ஹாய் டியர் பிரெண்ட்ஸ்… புது வருடத் தொடக்கமாக பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் 9 க்கான கதையுடன் வந்துட்டேன். மார்ச் 10 க்குள்ள முடிக்கணும்ன்ற வேகத்துல வந்துருக்கேன். குறுக்க எந்த மண் லாரியும் வரக்கூடாது. 😉 சஸ்பென்ஸ் thriller, investigation love comedy நிறைந்த fun package aa இருக்கும் nu namburen drs… எப்பவும் போல உங்க ஆதரவுடன் ஸ்டார்ட் பண்றேன்😍 பிரஷாந்த் ஸ்டோரி வாரம் ரெண்டு யூடி போடுறேன். இந்தக் கதை முடிக்க முடிக்க போஸ்ட் போட்டு விடுறேன்… 🥰
அத்தியாயம் 1
மோகமடி நீ எனக்கு
கலையும் மேகமடி நானுனக்கு
“திருமணம்னாலே அது சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுறது தான்.
அங்கு நிச்சயிக்கப்பட்ட இணைகளை
இங்கு இணைப்பது உங்கள் வி.யூ மேட்ரிமோனி…
உங்களுக்கென ஏற்கனவே கடவுள் அமைத்து வைத்த
துணையைத் தேடித் தருவதே எங்களின் பணி…
0101001 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தாலே போதும்
உங்களைத் தொடர்பு கொண்டு உங்களது வீட்டிற்கே வந்து விபரங்களை சேகரித்துக் கொள்வோம்.
பெண் தேடி, மாப்பிள்ளை தேடி ஓய்ந்து போனவர்கள் இனி எதற்கும் அலையத் தேவையில்லை.
நேர விரயம், வீண் பண விரயமின்றி ஒரே ஒரு முறை பணம் செலுத்தினாலே போதும். உங்களது எதிர்பார்ப்பிற்கு தகுந்த படியான சிறந்த மணமகனை அல்லது மணமகளை வி. யூ மேட்ரிமோனி உங்கள் கண் முன்னே நிற்க வைத்து விடும். இதுவரை வி. யூ மேட்ரிமோனி மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று உள்ளது. கால் பண்ண மறந்துடாதீங்க. சாரி மிஸ்ட் கால் பண்ண மறந்துடாதீங்க…”
உதட்டுச் சாயம் அழியாமல் விளம்பர இயக்குனர் எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசி முடித்த விளம்பர மாடல் பெண்ணை அதிருப்தியுடன் பார்த்தாள் விஸ்வயுகா.
சிவப்பில் கருநீலம் தோய்த்த சல்வாரின் ஒரு பகுதி முழுக்க துப்பட்டா பரவி இருந்தது. ஒற்றையாக பரவிய துப்பட்டாவை ஒரு கையில் தாங்கிக் கொண்ட பாவையின் அடர்ந்த புருவங்கள் திருப்படாமலேயே திருத்தமாய் அமைந்திருந்தது.
அலையான அடர் கேசத்தினை பின்னலிட்டு இருந்தவள், காதை ஒட்டிய சிறு வைரத்தோடும் கண்ணை உறுத்தாத மெல்லிய செயினும், ஒரு கையில் தங்கக் காப்பும், மற்றொரு கையில் பிராண்டட் கடிகாரமும் அணிந்திருந்தாள்.
பார்க்க எளிமையாய் தோன்றும் ஆபரணங்களின் விலை லட்சங்களைக் கடந்து கோடிகளைத் தொட்டு விடும் அளவு விலையுயர்ந்தது.
நேராக விளம்பர இயக்குனரிடம் சென்ற விஸ்வயுகா, “எனக்கு இந்த ஆட் அவ்ளோ திருப்தியா இல்லை மிஸ்டர் நாகேந்திரன். அந்தப் பொண்ணு பேசுறதே ஏதோ அவள் ஆளோட கொஞ்சுற மாதிரி இருக்கு. எனக்கு போல்ட் அண்ட் ஸ்வீட் மாடுலேஷன் வேணும்!” என்றாள் கட் அண்ட் ரைட்டாக.
அவளைக் கண்டதும் மரியாதை நிமித்தம் எழுந்து விட்ட நாகேந்திரன், “டப்பிங்ல மேனேஜ் பண்ணிடலாம் மேடம். ஆடிஷன்ல இந்தப் பொண்ணு தான் பார்க்க நம்ம மேட்ரிமோனி சைட்டுக்கு மேட்ச் அப்பியரன்ஸோட இருந்தா. உங்களுக்கு பைனல் அவுட்புட் தரமா வந்துடும் மேடம். அதுக்கு நான் கேரண்ட்டி” என்றார்.
அவரை அசட்டையாகப் பார்த்தவள், “அப்படி அவுட்புட் தரமா வரலைன்னா, நான் வேற தரமான டைரக்டரை தேட வேண்டியது இருக்கும். மைண்ட் இட்” என்று உறுதியாய் கூறி விட்டு விறுவிறுவென வெளியில் செல்ல, அறைக்கு வெளியில் மறைந்திருந்த ஒரு உருவம் அவள் வாசலுக்கு வந்ததும், “பே” எனக் குதித்து அவள் முன் நின்றது.
அத்தனை நேரமும் கம்பீரத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த விஸ்வயுகா, “ஆ” என அலறித் துள்ளினாள்.
அவளது துள்ளலில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் மைத்ரேயன்.
“தி பெஸ்ட் வி. யூ மேட்ரிமோனியோட தி க்ரேட் சேர்மன், இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்குறது வெளில தெரிஞ்சா உன் மானம் போகுறது மட்டுமில்லாம, ‘எம்.டி’ யான என் மானமும் காத்துல பறக்கும்” என்று பறப்பது போல சைகை காட்டினான்.
28 வயது நிரம்பிய வாலிபன். குறும்பும் வனப்பும் நிறைந்தவன். விஸ்வயுகாவின் ஆருயிர் தோழன். குழந்தைப் பருவம் முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள்.
விஸ்வயுகா நெஞ்சில் கரம் வைத்து படபடத்த இதயத்தை சமன்படுத்திவிட்டு, பின் யாரும் கேட்டு விடுவார்களோ என்ற பதற்றத்தில் அவனைத் தரதரவென இழுத்துக்கொண்டு காருக்குச் சென்றாள்.
“அடேய் மைதா மாவு… ஆட் ஷூட்டிங் நடக்குற இடத்துல இப்படி என் இமேஜை டேமேஜ் பண்றியே, அதுக்கு அப்பறம் எவனாவது என்னை மதிப்பானாடா. பிசாசு மாதிரி மறைஞ்சு நின்னு பயமுறுத்துனா பயப்பட மாட்டாங்களா” என்று அவன் தோளிலேயே பட்டென அடிக்க,
அடியை வாங்கிக்கொண்டாலும் தடுப்பது போல பாவனை செய்த மைத்ரேயன், “பயப்படலாம் விஸ்வு தப்பில்ல. இருட்டா இருந்தா பயப்படலாம். தனியா இருக்கும் போது பயமுறுத்துனா கூட ஓகே தான். பட்டப் பகலுல சும்மா லுலுவாய்க்கு பண்ணுனதுக்கே பயந்து ப்ரீஸ் ஆகிட்டியே” என வாய்விட்டு சிரிக்க,
“மூடு!” என்று சைகை காட்டியவள், காரை நேராக அவளது பங்களாவிற்குச் செலுத்தினாள்.
விஸ்வயுகாவின் பங்களாவே திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. பரம்பரைப் பணக்காரக் குடும்பம் அவளுடையது. அன்னை சிவகாமி, தந்தை மோகன், பெரிய மகன் நந்தேஷ். மோகனின் பெற்றோர்கள் சில காலத்திற்கு முன் காலமாகி விட, அவரது தம்பிகளுடன் கூட்டுக் குடும்பத்தை தான் நடத்தி வருகிறார்.
சொத்துப் பிரித்தல் என்கிற பிரச்சனை வரவே கூடாது என்ற எண்ணத்தில், ஆளுக்கொரு தொழிலில் காலூன்றி அதில் உச்சத்தில் இருக்கின்றனர்.
மோகனுக்கு மீன், இறால் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில்.
அவரை அடுத்த அசோக் ஆட்டோமொபைல் உதிரி பாகம் தயாரித்தலை தொழிலாக கொண்டுள்ளார். அவரது மனைவி காயத்ரி, ஒற்றை மகள் ஷைலேந்தரி.
கடைசி தம்பி சௌந்தர். பிரபல பத்திரிகை ஒன்றை நிறுவி கவனித்து வருகிறார். எழுத்தாளரும் கூட. அவரது மனைவி அஸ்வினி, சில வருடங்களுக்கு முன் இறந்து விட, பிள்ளைச் செல்வம் இல்லாததால் விஸ்வயுகாவை அவர்களது மகளாகவே தான் வளர்த்தனர். அஸ்வினியின் மரணம் விஸ்வயுகாவைப் பல விதத்தில் பாதித்ததில் மறுப்பேதும் இல்லை.
—–
“தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தேமா தேமா தேமா தேமா தேமா…”
எல்.ஐ.கே படத்தில் வரும் தீமா பாடலை தன் போக்கில் பாடியபடி அன்னை சிவகாமியின் பட்டுப்புடவையின் கீழ்பக்க ப்ளீட்ஸ் கசங்காமல் இருக்க, ஹேர் ஸ்ட்ரெய்ட்னரின் உதவியுடன் செட் செய்து கொண்டிருந்தான் நந்தேஷ்.
வாய் மட்டும் தீமா தேமாவை நிறுத்தவில்லை. அந்நேரம் அறைக்குள் புகுந்த ஷைலேந்தரி, “புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா…” என்று யாப்பிலக்கண சீர்களை இணைத்துப் பாடி அவனைக் கேலி செய்ததில் நந்தேஷ் நிமிர்ந்து முறைத்தான்.
அவனை எதிர்த்து முறைத்தவள், “பரதேசி அது தீமா மட்டும் தான் தேமா இல்ல” என்று வாரிட, சிவகாமி மகளைக் கடிந்தார்.
“இது என்ன மரியாதை இல்லாத வார்த்தை ஷைலு. எங்க இருந்து கத்துக்கிட்ட இதெல்லாம்” என்று அதட்ட,
“எல்லாம் நீங்க பெத்த பொண்ணுக்கிட்ட இருந்து தான்” என முணுமுணுத்தாள் ஷைலேந்தரி.
“என்னது?” சிவகாமி முறைப்புடன் கேட்க,
“ஐயோ பெரிம்மா. நீங்க பரதேசின்ற வார்தையைத் தப்பா புருஞ்சுக்கிட்டீங்க. பரதேசின்னா, அயல் நாட்டுல இருந்து வந்திருப்பவர்னு அர்த்தம். நம்ம நந்து அண்ணா லாஸ்ட் டூ இயர்ஸா எங்க இருந்தாங்க. பிரான்ஸ்ல இருந்தாங்க. சோ அயல் நாட்டுல இருந்து தேசம் விட்டு தேசம் வந்த பஞ்ச பூதங்களை அடிக்கியாளும் வலிமை மிக்க ஒருவர் இந்த பஞ்சப் பரதேசின்னு மரியாதையா தான் பேசுனேன், அப்படித்தான அண்ணா…” என்று பவ்யமாய் நந்தேஷின் முன் குனிந்தாள்.
அவள் சிந்திய நக்கல் சிரிப்பை தமையன் அறியமாட்டானா என்ன? தாயின் இருப்பை உணர்ந்து பல்லைக்கடித்திருந்தவன், “நீ சொன்னா சரிதான் தங்கச்சி” என்றான் ரகசிய முறைப்புடன்.
சிவகாமி தான், “சும்மா வாயடிக்காம உன் அக்கா வந்துட்டாளான்னு போய் பாரு. வீட்டுப் பெரியவங்களே இன்னைக்கு அவங்க அவங்க வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கும் போது இவளுக்கு மட்டும் அப்படி என்ன வேலை வருமோ…” என்று சிடுசிடுத்தார்.
நந்தேஷ் எழுந்து, “வந்துடுவாம்மா, ஆட் ஷூட் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா. நீங்க ரெடி ஆகி வாங்க சீக்கிரம். கேக் கட் பண்ணலாம்” என்று விட்டு, தங்கையை கையோடு வெளியில் அழைத்துச் சென்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
“நான் பரதேசின்னா, நீ பஞ்சத்துல இருக்குறவங்ககிட்ட பிச்சை எடுக்குற பஞ்ச பஞ்ச பரதேசிடி” என்று நந்தேஷ் வாய்க்கு வந்த படி திட்ட,
“சே சே… பாரீன் ரிட்டர்ன் மாதிரியா பேசுற. வாயைத் திறந்தா காவா தான் ஓடுது. இதுல உங்க அம்மா வந்துடுச்சு எனக்கு அறிவுரை சொல்ல” என இருவரும் சண்டையிட்டபடி கீழே இறங்க, அங்கு விஸ்வயுகாவும் மைத்ரேயனும் வந்து விட்டனர்.
“இந்தா அடுத்த பரதேசி வந்துடுச்சு…: என்று ஷைலு மைத்ரேயனைக் கை காட்ட,
“ஏய் ஷைலா உனக்கு லந்து அதிகமாகிடுச்சு” என மிரட்டியதில்,
“அந்த ஜந்துக்கு அது மட்டும் தான இருக்கு” என்று கிண்டலடித்தாள் விஸ்வயுகா.
அவர்களது உரையாடல் தொடரும் முன்னே, மோகன் பட்டு வேஷ்டி சட்டையில் வந்தவர், “என்ன நின்னு அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க. விஸ்வாம்மா நீ கிளம்பலையா?” என்று மகளிடம் கேட்டு விட்டு, “வா மைத்ரா. வீட்ல யாரும் வரலையா?” என்று கேட்டார்.
“இல்ல அங்கிள். அப்பா பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு. அம்மா வேறொரு பங்க்ஷன்க்கு போயிருக்காங்க” என்றிட அந்நேரம் அசோக்கும் காயத்ரியும் அங்கு வந்து விட்டனர். சிவகாமியும் வந்து விட, அவர்கள் முன் நான்கு அடுக்கு கொண்ட பெரிய அளவு கேக் ஒன்று அழகாய் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது.
அதில், “ஹேப்பி வெடிங் அனிவர்சரி மம்மி அண்ட் டேடி” என்று எழுதி இருக்க,
சிவகாமி “இது என்ன சின்னப் பசங்களுக்கு எழுதுற மாதிரி… கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துருக்கலாம்ல” என்று சிறியவர்களிடம் குறைபட்டாலும், அவர் முகம் மலர்ந்திருந்தது.
காயத்ரி தான், “இன்னும் நீங்க சின்னப் பொண்ணு மாதிரி தான் அக்கா யங்கா இருக்கீங்க. பசங்க ஆசைப்பட்டு ரெடி பண்ணிருக்காங்கள்ல கட் பண்ணுங்க” என்றிட, விஸ்வயுகா நெற்றியை தேய்த்தாள்.
அருகில் நின்ற ஷைலேந்தரியிடம் “உங்க அம்மா உருட்டுன உருட்டுல சிவகாமி சரித்திரமே ஆடிப்போச்சுடி ஷைலு” என்று முணுமுணுக்க, வெடித்து வந்த சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டவள், “லாஸ்ட் வீக் கூட என் மம்மி உன் மம்மியை குந்தாணின்னு திட்டுனாங்க விஸ்வு” என்றாள் கிண்டலுடன்.
விஸ்வயுகா “கிளுக்” என சிரித்து விட மொத்த குடும்பமும் அவளைப் பார்த்தது.
“மாட்டிக்கிட்ட பங்கு…” என்ற ரீதியில் நந்தேஷும் மைத்ரேயனும் பார்க்க,
“அய்யயோ சமாளிடி சமாளி” எனத் தன்னைத் தானே தேற்றியவள், தேவையே இல்லாமல் “ஹா ஹா” என வாய் விட்டுச் சிரித்தாள்.
அதில் சிவகாமியின் உஷ்ணப்பார்வை அதிகரிக்க, ஷைலு தான், “ஆத்தாடி உங்க அம்மா திட்டும்ன்ற பயத்துல உன் தங்கச்சிக்கு கிறுக்கு பிடிச்சுடுச்சுடா நந்து” என்று நந்தேஷிடம் கிசுகிசுத்தவளை அடக்கிய மைத்ரேயன்,
“அடி பைத்தியமே கேக் கட் பண்ணப் போற நேரத்துல எதுக்கு சிரிக்கிற?” என்றான் அடிக்குரலில்.
“எல்லாம் இந்த ஷைலுவால தான்டா மைதா” என்று ஷைலேந்தரியைக் கோர்த்து விட, இப்போது சிவகாமியின் பார்வை அவளைத் தொட்டதில்,
“ஐயோ பெரியம்மா, நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு ஏன் உங்க பொண்ணு சிரிக்கிறான்னு சத்தியமா எனக்குத்
தெரியல…” என்று பந்தை அவள் புறம் எறிய, சமாளிக்கத் தெரியாமல் இன்னும் சிரித்துக் கொண்டிருந்த விஸ்வயுகாவோ ‘சிரிப்பை நிறுத்துனா செத்தேன் நானு’ என்று மிரண்டாள்.
நொடியில் காரணம் யோசித்தவள், “அது வந்து ம்மா… இப்ப மட்டும் நம்ம மேட்ரிமோனில உங்க ப்ரொபைல் குடுத்தா எவ்ளோ பேர் ரெகுவெஸ்ட் அனுப்புவாங்கன்னு யோசிச்சேனா, அப்போ அப்பாவோட நிலைமை என்ன ஆகும்னு சொல்லுங்க. அதான் இவர் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்… ஹா ஹா சிரிப்பை அடக்க முடியல…” என்று வராத சிரிப்பை வாய் விட்டு வரவைத்துக் கொண்டிருந்தாள்.
நந்தேஷ் தான் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு, “ஏன்டா மைதா… போன வாரம் என் ப்ரொபைலைக் குடுத்ததுக்கே ஒரு நாதாரியும் வரக்காணோம். இதுல எங்க அம்மா போட்டோவைப் போட்டா கம்பெனியை இழுத்து மூட வேண்டியது தான்…” என்றிட,
ஷைலுவும் “ம்ம்க்கும், இப்ப மட்டும் பெரியப்பா மேட்ரிமோனி தேடி வந்துருந்தா பர்ஸ்ட் ரிஜெக்ட் பண்றது பெரிம்மாவையா தான் இருக்கும் நந்து. அவங்க முறைக்கிற முறையிலேயே மனுஷன் ஓடிருப்பாரு” என உதட்டைக் கடித்து கலாய்க்க, மைத்ரேயனோ “ஐயோ விழாவை சிறப்பிக்க வந்தா, நீங்க எப்பவும் போல என் விலாவை சிறப்பிக்கவே வாய் ஓயாம பேசுறீங்களே. ஒரு அஞ்சு நிமிஷம் சும்மா தான் இருங்களேன் பிசாசுக்குட்டிகளா” என்று பரிதாபமாகக் கெஞ்சினான்.
மோகன் விஸ்வயுகாவைக் கண்டித்து, “எவ்ளோ பேர் ரெகுவெஸ்ட் குடுத்தாலும் என் சிவகாமி என்னை தான் செலக்ட் பண்ணுவா. நானும் அவளைத் தான் செலக்ட் பண்ணுவேன். இது என்ன அம்மாவை கிண்டல் பண்ணிக்கிட்டு…” என்றிட,
“உருட்டு நம்பர் 2!” எனத் தனக்கு தானே கூறிக்கொண்ட விஸ்வயுகா, “சரி சரி கேக் கட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க. ஐஸ் கேக் வேற உருகி ஓடிட போகுது…” என்றதும் இருவரும் ஒன்றாக கேக்கை வெட்ட வரும் போது, அவளே தடுத்தாள்.
“அம்மா அப்பா ஒரு நிமிஷம்” என்றவளின் கத்தலில் சிறியவர்கள் மூவரும் ‘ஒரு கேக்குக்கு இந்த கிரகத்தோட போராட வேண்டியது இருக்கு’ என்ற ரீதியில் முறைத்தனர்.
அத்தியாயம் 2
“அப்பா, சௌந்தர் சித்தப்பா எங்க?” என விஸ்வயுகா கேட்க, “அவன் வீட்ல இல்லை போலம்மா” என்றார் மோகன்.
“ப்ச், சித்தப்பாவோட கார் வெளில நிக்குதே. நீங்க யாரும் கூப்பிடலையா?” என்றவளின் முகத்தில் விளையாட்டுத்தனம் மறைந்து கம்பீரம் மீண்டிருந்தது.
காயத்ரி, “நேத்தே சொல்லியாச்சு விஸ்வா…” என்று கூறிட, “நேத்து சொன்னீங்க சரி… இப்போ கூப்பிடலையா?” என்று அடர்ந்த புருவத்தை சுருக்க, அசோக் “அவன் அடிக்கடி நம்ம ரூம்க்கு வர்றதை விரும்ப மாட்டான்னு தெரியும்ல” என்றதும்,
“அதுக்காக பங்க்ஷன்க்கு கேக் கட் பண்ற டைம்க்கு முன்னாடி கூப்பிட முடியாதா இங்க யாராலயும்…” என்றாள் காட்டமாக.
சிவகாமி அவளை எதிர்த்து பேச வரும் முன்னே, அவரை நோக்கி நெருப்புப் பார்வை வீசியதில், சிவகாமி தன்னிச்சையாக அமைதியாகி விட்டார்.
“ஏய் ஷைலு நீ வீட்ல தான் இருந்த… சித்தப்பாவை கூப்பிட முடியாதா?” என்று தங்கையை அதட்ட, அவளும் விளையாட்டை கை விட்டு விட்டு, “இல்ல விஸ்வு நான் கூப்பிட தான் போனேன். பெரிம்மா தான் ஆல்ரெடி சொல்லியாச்சுல. சோ அவரே விருப்பம் இருந்தா வரட்டும்னு சொல்லிட்டாங்க. ரெண்டே நிமிஷம் இப்போ போய் கூட்டிட்டு வந்துடுறேன். சில் அவுட்” என்று தமக்கையை சமன்செய்து வேகமாக மாடி ஏறினாள்.
அதற்கும் சிவகாமியை அவள் தீப்பார்வை பார்க்க, மோகனோ “வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்கு அவனா தான் கலந்துக்கணும். ஒவ்வொரு தடவையும் நம்ம கெஞ்சிக்கிட்டே இருக்க முடியாது விஸ்வா” என்றதும்,
“இந்த டயலாக் உங்க ஓன் டெலிவரியா? இல்ல யாரும் சொல்லி கேட்டு இங்க டெலிவர் பண்றீங்களாப்பா?” என்றவளின் அழுத்தம் மிகுந்த தோரணை அவரையும் வாயடைக்க வைத்தது.
அவளுக்குத் தெரியும். சௌந்தரின் மீது தாய்க்கு சிறு மனக்கசப்பு இருக்கிறதென்று. அஸ்வினி இறந்ததில் இருந்தே அனைத்தில் இருந்தும் அவராக ஒதுங்கிக் கொண்டார். விஸ்வயுகாவை வளர்க்கும் கடமையில் இருந்தும்!
ஆனால் அவள் மீதுள்ள பாசம் எப்போதும் குறைந்ததில்லை. அவளுக்கும் தான். ஆனால் அவளுக்கு அது மட்டும் போதவில்லை. சௌந்தரைக் கூட்டில் இருந்து வர வைக்க பெரும் போராட்டம் செய்தும் எதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.
சில நிமிடங்களில் சௌந்தர் அங்கு வந்திருந்தார்.
“அடடா எனக்காகவா வெய்ட் பண்றீங்க… ஒரு மாகசின் ஒர்க்ல மூழ்கி நேரத்தைப் பார்க்காம விட்டுட்டேன். நீங்க கேக் கட் பண்ணிருப்பீங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போதே, ஷைலு வந்துட்டா…” என்றவரின் கையில் சிறு பரிசுப்பொருளும் இருந்தது.
“ஹேப்பி வெடிங் அனிவர்சரி அண்ணா, அண்ணி உங்களுக்கும் தான்…” என்று கொடுக்க, “எதுக்கு இந்த பார்மாலிட்டி எல்லாம். நீ எங்க முன்னாடி வந்து நின்னாலே போதுமேடா” என்று மோகன் நெகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார்.
மறந்தும் மகளை நிமிர்ந்து பார்க்கவில்லை. சிவகாமியும் தான். பல நேரங்களில் சிவகாமியின் அதட்டலுக்கு பயந்து குறும்புத்தனம் செய்பவள், சில நேரங்களில் அந்த வீட்டையே ஆட்டிப்படைப்பாள். அவளை எதிர்நோக்க சிவகாமியால் கூட இயலாது.
ஒருவர் மாற்றி ஒருவர் திட்டுக்கொள்ளும் இளையவர்களும் கூட, விஸ்வயுகாவின் சிறு கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு விடுவர்.
அவளது ஆளுமையின் முன் அங்கு யாருடைய வாதமும் செல்லுபடியாகாது. அதே நேரம் அவள் எடுக்கும் முடிவுகளும் தெள்ளந்தெளிவாக இருக்கும்.
கல்லூரி முடித்த கையோடு, மேட்ரிமோனி தொழில் தொடங்கப்போவதாகக் கூறிய விஸ்வயுகாவை குடும்பமே முறைத்துப் பார்த்தது.
அவளுக்கு படிப்பும் நடுநிலையாகத் தான் இருக்கும். கணக்கிலும் அறிவியலிலும் புகுந்து விளையாடும் அளவு திறன் தனக்கு இல்லை என்பதை அவளே உணர்ந்து, தனக்கானப் பாதையைத் தேடும் போதே யூனிக்கான தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. அப்போது மேட்ரிமோனி பற்றிய தெளிவும் குறைவாக இருந்திட, அதிலேயே புதுமையைப் புகுத்தி இந்தியா எங்கிலும் கிளைத் தொடங்கி விட வேண்டுமென்ற உத்வேகம் இருந்தது.
மைத்ரேயனும் பி.டெக் ஐடி அப்போது தான் முடித்திருக்க, அவளுக்காக வெப்சைட்டை தானே செய்து தருவதாகக் கூறி அவளது தொழிலுடன் இணைந்து கொண்டான்.
விஸ்வயுகாவை விட இரு வயது மூத்தவன் மைத்ரேயன். அவனுக்கும் நந்தேஷிற்கும் ஒரே வயது தான். அதே போல விஸ்வயுகாவை விட ஆறு மாதங்கள் இளையவள் ஷைலேந்தரி.
அவளும் பொறியியல் படித்திருந்ததால், படித்து முடித்தபின், மைத்ரேயனுடன் மேட்ரிமோனிக்கான ஆப் தயாரிப்பதில் இறங்கி விட்டாள்.
நந்தேஷ், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் படித்து விட்டு தங்கையின் மேட்ரிமோனியுடனே இணைந்து தொழில் தொடங்கினான். திருமணம், ஆபிஸ் மீட்டிங், பர்த்டே பார்ட்டி, அதற்கான ஏ டூ இசட் அரேஞ்ச்மென்ட்ஸ் செய்து கொடுப்பதற்கான தொழிலையும் நால்வரும் சேர்ந்தே பார்த்தனர்.
மெல்ல மெல்ல மேட்ரிமோனி தொழில் முன்னேறி, இப்போது தமிழ்நாட்டின் நம்பத்தகுந்த முதல் இடத்தில் இருக்கிறது. நந்தேஷிற்கும் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க ஆசை இருக்க, கடைசி இரு வருடங்களில் தொழிலை தங்கைகள் மற்றும் நண்பனின் பொறுப்பில் விட்டுவிட்டு படித்து முடித்து வந்தான்.
இப்போது நால்வருமே ஒன்றாகவே இரு தொழிலையும் பார்த்துக் கொள்கின்றனர்.
திருமண நாள் கொண்டாட்டம் நன்முறையில் முடிந்திட மறுநாள் அலுவலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஒரு புறம் ஐடி டீம், மற்றொரு புறம் கஸ்டமர்கேர் சர்விஸ் என வேலைகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க, விஸ்வயுகா அனைத்து டிபார்ட்மென்ட் ஹெட் மேனேஜர்களை இணைத்து மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தாள்.
பிரமாண்ட மீட்டிங் ஹாலின் நடுவே பெண் சிங்கத்தின் தோரணையுடன் மஞ்சள் நிற அனார்கலியில் அழகுப் பதுமையாய் நின்றிருந்தாள் விஸ்வயுகா.
அவளுக்குப் பின் பக்கம் ப்ரொஜெக்டர் ஓடிக்கொண்டிருக்க, “வெல்கம் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். லாஸ்ட் 2 வீக்ஸா கஸ்டமர்ஸ் குடுக்குற மிஸ் கால்க்கு லேட்டான ரெஸ்பான்ஸ் கிடைக்குதுன்னு சொல்றாங்க. ஸ்டாப் பற்றாக்குறை தான் ப்ராப்ளம்னா, அதை இன்னைக்கே நான் சரி பண்ணிடுவேன். இன்னொரு முறை எனக்கு இந்த கம்பளைண்ட் வரக்கூடாது. வந்தா, டெலி கம்யூனிகேஷன் ஹெட் வேலையை இழக்க வேண்டியது இருக்கும்” என்றதும், அந்த டிபார்ட்மென்ட் ஹெட் சந்தானம் பதற்றத்துடன் எழுந்தார்.
“இனி இந்த கம்பளைண்ட் வராது மேம்…” என வேகமாக கூற, “ம்ம்” என்று ரெட்டை விரலை ஆட்டி அமரக் கூறியவள்,
“தென், ஒரு ப்ரோபைலை நம்ம சைட்ல அப்லோட் பண்றதுக்கு முன்னாடி, ஒரு தடவைக்கு பத்து தடவை பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் பண்ணிக்கோங்க. இதுவரை நம்ம மேட்ரிமோனில ஒரு ஃபேக் ப்ரொபைல் கூட இருந்தது இல்லை. இனியும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மீட்டிங்லயும் உங்கக்கிட்ட அழுத்திச் சொல்ற ஒரு விஷயம் இது தான். அண்ட், கஸ்டமர்ஸை நேரடியா அப்ரோச் பண்ணும் போது, என்ன மாதிரியான வார்த்தைகள் தேர்ந்தெடுக்கணும், என்ன மாதிரியான உடை அணியனும், ஈவன் ஹேர் கட்டிங், ட்ரிம்மிங் இதெல்லாம் நோட் பண்ணிட்டு தான், மார்க்கெட்டிங் எக்சிகியூடிவை கஸ்டமர்ஸ மீட் பண்ண அனுப்பனும்.
டூ டேஸ்க்கு முன்னாடி, ஒரு மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் கஸ்டமர்ஸ்கிட்ட ரூடா பிஹேவ் பண்ணுனதா கம்பளைண்ட் வந்துருக்கு. அந்த எக்ஸிகியூடிவை ஃபயர் பண்ணியாச்சு. பட் இன்னொரு டைம் உங்க தலைமைக்கு கீழ இருக்குற எக்சிகியூடிவ்ஸ் தவறா பிஹேவ் பண்ணுனா, அவங்களோட வேலை மட்டும் இல்ல உங்களோட வேலையும் சேர்ந்து போகும், வித் பிளாக் மார்க்” என்று அழுத்தி கர்ஜனையுடன் கூற, மீட்டிங் ஹாலில் பலத்த அமைதி நிலவியது.
“மார்க்கெட்டிங் டீம் ஹெட் மேனேஜர்ஸ்…” என்று அவள் உறுமிட, நான்கு நபர்கள் எழுந்து நின்றனர்.
“ஆம் ஐ க்ளியர்?” மையிட்ட விழி இடுங்க அவள் கேட்டதில், நால்வரும் ஒரு சேர “எஸ் மேம்” என்றனர் பவ்யமாக.
மேலும் அனைத்து டிபார்ட்மென்ட் ஆள்களையும் ஒரு காட்டு காட்டி விட்டே மீட்டிங்கை நிறைவு செய்தாள்.
அவள் பேசும் போதே, ஷைலேந்தரி பாதி உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.
மைத்ரேயனுக்கு அவளைத் தூங்க விடமால் செய்வதே பெரும்பாடாக இருந்தது.
“அடியேய் தூங்கித் தொலையாத” என்று கடிந்தவனிடம்,
“மீட்டிங் ஹாலை இவ்ளோ இருட்டாக்கி வச்சிருந்தா, தூக்கம் வராம என்ன செய்யும். உனக்கே தெரியும்ல லைட்டா லைட்டு டிம் ஆனாலே எனக்குத் தூக்கம் வரும்னு…” என்று முணுமுணுத்தாள்.
நந்தேஷோ தங்கை பேசியதில் பாதி கவனத்தையும் அலைபேசியில் பாதி கவனத்தையும் வைத்திருந்தான்.
“என்கிட்ட பேச மாட்டியா குயிலு… அவ்ளோ தானா?” வாட்சப்பில் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளெல்லாம் ஒரு டிக்கிலேயே நின்று கொள்ள, நந்தேஷின் முகத்தில் வேதனையின் சாயல்.
மீட்டிங் முடிந்து அனைவரும் கலைந்து சென்றிருக்க, அங்கு மிஞ்சி இருந்தது நால்வர் மட்டும் தான்.
கோபமாக தங்கையிடம் வந்தவள், “எருமை நான் பேசிட்டு இருக்கேன். நீ தூங்கிட்டு இருக்கியா” என்று கத்தும் போதே, ஷைலேந்தரி ஹஸ்கி குரலில், “உஷ் கத்தாத… உன் பின்னாடி ஒரு உருவம் நிக்குது பாரு” என்றாள் விழிகளை உருட்டி.
தன்னை பயமுறுத்திப் பார்க்கிறாள் என்ற உண்மை புரிந்தாலும், கால்கள் லேசாக உதறல் எடுக்க மைத்ரேயனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள், “சும்மா கிண்டல் பண்ணாத ஷைலு…” என்று மிரட்டினாள்.
சிரிப்பை அடக்கியபடி “அட நான் ஏன் கிண்டல் பண்ணப் போறேன். அந்த ஓரத்துல ரொம்ப இருட்டா இருக்குல்ல. அங்க உத்துப் பாரேன்…” என்று மீண்டும் சீண்ட, “அடியேய்” எனப் பல்லைக்கடித்த விஸ்வயுகா “லைட்ஸ் ஆன்” என குரல் கொடுக்க, ஸ்மார்ட் விளக்குகள் உடனே எரிந்தது.
அதில் மைத்ரேயனும் ஷைலேந்தரியும் ஹை ஃபை கொடுத்துக்கொண்டு சிரிக்க, நந்தேஷ் “எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றான் அப்போது தான் அவர்களை கவனித்து.
“நீ இன்னும் பிரான்ஸ்ல இருக்குற பீல்லேயே இருக்கியாடா… மீட்டிங்ல வந்து போனை நோண்டிட்டு இருக்க” என்று முறைத்தாள் விஸ்வயுகா.
“அது… இம்பார்ட்டண்ட் மெசேஜ் அதான்…” என்று சமாளித்தவன், “ஹே சொல்ல மறந்துட்டேன். இப்ப தான் மெசேஜ் வந்துச்சு. நம்ம ரிலேட்டிவ்ல ஒரு தாத்தா இறந்துட்டாராம். அம்மா நம்ம நாலு பேரையும் ஒரு டென் மினிட்ஸாவது போய் பார்க்க சொன்னாங்க” என்றதும் விஸ்வயுகாவின் முகம் மாறியது.
“நான் வரல நீங்க போயிட்டு வாங்க” அவள் உள்ளே சென்ற குரலில் மறுக்க,
“விஸ்வு, பிறப்பு இறப்பு எல்லாம் இயற்கையானது. இதுக்கு பயப்படாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” என்று தமையனாக கண்டித்தான் நந்தேஷ்.
“ப்ளீஸ் நந்து… எனக்கு பேயைப் பார்த்து கூட பெருசா பயம் இருக்காது. ஆனா இந்த டெட் பாடி, அவங்க கால் பெருவிரலை கட்டி, மூக்குல பஞ்சு வச்சு, முகத்தை சுத்தி துணி போட்டு, ஐயோ… எனக்கு ஒரு மாதிரி நெஞ்சல்லாம் பயமா இருக்கும் அதை பார்த்தாலே. இதை சொல்லும் போதே திக்கு திக்குன்னு அடிக்குதுடா. சித்தியோட டெத்த பார்த்ததுல இருந்தே என்னோட பயம் அதிகம் ஆகிடுச்சுன்னு தெரியும்ல. நானும் இதை விட்டு வெளில வர தான் முயற்சி பண்றேன் என்னால முடியல நந்து” என்றாள் பாவமாக.
அஸ்வினியின் நினைவு வரும் போதே, கண்களில் நீர்கட்டுவதைத் தவிர்க்க இயலவில்லை.
மற்றவர்களுக்கும் அஸ்வினியின் நினைவு வாட்டியதோ என்னவோ, “எனக்குப் புரியுதுடா விஸ்வூ… அதுக்காக இதையே தொடருறது உன்னோட ஸ்டராங் மெண்டாலிட்டியை அஃபெக்ட் பண்ணும்” என நந்தேஷ் புரிய வைக்க முயல, மைத்ரேயன் அவனைத் தடுத்தான்.
“விடு நந்து. கொஞ்ச கொஞ்சமா மாறிடுவா. அதுக்குன்னு ஒரு டைம் வராமையா போய்டும். இப்ப நீயும் ஷைலாவும் டெத்க்கு போயிட்டு வாங்க. நீங்களும் போகலைன்னா ஆண்ட்டி கோபப்படுவாங்க” என்று அவர்களை அனுப்பி வைக்க,
“நானும் என் பயத்தை போக்க டைம் வரும்னு தான் பார்த்துட்டு இருக்கேன். அந்த டைம் தான் வர மாட்டேங்குதுடா மைதா!” என்றாள் உர்ரென்று.
——
ஹேய் மி அமிகோ
விஷ்கோ….கிஸ்கோ….
லெட் தி ஹனி ப்ளோவ்
நான் சண்டியாகோ….நெவெர்….எவர்
டோன்ட் லெட் மீ கோ
‘டொம்மு டொம்மு’ என்ற டிஜே இசை ஒரு புறம் ஒலிக்க, இள வட்டங்கள் ஆண் பெண் பேதமின்றி அந்த இசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர்.
வண்ண வண்ண விளக்குகள் அந்த பப் முழுக்க நிறைந்திருக்க, அனைவரின் மீதும் தனது கூரிய பார்வைதனை செலுத்தியபடி, “ஒன் மோர் மார்கரிட்டா…” என பார் ரெஸ்டாரன்டின் முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் சுழன்ற படி சர்வீஸ் பாய்க்கு ஆர்டர் கொடுத்தவன், மீண்டுமொரு முறை பப்பின் மூலை முடுக்கு எங்கும் பார்வையிட்டான்.
கருப்பு நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தவனின் ஒரு கையில் நீலநிற நிற கோர்ட் தொங்கி கொண்டிருந்தது.
வார பிரியமில்லாத கேசம், அடர்ந்து கருத்து அவனது அகன்ற நெற்றி மீது உறவாட, கழுகுக் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓரிடத்தில் நிலைத்தது.
தேடியது கிடைத்த வெற்றி பெருமிதத்தில் அவனது இறுக்க இதழ்கள் இழிவாய் வளைய, அந்நேரம் ஸ்பீக்கரில் “டிப்பம் டப்பம்” இசை உச்ச சத்தத்தில் ஒலித்தது.
அதில் தன்னிச்சையாக ஆடவன் உதடுகளும் இளக்காரமாக முணுமுணுத்தது பாடல் வரிகளை.
“டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட”
எனப் பாடிய படியே, ஓரத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் கையில் ஜின்னுடனும் அருகில் இரு அழகிகளுடனும் அமர்ந்திருந்த நடுத்தரவயதான பூஷிகனின் முன்னே வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் பூஷிகனின் கையில் இருந்த ஜின் கிளாஸ் தவறி விழுந்த நொடி, “யுக்தா” என நடுங்கியவாறே வெளிவந்தது அவரது குரல்.
“எஸ் பூஷி…இட்ஸ் மீ. யுக்தா சாகித்தியன் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேட்டிங் ஆபிசர். இந்த இன்ட்ரோ போதுமா. இல்லை எக்ஸ்டரா கரிக்குலர் ஆக்டிவிடீஸ் பத்தி சொல்லட்டுமா…” என்று கேட்டவாறே, பின்பக்க பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து லோட் செய்தான்.
அதில் மிரண்ட பூஷிகன், “யுக்தா நோ” என்னும் போதே அடுத்த அடுத்த மூன்று புல்லட்டுகளை அவரது உடலில் செலுத்தினான்.
மொத்த பபும் அதிர்ந்து நின்றதைக் கண்டுகொள்ளாமல், “ஐ லைக் ஷூட்டிங், கில்லிங், த்ரில்லிங்… ஓ மேன்… என் திறமையைப் பத்தி சொல்லும் போதே செத்துட்டியா. ஓகே ஹேப்பி ஜர்னி” என டாட்டா காட்டியவன், டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த மற்றொரு ஜின்னை எடுத்து குடித்தபடி,
“டிப்ப டப்பம் டிப்பம
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட”
என விட்ட பாடலைத் தொடர்ந்து கொண்டே அசட்டையாக வெளியில் சென்றான்.
மோகம் வலுக்கும்
மேகா
ஆரம்பமே செம சகி.விஸ்யூ சைலு
மைத்து நந்து செம. யுக்தா அதிரடி.