Loading

தெக்கத்தி 1

“எஏ…. தள்ளே…தள்ளே…ஏ…ஹே‌… தள்ளிப் போய்க்கிட்டே இரு சண்டியா வம்சம் வந்துக்கிட்டே கெடக்கு தள்ளு…” சந்தன நிற சட்டையை மார்புக்கு அணியாமல் தலையைச் சுற்றியவாறு வந்தான் சண்டியர் என்று சொல்லிக் கொள்ளும் அவன்.

“ஏண்டா யாருடா சண்டியா வம்சம், நீயா?” என்ற பெரியவரை ஒரு மாதிரியாக லுக்கு விட்டவன், “பிறவு என்னா நீயாயா கொசுரு வண்டி.” என்றான்.

“ஏத்தே! இவனுக்கு எம்புட்டு ஏத்தமா இருந்தா என்னை கொசுரு வண்டின்னு சொல்லுவான். உங்க அண்ண கிட்ட சொன்னா சோலி என்னாகுனு தெரியுமாடா.”

“ஹே.. கொசுரு வண்டி… எங்க அண்ண ரெண்டு நாளைக்கு சிக்க மாட்டான்டி. ஊர் திருவிழாக்கு பம்ப அடிக்க போய்ட்டான்டி. இந்தச் சண்டியர அடக்க ஆள் இல்லடி.” தலையைச் சுற்றி இருக்கும் சட்டையை முகத்துக்கு நேராக விசிறி அடித்தவன் ஏனோ தானோ என்று அணிந்து கொண்டான்.

பேசிக் கொண்டிருந்த பெரியவர் மீசைய முறுக்கி தன் கோபத்தை காட்ட, “கொசுரு வண்டி நைனா வரட்டா…” என்று செல்லும் பொழுதும் வம்பை வளர்க்க,

“ஆடுடா மாப்ள நல்லா ஆடு. அடுத்த மாசம் வர ஊர் திருவிழால உன்னை எம்புட்டு முடியுமோ அம்புட்டு வெச்சு செய்ற பாருடா.”  மீசையை முறுக்கிக் கொண்டே சபதமிட்டார்.

“இந்தா கொசுரு வண்டி என்னா… எங்க அண்ணன் கிட்ட வம்பா‌. நீ எம்புட்டு செய்ய முடியுமோ அம்புட்டு செஞ்சிட்டு போ. அடி வாங்குறது எங்க சண்டிய வம்சத்துக்கே பழகிப்போன ஒன்னு. ஆனா, நீ அப்படியா… உன் பொண்டாட்டி அப்படியா… இம்மோண்டு ஒரு தீக்குச்சிய உன் வீட்ல தூக்கி போட்டா போதும் ஊரே துப்பிடும்யா துப்பிடும்.” அண்ணனுக்கு துணையாக களத்தில் இறங்கினான் அவனுக்கு அடுத்த பிறந்த கடைக்குட்டி.

பலம் சேர்ந்த மிதப்பில், “பெரிய மனுசனா நடந்துக்கய்யா போயா போயா…” என ஆர்ப்பாட்டம் செய்தான்.

பெரியவர் முறைத்துக் கொண்டே நகர, “ஏண்டா இந்த பெருசு முறைக்குறதை பாத்தா ஒரு மார்க்கமா இருக்கே அண்ண கிட்ட போட்டு குடுத்துடுமோ.” கேட்டது கடைக்குட்டி.

“அட சொம்ப பயலே…” என்ற கேலிக்கு உடனே பதில் கொடுத்தான், “தொட ரொம்ப நேரமா நடுங்கிக்கிட்டு இருக்கு பாருண்ணே.” அண்ணனுக்கு பயந்து நடுங்கும் இளைய அண்ணனின் கால்களை சுட்டி காட்டி.

“எம்புட்டு மறைச்சு வெச்சாலும் பயபுள்ள அண்ண பேர சொன்னதும் வெளிய வந்துடுறான்டா.” கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கணக்காக அவன் சமாளிக்க,

“உனக்காது பேரச்சொன்னா தான் வெளிய வரான். எனக்கெல்லாம் நெனச்சாலே வெளிய வந்துடுறாண்டா.” என்றது சண்டியர் கடைக்குட்டி.

“இப்டியே வுட்டா சரி வராதுடா. நம்மளும் பெரிய பசங்க ஆகிட்டோம் ரெண்டுல ஒன்னு அண்ணன எதுத்து முடிவு பண்ணனும். வரவ போறவன் எல்லாம் அண்ண பேர சொல்லி நம்மளை செஞ்சிட்டு போறான்.”

“அப்டின்னு சொல்லுற…”

“அப்டியே தான்டா சொல்லுற. இந்த தடவ அண்ண பம்ப அடிச்சு முடிச்சு வந்ததும் சொத்தைப் பிரிச்சி ஊருக்குள்ள மைனர் செயினை வாங்கி போட்டு பெரிய மனுசன்னு காட்டிக்கனும்.” மூத்த அண்ணனின் பெயருக்கே தொடை நடுங்கியவன் பந்தாவாக முடிவெடுக்க,

“மைனர் செயின் எல்லாம் பழசாகி போச்சுண்ணே. நம்ம கொம்பன் படத்துல கார்த்தி மாப்ள போட்டு இருப்பாப்டியே  அந்த மாதிரி ஒத்த கொம்பு போட்டுபோம்ண்ணே.” முடிவெடுத்து விட்டான் வீட்டின் கடைசி ஆண்மகன்.

“சரிடா நமக்குள்ள என்னாத்துக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு. சொத்தை பிரிச்சிட்டு நேரா கடைக்கு போவோம் கண்ணுல எது பிடிக்குதோ பறிச்சி நெஞ்சுல போட்டுப்போம்.” என்ற அண்ணன் தம்பி இருவரும் சொசைட்டிக்கு பாலை எடுத்துக் கொண்டு ஊர்வலம் செல்ல,

“இந்தா பாருடா பைத்தியக்காரனுங்க நகைய பறிச்சி போட போறாய்ங்களாம். எம்புட்டு வளந்தாலும் இந்த திருட்டு புத்தி மட்டும் இவனுங்களை வுட்டு போதாணு பாரு.” நடு ரோட்டில் அவமானப்படுத்தினான் அவனுக்கு எதிரியான கூட்டத்தில் ஒருவன்.

கூடவே வந்த இன்னொருத்தன், “இந்த வெட்டி பசங்களை நம்பி பால குடுத்துவிடுறாய்ங்களே சட்டில ஒரு சொட்டு தான் மிச்சம் இருக்கும் போல. ” என்றான்.

“அட அவனுங்க தான் பைத்தியக்காரனுங்கன்னா நீங்க அதுக்கு மேல பேசுறீங்களேடா முட்டா பசங்களா. இவனுங்க இந்தா சொட்டு பால கூட வுட்டு வெக்க மாட்டானுங்கடா.” மூன்றாவதாக ஒருத்தன் கட்டை விரலை ஆட்காட்டி நுனி விரலோடு வைத்து அவர்களிடம் மல்லுக்கு நிற்க,

“அப்டின்னா… நீ என்னாடா சொல்ல வர தம்பி? நக்கியே குண்டான சுத்தம் பண்ற நக்கீரன் பரம்பரையா இவனுங்க.” என்று இருவரை சுற்றி வளைத்த மூவர் கும்பல் கைதட்டி சிரித்தது.

“என்னாங்கடா உங்க உடம்பு எப்படி இருக்கு?”

“அதுக்கு என்னாடா மைனர் குஞ்சு… உன் உடம்பை வுட நல்லா கட்டு மஸ்தா தான் இருக்கு பாக்குறியா.”

“என்னாத்துக்குடா எங்க அண்ணே உங்க உடம்ப பாக்கணும் செத்த பயலுங்களா. ஊர்ல இருக்க அம்புட்டு பேரோட சோத்தையும் திருடி தின்னா இப்டித்தா கெடக்கணும். ஃபேஷன் ஷோ காட்டாம வேலய பாருங்கடா, போங்கடா.”

“எடேய்! ஆர பாத்து டா போட்டு பேசுற செத்த எலி.”

“உங்க மூணு பேத்தைஇயும் தான்டா என் தம்பி டா போட்டு பேசினா என்னாடா பண்ணுவீங்க பெருச்சாளிங்களா”

“அண்ணே இதுக்கு மேல இவங்க ரெண்டு பேத்தியும் பேச வுட்டா நம்ம குடும்ப வம்சத்துக்கு மருவாத கெடையாது. இதே எடத்துல இவனுங்க ரெண்டு பேத்தியும் புதைச்சுட்டு தான் இனி நம்ம அடுத்த வேலைய பாக்கணும்.”

“வெட்டியான் வேலைக்காடா பிணம் தேடுறீங்க பெருச்சாளிங்களா.”

“பள்ளிக்கூடத்தயே இப்பதான் தாண்டி இருக்க நீ… இம்புட்டு பேசலாமாடா செத்த எலி.” என்றவன் கடைக்குட்டி சிங்கம் கழுத்தில் கை வைக்க, அவன் அண்ணன் இவன் சட்டையை பிடித்தான்.

அண்ணன் சட்டையை எதிரணி பிடிப்பதை பார்த்த தம்பிகள் இருவரும் பாய்ந்து அவன் தலை முடியை பிடிக்க, ஐவரும் அடித்துக் கொண்டார்கள் நடுரோட்டில்.

****

ஆற்று நீரில் அழுக்கு துணியை துவைக்கும் சாக்கில் அங்கு இருப்பவர்களை வாயால்  துவைத்துக் கொண்டிருக்கும்  ஒளிர்பிறை, சாமந்தியை  கண்ட ஊர் கிழவி,

இந்தாங்க டி…. ஊர் வம்ப  அப்புறம் வாங்கலாம். முதல்ல அந்த அவுத்து வுட்ட காளை அம்புட்டு பேத்தியும் அடக்கி வெக்க பாருங்க. நீங்க அடக்கி வெக்கிற மாதிரி தெரியல. அவுங்களும் அடங்கி போற மாதிரியும் தெரியல. சிரிச்சிட்டே கெடக்காம சட்டு புட்டுன்னு அடுத்தடுத்து இருக்குறவங்களுக்கு கண்ணால சோற போட பாருங்கடி. அண்ண தம்பி மாதிரியா கெடக்காங்க. இல்ல நீங்க ரெண்டு பேரும் தான் மதினிங்க மாதிரி இருக்கீங்களா?  உங்களால ஊரே அல்லோலா பட்டு போவுது.” என்றவரின் வார்த்தையில் உஷ்ணம் ஏறிய சாமந்தி நீரில் நனைந்த புடவையை இடுப்பில் சொருகியவாறு,

“இந்தா கிழவி என் புருசன பத்தி எதாச்சும் சென்ன அம்புட்டுதான். என் புருச அவுத்து வுட்ட காளை தான்…. என்னா இப்ப. அவன அடக்க இந்த ஊருல எவனுக்கும் தெம்பு இல்ல. போயும் போயும்…இவ புருசன் கூட சேர்த்து வெச்சு பேசுவியா நீயி. தண்டட்டி தொங்குற காத இழுத்து அறுத்தா தெரியும்.” என்ற ஓரகத்தியின்  முதுகில் ஈரத்துணியால் அடித்த ஒளிர்பிறை,

“அடியே மந்தி! கிழவி கிட்ட பேசுற சாக்குல என் மாமன மட்டம் தட்டி பேசுறியா. உன் புருச பேருல மட்டும்தான்டி காளை. என் மாமன் நிஜ காளைய அடக்குற வீரனாக்கும் பாத்துக்க. “

“ஆமாமா…மதுரவீரனோட வீர வரலாற சொல்லிக்கிட்டாங்க ஊர்ல. காளைய வேணுனா அடக்கலாம். என் புருச மச்சக்காளைய அடக்க முடியாது.”

“காளையா இருந்தா அடக்கலாம். உன் புருச தான் காட்டெரும ஆச்சே.”

“பிற! என் புருசன எதாச்சும் சொன்ன வாய ஒடைச்சிடுவ.”

“அப்டிதான்டி சொல்லுவ. நீ கண்ணாலம் கட்டிக்கிட்டு வர்றதுக்கு முன்னாடியே உன் புருச எனக்கு கொழுந்தன். என் கொழுந்தன நா என்னா வேணாலும் சொல்லுவ. எப்டி வேணாலும் சொல்லுவ. உனக்கு என்னாடி வந்துச்சு.”

“சொல்லுவடி சொல்லுவ… வாய் இருந்தா தான சொல்லுவ.” இடுப்பில் இருந்த சேலையை எடுத்து உதறிவிட்டு மீண்டும் இடுப்பிலே சொருகிக் கொண்டு  மச்சக்காளையன் ஆத்துக்காரி சாமந்தி சண்டைக்கு பாய,

அவளை போலவே கெண்டைக்கால் வரை சேலையை சொருகிக்கொண்டு  மதுரவீரன் மனைவி ஒளிர்பிறையும் துள்ளிக்கொண்டு பாய்ந்தாள்.

“என்னாடி பிற எல்லாரும் கிளம்பிட்டாய்ங்களா இல்லியா. எவ்ளோ நேரம் இப்டி வாய் சவடால் வுட்டுட்டு கெடக்க முடியும். வூட்டுல  வேல அப்டியே கெடக்கு. அந்த விருமாண்டி வர நேரம் வேறடி காட்டு கத்து கத்துவானே சோறு பொங்கலன்னா”

“நீ வேறடி மந்தி நானே அந்த கட்டபொம்மன் காதுல எவளாது உன் புருசன கொழுந்தன்னு சொல்லி மல்லு கட்டி பேசுனத போட்டுட போறான்னு பயந்துக்கிட்டு நிக்கேன். அப்டியே கோவமா பேசுற மாதிரி நீயே பாரு எல்லாரும் கிளம்பிட்டாங்களான்னு.” தோழியின் வார்த்தையில் வந்த சிரிப்பை அடக்கிய சாமந்தி தீவிரமாக சண்டையிட்டு, அழுந்த மூச்சை வெளியிடுவது போல் தலையை சாய்த்து பார்க்க, அங்கு ஒருவரும் இல்லை.

இவர்களின் சண்டை அந்த ஆற்றங்கரைக்கே பழகிய ஒன்று. கணவன்களுக்கு ஏற்ற கண்ணிய மனைவிகள்.

“வாடி போனவங்க திரும்பி வரதுக்குள்ள நம்ம போயிடுவோம்.” என  கொண்டு வந்த துணிகளை அள்ளிக்கொண்டு தோழிகள் இருவரும் புறப்பட,

“ஏண்டி பிற, நம்ம பொழப்பே நார பொழப்பா கெடக்கே…. இதுல எங்க இருந்து புதுசா ஒருத்திய கொண்டு வந்து இதுங்களுக்கு கண்ணால சோறு போட.”

“அத சொல்லுடி மந்தி. நம்மளை மாதிரியே ஏமாந்து எவளாது வந்து சேருவாளுங்களா என்னா! என் மாமனுக்கு அடுத்து மூணாவதா பொறந்திருக்கே இமையவன்
அது ஒரு வாலில்லாத குரங்கு.
அடுத்து எழில்குமரன்  சிறுத்தைன்னு சொல்லிட்டு திரியுற எலிக்குட்டி.
அடுத்து கவிநேயன்,
எலிக்குட்டி பின்னாடியே திரியுற பூனை குட்டி.
இவங்க கூட்டத்துல தப்பித்தவறி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பொறந்த புள்ள பூச்சி செந்தமிழன். இப்டியே வகைக்கு ஒன்னா  இருந்தா எங்க இருந்து கண்ணால சோறு போடுறது. கடைசி வரைக்கும் பொங்கச் சோறு தான் போட்டுட்டு இருக்கணும்.” என்றாள்.

“உன் வூடு எவ்ளவோ பரவால போ. என் புருசனே ஒரு மல குரங்கு. அதுக்கடுத்து பொறந்திருக்கே சிலம்பன்,
அது மனசுல பெரிய பயில்வான்னு நினைப்புடி பிற. வெளிய புலி மாதிரி பேசிட்டு வீட்டுக்குள் அண்ண கிட்ட அடி வாங்குறதையே வேலயா வெச்சிருக்கு. அவனுக்கு அடுத்து ஒரு பைத்தியம் பொறந்திருக்கு மொழியன்னு.
அது வுடுற உதாரு இருக்கே வூட்டுல அய்யய்யோ கேட்க முடியாதுடி. அண்டங்காக்கா மாதிரியே கத்திக்கிட்டே இருப்பான்.” பேசிக்கொண்டே செல்பவளை  தடுத்து நிறுத்திய ஒளிர்பிறை,

“போதும்டி இதுக்கு மேல ரெண்டு பேரும் பேசிக்கிட்டே ஊருக்குள்ள போனா அவ்ளோ தான். சண்டியருங்க இங்கதா எங்கயாது இருப்பானுங்க. விட்ட கதைய நாளைக்கு தொடருவோம்.”

மதுரவீரன்
செந்தமிழன்
இமையவன்
எழில்குமரன்
கவிநேயன்…

மச்சக்காளையன்
சிலம்பன்
மொழியன்

கடைசியா ஒரு சிங்கம் இருக்கு. கதை போற போக்குல களத்துக்கு வரும்.

****

தெக்கத்தி 2

ஒரே குடும்பத்தில் வாழ வந்த இருவரும் ஒரே சிமெண்ட் ரோட்டில் இரு துருவங்களாக பயணித்தார்கள். ஊருக்குள் கால் வைத்ததும் சத்தம் காதை கிழிக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

தங்கள் வீட்டு வானரங்களின் சேட்டை தான் இது என்பதை கண்டுகொண்ட அரசிகள் ஆற அமரவே அங்கு நகர்ந்தார்கள். அவர்கள் எண்ணியது போல் ஐந்து பேரும் கொண்டு வந்த பால் தரையில் கொட்டியதை கூட உணராமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அருகில் சென்றதும் தற்செயலாக தன் வீட்டு ஆண்களை பார்ப்பது போல் இருவரும் அவரவர் கொழுந்தன்களிடம் சென்றார்கள்.

“எடேய்! இமையா என்னாடா பண்ணிக்கிட்டு கெடக்க?” என்ற ஒளிர்பிறை இரண்டாவது கொழுந்தன் இமையவனை தடுத்தாள்.

அதையெல்லாம் உணரும் நிலையிலா அவன் இருக்கிறான்! சாமந்தியின் கொழுந்தன் சிலம்பனின் தோள்பட்டையை ரணமாக்கி கொண்டிருந்தான் அதி தீவிரமாக.

“மொழியா பிரச்சனை வேணாடா வுட்டுடு.”

தம்பியிடம் கெஞ்சும் மதினிக்கு பதில் கொடுத்தான் சிலம்பன். “என்னாது வுடனுமா? என்னால இவனுகளை வுட முடியாது மதினி. நீங்க விரசா போய் எனக்கு ஜாமீன் ஏற்பாடு பண்ணுங்க. இவனுங்க மூணு பேத்துல ஆராது ஒருத்தன கொன்னுட்டுதா வூட்டுக்கு திரும்புவ.” என்று.

கொழுந்தனின் வார்த்தையில் அதிர்ந்த சாமந்தி, “சிலம்பா உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சன ஆகிடும் சொன்னா கேளு.” மச்சக்காளையன் முதல் தம்பி சிலம்பனிடம் கோரிக்கை வைத்தாள்.

“ஆவட்டும் மதினி பிரச்சனை பெருசாகட்டும். அண்ணன ஏவி வுட்டு இவனுங்க குடல உருவி அதுல நா தோரணம் கட்டல என் பேரு சிலம்பன் இல்ல மதினி.” என்றவனின் முடியை பிடித்து நன்றாக சுழற்ற வேண்டும் போல் இருந்தது சாமந்திக்கு.

இருப்பினும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கொழுந்தன் இருவர்களையும் தடுத்தாள்.

“எழிலா நீயாது மதினி சொல்றதை கேளுப்பா. இப்டி நட்ட நடுவீதில நின்னு சண்ட போட்டா நம்ம மான மருவாதி என்னா ஆவுறது.” மூன்றாவது கொழுந்தன் எழில்குமரனிடம் மன்றாடினாள் ஒளிர்பிறை.

சாமந்தியின் பேச்சுக்கு அவளது கொழுந்தன்கள் சிலம்பன், மொழியன் இருவரும் செவி சாய்க்காமல் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள்.
அதேபோல் மறுபுறம் ஒளிர்பிறையின் இமையவன், எழில்குமரன், கவிநேயன் மூன்று கொழுந்தன்களும் போட்டிருக்கும் சட்டை கிழிந்து இருப்பது கூட தெரியாமல் ரோட்டில் உருண்டு பிரண்டனர்.

ஊர் பார்க்க மல்லுக்கட்டும் வீட்டின் ஆண்களுடன் சேர்ந்து நிற்கும் கடுப்பில் பெண்கள் இருவரும் திட்டவே ஆரம்பித்துவிட்டனர். மதினியின் வார்த்தைக்கா செவி சாய்க்கும் ஐந்து குரங்குகள்! இன்றோடு எதிரணியில் இருப்பவனை வெட்டிவிழ்த்தி சிறைக்கு போவது போல் பாய்ந்து கொண்டிருந்தனர்.

“இந்தாடா சிலம்ப பேரு வச்சிருக்க சிலம்பனே… உன்ன கம்பு சுத்துற மாதிரி சுத்தி… சுத்தி… சுத்தி.. எங்காலுக்கு கீழே விழ வெக்கல நா மதுரவீரன் தம்பி இமையவன் இல்லிடா.” என்றவன் எதிரில் இருப்பவனின் கால் முட்டியில் ஒரு உதை கொடுத்தான் வேகமாக.

கீழே விழுந்த சிலம்பன் உடனே எழுந்து நின்று,  “வாடா… வா.. ஊரு முச்சந்தில நிக்குற கருங்கல்லே… உன்ன அசையாத சிலையா அங்கயே தூக்கி போடல நா மச்சக்காளையன் தம்பி சிலம்பன் இல்லிடா…” என்று தன்னை உதைத்தவன் காலை பதம் பார்த்தான் மிதித்து.

“எங்க அண்ண மேல கைய வெச்சிடுவியாடா நீ சொம்ப பயலே.” எங்கோ சண்டை பிடித்துக் கொண்டிருந்த எழில்குமரன் வேகமாக சிலம்பனின் முடியை பிடித்து வயிற்றில் ஒரு குத்து விட,

“எடேய்! நீ நல்ல ஆம்பளையா இருந்தா என்கிட்ட சண்டைக்கு வாடா.” தன் அண்ணனிடம் மல்லுக்கட்டும் எழிலின் முதுகெலும்பை ஓங்கி உதைத்தான் மொழியன்.

“செத்த எலி முதல்ல நீ ஆம்பளையா இருந்தா எங்க அண்ணன வுட்டுட்டு என்கிட்ட சண்டைக்கு வாடா. இன்னிக்கு நீயா நானானு பாத்துடுவோ.” நானும் சளைத்தவன் இல்லை என்பது போல் கவிநேயனும் அண்ணன்களுக்கு குறைவில்லாமல் மச்சக்காளையன் இரு தம்பிகளையும் தன்னால் முடிந்தவரை வெளுத்து விட்டான்.

ஐவரும் கொட்டிய பாலில் விழுந்து புரண்டனர். தெரு ஒன்று கூடி விட்டது இவர்கள் அளப்பறையில். ஊரில் இருக்கும் பெருசுகள் வாழ வந்த பெண்கள் இருவரிடமும் தடுக்கும்படி மன்றாட,

“வாய் இருக்குதுனு பேசாதய்யா இவனுகளை அடக்க முடிஞ்சா அடக்கி வூட்டுக்கு கூட்டிட்டு போயிருக்க மாட்டோமா. எங்க புருசங்களே எங்க பேச்சைக் கேட்க மாட்டாய்ங்க. நீயி என்னானா இவனுகளை அடக்க சொல்ற.” அறிவுரை கூற வந்தவர்களிடம் சண்டைக்கு பாய்ந்தார்கள்.

“எம்மா இதுலா உங்க வூட்டு விசயமா எங்களுக்கு எதுக்கு பொல்லாப்பு. உங்க குடும்பத்துல வெட்டுறது குத்துறதுல எல்லாம் சாதாரண விசயம். எங்களுக்குலா இது தேவ இல்லாத வேல. ஒழுங்கு மருவாதியா அம்புட்டு பேத்தியும் வூட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க. இல்லினா பஞ்சாயத்துல நின்னு பதில் சொல்ல வேண்டியதா இருக்கும் .”

சண்டையிடும் பொடிசுகளை அடக்க முடியாமல் தங்களிடம் பாய வரும் ஊர் பெரியவர்களை உள்ளுக்குள் கண்டபடி வசைப்பாடிய பெண்கள் கொழுந்தன்களை அடக்கச் சென்றனர்.

சாமந்தியின் பேச்சு சுத்தமாக எடுபடவில்லை. ஒளிர்பிறையின் பேச்சுக்கு அடங்கி இமையவனும் எழில்குமரனும் சண்டையை குறைக்க, பொடியன் கவிநேயன் மட்டும் துள்ளிக் கொண்டிருந்தான்.

மதினியின் கெஞ்சுதலில் மனம் இறங்காத அவ்வீட்டின் கடைக்குட்டி கவிநேயன்,
“மதினி இதுலா கலவரம் நடக்குற எடம். நீங்கலா இங்கஸநிக்க கூடாது வூட்டுக்கு போங்க.” என வீர வசனம் பேசினான்.

“எடேய், இப்ப மட்டும் நீ சண்டைய நிறுத்தல உங்க அண்ணனுக்கு போன போட்டுடுவ.” என்ற ஒரே வசனத்தில் அவனையும் கட்டிப்போட்டாள் ஒளிர்பிறை.

கொழுந்தன்களை தோழி அடக்கிய விதத்தை கண்ட சாமந்தி, “அவனுங்க மூணு பேத்தியும் பாருங்கடா உங்களை மாதிரி சண்டை போட்டானுங்க. இப்ப அண்ண பேரச் சொன்னதும் ஒதுங்கிட்டாய்ங்க. ஆனா, நீங்க இன்னும் பாஞ்சிக்கிட்டு இருக்குறீங்க. இந்த விசயம் மட்டும் உங்க அண்ண காதுக்கு போச்சு மூணு நாளுக்கு கட்டி போட்டு அடிப்பாரு. உயிர் மேல ஆச இருந்தா இத்தோட சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு கிளம்புங்க.” பேசும்பொழுது கம்பீரமாகவே பேசினாள் எப்படியும் அடங்கி விடுவார்கள் என்றறிந்து.

இருவரின் முயற்சிகளும் வீண் போகவில்லை. சண்டையிட்ட ஐவரும் அண்ணன்களுக்கு பயந்து ஒதுங்கி நிற்க, அப்பொழுதுதான் அவர்களின் கோலத்தை அவர்களே பார்த்தார்கள். ஐவரின் சட்டையும் கிழிந்து தொங்கியது. தலைமுடிக்கு வேலையே இல்லாத அளவிற்கு சிதைந்து இருந்தது. நல்ல வேலையாக ஐவரும் கால்சட்டை அணிந்து இருந்தார்கள் இல்லை என்றால் மானம் சிறுமயிலூர் கிராமத்தை தாண்டி பக்கத்து ஊருக்கு பறந்து இருக்கும்.

“இந்தாய்ங்கடா உங்களால ஊரு நிம்மதி ரொம்ப கெட்டுப் போவுது. ஒழுங்கா இனி எந்த பஞ்சாயத்தும் தெருவுக்குள்ளியோ, நாங்க கூடி சந்தோசமா இருக்குற எடத்தலயோ பண்ண மாட்டோம்னு வாக்குறுதி குடுங்கடா.”

இப்படி ஊரே அசிங்கப்படுத்தும் வார்த்தையில் பெண்கள் இருவரும் தங்கள் வீட்டு கொழுந்தன்களை முறைத்தனர். அவர்களோ, யாருக்கோ வந்த விதி என்று ஆளுக்கு ஒரு போசில் நின்று கொண்டிருந்தனர்.

இவர்கள் குடும்பத்திற்கு தாத்தா முறையான சித்திரப்பாண்டி, “இவனுகளை நம்பியாய்யா வாக்குறுதி கேக்குறீங்க. இவனுங்க வம்சத்துலயே குடுத்த வார்த்தைய காப்பாத்துற பழக்கம் இல்லியே.” என்றிட,

“என்னாய்யா கொசுரு வண்டி வாயி பக்கத்து ஊரு வரைக்கு போது. எங்க குடும்பத்த பாத்தா உனக்கு எப்டி தெரியுது? இந்த ஊர்லயே எங்க குடும்பத்துக்கு இணையா இருக்க குடும்பம் எதுனு சொல்லிய்யா பாப்போம்.” அவரிடம் துள்ளினான் சிலம்பன்.

“ஐயா ராசனுகளா! உங்க குடும்பத்துக்கு இணையா இங்க ஒரு குடும்பமும் இருக்க முடியாதுய்யா. ஏன்னா நாங்க எல்லாம் மானம் மருவாதி உள்ளவங்க. உங்களை மாதிரி கூட பொறந்தவன வெட்டிக்கிட்டு கெடக்குற ஆளுங்க  கெடயாது.”

“தாத்தானு பாக்குற… இப்ப எதுக்கு தேவையில்லாத விசயத்த பேசுறீங்க. சம்பவம் பண்ணது நாங்க. எங்களை மட்டும் பேச்சுங்க. தேவ இல்லாம எங்க அப்பாவ பத்தி பேசுற வேல வெச்சிக்க கூடாது. அப்புறம் இந்த எடம் மோசமான கலவர பூமியா மாறிபுடும் அவ்ளோ தான் சொல்லிட்டே.”

“நீங்க சம்பவம் மட்டுமாடா பண்ணுறீய்ங்க. எங்க எல்லாரோட உசுரயுல வாங்குறீய்ங்க. இவனுங்க மூணு பேராது பரவால சின்ன பசங்கன்னு வுட்டுடுவ. நீ காலேஜ்ஜூ போறியே கொஞ்சமாவுது  அறிவு வேணா.” சண்டை போட்ட ஐவரில் பெரியவனான இமையவனை சாடினார்.

இமையவன் திட்டு வாங்குவதை கேட்ட மச்சக்காளையன் சகோதரர்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க, “என்னாய்ங்கடா சிரிக்கிறீங்க வாங்குன அடி பத்தலையா.” என்றான் கவிநேயன்.

“நாங்களாது அடி மட்டும் தான் வாங்குனோம். நீங்க பாருங்க செருப்ப சாணில முக்கி பளார் பளார்னு அசிங்கத்தியும் வாங்கிட்டீங்க.” வீர வசனம் பேசிய மொழியன் முதுகில் ஒன்றை வைத்த சாமந்தி,

“அடுத்து உங்களை தாண்டா அசிங்கப்படுத்துவாரு, பேசாம கெடங்க.” என்றாள்.

“காலேஜ்ஜ்ஜ்ஜூ இல்லியா அது காலேஜ்‌. ஆமா, போனா அறிவு வருனு உனக்கு ஆரு கிழவா சொன்னது?” என்றதும் கோபம் கொண்ட சித்திரப்பாண்டி,

“என்னாய்ங்கடா மனுசன
ஆளாளுக்கு மருவாதி இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க. இன்னொரு தரோ என்னை மருவாத குறைவா பேசினிங்க உறவ அத்து வுட்டுடுவ.” கோபம் கொண்டார்.

“உன் உறவே எங்களுக்கு தேவ இல்ல போய்யா இவனுங்க கிட்ட.” என எழில்குமரன் எதிரணியை கை காட்ட, அவர்களோ பொங்கி விட்டார்கள் மீண்டும்.

பேச்சுக்கள் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது இரு அணியினரிடமும். போதா குறைக்கு பெருசுகளும் தங்கள் பங்கிற்கு ஆளுக்கு ஒன்று பேச,

“இது எல்லாத்துக்கு ஒரு முடிவு கட்டாம இந்த வருச திருவிழாவ ஆரம்பிக்க கூடாது. வருசா வருசம் காசு போட்டு திருவிழா நடத்துறது நம்ம அத கெடுக்குறது இவங்க.” என்றார்கள் முன் பட்ட அனுபவத்தை மனதில் வைத்து.

“நாங்க ஒன்னு இவனுங்க மாதிரி கெடையாது. இந்த வருச திருவிழாவுல எங்க சார்பா எந்த பிரச்சனையும் வராது அப்டித்தானடா அண்ணா” என சிலம்பனை அவன் தமையன் மொழியன் கேட்க, அவனும் கெத்தாக தலையாட்டினான்.

“இந்த ஊருக்கே தெரியும் வருசா வருசம் எங்ககிட்ட மல்லு கட்டுறது இவனுங்க ரெண்டு பேரு தானுனு. எங்க அண்ண எங்களை ரொம்ப நல்லபடியா வளர்த்து இருக்காப்படி.  எங்க அண்ண வளர்ப இந்த வருச கோவில் திருவிழாவுல என்னான்னு காட்டுறோம்.”

“உங்க அண்ண உங்களை வளர்த்துருக்காருனா எங்க அண்ண எங்களை காட்டுக்கு மேட்டுக்குமடா துரத்தி விட்டாரு கிறுக்கு பயலுகளா.”

“துரத்தி விட்டா கூட பரவாலடா உங்களை எல்லா சல்லி பைசாக்கு மதிக்காம தான உங்க அண்ண இருக்காரு.”

“எடேய்! எங்க அண்ணன பத்தி உங்களுக்கு என்னாடா தெரியும். எங்க ரெண்டு பேத்துக்காக உயிரை எடுக்க கூட தயங்க மாட்டாருடா.”

“ஆமாண்டா… ஆமா, அதா சத்தம் தெரு முனை வரைக்கும் கிழி கிழின்னு கிழிக்குது உங்க உயிரு போவுற மாதிரி அடிக்குற உங்க நோண்ண பாசதுல.”

“எங்களை சொல்றதுக்கு முன்னாடி உங்க மூணு பேரு சத்தம் எம்புட்டு தூரம் நாறி இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசுங்கடா.”

“நாறி இருந்தா கூட பரவால உங்க சத்தம் நாண்டுக்கிட்டு தொங்குற அளவுக்குல இருக்கு.”

“எடேய்! எங்க மதினிக்கு மருவாதை குடுத்து அமைதியா இருக்கோம் ஒழுங்கா போய்டு.”

“அதே தாண்டா உங்க ரெண்டு பேத்துக்கும். ஒழுங்கு மருவாதையா ஓடிப் போயிடுங்க. இல்லினா எங்க மதினி பேச்சை மீறி உங்க குடல உருவ வேண்டிதா இருக்கும்.”

“எங்கடா வந்து என் குடல உருவ பாப்போம்.”

“எம்புட்டு நக்கலா நெஞ்ச நிமித்துறா பாரேன்! இவன சும்மா விடக்கூடாது.”

இருவர் அணி ஒன்று பேச மூவரணி ஒன்று பேச என்று மீண்டும் அங்கு ரணகளம் தொடங்கியது. இந்த முறை வாழ வந்த பெண்கள் இருவரும் தடுக்காமல் ஒதுங்கி விட்டனர். நிறுத்திய கலவரம் மீண்டும் வெடித்ததில் அங்கிருந்த ஊர் மக்களுக்கு தான் தலைவலியாக இருந்தது.

“இந்த ரெண்டு குடும்பத்தையும் ஊர வுட்டு தள்ளி வச்சாதாய்யா நம்ம நிம்மதியா வாழ முடியும்.” என்ற வாசகத்தை கேட்டு ஐவரும் பேசியவர்களிடம் மல்லுக்கு பாய்ந்தனர்.

*****

சீமை 3

இரண்டு நாட்களாக லேசான தூறல் சிறுமயிலூரில். அதற்கு தளர்ந்து போகாத நில ராணிகள் இறுக்கமாக இருக்க, நீர் பாய்ச்சி அவைகளை சமாதானம் செய்தான் செந்தமிழன். பெயருக்கு ஏற்றார் போல் குணத்திலும் அன்பானவன்.

தனக்கு உயிர் கொடுத்த மண்ணை வணங்காவிட்டாலும் மிதிக்காமல் ஒதுங்கி நின்றாலே பயன் அளிக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். பட்டாம்பூச்சிக்கு கூட வலிக்கும் என்று கவலை கொள்பவன்.

இந்த ஊரில் முதல் பட்டப் படிப்பை முடித்த நல்லவன். அதுவும் விவசாயம் சார்ந்த துறையை தான் எடுப்பேன் என்று அடம் பிடித்து நினைத்ததை சாதித்தான். வழக்கமாக இருக்கும் விவசாயத்தை விட அதில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவன்.

இன்றும் அதற்கான படிக்கட்டாய் நிலத்தை அழகுப்படுத்தி ஈரம் செய்தவன் வாளியை கையில் தூக்கிக்கொண்டு கால் பதித்தான். ஈரமான மண்ணில் கால் பதிந்ததும் கண்மூடி தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தவன்,

“உன் அரும தெரியாம நம்ம ஊரு சாதிசனம் அத்தினியும் வெளியூர் போவுது.  திரும்ப உன் காலடில விழுவாய்ங்க. உன்ன மாதிரி அரவணைக்க ஆள் இல்லினு வணங்குவாய்ங்க அதுவரைக்கும் காத்திரு.” எனும் பொழுது விழியோரம் சிறுநீர் துளி அவனிடம்.

போதும் என்ற அளவு அவன் வளர்த்த மண்ணை ரசித்து விட்டு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எதையோ தூக்கி அடித்தான். அவன் தூக்கி அடித்த பொருள் காணாமல் போக, வாளியும் தன் கணத்தை குறைக்க ஆரம்பித்தது. செந்தமிழனுக்கு என்று அவ்ஊரில் சில ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அத்தனை பேரும் பத்து வயது கூட தாண்டாத சிறியவர்கள்.

ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏதோ ஒரு வித்தியாசத்தை இவனிடம் மட்டும் உணர்ந்த குழந்தைகள் சுற்றி வருகிறார்கள் அனுதினமும். எதையோ தூக்கி அடிக்கும் செந்தமிழிடம், “என்னாத்த ண்ணே தூக்கி அடிக்குறீய்ங்க?” கேள்வி கேட்டிட,

“விலைமதிக்க முடியாத தங்கத்தை.” என்றான்.

ஒன்றும் புரியாத சிறுசுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்கள் உயரத்திற்கு குனிந்தவன் வாளியை காட்டினான். அதில் பனைமர பந்துகள் மண்ணோடு சேர்ந்து காட்சியளித்தது.

“அண்ணா இது பனமரம். இதியா தங்கம்னு சொல்றீய்ங்க.”

“பனமரம் நம்ம மண்ணுல விளைஞ்ச தங்கம். அதோட மகிம என்னானு தெரியாம நம்ம வுட்டுட்டோம். எங்கயோ இருக்க வெள்ளைக்காரன் தன்னோட ஊர்ல இத தத்து எடுத்து வளர்க்குறா. நா தூக்கி அடிச்சது மண்ணுக்குள்ள மக்கி போயி நம்ம உசரத்தையும் வுட பெருசா வளரும். அது எவ்ளோ உசரமா வளருதோ அவ்ளோ உசரமா நம்ம ஊரோட மண்ணு தரம் போகாம இருக்கும்.”

“ண்ணே இந்த பனமரத்துல இருந்து தங்கம் வந்தா எனக்கு தோடு வாங்கி தருவிங்களா” முளைக்காத பல்லை படம் போட்டு காட்டிய சிறுமியை கொஞ்சியவன்,

“தோடு என்னாடா தோடு இந்த பன மரத்தை நீ தொழிலா எடுத்தினா உன்ன வுட வசதியான பொண்ணு இந்த ஊர்லயே இருக்க முடியாது.” என்பதை நம்பவில்லை சிறுவர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இன்னும் அவை ஒரு மரம் மட்டுமே. அடுத்த தலைமுறையினருக்கு நம் மரத்தின் தரம் கூட தெரியாமல் போய்விட்டதை எண்ணி உள்ளுக்குள் வருந்தியவன் விவரித்தான் பனைமரத்தின் நன்மைகளை.

அதன் பலன் புரிந்ததோ இல்லையோ செந்தமிழனுக்காக ஆளுக்கு ஒன்றை கையில் எடுத்து தூக்கி எறிந்தார்கள். நாளை வியந்து பார்க்கும் அளவுக்கு வளரும் என்பதை அறியாது.

***

“நீங்க ஒன்னு கவலைப்படாதீய்ங்க ப்பா. எப்டியாது வக்கீலு கிட்ட பேசி இந்த தடவ உங்களை வெளிய எடுக்க பாக்குற.”

“என்னாத்துக்குய்யா என்னை வெளில எடுத்துக்கிட்டு. செய்யக்கூடாத தப்ப செஞ்சுப்புட்டு குடும்ப மானத்தை இப்டி மொத்தமா வாங்கிட்ட. தங்கச்சி புருச உசுரயே குடிச்சிட்ட.” சிறைக்குள் இருக்கும் ஆறுமுகம் வருத்தத்தோடு பேச,

“இன்னா வரைக்கும் என்னால நம்ப முடியலப்பா நீங்கதா அத செஞ்சீய்ங்கன்னு. நீங்க அந்த மாதிரி செய்யுற ஆளும் கெடயாது. என்னா நடந்துச்சுன்னு இப்பவாது உண்மைய சொல்லுங்க.” கேட்டான் அவரது மூத்த மகன்.

“என்னாய்யா உண்மைய சொல்லுறது. பரம்பரை பரம்பரையா சுத்துன பகை உங்கன வரைக்கும்
வந்து நிக்குது. கூட பொறந்தவன வுட்டுட்டு என்னை அண்ணனா நெனச்சவ வாழ்க்கைய நானே பறிச்சிட்ட. வெளிய வந்து எப்டி அவ புள்ள முகத்துல முழிப்ப.”

“வுடுங்கப்பா எல்லாத்தியும் சரி பண்ணிடலாம்.”

“ஏழு வருசமா நா நிம்மதியா தூங்குறதே இல்ல ராசா. எங்க அப்பன் பண்ண சின்ன தப்பால பெரிய தப்ப பண்ணிட்டு உங்க முன்னாடி குற்றவாளியா நிற்குற. அத வுட பெரிய தப்பு உங்கன வரைக்கும் இந்த பகைய கொண்டு வந்துட்ட. என் ஒருத்த உசுரு போய்டா இந்த வம்சம் இனி வர்ற காலத்துல பிரச்சனை இல்லாம இருக்கும்.”

என்ன நடந்தது என்று தெரியாவிட்டாலும் வருந்தும் தந்தைக்கு போதும் என்ற அளவுக்கு ஆறுதல் சொல்லியவன் கிளம்பும் நேரம், “அவன் வூட்டோட எந்த வம்பும் வெச்சுக்காதீங்கய்யா‌.  இந்தப் பகையும், ரத்தமும் என்னோட போகட்டும்.” என்றார் ஆறுமுகம்.

“நீங்க இவ்ளோ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லப்பா. போதுனு சொல்ற அளவுக்கு இத்தினி வருசம் கஷ்டத்த அனுபவிச்சிட்டீய்ங்க. இனியாது  நீங்க சந்தோசமா இருங்க. அதுக்கான வேலையத்தா தீவிரமா பாத்துக்கிட்டு இருக்க. என்னா நடந்தாலும் சரி ஆரு எதிர்த்து நின்னாலும் சரி உங்களை வெளிய எடுத்து வந்தே தீருவ.”

“அந்த தப்ப மட்டும் பண்ணிடாதய்யா. கொலை பண்ணவன் ஊருக்குள்ள சுதந்திரமா சுத்தி திரிஞ்சா பாதிக்கப்பட்டவங்க ஆத்திரம் இன்னும் அதிகமா போவும். செஞ்ச தப்புக்காக என்னை ஏதாச்சும் பண்ணா பரவால. என் புள்ளைங்க உங்களை ஒன்னு பண்ணிட கூடாதுய்யா.”

“ஆரு என்னா பண்ணிட போறாங்கப்பா”

“இந்த மாதிரி யோசிக்காதையா அது நம்ம வம்சத்துக்கு நல்லது இல்ல. முதல்ல நம்ம பரம்பரை தொழில் அந்த பம்ப அடிக்குறதை வுட்டுடு. அதனால வந்த பிரச்சனைதா இது எல்லாமே. தொழில் போட்டி குடும்பப் போட்டினு இங்க வந்து நிற்குற.” எனும் பொழுது கண்கலங்கினார் ஆறுமுகம்.

தினமும் நடக்கும் போர்க்களத்தை எப்படி தந்தையிடம் செல்வது என்று தடுமாறியவன், “அதுலா ஒன்னு இல்லப்பா நீங்க வெசனப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீய்ங்க. எப்படியாது இந்த தடவ வரும்போது உங்களை வெளிய எடுத்துடுற.” என்ற ஆறுதலோடு புறப்பட்டான்.

மகனை வழிய அனுப்பி வைத்தவர் சிறைக்குள் இருக்கும் சுவரில் தலை சாய்ந்து கண் மூடினார். உடனே வந்தது கடைசியாக வெள்ளை வேட்டி சட்டையில் மினுக்காக திருவிழாக்கு கிளம்பிய தருணம். ஆகிவிட்டது இன்றோடு வருடம் ஏழு.

நிழல் படங்களுக்கு எண்ணம் கொடுத்து அன்றைய நிகழ்வுக்கு சென்றவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் சண்முகமும் வாக்குவாதம் செய்ய, நடுவில் இருவரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தார் முருகேசன்.

அண்ணன் தம்பி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இடம் அவர்களின் குடும்பத் தொழிலான பம்பை உடுக்கை தயாரிக்கும் குலதெய்வ கோவிலின் பின்புறம். காலம் காலமாக இந்த குடும்பம் பம்பை அடிக்கும் தொழிலை செய்து வருகிறது. இதே இடம் தான் பகைக்கும் காரணமாக அமையும்.

சண்முகம் ஆத்திரத்தோடு அருவாளை தூக்க, அதற்கு முன்னரே ஆறுமுகம் பம்பைக்கு நூல் உடைக்கும் கூர்மையான ஊசியை கையில் எடுத்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆவேசமாக தாக்க வர, மனைவியின் சகோதரர்கள் இருவரையும் தடுக்க வந்தார் முருகேசன்.

ஆத்திரம் சுயநினைவை இழக்க வைக்க,சகோதரர்கள் 
வெட்டிக்கொள்ள கையில் இருப்பதை உயர்த்தினார்கள். பலத்த சூறாவளி காற்று உருவானது அங்கு. காய்ந்த இறகுகளும் மரத்தில் இருந்த பச்சை இலைகளும் அசுர வேகத்தில் அவர்கள் மீது கொட்டியது. புழுதிக்கு பஞ்சம் இல்லாத இடத்தில் மூவரும் தங்களை மறந்து கண்களை மூட, “அம்ம்மாமா” என்ற பெரும் அதிர்வோடு நிலத்தில் விழுந்தார் முருகேசன்.

அந்த சத்தத்திற்கு பின் புழுதிகள் அனைத்தும் அடங்கிவிட்டது. பேயாட்டம் போட்ட ஆலமரம் அமைதியின் சொரூபமாக மாறிவிட, காய்ந்த சருகுகள் இருந்த இடம் தெரியாமல் அடங்கி விட்டது. கையில் எடுத்த ஆயுதம் எதிரில் இருந்த சகோதரனை உயிர்பலி வாங்கி விட்டது என்று சகோதரர்கள் இருவரும் விழி திறக்க, ரத்த வெள்ளத்தில் கிடந்தார் முருகேசன்.

திடுக்கிட்ட சகோதரர்கள் இருவரும் அவரை எழுப்ப முயற்சிக்க, ஒரு நொடியில் பிரிந்த உயிர் வெறும் உடலை மட்டுமே பதிலாக கொடுத்தது.

****

“அப்பா இன்னும் மூணு நாளுல வழக்கு விசாரணைக்கு வருது. இந்த தடவ நீங்க நிச்சயம் வூட்டுக்கு வந்துடுவிங்க.” என்ற மூத்த மகனை பலம் இல்லாமல் பார்த்தார் சண்முகம்.

தந்தையின் பார்வையை வைத்தே உள்ளுக்குள் இருக்கும் பயத்தை அறிந்தவன், “உங்க உசுரு அவ்ளோ சீக்கிரம் எங்களை வுட்டு போய்டாது. அப்டியே போனாலும் அது நம்ம வூட்லதா போவும்.” என்றான்.

“எனக்கு நம்பிக்கை இல்லய்யா. ஒரு நொடி ஆத்திரத்துல ஏழு வருசத்தை ஜெயிலுக்குள்ள கழிச்சிட்ட. இதுக்கு மேல வெளிய வந்து என்னா பண்ண போற. என்னோட சாவு இந்த குடும்பப் பகைக்கு முடிவா இருக்கட்டும்.”

“நம்பிக்கை இல்லாம பேசாதீய்ங்க ப்பா. நம்ம குலசாமி
நிச்சயம் காப்பாத்தும்.”

“அந்த நம்பிக்கைய கைவுட்டு ரொம்ப வருசம் ஆவுது. குலசாமி இல்ல அது வெறும் சிலை மட்டுதா. முடிஞ்சா எல்லாரும் அங்க இருந்து வந்திடுங்ங.”

“சாமிய பழிக்காதீய்க அது நம்ம வம்சத்துக்கு நல்லது இல்ல. குலசாமி தொழிலுதா உங்க மகனை உலகறிய வெச்சிருக்கு. பம்பை உடுக்கை வெறும் கோவில் திருவிழாக்கு மட்டும்னு பாத்த இந்த உலகம் இப்போ ஒரு கலையா பாக்குது. சோறு போடுற குலசாமிய மறந்துட்டு எங்க போக சொல்றீங்க.”

“உங்க தலைமுறைல ஒரு சாவு விழக்கூடாதுனு நெனைச்சீங்கன்னா வெளிய வந்துடுங்க. முன்னோர்கள் காலத்துல இருந்து அந்த எடத்துல ஒரு உயிரு போவுது. அதுவும் ரத்தம் பாத்து தான் மண்ணுல சரியுது. புள்ளைங்க உங்களுக்கு என்னா ஆகும்னு நெனச்சாலே பயமா இருக்கு.”

“நீங்க பண்ண தப்புக்கு சாமி மேல பழி போடாதீய்ங்க. தாத்தா தப்பு பண்ணாரு அதுக்கான தண்டனைய சாமி குடுத்துச்சு. நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு நின்னதுக்கு தான் இப்போ இங்க இருக்க வெச்சிருக்கு.”

“சொன்னா புரியாதுய்யா ஒரு நாளு கண்கூட நீயே அத பாப்ப.”

“உங்க அளவுக்கு புத்தி மட்டு நா நடந்துக்க மாட்ட. அதே மாதிரிதா என் தம்பிகளையும் வளர்த்து வச்சிருக்க. அந்த மாதிரி ஒரு சாவு எங்க கிட்ட வராது.” என்றவன் தந்தைக்கு உரிய மகனாக ஆறுதல் சொல்லி புறப்பட்டான் வருங்காலத்தில் அவனே குற்றவாளியாக நிற்கப் போவதை அறியாமல்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்