Loading

வேதம் 1

தகதகவென கொழுந்துவிட்டு எரியும் நகரத்தின் வெயில் போல் இல்லாமல் இதமான மண் வாசனையில் மிளிர்ந்து கொண்டிருந்தது அப்புவெட்டி கிராமத்தின் வெயில். சற்று நகர வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்திருந்தாலும் இன்னும் மாறாத பழமைகள் உயிரோட்டமாய் இருக்கின்றது.

உச்சி வெயில் குறையத் தொடங்கிய நேரம் மேய அனுப்பிய ஆடு மாடுகளை கூட்டி வந்து கொண்டிருந்தனர் ஊர்மக்கள். அவர்களை பார்த்தவாறு அங்கே இருக்கும் குட்டையில் இருந்து எழுந்த நரேந்திரன்,

“குல்பி!” என்றழைக்க, அவனை ரசித்தபடி நின்றிருந்தவள் புருவம் உயர்த்தினாள்.

“எனக்கு ஒரு டவுட்டு”

“கேளும் கேட்டு தொலையும்.”

“கல்யாணம் பண்ணிக்க போறவன இப்படி எல்லாம் பேசக்கூடாது.”

“இந்த ஒரு டயலாக்கை இன்னும் எத்தனை தடவை தான் சொல்லுவியோ.”

“நமக்கு கல்யாணம் ஆக இன்னும் சரியா மூணு வாரம் இருக்கு. அதுவரைக்கும் சொல்லிட்டே தான் இருப்பான் இந்த நரேந்திரன்.”

“அதுக்கப்புறம்”

“புருஷனா இப்படி எல்லாம் சொல்லலாமான்னு… ப்ரோமோஷன் வாங்கிடுவேன்.”

“ஹா…ஹா…! கேளு”

“இந்த ஆடு மாடுங்க எல்லாம் அச்சு எடுத்த ஜெராக்ஸ் மாதிரி ஒரே போல இருக்கே தன்னோட புருஷன் இது பொண்டாட்டி இதுன்னு எப்படி கண்டு பிடிக்குங்க?”

“இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் உனக்கு மட்டும் தான் வரும்.”

“பின்ன… இந்தப் பட்டிக்காட்டுல இருக்க உங்களுக்கா வரும்”

“ஹலோ! யாரு பட்டிக்காடு?”

“அச்சோ! குல்பி கோவப்படாத நான் உன்ன சொல்லல.” என அவள் அருகில் வந்தவன் கன்னத்தைப் பிடித்து இழுத்து,

“இப்படி ஒரு அழகிய யாராது பட்டிக்காடுனு சொல்லுவாங்களா.” என கண் சிமிட்டினான்.

“யாரும் சொல்ல மாட்டாங்க நீ சொல்லுவ.”

“ப்ச்! நமக்குள்ள எதுக்கு ஆர்கியூமென்ட் குல்பி.” என்றவன்,

“இன்னும் மூணு வாரத்துல நம்ம புருஷன் பொண்டாட்டி. அதுவரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணலாம்னு தான் டாக்டர் வேலைய கூட விட்டுட்டு இந்த வில்லேஜ்ல வந்து உன் கூட இருக்கேன்.” அவள் தோளில் கை போட்டான்.

“நாங்களும் டாக்டர் தான்”

“தெரியுமே… இப்படி ஒரு அழகி டாக்டரா இருக்கிறது நான் செஞ்ச புண்ணியம். வீட்லயும் உன் கூட தான் ஹாஸ்பிடலயும் உன் கூட தான்.”

“என்னத்தையாது பேசி கவுத்துடு.”

“ரொம்ப புகழாத குல்பி… வெட்கம் வருது.”

“ரொம்ப நேரம் ஈரத்துல இருக்க வேணாம் வா வீட்டுக்கு போகலாம்.”

“உத்தரவு குல்பி” என அவளோடு பயணித்தான்.

வந்து கொண்டிருக்கும் பொழுதே அவளின் தென்னந்தோப்பு வர, “மாமா இருப்பாரா?” கேட்க, “கார் இருக்கே, உள்ள தான் இருப்பாரு.” என்றாள்.

மாமனாரை காண துள்ளி குதித்து ஓடினான். அங்கு அவரோ பணி செய்யும் ஆட்களை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். சிரித்த முகமாக இருக்கும் மாமனாரின் இந்த முகத்தை கண்டவன்,

“குல்பி, என்ன உங்க அப்பா இப்படி சாமி ஆடுறாரு.” கேட்டிட,

“வேலை விஷயத்துல அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். தப்பு பண்ணா யார் என்னனு பார்க்க மாட்டாரு.” பேசிக்கொண்டே அவர் அருகில் வந்து விட்டனர்.

வருங்கால மருமகனை கண்டதும் பனிமழையாய் புன்னகைத்தவர், “என்ன மாப்ள இப்படி ஈரத்தோட வந்திருக்கீங்க” என்று கேட்டு விட்டு,

“என்னம்மா நீ மாத்துக்கு துணி எடுத்துட்டு வந்திருக்க கூடாதா. சளி பிடிச்சிட்டா என்ன பண்றது. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல உனக்கு. இந்த சின்ன புள்ள மாதிரி நடந்துக்காத. உனக்கு கல்யாணம் ஆகப்போகுது.” செல்லமாக திட்ட துவங்கினார்.

“மாமா…மாமா… வெயிட். குல்பி மேல எந்த தப்பும் இல்லை. அவ வேணாம்னு தான் சொன்னா நான் தான் ரொம்ப ஆசையா இருக்குன்னு குட்டையில இறங்கினேன்.”

“அது இல்ல மாப்ள… அப்பா அம்மா கேட்டா…”

“அவங்க உங்களை எதுவும் கேட்க மாட்டாங்க மாமா. நான் சந்தோஷமா இருக்கணும்னு தான அனுப்பி விட்டிருக்காங்க.”

“இருந்தாலும் உங்களுக்கு இதெல்லாம் புதுசு மாப்ள. கல்யாணத்தை கிட்ட வச்சுக்கிட்டு உடம்பு முடியாம போயிட்டா சிரமம் தான.”

“இப்பதான் தெரியுது குல்பி ஏன் இவ்ளோ ஸ்வீட்டா இருக்கான்னு.” என்றவன் சட்டென்று அவர் கன்னத்தை கிள்ளி விட, கூச்சம் தாங்காமல் தலைகுனிந்து கொண்டார் ஆத்ரிகாவின் அன்பு தந்தை வீரபாண்டி.

“வாவ் மாமா!”

“போங்க மாப்ள”

“அப்படியே உங்க பொண்ணுக்கு வேட்டி சட்டை போட்டு விட்ட மாதிரியே இருக்கு இந்த வெக்கத்த பார்க்கும் போது.”

“உக்காருங்க மாப்ள இளநீ எடுத்து போட சொல்றேன்.”

“வேணாம் மாமா நேத்தே நிறைய குடிச்சிட்டேன்.”

“அட! தினமும் இளநீ குடுக்கணும் மாப்ள. டாக்டருக்கு படிச்சிட்டு இது கூட தெரியாம இருக்கீங்க.” என்றதும் அருகில் இருக்கும் ஆத்ரிகாவை பார்க்க, கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

“குல்பி!” என மெல்ல அழைக்க, சத்தமாக சிரித்து விட்டாள்.

முதலில் கோபமாக பார்த்தவன் அவள் சிரிக்கும் அழகில் அவனையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆத்ரிகாவோடு நடந்த முதல் சந்திப்பு நியாபகத்திற்கு வந்தது. அவனுக்கு சொந்தமான மருத்துவமனையில் பணி கேட்டு வந்திருந்தாள். நரேந்திரன் தான் நேர்முக தேர்வு நடத்தியது.

டாக்டராக இருந்தாலும் குறும்புக்கு சொந்தக்காரன் நரேந்திரன். அங்கு வரும் நோயாளிகளை கூட சிரித்தே குணப்படுத்தும் குணம் கொண்டவன். அமைதியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தவளை,

“ஒரு கடி ஜோக் சொல்லுங்க” என்று முழிக்க வைத்தான்.

“கமான்!”

“தெரியாது”

“கடி ஜோக் கூட சொல்ல தெரியாம எப்படி டாக்டர் வேலைக்கு வந்தீங்க.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?”

“வாய் தான் சம்பந்தம்”

“ஆஹான்!”

“புரியலல” என்றவன் அங்கு பணிபுரியும் செவிலியரை அழைத்து, “ஒரு கடி ஜோக் சொல்லுங்க சிஸ்டர்” என்றிட அவரோ, “ஒரு கடி ஜோக் சார்” என்றார்.

பயந்து அமர்ந்திருந்த ஆத்ரிகா முகத்தில் கடுகடுப்பு உருவாக, “உங்களை டென்ஷன் படுத்த இதை சொல்லல. ஒரு டாக்டருக்கு எந்த நோயை எப்படி குணப்படுத்தனும்னு தெரியணும். வர பேஷன்ட் எப்படி வேணா இருப்பாங்க. நம்ம அவங்க கிட்ட கனிவா சிரிச்சிட்டு கேட்கும் போது அவங்க வலிய மறந்து கம்பர்ட்டபிளா இருப்பாங்க. முதல் மருந்து.” என்றதும் அவள் மனதில் நல்ல பெயரை வாங்கி விட்டான் நரேந்திரன்.

“சரி, ஒரு கடி ஜோக் சொல்லுங்க” என்றதும் இந்த முறை சின்ன சிரிப்போடு அவன் சொன்னதை திருப்பி சொல்ல, “கடி ஜோக்கை கேட்டா நான் சொன்னதையே சொல்றீங்க.” என திருப்பி போட்டான்.

சிரிப்போடு “சார், மீ பாவம்” என வாய் நிறைந்த சிரிப்பு போல் அவன் மனதில் சிம்மாசனம் போட்டாள் ஆத்ரிகா.

அங்கு தொடங்கிய அவர்களின் உரையாடல் திருமணத்திற்கு வந்து முடிந்தது. நரேந்திரன் குடும்பத்தோடு நன்கு பழக ஆரம்பித்தவளை மிகவும் பிடித்துப் போனது அவன் குடும்பத்திற்கு. ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய விருப்பத்தையும் கூறினான்.

உடனே ஆத்ரிகா பெற்றோர்களை தொடர்பு கொண்டார்கள் நரேந்திரன் பெற்றோர்கள். அவர்களிடம் பேச தயங்க, போனை வாங்கியவன் விஷயத்தை போட்டு உடைத்தான்.

“எங்க சம்மதத்தை விட எங்க பொண்ணு சம்மதம் தான் இதுல முக்கியம். அவ கிட்ட பேசிட்டு சொல்றோம்.” என்றவரிடம் தான் பேசிக் கொள்வதாக கூறினான்.

விஷயம் அறியாதவள் வழக்கம்போல் தன் பணிகளை செய்து கொண்டிருக்க, “ஆத்ரி” என்றழைத்தான்.

செல்ல பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு சென்ற நண்பனின் குரல் கேட்டு திரும்பியவள் கைப் பிடித்தவன்,

“எமர்ஜென்சி கேஸ் உடனே என் ரூமுக்கு வா.” அழைத்து சென்றான்.

அவசரமாக அவனோடு ஓடி வந்தவள் அங்கு யாரும் இல்லாததை கண்டு குழம்ப, ஸ்டெதஸ்கோப்பை தன் இதயம் மீது வைத்து,

“இவனுக்கு ஏதோ பிரச்சனையாம் என்னன்னு கேளு” என்றான்.

“நரேன் என்ன..”

“கேளு ஆத்ரி” அவள் காதில் வைத்தான்.

புரியாத பார்வை அவளிடம். காதல் ததும்பும் பார்வை இவனிடம். இப்படியே நிமிடங்கள் கழிய, “என் இதய துடிப்பு உனக்கு எப்படி கேக்குதுன்னு தெரியல. எனக்கு ஆத்ரி! ஆத்ரி! ஆத்ரினு கேக்குது. உன்னை கேக்குது. உன் மனசுல இடம் கேக்குது. உன்னோட வாழ கேக்குது.” என இடைவெளி விட்டு,

“லவ் யூ ஆத்ரி.” என்றான் இதயத் துடிப்பாய்.

கண் கலங்கி நின்றாள். மனதை அழுத்தியது அவன் வார்த்தை. சொல்வதற்கு வார்த்தை இன்றி அவனையே பார்த்திருக்க, “உடனே சொல்லணும்னு அவசியம் இல்ல. நாளைக்கு காலைல சொன்னா போதும். உன்னோட விருப்பம் எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம்.” என்று சென்று விட்டான்.

அவன் சொல்லிய வார்த்தையின் தாக்கம் இரவெல்லாம் தூங்க விடவில்லை. எப்படி யோசித்தாலும் பதில் கிடைக்காமல் திண்டாடினாள். “லவ் யூ” என்ற வார்த்தை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது.

அவள் மனதை மேலும் குழப்ப பெற்றோர்கள் அழைத்தனர். தன்னிடம் காதலை தெரிவிப்பதற்கு முன்னரே வீட்டில் பேசி இருப்பதை அறிந்து திகைத்தவள் நழுவ பார்க்க, மனம் விட்டு பேசினார்கள். அவர்கள் உரையாடலுக்குப் பின் பல யோசனை ஆத்ரிகாவிற்கு. அந்த யோசனையோடு அவன் சொன்ன காலை வந்து விட, சரியாக வந்து நின்றான்.

“எனக்கு யோசிக்க டைம் வேணும்” என்றதை சம்மதமாக எடுத்துக் கொண்டவன் இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

நாளடைவில் அவன் போக்கிற்கு செல்ல ஆரம்பித்தாள் ஆத்ரிகா. அவளுக்கு நரேந்திரனை மிகவும் பிடிக்கும். தொழிலில் அவன் காட்டும் அக்கறை, சாதுவான குணம், சிரித்த முகம், பிறருக்கு உதவி செய்யும் மனம் என அவன் மீதான எண்ணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்டவனோடு தன் வாழ்க்கை அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற பெற்றோரை நம்பி அவனோடு பயணிக்கிறாள் சம்மதம் இல்லாத மனதோடு.

“மாப்ள” என மாமனார் உசுப்பும் வரை கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தவனை ரசித்தாள் ஆத்ரிகா.

அதை உணர்ந்து மாமனார் அறியாது கண்ணடித்தவன் அவரோடு பேசிவிட்டு புறப்பட்டான். வரும் வழி எங்கும் மாமனார் பற்றிய பேச்சுகள் தான் ஓடியது. ஆத்ரிகாவிற்கு தந்தை என்றால் உயிர். மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அன்பு தந்தை.

எந்த சூழ்நிலையிலும் மக்கள் பக்கம் நிற்கும் அந்த அன்பை பலமுறை பகிர்ந்திருக்கிறாள் நரேந்திரனிடம். அப்படியே பேசிக்கொண்டு இருசக்கர வாகனம் நிற்கும் இடத்திற்கு வந்தவர்கள் ஏற போக, பெருத்த சத்தத்தோடு ஜீப் வந்து கொண்டிருந்தது.

வரும் வேகத்தை வைத்தே ஆபத்தை உணர்ந்து கொண்ட நரேந்திரன் தன் வருங்கால மனைவியை தன்னோடு இழுத்துக் கொண்டு அங்கிருக்கும் வயலில் விழ, நின்றிருந்த இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியது அந்த ஜீப்.

வேதம் ஓதும்…

தேவம் 2

“டேய்… அறிவு கெட்டவனே! கண்ணு தெரியாத நீயெல்லாம் எதுக்குடா ஜீப் ஓட்டுற? நில்லுடா… ஹேய்! நில்லுன்னு சொல்றேன்ல.” என இடித்த ஜிப்பின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.

அவனுக்கு பின்னால் ஓடிய ஆத்ரிகா, “விடு நரேன்” என்றிட,

“இடியட்! நில்லுடா” என்றான்.

“அவன் போற வேகத்துக்கு உன்னால பிடிக்க முடியாது நரேன்.” ஒருவழியாக அவனைப் பிடித்து தடுக்க,

“என்ன தைரியம் அவனுக்கு.” கொந்தளித்தான்.

“தைரியம் இருக்கிறதால தான் இடிச்சுட்டு திமிரா போறான்.”

“காமெடியா”

“அப்படியும் வச்சுக்கலாம்”

“யார் அவன்?”

“என்னை கேட்டா… எனக்கு என்ன தெரியும்.”

“நீ இந்த ஊரு தான” என இடுப்பில் கை வைத்து முறைக்க, “ஓட்டர் ஐடி வேணா காட்டவா.” என்றாள் அவனைப் போல் இடுப்பில் கை வைத்து.

சற்று தூக்கலான முறைப்போடு, “கொஞ்சம் கூட பயமில்லை குல்பி உனக்கு. அந்த பைக் இருந்ததால நம்ம தப்பிச்சோம் இல்லன்னா அதோட நிலைமை தான் நமக்கும்.” என்றதும்,

“அதான் ஒன்னும் நடக்கல. தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகாத.” சாதாரணமாக நடந்தாள்.

“என்ன இவ தேவை இல்லாத விஷயம்னு சொல்றா” புலம்பியவாறு அவளுக்கு பின்னால் வந்தவன்,

“இன்னொரு தடவை அந்த ஜீப்பை பார்த்தா உடைக்காம விடமாட்டேன்.” சபதம் எடுத்தான்.

இருவரும் அப்புவெட்டி கிராம எல்லையில் இருப்பதால் ஊருக்குள் செல்ல வெகு நேரம் ஆனது. பழக்கப்பட்ட இடம் என்பதால் ஆத்ரிக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவளுடன் வந்தவனுக்கு போதும் என்றாகி விட்டது.

கால் வலி முடியாததால், “குல்பி இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?” சோர, “கிட்ட வந்துட்டோம்” என அவன் முகம் பார்த்தவள்,

“சாரி நரேன்” என்றாள் வருத்தத்துடன்.

உடனே தன் சோர்வை மாற்றிக் கொண்டு, “இதுக்கெல்லாம் சாரி கேப்பாங்க. புதுசா நடக்குறதால கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மத்தபடி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என்றான் இதமாக.

“மைண்ட் ரிலாக்ஸ்க்கு
ஃபாரின் போற ஆள் நீ.”

“சோ வாட் குல்பி”

“இந்த இடமெல்லாம் உனக்கு செட்டாகாது.”

“அங்க கிடைக்காத சந்தோஷம் இந்த ஊர்ல கிடைக்குது.”

“அப்படின்னு உன்னை நீயே ஏமாத்திக்கிற”

“இங்க பாரு குல்பி ஆசைப்பட்டவங்களோட கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருக்கிறதெல்லாம் செம ஃபீல். அத ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணனுமே தவிர இடத்தைப் பார்க்கக் கூடாது. எல்லாத்தையும் தாண்டி இந்த இடம் அவ்ளோ ஒண்ணும் மோசம் இல்ல. உன்ன மாதிரியே ரொம்ப அழகா இருக்கு. இயற்கைய மிஞ்சுற அழகு வேற எதுவும் இல்லை.”

“என்னமோ சொல்லு எனக்கு சரின்னு படல.”

சொல்லியவள் தன் போக்கில் நடக்க, யோசனையோடு வந்து கொண்டிருந்தான் நரேந்திரன். மனதில் திருமணத்திற்கு முழு சம்மதத்தோடு தான் சம்மதித்தாளா என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அதைக் கேட்டு இருக்கின்ற சூழ்நிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாதவன் அவளோடு நடை போட எதிரே அவர்களை இடித்த ஜீப் நின்று கொண்டிருந்தது.

“குல்பி நம்மளை இடிச்ச ஜீப் தான அது.”

எதற்கு தேவையில்லாத பிரச்சனை என்று ஆத்ரிகா இல்லை என்க, “பொய் சொல்லாத. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு அந்த ஜீப் தான் அது.” என்றவனை,

“பிரச்சனை வேணாம் நரேன். எனக்கு சண்டை எல்லாம் ஒத்து வராது.” தடுக்க பார்த்தாள்.

அதற்குள் அந்த ஜிப்பில் ஒருவன் ஏறி அமர, “இவன் தானா இடிச்சது… கைய கால உடைக்கிறேன் பாரு.” என சட்டையை மடக்கிக் கொண்டு சண்டைக்கு பாய்ந்தான்.

தன்னை நோக்கி வருவதை அறியாத அந்த புதியவன் ஜிப்பை இயக்க போக முன்னால் முறைப்போடு நின்றான் நரேந்திரன். எந்த அலட்டலும் இல்லாமல்,

“சாகுறதா இருந்தா வேற வண்டியில போய் சாகு. எமதர்ம வேலைய பார்க்க எனக்கு நேரமில்லை.” என்றான்.

“ஸ்டுப்பிட்!”

“ரொம்ப நல்லது. நகர்ந்தா வேலைய பார்க்க கிளம்பிடுவேன்.”

“நான் எதுக்கு நிக்கிறேன்னு தெரியாத மாதிரியே பேசுற. எதுக்கு என்னோட வண்டிய இடிச்சிட்டு போன. இந்த மாதிரி சின்ன இடத்துல அவ்ளோ ஸ்பீடா போகக் கூடாதுனு தெரியாதா. பைக்கோட போச்சு எனக்கோ இல்ல குல்பிக்கோ ஏதாவது ஆகி இருந்தா என்னடா ஆகுறது. மரியாதையா மன்னிப்பு கேட்டுட்டு போ.”

“முதல்ல மரியாதையா பேசு.”

“இடிச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுற உனக்கு எதுக்குடா மரியாதை.”

சத்தம் இல்லாமல் ஜீப்பை விட்டு இறங்கியவன், “வீரபாண்டி வீட்டு மருமனாக போறதால சும்மா விடுறேன். இன்னொரு தடவை இந்த மாதிரி பேசக்கூடாது. நம்ம ஊருக்கு வந்தோம்மா பொண்ண கட்டிக்கிட்டு போனோமான்னு இருக்கணும்.” என்று விட்டு ஜீப்பில் ஏறி அமர்ந்து,

“நகர்ந்து நில்லு இல்லனா பைக் நிலைமை தான் உனக்கும்.” சென்றான் ஆர்ப்பாட்டம் இல்லாமல்.

கோபப்படும் ரகம் இல்லாத நரேந்திரனுக்கு கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது. அவன் உதட்டில் எந்த நேரமும் இருக்கும் சிரிப்பு மறைந்து, “ராஸ்கல்! எங்க இடிச்சு பாரு.” என சண்டைக்கு முன்னேறினான்.

“டாக்டருக்கு காது கேட்காதோ”

“ஹலோ!”

“சண்டை போட டைம் இல்ல. நகர்ந்து நிக்கிறியா ஏத்திட்டு போகவா.”

“அத தாண்டா சொல்றேன் தைரியமா இருந்தா ஏத்து பார்க்கலாம்.” என்றதும் ஜீப்பில் இருந்தவன் சாவியை திருப்பி புகைச்சலை கிளப்பினான்.

நரேந்திரன் அடங்காத கோபத்தில் நின்றிருக்க, அவனுக்கு சற்றும் குறையாத திமிரோடு அவன் மீது ஜிப்பை ஏற்ற முயன்றான். அதற்குள் சுதாரித்த ஆத்ரிகா அவனை இழுத்து,

“இதுக்கு தான் நரேன் போக வேணாம்னு சொன்னேன். தயவுசெஞ்சி எந்த பிரச்சினையும் பண்ணாம வா வீட்டுக்கு போகலாம்.” என்றாள்.

“என்ன குல்பி பேசுற… பிரச்சனை பண்றது அவன் தான்.”

“சரி இருந்துட்டு போகட்டும் விடு”

“என்ன விட சொல்ற? உனக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா என்ன பண்ணிருப்பேன்.”

“அதான் எதுவும் ஆகலையே”

“அதுக்காக விட சொல்றியா?”

“எனக்காக விட சொல்றேன்.”

மூச்சிழுத்து தன் கோபத்தை அடக்கியவன், “உனக்காக அவனை விடுறேன்” என்றான்.

“அவ்ளோதான் நரேன் முடிஞ்சு போச்சு.” என்றவளை பார்க்காது சலிப்போடு திரும்பிக் கொண்டான்.

அமைதியாக அவன் முன்பு நின்று, “நீ தான சொல்லுவ எதுக்கும் கோபம் தீர்வு இல்லன்னு. ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா யோசிச்சு பாரு உனக்கே புரியும்.” என்ற வார்த்தை சமாதானத்தை கொடுக்கவில்லை.

எப்படி யோசித்தாலும் தவறு என்று தான் புத்தி சொல்லியது. ஆத்ரிகா தடுப்பதால் வேறு எதுவும் செய்ய முடியாமல் ஜீப்பில் இருப்பவனை முறைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னே வீரபாண்டியன் மகளும் நடந்தாள்.

ஜீப் அவர்களை விட்டு தூரமானது. வெகு நேரமாக அவளோடு பேசாமல் மூஞ்சை சுருக்கி கொண்டு வந்தவன்,
“யார் அவன்?” கேட்க,

“பக்கத்து ஊர்காரன்” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

“நம்ம கல்யாணம் பண்ணிக்க போறதெல்லாம் அவனுக்கு தெரிஞ்சு இருக்கு, சொந்தக்காரனா?”

“சொந்தமில்லை… தெரியும்”

“தெரிஞ்சதால தான் வேணாம்னு விட சொன்னியா.”

“பிரச்சனை வேணாம்னு.”

“தப்பு அவன் மேல தான.”

“அதை அவன் ஒத்துக்க மாட்டான்.”

“அவ்ளோ பெரிய ஆளா?”

“ம்ம்ம்”

திடீரென்று, “நான் கேட்டதுக்கு தெரியாதுன்னு ஏன் சொன்ன?” சந்தேக கண் திறக்க,

“இந்த மாதிரி எந்த பிரச்சனையும் நடந்திட கூடாதுன்னு தான் சொன்னேன். நீ தான் கேட்காம மூக்கு உடைஞ்சி வந்திருக்க.” மெல்ல சிரித்தாள்.

“ஓய்…குல்பி மேடம்”

“நாசுக்கா சொன்னா புரிஞ்சுக்கணும். இல்லன்னா இப்படித்தான்…” என்றதற்கு மேல் பேசாமல் கேலி சிரிப்பு சிரிக்க,

“உன்னால தான் அவன விட்ட.”

“இல்லன்னா”

“ஜீப் ஓட்ட கை இருந்திருக்காது.”

“கொஞ்சம் விட்டிருந்தா ஆப்ரேஷன் பண்றதுக்கு உனக்கு கை இல்லாம போயிருக்கும். என்னால தான் ரெண்டு கையும் இப்போ உன்கிட்ட இருக்கு. முதல்ல எனக்கு நன்றி சொல்லு.”

“சொந்த ஊருக்கு வந்ததும் குசும்பு அதிகமாயிடுச்சு குல்பி.”

“உண்மைய சொன்னா குசும்பா?”

“அடுத்த தடவை அவனைப் பார்க்கும்போது அவனோட சேர்த்து உன் குசும்பையும் அடக்குறேன்.”

அவன் கன்னத்தைக் கிள்ளி, “நீ சாக்லேட் பாய் நரேன். உனக்கு இந்த சண்டை எல்லாம் செட் ஆகாது. ஒழுங்கா சமத்துப் பிள்ளையா இரு.” என்றவள் நெருக்கத்தில் இருந்த கோபம் பஞ்சாய் பறந்தது.

அவனின் அடையாளமான புன்னகையை மன நிறைவாக காட்டி, “இப்படி எல்லாம் மயக்காத குல்பி. நானே போய் அவன்கிட்ட என்னை ஏத்துடான்னு ஜீப் முன்னாடி படுத்திடுவேன்.” என அவள் கை பிடிக்க,

“முத்தி போச்சி” என்றாள்.

அதன் பின் பேச்சு வார்த்தைகள் இன்றி இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். ஜிப்பில் இருந்தவனையே நினைத்துக் கொண்டு வந்த நரேந்திரன்,

“அவன் பேரு என்ன?” கேட்க,

“இன்ப இளங்கீரன்.” என்றவளை சூறாவளி போல் உரசி கொண்டு சென்றது அந்த ஜீப்.

நொடி பொழுதில் நடந்த நிகழ்வில் அசைவின்றி தொப்பன்று ஆத்ரிகா தரையில் விழா, சுதாரிக்க முடியாத சம்பவத்தில் மிரண்டவன் அவளைத் தாங்கிப் பிடிக்க மறந்தான்.

லேசான உரசலோடு தரையில் விழுந்தவள் படபடப்பு குறையவில்லை. தாமதமாக அவளை உணர்ந்தவன் தாங்கிப் பிடித்தான். தனக்கு ஒன்றும் இல்லை என எழ முயன்றவளை தடுத்தவன் காயம் இருக்கிறதா என ஆராய,

“ஐ ஆம் ஆல்ரைட் நரேன்.” என்றதும் அணைத்தான் நெஞ்சோடு.

துடிக்கும் இதயம் சொல்லியது அவன் பயத்தை. அமைதியாக அவன் முதுகை தட்டிக் கொடுத்தாள். நடந்ததை நினைக்க, நொடிப்பொழுது என்பதால் மூளை அவனுக்கு தெளிவாக நடந்ததை விவரிக்க முடியாமல் போனது.

எரிச்சலோடு முகத்தை திருப்பி கோபத்தை குறைக்க, சென்ற ஜீப் புயலென வந்து கொண்டிருந்தது. எதிரில் வருவதை இருவரும் அறிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத ஜடமாக நடுங்கி எழ முயன்றார்கள். அவர்களுக்கு போதுமான நேரத்தை கொடுக்காமல் மீண்டும் மோதுவது போல் வந்து விலகி சென்றது அந்த ஜீப்.

“ஹேய்!” என நரேந்திரன் உரக்க கர்ஜிக்க, பின்னோக்கி இடிக்க மீண்டும் வந்தது.

ஆத்ரிகாவை தனக்குள் அடக்கி கண் முடியவனை விட்டு விலகி சென்றது ஜீப். உணர்ந்து இருவரும் ஜீப்பில் இருந்தவனை காண,

“கல்யாண வாழ்த்துக்கள் மாப்பிள்ளை” என சிரித்த முகமாக கையசைத்து விட்டு கிளம்பினான் இன்ப இளங்கீரன்.

வேதம் ஓதும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
20
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்