2,041 views

 

#மௌனத்தின்_உதிரப்பூ_நீயடா pona thadava pota story neraiya peruku varalanu sonninga. So intha thavada ingayum inform panra. 

#amazon இன்று, நாளை (01.11.22- 02.11.22) மதியம் வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 

 

 

 

 

 

 

கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவின் கண்களிலும் நீர் சுரந்தது. அதை கவனித்த தரணி தன் பேச்சை நிறுத்தினான். சத்தம் வராமல் போன பின் அவள் உணர்வுகள் உயிர்ப்பெற, “சாரி தரணி உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு தெரியல. இந்த பிரச்சனைல தான் உங்க பொண்டாட்டி உங்களை விவாகரத்து பண்ணிட்டாங்களா. நீங்க அவங்கள சமாதானப்படுத்தி வாழ்ந்து இருக்கலாமே. ஒரு குழந்தை போச்சுன்னா என்ன இப்போ அடுத்து பிறக்காமையா போகும்.” என்றவளை எண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பவனின் முகத்தை நோக்கியவள் விசித்திரமான முகபாவனையை அவன் கொடுக்க குழம்பிப்போனாள். அதன்பின் அவளின் பேச்சுக்கள் குறைய, “இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம். எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்.” என்றவன் இருந்தபடியே சுவற்றில் சாய்ந்து கண் மூடினான்.

வெகு நேரமாக அவன் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தாள் அகல்யா. எவ்வளவு முயன்றும் சற்று முன் அவன் கொடுத்த பாவனைகளுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கை கால்களை மடக்கிக் கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்தவன் மெல்ல தூங்க ஆரம்பித்தான். கழுத்தை முழுவதுமாக ஒரு பக்கம் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பவன் நிலை உணர்ந்தவள் அவனை படுக்க வைக்கும் வேளையில் இறங்கினாள்.

“என்ன தொடாத டி!  நீ தொட்டா நான் அசிங்கமாகிடுவேன். உன்ன கல்யாணம் பண்ண பாவத்துக்கு தான்டி இப்போ நல்லா அனுபவிக்கிறேன்.” என்று உளறினான்.

முட்டி போட்டு அவன் அருகில் இருந்தவள் அப்படியே தன் செய்கைகளை நிறுத்திவிட்டு அவன் வார்த்தைக்கான பொருளை அறிய முயன்றாள். அதற்குள் இன்னும் வார்த்தைகளை வெளியிட்டவன் மயக்கத்தில் தரையில் சாய்ந்தான். குழப்பத்தை ஒதுக்கி வைத்தவள் அவனை படுக்க வைத்தாள்.

பல மணி நேரங்கள் கழித்து கண் அயர்ந்தாள். தூக்கத்தில் கூட அவன் சொன்ன விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க, விடியலுக்கு முன் எழுந்து விட்டாள். அவள் குளித்துவிட்டு வெளியில் வர தூங்கிக் கொண்டிருந்தவனை காணவில்லை. யோசனையோடு இறங்கியவள் கண்ணில் படும் இடம் எல்லாம் அவன் இருக்கிறானா என்று தேடினாள்.

மருமகளின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த ஆதிலட்சுமி, “யாரை தேடுறன்னு தெரிஞ்சுக்கலாமா?” என கேட்டார்.

அதில் சுயம் பெற்றவள் எதுவும் பேசாமல் இருக்க, “உன் புருஷனும் என் புருஷனும் வாக்கிங் போயிருக்காங்க.” அவரே விடை கொடுத்தார்.

“நான் சொன்ன போட்டிக்கு ரெடி ஆகிட்ட போல அகல்.” என்றவரின் பேச்சில் நிமிர்ந்து முகம் பார்க்க,

“அதான், என் மகனை பழையபடி என் கையில கொடுத்துட்டு கிளம்புன்னு சொன்னனே அதை ‌சொல்றேன்.” என சிரித்தார்.

மாமியாரை முறைத்தவள் பேச விருப்பம் இல்லாமல் நகர பார்க்க, “எவ்ளோ தூரம் அவனோட கடந்த காலத்தை தெரிஞ்சுக்கிட்ட.” என்ற பேச்சில் அப்படியே நின்றாள்.

மருமகளை நடவடிக்கை கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவர், “முழுசா தெரிஞ்சுக்காம நீயே ஒன்ன முடிவு பண்ணிக்காத. அதே மாதிரி தெரிஞ்சதுக்கு அப்புறம் இரக்கப்பட்டு அவனை கவனிக்கவும் ஆரம்பிச்சுடாத.

இன்னொரு ஒரு ஏமாற்றத்தை என் மகனால தாங்கிக்க முடியாது. ஆரம்பத்துல இருந்தே உன்னோட முடிவை தெளிவா அவன் கிட்ட சொல்லிடு. இல்லன்னா என் மகன் இல்லாம நான் வாழ வேண்டிய சூழ்நிலை வரும்.” என்றவர் இப்பொழுது அந்த இடத்தை விட்டு நகர பார்த்தார்.

வழி மறித்து நின்றவள், “இவ்ளோ பேசுற நீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லலாமே” என்றிட, “நடந்ததை கண்ணால நான் பார்க்கல. அரைகுறையா மகன் சொல்லி தெரியும். அந்த பொண்ணு வேணான்னு காலை பிடிச்சு அழுதான்.

அப்படியே நாலஞ்சு மாசம் போச்சு. அவளே விவாகத்து பத்திரத்தை அனுப்பி வச்சா. எந்த மறுப்பும் சொல்லாம உடனே கையெழுத்து போட்டுக் கொடுத்தான். அன்னைல இருந்து அவனோட தலையெழுத்து மொத்தமும் மாறிடுச்சு.” பேச்சை முடித்தார்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.”

“உன் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை.”

“அப்புறம் எப்படி என் மகனை திருத்துன்னு சொல்றீங்க. என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா தான நடவடிக்கை எடுக்க முடியும்.”

“இங்க இருந்து போகணும்னா நீ தான் அதுக்கான வழிய தெரிஞ்சுக்கணும் நான் இல்ல. என் மருமகளா இந்த வீட்ல நீ வாழ்வன்னு சத்தியம் பண்ணு இப்பவே எல்லாத்தையும் சொல்றேன். ” என்றவரை கடுமையாக முறைத்தவள்,

“இந்த மாதிரி என்னை கார்னர் பண்ண அசிங்கமா இல்ல உங்களுக்கு. இந்த மாதிரி தான் அந்த பொண்ணையும் டார்ச்சர் பண்ணி இருப்பீங்க. உங்க மகன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு முதல் காரணமே நீங்க தான். கொஞ்சம் மருமகளுக்காக விட்டுக் கொடுத்துப் போய் இருக்கலாம். நீங்க செஞ்ச தப்புக்கு இப்போ நான் அனுபவிக்க வேண்டியதா இருக்கு.

உங்க மகன் வந்ததும் மீதி இருக்க எல்லாத்தையும் தெரிஞ்சிப்பேன். அதுக்கப்புறம் நீங்க சொன்னதை செஞ்சு கொடுத்துட்டு கிளம்பிகிட்டே இருப்பேன். அதுக்கப்புறமாது உங்க மகனை நல்லபடியா வச்சுக்க பாருங்க.” என்றவளை
பார்க்காமல் வேறு புறம் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்  ஆதிலட்சுமி.

இவ்வளவு நேரம் திமிராக பேசியவர் இப்பொழுது மௌனம் காக்க, அவர் இருக்கும் பக்கம் நகர்ந்தாள். கோபத்தோடு அவர் முகம் நோக்கியவள் திகைத்தாள் விழியில் இருந்து வெளியேறும் உவர் நீரை பார்த்து. தன்னுடைய வார்த்தை காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து,

“சாரி! நான் ஏதோ ஒரு கோபத்துல பேசிட்டேன்.” திக்கி திணறி பேசினாள்.

அழுகையோடு பற்கள் தெரியாமல் இதழ் வளைத்து சிரித்தவர், “நீ சொன்னதுல கொஞ்சம் உண்மை இருக்கு. மருமக என்னமோ பண்ணிட்டு போகட்டும்னு கண்டும் காணாமலும் இருந்திருந்தா என் மகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. விருப்பமில்லாத உன்ன கல்யாணம் பண்ணி வச்சு இப்படி டார்ச்சர் பண்ணி இருக்க மாட்டேன்.

ஆனா ஒன்னு அகல்‌… என் மகனை நீ எப்படியா இருந்தாலும் பழைய நிலைமைக்கு மாத்திடுவேன்னு நம்பிக்கை இருக்கு. என் வார்த்தையில மாற்றம் இருக்காது. உன் வாழ்க்கைக்கு எந்நாளும் தடையா நானும் என் மகனும் இருக்க மாட்டோம்.” என்றவர் அவளை பார்க்காமல் சென்று விட்டார்.

நின்றிருந்த இடத்தில் அப்படியே அமர்ந்தாள் அகல்யா. என்னதான் தன்னை சுற்றி நடக்கிறது என்பது புரியவில்லை அவளுக்கு. முழுமையாக கேட்காத கடந்த கால வாழ்க்கைக்கு அவளே ஒரு உருவம் கொடுத்திருக்க, மூவரின் கண்ணீரும் அதை கரைத்தது.

சீக்கிரம் உண்மை என்ன என்பதை தெரிந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று வெளியேற வேண்டும் என்பது மட்டுமே இப்போது அவளின் குறிக்கோள்.

***

இரு பெண்களும் இரு வேறு சிந்தனைகளில் இருக்க, ஆதிலட்சுமியின் கைபேசி அடித்தது. கணவனின் எண்ணைப் பார்த்ததும் தன் துயரத்தை தனக்குள் புதைத்துக் கொண்டவர் எடுத்துப் பேச, உயிரே நின்று விட்டது தயாளனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதை அறிந்து.

கணவனின் நிலைமை என்ன என்பது தெரியாமல் மயக்கம் போட்டு விழுந்தார். அதை அறியாதவன் அழுகையோடு அன்னையை அழைத்துக் கொண்டிருக்க, உள்ளே வந்த அகல்யா மாமியார் நிலை கண்டு பதறினாள். அவரை எழுப்பி, கன்னம் தட்டி உணர்வு பெற செய்தவள் விசாரிக்க, மூச்சு விட சிரமப்பட்டு அரைகுறையாக விஷயத்தை சொன்னார்.

அதற்குள் மகன் அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைக்க, “தரணி அத்தை என்ன சொல்றாங்க! மாமாக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சா?.” பதட்டத்தோடு கேட்கும் மனைவிக்கு முதலில் அழுகையை பதிலாக கொடுத்தவன்,

“ஆமா அகல் எல்லாம் என்னால தான். என்னை குடியை விட சொல்லி பேசிட்டே இருந்ததால ரொம்ப கோபம் வந்து அவரை விட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சேன். என் பின்னாடியே வந்தவரு வண்டியை கவனிக்காம….என் அப்பாவ ரத்த வெள்ளத்துல பார்த்தேன் அகல்.” தன்னால் தன் கண் முன்னே தந்தை அடிப்பட்டு கிடந்ததை பார்த்து புத்தி பேதலித்து போனான்.

“கொஞ்சம் அழாம இருங்க. இந்த மாதிரி டைம்ல நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும். எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க நான் வரேன்.” என்றவளுக்கு அவன் முகவரியை கொடுக்க, அத்தையை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

அன்னையைப் பார்த்ததும் அழுகையோடு அவன் கட்டிப்பிடிக்க, “இன்னும் என்ன பண்ண காத்திருக்க. உன்ன நம்பி தான என் புருஷனை அனுப்பி வைச்சேன். இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டியேடா பாவி. உன்ன பெத்ததுக்கு இன்னைக்கு தான்டா நான் ரொம்ப வருத்தப்படுறேன். என் கண்ணு முன்னாடி நிக்காத எங்கயாது போய் சாவு. போடா நிக்காத… சாவு” தன் முன் மண்டியிட்டு அழுது கொண்டிருக்கும் மகனை தள்ளிவிட்டார்.

கீழே விழுந்தவனை தாங்கினாள் அகல்யா. ஆதிலட்சுமி தன் கணவரை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருக்க, “நான் எதுவும் வேணும்னு பண்ணல. எனக்கு தெரியல அப்பாக்கு இப்படி ஆகப்போகுதுன்னு. நான் வேணும்னு பண்ணலன்னு எங்க அம்மா கிட்ட சொல்லு அகல்.‌” கதறி அழுபவனை தன்னோடு சேர்த்துக் கொண்டவள் சமாதானம் செய்ய,

“நான் வேணும்னு பண்ணல…. எனக்கு தெரியல அகல். எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு நானே காரணமாகிட்டேன். என்னால எல்லாருக்கும் கஷ்டம். என் கூட இருக்காத உன்னையும் நான் ஏதாச்சும் பண்ணிடுவேன்.” என்று அவளை தள்ளி விட்டான்.

தரணீஸ்வரனின் பேச்சில் அவள் கண்களில் அழுகை ஊற்றெடுக்க, “கொஞ்சம் பொறுமையா இருங்க அத்தை ஏதோ கோபத்துல பேசிட்டாங்க. மாமாக்கு எதுவும் இல்லன்னு தெரிஞ்சா உங்க கிட்ட வந்து பேசுவாங்க.” மீண்டும் அவனிடம் சென்றவள் சமாதானம் செய்தாள்.

அங்கிருந்த அனைவரும் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாத தரணி, “அப்பாக்கு நிறைய ரத்தம் போயிடுச்சு தூக்கும் போது பார்த்தேன். கை…க…கை… முழுக்க ரத்தம். அவ்…அவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா எங்க அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.” என்று அழுதவன் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

“அப்பாக்கு எதுவும் ஆகாது தான. அவர் திரும்ப பழையபடி என் கூட வாக்கிங் வருவாரு தான. எங்க அப்பா கிட்ட சொல்லு இனிமே சத்தியமா நான் குடிக்க மாட்டேன்னு. அந்த சந்தோஷத்துல எழுந்து வந்துடுவாரு.” குழந்தை போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு அவன் அழுக,

வெளியில் வந்த மருத்துவர் அதிக அளவு ரத்தம் போய்விட்டதால் உடனே ரத்தத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். வார்த்தையை கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். எவ்வளவு சொல்லியும் அடக்க முடியவில்லை அவனை.

வேகமாக அடிக்கும் கைகளை தடுக்க, அவள் மார்போடு சேர்ந்து கொண்டவன் அழுது தீர்த்தான் கட்டிக்கொண்டு. மகனின் அழுகை செவியில் விழுந்தாலும் ஆதிலட்சுமி பார்வை கணவன் மீது தான் இருந்தது. தன்னோடு சேர்த்துக் கொண்ட குழந்தையை தடவி கொடுத்து மெல்ல இயல்புக்கு திருப்பினாள் அகல்யா.

***

 

அழுது ஓய்ந்தவன் அவளை விட்டு நகர்ந்து அமர, “இது அழுறதுக்கான நேரம் இல்லங்க. நீங்க ஒன்னும் தெரிஞ்சே மாமாவ இப்படி பண்ணலல…” என்றவளுக்கு அவன் வேகமாக தலையசைக்க,

“அப்புறம் எதுக்காக இவ்ளோ வருத்தப்படுறீங்க. மாமாக்கு இப்போ ரத்தம் தேவைப்படுது. அதுக்கான வழிய பாருங்க.” என்று அவன் கண்களை துடைத்து விட்டாள்.

அன்னையை ஒரு முறை பார்த்தவன் எழுந்து கொள்ள, கணவன் பின்னே அவளும் எழுந்தாள். ஆதிலட்சுமியிடம் சென்றவன், “சாரி மாம். இந்த ஒரு தடவை மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்க. இனிமே உங்க மகன் ஒரு நாளும் உங்களை வேதனைப்படுத்த மாட்டான். பழைய மாதிரி உங்கள பெருமைப்பட வைப்பான்.” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

எங்கு செல்கிறான் என்பது தெரியாததால் அகல்யாவும் அவன் பின்னே ஓட, “நீ அம்மா கூட இரு நான் ரத்தத்துக்கு அரேஞ்ச் பண்ணிட்டு வரேன்.” என்றான்.

“எங்க போய் அரேஞ்ச் பண்ணுவீங்க?”

“தெரியல அகல், ஆனா எப்படியாது பண்ணுவேன்.”

“ரத்த வங்கியில கேட்டுப் பார்க்கலாமா”

“அங்க விசாரிச்சு பார்த்துட்டு கிடைக்காம போனதால தான் நம்ம கிட்ட சொல்லி இருக்காங்க. வேற எங்கயாது குழு மூலமா அரேஞ்ச் பண்ணிடலாம். நீ தைரியமா இரு கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.” என்றவன் கார் பார்க்கிங் செய்திருக்கும் இடத்திற்கு வந்தான்.

“ஒரு நிமிஷம் இருங்க தரணி வந்துடுறேன்.” என்றவள் வேகமாக ஓட, எதற்கு என்று புரியாமல் காத்திருந்தான். இரு நொடியில் வேக ஓட்டத்தோடு காரில் அமர்ந்தவள், “நான் சொல்ற இடத்துக்கு போங்க.” என்றாள்.

“நீ அம்மா கூட இரு. இங்க ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா என்ன பண்றது?”

“அதெல்லாம் பிரச்சனை இல்லங்க. நான் அம்மாக்கு போன் பண்ணி வர சொல்லிட்டேன். அத்தை கூட இருந்து என் தம்பி எல்லாத்தையும் பார்த்துப்பான்.”

“எதுக்காக அவங்கள கஷ்டப்படுத்துற.”

“இதுல கஷ்டம்னு என்னங்க இருக்கு. அதெல்லாம் பேசுற நேரம் இது இல்ல. நீங்க முதல்ல கிளம்புங்க.”

அவள் பேசிய பின்பும் நகராமல் அவன் அப்படியே இருக்க, “என்னங்க யோசனை? நமக்கு டைம் இல்ல சீக்கிரம்.” என்றதும்,

“என்னால தனியா இந்த ஏற்பாட்டை பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா.” என்ற தரணீஸ்வரனின் குரலில் அளவு கடந்த வருத்தம் இருப்பதை கண்டுகொண்டாள்‌.

“இது என்ன மார்க்கெட்டுக்கு போயிட்டு காய்கறி வாங்கிட்டு வர மாதிரியா! கையில போன் கூட இல்லாம எங்க  போவீங்க. உங்க கூட இருந்த இந்த கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுக்கிட்டேன் எந்த பிரண்ட்ஸ் கிட்டயும் பேசுறது இல்லன்னு. எனக்கு ரெண்டு மூனு பேர தெரியும். உங்கள அலைய வைக்க வேணாம்னு தான் கூட வரேன்.” என்று விளக்கம் கொடுத்தாள்.

தன்னை நிதானித்து காரை எடுத்தவன் அவளிடம் முகவரியை கேட்டுக்கொண்டு பயணப்பட, அதற்குள் தனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விஷயத்தை பகிர்ந்தாள். மனைவி சொன்ன இடத்திற்கு வந்தவன் அவளோடு சென்று உதவி கேட்க, அவர்கள் தேடி வந்த நபர் அங்கு இல்லை.

மீண்டும் நண்பர்களிடம் பேசியவள் பலன் இல்லாமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள். “நம்ம கம்பெனில
கேட்டு பார்ப்போமா” யோசனையில் இருந்தவள் கணவனின் குரலில், “நல்ல ஐடியாங்க” என்று மனம் மகிழ்ந்தாள்.

அவன் கம்பெனியை நோக்கி காரை மாற்ற, அதற்குள் அங்கிருக்கும் ஆட்களிடம் விஷயத்தை சொன்னாள். உடனே அனைவருக்கும் பகிரப்பட்டது. தயாளனின் ரத்த வகையை சேர்ந்தவர்கள் முன் வந்தார்கள். கைப்பேசி வழியாக அந்த நல்ல செய்தியை கேட்டவள்,

“ரத்தம் கொடுக்க ஆறு பேர் இருக்காங்களாம். சீக்கிரம் கம்பெனிக்கு போங்க.” என்று புன்னகைத்தாள்.

கண்மூடி மனதார கடவுளுக்கு நன்றி தெரிவித்தவன் அங்கு சென்றான். இரண்டு நபர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டான். சரியான நேரத்தில் வந்தவர்கள் உதவியால் தயாளனுக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. காலில் பலமான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு மணிநேர தவிப்பிற்குப் பிறகு அவர் நலமாக இருக்கிறார் என்ற நற்செய்தி வந்தது. கணவனின் நலனை கேட்டவர் அழுகையோடு கை வணங்க, மகனோ பெரும் பாரம் குறைந்த நிம்மதியோடு கண் மூடினான் தலை சாய்ந்து. இருவரும் உணர்ச்சி வசத்தில் இருப்பதால் அகல்யாவே மருத்துவரிடம் பேசினாள்.

எப்பொழுது கண்விழிப்பார், அடுத்து என்ன சிகிச்சை, தற்போதைய உடல்நிலை என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவள், “அம்மா நீங்க வீட்டுக்கு போயிட்டு தம்பி கிட்ட இவங்களுக்கு சாப்பாடு செஞ்சு கொடுத்து விடுங்க.” என்றாள் அன்னை சுகன்யாவிடம்.

ஆதிலட்சுமிக்கு தேவையான ஆறுதல்களை சொல்லியவர் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட, “கொஞ்சம் வீடு வரைக்கும் போயிட்டு வரலாம் வாங்க.” என்றழைத்தாள் கணவனை.

விழி மூடி இருந்தவன் இமை திறந்து பார்க்க, “மாமாவ வேற ரூமுக்கு மாத்த இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம். அதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டு அவருக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடலாம்.” அழைத்ததற்கான விளக்கத்தையும் சேர்த்து கொடுத்தாள்.

அன்னையை திரும்பிப் பார்த்தவன், “நீ அம்மாவ கூட்டிட்டு கிளம்பு. இங்க நடக்குறதை நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் வார்த்தை செவியில் விழுந்தாலும் திரும்பி பார்க்க மனம் இல்லாமல் கணவன் இருக்கும் அறையை பார்த்துக் கொண்டிருந்தார் ஆதிலட்சுமி.

“அத்தை இப்ப நம்ம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. அதுவும் இல்லாம எனக்கு கார் ஓட்ட தெரியாது. நீங்க கூட வந்தா தான் சரியா இருக்கும்.” என்றவளுக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல் எழுந்தான்.

“நாங்க போயிட்டு வரோம் அம்மா.” என்றவனுக்கு பதில் கொடுக்காமல் அவர் அமைதிக்காத்தார். மனம் கனத்தது கூடவே தலைவலியும் இரட்டிப்பாக ஆரம்பித்தது அவனுக்கு. அவன் உடல்நிலை தினமும் தரும் உற்சாகத்தை கேட்க துவங்கிவிட்டது அவனையும் அறியாமல்.

எந்நேரமும் மது வாடையில் உடலை வைத்திருந்தவன் உணர்வுகள் மதியம் வரை தாக்குப் பிடிக்க, மாலை நேரம் வந்ததும் உணர்த்த ஆரம்பித்தது. இனியும் அதைத் தொடர்ந்தால்  பெற்றோர்களின் உறவை முற்றிலும் இழக்க வேண்டி வரும் என்ற அபாயமும் உள்ளுக்குள் சேர்ந்து அடித்தது. தவிப்பான மனநிலையில் மனைவியோடு நகர்ந்தான்.

தவிப்போடு உதறும் உடலை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் நடந்திருக்க, தடுத்து நிறுத்தினாள் அகல்யா. ஏன் என்று கேட்க துணிவு இல்லாமல் அவன் அப்படியே நிற்க, “அத்தைக்கு தண்ணி ஆச்சும் வாங்கி கொடுத்துட்டு வாங்க.” என அங்கிருக்கும் மருத்துவ உணவகத்தை கை காட்டினாள்.

நகர்ந்து சென்றவன் உணவகத்தின் முன் அப்படியே நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் அருகில் சென்று விசாரித்தாள். எப்படி சொல்வதென்று தயக்கத்தோடு அவன் தடுமாற,

“காசு இல்லையா” ஒரு யூகத்தில் கேட்டாள்.

அவமானத்தோடு தலையசைத்தவன் கூனி குறுகி நின்றான் அவள் முன்பு. ஒரு தண்ணீர் குறைந்த பட்சம் இருபது ரூபாய் இருக்கும். அதைக் கூட வாங்க திறன் இல்லாமல் போய்விட்டதை எண்ணி அவனையே நொந்து கொண்டான். கணவனின் நிலை புரிந்து…

“காசு இல்லன்னு சொல்றதுக்கு என்ன உங்களுக்கு? எமர்ஜென்சி சிட்டுவேஷன்ல யாரா இருந்தாலும் இப்படி ஒரு நிலையில தான் இருப்பாங்க. இதுக்கெல்லாம் முகத்தை தொங்க போடாதீங்க.” என்றவளிடமும் காசு இல்லை.

வீட்டில் இருந்தவள் விஷயத்த கேட்டதும் மாமியாரோடு கிளம்பி விட்டாள். மருத்துவமனையில் ஆன செலவு மொத்தமும் ஆதிலட்சுமி உடைய கிரெடிட் கார்ட் புண்ணியத்தால் நடந்தது. வேறு வழி இல்லாமல் மாமியாரிடம் சென்றவள்,

“கைல காசு இல்ல ஒரு ஐம்பது ரூபாய் இருந்தா தரீங்களா.” கூச்சம் பார்க்காமல் கேட்டு விட்டாள்.

மருமகளின் வார்த்தையில் அவளுக்கு பின்னால் நிற்கும் மகனை பார்த்தார். இருக்கும் அத்தனை சொத்துக்களையும் அனுபவிக்க ஒரே வாரிசு. அவன் சம்பாத்தியத்தையும் சேர்த்து அனுபவிக்க மனைவி. சகல வசதிகளும் இருந்தும் தன்னிடம் ஒரு ஐம்பது ரூபாய்க்கு கையேந்துவதை நினைத்து அந்த உள்ளம் பெதும்பி துடித்தது புழுவை போல்.

அதேநேரம் மகன் மீது அளவு கடந்த சீற்றமும் உண்டானது. ஒரு காலத்தில் தோய்ந்த கம்பெனியை தூக்கி நிறுத்தியவன். அதிக அளவு லாபத்தை பார்த்தது அவன் கையில் பொறுப்பு இருக்கும் போது. அப்படிப்பட்டவன் மனைவியை கையேந்த வைக்கிறானே என்ற கோபம் தான் அது.

எதுவும் பேசாமல் கையில் இருப்பதை கொடுத்து அனுப்பினார். அதுவரை மயக்கத்தை கேட்ட உடல் கூனி குறுகி ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணத்தோடு மனைவி பின் நடந்தது. அவன் உணர்வுகள் வெளிப்படையாக முகத்தில் தெரிய, உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தவள் கை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றாள்.

சைக்கிள் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான் நான்கு சக்கர வாகனத்தை. அவன் மன நிலைக்கு இதுதான் சரியான வேகம் என்பதால் அகல்யா எதுவும் சொல்லவில்லை. போக்குவரத்து சமஞ்சையில் கார் நின்றது. மாலை வேளையோடு சூரியன் விடைபெறுவதால் மெல்ல இருள ஆரம்பித்தது. கடற்கரை சாலையை ஒட்டி மகிழுந்து பயணப்பட்டுக் கொண்டிருக்க, சற்றென்று மிகுந்த சத்தத்துடன் சடன் பிரேக் அடித்தது.

முன்னாள் முட்ட சென்றவள் சுதாரித்துக் கொண்டு நெஞ்சில் கைவைத்தபடி மூச்சு வாங்க திரும்பி பார்த்தாள் அவனை. இதுவரை அவன் கண்ணில் தெரியாத அக்னி குரோதம் தென்பட்டது. ரத்தத்தை கையில் அள்ளி கருவிழியில் ஊற்றியது போன்ற நிறம். பற்கள் மொத்தமும் நொறுங்குகிற உணர்வு. கைகள் ஸ்டியரிங்கை உடைக்கும் அளவிற்கு இறுக்கமாக பிடித்திருந்தது. எதையோ ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கொடுக்கும் தோரணைகளில் பயந்தவள் மெதுவாக கையை அவன் தோள் மீது வைத்தாள். உடனே கார் மின்னலென பறக்க ஆரம்பித்தது. திடீரென்று வேகம் எடுக்கும் வாகனத்தை உணர்ந்தவள் தரணீஸ்வரனை தடுத்துக் கொண்டிருக்க, கேட்கும் மனநிலையில் இல்லாதவன் சூறாவளி போல் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“தரணி என்னாச்சு உங்களுக்கு? கொஞ்சம் பொறுமையா போங்க.” என்ற பேச்சு எல்லாம் அவளுக்குள்ளே அடங்கிப் போய்விட்டது அவனின் வேகத்தில்.

எதையோ மோத செல்கிறான் என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரும் சேதாரம் நிகழும் என்று மூளை எச்சரிக்கை மணி அடிக்க, “உங்க அம்மா கிட்ட இப்ப தான் சொல்லிட்டு வந்து இருக்கீங்க பழைய மாதிரி இருக்கன்னு. இப்ப ஏதாச்சும் பண்ணிட்டீங்கனா அவங்க ஜென்மத்துக்கும் உங்க கிட்ட பேச மாட்டாங்க.” என்ற வார்த்தையை முழுதாக முடிப்பதற்குள் சட்டென்று மகிழுந்தை அங்கிருக்கும் கல்மேடையை தாண்டி கரண்ட் கம்பத்தில் இடித்து நிறுத்தினான்.

பெரும் சத்தத்தோடு கார் நிற்க, அகல்யாவின் நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வந்தது. கடற்கரை சாலை என்பதால் அதிக அளவு வாகனங்கள் இருந்தது. தரணியின் கைகாரியத்தால் முட்டி நின்ற வாகனத்தின் அதிர்வில் அத்தனை மகிழுந்தும் அப்படியே நின்றது. எந்நேரமும் ரோந்து பணியில் காவலர்கள் இருக்கும் இடம் என்பதால் உடனே வந்து சேர்ந்தார்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
43
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *