430 views

அத்தியாயம் 10

 

பிரித்விக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தி இருந்தான் தன்வந்த். 

 

ஆம் அவனுக்கு விபத்தை ஏற்படுத்தி வைத்திருந்தான். 

 

முதலில் பிரித்வியுடன் இருப்பவர்களைத் தான் காயப்படுத்த நினைத்தான் தன்வந்த்.

 

அவன் தேர்ந்தெடுத்ததும் அதிரூபாவைத் தான். 

 

ஆனால் பாதுகாப்பு படலத்திற்குள் இவனால் நுழைய முடியவில்லை. 

 

லயாவுக்கும் தேர்வு முடிந்து, விடுமுறைக் கொடுத்திருக்க, அதிரூபாவை நெருங்கக் கூட முடியவில்லை அவனால். 

 

திட்டம் எல்லாம் பாழாகிப் போனதை நினைத்து, ஆத்திரம் மேலிட, ஆனாலும் விடக்கூடாது என்று பிரித்வியைக் காயப்படுத்த முடிவெடுத்தது தான்  தன்வந்த் அவசரமாகப் போடப்பட்ட திட்டம். 

 

அதில் சரியாக சிக்கிக் கொண்டான் பிரித்வி. இம்முறை உயிரை விட்டு வைத்திருக்க எண்ணினான். அதனாலேயோ என்னவோ! அவசரச் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறான் பிரித்வி. 

 

அழுதழுது சிவந்தக் கண்களைத் துடைத்துக் கொண்ட அதிரூபா, 

“ஐசியூவில் வைக்கிற அளவுக்கு அவனுக்கு அத்தனைப் பகையா இவர் மேல?” என்று புலம்பிக் கொண்டு இருந்த  சகுந்தலாவை, 

 

“இருக்கும் அத்தை. அவரும் அவனைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கிறார்.நமக்குப் பாதுகாப்பு  கொடுத்தவர், அவரைப் பாத்துக்காம, கேர்லெஸ் ஆக இருந்துட்டார். சீக்கிரம் குணமாகிடுவார் அத்தை” என்று சமாதானம் செய்தாள். 

 

மகேஸ்வரனும், லயாவும் உடைந்து போயிருக்க, அவர்களையும் சமாதான வார்த்தைகள் பேசி, அழுகையை நிறுத்தி விட்டாள். 

 

விஷயம் கேள்விப்பட்டு வந்தனர் அதிரூபாவின் பெற்றோர். 

 

“சம்பந்தி” என்று இருவரும் மீண்டும் அழத் தொடங்கி விட, 

 

“இவங்களைப் பார்த்துக்கோங்க அப்பா, அம்மா. நான் லயாவைப் பார்க்கிறேன்” என்று கண்களில் நீர் வற்றிப் போயிருந்தாலும் சற்று திடமாகத் தான் இருந்தாள் அதிரூபா. 

 

மகளிடம் மேற்கொண்டு வினவாமல், 

 

“மாப்பிள்ளைக்குச் சரி ஆகிடும் சம்பந்தி” என்று மகேஸ்வரனையும், சகுந்தலாவையும் தேற்றினர். 

 

தீனதயாளும், கிருஷ்ணவேணியும் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல, லயாவின் அருகில் அமர்ந்து கொண்ட அதிரூபா, 

“லயா! உன் அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ம்மா” என்று அவளைத் தோளோடு ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். 

 

கணவன் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்க, தன் விழிகளில் அத்தனை கவலையும், சோர்வும் நிறைந்திருந்தாலும் மற்றவர்களைத் தேற்றும் பொறுப்பில் இருந்தாள் அதிரூபா. 

 

பிரித்விக்கு ஒன்றும் ஆகாது என்று மனதார நம்பிக்கைக் கொண்டாள். 

 

அந்த நம்பிக்கையில் தான் மற்றவர்களைத் தேற்றிக் கொண்டு இருக்கிறாள். 

 

இரவு வேளையில், மருத்துவர்கள் பிரித்விக்குத் தகுந்த சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க, அங்கே யாருக்குமே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஞாபகமே இல்லை. யாருக்கும் உடை மாற்ற, உண்ண வேண்டும் என்று கூட தோன்றவில்லை. 

 

கிருஷ்ணவேணி மகளிடம் வந்து, 

“எல்லாரையும் நீ தான் பாத்துக்கிற, உனக்கு சாயனும்னுத் தோன்றினால் என்னோட தோள்ல சாய்ந்து அழுதுடு ரூபா!” என்று அதிரூபாவின் முகத்தை ஏறிட்டார். 

 

அவளோ, “இல்லைம்மா. அவருக்குக் குணமாகிடும்ன்ற நம்பிக்கை இருக்கு. அதனால் கண்ணீர் வரல. நீங்க இவங்க எல்லாருக்கும் சாப்பாடு செஞ்சு கொண்டு வர்றீங்களா?” என்று கூறினாள். 

 

பெருமூச்சுடன், “சரி ரூபா. அப்பாவை இங்க இருக்க வச்சுட்டு நான் மட்டும் போய்ட்டு வர்றேன்” என்று கிருஷ்ணவேணி கணவனை அழைத்து மகள் சொன்னதைக் கூறினார். 

 

“போய்ட்டு வா வேணி. நான் இங்கே பாத்துக்கிறேன்” என்று மனைவியை உணவு செய்து எடுத்து வர அனுப்பி விட்டார். 

 

மகேஸ்வரன், சகுந்தலா மற்றும் அவர்களது மகள் லயா இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. 

 

அடிக்கடி உடைந்து அழுதவர்களை பழையபடி கொண்டு வர முயற்சி செய்தனர் அதிரூபாவும், அவளது தந்தையும். 

 

உள்ளே அடிபட்டுக் கிடந்த கணவன் பிரித்வியிடம் தான் சில நாட்களுக்கு முன்பு, கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தாள் அதிரூபா. 

 

“சாரி பிரித்வி!” மானசீகமாக மன்னிப்பு வேண்டிய பெண்ணவள், 

கணவனிடம் நேரில், அவன் ஆரோக்கியமாக இருக்கும் போது , மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நிலை கொள்ளாமல் தவித்தாள். 

 

தன் தவிப்பை சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டாள் அதிரூபா. 

 

மகேஸ்வரன் அருகிலேயே இருந்தார் தீனதயாள். 

 

“எப்பவுமே உன்னையும் பார்த்துக்கோ என்று தலைபாடாக அடிச்சுக்கிட்டேன். கேட்டானா சம்பந்தி!” 

 

என்றுமே மகனைக் கிண்டல் செய்வாரே தவிர, ஒரு போதும் இப்படி திட்டியதில்லை , இது அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்று கூறலாம். 

 

தங்களுக்கு அத்தனைக் காவலை வைத்தவன், இன்று காப்பாற்றி விட்டு, கடமை முடிந்தது போல், அடிபட்டுக் கிடக்கிறான் என்ற மன உளைச்சலில் இருந்தனர் அனைவரும். 

 

சிறிது நேரம் கழித்து, அனைவருக்கும் உணவுடன் வந்து சேர்ந்தார் கிருஷ்ணவேணி. தேநீரும் உடன் கொண்டு வந்திருந்தார். 

 

எப்படி எல்லாரையும் சாப்பிட வைக்கப் போற ? என்பது போல தவிப்புடன் மகளைப் பார்த்தனர் தீனதயாளும், கிருஷ்ணவேணியும். 

 

முதலில் லயாவின் அருகே வந்தவள், 

” அம்மா சாப்பாடு கொண்டு வந்துருக்காங்க லயா! சாப்பிடு ப்ளீஸ்!” என்று உணவுண்ண வைக்க முயற்சித்தாள் அதிரூபா. 

 

“வேண்டாம் அண்ணி. அண்ணாவுக்கு இப்படியானதே, என்னால் தாங்கிக்க முடியல. இதில் சாப்பாடு எல்லாம் நினைச்சுப் பார்க்கவே வேண்டாம். அண்ணா எழுந்து நடமாடுற வரைக்கும் எதுவும் வேணாம் அண்ணி” 

 

உணவை மறுத்தவளை விடாது, சமாதானப்படுத்தினாள் அதிரூபா. 

 

“நீ சாப்பிட்டால் தான் அத்தை, மாமா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லை தானே? பிரஷர், சுகர் எல்லாம் இருக்கே! நேரத்துக்குச் சாப்பிடனுமே! அதனால் அவங்களுக்காகச் சாப்பிடு லயா” 

என்று எப்படியோ அவளை உணவுண்ண வைத்தாள். 

 

அதுபோல, மகேஸ்வரனையும், சகுந்தலாவையும் உண்ணச் செய்தாள். 

 

ஆனால் அவளுக்கு உணவுத் தொண்டைக்குள் செல்ல மறுத்தது.

 

உண்ணாமல் மூடி வைக்கப் போனவளைத் தடுத்த கிருஷ்ணவேணி, 

“ஒழுங்கா சாப்பிடு ரூபா. நீ ஸ்ட்ராங் ஆக இருக்கனும். மனசளவுல மட்டும் உறுதியாக இருந்தால் போதாது” என்று அவளை உண்ண வைத்தார். 

 

இந்தச் சமயத்தில் , பிரித்விக்கு அடிபட்டதை அறிந்தான் பாரத். 

 

தன் ஆஸ்தான முதலாளிக்கு இப்படி நடந்ததை அறிந்தவனுக்கு மனம் பொறுக்கவில்லை. 

 

“சார் சொன்ன வேலையை எப்படியாவது சீக்கிரமே செஞ்சிருக்கனும்டா” என்று குமைந்தான். 

 

“அவருக்கும் பாதுகாப்பு கொடுத்துருக்கனும் அண்ணே. தப்புப் பண்ணிட்டோம்” என்று அடியாளும் வருத்தத்தைத் தெரிவித்தான். 

 

“அந்த வீணாப்போன தன்வந்த் மேல கோபம் அதிகமாகுதுடா. அவன் எவ்வளவு  பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிட்டு வர்றோம். பிரித்வி சார் கண்ணு முழிக்கிற வரைக்கும் கட்டிப் போட்டு சித்திரவதை செய்வோம்” என்று கண்களில் தீப்பொறி பறக்கப் பேசினான் பாரத். 

 

“கண்டிப்பாக அண்ணே! அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிச்சுடலாம். அவனைப் பத்தின முழு விவரமும் வந்துருச்சு. நேத்து தான் வந்ததால் தான் வேலைத் தாமதம் ஆயிடுச்சு.இனிமேல் தாமதம் ஆகக் கூடாது. உடனே எல்லாத்தையும் நடத்தனும்” என்று சீறிய வேங்கையாகப் புறப்பட்டான் பாரத். 

 

🌸🌸🌸🌸

 

தன்வந்த்துக்கு குதூகலமாக இருந்தது. 

 

“பிரித்வி! எனக்கு இப்போ எப்படி இருக்குத் தெரியுமா?”

 

அவனது குரலில் அவ்வளவு உற்சாகம்! 

 

தேவையே இல்லாமல் ஒருவனுக்கு விபத்து ஏற்படுத்தி விட்டு, ஏதோ உலகச் சாதனைப் படைத்தவனைப் போல, மகிழ்ந்து கொண்டு இருந்தான் தன்வந்த். 

 

“என்னை எதிர்த்து நீ பண்ணியது எல்லாம் மறந்துருவேன்னு நினைச்சுட்டியா? எப்படி மறக்க முடியும்? உன்னோட பொண்டாட்டியைத் தான் தூக்கனும்னு இருந்தேன்.அவ்வளவு பாதுகாப்பு கொடுத்து வச்சிருக்க. எப்படின்னு யோசிச்சுட்டே இருந்தேன். நான் இப்போ வரைக்கும் சும்மாவே இருந்தால் வேலைக்கு ஆகாதுன்னு உன்னையே குறி வச்சுட்டேன். ஆனால் நீ முழுசா சாகனும்னு ஆக்ஸிடன்ட் பண்ணல.இப்போ ஹாஸ்பிடலில் இருக்க என்று கேள்விப்பட்டேன். நான் நினைச்சா உன்னோட குடும்பத்தையே இல்லாமல் செய்யலாம். ஆனால் நீ எழுந்து வந்ததும் தான் ஒவ்வொருத்தரையாகத் தூக்கனும்” 

என்று எதிரில் பிரித்வி நிற்பது போல் உளறிக் கொண்டு இருந்தான் தன்வந்த். 

 

அவனுக்கு இன்னும் வெறி அடங்கவே இல்லை. 

 

“நானும் பார்த்துட்டே இருந்தேன் ரொம்ப தான் துள்ளுன! பெரிய இவன் மாதிரி!” என்று மீண்டும் மீண்டும் பிரித்வியைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் தன்வந்த். 

 

இதையெல்லாம் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிரித்வி அறியவில்லை அல்லவா! 

 

அவனுக்குக் குணமாகி எழுந்து நடமாடும் போது, தன்வந்த்தின் நிலை என்னவோ! 

 

🌸🌸🌸

 

லயாவைத் தோளில் சாய்த்துக் கொண்டு, 

அருகே அமர்ந்திருந்த அதிரூபாவிற்கோ, 

தலை விண் விண்ணென்று வலித்தது. 

 

கிடைத்த நேரத்தில் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி, மின்னஞ்சல் அனுப்பி விட்டாள். 

 

சுஷ்மாவிடம் மட்டும்  விஷயத்தைச் சொல்லியிருக்க, 

 

அவளும், 

“ஓகே ரூபா.குடும்பத்தைப் பார்த்துக்கோ. பிரித்வி சார் விழிச்சதும் சொல்லு. வந்து பார்க்கனும்ல. இங்கே ஆஃபீஸில் நடக்கிறதை நான் அப்டேட் செய்றேன். உன்னோட எந்த வேலையும் முடிக்காமல் இல்லை. சோ, யாரும் எதுவும் சொல்ல வாய்ப்பு இல்லை. அதனால் பார்த்துக்கோ” என்று நேர்மறையாகப் பேசினாள். 

 

“நன்றி சுஷ்மா.எப்படியும் பத்திரிக்கை மூலமாக விஷயம் வெளியே பரவிடும். உங்கிட்ட நான் சொல்லி இருப்பேன்னும் எல்லாருக்கும் தெரியும்.ஆனால் நீ யார்கிட்டையும் எதையும் சொல்லாத. எதுவாக இருந்தாலும் அதிரூபா வந்ததும் அவகிட்டயே கேட்டுக்கோங்க என்று சொல்லிடு” என்று கூறினாள் அதிரூபா. 

 

சும்மாவே இவளைப் பற்றி பலதும் பேசியிருந்தவர்கள் இப்போது பிரித்வியின் விபத்து தெரிந்திருந்தால், அதற்கு இன்னும் இட்டுக் கட்டிப் பேசுவார்கள் அதை தவிர்க்கவே இப்படி கூறினாள் அதிரூபா. 

 

பிரித்விக்குப் பலத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், இன்னும் எதையும் தெளிவாக கூற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். 

 

எந்த நிகழ்விற்காகப் பிரித்வியுடன் சண்டை போட்டாளோ! அதைப் பற்றிய சிந்தனைகள் அழையாத விருந்தாளியாக மறுபடியும் உயிர்த்தெழுந்தது. 

 

– தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்