401 views

அத்தியாயம்  10

 

இரு சக்கர வாகனத்தை வீட்டு வாயிலின் ஓரத்தில் நிறுத்திய இளந்தளிருக்கு , 

 

கோவர்த்தனனின் திகைத்த முகம் திரும்ப திரும்ப எழுந்து அவளையும் திகைக்கச் செய்தது.

 

‘ சும்மா இரண்டு நாள் மீட் பண்ணினோம். அவ்வளவே தான். ஆனால் இவன் என்னடான்னா வருஷக் கணக்காப் பழகி , பாக்காம போற மாதிரி ஷாக் ஆகி நின்னானே ! அதுக்கென்ன அர்த்தமா இருக்கும் ? ஒருவேளை அவனுக்கும் என்னைப் போல சிந்தனைகள் வந்துருக்குமோ ? என்ன மாதிரியே அந்த இரண்டு சந்திப்புகளையும் நினைச்சுட்டு இருந்துருப்பானோ ? ‘ 

 

வண்டியைப் பூட்டிக் கொண்டே யோசித்தவைகளுக்கு எங்கிருந்து பதில் கண்டுபிடிக்க ! என்று வேலை முடிந்து , அசதியாக வீட்டிற்குள் நுழைய , எதிரில் தென்பட்டாள் சுபாஷினி.

 

‘ இவ தானே அவனோட ஞாபகத்தை வர வச்சது ‘ தங்கையை முறைத்துக் கொண்டே அவளைத் தவிர்த்து விலகிச் சென்றாள்.

 

தமக்கையின் இத்திடீர் முகத்திருப்பல் ,  தங்கைக்கு அசௌகரியமாக இருக்க , அனிச்சையாக அவளிடம் விரைந்தாள் சுபாஷினி.

 

” என்னாச்சுக்கா கோபமா இருக்க ? என்னைப் பார்த்து விலகிப் போற ? ” 

 

தோள்களை மிருதுவாக  பிடித்து , அவளை நகர விடாமல் செய்து கேட்டாள்.

சுபா கேட்ட பிறகு தான் , புத்தி வந்தவளாக ,

 

யதேச்சையாக நடந்த நிகழ்விற்கு இவளைக் குற்றம் சொல்லுதலாகாது என்ற ஞானோதயம் பிறப்பெடுத்தது அவளுள்.

” இல்லடி. வேற எதோ ஞாபகத்துல போய்ட்டேன் ” 

நினைத்ததை இவளிடம் கூற துணியவில்லை மனம்.

சிறு பெண் உற்சாக மிகுதியால் கூறிய ஒரு விஷயத்தை வைத்து , இவளிடம் முகம் திருப்பியது சரியல்ல என்பதும் காரணம்.

” இல்லை !  நீ முறைச்சுட்டுப் போன ? நான் என்ன தப்பு பண்ணேன். உன்கிட்ட சண்டை போட்டேனா ? நல்லா தானே காலைல பேசிட்டுப் போன ? ” 

முக வாட்டத்துடன் கேட்டவளைப் பார்த்து மென்மையாய் புனன்கைத்தாள் இளந்தளிர்.

” என் தங்கச்சிகிட்ட செல்லமாக கோபப்படக் கூட உரிமையில்லை போலிருக்கே ! ” 

 

சுபாஷினியை அவளது சகஜமாக மாற்ற அவளை வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள்.

இருந்தாலும் சகோதரியின் இந்த சுபாவம் அவளை மிரளத் தான் வைத்தது.

 

” அக்கா  ! வியர்ட் ஆக பிஹேவ் பண்ணிட்டு இருக்க ? அம்மா மேரேஜ் பத்திப் பேசியதால இப்படி நடந்துக்கிறியோ ! ” 

அவளாக காரணத்தை யோசித்து வைத்து பேசியது இளந்தளிருக்கு சிரிப்பை வரவழைக்க , 

” அதெல்லாம் இல்லை. நீ பாட்டுக்கு அம்மாகிட்ட இதை சொல்லிட்டு இருக்காத ” 

 

தாய் உள்ளறையில் இருந்து வருவது தெரிந்ததும் , சுபாவுக்கு இந்த எச்சரிக்கை விடுத்தாள்.

” சொல்லல ” மெல்லிய குரலில் கூறினாள்.

” வந்ததும் இங்க நின்னு உடனே ரெண்டு பேரும் ரகசியம் பேசிக்கிட்டு இருக்கிங்களா ? அப்படி என்ன தான் அக்கா , தங்கச்சிங்க குள்ள ரகசியமோ ! இன்னும் எதுவும் சொல்லாமல் மறைச்சு வச்ச விஷயங்கள் இருக்குதோ ? “

இவர்கள் இருவரும் தன்னிடம் எதோ ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருப்பது போன்ற ஐயம் அவருள் ஏற்கனவே விரவிக் கிடந்தது.

தன் இரு மகள்களின் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சிவசங்கரிக்கு இவர்களது சிறு பிள்ளைத் தனம் சற்று திகிலைக் கொடுத்தது.அதனாலேயே இப்படி கேட்க வேண்டியதாயிற்று.

அவர் இயம்பியது இருவருக்கும் திகைப்பை ஏற்படுத்த ,

 

” இல்லையேம்மா ! நாங்க அப்படி எந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம ரகசியம் காக்கப் போறோம் ! நீங்க எதையாவது நினைச்சு பயப்படாதீங்க. நாங்க எதையும் மறைக்கல. எது நடந்தாலும் உங்ககிட்ட சொல்லிடுவோம்மா ” 

என்று உரையை முடித்தவள் ,

 

” நான் ட்ரெஸ் மாத்தினப்றம் நீ ரூம் – ல படி. காஃபி மட்டும் போட்டுக் குடுங்கம்மா ” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

சிவசங்கரியின் சந்தேகப் பார்வைக்குள் சிக்கினாள் இளைய மகள்.

” ம்மா ! அக்கா தான் சொல்லிட்டுப் போனாளே !  இன்னமும் ஏன் இந்தப் பார்வை ? ” 

சுபாஷினி ஒருவாறு அவரிடம் தன்னாலான தன்னிலை விளக்கத்தையும் கூற , அவரும் விஷயத்தை அத்தோடு விட்டு விட்டார்.

”  அக்கா தான் நம்மகிட்ட எதையோ மறைக்கிறா ? கண்டுபிடிக்கனும் ! ” 

 

சுபாவின் மூளை இதனை தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கும் போது ,

” போய் படி சுபா. ரூம் ஃப்ரீ ஆகிடுச்சு ” 

 

என்ற அறிவிப்புடன் வந்தாள் இளந்தளிர்.

அவளை இப்போது ஐயம் நிறைந்த பார்வையில் பார்த்து விட்டு , அறைக்குள் நுழைந்து படிக்க ஆரம்பித்தாள்.

‘ இவ என்ன டவ்ட் ஆக பாக்குறா ? ‘ 

வழக்கமான இரவு உடையில் , ஹாலில் வந்து அக்கடா என்று அமர்ந்தவளுள் ஒரு சோம்பேறித்தனம் உருவானது.

“ப்ச் .. ரொம்ப லேஸினஸ் வருதே ! ” கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தாள்.

” சோஃபால படுத்துத்  தூங்கிறாத இளா ! ” 

 

மிதமான சூட்டில் இருந்த காஃபியை அவளிடம் கொடுத்தவர் ,

 

” உனக்கு வர வர சோம்பேறித்தனம் கூடிப் போச்சு ” 

” நானுமே இதை சில செகண்ட்ஸ் முன்னாடி தான் மனசில நினைச்சுப் பார்த்தேன். நீங்க என்கிட்ட வெளிப்படையாவே சொல்லிட்டிங்க.

 

ஃபர்ஸ்ட் எல்லாம் இதுக்கு நேர்மாறா இருப்பேன். பழையபடி சேஞ்ச் ஆகப் பாக்கிறேன் ” 

அவரிடம் கூறியபடியே , காஃபியின் வாசனையை நுகர்ந்தவள் , அதை சிலாகித்தவாறே , தொண்டைக் குழிக்குள் இறங்கும் ஒவ்வொரு துளி காஃபியின் சுவையும் அவளுக்கு அதி அற்புதமான உணர்வைக் கொடுத்ததால் , இரசிப்புத் தன்மையுடன் குடித்தாள்.

கோப்பையை கழுவி வைத்த பிறகு , 

 

” சுபா சமர்த்தாப் படிச்சுட்டு இருக்கா போலயே ! “

என்றவாறே அறைக்குச் செல்ல அங்கு அவள் நினைத்துக் கொண்டது போல் , சிறியவள் அழகாக புத்தகத்தை மடியிலிருத்திப் படித்துக் கொண்டு  இருந்தாள்.

தானும் தனது மடிக்கணினி சகிதம் கட்டிலில் சம்மணமிட்டுக் கொண்டு , மிதுனா அனுப்பியிருந்த மின்னஞ்சலைத் திறந்து பார்க்கலானாள்.

இவள் உள்ளே பிரவேசித்ததை ஓரக்கண்ணால் பார்த்த சுபாஷினி , தன் பார்வையை புத்தகத்திலேயே நிலை நிறுத்தி இருந்தாள்.

‘ அவள் படிக்கட்டும் ‘ என மின்னஞ்சலில் இருந்த குறிப்புரைகளை அணு அணுவாய் ஆராயலானாள்.

” இவ்வளவு ஈசி ஆக இருந்ததை தான் ஆஃபிஸ்ல இருக்கும் போது செய்து முடிக்காம , ரெஸ்ட் எடுத்துட்டு இருந்துருக்கேனா !! இளா…. ” 

அவள் கூறியது போல் அந்த மின்னஞ்சலில் இருந்தது சுலபமாக முடிக்கும் வேலை தான். ஆனால் , அதைச் செய்ய விடாமல் , அவளது மனம் தான் நிதர்சனமில்லாத விஷயத்திற்காக அலைபாய்ந்துக் கொண்டு இருந்ததே ! 

இந்த புலம்பலை செவிமடுத்து தெரிந்து கொண்ட சுபா ,

 

” இதை தான் நான் அப்போ சொன்னேன். உனக்கு கோபம் வந்துச்சு. இட்ஸ் ஓகே ! ” 

ஏட்டின்  மீதிருந்த பார்வையை விலக்காது கூறியவளை கழுத்தைத் திருப்பி , கண்ணை உருட்டி முறைத்தாள் இளந்தளிர்.

” நீ இப்படி பயங்கரமா முறைச்சுப் பார்த்தாலும் நான் உண்மையைத் தான் சொன்னேன். அத மாத்த முடியாது ” 

சுபாஷினி ஆராய்ந்த வகையில் அக்காவின் அசைவுகளில் சிறு மாற்றமும் , தடுமாற்றமும் இருந்தது.

” படிச்சு முடிச்சுட்டு வா. க்வஷன்ஸ் கேக்குறேன் ” 

 

மடிக்கணினியின் புறம் தலையைத் திருப்பிக் கொண்டாள் தளிர்.

கைகளும் அவளது விருப்பத்திற்கேற்ப தட்டச்சில் , இசைந்து கொடுக்க , குறிப்புகளை திருத்தம் செய்தாள்.

” படிச்சுட்டேன் . இந்தா ! ” 

புத்தகத்தில் பார்த்தவுடன் தெரிந்த மூன்று கேள்விகளைக் கேட்டாள் தமக்கை. அதற்கு அசராமல் , விடை கூறிய சுபாஷினி ,

 

“க்வஷன்ஸ் கேட்குறேன்னு சொல்லிட்டு ஏனோதானோன்னுக் கேட்டுட்டு இருக்கியே ! இதையும் தான் சொல்றேன்க்கா ” 

 

மீண்டும் தனது பனுவலை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

அவள் தன் வேலையைப் பார்க்க , இவளுக்கோ எண்ணவோட்டங்களில் , மீண்டுமாய் வருகிறது கோவர்த்தனனின் ஞாபகம்.

அதை வளர விடாமல் தடை செய்து , தலையை உலுக்கிக் கொண்டு , மறுபடியும் வேலையில் இறங்கினாள்.

இடையிடையே மிதுனாவிடமும் கால் செய்து , 

 

மின்னஞ்சலில் கண்ட சந்தேகங்களை 

இன்று முழுவதும் கோவர்த்தனன் தவிர , இளந்தளிருக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை என்றே கூறலாம்.

அத்தகைய நிலைக்குத் தான் உள்ளாக்கப்பட்டது நினைக்கையில் இவளுக்குமே , திகைப்பு தான்.

 

இதுவே இறுதி , இனி வேறெந்த சூழ்நிலையிலும் அவனைப் பற்றிய சிறு நினைவு கூட உள்ளக்கிடங்கில் உதித்து விடக் கூடாது என்று முடிவெடுத்தாள்.

இளந்தளிர் மற்றும் சுபாஷினி அமைதியாக எந்த சச்சரவும் இல்லாமல் , தங்களது பணியைப் பார்த்துக் கொண்டு இருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார் உள்ளே வந்த சிவசங்கரி.

” பொறுப்பா அவரவர் வேலையைப் பார்த்துட்டு இருக்கிங்களே ! என்ன ஒரு அதிசயம் !! ” 

 

அவர் மகள்களைக் கிண்டல் செய்தவாறு கேட்டாலும் உண்மையிலேயே இது இவருக்கு ஆச்சரியம் தான் ! 

இளந்தளிர் , சுபாஷினி வெளியில் சண்டையிட்டுக் கொண்டாலும் , மனதால் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பது பெற்றத் தாய்க்குத் தெரியாமலா இருக்கும் ! 

அதை வெளியே காட்டிக் கொள்ளாது இருப்பதில் இருவரும் கை தேர்ந்தவர்களாக இருப்பர்.

அறையினுள் இவர்களது கூச்சல் , சிரிப்பலைகளைக் கேட்டுக் கொண்டே தான் ஹாலில் படுத்துறங்குவார் சிவசங்கரி.

இன்றோ ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து தான் கேட்டார்.

சுபாஷினி அக்காவை முறைத்து விட்டு , அமைதியாக இருந்து விட , இளந்தளிர் தாயை சமாளிக்கத் தொடங்கி இருந்தாள்.

” வொர்க் அதிகம் மா. சுபாவும் என்றைக்கும் இல்லாம இன்னைக்கு இன்ட்ரஸ்ட் ஆக படிக்கிறா அவளை டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு தான் நானும் மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன் ” 

அவளைத் திரும்பி ஒரு நிமிடம் ஏறிட்டு விட்டு , குனிந்து கொண்டாள் தங்கை.

” ஆஹா… என்ன ஒரு கண்கொள்ளா காட்சி… கண்டிப்பாக உங்களுக்கு சுத்திப் போடனும் ” 

 

என்று தாய் விகசித்தார்.

” என்னது ! சுத்தியலைத் தலையிலப் போடுவீங்களா ! அம்மா வீ ஆர் பாவம்ஸ் ! ” 

 

என்று சுபாஷினி அலறி விட, அதைக் கேட்ட இளந்தளிருக்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது.

” அடியே ! சுத்திப் போடுறதுன்னா நிசமா உனக்கு என்னன்னுத் தெரியாது அப்படித்தான ? ” 

அவளது வாய் துடுக்குத் தனத்தில் சிறிதளவு கோபமுற்றாலும் , மூத்த மகளுடன் இணைந்து தானும் சிரித்து விட்டார்.

” இன்னைக்கு ராத்திரிக்கு சமையல் நீ தானே சுபா ! தோசையா , இட்லியான்னு முடிவு செய்துட்டு , எட்டு மணிக்கு சமைக்க ஆரம்பிச்சுடு. எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான்  ” 

அவர்கள் இல்லத்தில் மூன்று பேரும் மாற்றி , மாற்றி சமைக்க வேண்டும் என்று வழக்கம் இருந்தது.

” சரிம்மா. அக்கா உன்னோட சாய்ஸ் என்ன ? “

 

இளந்தளிரிடம் கேட்க ,

” இட்லியே போதும் . சட்னி மட்டும் வெங்காயச் சட்னி செய்துடலாம். அம்மாவோட ஃபேவரைட் ஆச்சே ! ” 

 

என்று இவள் மெனு சொன்னாள்.

” டன். இட்லிக்கு மாவு எடுத்து வச்சுட்டு , வெங்காயம் அரியனும். நான் படிச்சு முடிக்கப் போறேன். டான் – னு எட்டு மணிக்கு கிச்சனுக்குப் போறேன் , சமைக்கிறேன் , என் கைப் பக்குவத்துல இட்லியை அவிக்கிறேன் , சட்னியை அரைக்கிறேன் , நாம சாப்பிட்டு , குப்புறப் படுத்துத் தூங்குறோம் ! ” 

 

அறிவிப்பு அமர்க்களமாக இருக்க ,

” டன் டன் ” இளந்தளிரும் , அன்னையும் ஒன்றாக கூற , மூவரின் சிரிப்பொலி அவ்வீட்டில் சந்தோஷ , சங்கீதமாய் ஒலித்தது.

தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்