை எதிர்த்து பேசும் மகள் மீது கோபம் கொண்டவர், “ஒரு ஆம்பள தொட்டு தூக்கிட்டு வந்து இருக்கான் தடுக்காம என்னை எதிர்த்து பேசுற.” என்றவர் மகளை அடிக்க கை தூக்க, 

 

“பாப்பா மேல ஒரு அடி பட்டுச்சு மாமான்னு கூட பார்க்க மாட்டேன்.” அவர் ஓங்கிய கையை இரும்பு கம்பி கொண்டு சுத்தியது போல் தடுத்து சிறைப்படித்தான் தேவநந்தன்.

 

 

கையை உதறி கொண்டவர் அவன் கன்னத்தில் அறைந்தார். மாமன் அடி வாங்குவதை கண்டு பதறியவள்,  “நீங்க யாரு என் மாமாவ அடிக்க. உங்களுக்கும்  அவங்களுக்கும் உறவு விட்டு போய் பல வருஷமாகுதுன்னு வாய் கிழிய பேசிட்டு எந்த உரிமையில அடிச்சீங்க. ஒழுங்கா என் மாமன் கிட்ட மன்னிப்பு கேளுங்க.” என்றவளை இந்த முறையும் அடிக்கத்தான் கை தூக்கினார் சண்முகம்.

 

 

“திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன். பாப்பா மேல ஒரு அடி படக்கூடாது.” சிறை பிடித்த கையை உதறி விட, சண்முகத்தின் உடல் அதிர்ந்து பின் நகர்ந்தது.

 

இருவரின் செய்கையில் அவர் நிதானம் கூடு விட்டு மறைந்திருக்க, தேவநந்தனின் சட்டையை பிடித்தார். அதற்குள் பாண்டியன் வந்து இருவரையும் சமாதானப்படுத்த, “விடுங்க மச்சான்! என்ன தைரியம் இருந்தா என் கையை மடக்கி பிடிப்பான்.” என்று உதறிக்கொண்டு அவன் சட்டையை பிடிக்க முயல,

 

“போதும் ப்பா இதுக்கு மேல நான் சும்மா இருக்க மாட்டேன். உங்க இஷ்டத்துக்கு அடிக்க வரீங்க கேட்க ஆள் இல்லன்னு நினைச்சிங்களா. மடக்கி புடிச்ச மாமாக்கு உங்கள திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது.” என்றவள் தன் அத்தையிடம் திரும்பி,

 

“மாமாவ கூட்டிக்கிட்டு கிளம்புங்க அத்தை நான் அப்புறமா வீட்டுக்கு வரேன்.” என்றாள்.

 

 

மகள் பேச்சில் முகம் கருகி நின்றார் சண்முகம். பாண்டியன் மருமகளை சமாதானப்படுத்த, “நீங்களும் என்ன மாமா அவருக்கு சப்போர்ட் பண்றீங்க. என் மாமா என்ன தப்பு பண்ணினாரு அடிக்கிற அளவுக்கு. என்னை தூக்கிட்டு வரும்போது ஒரு செகண்ட் கூட தப்பாவே தோணல மாமா எனக்கு. உங்கள விட, பெத்த அப்பா அவர விட, என் மாமன் கூட இருக்கும் போது நான் ரொம்ப பாதுகாப்பா இருப்பேன். இந்த மாதிரி இன்னொரு தடவை பேசுனா  அவருக்கு பொண்ணா இருக்க மாட்டேன்னு சொல்லிடுங்க.” என்றவளை தேவநந்தன் தான்,

 

“உடம்பு முடியாம எதுக்கு பாப்பா இப்படி கத்திக்கிட்டு இருக்க. அடிச்சது யாரு மாமா தான பேச்சை இத்தோட நிறுத்திட்டு வேலைய பாரு.” என சமாதானப்படுத்தினான்.

 

அவள் கேட்காமல் வாதம் புரிய, “பாப்பா போதும் வீட்டுக்கு கிளம்பு.” என்றவன் மருத்துவமனையில் நின்றிருந்த ஷேர் ஆட்டோ ஒன்றை ஊருக்குள் செல்ல விலை பேசினான். 

 

பரிமளம், வள்ளி, யாழினி மூவரும் ஏறிக்கொள்ள, பாண்டியனோடு சண்முகம் பைக்கில் ஏறினார். 

 

“அத்தை நீங்களும் வாங்க.” என்று அன்னத்தை யாழினி அழைக்க,

 

“அம்மாவும் நானும் பின்னாடி வரோம் பாப்பா. நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு.” என்று அவளை வழி அனுப்ப, ஆட்டோ நகர்ந்தது. 

 

அன்னையை அழைத்து செல்ல அவன் வேறொரு வாகனத்திடம் பேச்சு கொடுக்க, விலகிச் சென்ற ஆட்டோ நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கிய யாழினி மாமனை நோக்கி வர, அவனும் அவளை பார்த்தவாறு நின்றான். 

 

அருகில் வந்தவள், “இன்னொரு தடவை அவர் அடிச்சா வாங்கிக்காத மாமா. அப்புறம் உன்னை நான் சும்மா விட மாட்டேன்.” என்றவள் வார்த்தையில் சிரித்தவன்,

 

“அவர் என் மாமா பாப்பா. அடிச்சா மட்டும் இல்ல தூக்கிப்போட்டு மிதிச்சா கூட நான் அமைதியாக தான் இருப்பேன்.” என்றான்.

 

மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் அவன் சிரிப்பை பார்த்ததுக்கு பின், “அழகு மாமா” என்று கன்னம் கிள்ள, அவர்களை கடந்து சென்றது பாண்டியன் வாகனம்.

 

யாழினி விஷயம் கேள்விப்பட்ட கிருஷ்ணன் அவசரமாக வீட்டிற்கு ஓடி வர, “எதுவும் இல்ல ண்ணா நான் தான் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன்.” என்ற வார்த்தையை கேட்ட பின்னும் நகராமல் அவள் பக்கத்திலேயே அமர்ந்துக் கொண்டிருந்தான். 

 

தங்கையின் தோள் மீது கை போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டவன், “நான் உன் கூடவே வந்திருக்கணும் யாழு. தனியா விட்டதால தான இந்த மாதிரி ஆச்சு.” என்று வருத்தப்பட, சிரித்துக் கொண்டிருந்தாள் யாழினி.

 

 

“எதுக்கு சிரிக்கிற.” அவன் புரியாமல் கேட்க, “நான் எங்க தனியா இருந்தேன்? மாமா தான் கூட இருந்தாரே!.” என்று அவன் வருத்தத்தை மாற்ற முயற்சிக்க,

 

“அப்பா ரொம்ப திட்டிட்டாரா அவன.” என்று விசாரித்தான்.

 

“அதை பண்ணி இருந்தா கூட பரவால்ல. மாமன அடிச்சிட்டாரு.” என்று யாழினி வருத்தத்தோடு நடந்தது விவரிக்க,

 

“எப்ப தான் நம்ம அப்பா திருந்த போறாருன்னு தெரியல யாழு. அவருக்கு மரியாதை கொடுத்து கண்டும் காணாமலும் இருந்துட்டு இருக்கேன். என்னைக்கு என்கிட்ட நல்லா வாங்கப் போறாருன்னு தெரியல.” என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு இருந்தார் பரிமளம்.

 

அவர் மனதில் சொல்ல முடியாத துயரம் மருமகனை நினைத்து. கணவன் செய்த காரியத்தால் இனி எப்படி அவன் முகத்தில் முழிக்க போகிறோம் என்ற கவலையோடு அவர் அமர்ந்திருக்க, அன்னம் அழைத்திருந்தார் தொலைபேசியில்.

 

சங்கடத்தோடு எடுத்து பரிமளம் பேச, “யாழுக்கு இப்ப எப்படி இருக்கு அண்ணி” என்று நலம் விசாரித்தார்.

 

“அவளுக்கு என்ன? பண்ற எல்லா வேலையும் பண்ணிட்டு நிம்மதியா உட்கார்ந்து இருக்கா.” என்றார் சலித்துக் கொண்டு.

 

 

“எதுக்கு அண்ணி பிள்ளைய திட்டிட்டு இருக்கீங்க. பாவம் அதுவே உடம்புக்கு முடியாம இருக்கு.” மருமகளுக்கு ஆதரவாக அத்தை குரல் கொடுக்க,

 

“இந்த மாதிரி நீங்க செல்லம் கொடுத்து  தான் இந்த அளவுக்கு இருக்கா இவ. படிச்சி இருக்காளே கொஞ்சமாது புத்தி வேணாம். பூச்சிக்கும் பாம்புக்குமா வித்தியாசம் தெரியாம இருப்பா. இவ பண்ண காரியத்தால என் மருமகன் தான் தேவை இல்லாம அடி வாங்கிட்டான்.” என்றவரை தாண்டிச் சென்ற யாழினி எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

 

அதைக் கண்டவர் இன்னும் கோபமாகி, “ஏண்டி உன்ன தான இவ்ளோ மட்டமா பேசிக்கிட்டு இருக்கேன். எருமை மாடு மாதிரி போற.” என்று மகளை அதட்ட,

 

“பேசாம அமைதியா இருந்திடு ம்மா. நானே என் மாமனை அடிச்ச கடுப்புல இருக்கேன். உன் புருஷன் மேல இருக்க கோபத்தை  உன்கிட்ட கொட்டிட போறேன்.” என்றவள் வார்த்தையில் பேச்சை மறந்து ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தார் பரிமளம். 

 

 

யாழினி பேச்சைக் கேட்ட அன்னம், “அடிச்சது யாரு அண்ணி அண்ணன் தான. அவர் கிட்ட என்னன்னு கேட்க முடியும். பிறந்ததுல இருந்து என் மகனை ஒரு தடவை கூட தூக்காதவரு இப்ப அடிச்சிருக்காருன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.” என்ற அன்னத்தின் பேச்சில் மனம் பாரமாவது போல் உணர்ந்தார் பரிமளம்.

 

“இதெல்லாம் நினைச்சு வருத்தப்படாத அன்னம். ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த ஊரே ஆச்சரியப்படுற அளவுக்கு உங்க அண்ணன்  என் மருமகனை தலையில தூக்கி வைச்சு கொண்டாட தான் போறாரு.” என்று கனவிலும் நடக்காத ஒன்றை அவர் வார்த்தையில் உருவம் கொடுக்க, 

 

 

“அதெல்லாம் எதுவும் வேணாம் அண்ணி. அவர் பொண்ண என் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வச்சா போதும்.” என்றார் அன்னம்.

 

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா. இந்த மனுஷன் தான் ஒரே கொம்பா பிடிச்சுக்கிட்டு தொங்குறாரே. தூக்கிட்டு போனதுக்கே இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்றவரு அவ கல்யாணம் அப்போ என்னென்ன கூத்தடிக்க போறாரோன்னு நினைச்சாலே பயமா இருக்கு.” கணவனை நினைத்து உள்ளுக்குள் உருவாகும் பயத்தை அவர் வார்த்தைகளால் வெளிக்காட்ட,

 

“எப்படியாவது எங்க அண்ணன் மனசு மாறி என் வீட்டுக்கு யாழுவ அனுப்பி வைக்கணும்னு கடவுளை வேண்டுறதை தவிர வேறு எந்த வழியும் இல்ல அண்ணி.” என்று பெருமூச்சோடு அவர் கைபேசி அழைப்பை துண்டிக்க, தாயின் பேச்சை கேட்டு சிரித்தான் தேவநந்தன்.

 

வருங்காலம் உறவை துண்டிக்க விடாமல் அவர் எண்ணத்தை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கிறது.

***

அப்பா மீது உள்ள கோபத்தில் இரவு உணவை ஒதுக்கிய யாழினி படுத்து விட்டாள் . மதியம் நடந்த கலவரத்தில் அனைவரும் மதிய உணவை மறந்திருக்க, இப்போதும் சாப்பிடாமல் உறங்கும் மகளை நினைத்து கவலை கொண்டார் பரிமளம்.

“அவ சாப்பிட்டாளா.” சாப்பிட அமர்ந்த சண்முகம் மகளைப் பற்றி விசாரிக்க,

“அப்பவே சாப்பிட்டாங்க. தலை வலிக்குதுன்னு தூங்க போயிட்டா.” அவள் சாப்பிடாமல் இருப்பதை சொன்னால் மீண்டும் ஒரு வாக்குவாதம் நடக்கும் என்பதால் அவர் சமாளிக்க,

“அவகிட்ட பக்குவமா எடுத்து சொல்லு பரிமளம். அவன் கிட்ட பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கல. அவளை கட்டிக்க போறவன் ஊர்ல இருந்து வந்திருக்கும் போது அவனை பார்க்காம இவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு.” என்ற கணவனின் பேச்சில் பிடித்தம் இல்லாமல் போனதால் அமைதியாக அவருக்கு பரிமாறும் வேலையில் இறங்கினார் பரிமளம்.

“என்னடி நான் பாட்டுன்னு பேசிட்டு இருக்கேன் நீ கண்டுக்காம சோத்தை போட்டுட்டு இருக்க.” என்றவர் வார்த்தையில் நிமிர்ந்து,

“இதுல நான் சொல்ல என்னங்க இருக்கு. நீங்களாச்சு உங்க மகளாச்சி என்கிட்ட வராதீங்க.” என்றதோடு நிறுத்திக் கொண்டார்.

“இங்க எல்லாரும் எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டு தான் இருக்கேன். நாளை பின்ன என் முடிவுக்கு எதிரா யாராவது நின்னிங்க அப்போ தெரியும் நான் யாருன்னு.” என்றவர் சாப்பிடும் வேலையில் கவனமானார்.

***

“யாழு உங்க அப்பா வேற நீ சாப்டியான்னு கேட்டாரு. ஒழுங்கா வந்து சாப்பிட்டு படு.” அடம் பிடித்து படித்துக் கொண்டிருக்கும் மகளை கடைசியாக ஒரு முறை சாப்பிட அழைக்க,

“எதுக்கு ம்மா என் உசுர வாங்கிட்டு இருக்க. நான் தான் வேணாம்னு சொல்றேன்ல விடேன்.” அவரிடம் சிடுசிடுத்தாள் யாழினி.

அப்பனுக்கு மேல் இருக்கும் மகளை எண்ணி மனதினில் வறுத்தெடுத்தவர் அங்கிருந்து நகர்ந்து, தேவநந்தனுக்கு அழைத்தார்.

“சொல்லுங்க அத்தை என்ன இந்த நேரத்துல.” என்றவனுக்கு,

“நான் பெத்தது சரியா இருந்தா எதுக்கு இந்த நேரத்துல உன்ன தொந்தரவு பண்ண போறேன் மருமகனே.” என்று அலுத்துக் கொள்ளும் அத்தையின் பேச்சில் சிரித்தவன்,

“என்ன பாப்பா சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குதா.” என்றான்.

“நீ பாப்பா’ன்னு சொல்லி சொல்லியே அவளை பாப்பாவா மாத்திட்டப்பா. எங்க இருந்து தான் இவ்ளோ பிடிவாதம் வருதுன்னு தெரியல. மதியமும் சாப்பிடல இப்பவும் சாப்பிடாம படுத்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது.”

அவர் கவலையை உணர்ந்தவன், “நீங்க ஃபோன வைங்க அத்தை நான் சாப்பிட சொல்றேன்.” என்ற மருமகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அழைப்பை துண்டித்தார்.

மாமன் எண்ணை கண்டதும் அவன் அடி வாங்கிய குற்ற உணர்வு தலை தூக்க, அட்டென்ட் செய்த ஃபோனை காதில் வைத்து அமைதியாக இருந்தாள்.

“ஃபோன் எடுத்தா ஹலோ சொல்லணும் பாப்பா.”

…..

“உன் கிட்ட தான் பேசுறேன் பாப்பா.” என்ற பின்னும் அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, அடுத்த வார்த்தை பேசாமல் அவனும் போனை வைத்து விட்டான்.

திரும்ப அழைக்க சொல்லி மனம் வற்புறுத்தினாலும் செல்போனை பிடிவாதமாக தூரம் வைத்தவள் உறங்க முயன்றாள். தூக்கம் தான் அவளிடம் வராமல் சதி செய்து கொண்டிருந்தது. திரும்பி திரும்பி படுத்தவள் தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்து கொள்ள,

“உன் மாமன் பின் வாசல்ல நிக்கிறான் கிளம்பு.” என்றார் மகளின் அறைக்கு வந்த பரிமளம்.

“வேணாம் இது தெரிஞ்சா உங்க புருஷன் திரும்பவும் என் மாமனை அடிப்பாரு. ஏற்கனவே  அடிச்சதையே தாங்கிக்க முடியல.” என்ற யாழினியின் கண்கள் இப்போதும் அதை நினைத்து கலங்கியது.

“என்னமோ பண்ணுங்க நான் தூங்க போறேன்.” என்றவர் அமைதியாக உறங்கச் சென்று விட்டார்.

வெகு நேரமாக யோசித்துக் கொண்டிருந்தவள் கால்கள் அவளையும் அறியாமல் மாமனை நோக்கி நடை போட்டது. அவளுக்காக காத்திருந்தான் மரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டு.

“நீ எதுக்கு மாமா இங்க வந்த? அவரு பார்த்து சத்தம் போட போறாரு.”

“சாப்பிடாம என்ன வீம்பு உனக்கு. என்னை தான அடிச்சாங்க. என்னமோ நீ அடி வாங்குன மாதிரி பிடிவாதம் பிடிக்கிற.”

“என்னால தான மாமா உன்ன அடிச்சாங்க.”

“இங்க வா பாப்பா.” என்று அவன் அழைத்தும் நகராமல் அப்படியே நின்று இருந்தாள்.

விட்டுக்கொடுத்து  நகர்ந்தவன் அவளை அழைத்துக் கொண்டு வந்தான் நின்றிருந்த இடத்திற்கு. “சாரி மாமா” என்றவள் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அனைத்து வருத்தத்தையும் காட்டி விட்டாள் அழுது.

“பாப்பா சின்ன பிள்ளை மாதிரி பண்ணாத.” என்றவன் அவளை சமாதானப்படுத்த முயல,

“இதுக்குதான் நான் இந்த வீட்டுக்கு வரது இல்லை. எங்க அப்பா எல்லாம் திருந்தாத மனுஷன் மாமா. உன்னை இந்த மாதிரி நடத்துறது எனக்கு சுத்தமா பிடிக்கல. அவர் இஷ்டத்துக்கு ஒவ்வொருத்தரையும் வாழ சொல்றதும் பிடிக்கல மாமா. எங்கயாது தலைமறைவா வாழ்ந்திடனும்னு  நினைக்கிறேன்.” என்றவள் அழுகை அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.

அவள் கண்ணீரைக் கண்டு இதயம் வேகமாக துடிக்க, “பாப்பா சின்ன விஷயத்தை பெருசு பண்ணாத. அவர் என்னோட மாமா எப்படி திருப்பி அடிக்க முடியும். அப்படியே நான் அடிச்சாலும் அதும் உனக்கு கஷ்டமா தான இருந்திருக்கும். குடும்பத்துக்குள்ள கவுரவம் பார்க்காம விட்டுக்கொடுத்து போனா தான் உறவு நிலைக்கும் பாப்பா.” என்றவன் சொன்ன அனைத்தும் அவள் மனதை சேரவில்லை.

இன்னும் விடாமல் கண்ணீர் சுரந்துக் கொண்டே இருக்க, “பாப்பா இதுக்கு மேல அழுதா கோவம் வந்துரும்.” என்று கண் துடைக்க,

“அதான் வந்து தொலைய மாட்டுதே உனக்கு.” என அவன் கைகளை தட்டி விட்டாள்.

“இப்ப என்ன பண்ண சொல்ற பாப்பா”

“ஆஹான்! அடிச்சவரை கூப்பிட்டு திரும்ப அடி.”

“சண்முகம்! யோவ் சண்முகம்!! வெளிய வாயா…. கூப்பிடுறேன்ல காதுல விழ? வெளிய வாயா!.” என்று கத்தும் தேவநந்தனின் வாயை பொத்தியவள்,

“மாமா சத்தம் போடாத எழுந்து வந்துடுவாரு.” என்றாள் ரகசியமாக.

“நீதான பாப்பா அவரை கூப்பிட்டு அடிக்க சொன்ன.”

“அதுக்காக இப்பவா கூப்பிடுவீங்க.” என்று யாழினி முறைக்க,

“நீ சொன்னா உடனே செஞ்சிடுவேன் பாப்பா.” என்றான் கெத்தாக.

“நம்பிட்டேன் மாமா.” என்றவள் அவனை விட்டு தள்ளி நிற்க,

“என்ன பாப்பா நீ சொன்னா நான் பண்ண மாட்டேனா.” என்று கேட்டான்.

“பண்ண மாட்ட மாமா”

“பாப்பா என் அம்மாவுக்கு அப்புறம் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாம தலை ஆட்டுற ஒரே ஆள் நீதான். சந்தேகமா இருந்தா இப்ப ஏதாச்சும் சொல்லு அப்படியே செஞ்சு காட்டுறேன்.”

“என்ன சொன்னாலும் செய்வியா மாமா.” என்றவள் அவனை மேலிருந்து கீழாக பார்க்க,

“சும்மா சொல்லு பாப்பா எதுவா இருந்தாலும் அடுத்த நிமிஷம் செஞ்சிடுவேன்.” என்றான் மிடுக்காக.

யோசித்துக் கொண்டிருந்தவள் மேல் ஆல மர இலை ஒன்று விழ, தலை நிமிர்ந்து பார்த்தாள் மரத்தை.

“சீக்கிரம் சொல்லு பாப்பா ஐ அம் வெயிட்டிங்.” என்று இடுப்பில் கை வைத்து ராஜா போல் நின்றவனிடம்,

“இந்த மரத்து மேல என்னையும் தூக்கிட்டு ஏறு மாமா.” என்றாள் அவன் செய்ய மாட்டான் என்ற மிதப்பில்.

சற்றும் யோசிக்காதவன் பரபரவென்று மேலே ஏற, “மாமா விழ போற” என்று பதறினாள் யாழினி.

அதையெல்லாம் காதில் வாங்காதவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் மரத்தின் நட்ட நடு பகுதியில் அமர்ந்தான். இரவில் அரைகுறையாக தான் அவன் ஆடை வெளிச்சம் தெரிந்தது. பத்திரமாக மேலே ஏறியவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், “போதும் மாமா பார்த்து இறங்கு.” என்றாள்.

“நீ சொன்னத அப்படியே செஞ்சுட்டேன் தான.” அவள் மட்டும் கேட்கும்படி ரகசியமாக தேவநந்தன் கேட்க,

“நான் என்னையும் தூக்கிட்டு ஏற சொன்னேன் உங்களை மட்டும் இல்லை.” என்று அவள் சொல்லிய வார்த்தையை விளையாட்டிற்கு ஞாபகப்படுத்த,  “தொப்” என்று குதித்தான் கீழே.

இரவு நேரம் என்பதால் விழுந்து வேகத்தில் சத்தம் அதிகமாக கேட்க, “மாமா எங்கயாது விழுந்து அடிபட போது.” என்றவள் தாங்க ஓடினாள் அவனை.

“அதெல்லாம் எதுவும் ஆகாது பாப்பா.” என்றவன் எழுந்து நிற்க, எங்காவது அடிபட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்தாள் யாழினி.

தன்னை தடவி பார்க்கும் மாமன் மகளின் கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்தவன், “பத்திரமா புடிச்சுக்க பாப்பா.” என்று அவள் பதிலை கூட கேட்காமல் மரம் ஏற ஆரம்பித்தான்.

பயத்தில் யாழினி அலறி அழும் முன் ஒரு கையால் அவளை தாங்கிக் கொண்டு, ஆல மர விழுதுகளை உதவிக்கு அழைத்துக் கொண்டு உச்சி மரத்தில் அமர்ந்து விட்டான். அமர்ந்ததும் தான் மூச்சே வந்தது யாழினிக்கு.

“என்ன மாமா நீ எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா.” என்று மூச்சு வாங்கும் அவனின் பாப்பாவை கண்டு சிரித்தவன்,

“நீதான பாப்பா பண்ண சொன்ன.” என்றான் சாதாரணமாக.

“சரி மேல தூக்கிட்டீங்க இப்ப எப்படி கீழே இறக்கிட்டு போவீங்க.” என்றவளுக்கு உதடு பிதுக்கி தோள்களை குலுக்கியவன்,

“தெரியல பாப்பா.” என்றான்.

“விளையாடத மாமா எப்படியாது கீழே இறக்கி விடு. நம்மளை யாராவது இங்க பார்த்தாங்க திரும்பவும் ஒரு பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க.” என்றவள் பார்வை சுற்றுமற்றும் தான் அலை மோதி கொண்டிருந்தது.

“பயப்படாத பாப்பா உனக்கு எதுவும் ஆகாம கீழே இறக்கி விட்டுடுவேன்.” என்றவன் முதலில் மரத்திலிருந்து கீழ் இறங்கினான்.

விழுது ஒன்றை அவள் பிடிக்குமாறு தூக்கி போட்டவன், “பாப்பா இதை பிடிச்சிட்டு குதி.” என்றான்.

அவள் பயத்தில் செய்ய மறுக்க, “பாப்பா நான் தான் சொல்றேன்ல பயப்படாத.” என்று தைரியமூட்ட, ஒரு நொடி குதிக்க முயன்றவள் பயந்து பின்னோக்கி விட்டாள்.

“ப்ச்!” என்றவன், “மாமா சொன்னா செய்ய மாட்டியா. அதை பிடிச்சிட்டு கண்ண மூடிக்கிட்டு குதி.” என்றவன் வார்த்தைக்கு பின் மறுக்க தோன்றாமல்,

“சரியா பிடிச்சிடுவ தான மாமா .” என்று உத்தரவாதம் கேட்டாள்.

“நம்பி குதி பாப்பா உனக்கு எதுவும் ஆகாது.” என்றான்.

மாமன் மீது உள்ள நம்பிக்கையில் விழுதை இறுக்க பிடித்தவள் ஒருமுறை அவனை பார்த்து விட்டு கண் மூடி குதிக்க, அரை நொடி வேகத்தில் அவன் கைகளில் இருந்தாள்.

விழுந்தவள் பயத்தில் கண்களை திறக்கவே இல்லை. அப்படியே அவன் கையில் இருக்க, தேவநந்தன் சிரிப்பு சத்தம் தான் கண் திறக்க வைத்தது.

 

“சரி பாப்பா நான் கிளம்புறேன் நீ வீட்டுக்கு போயிட்டு, சாப்பிட்டுட்டு, தூங்கு.” நள்ளிரவை தொட போவதால் அவன் அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க,

“நீ சாப்டியா மாமா.” எனக் கேட்டாள் அக்கறையாக.

“இல்ல பாப்பா இனிமே தான் சாப்பிடணும். நீ எப்படியா இருந்தாலும் அடம் பிடிச்சுட்டு சாப்பிடாம இருப்ப. அதான் உன் பஞ்சாயத்தை முடிச்சிட்டு சாப்பிடலாம்னு இருந்தேன்.” என்றவளை முறைத்தாலும் வாய் அக்கறையாக மீண்டும் கூறியது,

“நான் வீட்டுல சும்மா வெட்டியா இருக்கேன். நீ அப்படியா மாமா இருக்க. நேரத்துக்கு சாப்பிட வேணாமா.” என்று.

“இது என்ன பாப்பா பேச்சு? வெட்டியா இருக்கன்னு. வீட்டுல இருக்க பொம்பளைங்க தான் வெளியில போற ஆம்பளைங்களை விட அதிகம் உழைக்கிறது.” என அவள் வார்த்தையை திருத்தினான்.

“இதெல்லாம் நல்லா பேசு சாப்பிட மட்டும் செய்யாத.” என்றதும் அந்த கருப்பு நிற உலகில் வெள்ளை பூ பற்கள் பூத்தது அவளைப் பார்த்து.

“இரு வரேன்.” என்றவள் உள்ளே சென்று இரு நிமிடங்களில் வெளியில் வந்தாள் சாப்பாட்டு தட்டோடு.

“சாப்பிடு மாமா” என்றவள் அங்கிருக்கும் கல் ஒன்றில் அமர்ந்து கொள்ள, “நான் வீட்டுக்கு போய் சாப்பிடுறேன் பாப்பா நீ சாப்பிட்டு தூங்கு.” அவள் கொடுப்பதை தடுத்தான்.

“நட்ட நடு ராத்திரில நீ போய் சாப்பிட்டு தூங்குறதுக்குள்ள விடிஞ்சிடும் மாமா . ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு அப்போ தான்  தூங்க சரியா இருக்கும்.” என்ற பின்னும் அவன் ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்க,

“டேய் தேவா! வாய மூடிட்டு சாப்பிடுடா.” என்றதும் திருத்திருவென்று முழித்தான் தேவநந்தன்.

அதை பார்த்து கலகலவென்று  சிரிக்க, “ரொம்ப வாய் அதிகமாயிடுச்சு பாப்பா உனக்கு.” என்றவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

“நான் உன் பேர சொல்லக்கூடாது மாமா” என்றவளுக்கு பதில் சொல்லும் முன் சாதத்தை பிசைந்தவன் அவளுக்கு ஊட்டி விட, இதை எதிர்பார்க்காதவள் முழித்தாள் அவனைப் போல்.

“ம்ம்ம்!” என்று அவன் ஓசை கொடுத்ததும் வாயை திறந்தவள், “சொல்லு மாமா நான் உன் பேர சொல்லக்கூடாதா.” வாயில் இருக்கும் சாப்பாட்டோடு கேட்டாள்.

“நீ சொல்லாம வேற யார் பாப்பா சொல்லுவா. ஆனா எல்லார் முன்னாடியும் சொல்லிடாத.” என்று சிரித்தவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான்.

“சொன்னா என்ன மாமா பண்ணுவ.” என்றவள் வாயில் அடுத்த சாப்பாட்டு உருண்டையை திணித்தவன்,

“கூப்பிட்டு பாரு அப்புறம் தெரியும்.” என்றான்.

“கோவம் வந்து அடிச்சிடுவியா மாமா.”
….

“பதிலுக்கு என் பேர சொல்லி கத்துவியா.”

……

“ஊர கூட்டி பஞ்சாயத்து பண்ணுவியா.” என்ற அனைத்திற்கும் அவன் மறுப்பு தெரிவித்து தலையசைத்தான்.

அடுத்தடுத்து ஊட்டி கொண்டிருக்க, “திட்டுவ தான மாமா.” என்று கேட்டாள்.

அதற்கும் அவன் மறுப்பாக தலையசைக்க, “கோச்சிட்டு என்கிட்ட பேசாம இருப்பியா மாமா.” என அவன் முகம் பார்க்க, பதில் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான்.

“சொல்லு மாமா.”  விடாமல் யாழினி நச்சரிக்க,

அவள் காதை இடது கையால் பிடித்து திருகியவன், “இந்த மாதிரி நீ கூப்பிட்டதும் உன் காத பிடிச்சு திருகிடுவேன் பாப்பா.” என்றவன் இன்னும் காதை வளைத்து திருக, கம்மல் இருப்பதால் அசோகரிகம் உண்டாகி வலித்தது அவளுக்கு.

“ஆஆ…ஐய்யோ! மாமா காது தனியா வந்துட போகுது. அப்புறம் என் வருங்கால புருஷனுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டியதா இருக்கும்.”

“அதுக்கு என்ன பாப்பா சொல்லிட்டா போச்சு.”

“என்னன்னு சொல்லு மாமா.” என்றவள் வாயில் கடைசி சாப்பாட்டு உருண்டையை அடைத்தவன்,

“உன் பொண்டாட்டி பேசுன பேச்சுக்கு காதை மட்டும் எடுத்து இருக்கேன்னு சந்தோஷப்படு புது மாப்பிள்ளைன்னு தான்.” என்றவன் காதை இப்போது அவள் திருகினாள் தன் இஷ்டத்திற்கு.

“இரு மாமா உன் பொண்டாட்டி வருவா… அவ முன்னாடி உன்னை இதே மாதிரி பண்ணி என் புருஷனோட சேர்ந்து சிரிக்கிறேன்.” என்றவள் எழுந்து நின்று கொள்ள,

“யாரு முன்னாடி யாரு பண்றாங்கன்னு அப்போ பார்த்துக்கலாம் பாப்பா.” என்றவன் கை கழுவ தண்ணீர் தொட்டி இருக்கும் பக்கம் நகர்ந்தான்.

அங்கு முனுமுனுப்போடு பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தவன் மச்சானை கண்டு கொண்டான். அவனுக்கு பின்னால் வந்த யாழினி அண்ணனின் செயலைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ள,

“அண்ணன் யார் கிட்ட பேசுறான்னு தெரியுமா மாமா.” எனக் கேட்டாள் நாசுக்காக அவர்களின் காதல் விவகாரத்தை மாமன் காதில் போடும் நோக்கோடு.

எதுவும் பேசாமல் கை கழுவி கொண்டு வந்தவன், “கிளம்புறேன் பாப்பா உள்ள போய் தூங்கு.” என்று நழுவ பார்த்தான்.

“நில்லு மாமா! எவ்ளோ பெரிய விஷயம் கேட்குறேன் கண்டுக்காம போற.” என்றவள் அவன் தோள் மீது கை வைத்து திருப்ப,

“உஃப்! என்ன பாப்பா என் தங்கச்சி கிட்டயா.” என்று அவளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தான்.

கண் இரண்டும் ஆந்தை முழி போல் மாறிவிட, “தங்கச்சி கிட்டயா! அப்போ உனக்கு ஏற்கனவே தெரியுமா மாமா.” என்று அதிர்ச்சி மாறாமல் யாழினி கேட்க,

“உனக்கு இவ்ளோ பெரிய கண்ணா பாப்பா.” என்று அவள் கண்களை ரசித்துக் கொண்டிருந்தான் தேவநந்தன்.

“பச்! எரும மாமா நான் என்ன கேட்குறேன் நீ என்ன சொல்ற.” என்றவள் அவன் தலையில் கொட்டி,

“சொல்லு மாமா உனக்கு முன்னாடியே தெரியுமா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது.” என கேட்டாள்.

“தெரியும் பாப்பா ஒரு வருஷத்துக்கு முன்னாடியே. வீட்டை விட்டு வெளியே போற  புள்ளை எங்க போகுது வருதுன்னு கூட பார்க்காம இருப்பனா. என் மச்சானா இருக்குறதால எனக்கு இதுல முழு சம்மதம் தான். எப்படியா இருந்தாலும் வீட்டுலயே அவங்களுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க. கொஞ்ச நாள் சந்தோஷமா லவ் பண்ணிக்கட்டும்.” அவன் இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்பது போல் தங்கை காதலுக்கு பச்சைக்கொடி காட்ட,

“ஊமை ஊரை கெடுக்கும்னு சரியா தான் மாமா சொல்லி இருக்காங்க.” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

“என்ன பாப்பா சொல்ற”

“உன் தங்கச்சி ஊமைகொட்டானா இருந்துட்டு இந்த மாதிரி ஒரு விஷயத்தை பண்ணிக்கிட்டு இருக்கா. நீ வாயை திறக்காத புள்ள பூச்சி மாதிரி இருந்துகிட்டு எல்லாரையும் வாட்ச் பண்ணிட்டு இருக்க.” என்றவளின் பேச்சில்   புன்னகைக்க தொடங்கினான் தேவநந்தன்.

மாமனின் சிரிப்பை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்த யாழினி, “அழகு மாமா” என்று தாடை பிடித்து கொஞ்சினாள்.

அதில் இன்னும் அழகாக சிரித்து அவள் மனதை மயக்கியவன், “ஒரு அண்ணனா அதை விட எனக்கு வேற வேலை என்ன இருக்கு பாப்பா. சந்தேகப்பட்டு என் தங்கச்சி என்ன பண்றான்னு பார்க்கல. அவளோட பாதுகாப்புக்கு உறுதுணையா இருக்கணும்னு நினைச்சு தான் பண்ணேன்.” என்றான்.

“கேடி தான் மாமா நீ.”

“யாரு நானா கேடி? பின்னாடி நின்னு பேசிட்டு இருக்கான் பாரு உன் அண்ணன் அவன் தான் கேடி. அப்பா பேச்சுக்கு மறு வார்த்தை பேசாத நல்ல பிள்ளையா இருந்துக்கிட்டு நட்ட நடு ராத்திரில பொம்பள புள்ள கூட கடலை போட்டுட்டு இருக்கான் .” என்று மச்சானின் செய்கைகளை அறிந்தவன் சிறப்பான பட்டம் ஒன்றை கொடுத்தான்.

“பின்ன உன்ன மாதிரி சாமியாராவா இருக்க சொல்ற.” என்று அவனை முறைத்தவள்,

“நீ யாரையாது லவ் பண்ணி இருக்கியா மாமா.”  ஆர்வமாக கேட்டாள்.

“நான் எப்படின்னு உனக்கு தெரியாதா பாப்பா.”

“எனக்கு மட்டும் இல்ல மாமா ஊருக்கே தெரியும்.” என கேலி செய்தாள் அவனை.

“அதுக்கெல்லாம் நேரம் அமைஞ்சது இல்ல பாப்பா. இனியும் அமையுமான்னு தெரியல.”

“அதெல்லாம் செமையா அமையும் மாமா. நீ வேணா பாரு இப்ப நான் சொல்றேன் உன்ன ரொம்ப ரொம்ப…. அதிகமா நேசிக்கிற ஒருத்தி தான் பொண்டாட்டியா வருவா. அவ கொடுக்குற லவ்வுல ஒவ்வொரு நாளும் நீ திண்டாடி நிக்க போற.” என்றவளை இடை மறித்தவன்,

“சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத பாப்பா நான் கிளம்புறேன்.” என்றான் தேவநந்தன்.

“இது காமெடி இல்ல மாமா சத்தியமான உண்மை.” என்றதும் கண்களால் கேலி செய்தவன் நகர பார்க்க, அவன் கை பிடித்து தடுத்தவள்,

“நீயே ஒரு நாள் ஆச்சரியப்பட்டு உன்னை நீயே அதிகமா நேசிக்கிற அளவுக்கு உனக்காக ஒரு அன்பை கொடுப்பா. நீ திட்டினாலும், அடிச்சாலும், போன்னு சொன்னா கூட உன்னை விட்டு போகாம உன்னோட கால சுத்தியே வருவா.  கண்டிப்பா இது ஒரு நாள் நடக்கும். அப்ப தெரியும் இந்த யாழினி தெய்வவாக்கு உள்ளவன்னு.” என்று அவன் மீசையை முறுக்கிக் கொண்டு சொன்னாள் யாழினி.

“அதெல்லாம் நடந்தா அப்புறம்  ஒத்துக்குறேன் நீ ஒரு தெய்வக் குழந்தைன்னு. இப்ப என்னை விடு நான் கிளம்புறேன்.” என்றவன் ஆயிரம் அறிவுரைகளை சொல்லி தூங்க அனுப்பினான்.

உள்ளே சென்றவள் அவன் சென்று விட்டானா என்று பார்க்க வெளியில் வர, அவனோ அவளின் கள்ளத்தனம் தெரிந்து காத்திருந்தாள் விரட்டி அடிக்க.

சிரிப்போடு யாழினி கையசைக்க,
“பாப்பா நீ யாரையாது லவ் பண்ணி இருக்கியா.” கேட்டான் பதில் தெரிந்தும்.

ஒரு நொடி அவன் பார்வையை விழுங்கியவள், “தங்கச்சிய பத்தியே தெரிஞ்ச என் மாமனுக்கு என்னை பத்தியா தெரியாது.” என்றவள் சிரிப்போடு கூறினாள் இரவு வணக்கம்.

அவன் சென்ற பின் மீண்டும் வெளியில் வந்தவள் அண்ணன் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அவனோ கள்ளத்தனமாக யாரும் பார்க்க வண்ணம் பேசிக் கொண்டிருக்க, “ப்பேஏஏ…!” என்று காது அருகில் கத்தினாள்.

பயந்து அலறியவன் செல்போனை கீழே போட, தங்கையானவள் சிரிப்பு கடுப்பாக்கியது அவனை. வெறி வந்தவன் போல் அவள் தலையில் கொட்டினான்.  அடி வாங்கிய இடத்தை தடவி ஒத்தடம் கொடுத்தவள், “எவ்ளோ நேரம் தான் பேசுவ உள்ள போ.” என்று கண்டித்தாள்‌.

“உனக்கு என்ன வந்துச்சு நீ தூங்கு போ. இவ்ளோ நேரம் உன் மாமன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தியே நான் ஏதாச்சும் வந்து கேட்டனா.” என்று அவளை அவன் விரட்ட,

“நாங்க என்ன உங்கள மாதிரியா லவ் பண்ணிட்டு இருக்கோம்.” என்று முறைத்தாள்.

“யாருக்கு தெரியும் உங்க ரெண்டு பேர் நடவடிக்கையை பார்த்தா அப்படித்தான் இருக்கு.” என்றதும் அவன் தலையில் அடித்தவள்,

“ச்சீ போ!” என்று உள்ளே சென்று விட்டாள்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
25
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *