Loading

கண்ணிமைக்கும் நேரத்தில் காதலை உரைத்து விட்ட ஆண்மகனைக் கண்டு உறைந்து விட்டாள் ஆரா இமையாள்.

“மேகா… நான்… இது… நான் அப்படி நினைச்சு பேசல…” என்று திக்கி திணறிக் கூறிட, “சில் லிட்டூ.” என்று அவளை அமைதிப்படுத்தியவன்,

“நீ என்னை லவ் பண்ணலை. ஜஸ்ட் என்னை சைட் அடிக்க மட்டும் தான் செஞ்ச. அதான சொல்ல வர்ற?” என்றான் குறும்பாக.

அதில் மேலும் திகைத்தவள், “ஐயோ இல்ல இல்ல சைட் அடிக்கலாம் இல்ல” என்று வேகமாக மறுத்தாள்.

‘நம்ம சைட் அடிச்சதை எப்படி கண்டுபிடிச்சான்’ என்ற கேள்வி வேறு குடைந்தது அவளுக்கு.

“சரி நீ சைட் அடிக்கல. நான் நம்புறேன் இமை” அதையும் கேலி சிரிப்புடன் அவன் கூற, ஆராவிற்கோ பெரும் அவஸ்தையாக இருந்தது இந்தப் புத்தம் புது உணர்வு!

மறுக்க வேண்டுமென எண்ணுகிறாள் முடியவில்லை. அவனைத் தவிர்த்து விட விழைகிறாள் இயலவில்லை. அவனது ஆழ் பார்வையை தடை செய்ய முயலுகிறாள், முற்றுப்புள்ளியிடவில்லை.

அவனோ மந்தகாசப் புன்னகை வீசி, “உன்னை மாதிரி நான் பொய் சொல்லமாட்டேன் லிட்டூ, உன்னை முதல் முதலா அகாடெமி வாசல்ல பார்த்தப்பவே, உன் முகம் என் மனசுல அப்படியே ஒட்டிடுச்சு. குறும்பும் வெகுளித்தனமும் நிறைஞ்ச இந்தக் கண்ணுக்குள்ள, நீ என்கிட்ட பேசும் போதே விழுந்துட்டேன். உன் இமையை வச்சு என்னை உன் கண்ணுக்குள்ளயே மூடி வச்சுக்கோ இமை” என்றவனின் குரலில் இருந்த தீவிரம் அவளைக் கண்ணிமைக்கக்கூட விடவில்லை. கூடவே ஒரு மெல்லிய பயமும் எழுந்தது.

கல்லூரியில் காதலிப்பதாக சில ப்ரொபோசல்கள் வந்தது தான். ஆனால் அவற்றையெல்லாம் அசட்டையாக நிராகரித்தவளுக்கு பயமேதும் இருந்ததில்லை. இப்போதோ, ஏனிந்த பயமும் பதற்றமும் நடுக்கமும் தன்னை சூழ்ந்து சுழற்றுகிறதென்றே புரியாமல் நின்றாள்.

அவளது பயம் உணர்ந்தவனுக்கு லேசாய் வதனம் வாடியது.

“வை ஆர் யூ ஷிவரிங் இமை? ஐ வோண்ட் ஹர்ட் யூ!” என்றவனின் குரலில் சட்டென ஒரு வலி சூழ, அது அவளுக்கும் கடத்தப்பட்டது.

“இல்ல மேகா. நீங்க ஹர்ட் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல” என உடனடியாக மறுத்தவள், “தெரியல எனக்கு என்ன சொல்றதுன்னு… ப்ளீஸ் இந்த டாபிக் வேணாமே” எனக் கெஞ்சலுடன் கேட்டாள்.

அவள் மறுக்கவில்லை என்றதே அவனது வருத்தத்தைத் தவிடுபொடியாக்கி இருக்க, அவள் காதலை உணர நேரம் தேவைப்படுமென உணர்ந்தவன், அப்போதைக்கு அந்தப் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

“ஓகே லிட்டூ. முதல்ல வந்த வேலையைப் பார்க்கலாம். இதைப் பத்தி பேச இன்னும் நிறைய டைம் இருக்கு” எனக் கண் சிமிட்டி, அவளைப் புகைப்படம் எடுக்க வைப்பதில் சிரத்தையானான்.

அடுத்த இரு நாள்களும் அதுவே தொடர, தன்னை சங்கடப்படுத்தாமல் அவன் நடந்து கொண்ட விதம் ஆராவைக் கவர்ந்தது.

நொடிக்கு நொடி, அவன் காதலை புரிய வைக்கவோ, அதை உணர வைக்கவோ அவன் முயற்சி செய்யவில்லை. எப்போதும் போலப் பேசினான், சிரித்தான், அவ்வப்பொழுது ரசித்தான், அவளையும் ரசிக்க வைத்தான், கரடுமுரடான இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவளை அக்கறையுடன் கவனித்துக் கொண்டான்.

“தொட்டபெட்டாவுக்குப் போகலாமா இமை. அதை போட்டோ எடுக்கணும்ல” கார் ஓட்டியபடி மேகன் வினவ,

“போகணும் மேகா. ஆனா, எனக்குத் தான் பயமா இருக்கு, வீசிங் வந்துடுமோன்னு.” என்றாள் சோகமாக.

“இப்போ வரை உனக்குத் திரும்பி வரலை தான லிட்டூ? கார்ல போய்டலாம்”

“வரலை தான். எனக்கு மேக்சிமம் கண்ட்ரோல் பண்ற மாதிரி தான் இருக்கும். ஆனா, ஒரு தடவை தொட்டபெட்டா போனப்ப வீசிங் வந்துடுச்சு. அங்க கொஞ்ச தூரம் எப்படியும் நடந்து போகணும்ல. ஆல்ரெடி ஹைட்டுனால எனக்கு ஆக்சிஜன் லெவல் கம்மியா ஆகிருந்துச்சு, அதனால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியல. சோ திரும்ப வந்துட்டோம். அப்பவும் நான் போட்டோ எடுக்கவே இல்ல தெரியுமா. அப்பாவும், ரொம்ப ரிஸ்கியான இடத்துக்குப் போகாதன்னு சொல்லித்தான் அனுப்புனாரு. போட்டிக்குன்னு வரும்போது எல்லா இடத்தையும் கவர் பண்ணனும்ல.”

பாவையின் முகம் களையிழந்து விட்டது.

“ஹே… இதுக்கு ஏன்டா சோகமாகிட்ட. நீ தொட்டபெட்டாவை போட்டோ எடுக்கணும் அவ்ளோ தான. கூல். நாளைக்குப் போகலாம்.” என்று மேகன் முடிவாய் உரைத்து விட,

“எப்படி மேகா. அங்க போய்ட்டா கூடக் கொஞ்ச நேரத்துல ரிலாக்ஸ் ஆகிடுவேன். ஆனா எனக்கு ஏற முடியாது” என்றதில், “ஐ வில் டேக் கேர் லிட்டூ” என மென்மையுடன் கூறியபின் அவள் மறுத்துப் பேசவில்லை.

மறுநாள் சொன்னது போன்றே, அவளைக் காலையிலேயே கிளம்பக் கூறினான்.

“இவ்ளோ சீக்கிரமாவா போகப் போறோம்” எனக் கேட்டாலும், அவளும் கிளம்பி வந்து விட, கார் வேறொரு வழியே பயணித்தது.

“இது தொட்டபெட்டா போற ரூட் மாதிரி இல்லையே மேகா. மேப்ல வேற வழி காட்டுது” ஆரா கேட்டும் அவனிடம் பதில் இல்லை.

நேராகக் காரை ஒரு இடத்தில் நிறுத்தியவன், ஹெலிபேடில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் நோக்கிச் செல்ல, ஆரா சடன் பிரேக் போட்டு நின்றாள்.

“இங்க ஏன் வந்துருக்கோம் மேகா. ஹெலிகாப்டர் எல்லாம் இருக்கு” என்று வெளிறிட,

“நம்ம ஹெலிகாப்டர்ல தொட்டபெட்டாவை க்ளிக் பண்ணிட்டு வரலாம்” என்றதில், “எதே? இதுலயா. நான் வரல இந்த விளையாட்டுக்கு” என்று திரும்பிக் காரைப் பார்த்து ஓடியவளைப் பிடித்தவன்,

“நீ போட்டோ எடுக்கணுமா வேணாமா?” என்று முறைத்தான்.

“நான் இதுல போனதே இல்ல மேகா. முதல்ல இதுல உட்காந்து நான் கண்ணைத் திறக்குறதே அதிசயம். இதுல எங்க நான் போட்டோ எடுக்க” எனக் கதறியவளைக் கண்டுகொள்ளாமல் ஹெலிகாப்டரில் ஏற்றி விட்டவன்,

“இது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கும் லிட்டூ. ஜஸ்ட் என்ஜாய் தி ரைட். கொஞ்ச நேரத்துல செட் ஆகிடும்.” என்று அவளை ஆசுவாசப்படுத்திட, அவளுக்கோ காது கொய்ங்கெனக் கேட்டது.

பயத்தில் அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அடிவயிறு வேறு பிரட்டத் தொடங்க, “மேகா ப்ளீஸ். இறக்கி விடுங்க” என்று தவித்தாள்.

அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், “லிட்டூ ஜஸ்ட் காம் டவுன். இப்ப கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் பேசுறதை மட்டும் கேளு. தொட்டபெட்டா போனதும் சொல்றேன் அப்போ கண்ணைத் திறந்து பாரு. யூ வில் லைக் தட் வியூ” என அவன் பேசிக்கொண்டே இருக்க, அவளும் மற்றவை மறந்து அவனது வார்த்தைகளில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

ஆகினும் அவ்வப்பொழுது மெல்லக் கண்ணைத் திறப்பதும் பயத்தில் மூடுவதுமாக இருக்க,

“ஸ்வீட் ஹார்ட், ஃபியூச்சர்ல நீ பெரிய போட்டோகிராஃபர் ஆனதும், இந்த மாதிரி இயற்கையை எல்லாம் கேப்சர் பண்ண வேணாமா? ஹெலிகாப்டர்ல இருந்து நீ ஃபுல் வியூ எடுக்கலாம். பயப்படக் கூடாது லிட்டூ. பீ பிரேவ்.” என்று மெல்ல அவளது பயத்தைக் களைந்திட, தொட்டபெட்டா மலையை நெருங்கியதும், “நம்ம வந்துட்டோம் கண்ணைத் திற இமை” என்றான்.

இத்தனை நேரத்தில் சற்று தைரியம் வந்ததில், மெல்ல கண்ணைத் திறந்தவளுக்கு இயற்கை அழகு அவளைக் கொள்ளை கொண்டது.

“வாவ் செம்ம அழகுல” எனக் கண்ணை விரித்தாலும் அவனை விட்டுச் சற்றும் விலகவில்லை.

“அழகு தான்…” என அவளைப் பார்த்தே முணுமுணுத்தவன் தன்னை அடக்கிக்கொண்டு, “போட்டோ எடு இமை” எனக் கூறியதும், நடுங்கிய கரத்துடன் கேமராவை எடுத்தவளுக்கு முதலில் பயமிருந்தாலும் ஹெலி வியூவில் அவளுக்கு ஆர்வம் அதிகமானது.

அதில் படபடவெனப் புகைப்படம் எடுத்தவள், “போதும் கிளம்பிடலாம் இதுக்கு மேல வாந்தி எடுத்துருவேன்” என்றாள் பாவமாக.

சற்று மூச்சு வாங்குவது போல இருந்ததில், உடனே ஹெலிகாப்டர் அங்கிருந்து நகர்ந்தது.

காருக்கு வந்தபிறகு தான் அவளால் மூச்சே விட முடிந்தது. “ப்பா. செம்ம எக்ஸ்பீரியன்ஸ் மேகா. ஆனா அள்ளு விட்டுருச்சு” என அதை மட்டும் தமிழில் கூற, “வாட் அள்ளு?” என்றான் புரியாமல்.

“ஐ மீன்… என் உயிர் என்னை விட்டுப் பறந்து போயிட்டு வந்த மாதிரி இருக்கு” என மிரட்சியுடன் கூற,

மறுநொடியே “என்னை விட்டுத் தனியா பறக்க நான் விடமாட்டேன் இமை” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவளுக்குத் தான் அவனது கூற்றில் விழி பிதுங்கி விட்டது. ‘இவனென்ன விளையாட்டுக்காகப் பேசும் வார்த்தையில் கூட இத்தனை அழுத்தம் காட்டுகிறான்!’

மறுநாள், பைன் பாரஸ்ட் செல்வதாக முடிவானது. “ஆத்தாடி” என அதற்கும் ஆரா மிரள, “என்ன ஆச்சுடா. அங்க எதுவும் ப்ராப்ளமா?” என ஊடுருவினான் மேகன்.

‘எதையாவது சொல்லி அங்கேயும் ஹெலிகாப்டரோட வந்துட போறான்’ என்ற பயத்தில் “இல்ல இல்ல ஒன்னும் இல்ல” என்று வேகமாகத் தலையாட்டினாள்.

பைன் ஃபாரெஸ்டினுள் புகைப்படம் எடுத்தபடி நடந்தவளிடம், “கால பார்த்து எடுத்து வை இமை” என்று எச்சரிக்க, அவளும் நிதானமாகவே நடந்து வந்தாள்.

அந்நேரம் மேகனுக்கு போன் வந்ததில், சிக்னல் இல்லாததால் “லிட்டூ இந்த மரத்துக்கிட்டவே நில்லு. நடந்து போகாத. நான் வந்ததும் போகலாம்” என்று அறிவுறுத்தி விட்டு, சற்று தள்ளி நின்று போன் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போதும் விட்டு விட்டுக் கேட்டதில், பாதியிலேயே அழைப்பைத் துண்டித்தவன் ஆரா இமையாள் நின்றிருந்த இடம் நோக்கி நடக்க அங்கு அவள் இல்லை.

எதையோ புகைப்படம் எடுத்தபடி நடந்தவள், மேகன் அவளை நெருங்கும் முன்னே ஒரு இடத்தில் சறுக்கி விழுந்து விட்டாள்.

“ஐயோ அம்மா…” எனக் கத்தி இடுப்பில் கை வைத்ததில், ஆடவன் பதறினான்.

“ஹே பார்த்து இமை. கேர்ஃபுல்லா நட” என்றவனுக்கு கோபமும் பொத்துக்கொண்டு வந்தது.

“உன்னை நான் அங்க தான நிக்க சொன்னேன். சொல்றதை காதுல வாங்க மாட்டியா?” என்று சினம் மேலிட அடிக்குரலில் கடிந்தான்.

அவனது கோபத்தைக் கண்டு திணறியவளுக்கு, இடுப்பு வலியைவிட அவன் திட்டியதிலேயே கண்ணைக் கரித்தது.

கலங்கிய விழிகளுடன் “சாரி” என்று முணுமுணுக்க,

அதில் கோபத்தை கை விட்டவன், “எங்க அடி பட்டுச்சு. வலிக்குதா” எனக் கேட்டபடி அவளைத் தூக்கி விட்டான்.

“இல்ல. லைட்டா தான். லாஸ்ட் டைம் நாங்க வந்தப்பவும் இதே இடத்துல தான் விழுந்துட்டேன்” என்றதில், அவன் முறைத்தான்.

“ஏற்கனவே விழுந்தும் திரும்ப அதே இடத்துல புதையல் எடுத்துட்டு இருக்க. கண்ணைத் தரைல வச்சுட்டு நடக்கணும். கேமரால வச்சுட்டு நடக்கக் கூடாது. குடு அதை முதல்ல” என்று கேமராவைப் பிடுங்கியவனுக்கு மீண்டும் சினம் தலைக்கேறியது.

அவன் குரலை உயர்த்தி பேசியதற்கே அவளுக்குக் கண்ணீர் கரையை கடந்து கன்னத்தில் வழிந்து விட்டது.

“வலிக்கலைன்னு சொன்ன அப்பறம் ஏன் அழுகுற. வலிக்குதா? அதையாவது வாயைத் திறந்து சொல்லு, ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவன் மீண்டும் கத்தி விட,

மூக்கை உறிஞ்சியவள், “வலிக்கல. நீங்கத் திட்டுறதுக்கு தான் அழுகை வருது” என்றவளுக்கு கண்ணே சிவந்து விட்டது.

தன்னுடைய கோபம் அவளைப் பாதிக்கிறதென்று புரிந்ததில், உதட்டுக்குள் புன்னகை பூத்தவன், “ஓகே டோன்ட் க்ரை!” என்றான்.

“ம்ம்” எனத் தலையாட்டியவளுக்கு கண்ணீர் நின்றபாடில்லை. “ஐ செட் டோன்ட் க்ரை” கடினத்துடன் மீண்டும் கூறியதில், “அழுகல. ஸ்வெட்டிங் ஃப்ரம் மை ஐஸ்” என்றாள் அழுகையை அடக்கிக்கொண்டு.

அதில் பக்கெனச் சிரித்து விட்டவன், அவளை நெருங்கிக் கட்டை விரல் கொண்டு, கன்னம் தாங்கிய கண்ணீரைத் துடைத்தான்.

அவன் தீண்டலில் விலகப் போனவளை அவன் விடவில்லை.

“எங்கயாவது அடிபட்டா என்ன ஆகும்? பார்த்து நடக்குறது இல்லையா இமை. உனக்கு ஹர்ட் ஆனா, எனக்கு வலிக்குது லிட்டூ. வை டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட்” என்றவனின் குரலில் என்ன இருந்ததென்றே புரியவில்லை அவளுக்கு.

ஆனாலும் ஏதோ ஒரு மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல, அவனை விழியெடுக்காமல் பார்க்க, கண்ணிற்குள் நின்றிருந்த ஒரு துளி நீர் மீண்டும் அவள் கன்னத்தில் வழிந்தது.

அதனை மீண்டும் விரலால் துடைக்கப் போனவன், சட்டென நிறுத்திக் குறுநகை மின்ன, இதழ்களால் ஒற்றி எடுத்தான். பெண்ணின் தேகமெங்கும் அம்முதல் முத்தத்தில் மின்சார அதிர்வு!

—-

“ஊருக்கு வந்து இறங்குனதும் போட்டோஷூட் எடுத்தா ட்ராவல் டயர்டுல ஃபேஸ் டல்லா இருக்கும் சார்…” பிரதீஷ் பணிவுடன் மேகனிடம் கூற,

“நோ ப்ராபளம். லைட்டிங் எக்ஸ்டரா வச்சுக்கலாம். ஃபில்டர் யூஸ் பண்ணிக்கலாம். நொவ் கெட் ரெடி.” என்று அவர்களை விரட்டியதில், விபின் “உங்க ‘பிஏ’வும் வர்றாங்கள்ல சார்” எனக் கேட்டு வைத்தான்.

அவனை முறைத்து விட்டு மேகன் நகர, அனைவரும் பைன் ஃபாரெஸ்ட்டை அடைந்தனர்.

அங்குச் சென்றதிலிருந்து ஒரு நொடி கூட மேகனின் கையைப் பிடித்திருந்த லிரிஷாவின் கைகள் விலகவே இல்லை. அவனும் விலக்கவில்லை.

“சார் பைன் ஃபாரஸ்ட்க்கு கீழ ஒரு லேக் இருக்கு. அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்” என்று விபின் கூறிட, அவனும் தலையசைத்தான். நிரவியையும் சேர்த்து குண்டுக்கட்டாகத் தூக்கி வந்ததில் அவள் நொந்து போனாள்.

பழைய நினைவுகளின் தாக்கத்தில், காலை மெதுவாக எடுத்து வைத்தாள் ஆரா.

“டியர்… ஒரு தடவை நம்ம இங்க வரும்போது நான் விழுந்தேன்ல நீ கூட என்னைத் திட்டுனியே. அன்னைக்கு செம்ம சீன்ல” என லிரிஷா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே நடக்க, ஆராவிற்கு சுளீரென இருந்தது.

இவன் அனைத்துப் பெண்களிடமும் இதே வேலையாகத் தான் இருந்திருக்கிறானா? என்ற அதிர்வில் ஏமாற்றம் மனதை துண்டாக்கியது.

ஆராவின் முகத்தைக் கேலி பொங்க பார்த்த மேகன், “யா லிரி. நான் திட்டுனதுக்கு நீ அழுதது எவ்ளோ ஹர்டிங்கா இருந்துச்சு தெரியுமா?” என உருகும் குரலில் பேசிட, ஆராவிற்கு வந்ததே ஆத்திரம்.

“உங்களுக்குப் பொண்ணுன்னு போர்டு மாட்டிருக்குற மாடு அழுதாலே ஹர்ட் ஆகிடுமே மிஸ்டர் மேகன்” என்றாள் பல்லைக்கடித்து.

அதற்கு அவன் பதில் பேசும் முன்னே விறுவிறுவென முன்னால் நடந்தவள், அவள் தவறி விழுகும் இடத்தில் கவனமின்றி நடக்க, இன்றும் வழுக்கி விழுகப் போனாள்.

அந்நேரம் மேகன் உவேந்திராவின் வலிய கரம் அவளது இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்திருக்க, ஆடவனது பார்வையோ அவளைத் தீயாகச் சுட்டது.

“அடுத்த ஆளைக் குறை சொல்றதுக்கு முன்னாடி, நம்ம தடுக்கி விழுகாம இருக்கணும். விழுந்ததுக்கு அப்பறம் தூக்கி விட்டது தப்புன்னா, அப்போ என்கிட்ட விழுந்த உன்மேல தான தப்பு” என்றவனின் சுடு வார்த்தையில் அவளுக்குத் தேகம் பற்றி எரிந்தது.

“தூக்கி விடத் தேவை இல்ல மிஸ்டர் மேகன். விழுகவே வச்சுடுங்க” என்றதும், “ஓகே” எனத் தோளைக்குலுக்கியவன் மறுநொடி அவளைக் கீழே விட்டிருக்க, பொத்தெனத் தரையில் விழுந்தாள்.

“ஐயோ அம்மா!” என அவள் இடுப்பை பிடித்துக் கொள்ள, விபின் “சல்லி சல்லியா நொறுக்கியேடா…” என்று பதறி அவளைத் தூக்க வந்தான்.

“ஏய்!” விரல் நீட்டி விபினைத் தடுத்த மேகன், “அவளா எந்திரிச்சு வந்தா வரட்டும். இல்லன்னா இங்கேயே புதையல் தேடட்டும். கம் லெட்ஸ் கோ!” என்று முன்னே நடக்க, விபினும் பிரதீஷும் அவளை விட்டு வராமல் அங்கேயே நின்றதில்,

“சொன்னது காதுல விழுகல. போறீங்களா இல்ல உங்க மூணு பேரையும் அந்த லேக்ல முக்கிட்டு போகட்டுமா?” என்று கர்ஜித்தான்.

அதில் நடுக்கம் கொண்ட ஆரா விழி நிமிர்த்தி அவனைப் பார்க்க, “ஓகே தென்!” என்றபடி பிரதீஷின் முடியைப் பிடித்துத் தரதரவெனக் கீழே இழுத்துச் செல்ல எத்தனிக்க, “விபி நீ போ நான் வரேன்” என்றாள் இறுக்கத்துடன்.

பிரதீஷோ அவனிடமிருந்து முடியை விடுவிக்க அரும்பாடுபட்டு, “எனக்கு நீச்சல் தெரியாது மாப்பிள்ளை சார். ப்ளீஸ் லீவ் மீ” எனப் பாவமாகக் கூற, அவனை முறைத்தவாறே விடுவித்ததில் அவனுக்கு பயத்தில் நடு முடிகளெல்லாம் நட்டுக்கொண்டு நின்றது.

நடப்பதை புரியாமல் பார்த்த நிரவிக்கு ஆராவைக்கண்டு வருத்தமாக இருந்தது. லிரிஷாவிற்கோ என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனாலும், பிரதீஷின் நிலை கண்டு எழுந்த சிரிப்பை அடக்க இயலாமல், “பட் நீ சொன்னதை செஞ்சுருக்கலாம் டியர்” என்று கேலி புரிய,

“அப்போ, நான் லைட்டு பிடிக்கவே தேவை இல்ல. அதான் செத்தவங்க பின்னாடி ஒரு ஒளி வட்டம் தெரியுமாமே. நான் வந்து நின்னாலே போதும், ஃபில்டர் போடாமலே முகம் வெளிச்சமா இருக்கும்” என்றான் முறைப்புடன்.

அதில் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் நிரவியும் விபினும் சிரித்து விட, அடுத்து அவன் ஆடப்போகும் கோரத்தாண்டவம் பற்றித் தெரியாமல் தன் இன்னுயிரில் கலந்தவனை உணர்வற்று வெறித்தாள் ஆரா இமையாள்.

இமை இணையும்…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
64
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மேகா உரிமை உணர்வு ஜாஸ்தி தான். பிரதிஷ் 😁😁. ஆரா பாவம்.