Loading

அமைதியே உருவாய் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்திருந்தாள் சத்யரூபா.

“அப்பறம்… உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல் ரூப்ஸ்?” மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் இந்திரஜித்.

அதில் அவன் புறம் திரும்பியவள், “ஒரு ஸ்பெஷலும் இல்ல. தஞ்சாவூருக்கு வந்தா தான் நல்ல கடையே இருக்கும்.” என்றதும்,

“ஓஹோ! நீ என்ன படிச்சு இருக்க?” எனக் கேட்டான்.

அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், “அது கூட தெரியாம தான் கல்யாணம் பண்ணுனீங்களா…” எனக் கேட்க,

குறும்பாய் சிரித்தவன், “நான் உனக்கு வேலையா குடுக்க போறேன்? ரொமான்ஸ் பண்ண, படிப்பு எதுக்கு…” என்று கண் சிமிட்டினான்.

அவளோ திகைத்து, பின் கடுகடுத்தாள். ஏற்கனவே, முதலிரவு அன்று, தனக்கு பயம் காட்டியவன் மீது கோபம் எஞ்சி இருந்தது. இப்போது அது இருமடங்காக, அவனை முறைத்து வைத்தாள்.

எழுந்த சிரிப்பை அடக்கிய இந்திரஜித், “சொல்லு ரூப்ஸ்…! என்ன படிச்சுருக்க?” என மீண்டும் கேட்டதில்,

“இப்போ மட்டும் எதுக்கு கேட்குறீங்க.” என்றாள் எரிச்சலாக.

“பொழுது போக வேணாமா… புகுந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, கொஞ்சமாவது ஜிகே கேதர் பண்ணணும்ல.” என்றவனைக் கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்,

“ப்ளஸ் டூ வரை, ஊர்ல இருக்குற ஸ்கூல்ல படிச்சேன். அப்பறம், பி.ஏ இங்கிலிஷ் டிஸ்டன்ஸ் எடுகேஷன்ல படிச்சேன்” என்றாள்.

“ஏன்? வைஷு சென்னைல தான இருந்தா, அங்க கூட வந்து படிச்சு இருக்கலாமே ரூப்ஸ்?” புருவம் சுருக்கி இந்திரஜித் கேட்டதில்,

‘நான் அங்க வந்துட்டா அம்மா எப்படி தனியா இருப்பாங்க இந்தர். காலேஜ் போகணும்ன்னா தான், தஞ்சாவூர்க்கே போயிருப்பேனே. அந்த டைம்ல அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரி இல்லாம போச்சு. தோட்டத்தையும் பார்த்துக்கணும்ல.” என்றதும்,

“இப்ப யாரு பாத்துக்குவா?” இந்திரஜித் யோசனையுடன் கேட்டான்.

“தெரியல. எப்படி சமாளிப்பாங்கன்னு. நீங்களும் அம்மாவும் தான் கொஞ்சம் கூட சொன்னதை காதுல வாங்காம, கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சுட்டீங்களே. தோட்டத்துல அறுவடை வேற ஆரம்பிக்கணும். அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஓடிப்போனதுக்கு என்னை பலியாடா ஆக்கிட்டீங்க…” ஏனோ கோபம் தலைக்கு ஏற, சற்று சத்தமாகவே காய்ந்தாள்.

“இடம் பொருள் ஏவல்லாம் தெரியாதா உனக்கு?” அவள் சத்தமிட்டதில் இந்திரஜித் அவளை பார்வையால் எரிக்க, அதன் பிறகே சற்று தணிந்தவள், ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள்.

அதன் பிறகு, ஊருக்கு செல்லும் வரையிலும் இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லை.

திருமணம் முடிந்து வெறும் மூன்று நாட்கள் தான் ஆகிறது என்று வைஷாலியால் நம்பவே இயலவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்தது. கட்டியவனும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. புகுந்த வீட்டில் அக்கறை எடுத்துக்கொள்ள ஒருவரும் இல்லை. மருமகளின் பொறுப்பு, கடமை என, வீட்டு வேலை அத்தனையையும் வைஷாலியின் தலையிலேயே கட்டினார் ஆனந்தி.

அது கூட அவளுக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும்,  அவள் ஓடி வந்ததையும், அவளது தாயின் வளர்ப்பையும் குத்திக் காட்டிப் பேசியது அத்தனை வலித்தது.

அதற்கு மேல், கணவனின் பாராமுகம்! அவள் போன் செய்தால் கூட எடுப்பதில்லையே. அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.

“ஒரு தடவை சத்யாகிட்ட பேசுறேன் அத்தான். எனக்கு பிடிச்சுருக்குன்னு சொன்னா, அவள் மறுக்க மாட்டா…” திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட, எழிலழகனிடம் கேட்டாள் வைஷாலி.

“உனக்கு சத்யாவோட பிடிவாதம் பத்தி தெரியும்ல. எதையும் காதுல வாங்காம, அவள் இஷ்டப்படி தான் எல்லாத்தையும் பண்ணுவா. விஷயத்தை சொன்னா, உன்னையவே மண்டையை கழுவி, நம்மள ஜென்மத்துக்கும் கல்யாணம் பண்ணிக்க விடமாட்டா. அதுக்கு ஓகேன்னா சொல்லு.” என்று இலாவகமாக பேசியவனின் கூற்றில், அவளும் சிந்தித்தாள்.

அவன் கூறியதும் ஒரு வகையில் உண்மை தானே! விஷயம் தெரிந்தும், சத்யா மறுத்து விட்டால், தன்னால் அவள் பேச்சை மீற இயலாது என்றே அவன் விருப்பப்படி நடந்தாள்.

அப்போதும் கூட அவனொன்றும், காதலில் கரைந்ததில்லை. திருமணத்தை நிறுத்துவதைப் பற்றி மட்டுமே பேசுபவன், அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவளுமே, அந்த பரபரப்பில் இருந்ததால், அதனை கவனிக்கவில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது, அனைத்தும் விசித்திரமாய் இருந்தது.

கைகள் பாத்திரத்தைத் துலக்கிக் கொண்டிருந்தாலும், நினைவுகள் எங்கெங்கோ பறக்க, திடீரென கரத்தில் சூடு பட்டிட, “ஆ…” எனக் கத்தி விட்டாள்.

“அய்யய்யோ கைல பட்டுருச்சா வைஷு. சோறு வடிச்ச தண்ணியை ஊத்தலாம்ன்னு நினைச்சேன். தண்ணி சூடா இருந்ததை கவனிக்கல.” என போலியாய் பதறினார் ஆனந்தி.

சில நிமிடங்களுக்கு முன்பு தானே, சாதத்தை வடிக்க வைத்து விட்டு,பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தாள். அப்போதே கொதிக்க கொதிக்க இருந்தது. இன்னும் சூடு மாறாமல், கையே சிவந்து விட்டது அவளுக்கு.

வலியில் கண்களும் கலங்கியே விட, ஆனந்தியின் பதற்றத்தைக் கண்டு, “பரவாயில்ல அத்தை. லேசா தான் பட்டுச்சு.” எனப் பொய்யுரைத்தாள்.

வேண்டுமென்றே அவள் கை முழுக்க கொட்டியது அவர் தானே! “வலி இல்லைல. நல்லவேளை, அப்பறம் என் புள்ள உன்னை கொடுமை படுத்துறதா நினைச்சுப்பான்” என விளையாட்டுப் போல பேசி விட்டு சென்றவரை பெருமூச்சுடன் பார்த்தாள்.

கை எரிந்ததில், மீண்டும் பாத்திரம் கழுவ இயலவில்லை. அதற்காக அப்படியே போட்டு விட்டு போகவும் மனம் வராமல், எரிச்சலுடனே வேலையை முடித்தாள்.

சரியாக அடுக்களையை விட்டு வரும் போது, எழிலழகன் வீட்டினுள் வந்தான்.

அவனைக் கண்டதுமே, அத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி விழிகள் மின்னிட, ஆனந்தி தான் சற்று திகைப்பாய் “என்ன தம்பி… திடீர்ன்னு வந்து இருக்க?” எனக் கேட்டார்.

எழிலழகன், வைஷாலியைப் பாராமல், “அத்தை மறுவீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டாங்கம்மா. நாளைல இருந்து மூணு நாள் கவர்மெண்ட் லீவ் தான். அதான் வந்துட்டேன்.” என்றவன், ‘சீக்கிரம் கிளம்பு” என்றான் வைஷாலியிடம்.

வேகமாக தலையாட்டியவள், ஒரே ஓட்டத்தில் அறைக்கு சென்று கிளம்ப தயாரானாள்.

ஆனந்தி தான், எழுந்த கோபத்தை அடக்க இயலாமல், “இப்போ இந்த முறையெல்லாம் எதுக்குப்பா?” என ஆரம்பிக்க,

“அட்லீஸ்ட் இதாவது முறைப்படி நடக்கட்டுமே” என்று தாயை சமாளித்து விட்டு, அறைக்கு வந்தான்.

அப்போதாவது ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்திருந்தவளை ஏமாற்றும் விதமாக, அவன் அமைதியே காக்க, அவளால் பொறுக்க இயலாமல், “அத்தான்” என அழைத்தாள்.

‘ம்ம்…” என்றவனிடம்,

“என்மேல ஏதாவது கோபமா?” எனக் கேட்டாள்.

பீரோலில் சட்டை தேடிக் கொண்டிருந்தவன், அக்கேள்வியில் ஒரு நொடி நின்று விட்டு, பின் இயல்பாக, “உன்மேல நான் ஏன் கோபப்படணும்?” என்றான் அசட்டையாக.

“அதில்ல… கல்யாணம் முடிஞ்சு நீங்க என்கிட்ட பேசவே இல்ல. அதான்… தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நினைச்சேன்…” தயக்கத்துடன் அவள் கூறிட, திரும்பி அவளை முறைத்தவன்,

“உன்னை அப்படியே கூட்டிட்டு போய் பேங்க் வாசல்ல குடும்பம் நடத்தவா. வீடு எல்லாம் பார்க்க வேணாமா? பார்த்துட்டு சொல்றேன். அதுவரை இங்க இரு.” என்று கடிந்து கொள்ள, அவள் முகம் தொங்கி விட்டது.

அவனோ மேலும், “ஏன், மகாராணிக்கு சென்னை பட்டணத்துல இருந்துட்டு இந்த பட்டிக்காட்டுல இருக்க முடியலையோ?” சற்றே குத்தவும் செய்ய,

‘நீங்க இல்லாம இருக்க முடியல’ என்று வாய் வரை வந்தாலும், வெளிக்காட்டாமல், “அதெல்லாம் இல்ல அத்தான்.” என்றவளுக்கு அனாவசியமாக கண்ணீர் வேறு வந்தது.

அதனை அவனிடம் காட்டப் பிடிக்காமல், “நான் உங்களுக்கு வெண்ணி வைக்கிறேன்.’ எனக் கூறி விட்டு, அவசரமாக வெளியில் வந்து விட்டாள்.

அவளைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் சட்டை தேடும் பணியில் இருந்தவன், வேண்டுமென்றே சத்யா வாங்கி கொடுத்த சட்டைகளையே எடுத்து வைத்தான். அவனிடம் இருப்பதில் பாதி அவள் தேர்ந்தெடுத்தது தான்.

அந்த நீல நிற சட்டையைப் பார்த்ததும், “அட… எலி… இந்த கலர் உனக்கு பக்காவா இருக்கு. என் கண்ணே பட்டடும் போல மாமா. இன்னைக்கு அத்தைகிட்ட சொல்லி உனக்கு சுத்தி போட்டுடு…” என்று கொஞ்சியது காதில் ரீங்காரமிட்டு, வதைத்தது.

கூடவே, கோபமும் கொழுந்து விட்டு எரிய, ‘இதான் நீ ஊருக்கு வர்ற கடைசி தடவையா இருக்கணும் சது.’ எனக் கறுவினான்… விதி வலியது என்று புரியாமல்!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

“இந்தர் போதும் வாங்க வீட்டுக்கு போகலாம்…” எனத் தன்னை மீறி எழுந்த சிரிப்பை அடக்கியபடி அழைத்தாள் சத்யரூபா.

“ஹே… ரூப்ஸ். இந்த மாதிரி வயல்வெளியை எல்லாம் நான் படத்துல தான் பாத்து இருக்கேன். செம்ம க்ரீனி. இன்னொரு போட்டு எடுடி.” என மீண்டும் போனை அவள் கையில் திணித்து, விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவளுடனும் செல்பிகளை எடுத்து தள்ளியவன், அவளை தனியாக நிற்கவைத்து புகைப்படங்களை எடுக்க, அவளுக்கு தான் ஒரு கட்டத்தில் வெட்கமே வந்து விட்டது.

“ஐயோ போதுமே இந்தர். இப்ப இவ்ளோ போட்டோ எடுத்து என்ன பண்ண போறீங்க.” என்றாள் இடுப்பில் கை வைத்து.

“வாட்சப் டிபி வைக்கணும், எப். பி, இன்ஸ்ட்டால போட்டோ போடணும். என்னை ரசிக்கிறதுக்காகவே சோஷியல் மீடியால பொண்ணுங்க அலைகடலென திரண்டு காத்திருக்காங்க தெரியுமா… என்னை ஒன் சைடா லவ் பண்ணுன என் கொலிக் ஆல்சோ, வெயிட்டிங் பார் மை அப்டேட்ஸ். ஆனா, இந்த தடவை யாரும் என்னை சைட் அடிக்க கூடாதுன்னு கண்டிஷனோட தான் போட்டோ போடுவேன். கல்யாணம் ஆகிடுச்சுல…” என்று பயபக்தியுடன் கன்னத்தை தட்டிக்கொண்டான்.

நியாயமாக அவளுக்கு கோபமோ பொறாமையோ தான் வரவேண்டும். ஆனால், அவனது பேச்சில் சிரிப்பே வந்தது.

“அதுசரி… உங்க கேர்ள்ஸ் ஆர்மிக்கு போட்டோ போட்டு அப்டேட் பண்ண, இன்னும் மூணு நாள் இங்க தான் இருக்க போறோம். அதனால, போன்ல மெமரியை கொஞ்சம் மிச்சம் வைங்க. ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிட போகுது.” என நக்கலடித்தவளை, லேசாய் முறைத்தவன்,

“அப்படி ஃபுல் ஆனா, தேவை இல்லாத உன் போட்டோவை எல்லாம் டெலிட் பண்ணிட்டு, எடுத்துப்பேன்.” என்று அவன் பங்கிற்கு வாரி, அவளை கோபப்படுத்தி பார்த்து விட்டே, வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வாசலிலேயே நின்ற, தாமரையையும் சாவித்ரியையும் சத்யா கட்டிக்கொள்ள, அவர்களும் மகிழ்வுடன் இருவரையும் வரவேற்றனர்.

வடையும் பஜ்ஜியுடன் தயாரித்த தாமரை, “மாப்பிளைக்கு காபி போடவா சத்யா” எனக் கேட்டார்.

“உங்க பொண்ணுக்கு குடுத்தாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க…” சிலுப்பிக்கொண்ட சத்யாவைக் கண்டு இருவரும் சிரித்தனர்.

முகத்தை துடைத்தபடி, அறையில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த இந்திரஜித், அந்த பழைய காலத்து வீட்டை சுற்றிப் பார்த்தான்.

சத்யாவின் தந்தை இறக்கும்போது தான், அந்த வீட்டை சற்று ஒழுங்கு படுத்தி இருந்தார். பெரிய ஹாலை ஒட்டி, ஸ்டோர் ரூம் போல இருந்த இரண்டு அறைகளை, இரு பெண்கள் இருப்பதால், அவர்களுக்கென ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அதனால், அறை சற்று பெரியதாகவே இருந்தது. அந்த காலத்து மர பீரோல், கயிற்றுக் கட்டில், பின் ஒரு தையல் மெஷின் என்று எளிமையாய் இருந்தது.

அவனிடம் வந்த சத்யா, “உங்களுக்கு காபி வேணுமா?” எனக் கேட்க, தலையை ஆட்டியவன்,

“டிகாஷன் அதிகமா, ஷுகர் கம்மியா” என்று விளக்கம் கொடுக்க, அவனை முறைப்புடன் பார்த்து விட்டு சென்றவள், சில நிமிடங்களில் காபியை நீட்டினாள்.

டம்பளரை வாங்கியபடி, “தையல் மெஷின் இருக்கு. யாரு ஸ்டிட்ச் பண்ணுவா ரூப்ஸ்” எனக் கேட்டதில்,

“நான் தான் பண்ணுவேன். சுடிதார் பிளவுஸ் எல்லாம் எங்க மூணு பேருக்கும் நானே தச்சுடுவேன். அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் தச்சு குடுப்பேன்.” என்றிட,

“குட்…” என பாராட்டியவன், காபியை வாயில் வைத்து முகத்தை சுளித்தான்.

பாலில் காபி பொடியை தேட வேண்டியது இருந்தது… அதில் சர்க்கரையை கொட்டி இருந்ததில், நாக்கு தித்தித்திட,

“என்னடி இது… காபி கேட்டா, கழனி தண்ணில இனிப்பை போட்டு கொண்டு வந்துருக்க” என்று முறைக்க,

“நான் இப்படி தான் காபி போடுவேன். வேணும்னா குடிங்க…” என்று உதட்டை சுளித்தவள், ,”என்னை டென்ஷன் பண்றதுக்கு பனிஷ்மென்ட்…” என நாக்கை துருக்கி அழகு காட்டி விட்டு சென்றாள்.

‘அடிப்பாவி… உனக்கு என் அம்மாவே பரவாயில்ல போல.” என நொந்தவனுக்கு, அவளது இயல்பான குறும்பில் புன்னகை மலர்ந்தது.

மாலை தாண்டும் வேளையிலேயே எழிலழகனும், வைஷாலியும் மறுவீட்டிற்கு வந்து விட்டனர்.

அவர்களையும் பெரியவர்கள் வரவேற்றிட, சத்யா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இந்திரஜித் தான், வைஷாலியைக் கண்டு புன்னகைத்து விட்டு, சத்யாவின் பின் செல்ல, வைஷாலி தங்கை சென்ற திசையையே ஏக்கமாகப் பார்த்து விட்டு, அவளிடம் பேச சென்றாள்.

“உட்காரு எழில்” என அங்கிருந்த மர நாட்காலியை எடுத்துப் போட்ட தாமரையை முறைத்தவன், “நான் ஒண்ணும் இந்த வீட்டுக்கு விருந்தாளியா வரல அத்தை.” என சிலுப்பிக்கொண்டு, அடுக்களை மேடையில் அமர்ந்தபடியே தாமரை செய்த பலகாரத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் கொஞ்சம் வெள்ளனையே வந்துருக்கலாம்ல எழிலு”. சாவித்ரி கேட்டதில்,

“தஞ்சாவூர்ல இருந்தே மத்தியானம் தான் வந்தேன் ஆயா. புகுந்த வீட்டுக்கு வர்றப்ப, பளபளன்னு வரவேணாம். அத்தையோட கை பக்குவத்தை சாப்புட்றதுக்காவே, நான் காலைல இருந்து பச்சை தண்ணி கூட குடிக்கல…” என்று எப்போதும் போல இருவரிடமும் வம்பிழுக்க, அவர்களின் மனம் நிறைந்தது.

வைஷாலி யாரையோ விரும்பி ஓடி விட்டாள், என்று அறிந்ததும் பதறிய மனம், எழிலை திருமணம் செய்ததில் தான் நிம்மதி அடைந்தது. அவன் மீது தீராத நம்பிக்கை தாமரைக்கு. இருந்தும், திருமணத்திற்கு முன்பாவது ஒரு வார்த்தை கூறி இருக்கலாம் என்ற ஆற்றாமை எழாமல் இல்லை. அதனை காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்து கொண்டார்.

அவனுக்கும் சற்று சங்கடமாகவே இருந்தது. இருந்தும் ‘எடுத்த சபதம் முடிப்பேன்…’ என்ற பாடலை தனக்குள் உருப்போட்ட படி இருக்க, இங்கோ தன்னெதிரில் வந்து நின்ற தமக்கையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை சத்யா.

அலைபாயும்
மேகா

11th epi yum potachu drs 🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
25
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்