582 views

 

“நட்ட நடு ராத்திரியில எதுக்காக இப்படி புலம்பிட்டு இருக்க. என்னை வறுத்து கொட்டுனதெல்லாம் போதும் தூங்கு.” என்ற கணவனை லேசாக திரும்பிப் பார்த்து முறைத்தவள்,

“இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா.” என்றாள் கோபமாக.

“தூங்க சொன்னது ஒரு குத்தமாடி”

“ஐயோ சாமி ஒரு குத்தமும் இல்லை. நீ என்ன சொன்னாலும் உடனே கேட்டு தலையாட்டனும் அப்போதான் நான் நல்ல பொண்டாட்டி.”

“இதுவரைக்கும் அந்த மாதிரி உன்னை தலையாட்ட வச்ச ஒரு விஷயத்தை சொல்லுடி பாப்போம்.” என்றவன் எழுந்தமர்ந்து உட்கார, அவனுக்கு பதில் சொல்ல விரும்பாது பழையபடி படுத்துக் கொண்டாள் மகிழினி.

ஏடாகூடமான வார்த்தையை விட்டுவிட்டு திரும்பிப் படுக்கும் மனைவி மீது கோபம் கொண்டவன் அவளை திருப்பி, “எல்லாமே உன் இஷ்டப்படி தான் நடந்துட்டு இருக்கு இப்ப வரைக்கும். பார்க்குறவங்க கண்ணுக்கு மட்டும் தான் நான் அதிகாரம் பண்ற மாதிரி தெரியும். மத்தபடி உனக்காகவும் இதோ இவங்க ரெண்டு பேருக்காகவும் தான் எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்.” என்றிட,

“மொத்த பழியையும் தூக்கி என் மேல போடாத ரகு. நானும் உனக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்திருக்கேன். இன்னைக்கு நான் பண்ணதுல எந்த தப்பும் இருக்கிறதா தெரியல. உன்கிட்ட சொன்னா நீ எனக்கு துணையா நிற்பன்னு நினைச்சு தான் சொன்னேன். இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா வாயவே திறந்திருக்க மாட்டேன்.

நீயும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவா இருக்க மறந்துடாத. நாளைக்கு இந்த சமூகம் உன் பொண்ணு கிட்டயும் வந்து நிற்கும். எத்தனை நாளைக்கு நீ காவலா இருக்க முடியும் உன் பொண்ணுக்கு. இது எல்லாத்தையும் மனசுல வச்சு தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவா நிக்கணும்னு நினைக்கிறேன்.” அவளும் தன் வாதத்தை முன் வைத்தாள்.

“என் பொண்ண மனசுல வச்சு தான் இந்த கேஸ எடுக்காதன்னு சொல்றேன்.”

“இதுக்கு பேர் சுயநலம் ரகு. உன் பொண்ணு மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்காத. நான் மட்டும் முயற்சி எடுக்காம இருந்திருந்தா மந்தாகினி விஷயம் வெளிய தெரிஞ்சிருக்காது முக்கியமா உன் பொண்ணு பிறந்திருக்க மாட்டா.”

“ஏய்! என் பொண்ணு இங்க தான் இருக்கா வாய மூடு.”

“இருக்கட்டும், அப்பா எவ்ளோ சுயநலமா இருக்காருன்னு அவளுக்கும் தெரியட்டும். ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்க ரகு… ஒரு கட்டத்துல உன் பொண்ணு நீ பண்ண காரியத்தை ஏத்துக்க மாட்டா. இந்த மாதிரி ஒரு அப்பாக்கு பொண்ணா இருக்கிறதை நினைச்சு அசிங்கப்படுவா.” என்றவள் தலை முடியை பிடித்து அமர்ந்திருக்கும் நிலைக்கு இழுத்து வந்தவன்,

“இந்த மாதிரி ஒரு அப்பாக்கு பொண்ணா இருக்கமேன்னு நினைச்சு கூட என் பொண்ணு அசிங்கப்படட்டும் தப்பு இல்ல. ஆனா, இந்த அப்பாக்கு நான் சொந்த பொண்ணு இல்லைன்னு மட்டும் தெரிந்திடக் கூடாது. அவளுக்கு உண்மை தெரிஞ்சு ஒரு நொடி அந்நியமா என்னை பார்த்தா கூட நான் செத்துடுவேன்.

இந்த வாழ்க்கை என் பொண்ணுக்கானது. அவை இல்லாம நீயும் நானும் இங்க இல்ல. என் பொண்ணு குழந்தையா இருந்தா இந்த கேசை எடுத்து நடத்துன்னு நானே சொல்லியிருப்பேன். அவ இப்ப விவரமா ஏன் அப்பா மாதிரி எனக்கு கன்னக்குழி வரலன்னு கேக்குறாடி. சொல்ல முடியுமா நீ என்னோட ரத்தம் இல்லை தங்கம்னு. உலகம் தெரியுற வயசுல நிக்கிறாடி அவ. நீ ஊருக்கு நல்லது பண்ண போறன்னு உண்மைய அவளுக்கு தெரியப்படுத்திட்டா என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகிறது.

அக்கா அக்கா’னு ஒட்டி உறவாடிட்டு இருக்கானே நீ பெத்த மகன் அவன் இதே மாதிரி பாசத்தை காட்டுவான்னு என்னடி உறுதி. நான் சுயநலம் பிடிச்சவன் தான் என் பொண்ணு விஷயத்துல. மீதி நேர்மை நியாயமெல்லாம் என் பொண்ணுக்கு அப்புறம் தான். நீ இந்த கேசை எடுத்து நடத்தக் கூடாது… நடத்தவும் நான் விட மாட்டேன்.” என்று இவ்வளவு நேரம் இறுக்கமாக பிடித்து வைத்திருந்த முடியை விட, படுக்கையில் வேகமாக விழுந்தாள் மகிழினி.

அதைக் கண்டு கொள்ளாதவன்  வெளியேறினான் அறையை விட்டு. ரகுவரன் சொல்லிச் சென்ற விஷயங்கள் அவள் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்க, வெகு நேரம் தேவைப்பட்டது அவனை தேட. பக்கத்தில் படுத்திருக்கும் தன் மகளின் மீது அவள் பார்வை விழ, முதன்முதலாக கையில் ஏந்திய தருணம் ஞாபகத்திற்கு வந்தது.

“அம்மா” என்று அழைப்பவள் உண்மை தெரிந்து விட்டால் அப்படி அழைப்பாளா என்ற கேள்வி பெரும் புயலாக தாக்கியது. ரகுவரன் சொல்லியது போல் இந்த வாழ்வு மான்விழி எனும் தேவதையால் வந்தது. அப்படிப்பட்ட குழந்தையை கொண்டாடிக் கொண்டிருக்கும் தானே கீழே தள்ள வேண்டிய நிலை வந்தால் எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள்.

மந்தாகினிக்கு அவள் கொடுத்த வாக்கும், கார்த்திக்கின் சதித்திட்டத்தால் போன உயிரும் அவள் முன்பு கேள்வியாக நிற்க, மான்விழி இல்லாத வாழ்க்கையை நினைக்க கூட முடியவில்லை அவளால்.

ரகுவரன் வருவதற்கு முன் அவளே உலகம். கணவன் வந்தபின் தந்தை மகளின் பாசம் அவளை முந்தி செல்ல, இதுவும் மகளின் ஆனந்தம் தானே என்று அவர்களை தொந்தரவு செய்யாமல் விலகி நிற்க ஆரம்பித்தாள். இருப்பினும் வெளிப்படையாக காட்டும் ரகுவரனின் அன்பும் உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்கும் இவளின் அன்பும் சரிசமமானது.

கணவனாவது மகனை பின்னுக்குத் தள்ளி வைத்து ஒவ்வொரு முறையும் மகளின் பாசத்தை காட்டி விடுவான். தாயாக இரு பிள்ளைகளையும் சரிசமமாக நடத்த பெரும் பாடுபடும் மகிழினி உள்ளம் மகள் அன்பை எண்ணி இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

மான்குட்டி தூக்கத்தில் ஏதோ புலம்ப, கவனம் அவள் மீது சென்றது. மகளையே பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகள் பனிக்க ஆரம்பித்தது மகள் கன்னத்தில் சொட்டு சொட்டாக கண்ணீரை சிந்தி. ஒரு துளி பட்டதும் முகம் சுழிக்கும் மகளின் அசைவில் இன்னும் அதிகமாக அழுதவள்,

“நீ என்னோட பொண்ணு மானு. எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னை நான் யாருக்கும் தர மாட்டேன். அப்படியே உனக்கு உண்மை தெரிஞ்சு நீ என் அம்மா இல்லைன்னு ஒதுக்கி வச்சாலும் கூட உன் பின்னாடி தான் வருவேன். உங்க அப்பா ஞாபகப்படுத்தி தான் நீ என் வயித்துல பிறக்கலன்ற ஞாபகமே வருது. அது ஒன்ன தவிர உனக்கும் உன் தம்பிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல மானு. நாளைக்கே உனக்கு ஏதாவது தெரிஞ்சா கூட அம்மாவை விட்டு போயிடாதடா.” என்றிட, பேச முடியாமல் அழுகை சதி செய்தது.

மகள் மீது முழு சுமையையும் இறக்காமல் தலையை மட்டும் சாய்த்துக் கொண்டு அழுது கொண்டிருக்க, பின்னால் அணைத்துக் கொண்டு அவளின் வலியை குறைக்க முயன்றான் ரகுவரன். கணவனின் தொடுகையில் மகள் மீது சாய்ந்துக் கொண்டிருந்த தலை அவன் மார்போடு சேர்ந்து கொள்ள,

“இந்த மாதிரி ஒரு பேச்சு நமக்குள்ள வர வேணாம்னு தான் நீ சொல்லும்போதே கோபப்பட்டு தடுத்து நிறுத்த பார்த்தேன். இந்த பேச்சு நல்லதோ கெட்டதோ நமக்குள்ள வேணாம்டி. நீ நான் நம்ம குழந்தைகங்கன்னு இருக்க இந்த சின்ன குருவிக்கூட்ட கடைசி வரைக்கும் உடையாம பார்த்துக்கணும்.” தன்னோடு சேர்த்துக் கொண்டு முதுகை தடவி கொடுத்தான்.

“அவன பார்த்ததும் பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்துச்சு ரகு. ஒரு இடத்துல கூட இந்த விஷயம் என் மனசுக்குள்ள வரவே இல்லை. எனக்கு என் பொண்ண தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. நீ சொன்ன மாதிரி இனிமே இதை பத்தி நான் பேசமாட்டேன். மானு நம்ம பொண்ணு அவளை எப்பவும் நான் விட்டுத் தர மாட்டேன்.”

“சரிடி அழாத ரொம்ப கஷ்டமா இருக்கு.” கண்களைத் துடைத்து விட, “நான் தான் ஏதோ ஞாபகம் இல்லாம பேசிட்டு இருக்கேன். அப்பவே இதான் விஷயம்னு சொல்லி இருக்கலாம்ல. அதை விட்டுட்டு நாய் மாதிரி கத்துற… மூஞ்சிய பாரு.” வந்த அழுகையை பாதியில் நிறுத்தியவள் கணவனின் தலையில் ஒரு கொட்டை வைக்க,

“உனக்கு என்ன சாதாரணமா சொல்லிட்ட. நீ சொன்னதும் எப்படி பயந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதான் சொல்றேன்ல இந்த பேச்சு கூட எனக்கு இங்க வரது பிடிக்கல. இந்த ஒரு விஷயத்தை தவிர நீ வேற என்ன வேணாலும் செய். எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்.” என அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தான் ஒரு வழியாக.

சில மணித்துளிகள் சென்ற பின் இருவரும் நடந்த சண்டையை மறந்து விட்டு புன்னகைக்க, ரகுவரனின் கைகள் அழுது ஓய்ந்த கண்ணை வருடிக் கொண்டிருந்தது. மனைவியின் பார்வை அவனை ஏறிட, “அழுதா கூட என் பொண்டாட்டி அழகு தான்” என்றான் வெட்கம் இல்லாமல்.

சோர்ந்த கண்கள் முறைப்பை குத்தகைக்கு எடுக்க, “முறைச்சா அதை விட அழகு.” என்று ஐஸ் வைத்தான்.

“இவ்ளோ நேரம் என்னை அழுக வச்சுட்டு ரொமான்ஸ் பண்ண அடி போடுறியா.  நீ என்ன குட்டிகரணம் போட்டாலும் உம்மா உம்மா நடக்காது. ஐயா தடவி ஆறுதல் சொன்னதெல்லாம் போதும் போய் படுங்க.”

“நான் சிவனேன்னு தானடி படுத்துட்டு இருந்தேன். தேவை இல்லாம வம்புக்கு இழுத்து விட்டு இப்ப சும்மா படுக்க சொன்னா என்ன அர்த்தம். என்னை கோபப்படுத்துனதுக்கு தண்டனையா ஓகே சொல்லிடு.”

“உன்ன மாதிரி ஒருத்தனை நான் பார்த்ததே இல்ல ரகு. பெரிய சண்டியர் கணக்கா பேசுற, அப்புறம் எங்க இருந்து இந்த ரகுவரன் வரான்னு தெரியல. ஆனா, வந்துட்டா அவன் காரியம் ஆகுற வரைக்கும் காலை பிடிக்க கூட தயங்க மாட்டேங்குறான்‌.” என்ற மனைவியின் வாசகத்தில் சத்தமாக சிரித்தவன்,

“என் பொண்டாட்டி ஓகே சொல்லிட்டா” என குதூகலமாக கட்டிப்பிடித்தான்.

“ஃபிராடு நான் எப்படா ஓகே சொன்னேன்.”

“நீ சொல்லல ஆனா இந்த கண்ணு சொல்லுச்சு.”

“என்னன்னு?” என மகிழினி புருவம் உயர்த்த,

“நான் இப்படித்தான் லூசுத்தனமா பேசிகிட்டு இருப்பேன் அதையெல்லாம் கண்டுக்காம உம்மா உம்மா பண்ண வாடா ரகுவரான்னு… சொல்லுச்சுடி.” என்றவன் அடுத்த கேள்வி மனைவி வாயிலிருந்து வருவதற்கு முன் அதை சிறைப்பிடித்தான் கண் சிமிட்டி.

வழக்கம்போல் அவள் கைகள் முதுகை மத்தளம் போல் வாசிக்க, பதிலுக்கு பதில் தண்டனை கொடுத்தான் உதட்டால்.

***

“என்ன அழகான கணவன் மனைவி.” என்ற வாசகத்தில் பழைய நினைவில் இருந்த ரகுவரன் திரும்பிப் பார்த்தான்.

அங்கு காவலாளி உடையில் இன்னும் இருவர் நின்றிருந்தார்கள் இவர்கள் பக்கத்தில். அப்போதுதான் ரகுவரன் கவனித்தான் தாங்கள் இருக்கும் கோலத்தை. கோபத்தில் அப்பார்ட்மெண்ட் உள்ளே வந்தவனை விரட்டிப் பிடித்தவர்கள் மீதி கதையை கேட்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தவன் பக்கத்தில் அழகுசுந்தரம் அமர்ந்திருக்க, காவலாளிகள் இருபுறமும் நின்றுருக்கிறார்கள். ரகுவரனுக்கு பின்னால் இரவு நேர காவலுக்கு வந்த இருவரும் நின்றிருக்க, ஐந்து பேரையும் ஒரு மாதிரியாக பார்த்தான்.

அதைக் கண்டு கொள்ளாத புது காவலாளிகள் இருவரும், “புருஷன் பொண்டாட்டினா இப்படித்தான் இருக்கணும். எந்த சண்டை வந்தாலும் அதை ராத்திரிக்குள்ள முடிவுக்கு கொண்டு வந்திடனும்.” என்று விட்டு தங்கள் சக காவலாளிகளிடம், “ஆமா சார் யாரு, புதுசா இருக்காரு?” என்று கேட்க,

“அதை கூட தெரிஞ்சுக்காம தான் என் கதைய எவ்ளோ நேரம் கேட்டுட்டு இருந்தீங்களா.” தாடை புடைய கேட்டான்.

“நாங்க டியூட்டி பார்க்க உள்ள வந்தா இவங்க ரெண்டு பேரையும் காணோம் சார். எங்க போனாங்கன்னு தேடி வந்தா கதை கேட்டுட்டு இருக்காங்க. சரி நேரம் இருக்கேன்னு நாங்களும் கேட்டோம் சார்.” என்று பல் இளித்தார்கள்.

அவர்களை எதுவும் சொல்லாத ரகுவரன் அழகுசுந்தரத்தை கடுமையாக முறைக்க, வாங்கிய அடி ஞாபகத்திற்கு வந்தது. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்,

“போய் வேலைய பாருங்கப்பா. மருமகன் என் வீட்டுக்கு வந்திருக்காரு. ” என்றார்.

காலை நேர காவலாளிகளுக்கும் நேரமாவதால் ரகுவரனிடம் சொல்லிவிட்டு கிளம்ப, மாலை நேர காவலாளிகள் தங்கள் வேலையை கவனிக்க சென்றார்கள்.

“வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்ற அழகுசுந்தரத்திடம் அவன் மறுப்பு தெரிவிக்க, “நான் மட்டும்தான் அப்பார்ட்மெண்ட்ல தனியா இருக்கேன். உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு போற வரைக்கும் என் கூடவே இரு.” என்று அழைத்துச் சென்றார்.

இங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் ரகுவரனுக்கு இருப்பதால் அவர் வீட்டிற்கு செல்ல சம்மதித்தான். நான்காவது தளத்திற்கு சென்றவர்கள் அறைக்குள் நுழையும் முன்,

“நீங்க உள்ள போங்க சார் நான் என் பொண்டாட்டி கிட்ட ஒரு அட்டனன்ஸ் போட்டுட்டு வரேன்.” என செல்பவனை பார்த்து புன்னகைத்தார் அழகுசுந்தரம்.

ரேகாவும் வழக்கறிஞர். ஒரு கேஸ் விஷயமாக இருவரும் பழக்கம் ஆனார்கள். இப்போது ரேகா எடுத்திருக்கும் வழக்கு ஒன்றிற்காகத்தான் இங்கு வந்திருக்கிறாள் மகிழினி. வேலை முடியும் வரை அவள் இங்கேயே தங்கிக் கொள்ள, இதோ வந்து விட்டான் அவளின் இம்சை அரசன்.

“மகி யாரோ கதவை தட்டிட்டே இருக்காங்க கொஞ்சம் ஓபன் பண்றீங்களா.” சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் ரேகா சொல்ல, கணவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள் ரகுவரனின் மகிழினி.

உள்ளிருந்து குரல் கொடுத்த பின்னும் கதவு தட்டிக் கொண்டே இருக்க, எட்டிப் பார்த்தார் ரேகா. தோழியின் அசைவில்லாத அமர்வில் சந்தேகம் கொண்டவர், “மகி என்ன ஆச்சு?” என விசாரித்தார்.

அவருக்கு பதில் சொல்ல வாய் எடுக்கும் நேரம் மீண்டும் கதவு தட்டப்பட, “ரகுவா தான் இருக்கும்.” என்றாள்.

புன்னகை முகத்தோடு ரேகா கூறினார், “வந்தாச்சா உங்க காதல் மன்னன்.” என்று.

தோழியின் புன்னகையில் மகிழினி முறைக்க, “எனக்கு தெரிஞ்சு ரகு ரொம்ப நல்லவர். உன்ன ரொம்ப லவ் பண்றாருன்னு நல்லா தெரியும். எந்தப் பிரச்சினையா இருந்தாலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ மகி. நடந்த சண்டையில போடின்னு விடாம இவ்ளோ தூரம் தேடி வந்திருக்காரு. அதுக்காகவாது கொஞ்சம் யோசி.” என்றவர் கதவை திறந்தார்.

“ஹாய் ரேகா மேடம்….” என்று ஸ்டைலாக ரகுவரன் கையசைக்க,

“ஹாய் காதல் மன்னன்.” என்றார் அவரும்.

அவரைக் கேட்காமல் உள்ளே வந்தவன் கை இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்து, “காதல் மன்னன்னு சொல்லாதீங்க ரேகா மேடம். நான் இப்போ இதயம் முரளி.” மனைவியை பார்க்காது இருக்கையில் அமர்ந்தான்.

“என்ன ரகு சொல்றீங்க… இந்த காதல் மன்னனை யார் இதயம் முரளியா மாத்துனது.”

“வேற யாரு மேடம் எல்லாம் நான் கட்டிக்கிட்டேனே ஒரு ராட்சசி அவ தான்.” என்று மகிழினியின் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

“அப்படி என்ன பண்ணிட்டாங்க உங்க ராட்சசி பொண்டாட்டி.”

“ஒன்ன ரெண்டா இருந்தா சொல்லிடலாம். ஒரே ஒரு தாலி தான் மேடம் கட்டுனேன் என் வாழ்க்கை மொத்தமும் அந்த ராட்சசி கையில சிக்கி சின்னாபின்னம் ஆயிடுச்சு.” வாழ்க்கை எனும் வட்டம் சோகமானதால் துயரத்தை ஆற்றிக் கொள்ள சோபாவை தூசு தட்டினான்.

“கவலைப்படாதீங்க ரகு உங்களை இந்த மாதிரி பார்க்க கஷ்டமா இருக்கு எனக்கு.” என்றதும் பாவமான முகத்தோடு திரும்பிய கள்வன்,

“என் மேல உங்களுக்கு எவ்ளோ அக்கறை மேடம். உங்கள மாதிரி அன்பான ஒரு பொண்டாட்டியை எதிர்பார்த்து ஏமாந்துட்டேன். அந்த ராட்சசி இருக்காளே ஒரு நாள் கூட என்கிட்ட இவ்ளோ அன்பா பேசுனது இல்லை. சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டா.” என பேசிக் கொண்டிருக்க, மகிழினியின் முறைப்பு அதிகமானது.

“கேட்கவே ரொம்ப பயங்கரமா இருக்கே ரகு. இந்த மாதிரி ஒருத்தியோட எப்படி எத்தனை வருஷம் வாழ்ந்தீங்க. அதுவும் ஒரு அட்வகேட்டா இருந்துட்டு இந்த அளவுக்கு பொறுத்து போக காரணம் என்ன?” கேள்வி கேட்கும் ரேகாவின் முகம் அதி தீவிரமாக இருக்க, பதில் சொல்லும் ரகுவரனின் முகம் இன்னும் பாவப்பட்ட ஜீவன் போல் மாறியது.

“கல்யாணமான புதுசுல கண்ணு தெரியாம அவளோட குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்கிட்டேன் மேடம். என் வாழ்க்கை முடிஞ்சு போன மாதிரி என் பிள்ளைங்க வாழ்க்கையும் முடிஞ்சிக்கூடாதுன்னு தான் இந்த ராட்சசி கூட…” என மனைவியை நோக்கி கைகாட்டியவன் அவள் முறைப்பை உணர்ந்து,

“இந்த மாதிரி இருக்க என் ராட்சசி பொண்டாட்டி கூட வாழ்ந்துட்டு இருந்தேன். ஆனாலும் அவ என்னோட அன்பு புரிஞ்சுக்கல. என்னை விட்டுட்டு ஓடி வந்துட்டா.” என்றவன் முகத்தில் கை வைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுவது போல் நடித்தான்.

வரும் சிரிப்பை அடக்கிய ரேகா, “ப்ளீஸ் ரகு இந்த மாதிரி அழாதீங்க பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள மாதிரி ஒருத்தரோட வாழ முடியாம போனதை நினைச்சு உங்க ராட்சசி பொண்டாட்டி தான் அழனும். ” என்று தேற்ற,

“என்னால முடியல மேடம் அவ என்னை விட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சதுல இருந்து எதுக்காக உயிரோடு இருக்கோம்னு தோணுது.” என்றவன் வருத்தப்படுவது போல் பேசிக்கொண்டே மனைவி அருகில் வந்து நின்றான்.

“தைரியமான ஆள் நீங்களே இப்படி பேசலாமா ரகு. உங்க ராட்சசி பொண்டாட்டி போனா போறா விடுங்க. உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்றவர் வார்த்தையில் பட்டென்று திரும்பியவன்,

“மேடம்….” என ஒரு கையில் நெஞ்சை பிடித்துக் கொண்டு மற்றொரு கையை அவருக்கு முன்னால் காட்டினான்.

ரகுவரன் திடீரென்று திரும்பியதில் பயந்த ரேகா தொப்பென்று இருக்கையில் அமர, “இன்னொரு தடவை இந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க மேடம். என் மனைவி என்னை வெறுத்தாலும் இன்னும் நான் அவளை காதலிச்சிட்டு தான் இருக்கேன். இப்ப மட்டும் அவ என் பக்கத்துல இருந்திருந்தா…” என இழுத்தவன் மகிழினியை பார்த்து,

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம் கொஞ்ச நேரம் உங்களை என் பொண்டாட்டியா நினைச்சிக்கிறேன்.” என்று பவ்யமாக கூறிவிட்டு வேகமாக கட்டி அணைத்தான்.

“பொறுக்கி விடுடா என்னை” மனைவி தள்ளி விடுவதை கூட பொருட்படுத்தாமல், “இந்த மாதிரி இறுக்கமா கட்டிப்புடிச்சு, என்னை விட்டு எதுக்குடி வந்த? உன்ன நான் ரொம்ப காதலிக்கிறேன்.” என அவளைப் போட்டு வதைத்துக் கொண்டிருக்க, வேகமாக தள்ளி விட்டாள்.

“அட! கொஞ்ச நேரம் கோஆப்பரேட் பண்ணுங்க மேடம் என் பொண்டாட்டி இல்லாததால உங்களை இந்த மாதிரி கட்டி பிடிக்க வேண்டியதா இருக்கு.” அறியா பிள்ளை தெரியாத்தனமாக செய்வதுபோல் அவளை சிறிதும் மதிக்காமல் மீண்டும் கட்டிப்பிடித்தவன்,

“நீ என்ன கேட்டாலும் செஞ்சு தரேன் தயவு செஞ்சு என் கூட வந்துடு, அப்படின்னு கட்டிப்புடிச்சு இந்த மாதிரி முத்தம் கொடுத்து இருப்பேன் மேடம்.” என்றவன் மனைவியை இறுக்கமாக கட்டி அணைத்தான்.

மகிழினி கோபத்தில் சிவக்க, சிரித்து சிவந்தார் ரேகா. இருவரின் முகபாவனையும் அறியவில்லை ரகுவரன். துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் மனைவியின் பரிசத்தை முழுவதுமாக உணர்ந்தான். சிரித்து ஓய்ந்த ரேகா, “முத்தம் கொடுப்பேன்னு சொல்லிட்டு கட்டி மட்டும் பிடிச்சிட்டு இருக்கீங்க ரகு.” என்று அவனுக்கு தோதாக பேச, மனைவிடம் இருந்து விலகினான்.

“ஐயோ மறந்துட்டேன் மேடம்” என்று நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டவன், “மேடம் உங்கள ஒரு தடவை கிஸ் பண்ணிக்கிறேன் ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க.” என்று அவளிடம் குறும்பாக உத்தரவு கேட்டான்.

“ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க ரகு மரியாதை இங்க இருந்து கிளம்பு. நான் சொல்லியும் நீ இங்க வந்ததே முதல்ல தப்பு. இப்ப பண்றது எல்லாம் கொஞ்சம் கூட என்னால சகிச்சிக்க முடியாது. என் கோபத்தை இன்னும் அதிகமாக்காம போயிடு.”  உள்ளத்தில் இருக்கும் கோபத்தை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்திக் கொண்டு எச்சரிக்கை விடுத்தாள்.

“இந்த மாதிரி தான் மேடம் நான் எப்போ ஆசையா கிட்ட போனாலும் திட்டி மனச காயப்படுத்துவா. அது எல்லாத்தையும் மனசுல வச்சுக்காம நம்ம பொண்டாட்டின்னு விட்டுக் கொடுத்துப் போவேன்.” கண்ணில் கை வைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தான்.

மகிழினி கோபமாக பேச ஆரம்பித்ததும் ரேகா சீரியஸாக முகத்தை வைத்துக் கொள்ள, ரகுவரனின் பேச்சு மீண்டும் சிரிப்பை கொடுத்தது. “சரி விடுங்க ரகு…. எல்லாம் சரியாகிடும். ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க ராட்சசி பொண்டாட்டி உங்களை புரிஞ்சிட்டு வருவாங்க.”  சம்பிரதாயத்திற்கு ஆறுதல் கூறினார்.

“உங்க வார்த்தை பலிச்சா இதோ இங்க நிக்கிற இந்த மேடமுக்கு நூறு முத்தம் கொடுக்கிறேன் மேடம்.” வயிறு வலிக்க சிரித்தார் ரேகா இவன் வார்த்தையில்.

“உங்கள மாதிரியே நானும் ஒருநாள் சந்தோஷமா சிரிக்கணும் மேடம் அது தான் என்னோட ஆசை.” கிடைக்கும் இடத்தில் எல்லாம் நடிப்பை போட்டான் ரகுவரன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
30
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்