Loading

அத்தியாயம் 1

பொன்னிற மாலைக் கதிரவன், தங்கத்தை வார்த்தது போல் தகதகக்க, அதற்கு எதிர்மாறாய், சில்லென குளிர்ந்த காற்று மென்மையாய் மரங்களை தழுவ, அதில் வெட்கிய இலைகளும், கிளைகளும் நெளிந்து சிலிர்த்தது.

மாயவனாய் மயக்கும் சூரியனின் தீண்டலில், மேகம் சிவப்புற்று நாணமுற, அச்சிவப்பு அந்த இரண்டு படுக்கை அறை கொண்ட, ஊருக்கு ஒதுக்குபுறமான வீட்டின் மொட்டை மாடியில் படர்ந்தது.

எப்போதும் ரசிக்கும் இம்மாலை வேளையை ரசிக்க முற்படாது, முகத்தில் விழுந்த கதிரவனின் சிவப்பு கீற்றுகளை கண்டு கொள்ளாது பதட்டத்துடன் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தாள் சித்ராக்ஷி.

மெல்லிய இள நீல நிற காட்டன் புடவையில், மணமணக்கும் மல்லிகை சூடி, நகத்தை கடித்துக் கொண்டிருந்தவளை, முதுகில் பட்டென அடித்தாள் அவளின் ஒன்று விட்ட அக்கா முறையான செல்வி.

சித்ராக்ஷி “எதுக்கு க்கா அடிச்ச? நானே குழம்பி போயிருக்கேன்…” என புருவத்தை சுருக்கி, நெற்றியை தேய்த்தாள்.

செல்வியோ, “நீ இப்படி யோசிச்சுக்கிட்டே இரு. நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள் நக்கலாக. அதற்கு முறைப்பினை பரிசாக கொடுத்த
சித்ராக்ஷியோ, “நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன். இதுல நீ அறுபதாம் கல்யாணத்துக்கு போயிட்ட” என்றவளின், கருமையும் அல்லாது, வெள்ளையும் அல்லாது பழுப்பு நிற கன்னங்கள் வெயிலோடு உறவாடி சில வியர்வை துளிகளை நெற்றியில் கோர்த்தது.

“சரிடியம்மா… நீ கல்யாணம் பண்ணிக்காம சந்நியாசியா கூட போ! எனக்கு என்ன வந்துச்சு? ஏதோ எனக்கு தான் ஜாதகத்துல தோஷம். உனக்காவது கல்யாணம் பண்ணலாம்னு சித்தப்பா ஆசைப்படுறாரு… நீ என்னமோ முறிஞ்சு போன காதலனோட ஞாபகத்திலயே வாழப் போறேன்னு சொல்லிட்டு இருக்க… இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?” என்று சிலுப்பி கொண்டாள்.

அதில் அவளை அழுத்தத்துடன் பார்த்தவள், “அக்கா நீ கல்யாணத்தை பத்தி மட்டும் பேசுற. நான் அதுக்கு அப்பறம் இருக்குற வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன். உனக்கு சொன்னா புரியாது விடு…” என்றவள் எதிரில் மறைந்து கொண்டிருந்த கதிரவனை வெறுமையாய் பார்த்திருந்தாள்.

செல்வி, “எனக்கு புரியவே வேணாம் ராசாத்தி. கீழ மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்துட்டாங்க போல. நான் போறேன். நீ பின் பக்கமா அடுப்படிக்கு போயிடு…” என்று விட்டு அவசரமாக கீழே இறங்கினாள்.

அதில் பெருமூச்சு விட்டு தன்னை தானே ஒரு நொடி சமன்படுத்திய சித்ராக்ஷி, மெல்ல படிகளில் இறங்கினாள்.

வரவேற்பறையில் பல தலைகள் தெரிய, அதனை எட்டிக் கூட பார்க்க விருப்பமற்று காபி கோப்பையை டிரேயில் அடுக்கினாள். அவளின் அம்மா பார்வதியோ “கொஞ்சம் முகத்தை சிரிச்ச முகமா வச்சுக்கோ தங்கம். மாப்பிள்ளை வீட்ல ஏதாவது நினைச்சுப்பாங்க” என்று சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கூற, வலுக்கட்டாயமாக சிறு புன்னகையை இதழில் படர விட்டாள்.

குனிந்த தலை நிமிராது அனைவருக்கும் காபியை கொடுத்தவள், அதே நிலையில் அடுக்களைக்கு வந்து விட, அங்கிருந்த ஒரு மிடுக்கான பெண்மணி மட்டும் சற்று அதிர்ந்த குரலில் அவளின் தந்தை நடராஜிடம் “பெண்ணுக்கு ஏன் 25 வயதாகியும் மாப்பிள்ளை பார்க்க வில்லை…? அப்படி பார்த்தீர்கள் என்றால் ஏன் இன்னும் எந்த வரனும் அமையவில்லை? பொண்ணுக்கு எதுவும் குறை இல்லையே?” என்று கேள்விக்கணைகளை தொடுக்க அவர்தான் பாவமாக சமாளித்துக் கொண்டிருந்தார்.

அவர் பேசியதில் கோபம் வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு அமைதியாய் நின்றாள் சித்ராக்ஷி. செல்வி தான் அவளருகில் வந்து, “அடியாத்தி! இந்தம்மா என்ன இம்புட்டு வாய் பேசுது!!! நல்லவேளை என் அப்பா இந்த வரனை தான் பார்க்குறேன்னு சொன்னாங்க. ஜாதகத்தால நான் தப்பிச்சுட்டேன்” என்றாள் ஆசுவாசமாக.

சித்ராக்ஷியோ எப்போதும் போல் குறும்பு தலை தூக்க, “அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமா தான் இருக்குல்ல கா…” என்று நக்கலடிக்க, அவளை ஒரு மாதிரி பார்த்த செல்வி, “ஏண்டி இந்த முடிவை எடுத்தது அப்பாவும் சித்தப்பாவும் அவங்களை போய் அவன் இவன்னு பேசுற… என்னதான் படிச்சு பெரிய ஐ டி கம்பெனியில வேலை பார்த்தாலும் பெரியவங்களுக்கு மரியாதை குடுக்குறது இல்ல” என்று தீவிரமாக பாடம் எடுத்தாள்.

அதில் தலையில் அடித்துக் கொண்ட சித்ராக்ஷி “அக்க்கா’ என பல்லைக் கடித்தாள்.

செல்விதான் அதை கண்டு கொள்ளாது, “ஆனா, மாப்பிள்ளை தான் கொஞ்சம் கலர் கம்மி. இல்ல இல்ல கொஞ்சம் கருப்பு தான்… ஆனால் களையா இருக்காரு. என்ன கொஞ்சம் உயரம் கம்மி. நீ நல்லா உயரமா இருக்கியே” என்று கூறிக் கொண்டே செல்ல, ஏனோ சித்ராக்ஷியின் மனம் உலையில் விழுந்த அரிசியாய் புழுங்கி போனது.

மனம் எங்கும் தான் கொண்ட காதல் காயங்கள் பிழிந்து எடுக்க, செல்வியின் ஒப்பீட்டில் ஒட்டாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.

பார்வதி தான் அவசரமாக அடுக்கலைக்கு வந்து, “சித்ராம்மா மாப்பிள்ளை உன்கிட்ட தனியா பேசணும்னு சொல்றாங்க. மாடிக்கு போய் பேசிட்டு வாம்மா” என்றிட, அவள் முகத்தில் அதிர்வு ரேகைகள்.

செல்வி, “அடி ஆத்தாடி! இது என்ன புது பழக்கம். ஏன் சித்தி நீயாவது சொல்ல வேண்டியது தான. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரியா வராதுன்னு” என்று மாப்பிள்ளை உடன் திருமணத்திற்கு முன் பேசுவதையே பெரும் பாவமாய் அவள் கூறிக் கொண்டிருக்க,

சித்ராக்ஷி தான் மனதில் ‘இந்த அக்கா எப்போ தான் 80 ல இருந்து வெளிய வரப்போகுதோ’ என நொந்தவளின் எண்ணங்கள் தான் ‘நாமும் இவளை போல இருந்திருக்கலாமோ, உலகம் தெரியாமல், பெரிதாக படிக்காமல், நண்பர்கள் இல்லாமல், தித்திக்கும் காதல் இல்லாமல் தனக்கென ஒரு சிறு உலகில்… அப்போது ஏமாற்றங்கள் இல்லை. துரோகங்கள் இல்லை. இப்போது காயங்களும் இல்லாமல் இருந்திருக்கலாம்’ என சிந்தனையில் இருந்தவளை செல்வி தான் மாடிக்கு அழைத்து சென்றாள் பார்வதியின் வற்புறுத்தலில்.

அங்கு இரண்டு இளைஞர்கள் நின்றிருக்க, செல்வி தான் “இந்த மாப்பிள்ளைக்கு நட்டு எதுவும் கழண்டு இருக்குமோ? அவன் மட்டும் வராம கூட இம்புட்டு உசரதுக்கு வேற ஒருத்தனை கூட்டியாந்துருக்கான்…” என்று தங்கையின் காதில் முணுமுணுக்க,

அப்போது தான் நிமிர்ந்த சித்ராக்ஷி, அங்கு செல்வி கூறியது போல் உயரம் கம்மியாக ஒருவனும், உயரம் அதிகமாக சற்று சிவந்த நிறத்துடன் இருந்த மற்றொருவனையும் கண்டாள்.

பின், செல்வியின் காதில், “அக்கா நீ சொன்ன மாதிரி தான் மாப்பிள்ளைகாரனும் சொல்லுவான். இவள் மட்டும் வராம கூட ஒரு வாயாடியை கூட்டிட்டு வந்துருக்கான்னு” என்று உதட்டைக் கடிக்க, செல்வியின் அனல் பார்வை அவளை தாக்கியது.

செல்வியால் மாப்பிள்ளை என என்றழைக்கப்பட்டவன், ‘அய்யோ நம்மளை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டானே’ என நெளிந்து கொண்டு நிற்க, அருகில் நின்ற அவனின் தம்பியின் விழிகள் சித்ராக்ஷியை அளவெடுத்தது.

அவள் தான், பொதுவாய் இருவருக்கும் ஒரு சிறு புன்னகையை சிந்தி விட்டு, மாப்பிள்ளையிடம் “உட்காருங்க” என அங்கிருந்த சிமிண்ட் இருக்கையை கை காட்டினாள்.

அவனோ சற்று திரு திரு வென விழித்து, அவன் தம்பியை பார்த்து “உட்காருடா’ என்றான். அவனோ “நீ உட்காரு மாப்பிள்ளை… நான் அப்படியே அங்க காத்து வாங்கிட்டு இருக்கேன்” என்றிட, “எது மாப்புள்ளையா???” என உட்ச கட்ட அதிர்ச்சியில் தன் தம்பி இளமாறனின் நடவடிக்கையில் உறைந்து நின்றான் முகுந்த்.

செல்வி தான், “ஏன் புள்ள…! இந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியாகி கிட்டே இருக்குற வியாதி ஏதாவது இருக்குமோ?” என யோசனையாக கேட்க, சித்ராக்ஷி, “இருக்கும்க்கா… யார் கண்டது?” என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.

முகுந்த் தான் இளமாறனை பாவமாக பார்க்க, பின் தன் தமையனை கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்தவன், சித்ராக்ஷியிடம், “உங்க பேர் என்ன?” எனக் கேட்டான்.

முகுந்த் தான் பேசுவான் என அவள் எண்ணி இருக்க, மற்றவன் பேசியதில் ஒரு நொடி விழித்தவள் “சித்ராக்ஷி’ என்றாள் மெல்லிய குரலில்.

“ஓ! கேன்டி நேம்” என்றவன், அவள் படிப்பு பற்றியும் வேலை பற்றியும் கேட்க, அவளும் பொறியியல் படித்திருப்பதாகவும், சென்னையில் இருக்கும் பெரிய தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் கூறினாள்.

பழைய சித்ராக்ஷியாக இருந்திருந்தால், “ஏன் என் படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை போட்டு குடுக்க போறியா?” என கேட்டிருப்பாள். இப்போது அவள் எதையும் உணரும் மனநிலையில் இல்லையே.

செல்வி தான் பொறுமையிழந்து, “மாப்பிள்ளை பேசவே மாட்டாரா? இல்ல ஒரு வேளை பேச்சு வராதோ” எனக் கேட்டிட, அதில் “எது உனக்கும் நான் மாப்புளையா???” என அதற்கும் அவன் அதிர்ச்சியாகி முழிக்க, இளமாறன் தான் சிரிப்பை தனக்குள் அடக்க அரும்பாடு பட்டான்.

சித்ராக்ஷி தான், “சும்மா இருக்கா…” என்று விட்டு, இளமாறனை பார்க்க அவன் பார்வை அவளை தான் சுவாரசியமாய் மொய்த்தது. இவன் ஏன் நம்மளை இப்படி பார்க்குறான்? என எண்ணி, அமைதியாக தலையை குனிந்தபடி இருக்க, அப்போது கீழே இருந்து அந்த பெண்மணியின் குரல் உட்சஸ்தாதியில் ஒலித்தது. 

தரகரை தான் கண்டபடி, திட்டிக் கொண்டிருந்தாள். “எங்க வசதிக்கு ஏத்த மாதிரி பொண்ணு பார்க்க சொன்னா… இப்படி எங்களை ஒன்னும் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டு அசிங்கப் படுத்துறியா…” என கத்தும் போதே நால்வரும் கீழே வந்து விட்டனர்.

செல்வி பயந்த விழிகளுடன் பார்க்க, சித்ராக்ஷிக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அவளின் தந்தையின் கண்ணசைவில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நின்றாள்.

அந்த பெண்மணி தான், “மாறா வா போகலாம்….இந்த சம்பந்தம் நமக்கு வேணாம்” என்று கிளம்ப எத்தனிக்க, முகுந்த் “கடவுளே!” என நொந்து போனான். உடன் வந்த பெற்றவர்களும் செய்வதறியாது நிற்க, இளமாறன் எந்த உணர்வுகளையும் காட்டாது, அந்த பெண்மணியை ஒரு முறை முறைத்து விட்டு, ஆழமாக சித்ராக்ஷியை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென வெளியேறி விட்டான்.

பின் அனைவருமே சென்று விட, சித்ராக்ஷியின் முகம் தான் சிறுத்து விட்டது. இதில் மாப்பிள்ளை முகுந்த் இல்லை, இளமாறன் தானென்று பார்வதி கூறியதில் அவள் தீப்பார்வை செல்வியை சுட்டெரிக்க, செல்வி தான் பாவம் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.

கூட்டமாக இருந்ததில் யார் மாப்பிள்ளை என்று அவளுக்கு தெரியவில்லை. அதனால் இளமாறனிடமே “மாப்பிள்ளை யாரு?” எனக் கேட்க, அவன் குறும்பாக முகுந்தை கை காட்டி இருந்தான்.

அதனால் வந்த விளைவு தான் இது. தங்கையிடம் இதை கூறினால் இன்னும் திட்டு விழும் என அவள் அவளின் வீட்டிற்கு ஓடியே விட்டாள்.

மறுநாள், அலுவலகம் சென்றடைந்த சித்ராக்ஷி வேலையில் கவனமாக, அப்போது அவளை பார்க்க விசிட்டர்ஸ் வந்திருக்கிறார்கள் என பியூன் கூறியதில், ‘தன்னை பார்க்க யார் வந்திருப்பார்கள்… ஒருவேளை ரோஹித் ஆக இருப்பானோ?’ என தான் முன்னாள் காதலனை நினைத்த படி வெளியில் வர, அங்கு இளமாறன் தான் சுவற்றில் சாய்ந்த படி தலையை திருப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒன்றும் புரியாமல், அவனருகில் சென்றவள் அவனை சலனமற்ற விழிகளுடன் நோக்க, அவன் தான் “ஹாய்! சித்ரா. ஒர்க்ல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” எனக் கேட்க, அவள் “நீங்க ஏன் என்னை பார்க்க வந்தீங்க?” என்றாள் அமைதியாக.

இளமாறனோ தோளை குலுக்கி, “எனக்கு பார்த்த பொண்ணை நான் பார்க்க வந்துருக்கேன். உன் கூட பேசணும். நீ ஃப்ரீயா?” எனக் கேட்க, அவள் தான் திகைத்தாள்.

அத்தியாயம் 2

இளமாறன் தன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறியதில் திகைத்த சித்ராக்ஷி, “என்கிட்ட பேச என்ன இருக்கு? அதான் நேத்தே உங்க வீட்டுல பேச வேண்டியது எல்லாம் பேசிட்டாங்களே!” என்றாள் சற்று கடுப்புடன்.

அவனோ “ஹ்ம்ம்! ஆனா நான் இன்னும் பேசலையே” என்று விழி உயர்த்தி கையைக் கட்டிக்கொண்டு கூற, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

மீண்டும் அவனே, “சில்! சித்ரா… ஜஸ்ட் ஒரு 5 மினிட்ஸ் தான். காபி ஷாப் போறதுன்னாலும் ஓகே. இல்ல இங்கேயே நின்னு பேசுறதுன்னாலும் எனக்கு ஓகே.” என்று அழுத்தமாக நிற்க, சில நொடிகள் என்ன செய்வதென்று அறியாது பாவை இமைகள் படபடத்தது.

பின், மூச்சை இழுத்து விட்டவள், மற்றவர்கள் அவளை கவனிப்பதை உணர்ந்து, “பக்கத்தில காபி ஷாப் இருக்கு. அங்க போய் பேசலாம். பட் 5 மினிட்ஸ் தான்…” என்றாள் கண்டிப்புடன்.

அதற்கு பதில் கூறாது, ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி விழி மொழியில் வெளியில் கண் காட்ட, அவளும் அவன் பின்னே சென்றாள்.

அங்கு தன் பல்சரை பார்க் செய்து இருந்தவன், அதனை கிளப்பி விட்டு, சித்ராக்ஷியை காண, அவளின் பார்வை அந்த வண்டியிடமும், மனம் அவளுக்கு காயம் தந்த காதலிடமும் உறைந்து நின்றது.

“சித்ரா…” என்ற இளமாறனின் குரலில் தான் நிகழ்வுக்கு வந்தவள் அவனை காண, அவனோ “தூக்கம் வருதா சித்ரா… வேணும்னா வீட்ல போய் தூங்கிட்டு வர்றியா? ரோட்லயே எவ்ளோ நேரம் நின்னுகிட்டே தூங்குவ?” என்று கண் சிமிட்டினான்.

அதில் அவனை லேசாக முறைத்தவள், “நான் என் வண்டியில வரேன். நீங்க போங்க” என்றாள். அதற்கும் விழி உயர்த்தி ஒரு சிலிர்க்கும் பார்வையை வீசியவன் புன்சிரிப்புடன் வண்டியில் பறந்து விட்டான்.

‘இவருக்கு இப்போ என்ன தான் வேணுமாம்?’ என நொந்தவள், அவளின் மஞ்சள் நிற வண்டியில் அருகிலிருக்கும் ‘காபி டே’ க்கு விரைந்தாள்.

அங்கு அவன் அவளுக்கு முன்னரே சென்று ஒரு டேபிளில் அமர்ந்து, சர்வரிடம் “ரெண்டு கேப்பச்சினோ” என்றான். அவன் முன் சென்று அமர்ந்தவளுக்கு அழையா விருந்தாளியாய் ரோஹித்தின் நினைவு வர, “எனக்கு வேணாம்” என்றாள் அவசரமாக.

அவளை ஒரு முறை பார்த்த இளமாறன், “நீங்க எடுத்துட்டு வாங்க!” என்று உத்தரவிட, சர்வர் அங்கிருந்து நகரவும், சித்ராக்ஷி சற்று கோபமாக, “நான் எனக்கு எதுவும் வேணாம்னு சொன்னேன்” என்றாள் பல்லைக் கடித்துகொண்டு.

அவனோ, “ஓ! நீ உண்மையிலேயே வேணாம்னு சொன்னியா? நான் கூட பர்ஸ்ட் டைம் வந்த தால ஒரு பார்மாலிட்டிக்கு வேணாம்னு சொன்னன்னு நினைச்சேன். நான் வேணும்னா ஆர்டரை கான்செல் பண்ணிடவா?” என்று சுற்று முற்றி சர்வரை தேடுவது போல் பாவனை செய்தான்.

அவளோ இதற்கு என்ன பதிலுரைப்பது என்று புரியாது பேந்த பேந்த விழிக்க அவனோ ஆர்டரை கேன்சல் செய்ய பெரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

பின் அவளே, “பரவாயில்ல விடுங்க” என்றிட, அவனோ “ஆர் யூ சியூர்?” என்றான் கேள்வியாக. மனதிலோ ‘நான் ஆர்டர் பண்ணதை சாப்பிடாம உன்னை அனுப்பிடுவேனா என்ன?’ என்று புன்னகைத்துக் கொண்டான்.

சித்ராக்ஷி “ஹ்ம்ம்… என்ன பேசணும்?” என்றாள். சில நொடிகள் அவளையே பார்திருந்தவன், “சாரி” என்க அவள் ஏன் என்று பார்த்தாள்.

“நேத்து என் அத்தை அப்படி பேசிருக்க கூடாது… அதுக்கு தான் சாரி” என்றான் மனப்பூர்வமாக. ‘அதை நேத்து பேசும் போதே பண்ணிருக்கணும்’ என்று வாய் வரை வந்தாலும் அதனை விழுங்கி கொண்டு, “இட்ஸ் ஓகே… அவ்ளோ தான நான் கிளம்பலாமா?” எனக் கேட்க,

இளமாறன், “மெயின் விஷயமே இனிமே தான இருக்கு” என்றான் சோஃபாவில் நன்றாக சாய்ந்து, கைகளை கட்டிய படி. அவனின் திமிருடன் கலந்த குறும்பான நடத்தை அவளை கவரும் தவறவில்லை தான்.

ஆனாலும், அவள் அதனை கண்டுகொள்ளாது “இன்னும் என்ன?” என்றாள் மணியை பார்த்துக் கொண்டே.

அந்த நேரம் அவர்கள் ஆர்டர் செய்த கேப்பச்சினோவும் வந்து விட, “முதல்ல இதை குடி சித்ரா. நான் சொல்றேன்” என்றதில், வேறு வழியில்லாது அதனை ஒரே மூச்சில் குடித்தவள் “குடிச்சுட்டேன்… சீக்கிரம் சொல்றீங்களா… நான் ஆபிஸ் போகணும்” என்றாள்.

அவன் ஸ்டிராவில் காப்பாச்சினோவை உறிஞ்சிய படி, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு, பின், “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றவன் மீண்டும் காபியில் கவனமானான்.

அவன் கேட்ட கேள்வி தனக்கு புரியவில்லையா? அல்லது அவன் கூறியது தனக்கு தவறாக கேட்டு விட்டதா ? என ஒரு நொடி குழம்பியவள் “என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள் பேந்த பேந்த விழித்த படி.

“நான் உன் காதுல விழுந்ததை தான் சொன்னேன் சித்ரா. அண்ட் நான் சொன்னது உனக்கு தெளிவா கேட்டுச்சு. இருந்தாலும் மறுபடியும் கேட்கிறேன்…” என்றவன் குரலை கணைத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையாக பிரித்து “எனக்கு… உன்னை… பிடிச்சிருக்கு… நம்ம… கல்யாணம்… பண்ணிக்கலாமா?” என்றான் குறும்புடன்.

அவள் உறைந்த நிலையில் இருப்பதை கண்ட, இளமாறன் “ஹே ஃபிரீசிங் கேன்டி!!!” என அவள் முன் சொடுக்கிட்டவன், “என்ன அமைதி ஆகிட்ட?” எனக் கேட்க, அப்போது தான் தன்னை மீட்டுக் கொண்டவள், “நேத்து தான் உங்க வீட்டு ஆளுங்க அப்படி பேசிட்டு போனாங்க… நீங்க அப்போ அமைதியா இருந்துட்டு இப்போ வந்து இப்படி பேசுறீங்க? உங்க வசதிக்கு ஏத்த மாதிரி பொண்ணு பார்க்க வேண்டியது தான…” என்றாள் நறநறவெனப் பற்களைக் கடித்துக் கொண்டு.

அவளை சுவாரஸ்யமாய் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பார்த்தவன், “ப்பா! அப்போ நான் சாரி கேட்டதும் ‘இட்ஸ் ஓகே’ ன்னு சொன்னது சும்மா தானா? அப்போவே என்னை நீ திட்டிருக்கலாமே சித்ரா…? மனசுலயே வச்சுருந்தது இப்போ முக்கியமான விஷயம் பேசும் போது, உனக்கு கோபம் வருது பார்த்தியா?” எனக் கேட்க, அவள் தான் பேச்சற்று விழித்தாள்.

“இல்ல… அது…” என திணறியவளை குறுஞ்சிப்புடன் பார்த்தவன், “கூல்! ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஃபார் தட். நான் அத்தையை  உன் அப்பா கிட்ட சாரி கேட்கச் சொல்றேன்… ரைட்?” எனக் கேட்க, ‘என்ன இவரு இப்படி இருக்காரு?’ என்று குழம்பி தவித்தவள், “நான் கிளம்புறேன்” என எழுந்தாள் படபடப்புடன்.

இளமாறனோ, “நான் பேசும் போது எந்திரிச்சு போனா எனக்கு கோபம் வரும் சித்ரா… சிட்!” என்றான் லேசான கோபத்தை குரலில் ஏற்றி. அதில் பட்டென சித்ராக்ஷி இருக்கையில் அமர்ந்து விட்டு அவனை முறைக்க, அவன் மென்மையாக “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா கேன்டி?” என்று அங்கயே நின்றான்.

அதில் நொந்தவள், தலையை தாழ்த்தி “உங்களுக்கு கல்யாணத்தை பத்தி பேசணும்னா என் அப்பா,  அம்மா கிட்ட பேசுங்க…! அவங்க முடிவுதான் என் முடிவும்…” என இறுகிய குரலில் கூறியவள், “இப்போ நான் கிளம்பலாமா?” எனக் கேட்டாள் கேள்வியாக.

லேசாக தலையை நிமிர்த்தி, அவளை கீழ்க்கண்ணில் பார்த்த இளமாறன், கையை மட்டும் கதவை நோக்கி காட்ட, அவள் தான் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியே விட்டாள். அவளை கண்ட இளமாறனின் இதழில் தான் பொன் முறுவல் பூத்தது. கூடவே அவனின் அத்தை சாரதா மேல் கோபம் வேறு வர, அதே கோபத்தில்  வீட்டை நோக்கி சென்றான்.

அங்கோ ஏற்கனவே இளமாறனின் தாய் வித்யாவும், தந்தை செந்திலும் சாரதாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தனர்.

முகுந்த் சோபாவில் படுத்து கையை தலைக்கு கொடுத்தபடி வேடிக்கை பார்க்க, சாரதாவை முறைத்த படியே இளமாறன் ஷூவை கழட்டிக் கொண்டு வீட்டினுள் வந்தான். சாரதாவோ, அவர்கள் திட்டுவதை பெரிய விஷயமா கண்டுகொள்ளாது கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்க, இளமாறனை பார்த்து தான், ‘இந்த பையன் ஏன் நம்மளை முறைக்கிறான்’ என புரியாமல் பார்த்தார்.

அவன், அறைக்கு சென்று விட்டு, “அத்தை” என கர்ஜிக்கும் குரலில் சாரதாவை அழைக்க, அவரோ நம்ம எதுவும் தப்பா பண்ணிட்டோமோ? என குழம்பியபடி கடலையை  கீழே வைத்து விட்டு, முகுந்தை பார்க்க அவனோ அவர் வைத்த மீதி கடலையை பதம் பார்த்து கொண்டிருந்தான்.

அதில், அவனை முறைத்து விட்டு, சாரதா இளமாறனின் அறை நோக்கி செல்ல, அவர்களை பார்த்த இளமாறன் தான், சாரதாவின் தலையில் ‘நங்கு நங்கு’ என கொட்டி, “விஷம்! விஷம்! விஷம்! என்ன பண்ணி வைச்சுருக்க தெரியுமா அத்தை?” என கடுப்பாக கூற, அவரோ பாவமாக, “நீ தானடா என்னை அப்படி நடிக்க சொன்ன? இடையில வசனம் கூட மறந்துடுச்சு தெரியுமா?” என்று மலங்க மலங்க விழிக்க, அதில் கோபம் மறந்து பட்டென சிரித்து விட்டான்.

இங்கோ இளமாறன் பேசியதிலேயே உழன்ற சித்ராக்ஷி, வேலை முடிந்து யோசனையுடன் வீட்டிற்கு வர, அங்கு அவளின் தந்தை நடராஜ் உற்சாகமாக பார்வதியிடம் பேசிக்கொண்டிருந்தார். சித்ராக்ஷியை கண்டதும், “வாம்மா! இப்போ தான் மாப்பிள்ளை வீட்டுல இருந்து போன் பண்ணுனாங்க…! நேத்து பேசுன அந்த அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. உன்னை அவங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுருக்காம். இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு…” என மகிழ்வுடன் பேசிக்கொண்டிருக்க, பார்வதியும் மகிழ்ந்தார்.

செல்வியும் அப்போது தான், அடுத்த தெருவில் இருந்த அவளின் வீட்டில் இருந்து அங்கு வர, அவளும் நடந்ததை அறிந்து சந்தோசப்பட, சித்ராக்ஷியின் முகம் மட்டும் வாடி இருந்ததை கண்டாள். அவள் அறைக்கு  சென்றதும், செல்வியும் பின்னாலேயே சென்று “இன்னும் இப்படியே இருந்தா எப்படிடி? எவ்ளோ சந்தோசமான விஷயம்… மூஞ்சியை ஏன் இப்படி வச்சுருக்க? சித்தி சித்தப்பா வருத்தப்பட மாட்டாங்களா?” என அதட்டலாக கேட்க, சித்ராக்ஷியின் கரு விழியில் நீர் படலம் சூழ்ந்தது.

அதில் பதறிய செல்வி,  “என்ன சித்ராம்மா இது? நல்ல காரியம் பேசும் போது அழுதுகிட்டு… நடந்ததை எல்லாம் மறந்துட்டு வாழ பழகு டி!” என ஆதரவளிக்க முயல, சித்ராக்ஷி தான் “எப்படி கா மறக்க முடியும்? நான் அவன் மேல வச்ச காதலை மறந்தாலும், அவன் குடுத்த காயத்தை மறக்க முடியல…! அப்பா, அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் மனசெல்லாம் பயமா இருக்கு. என்னால எப்படி கா எல்லாத்தையும் மறந்துட்டு வாழ முடியும்? முதல்ல இதை என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரு ஏத்துப்பாரா?” என்றாள் வார்த்தைகள் தேய.

அதில் அதிர்ந்த செல்வி, “அட! இதை எதுக்கு டி நீ அவருகிட்ட சொல்ற? தேவையில்லாம உன் வாழ்க்கையை நீயே சிக்கலாகிக்காத. இப்போ தான் காதலிக்கிறது எல்லாம் பேஷன் ஆ போச்சே…! லேசா பார்த்தாலே காதல் வந்துருது, கண்றாவி வந்துருதுன்னு சொல்றீங்க. அது போக, கல்யாணத்தப்பவே மாப்பிள்ளைக்காரன் எனக்கு நிறைய கேர்ள் பிரெண்ட் இருந்தாங்க, ரெண்டு மூணு காதல் தோல்வி இருக்குன்னு தான் அசால்ட்டா சொல்றாங்களே… அப்பறம் ஏன்டி நீ தேவையில்லாம எதை எதையோ போட்டு குழப்பிக்கிற?” என்று சமனாதனம் செய்யும் நோக்கில் கூற, ‘இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்’ என்ற ரீதியில் தன் அக்காவை பார்த்தாள் சித்ராக்ஷி.

செல்வி அவள் பார்வையை புரிந்து கொண்டு, “அதுவா, என் கூட பன்னெண்டாவது வரை படிச்சவ ஒருத்திக்கு இப்போ தான் கல்யாணம் ஆச்சு. ஒரு தடவை கோவில்ல பார்த்தேன். அப்போ தான் அவள் சொன்னா, இந்த மாதிரி அவள் புருஷனுக்கு ஏற்கனவே காதல் தோல்வியாம், அப்போ அப்போ அந்த பொண்ணோட போட்டோவை கூட எடுத்து பார்த்துப்பாராம்… பொண்டாட்டிக்காரி அதை எல்லாம் கண்டுக்க கூடாதாம். அப்படியும் அவள் நீங்க அவளை மறந்துருங்கன்னு சொன்னதுக்கு, என்னால அவளை மறக்க முடியாது. அப்போ அப்போ அவள் ஞாபகம் வரத்தான் செய்யும். நீ எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாராம். ஆனால் அவளை நல்லாத்தான் பார்த்துக்குறாரு போல. அதனால அவளும் பெருசா எதுவும் கேட்டுக்கலையாம்…” என ஒரு கதை கூற,

அவளையே ஒரு நொடி பார்த்த சித்ராக்ஷி, “ஏன் கா? ஒருவேளை அந்த பொண்ணுக்கு லவ் பெயிலியர் இருந்து, அவனை மாதிரியே அவள் பண்ணுனா… அந்த பையனோட நடவடிக்கை எப்படி இருக்கும்?” என்றாள் கேள்வியாக.

அவள் கூற்றில் திகைத்த செல்வி, “என்னடி பேசுற…? பொம்பளைப்பிள்ளை இப்படிலாம் நடந்தா நல்லாவா இருக்கும்? கட்டுன புருஷனை தவிர வேற ஒருத்தனை நினைச்சுக்கிட்டு” என்று முகம் சுளித்தாள்.

அதில் விரக்தியாக புன்னகைத்த சித்ராக்ஷி, “ஒரு பொண்ணு உன்னாலேயே காதல் தோல்வி அடைஞ்ச ஒரு பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியல… அப்போ எப்படி அக்கா அவன் புருஞ்சுப்பான்?” என்று கேள்வியுடன் நிறுத்தியவள்,

“ஒரு ஆணுக்கு காதல் தோல்வி இருக்குன்னு தான் மனைவிக்கிட்ட சொல்ற தைரியமும் சுதந்திரமும், தனக்கும் ஒரு காதல் இருந்துச்சுன்னு புருஷன் கிட்ட சொல்ல எந்த பொண்ணுக்கும் இல்ல. தன்னை நல்லா பார்த்துப்பான், எப்போவும் தன்னை விடமாட்டான்ற நம்பிக்கையில தான் எல்லா பொண்ணும் காதலிக்கிறாங்க… ஒரு சில நேரம் எடுத்த முடிவு தப்பா கூட போயிடுது. அந்த காதலை மறக்கவும் முடியாமல், காயத்தை மறைக்கவும் முடியாம அந்த பொண்ணு அதுல இருந்து வெளிய வர்றதுக்கு முன்னாடியே வேற ஒரு வாழ்க்கையை ஏத்துக்க வேண்டியதா போயிடுது.

ஆனால், அங்க ஒன்னும் எந்த புருஷனும் தான் மனைவியோட காதலை ஏத்துக்குறது இல்ல. ஒண்ணு, கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன் சொல்லலைனு சண்டை வரும். அப்படியே கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னா, அப்போ அதை காசுவலா எடுத்துக்கிட்டு, கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் ஆனதும், அதை சொல்லி குத்தி காட்டுவாங்க. ஆக மொத்தம், ஏமாத்துனவங்க நல்லா தான் இருப்பாங்க. நம்பி ஏமாந்ததுனால ஒவ்வொரு நாளும் ஒரு பொண்ணு நரகத்துல வாழனும் இல்ல…?” என்று பேசி முடிக்க அங்கு பலத்த அமைதி நிலவியது.

செல்விக்கோ, அவள் பேசுவது புரிந்தாலும், இதற்கு என்ன தீர்வு என்று புரியாது குழம்பி அமர்ந்திருக்க, கூடவே தங்கையின் வலி அவளையும் தாக்கியது.

திடீரென அறைக்கு வெளியில், ஒரே பரபரப்பாக  இருக்க, செல்வி சிந்தனையை களைந்து வெளியில் எட்டிப்பார்த்தாள். அங்கு சோபாவில் அமர்ந்து முகுந்த் நடராஜிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, சட்டென உள்ளே வந்து “அந்த மாப்பிள்ளைக்காரன் தான் வந்துருக்கான்” என்றாள் விழி விரித்து.

அதில் ‘சாயந்தரம் தான பேசிட்டு போனான்… இப்போ ஏன் வந்துருக்கான்’ என்று சித்ராக்ஷியின் இதயம் உச்ச கட்ட வேகத்தில் துடிக்க, தயக்கத்துடன் வெளியில் வந்து பார்த்தவள் அங்கு முகுந்த் அமர்ந்திருப்பதை கண்டு செல்வியை முறைத்தாள்.

அவளோ, “அட சே! இவனை மாப்பிள்ளைன்னு மனசுல ஃபிக்ஸ்  பண்ணிட்டு, மறந்தாப்பல அப்டியே சொல்லிட்டேன்” என புலம்பியபடி தங்கையை கண்டு அசடு வழிந்தாள். அவள் பாவனையில் லேசாக புன்னகைத்த சித்ராக்ஷி முகுந்தை வரவேற்று விட்டு உள்ளே நுழைய, செல்வி அடுக்களையில் நுழைந்து அவனுக்கு பார்வதிக்கு உதவி செய்தாள்.

கட்டிலில் அமர்ந்தவள் இலக்கற்று, போனை நோண்டிக்கொண்டிருக்க, அப்போது முக புத்தகத்தில் அவளின் முன்னாள் காதலன் ரோஹித்தின் தேனிலவு புகைப்படம் வர, அதில் ரோஹித் அவன் மனைவியின் தோளில் கை போட்ட படி போஸ் கொடுத்ததில், வெறுமையாக அதனையே வெறித்தாள்.

அந்த நேரம், “ஹெலோ” என்ற ஆடவனின் குரல் கேட்க, விலுக்கென நிமிர்ந்தவள் அங்கு, புன்னகைத்த படி இளமாறன் நிற்பதை கண்டு விழி விரித்தாள். அவனோ எந்த தயக்கமும் இன்றி உள்ளே வந்து, அவள் அருகில் இடைவெளி விட்டு அமர, அவளோ திகைத்து பார்த்தாள்.

இளமாறன் தான், “ஹே! ஃபிரீசிங் கேன்டி! என்ன அப்படி முழிக்கிற? என்னை இன்வைட் பண்ண நீ வெளிய வருவன்னு பார்த்தேன். நீ வரலைன்னதும் நானே வந்துட்டேன். வந்தவனை வாங்கன்னு கூப்பிட மாட்டியா?” எனக் கேட்க, அவள் அப்போதும் உறைந்து தான் இருந்தாள்.

“சித்ரா! என்னை ‘வா’ன்னு கூப்பிடுவியா மாட்டியா?” என அழுத்தமாக கேட்க, அவள் சட்டென நிலைக்கு வந்து “வா… வாங்க!” என்றிட, அவனோ வசீகரமாய் ஒரு சிரிப்பை சிந்தி “வந்தேன்!” என்றான் குறும்பாக. அவள் தான் ‘இவன் மனுஷன் தானா? இல்ல வேற ஏதாவதா?’ என கண் கொட்டாமல் அவனையே பார்த்தாள்.

அத்தியாயம் 3

இளமாறனின் குறும்பு பேச்சில் திகைத்திருந்த சித்ராக்ஷி, மெதுவாக “நான் இப்போ தான் வெளிய வந்தேன். நீங்க இல்ல” என்றாள் தலையை குனிந்த படி. இளமாறன் கட்டிலில் நன்கு சாய்ந்து கொண்டு, “ஹ்ம்ம்! நானும் அண்ணாவும் தான் வந்தோம். போன் வந்ததுனால நான் பேச வெளிய போய்ட்டேன் கேன்டி. என்னை தேடுனியா என்ன?” என விழியுயர்த்திய படி கேட்டான்.

அதில் சித்ராக்ஷி தான் “இல்ல இல்ல… அது…” என்று என்ன சொல்வது என புரியாது முழிக்க, அதனை ரசனைப்பார்வையில் வருடியவன், “அப்போ தேடலையா?” என்றான் மீண்டும் கேள்வியுடன்.

‘சரியான விடாக்கொண்டானா இருப்பான் போல’, என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளை காப்பாற்றவென்றே செல்வி “சித்ராம்மா!” என அழைத்தபடி அறை வாசலில் தொங்கி கொண்டிருந்த திரையை விலக்கி உள்ளே வர, அங்கு இளமாறன் இருப்பதை கண்டு அவள் கண்கள் தெறித்து விடும் அளவு விரிந்தது.

“நீ நீங்க… எதுக்கு உள்ள வந்தீங்க?” என்று செல்வி  திக்கி திணறி கேட்க, அவன் “ஏன் நான் வரக்கூடாதா? நான் கட்டிக்க போற பொண்ணு ரூம் க்கு தான வந்துருக்கேன்” என அவன் கேள்வியாய் வினவ, செல்வி மேலும் திகைத்து, “அது… அது… அதான் இன்னும் கல்யாணம் ஆகலையே…. இதெல்லாம் தப்பு” என்று சத்தமாக ஆரம்பித்தவளின் குரல், அவனின் கூர் பார்வையில் தேய்ந்து நின்றது.

சித்ராக்ஷி தான், ‘அவன் என்னையவே பேசி ஆஃப் பண்றான்… இவள் வேற?’ என தமக்கைக்காக பரிதாபப்பட, இவன் என்ன பதில் சொல்ல போறான் என்று சற்று ஆர்வமாகவே பார்த்தாள். அவனோ “இது தப்பு இல்ல செல்வி டியர்… கல்யாணம் பண்ணிக்க போறவங்க பேசிட்டு இருக்கும் போது, பெர்மிசன் இல்லாம உள்ள வர்றது தான் தப்பு… சோ…” என வாசல் நோக்கி கையை காட்ட, அவனின் “டியர்” என்ற அழைப்பிலும் திமிர் பேச்சிலும் செல்விக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. ‘ஆத்தி, என்ன இவரு இப்புடி பேசுறாரு…’ என செல்வி பேந்த பேந்த விழிக்க, சித்ராக்ஷி  ஒரு நொடி பக்கென சிரித்து விட்டாள்.

இப்போது செல்வியின் தீப்பார்வை ‘அடி துரோகி!’ என்று சித்ராக்ஷியை நோக்கி தாவ, அவளின் புன்னகையில் இளமாறன் இதயம் தான் அவள் புறம் தாவி விழுந்தது. அவன் அவளையே காண, செல்வி தான் பேயறைந்ததை போல் வெளியில் வந்தாள்.

நடராஜன் அடுக்களையில் பார்வதியுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க இருக்க, அங்கு முகுந்த் மட்டும் இருந்தான். செல்வியின் திகைத்த முகத்தை கண்டவன், ‘இந்த லூசு ஏன் இப்படி வருது…’ என குழம்பினான். ஏற்கனவே, தன் தம்பியின் மூலம் முகுந்த் தான் மாப்பிள்ளை என ஏமாறியதை அறிந்திருந்தான். இப்போதும், தன் தம்பியின் குறும்பில் சிறப்பாக அவளுக்கு இதயம் வெடித்திருக்கும் என உணர்ந்தவன், “எக்ஸ்கியூஸ் மீ…” என்றழைத்தான்.

அவள் இவனை என்னவென்று பார்க்க, “உள்ளே ஏதாவது பேய் படம் ஓடுச்சா?” எனக் கேட்க, அவளோ புரியாது மேலும் விழித்தாள். அதில் புன்னகைத்த முகுந்த், “இல்ல ஏதோ பேயறைந்த மாதிரி வர்றியே… ஒருவேளை காத்து கருப்பு எதுவும் அடிச்சுடுச்சோன்னு  நினைச்சேன்…” என்றான் நக்கலாக.

அதில் அவனை முறைத்தவள், பேச வரும் முன் நடராஜன் உள்ளே வர, அவளோ சிட்டாக அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். அவள் சென்ற திசையை பார்த்த முகுந்த் தான், லேசாக புன்னகைத்து கொண்டான்.

உள்ளே இருந்த இளமாறனோ தன்னவளின் புன்னகையில் அவளையே ரசிக்க, சட்டென முக பாவத்தை மாற்றிக் கொண்டாள். பின், அவனே “நாளைக்கு உனக்கு ஆபிஸ் இருக்கா சித்ரா?” எனக் கேட்க, அவள் நாளைக்கு மீட் பண்ண சொல்லுவானோ என எண்ணியபடி, “ஆமா, ஒர்க் இருக்கு” என்றாள்.

சிறிது நேரம் சிந்தித்தவன், “உனக்கு ஆபிஸ் எப்போ லீவ்?” எனக் கேட்டதும், தன்னை நொந்து “சண்டே லீவ் தான்” என்றாள்.

“சண்டே க்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. ஓகே… சண்டே எங்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்… உனக்கு ஓகே வா?” எனக் கேட்க, அவள் அதிர்ந்து விட்டாள். அவள் பதில் கூறும் முன்னே, “ஸ்ஸ், மேடம்… மேரேஜ் விசயத்தை பத்தி அப்பா, அம்மா கிட்ட தான பேச சொன்னீங்க. பட் நீ எப்போ ஃப்ரீன்னு தெரியணும் ல அதான் உன்கிட்ட கேட்கிறேன்” என்றவனை ‘பே’ வென பார்த்தாள்.

ஏனோ அவனின் அதிரடியில் கண்ணீர் இப்போதோ அப்போதோ என வெளியில் வர துடித்துக் கொண்டிருக்க, அவனோ அதனை உணராது “அப்பறம், என்கேஜ்மெண்ட் க்கு ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணனும். நான் உனக்கு கலர்ஸ் செண்ட் பண்றேன் கடையில இருந்து. நீ ஆபிஸ்ல இருந்தே சூஸ் பண்ணு. டன்? நான் கிளம்புறேன்” என்று பேசி விட்டு வெளியில் சென்றிட அவள் தான் உறைந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.

மனமெங்கும் ஓர் பய உணர்வு ஆட்கொள்ள, இன்னதென்று பிரித்தறிய இயலா வலி ஒன்று தோன்றியது. வெளியில் நடராஜிடம் சில நிமிடம் பேசிவிட்டு, இரு ஆண்களும் கிளம்ப முகுந்தின் விழிகள் தன்னிச்சையாக அடுக்களையை தழுவியது செல்வியை தேடி.

ஆனால் அவளின் தரிசனம் காணாமலேயே அவன் சென்று விட, அங்கு செல்வி பார்வதியிடம், “என்ன அந்த மாப்பிள்ளைக்காரரு இப்படி இருக்காரு சித்தி? அவரு பாட்டுக்கு ரூமுக்கு போய் உட்காந்துருக்காரு…” என மிரள, பார்வதி, “அந்த பையன் அப்படி தான் எல்லாத்தையும் உடனே உடனே முடிவெடுக்குது. எதிர்த்து கூட பேச முடியல. எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு அந்த தம்பி கிட்ட பேச. ஆனால், நம்ம விருப்பத்தை கேட்டு தான் முடிவெடுக்குறாரு. வர்ற ஞாயிறு நிச்சயமும், அடுத்த மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டே போய்ட்டாரு… அதுக்குள்ள எப்படி கல்யாண வேலையை பார்க்குறதுன்னு தெரியல” என்று சற்று புலம்பிடவே செய்தார்.

“என்னது அடுத்த மாசம் கல்யாணமா?” என திகைத்தவள், தங்கையை நினைத்து தான் குழம்பி போனாள், அவள் எப்படி சமாளிக்க போறாளோ என்று. பின், தீவிர சிந்தனையில் இருந்த சித்ராக்ஷியின் முன்  அமர்ந்தவள், “என்னடி யோசனை?” எனக் கேட்டாள்.

“அவருகிட்ட என்னை பத்தி பேசணும்க்கா…” என புருவம் சுருக்கி சித்ராக்ஷி கூற, செல்வி புரியாமல் “யாருகிட்ட டி சொல்ல போற?” என்றதில், லேசாக முறைத்தவள், “இளமாறன் கிட்ட என்னை பத்தி சொல்ல போறேன்…” என்றாள்.

அதற்கு செல்வியோ, “கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாதுடி. அதான் கல்யாணம் பண்ணிட்டு காலம் பூரா பேசத்தான போறீங்க . அப்போ உன்னை பத்தி, உனக்கு பிடிச்சதை பத்தி சொல்லி, ஒருத்தருக்கொருத்தர் புருஞ்சுக்கோங்க” என்று வெகுளியாய் கூற, சித்ராக்ஷி அவளை பார்வையாலேயே எரித்தாள்.

அதில் செல்விதான், “ஏண்டி இப்படி முறைக்கிற?” என ஒரு மாதிரியாக பார்த்து கேட்க, அவளோ கடுப்பாக, “அக்கக்கா! நான் என்ன அவன் கூட பேசி, சிரிச்சு, லவ் பண்ணவா போறேன்? என்னை பத்தின்னு சொன்னது என் முடிஞ்சு போன காதலை பத்தி” என்றிட, அவள் கூற்றில் திகைத்த செல்வி, “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை சித்ராம்மா? அதான் முடிஞ்சு போன காதல்ன்னு நீயே சொல்லிட்டியே இனிமே அதை பத்தி பேச என்ன இருக்கு? தேவையில்லாம ஏதாவது பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திடாத… அப்பறம் சித்தியும் சித்தப்பாவும் ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க…” என எச்சரித்தவள், கிளம்பி சென்று விட, சித்ராக்ஷி தான் கலங்கி போனாள்.

மறுநாள், 7 மணி அளவிலும் தூக்கம் கலையாது, கனவில் சித்ராக்ஷியுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த இளமாறன் மீது, சாரதா, ஒரு வாளி தண்ணீரை வாரி இறைத்தார். அதில் திடுக்கிட்டு எழுந்த இளமாறன், சாரதாவை கண்ணை சிறிதாக்கி முறைக்க, அவரோ, “ஏண்டா என்னை உன் அப்பா அம்மா கிட்ட திட்டு வாங்க வச்சுட்டு, நீ பகுமானமா தூங்கி கிட்டு இருக்கியா? ரெண்டு பேரும் என்னை பார்க்குற நேரம்லாம் திட்டுறாங்க…” என்று புகார் கூறியதில், “அதுக்கு? இப்படி தான் எழுப்பி விடுவியா அத்தை?” என்றவன் அவரை அடிக்க துரத்த, அவரோ பலம் கொண்ட மட்டும் அவனிடம் இருந்து தப்பித்து ஓடினார்.

இடையில் முகுந்த் வந்து, “ஐ! அத்தை உன்னை நான் புடிச்சுட்டேன்!” என்று கையை பிடிக்க, “டேய்! விடு டா கையை! ஐயோ என்னை கொடுமைபடுத்துறாங்க… கொலை பண்றாங்க” என்று கத்தியவரின் வாயை பொத்தினான் இளமாறன்.

உடனே அவனின் தந்தை செந்தில் வந்து விட, வந்தவர், “என் தங்கச்சியை என்னடா பண்றீங்க ரெண்டு பேரும் சேர்ந்து” என சண்டைக்கு வந்தார். சாரதா, “நல்லா கேளுங்க அண்ணா! பொண்ணு வீட்டுல என்னை அப்படி பேச சொல்லிட்டு, உங்க எல்லார்கிட்டயும் எனக்கு திட்டு வாங்கி குடுத்துட்டு, இப்போ இவனே போய் கல்யாண தேதி குறிச்சுட்டு வந்து நிக்கிறான். இது நியாயமா? அடுக்குமா?” என அவர் அடுக்கிக் கொண்டே போக, அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

அவனின் தாய் வித்யா, “ஏன் மாறா இப்படி பண்ணுன? அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கும்…? அதுவும் உனக்கு கூட்டுக்கு உன் அத்தையும், அண்ணணுமா?” என எகிறியதில், முகுந்த் “ஐயோ அம்மா! எனக்கு ஒன்னும் தெரியாது. இவன் அங்க போய் அந்த பொண்ணு கிட்ட என்னை தான் மாப்பிள்ளைன்னு சொல்லி கோர்த்து விட்டான்…” என்று மிரண்டத்தில், இப்போது மற்ற மூவரும் இளமாறனை வெறித்தனர்.

அவனோ, கூலாக “நான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்… நீங்க கேட்கல. அதான் அந்த பொண்ணு வீட்டுல அப்படி பேச சொன்னேன்” என்று அசால்டாக கூறிட, சாரதா, “அப்பறம் ஏண்டா மருமவனே அந்த பொண்ணை மறுபடியும் பார்க்க போன?” எனக் கேட்டார் கையை முறுக்கிக் கொண்டு.

அதில் புன்னகைத்தவன், “அது… எனக்கு சித்ராவை புடிச்சுருச்சு அதான்…” என்று அழகாய் வெட்கப்புன்னகையுடன் வேறு புறம் பார்த்ததில், முகுந்த் விழி விரித்து, “புல்டவுசரே புன்னகைக்கிறதே! அடடே! அதிசயக்குறி…!” என அவனை வார, மாறனோ, “டேய் நான் புல்டவுசரா?” என்று முஷ்டியை மடக்கி அவனை குத்த வந்தான்.

அவனை தடுத்த செந்தில், “மாறா… இது என்ன விளையாட்டு தனமா? வாழ்க்கை…!” என்று தீவிரமாக கூற வர, அதில் மாறனோ, “இன்னைக்கு என்ன வீட்டுல எல்லாரும் ஒரே ரைமிங் ஆ பேசுறீங்க?” என்று யோசனையுடன் கேட்டான்.

பின், செந்திலின் வெம்மை பார்வையில், “நீங்க கன்டினியூ டாடி!” என்றவன் தலையை குனிந்த படி நிற்க, அவனின் குறும்பில் மற்ற மூவரும் நமுட்டு சிரிப்புசிரித்தனர். செந்திலோ, “உனக்கு அந்த பொண்ணை பிடிச்சு போச்சுன்னா… அப்போவே சொல்லிருக்கலாம்ல மாறா? உன் அத்தையை அப்படி பேச வைச்சு… அவங்க மனசை கஷ்டப்படுத்தி… அப்பறம் திடீர்னு போய் நிச்சயம் தேதியை வேற குறிச்சுட்டு வந்துருக்க. எங்களுக்கு சந்தோசம் தான். ஆனால், நீ இப்படி படார் படார் ன்னு பண்றதை பார்த்தா, எங்களுக்கு முன்னாடி உன்னை கட்டிக்கிற போற பொண்ணுக்கு தான் நெஞ்சு வலி வந்துடும் போல” என்று  முறைத்திட, அதில் கிளுக் என சிரித்து விட்டான்.

பிறகு, அனைவரும் முறைப்பதை கண்டு, “ஓகே ஓகே கூல்…! நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன் நீங்க கேட்கல. அதான் அப்படி பேச சொன்னேன். அவங்களுக்கு ஹர்ட் ஆகும்னு எனக்கும் தெரியும். எத்தனை பொண்ணுங்க முகுந்தை ஹர்ட் பண்ணாங்க. அவங்க பாவம் பார்த்தாங்களா? அதான், இந்த அரேஞ்மென்டட நிறுத்த அதே வெப்பனை நான் கையில எடுத்தேன்” என்று அனல் பறக்க கூறியவனை, முகுந்த் தான் ‘ஏன்டா இப்படி?’ என்று பரிவாய் பார்த்தான்.

சில நொடிகளில் தன்னை சமன்படுத்திய இளமாறன், “ஆனால், சித்ரா அந்த மாதிரி பொண்ணு இல்லன்னு. அவள் கூட பேசுன ரெண்டு நிமிஷத்துலயே தெரிஞ்சுருச்சு. அவள் கிட்ட பேசிட்டு, அத்தை கிட்ட எதுவும் பேசவேணாம்ன்னு சொல்ல வர்றதுக்குள்ள, இந்த தெய்வம், நாடகத்தை சிறப்பா அரங்கேற்றிருச்சு…” என்றான் சாரதாவை முறைத்த படி.

அவரோ, ‘ஆமா! நீ திடீர்னு ரெமோ ஆவன்னு நான் கனவா கண்டேன்… காலைல உலகத்தை சீர்திருத்துற மாதிரி பேசிட்டு, பொண்ணை பார்த்ததும் மண்ணை கவ்விட்ட’ என்று வாயினுள் முணுமுணுக்க, அது முகுந்தின் காதில் விழுந்ததில் அவன் வாயினுள் சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டான்.

இளமாறன் தான், “என்னது?” என்று விழி உயர்த்தி கேட்க, சாரதா, “ஒன்னும் இல்லைடா யப்பா! நிச்சயத்துக்கு நிறைய வேலை இருக்கு… எல்லாரும் போய் பாருங்கனு சொன்னேன் போங்க எல்லாரும்… சும்மா கூட்டம் கூடிகிட்டு…” என்று அனைவரையும் விரட்ட, செந்திலும், வித்யாவும் எப்போதும் போல், உள்ளுக்குள் அவர்களின் சேட்டையை ரசித்த படி அங்கிருந்து நகர்ந்தனர்.

செந்தில், சிறிதாக மளிகை கடை வைத்து, தொழில் ஆரம்பிக்க, அவரின் பல வருட உழைப்பில் அது இப்பொழுது டிபார்ட்மென்டல் ஸ்டோராக உயர்ந்துள்ளது. மகன்களின் படிப்பிற்கும், வளர்ச்சிக்கும் பணம் ஒரு தடையாய் இல்லாதவாறு, ஓடி ஓடி உழைத்தவர், வாழ வேண்டிய வயதில் கணவரை இழந்து பிறந்த வீடே தஞ்சம் என வந்த தன் தங்கையையும் அன்புடன் அரவணைத்தார். அவருக்கு பக்கப்பலமாய் இல்லறத்தை இனிமையாக்கிய வித்யாவின் பொறுப்பும் அவ்வீட்டை பூங்காவாக மாற்றியது.  

இளமாறன், எம்பிஏ படித்து விட்டு, நகரத்தின் மையத்தில் புகழ்பெற்ற துணிக்கடை ஒன்றை நிறுவி, அதில் வெற்றியும் கண்டுள்ளான். முகுந்த் இளமாறனின் அண்ணன். எம். காம் முடித்து விட்டு, பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் தம்பி தொழில் தொடங்க போகிறேன் என்றதில், அவனுக்கு லோன் வாங்கி கொடுத்து, அகௌண்ட்ஸ் பிரிவிலும், அவனுக்கு பெரும் உதவியாக இருக்கிறான்.

பெரியதாக சொத்து இல்லை என்றாலும், சிறியதாக செந்திலின் உழைப்பில் ஒரு சொந்த வீடு இருந்தது. அது, மகன்களின் உழைப்பில் பெரியதாக்கப் பட்டு, குட்டி பங்களாவாகியது. மொத்தத்தில் அளவான நிறைவான குடும்பம்.

யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் அங்கு யாருக்கும் இருந்தது இல்லை. ஆனால், அவர்களின் மனதை புண்படுத்தியது, முகுந்திற்கு பெண் பார்க்கும் போது தான். அவன் சற்று நிறம் கம்மியாக இருந்ததில், சிலர் அவனை தவிர்த்து விட, ஒரு முறை மணப்பெண்ணே, அவனிடம், “உங்களை விட உங்க தம்பியை தான் எனக்கு பிடிச்சுருக்கு” என்று அவனிடமே கூறி விட, இளமாறன் பொங்கி விட்டான்.

அவனை அடக்கி வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் முகுந்திற்கு தான் பெரிய பாடாக போய் விட்டது. ஆனால், அவனே “அதான் அந்த பொண்ணு உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்லுதுல, பேசாம நீ முதல்ல கல்யாணம் பண்ணேன்…” என்ற அண்ணனின் கூற்றில், கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவான் இளமாறன்.

அதன் பிறகும், கூட பெண் பார்க்க செல்லுகையில் முதலில் இவனை மாப்பிளை என பார்ப்பது அவனுக்கு கடுப்படிக்கும். இறுதியாக பார்த்த பெண், “நம்ம ஸ்டேட்டஸுக்கு  இல்லைன்னாலும்,கொஞ்சம் அழகா இருந்தவாவது பரவாயில்லை” என்று கூறி விட, அதோடு முகுந்த் நாசுக்காக திருமணத்தை மறுத்து விட்டான்.

அதன் பிறகே, சித்ராக்ஷியின் புகைப்படம் அவர்கள் கைக்கு வந்தது. முகுந்த் திருமணம் வேண்டாம் என்று முரண்டு பிடிக்க, ஏனோ, அவளுக்கு இளமாறன் பொருத்தமாக இருப்பான் என்று வித்யாவிற்கு தோன்றியது. அதில் அவனை வற்புறுத்தி அழைத்து செல்ல, அங்கு சென்றவனுக்கோ முதலில் பிடித்தது செல்வியை தான்.

அவள் “யாரு மாப்பிள்ளை?” என அவனிடம் வந்து கேட்டதும், அவன் முகுந்தை காட்டியதும், அவள் புன்னகை முகத்துடன் தலையை ஆட்டி விட்டு உள்ளே சென்றதும் அவனுக்கு பிடித்து விட்டது. பின், சித்ராக்ஷியை கண்டதும் மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான். தனியாக பேசும்போதும் செல்வி அவளுடன் வந்ததை கண்டவன் அவளை சீண்டிட, முகுந்தையே மாப்பிள்ளை  ஆக்க,அப்போது கூட சித்ராக்ஷியின் முகத்தில் ஒரு சுளிப்பு கூட இல்லாது, அவனை உபசரித்ததில் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

இப்போதும், அவளின் புகைப்படத்தை கண்டு ரசித்துக் கொண்டிருக்க, அவனே எதிர்பாராதவாறு அவள் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் குஷியானவன், உடனே போனை எடுத்து “சித்ரா?” என்று ஆர்வமாய் கேட்க, அதில் சித்ராக்ஷி தான் நம்மதான்னு இவனுக்கு எப்படி தெரிஞ்சுது…? என விழித்தாள்.

பின் அவள் மனமே, ‘நீ அப்பா போன் ல இருந்து நம்பரை சுட்ட மாதிரி, அவன் சுட்டு வச்சுருப்பானா இருக்கும்’ என்று எண்ணிக்கொண்டு, “இளமாறன்?” என்று கேள்வியாய் கேட்டாள் அவளும்.

“ஹ்ம்ம்! எஸ் சர்ப்ரைஸ் சாக்கோ! இட்ஸ் மீ!” என்றிட, அவளோ “என்னது? சர்ப்ரைஸ் சாக்கோ வா?” எனக் கேட்டாள் புரியாது. இளமாறன் புன்னகைத்தபடி, “ஆமா, சர்ப்ரைஸ் சாக்கோ… நேத்து புல்லா நீ ஷாக் ஆகிகிட்டே இருந்த, இன்னைக்கு போன் பண்ணி சர்ப்ரைஸ் தர்ற, அதான் பெட் நேம் சேஞ்ச் பண்ணிட்டேன்” என்று குறும்புடன் கூறியதில், அவள் சுள்ளென “என் பேரை சொல்லி கூப்பிட்டா போதும்… பெட் நேம் லாம் தேவையில்லை” என்றாள்.

சில நொடிகள் அவனிடம் இருந்து பதில் வராது போக, அவளுக்கு தான் உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. “ஹெலோ! ஹெலோ…” என்று அவள் கத்த, அவன், “சொல்லுங்க மிஸ் சித்ராக்ஷி! என்ன விஷயம்” என்று ஃபார்மலாக கேட்டதில், அவள் தான் திணறி விட்டாள். இந்த குரல் அவளை ஏதோ மாதிரி வதைப்பதை உணர்ந்து, “அது அது… உங்ககிட்ட நேர்ல பேசணும்” எனக் கூறிட, அவன் “ம்ம்” என்று விட்டு போனை வைத்து விட்டான்.

அது அவள் முகத்தில் அறைந்தது போல் இருக்க, வெகுநேரம் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் 4

இளமாறன் பேசியதில் போனையே வெறித்திருந்த சித்ராக்ஷிக்கு, படபடப்பாக இருந்தது. அப்படி சொல்லிருக்க கூடாதோ என ஒரு மனம் சிந்தித்தாலும், மற்றொரு மனமோ ‘அவரு மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்காரு. அவரு இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணுவாரு, பேசுவாரு… நான் அப்படியே கேட்டுக்கிட்டு இருக்கணுமா?’  என அவனை வறுத்தது.

பல மாடி அடுக்குகளை கொண்ட, அந்த தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் இருந்தவளுக்கு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. லேசாக இளமாறனை எண்ணி பயமும் எழுந்தது.  சில நொடிகளில் “ஹெலோ! மிஸ் சித்ராக்ஷி” என்ற இளமாறனின் குரல் அவளுக்கு அருகில் கேட்க, வெடுக்கென நிமிர்ந்தவள், எதிரில் நிற்பவனை கண்டு பேந்த பேந்த விழித்தாள்.

வார்த்தையில் இருந்த அந்நியத்தன்மை அவன் கண்களில் இல்லை. அது குறும்புடன் அவளை பார்த்து புன்னகைக்க, இவளுக்கு தான் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“நீ… நீங்க எப்படி உள்ள வந்தீங்க?” என திக்கி திணறி கேட்டவளிடம், “லிப்ட்ல தான் வந்தேன் கேண்டி. அப்பறம் லிப்ட் ல இருந்து நடந்து, இங்க வந்தேன்… ஏன் நீங்கலாம் ஆபிஸ்குள்ள ஹெலிகாப்டர்ல வருவீங்களா?” என்ற சிந்தனையை சொற்களில் தேக்கி, உதட்டில் புன்னகையை தாங்கி கேட்க, சித்ராக்ஷி அவனை முறைப்புடன் பார்த்தாள். பின், “இல்ல… நாங்க கயிறு போட்டு மேல ஏறிடுவோம்… அதான் நீங்க  கொண்டு வந்த கயிறு எங்கன்னு பார்த்தேன்” என்றாள் அவன் பின்னே தேடிக்கொண்ண்டே.

அவளின் இயல்பான நக்கல் பேச்சில் ஒரு நொடி விழி விரித்தவன், “பார்ரா! உனக்கு முறைக்கவும், சுள்ளுன்னு பேசவும் தான் தெரியும்ன்னு நினைச்சேன்… கிண்டல் பண்ண கூட தெரியுமா என்ன?” என்று கையை கட்டிபடி கேட்க, அவளுக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது.

தலையை  குனிந்த படி முகம் சுருங்கியவள், “சாரி” என்றாள்.

அவனோ, “ஹே! நான் சும்மா தான் சொன்னேன். உடனே சீரியஸ் ஆகாத…” என்றவன் எங்கோ கை காட்டி, “ஆமா, அது யாரு உன் மேனேஜர் ஆ…?” எனக் கேட்டான். அவளும் தலையை நிமிர்த்தாமல் ம்ம் என்றிட, “அவரு உன்னைய தான் முறைச்சுட்டு இருக்காரு… நட்ட நடு ஆபிஸ் ல வேலையை பார்க்காம என்கூட கடலை போட்டுட்டு இருக்கன்னு…” என்று மெதுவாக கூறிட, அதன் பிறகே, தான் அலுவலகத்தினுள் நின்று கொண்டு, பேசிக்கொண்டிருக்கோம் என்றே அவளுக்கு உரைத்தது.

“அய்யோய்யோ! போச்சு! இந்த மேனேஜர் லூசு சும்மாவே லூசுத்தனமா பேசும். இப்போ ஒரு மணிநேரத்துக்கு லெக்ச்சர் எடுக்க போகுது… நீங்க போங்க நான் பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்” என்று அவசரப்படுத்த, அதற்குள் அந்த மேனேஜர் மணி அவர்கள் அருகில் வந்திருந்தான்.

சித்ராக்ஷி பேசும் முன், மணி இளமாறனிடம் “என்ன மாறா? அதிசயமா ஆபிஸ் லாம் வந்துருக்க…? நான் கூப்பிட்டா கூட வேலை இருக்குன்னு பிகு பண்ணுவ…” என அவன் தோளில் தட்ட, இளமாறன் சித்ராக்ஷியை பார்வையால் வருடிக்கொண்டே, “அது ஒன்னும் இல்ல மச்சான்… நீ இங்க வேலை பார்க்குற பொண்ணுங்களுக்கெல்லாம் லெக்ச்சர் எடுக்குறதா கேள்விப்பட்டேன்… அதான் அப்படியே அதை நானும் கேட்கலாம்னு…” என இழுக்க, சித்ராக்ஷியின் நிலையோ சொல்லவே வேண்டாம்.

மானசீகமாக அவளை அவளே அறைந்து கொண்டிருந்தாள், ‘பேசுவியா பேசுவியா? இனிமே இவன் இருக்கும் போது ஏதாவது பேசுவியா’ என்று. முகமோ பதட்ட ரேகைகளை சுமந்திருக்க, ப்ளீஸ் என கண்களாலேயே கெஞ்சினாள்.

அதில் அவன் அவளை கண்டு கண்களை சிமிட்டிட, அவளோ அவன் செய்கையில் உறைந்திருந்தாள். மணி தான் குழப்பமாக “என்னடா உளறுற?” என தலையை சொரிய, இளமாறன் “நான் என் பியான்ஸை பார்க்க வந்தேன் மச்சான்…” என்றவன் சித்ராக்ஷியின் தோளில் கை போட்டு, “ஷி ஐஸ் மை கேர்ள்…” என்றிட, அவள் தான் அதிர்ச்சியுடன், நெளிந்து கொண்டிருந்தாள்.

மணி, “வாவ்! சித்ரா சொல்லவே இல்ல. வீட்ல அலையன்ஸ் பார்க்குறாங்கன்னு… அதுவும் என் பிரெண்ட் அ கல்யாணம் பண்ண போற கங்கிரேட்ஸ்” என்றான். அவளோ லேசாக புன்னகைத்து “தேங்க்ஸ் சார்” என்றவள், வலுக்கட்டாயமாக இளமாறனின் கையை எடுத்து விட்டு, முறைக்க, அவன் அதனை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

“மச்சான், நான் என் ஆள் கூட தனியா பேசணும் ஒரு மணி நேரம் பெர்மிஷன் குடு” எனக் கேட்க, மணியோ, “மச்சான் ஒரு மணி நேரம் போதுமா…?” என்று முறைத்தவன் “ஏண்டா ஒரு நாள் லீவ் போட்டுட்டு சுத்துறதை விட்டுட்டு…” என ஐடியாவே கொடுக்க, சித்ராக்ஷி தான் ‘ஐய்யோஒ! சரியான இம்சைங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே’ என நொந்து, வேகமாக “இல்ல சார், இன்னைக்கு டாஸ்க் இன்னும் முடிக்கல… நாளைக்கு  ப்ராஜக்ட் ரிலீஸ் இருக்கு” என்று மறுக்க, இளமாறன் அவளை அமைதியாய் பார்த்தான்.

மணி, “ப்ச்! மேனேஜர் நானே லீவ் எடுத்துக்கோன்னு சொல்றேன். இங்க இருக்குற வேலை எல்லாம் எங்கயும் போய்டாது. நான் வேற ஆள் வச்சு முடிச்சுக்கிறேன் நீ கிளம்பு…” என்று முடிவாய் கூறி விட்டு செல்ல, அவளுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.

“கிளம்பலாமா ப்ரெஸ்ஸர் பெர்க்” என்றவனின் முகத்தை என்னது என்று புரியாது பார்க்க, அவன், “நீ தான் இன்னைக்கு ஒரே ப்ரெஸ்ஸர் ஆஃப் இந்தியாவா இருக்கியே…! உனக்காக நிமிஷத்துக்கு ஒரு பேர் யோசிக்க வேண்டியதா இருக்கு” என்று சலித்தது போல்  கூறியவன், அவள் கோபமாக பேச வரும் முன், “சீக்கிரம் வா நான் வெளிய இருக்கேன்” என்று வெளியிலேயே சென்றுவிட்டான் .

சே! என்ன இவரு இப்படி பண்றாரு? என தலையை பிடித்த படி அமர்ந்தவள், பின்  மெல்ல வெளியில் சென்றாள்.

அங்கோ இளமாறன் கார் ஹார்னை அடித்து, அவளை அழைக்க, அவள் புருவம் சுருக்கி பேசும் முன், “ரெண்டு வண்டியில தனி தனியா போறதுக்கு எதுக்கு அவுட்டிங் போகணும். அதான் கார் எடுத்துட்டு வந்துட்டேன். கம்” என்றழைக்க, வேறு வழியில்லாது அவளும் உள்ளே அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக  இருக்க, சித்ராக்ஷியின் மனத்திலோ பல்லாயிரம் எண்ணக்குவியல்கள் ஓடிக்கொண்டிருந்தது. மௌனத்தை உடைத்த இளமாறனே, “சோ மேடம் எனக்கு காலையிலேயே கால் பண்ணிருந்தீங்க…? எனிதிங் இம்பார்ட்டண்ட்?” என வினவ, அவளுக்கு நெஞ்சில் திக் திக் என்று அடித்துக்கொண்டது. 

தன்னை பற்றி கூறினால், இவன் எவ்வாறு எடுத்துக் கொள்வான்? என்ன மாதிரியான பிரச்சனை வரும்? என்று புரியாது குழம்பியவள் அமைதி காக்க, அவன் “நீ கோவிலுக்கு போகலாம்ல?” எனக் கேட்டான் கேள்வியாக.

ஹான்? என புரியாமல் விழித்தவளை ரசனையாக பார்த்தவன், “எப்போவும் குழப்பத்தோட தான் இருப்பியா நீ… சரியான கன்பியூசன் கேண்டியா இருக்க…” என புன்னகைத்து, அவளின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டான்.

பின், “கூல்” என்றவன், “கோவிலுக்கு போகட்டா?” எனக் கேட்டான் மீண்டும். அவள் ம்ம் என தலையசைக்கவும், நேராக கோவிலுக்கு சென்றவன், அவளுடன் இணைந்து கடவுளை வழிபட்டு விட்டு, அங்கிருந்த தெப்பக்குளத்திற்கு அழைத்து சென்றான். நண்பகலை நெருங்கி கொண்டிருந்த நேரம், ஆள் அரவமற்று இருக்க, மரத்தினடியில் சென்று அமர்ந்தவன், அவளையும் அருகில் அமர சொன்னான்.

சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள், சுற்றி முற்றி வேடிக்கை பார்க்க தொடங்க, இளமாறனின் விழிகள் அவளை சுற்றியது. அவனை ரசிக்க வைத்த, மெல்லிய மௌனத்தை அவனே கலைத்து, “இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கியா?” எனக் கேட்டான்.

அதில் சிந்தனை கலைந்தவள், ஒரு நொடி விழித்து விட்டு, “ம்ம் வந்துருக்கேன்…” என்றதும், “அப்போ, இந்த இடத்தை சுத்தி பார்க்குறதை விட்டுட்டு, என்னையும் பார்க்கலாமே?” எனக் குறும்பாக கேட்டவன், அவள் திகைப்பதை கண்டு, “ஐ மீன், என்னை பார்த்து பேசலாமேன்னு சொன்னேன்” என்றான் புன்முறுவலுடன்.

அதில் எச்சிலை விழுங்கியவள், “அது…” என்று பேச வரும் முன், இளமாறனின் செல்பேசி அழைத்தது. “ஒன் செக்…” என்றவள் போனை எடுத்து “ஹெலோ” என்க, எதிர்முனையில் முகுந்த் தான் “எங்கடா இருக்க? உனக்கு எவ்ளோ நேரம் போன் பண்றது?” என்று பொரிந்தான்.

“என்ன ஆச்சுடா?” என இளமாறன் கேட்டதும், “நாளை கழிச்சு நிச்சயம் வைச்சுட்டு இன்னும் ட்ரெஸ் கூட எடுக்கல டா… அதோட அப்பா வேற,எங்கேஜ்மென்ட்க்கு எத்தனை பேரை கூப்பிடறது, மத்த டீடெய்ல்ஸ் பத்தி உன் மாமனார் கிட்ட பேசணும்னு சொன்னாரு. நான் கடையில் இருந்து உன் மாமனார் வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா உன்னை கூட்டிட்டு வரேன்னு சொன்னாரு… இன்னும் அப்பாவும் வரல, நீயும் வரல…” என்று கடுப்படித்ததில், இளமாறன் “அப்பா என்கிட்ட எதுவுமே சொல்லலைடா… சரி நீ உள்ள போய் பேசிட்டு இரு நான் வரேன்” என்றவன் அவன் பேசும் முன் வைத்து விட, முகுந்த் தான் போனை பாவமாக வெறித்திருந்தான்.

பத்து நிமிடங்களுக்கு முன்பே, சித்ராக்ஷியின் வீட்டிற்கு வந்தவன், தயக்கத்துடன் அழைப்பு மணியை அடித்தான். அதில் உள்ளிருந்தபடியே, “யாரு?” என்ற பெண் குரல் கேட்டதில், அது செல்வியுடையது தான் என உணர்ந்து கொண்டவன், “எல்லாம் தெரிஞ்சவங்க தான்…” என்றான் நக்கலுடன்.

அதில், ‘யாருடா இம்புட்டு எகத்தாளமா பேசுறது’ என எண்ணிய செல்வி, கதவை லேசாக திறந்து பார்க்க, கேட்டிற்கு வெளியே முகுந்த் நிற்பதை கண்டு, “வாங்க வாங்க” என்றாள்.  அவனோ, “கேட்ட உள்ள பூட்டிட்டு வாங்க வாங்கன்னா ஏறி குதிச்சா வரமுடியும்” என்று கேலியாக பார்க்க, அதில் அசடு வழிந்தவள், தயக்கத்துடன் “நீங்க மட்டும் தான் வந்தீங்களா?” எனக் கேட்டாள் திக்கி திணறி.

முகுந்த், சுற்றி முற்றி பின்னாடி பார்த்து, “இல்ல என் கூட ஒரு லாரி முழுக்க ஆளுங்க வந்தாங்க பக்கத்து தெருவுல நிக்கிறாங்க…” என்று சற்று கடுப்புடன் கூறினான் இவள் கதவை திறப்பாளா மாட்டாளா என்று. அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவள், “இல்ல, சித்தி சித்தப்பா வெளிய போயிருக்காங்க… சித்ரா வேலைக்கு போய்ட்டா… வீட்டுல யாரும் இல்ல. நீங்க சித்தப்பா வந்ததும் வர்றீங்களா?” என கதவின் கைப்பிடியை சுரண்டியபடி தயங்கி தயங்கி பேச, அவனுக்கோ தலையை சுற்றியது.

கூடவே கோபமும் வர, “வீட்டுக்கு வந்தவங்களை இப்படி தான் வாசல்ல நிக்க வச்சே பேசுவீங்களா?” என கோபமாகவே கேட்டுவிட, அதில் திரு திரு வென விழித்தவள் பேசும் முன், “ப்ச் உள்ள போறியா” என்றான் கடுமையாக.

அவளோ அழும் நிலைக்கே சென்று அவனை விழித்தவள், அவன் முறைத்ததில் பயந்து உள்ளே சென்று விட்டாள். அதன் பிறகே, அவன் இளமாறனுக்கு போன் செய்தது.

பின், வீட்டு வாசலிலேயே வண்டியில் அமர்ந்து தன்னை நொந்து போனை நோண்டிக் கொண்டிருந்தவன், கேட் திறக்கும் சத்தம் காதில் கேட்டும், கண்டுகொள்ளாதவாறு அமர்ந்திருக்க, செல்வி தான், “ஏங்க…!” என அழைத்தாள். அப்போதும் அவன் நிமிராது இருக்கவும்,  “ஏங்க உங்களை தான்…” என்றாள் மீண்டும்.

அதில் நிமிர்ந்து ஒரு முறை முறைத்தவன், மீண்டும் செல்லில் மூழ்க, அவளுக்கு தான் பரபரவென இருந்தது. “ஏங்க உள்ள வாங்க…!” என அவள் அழைத்திட அவன் அழுத்தமாய் அமர்ந்திருந்தான். ஏனோ அவனின் செயல் அவளுக்கு கண்களை கலங்க வைக்க, சரியாக இளமாறன் சித்ராக்ஷியுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

முகுந்த் போன் செய்ததுமே, வீட்டுக்கு செல்லலாம் என அவன் விவரம் கூறிட, சித்ராக்ஷியும் குழப்ப முகத்துடன் ம்ம் என தலையாட்டினாள். “நீங்க வீட்டுக்கு போங்க, நான் ஆபிஸ் போறேன்” என்றவளை யோசனையுடன் பார்த்தவன், “இன்னைக்கு தான் லீவ் சொல்லியாச்சே. அப்பறம் என்ன? மண்டே போய்க்கலாம்” என ஆராய்ச்சி பார்வையுடன் கூற, அவள் எதுவும் பேசாது ம்ம் என்றாள்.

அதன் பிறகு வீடு வரை கூட, அவள் அவன் புறமே திரும்பாது இருக்க, அப்போது தான் அங்கு வீட்டிற்கு சென்றவன், செல்வி கலங்கிய முகத்துடன் இருப்பதை கண்டான்.

“ஹே! செல்வி டியர்… ஏன் கண்ணுலாம் கலங்கி இருக்கு…?” என்றவன் முகுந்தை பார்க்க, அவனும் இளமாறன் குரல் கேட்டதும் தான் சட்டென நிமிர்ந்து செல்வியின் முகத்தை கண்டு திகைத்தான்.

சித்ராக்ஷி பதறி போய், “அக்கா என்னாச்சு கா…?” என வினவியவள் முகுந்தை பார்க்க, அவனோ ‘இப்போ நம்ம என்ன பண்ணிட்டோம்ன்னு இவள் கண்ணை கசக்கிட்டு இருக்கா’ என பேந்த பேந்த விழித்திட, இளமாறன் “அட என்னாச்சுன்னு சொல்லுங்க யாராவது” என்றதும், முகுந்த் கடுப்புடன் நடந்ததை கூறிட, இளமாறன் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

சித்ராக்ஷியோ தன் தமக்கையை எண்ணி தலையில் அடித்து, “என்னக்கா நீ?” என கடிந்து கொள்ள, செல்வி, “அதுக்கு அப்பறம் நான் உள்ள வரச்சொன்னேன்… அவரு தான் வரல…” என உதட்டை பிதுக்கிட, அவளை பற்றி அறிந்தவள், முகுந்திடம் “சாரிங்க… வீட்டுல யாரும் இல்லை தனியா இருக்கோம்ன்னு அவள் அப்படி சொல்லிருப்பா… உள்ள வாங்க ப்ளீஸ்” என அழைத்தாள்.

முகுந்த் செல்வியின் கலங்கிய கண்ணை கண்டதுமே, கோபத்தை விடுத்து ‘என்ன பொண்ணு இவ’ என அவளை நோட்டமிட ஆரம்பித்திருந்தான். இளமாறன் தான், “அட! இவன் உள்ள வரலைன்னு சொன்னதுக்கா செல்வி டியர் நீ அழுத… உன்னை அழுக வச்சவனுக்கு நல்ல பனிஷ்மென்ட் குடுத்துடுலாம் ஓகே வா? ஸ்மைல்…” என அவள் உயரத்திற்கு குனிந்து அவளை சிரிக்க வைக்க முயல, சித்ராக்ஷி அவனை வியப்பாக பார்த்திருந்தாள்.

செல்வி அப்போதும், முகத்தை சுருக்கி முகுந்தை காண, இளமாறன், “டேய்! ரொம்ப பண்ணாத, வீட்ல யாரும் இல்லைன்னு தான அவள் அப்படி சொல்லிருக்கா… இதுக்குலாம் போய் இந்த பச்சை மண்ணுக்கிட்ட கோச்சுக்கிட்டு… ஒழுங்கா அவள் கிட்ட சாரி கேளு” என்றிட, முகுந்த் அவனை ஆச்சர்யமாய் பார்த்தான். தன்னை யாரிடமும் குறைத்தும், ஏன் தன் மேல் தவறே இருந்தாலும் யாரிடமும் விட்டுக்கொடுக்காதவன், இன்று இவ்வாறு பேசியது வியப்பை கொடுத்திட, செல்வி பதறி விட்டாள்.

“ஐயோ! அவரு என்கிட்ட சாரிலாம் கேட்க வேணாம். நான் தப்பு பண்ணேன்… நான் தான் மன்னிப்பு கேட்கணும்… சாரி” என்றவள், புடவை முந்தானையில் நுனியை திருகிய படி, “நீங்க இதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்திட மாட்டீங்கள்ள… நான் வேணா இனிமே இங்க வரல…” என்று ஏதேதோ பேசியதில், ஆண்கள் இருவரும் அதிர்ந்திட, சித்ராக்ஷி இவளை என்ன தான் பண்றதோ…? என நொந்து, “அக்கக்கா” என்றாள் அதட்டலாக.

முகுந்த் அவசரமாக, “ஹே! லூசா நீ… இதுக்குலாம் போய் யாராவது கல்யாணத்தை நிப்பாட்டுவாங்களா? நான் சும்மா லுலுலுவாய்க்கு தான் கோபப்பட்டேன்… முதல்ல கண்ணை கசக்குறதை நிறுத்து…” என்றதும், இளமாறன், “கவலையே படாத, உன் தங்கச்சியே வேணாம்னு சொன்னாலும் நான் அவளை விடுறதா இல்ல” என புன்னகையுடன் சித்ராக்ஷியை பார்த்த படி கூற, அவள் திகைத்தாள்.

செல்வியோ, “நிஜம்மா?” என விழி விரித்து கேட்க, இளமாறன், “சத்தியமா டியர்… ஆனா ஒரு கண்டிஷன்…” என நிறுத்தியதில், சித்ராக்ஷி ஏதோ வில்லங்கமா கேட்கப்போறானோ… என படபடத்து அவனை ஒரு மாதிரி பார்த்ததில் , அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவன், அவள் மட்டும் அறியும் படி கண்ணை சிமிட்டி குறும்பு செய்ய, செல்வி பொறுமையிழந்து, “என்ன கண்டிஷன் சொல்லுங்க…” என்றாள் பதட்டமாக.

அவன் மீண்டும், செல்வியின் உயரத்திற்கு குனிந்து, “நீ என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” எனக் கேட்டிட, முகுந்த் சன்னமாக அதிர்ந்திட, செல்வியின் விழிகளோ வெளியில் தெறிக்கும் அளவு பெரியதாக விரிந்தது திகைப்பில்.

சித்ராக்ஷி தான், “அடப்பாவி!” என வாயில் கையை வைத்து அவனை காண, அவனோ அதனை கண்டுகொள்ளாது, “ரொம்ப ஹாட் ஆ இருக்கு…! வாங்க உள்ள போய் பேசலாம்…” என அவன் பாட்டிற்கு உள்ளே சென்றவன், கூடவே, சித்ராக்ஷியையும் உள்ளே இழுத்து சென்றிட, முகுந்தும், செல்வியும் மட்டும் உறைந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.

அத்தியாயம் 5

இளமாறன் கேட்ட கேள்வியில் முகுந்தும்  செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்த படி திகைத்திருக்க, இளமாறன் சித்ராக்ஷியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான். அவள் அவர்களுக்கு மேல் திகைத்து, “நீங்க என்ன சொன்னீங்க இப்போ?” எனக் கேட்டாள் பேந்த பேந்த விழித்தவாறு.

அவனோ ஹாயாக சோஃபாவில் அமர்ந்தபடி, “என்ன சொன்னேன்?” என்று தோளை குலுக்க, அதில், “ப்ச்! நீங்க அக்கா கிட்ட கேட்டது உண்மையா? இல்ல கிண்டல் பண்ணுனீங்களா?” எனக்கேட்டவளுக்கு அது உண்மையாய் இருந்தால்? என்ற எண்ணமே தித்தித்தது.

தன் அக்காவின் திருமண விஷயத்தில் ஏகப்பட்ட தடைகள் வந்து, அவள் மனதையும் புண்ணாக்கியது அவள் அறிந்ததே. தன்னாலும் அவளுக்கு வந்த பிரச்சனைகளை எண்ணியவள்… அதற்கு மேல் சிந்திக்காது, அவன் முகத்தை ஆர்வமாக பார்க்க, அவளின் முக பாவனைகளையே அளவெடுத்துக் கொண்டிருந்த இளமாறன், “நீ என்ன நினைக்கிற கேண்டி? நான் கேட்டது உண்மையா இருக்கணும்னா? பொய்யா இருக்கணும்னா?” என்று வினாவினை அவளுக்கு திருப்பினான்.

சித்ராக்ஷி தான், ‘ஒரு கேள்வி கேட்டா ஒரு ஒழுங்கா பதில் சொல்றானா? என்கிட்டயே பத்து கேள்வி கேட்குறான்…’ என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவள், “நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்று விட்டு நகர போக, மாறன் பட்டென அவள் கைகளை பிடித்தான்.

தன்னிச்சையாக வெடுக்கென அவன் கைகளை உதறியவள், அதன் பிறகே தான் செய்த செயலை எண்ணி செய்வதறியாது நிற்க, அவள் சட்டென அவ்வாறு செய்ததில், அவனும் சற்று தடுமாறி முகம் சுருங்கி தான் போனான்.

ஆனால், உடனே தன்னை மீட்டுக்கொண்டு, “நான் உண்மையை தான் சொன்னேன்… இதை பத்தி நான் வீட்டுல பேசுறேன். அதுக்கு முன்னாடி செல்வி கிட்ட ஓகே வான்னு கேளு” என்று சற்று இறுக்கமாக பேச, அவள் என்ன பேசவென்று கூட தெரியாமல், அப்படியே நின்றாள்.

அவள் முகத்தில் என்ன கண்டானோ, மீண்டும் தன் குறும்பை மீட்டு, “ஆனால் ஒரு கண்டிஷன்” என்றான் மென்னகையுடன். அவள் என்னவென்று பார்க்க, “ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்துட்டு அக்கா தங்கச்சி சண்டை எல்லாம் போட்டு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சுட மாட்டீங்களே?” எனக் கேட்டிட, அதில், அவனை தீயாய் முறைத்தவள், “நீங்க எங்க ரெண்டு பேரையும் பிரிக்காம இருந்தா சரித்தான்…” என்றதில், புருவம் உயர்த்தி கேலியாக பார்த்தான்.

அப்போது, பேயறைந்த தொனியிலேயே முகுந்த் உள்ளே வர, சித்ராக்ஷிக்கு தான் அவனை கண்டு சிரிப்பு பொங்கியது. இளமாறனோ, “அண்ணி எங்கடா அண்ணா?” என்று அழுத்திக் கேட்க, முகுந்த் அவனை முறைத்தான்.

அவனுக்கு பதில் கூறாது, சித்ராக்ஷியிடம் “உங்க அக்கா, திடு திடு ன்னு எங்கயோ ஓடுனாள்… இவன் குடுத்த ஷாக்குல ஏதாவது கிணத்துல எதுவும் விழுந்துட போறா. அவளை என்னாச்சு பாருங்க…” என்றிட, அவளோ “ஃபார் யுவர் கைன்ட்லி இன்பர்மேஷன்… இங்க கிணறே இல்ல” என்று நமுட்டு சிரிப்பு சிரிக்க, இளமாறன் இது தேவையா உனக்கு என்ற ரீதியில் சிரிப்புடன் பார்த்தான்.

முகுந்த் தான், சித்ராக்ஷியை முறைக்க, அவள், “அக்கா அவள் வீட்டுக்கு தான் போயிருப்பா… பக்கத்துல தான் இருக்கு வீடு” என்று விவரம் கூறும்போதே, நடராஜும், பார்வதியும் வந்து அவர்களை வரவேற்க, பார்வதி சித்ராக்ஷியை கண்டு “நீ ஆபிஸ் தான போன சித்ராம்மா… எப்போ வந்த?” எனக் கேட்க, அவள் திருட்டு முழியுடன் இளமாறனை பார்த்தாள்.

அவன் கையை கட்டிக்கொண்டு, பதில் சொல்லு என்ற படி, வாகாய் சாய்ந்து அமர்ந்து கொள்ள, அவளோ “அது மா… வந்து…” என்று திணறினாள். நடராஜ் தான் “அட வந்த பிள்ளைங்களுக்கு காபி தண்ணி குடு பார்வதி…” என்று உத்தரவிட அவர் அடுத்த நொடி அடுக்களைக்குள் இருந்தார். ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவள், உள்ளே சென்று விட்டாள்.

அந்நேரம், இளமாறனின் வீட்டில் இருந்தும் அனைவரும் வந்து விட, சாரதா தான்  “சித்ராக்ஷி எங்க?” என்று வினவினார். பார்வதி அவர்களுக்கு காபியை கொடுத்து விட்டு, “உள்ள தான் இருக்கா…” என அவளை அழைக்க,   வந்தாள். பொதுவாக சிறு புன்னகையை கொடுத்து விட்டு, அவர்கள் முன் அமர்ந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை. இளமாறனின் அத்தை சாரதாவும், அம்மா வித்யாவும் கேட்ட கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் கூறியவள் சலனமின்றி இருக்க, மாறனின் விழிகள் தான் அவளை யோசனையுடன் தழுவியது.

இளம் ஜோடியின் நிச்சய வேலையை பற்றி பேச ஆரம்பித்த செந்திலை தடுத்த இளமாறன் “அப்பா ஒரு நிமிஷம் வெளிய வாங்களேன்” என்று  அழைக்க, முகுந்த் “மாறா! நீ சும்மா இருக்க மாட்டியா?” என அதட்டினான் அமைதியாக.

அவனும் அதே அமைதியுடன் “உனக்கு ஒரு நிமிஷம் டைம் தரேன்… செல்வி மேல உனக்கு எந்த கிரஷும் இல்லைன்னு இப்போவே என்மேல ப்ராமிஸ் பண்ணு நான் பேசாம இருக்கேன்” என்று கேட்க, அவன் பதில் கூற இயலாது திகைத்தான்.

செந்தில் தான் ;இவன் என்ன குண்டை தூக்கி போட போறானோ; என நொந்த படி, நடராஜிடம் கூறி விட்டு வீட்டு வாசலில் சென்று நிற்க, முழுதாய் ஒரு நிமிடம் முகுந்தையே பார்த்திருந்த  இளமாறன் “சோ உன்னால ப்ராமிஸ் பண்ண முடியாது… அதே மாதிரி என்னாலயும் அமைதியா இருக்க முடியாது” என்று முடிவாய் கூறி விட்டு, எழும்ப  எத்தனிக்க, அவன் கையை பிடித்து அமர வைத்த முகுந்த், “செல்விக்கு ஓகே வான்னு கேட்டுட்டு  அப்பறம் இதை பத்தி பேசலாம்…” என்றிட, மாறனோ சற்று சிந்தித்து விட்டு, “முதல்ல வீட்டுல பேசலாம், அப்பறம் செல்வி கிட்ட நீயே பேசு… ரெண்டு பேருக்கும் ஓகே னா… பேசலாம்” என கேலிப்பார்வை ஒன்றை வீசிவிட்டு செல்ல, முகுந்துக்கு தான் எங்காவது ஓடிப்போய் விடுவோமா என்றிருந்தது.

இளமாறன் செந்திலிடம் இந்த விஷயத்தை கூற, அவர் விழி விரித்து, “முகுந்த் ஓகே சொல்லிட்டானா?” என ஆர்வமாய் வினவ “நீங்க முதல்ல, பொண்ணு வீட்டுல ஓகே வான்னு கேளுங்க அவனை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு” என்றிட, அவர் உடனே உள்ளே சென்று நடராஜிடம் இதனை பற்றி பேச, முகுந்த் தான் நெளிந்து கொண்டிருந்தான்.

இதனை கேட்ட மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி குடி வர, சித்ராக்ஷி அதுக்குள்ள இதை பத்தி பேசிட்டானா? என வியந்து இளமாறனை பார்க்க, அவன் என்ன என்பது போல், புருவத்தை தூக்கி இறக்கினான். அதில் அவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.

வித்யாவிற்கும் சாரதாவிற்குமோ வெகு மனநிறைவாய் இருந்தது. இருவரும் முதலில், செல்வியை தான் முகுந்திற்கு பார்த்தனர். ஆனால், அவன் இருந்த மனநிலையில் முடிவாய் திருமணத்தை மறுத்து விட்டான். சாரதா எவ்வளவோ பேசியும் அவன் மனதை மாற்றவில்லை. அதன்பிறகே, அவள் தங்கைக்கும் வரன் பார்க்கிறார்கள் என்றறிந்து, சித்ராக்ஷியின் புகைப்படத்தை  காண, சாரதாவிற்கு ஏனோ அவள் இளமாறனுக்கு பொருத்தமாக இருப்பாள் என தோன்றிட, உடனே பெண் பார்க்கும் படலத்திற்கு வழி வகுத்தார். ஆனால் இறுதியில் அவரையே வில்லியாக்கிய பெருமை இளமாறனையே சேரும்.

இங்கோ, செல்விக்கு முகுந்தை கேட்கலாமா? என சித்ராக்ஷியின் பெற்றோர் ஆவல் கொண்டிருக்க, பின், அவன் பெரிய படிப்பு படித்திருக்கிறான், இவள் பள்ளிப்படிப்பே படித்திருக்கிறாள். ஒருவேளை வேண்டாம் என்று கூறிவிட்டால் சங்கடமும் ஆகி விடும்… என ஏற்கனவே வாங்கிய காயங்களின் அடிப்படையில் செல்வியின் தந்தை ராஜேந்திரன் கூறிவிட, இவர்களும் அமைதியாகி விட்டனர்.

இப்போது, இதனை கேட்டு சந்தோசத்தின் உச்சிக்கு சென்ற தம்பதியர்கள், உடனே, ராஜேந்திரனுக்கு போன் செய்து தகவலை கூறினர். பின், ராஜேந்திரனும் செந்திலிடம் பேச, வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததாகவும், இன்று காலையில் தான் வந்ததாகவும் நானே உங்களை வந்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன் என்று கூறி பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.

சாரதாவும், வித்யாவுமோ, இருவரின் திருமணமும் ஒன்றாகவே வைத்துக்கொள்ளலாம் என ரீதியில் பேசிக் கொண்டிருக்க, முகுந்த், “அத்தை” என பல்லைக்கடித்தான்.

சாரதா, “மாறா, கொஞ்ச நேரம் அவன் வாயில துணியை கட்டி உட்கார வை, முக்கியமான விஷயம் பேசும்போது டிஸ்டர்ப் பண்றான்…” என்றவர் “அப்பறம் வித்யா, நிச்சயத்துக்கு” என்று மேலும் பேச, சித்ராக்ஷிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அதோடு, பெண் பார்க்க வரும் போது பேசிய சாரதாவிற்கும் இப்போது இருப்பவருக்கும் நிறைய வித்தியாசம் தெரிய ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

பின்,  “நல்ல நேரம் பார்த்து செல்வியின் வீட்டில் சென்று முறைப்படி பேசலாம்” என செந்தில் கூற, இளமாறன் “அப்பா எல்லா நேரமும் நல்ல நேரம் தான். இப்போவே போய் பேசலாமே… வேற ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?” எனக் கேட்க, சாரதா, “ஆமா ஆமா வாங்க போலாம். அப்படியே நிச்சயத்துக்கு நாலு பேருக்கும் சேர்த்தே ட்ரெஸ் எடுத்துடலாம்” என்று எழுந்தே விட, இவர்களின் வேகத்திற்கு பெண் வீட்டாரால் தான் ஈடு கொடுக்க இயலவில்லை பாவம். சித்ராக்ஷியோ, இதுங்க என்ன டிசைன்…? குடும்பமே ஒரு  மார்க்கமா இருக்கு… என தீவிர சிந்தனையில் இருந்தாள்.

முகுந்த் தான் நொந்து, இளமாறனிடம் “டேய்! நீ என்ன ப்ரோக்கர் வேலை பார்த்துட்டு இருக்கியா? பொண்ணு பார்க்க போறதை ஏதோ பொரிகடலை சாப்பிட போறமாதிரி அசால்ட்டா சொல்ற…?” என்று கடுப்பாக கேட்க, இளமாறன், “இல்லடா, இன்னைக்கு நான் கடைக்கு லீவ் போட்டுட்டேன். என் ஆளுக்கும் ஆபிஸ் ல லீவ் சொல்லிட்டேன். இந்த நாளை யூஸ்ஃபுல் ஆ ஸ்பென்ட் பண்ணுனா தான லீவ் போட்டதுக்கு ஒரு மரியாதை இருக்கு. ஒரு நாள் லீவ் ல உனக்கு கல்யாணம் பேசி முடிச்சேங்கறதுலாம் ஒரு பெருமைடா…” என்று கேலியுடன் பேச, முகுந்த் “கொய்யால! யாருக்குடா பெருமை” என்றான் பல்லைக்கடித்தபடி.

மாறனோ, “வேற யாரு எனக்கு தான்… வாடா, சீக்கிரம் டைம் வேஸ்ட் பண்ணாத” என்று எழுந்து அவனையும் வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து சென்றான். 

பின், இளமாறன் சாரதாவிடம் காதில் ஏதோ முணுமுணுக்க, அவர் ‘என்னை வச்சே டெஸ்ட் பண்ணுடா’ என பார்வையால் எரித்து விட்டு, “சம்பந்தி நீங்க இப்போ தான் வெளிய போயிட்டு வந்தீங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க… நாங்க கூட சித்ராவை கூட்டிட்டு போறோம். அவளுக்கு தான் வீடு தெரியும்ல…” என்றிட, சித்ராவுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

நடராஜும் பார்வதியும் சித்ராவை பாவமாக பார்க்க, அவளோ அவர்கள் மட்டும் அறிய மறுப்பாக தலையாட்டினாள். சாரதா, “நீ வாம்மா சித்ரா… உங்க அம்மா அப்பா அப்பறமா வரட்டும்” என்று அவளை மீண்டும் அழைக்க தட்டத் தோன்றாது, தடுமாறியபடி அவள் மட்டும் அவர்களுடன் சென்றாள்.

இளமாறன் முகுந்திடம் வண்டி சாவியை வாங்கி விட்டு,  “நீ எல்லாரையும் கார்ல கூட்டிட்டு வா…நானும் சித்ராவும் வண்டியில வரோம்” என்று அடுத்த குண்டை போட, அவளோ ‘டேய்! போதும் டா! முடியல’ என்று மனத்தினுள்ளேயே அவனை எண்ணி தவிக்க, முகுந்த் அவனை ஒரு மாதிரியாக பார்த்தான்.

மாறனோ நல்ல பிள்ளையாக, “இல்லைடா, இந்த  சின்ன சந்துல கார்ல வர லேட் ஆகும், வண்டியிலன்னா அவள் வழி சொல்லிகிட்டே வருவா ரெண்டு பேரும் முன்னாடி போவோம்ல” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க, தன் தம்பியை முறைத்த படியே, முகுந்த் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.

சித்ராக்ஷிக்கு தான் அவனுடன் வண்டியிலா? என்ற அதிர்வலைகளை முகத்தில் தாங்கி அப்படியே நிற்க, அவள் முன் சொடுக்கிட்டவன், “என்ன ஷாக்கிங் ஸ்னிக்கர்ஸ்… ஷால் வீ…?” என வண்டியை கண் காட்ட, அவளோ வேணாம் அழுதுடுவேன் என்ற ரீதியில் முகத்தை வைத்திருந்தாள். அதனை கண்டுகொண்டால், அவன் அவளின் இளா அல்லவே.

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன் சித்ராக்ஷியை காண,  வேறு வழியின்றி, அவளும் தயங்கியபடி அவன் பின்னே அமர்ந்தாள். அதில் உதட்டை மடித்து புன்னகைத்துக் கொண்டவன், “கிளம்பலாமா கேண்டி?” எனக் கேட்க, அவள் ம்ம்  என்றதும், வண்டியில் பறந்தான்.

பறந்ததாக அவன் தான் நினைத்து கொண்டான். ஆனால், பின்னால் வந்த முகுந்த் தான், ‘இவன் ஏன் இப்போ ஸ்லோ ரேஸ் போயிட்டு இருக்கான்… டேய்! கார் இதுக்கு மேல மெதுவா போனா ஆப் ஆகிடும்டா…’ என மனத்தினுள்ளேயே கதறிட, மாறன் “இன்னும் எவ்ளோ தூரம் போகணும் கேண்டி?” எனக் கேட்டான் சித்ராக்ஷியிடம்.

அவளோ, “ரெண்டு தெரு தள்ளித்தான். நடந்து போனாலே 3 நிமிஷம் கூட ஆகாது. ஆனால், இப்போ எப்படியும் சாயந்திரம் ஆகிடும் போல. நம்ம வேணா இறங்கி வண்டியை உருட்டிக்கிட்டே வரலாமா?” என யோசனையாய் கேட்டு அவனை வார, ‘அடிங்க என்னையவே கலாய்க்கிறியா?’ என்றெண்ணியவன், ஆக்சிலேட்டரை ஒரு முறை முறுக்கினான்.

அதில், வண்டி உண்மையிலேயே பறக்க, இந்த வேகத்தை எதிர்பாராதவள் நிலைதடுமாறி அவன் முதுகில் மோதிக்கொண்டாள். தன் மனம் கவர்ந்தவளின் ஸ்பரிசத்தில் அவன் தனக்குள் புன்னகைத்துக் கொள்ள, சித்ராக்ஷி அதிர்ந்து லேசாக கண் கலங்கியவள், சட்டென பின்னால் நகர்ந்து கொண்டாள்.

முகுந்த் வரும் முன்னே, சரியாக செல்வியின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய இளமாறன், அவள்  இறங்கவும், வண்டியில் இருந்து இறங்காமல், “சித்ரா உனக்கு உண்மையிலேயே இந்த கல்யாணத்துல சம்மதம் தானா?” எனக் கேட்டான் கூர்பார்வையுடன்.

அதில் மேலும் திகைத்தவள், அமைதியுடன் இருக்க, “நீ அமைதியா இருந்தா நான் நெகட்டிவ் ஆ தான் எடுத்துக்க முடியும். உனக்கு பிடிக்கலைன்னே நினைச்சுக்கவா?” எனக் கேட்க, “அது அது…” என பேச முடியாமல் திணறியவளை தடுத்தவன், “பிடிச்சுருக்கு பிடிக்கல…  ஐ வாண்ட் ஒன் வர்ட் ஆன்சர்” என்று நிலையாய் நிற்க, அவள் “இப்போ எதுக்கு இது? வீட்டுல பிடிச்ச நால தான நிச்சயம் வரைக்கும்…” என்று பேசியதில், அவனோ அழுத்தமாக “சோ உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல… அப்படித்தான?” எனக் கேட்டான்.

சித்ராக்ஷி தான், “இல்ல… நான் அப்படி சொல்லல…” என்று திக்கி பேசும் போதே அவளுக்கு கண் வேறு கலங்கி விட்டது, அதில் கிளுக் என சிரித்த இளமாறன், “ஹே க்ரையிங் காராமில்க் பயந்துட்டியா? சும்மா உன்னை போட்டு வாங்க கேட்டேன். அதான், வீட்டுல ஓகே னா எனக்கும் ஓகே ன்னு சொன்னியே அப்பவே தெரிஞ்சுடுச்சு உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு. ஆனால் எனக்கு பிடிச்சுருக்கு. சோ நோ மோர் குவெஸ்டீன்ஸ்… என்று சாதாரணமாக கூறி விட்டு, செல்வியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்த, அவன் பேசியதை கேட்ட சித்ராக்ஷிக்கு நடுங்கி விட்டது.

‘பிடிக்கலைனு தெரிஞ்சுமா இவ்ளோவும் பண்றான்… ஒருவேளை இவன் ஏலியனா இருப்பானோ…?’என்றெண்ணி சிலையாகி நின்றாள்.

அத்தியாயம் 6

தனக்கு பிடிக்கவில்லை எனத் தெரிந்துமா இவன் இவ்வாறு செய்கிறான்? என குழம்பி போனவள், இவன் என்ன தான் நினைத்திருக்கிறான் என புரியாமல் குழம்பிப் போனாள்.

இவள் யோசனையில் இருக்கும் போதே முகுந்தும் அவனின் பெற்றோரும் காரில் வந்து இறங்கினர். முகுந்த் தான் ‘எப்படிடா இங்கு இருந்து தப்புவது’ என எண்ணிக் கொண்டிருக்க இளமாறன் செல்வியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.

ஏற்கனவே இளமாறன் கேட்ட கேள்வியில் செல்வி திகைத்து இருக்க நெஞ்செல்லாம் படபடவென அடித்துக் கொண்டது. ஒருவித நடுக்கத்துடன் அறையினில் அமர்ந்திருந்தாள் அவளின் தாய் நீலா “செல்வி யாரோ பெல் அடிக்கிறாங்க பாரு” என்று அடுக்களைக்குள் இருந்து சத்தம் கொடுக்க, செல்வி அப்போதுதான் நிகழ்வுக்கு வந்து மெல்ல கதவைத் திறந்தாள்.

இதனிடையில் சித்ரா வாசலின் முன் வந்து நிற்க செல்வியின் கண்ணுக்கு சித்ரா மட்டும் தான் முதலில் தெரிந்தாள். அவளை கண்டதும் விழி விரித்தவள் “யாரோ என் வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்னு சபதம் கொடுத்தாங்க? என்ன ஒரு அதிசயம்!” என்று வியப்புடன் கேட்க சித்ரா திருதிருவென விழித்தாள்.

பின் அருகில் கண்ணை காட்ட அதன் பிறகே செல்வி மற்றவர்களை கண்டு அதிர்ந்து நின்றாள். அவளின் அதிர்வில் முகுந்திற்கே லேசாக சிரிப்பு வந்தது. இளமாறன் தான் “உள்ள வரலாமா?” என கேட்டான் சற்று குறும்பாக, செல்வியோ  பேச்சற்று நின்றிருந்தாள்.

சித்ராக்ஷி தான் அக்கா என அவளை உலுக்கிவிட்டு “உள்ள வாங்க” என அவனை அழைத்தாள் அதன்பிறகே செல்வியும் திக்கித் திணறி அழைக்க அனைவரும் உள்ளே வந்தனர் அப்போதுதான் பின்பக்கத்தில் தன் தம்பியுடன் போன் பேசிக் கொண்டிருந்த ராஜேந்திரன், அவசரமாக இவர்கள் வரவைக் கேட்டு வெளியில் வந்தார். அவரின் மனைவியிடம் கூட இதனை பற்றி பேசவில்லை. முதலில் அவர்களை சென்று வரவேற்றவர் நீலாவிடமும் விஷயத்தை கூறிட அவரும் மகிழ்வுடன் வெளியில் வந்தார். வந்தவர் சித்ராக்ஷியை கண்டு முகம் சுருங்கி விட்டு மற்றவர்களை வரவேற்க ராஜேந்திரன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.சித்ராக்ஷியும் எதுவும் பேசாமல் ஒரு ஓரமாக சென்று நின்றுகொள்ள மற்றவர்கள் விஷயத்தை பேசினர்.

பெரியவர்கள் திருமணத்தை பற்றி பேச செல்வி தான் என்ன நடக்கிறது என்று கூட புரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். சாரதா செல்வியை அருகில் அழைத்து அமரசொல்ல, அவளும் குனிந்த தலை நிமிராமல் அவரருகில் சென்று அமர்ந்தாள்.

மனதிலோ சித்ராவிடம் ‘நல்லவேளை இந்த அம்மாகிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்’ என்று கூறியது நினைவு வந்தது. அதில் அவள் மெல்ல நிமிர்ந்து சித்ராவை காண அவளும் அதே நினைவோடு செல்வியை கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் அதில் தன் தங்கையை ஒரு முறை முறைத்தவாறு மீண்டும் தலையை நன்றாக குனிந்து கொண்டாள் செல்வி.

முகுந்த் அவளுக்கு மேல் தலையை தரையில்  புதைத்திட, இளமாறனோ அவனின் கேண்டியை சைட் அடிக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். அவள் ஒரு ஓரமாக சுவற்றில் சாய்ந்து, நகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, நீலாவுக்கு தான், சித்ராக்ஷிக்கு பார்த்த பையனின் அண்ணன் என்றே தெரிந்து மனதினுள் காய்ந்தார்.

உடனே, “பையனோட ஜாதகத்தை குடுங்க. பொருத்தம் பார்க்கணும்” என்று கேட்டிட, வித்யா “எங்க வீட்டுல ஜாதகம் பார்க்குற வழக்கம் இல்லைங்க…” என இழுத்தார். நீலாவோ, “அதில்லை, என் பொண்ணுக்கு ஜாதகத்துல தோஷம்…  என்ன இருந்தாலும் பொருத்தம் பார்க்கணும்ல” என்றிட, சித்ராக்ஷிக்கு ‘அவங்களே ஜாதகம் கேட்கல … இவங்களுக்கு என்ன லூசா?’ என்று கடுப்பை மறைத்த படி நின்றாள்.

பின், அவளே, ‘ஏற்கனவே ஜாதகத்தினால் நின்று போன அவளின் திருமணத்தை எண்ணியவள், அந்த பயத்தில் தான் கேட்கிறார்’ என சமன் செய்து கொண்டாள்.

சாரதாவும், “அதுக்கு என்ன சாயந்தரமே குடுத்து விடுறோம்…” என்றிட, அதற்கு மேல் நிச்சயம் பற்றி அவர்கள் பேசவில்லை. நீலா பேசுவதை பார்த்தால் ஜாதகத்தை பார்த்து தான் முடிவெடுப்பார் போல இருக்கிறது என எண்ணி, அமைதி காக்க, நீலா அனைவர்க்கும்  காபி  கொண்டு வந்து கொடுத்தார்.

வேண்டும் என்றே, சித்ராக்ஷியை தவிர்த்து மற்றவருக்கு கொடுக்க, அவள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்க, செல்வி தான் அந்த நேரத்திலும் தன் தங்கையை கண்டு விட்டு, தாயை முறைத்தாள். இவர்களின் உள்நாட்டு போரை இளமாறனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

நாசுக்காக அவர் கொடுத்த காபியை டேபிளில் வைத்து விட்டு, “பொண்ணு கிட்ட தனியா பேசணும்” என்றான். அதில், நீலாவும் ராஜேந்திரனும் திகைக்க, நீலாவோ “அது கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கிட்ட பேச கூடாது” என்று ஏதோ உளற,

அவனோ “ஹெலோ, உங்க பொண்ணு கிட்ட இல்ல. நான் எனக்கு பார்த்த பொண்ணு கிட்ட தனியா பேசணும்…” என்றதில், முகுந்த் இப்ப என்ன கூத்தை அடிக்க போறான்னு தெரியலையே…. என நொந்து போய்  பார்க்க, அனைவர் முன்னிலையிலும் இப்படி கூறியதில் சித்ராக்ஷிக்கு தான் இதயம் தாறு மாறாய் துடித்தது.

அவனோ அவனின் பெற்றோரை பார்த்து “நீங்க காபி குடிச்சுட்டு மெதுவா வாங்க, நாங்க முன்னாடி போறோம்” என சித்ராக்ஷியை கண்ணாலேயே அழைக்க, அவளை நீலா பார்வையால் சுட்டெரித்தார். அவளோ இவன் எதுக்கு கூப்புடுறான்னு தெரியலையே என எண்ணிய படி, வெளியில் செல்ல, முகுந்த் தான் வேகமாக இளமாறனின் பின் சென்றான்.

அவனை பார்த்து “நீ ஏன்டா வந்த?” என மாறன் கேட்க, முகுந்த், “நீ எதுக்கு இப்போ தனியா வந்த? எதுவா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணு. இதுக்குமேல இன்னைக்கு ஷாக் ஸ்டாக் ஓவர் ஆகிடுச்சு” என்று பாவமாய் கூறிட, சித்ராக்ஷி முட்டிய சிரிப்புடன் இருவரையும் பார்த்திருந்தாள்.

இளமாறன் தலையில் அடித்து விட்டு, “ஒன்னும் இல்லடா, உன்னையும் செல்வியையும் தனியா எப்படி பேச வைக்கன்னு கேட்க தான் சித்ராவை வர சொன்னேன்” என்றதில், சித்ரா, “இங்க கொஞ்சம் பெரியம்மா ஸ்ட்ரிக்ட். தனியா பேச அல்லோவ் பண்றது கஷ்டம் தான்” என்றிட, இளமாறன், “அது தான் பார்த்தாலே தெரியுதே. அவங்களுக்கு தெரியாம எப்படி பேச வைக்க? செல்வியோட சம்மதத்தை என் அண்ணன் அவன் காதால கேட்கணுமாம்” என்று கேலியாய் அவனை பார்க்க, முகுந்த், “நான் எங்கடா சொன்னேன். நீ தான் நான் பேச வேண்டிய டயலாக்கையும் பேசிடறியே…” என நொந்தான்.

சித்ராக்ஷியோ, “யாரு? செல்வி அக்கா? சம்மதத்தை சொல்ல போறா? நீங்க  வேற, கல்யாணத்துக்கு முன்னாடி பையனும் பொண்ணும் பேசிக்கிறதையே கொலை குத்தம் பண்ண மாதிரி பேசுவா… இதுல தனியாலாம் பேச சான்ஸே இல்ல” என்றதும், முகுந்த் தான் சந்தேகமாக “அவள் பிறந்த வருஷம் என்ன?” எனக் கேட்டான். சித்ராக்ஷி “ஏன் நீங்க ஜாதகம் பார்க்க போறீங்களா?” என நக்கலாக கேட்க, அதில் அவளை முறைத்தவன், “ப்ச், இல்ல, ஒரு இருபது வருஷம் என்னை விட முன்னாடி பிறந்துருப்பாளோன்னு டவுட் அதான்” என்றதில், இளமாறன் “ரொம்ப கஷ்டம் டா…” என்றான் குறுநகையுடன்.

அதில் அவளும், சிரித்த படி, “சரி அவளை கேட்குறது இருக்கட்டும். உங்க தம்பிக்காக சொல்லாதீங்க. உண்மையிலேயே என் அக்காவை உங்களுக்கு பிடிச்சிருக்கா? கண்டிப்பா இந்த கேள்வியை அவள் உங்க கிட்ட கேட்க போறது இல்ல. அவள் ஒரு வீட்டுப்புழு. ஆனால் அவளை மாதிரி யாரலயும் பாசம் வைக்க முடியாது. அவளுக்கு பிடிச்சவங்களுக்காக அவள் என்ன வேணா பண்ணுவா… நீங்க பிடிக்காம கல்யாணம் பண்ணா  கூட, கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு, அதுக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிப்பா… ஆனால், ஒரு தங்கச்சியா, என்னால அதை அக்செப்ட் பண்ண முடியாது. நீங்க அவளை பத்தி தெரிஞ்சுக்கனும்னா கொஞ்சம் டைம் கூட எடுத்துக்கோங்க. ஆனால், அவளை யாருக்காகவும் இல்லாம அவளுக்காக பிடிச்சுருக்கானு மட்டும் சொல்லுங்க…” என்றவள்,

‘சற்று அதிகமாக பேசிவிட்டோமோ ?’என்றெண்ணி, “சாரி மாமா… நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?” என அவனை பார்க்க, முகுந்த் மென்னகையுடன் மறுப்பாக தலையாட்டினான் கூடவே யோசனையில் அவன் புருவமும் சுருங்கி இருந்தது.

சித்ராக்ஷி தயக்கத்துடன் இளமாறனை காண, அவனோ இவள் பேசியதை கேட்டாளா என்று கூட உணராது, போனை உபயோகித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதறல் எடுத்தது. இவன்  பேசுனாலும் பயமா இருக்கு, பேசாம இருந்தாலும் பயமா இருக்கு… என தனக்கு தானே பேசிக்கொண்டவள், கைகளை பிசைந்து கொண்டிருக்க, இருவரும் அமைதியானதை உணர்ந்து நிமிர்ந்த இளமாறன் முகுந்திடம், “என்னடா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அப்டியே நிக்கிற… பதில் சொல்லு அவள் கிட்ட…” என்க, அவனோ அப்போதும் நேரடியாக கூறாது, “எனக்கு பிடிக்கிறது முக்கியம் இல்ல அவளுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியணும்” என்றதில், மாறன் சித்ராக்ஷியை பார்த்தான்.

அவளும் சிந்தித்து விட்டு, “சரி அவள் கூட பேச நான் ஏற்பாடு பண்றேன். ஆனால் மாமா,  அவள் உங்களை ஈவ் டீசிங் கேஸ் ல உள்ள புடிச்சு போட்டா அதுக்கு சங்கம் பொறுப்பு இல்ல…” என்று குறும்பாக முகுந்தை வார, அவனோ விழி விரித்து, “இது வேறையா? உன் அக்கா கிட்ட இன்னும் என்ன எல்லாம் திறமை இருக்குன்னு முன்னாடியே சொல்லிடுமா, இன்னைக்கு வெயில்ல உட்கார வச்ச மாதிரி. வீக் பாடி… அடி தாங்காது…”  என்று வராத கண்ணீரை துடைத்த படி அவளுடன் சளைக்காமல் பேச,

அவளோ “ஹா ஹா! இப்போதைக்கு இது தான் மாமா. போக போக நீங்களே செட் ஆகிடுவீங்க…” என்றாள் புன்னகையுடன்.

அவனும் அதில் சிரித்து விட, வீட்டினரும் வெளியில் வந்து விட்டனர். அதன் பின், இளமாறனே செல்வியின் ஜாதகத்தை வாங்கி கொண்டு, நாங்களே பார்த்து சொல்றோம் என்றிட, செல்வியின் பெற்றோராலும் மறுக்க இயலவில்லை.

அன்று மாலையே, இளமாறனும் சாரதாவும் ஜாதகம் பார்த்து விட, அதிர்ஷ்டவசமாக அது முகுந்துடன் பொருந்தியும் இருந்தது. மாறன் தான்,  “அதான் ஜாதகம் மேட்ச் ஆ இருக்கே, சண்டே ரெண்டு நிச்சயமும் ஒண்ணாவே வச்சுடலாம்…” என்றிட, முகுந்த் தான் அவனை வெளிறிய படி பார்த்தான். ஒருவேளை அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் என்ற எண்ணத்தில்,

அவனை உணர்ந்தவள், “அதான் என் ஆளு, தனியா பேச ஏற்பாடு பண்றேன்னு சொன்னாள் ல… நிச்சயத்துக்குள்ள ஏற்பாடு பண்ணிடலாம்” என்றான்.

முகுந்தோ “அவள் பிடிக்கலைன்னு சொன்னா அப்போ நிச்சயத்தை நிறுத்திடுவியா? இல்ல ஒருவேளை அவள் அதான் நிச்சயமே வைக்க போறாங்களேன்னு பொய்யா பிடிச்சுருக்குன்னு சொன்னா…?” என்று கேள்வியாய் அவனை முறைக்க, இளமாறன் தான் “உன்னோட பெரிய இம்சை டா… அவள் 70ஸ் கிட்ஸ்ன்னா நீ 80ஸ் கிட் ஆ இருக்க…” என்றவன், “இப்போ என்ன ஜாதகம் மேட்ச் ஆ இருக்குனு அவ வீட்டுல சொல்றதுக்கு முன்னாடி நீ சம்மதம் கேட்கணும் அதான…” என்க, அவன் ஆமா என்று தலையாட்டினான்.

அதில் தலையில் அடித்தவன், உடனே சித்ராக்ஷிக்கு போன் செய்தான். அவன் எண்ணை கண்டதுமே அவளுக்கு குப்பென வியர்த்து விட்டது. முகுந்திடம் தான் பேசும் போதும், பேசிய பிறகும் கூட அவன் தன்னிடம் பேசவே இல்லை. அது எதனால் என புரியாது, அவனின் செய்கையில் வெகுவாக குழம்பினாள்.

தனியாக சென்றவன், “ஹாய் கேண்டி! என்ன பண்ற?” என சாதாரணமாக கேட்க, அவளோ சற்று விழித்து விட்டு, “சும்மா தான் இருக்கேன்” என்றான் மெல்லிய குரலில்.

அவனோ யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு, “ஏன் சும்மா இருக்க… உன் அக்காக்கு ஜாதகம் பொருந்தணும்னு அப்படியே அவளை கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற முருகன் கோவில்ல போய் அர்ச்சனை பண்ணிட்டு, அப்படியே பார்க்ல வாக்கிங் போயிட்டு வரலாம்ல?” என்று தீவிரமாக கூற, அவளோ “ஹான்? என்னது?” எனக் கேட்டாள் ஒன்றும் புரியாமல்.

அவனோ அழுத்தம் திருத்தமாக, “உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போகலாம்லன்னு கேட்டேன் கேண்டி… காண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் மை லேங்குவேஜ்?” என்று வினாவாக கேட்க, அவளுக்கு தான் தலை சுற்றியது. அவனோ மணியை பார்த்த படி, “பத்து நிமிஷத்துல நடை சாத்திடுவாங்க… சோ சீக்கிரம் போய் அர்ச்சனை பண்ணுங்க. நான் வந்து உங்கிட்ட பிரசாதம் வாங்கிக்கிறேன்” என்று அசட்டையாக கூறிவிட்டு  போனை வைக்க, சில நொடிகள் அவள் போனையே வெறித்தாள்.

‘மீட் பண்ண இப்படி கூட கூப்பிடலாமா? அதுக்கு நீ டைரக்ட்ஆவே கேட்க வேண்டியது தானடா…’ என்று மனதினுள் வறுத்துக்கொண்டிருக்க அந்நேரம் பலியாடாக செல்வி அங்கு வந்தாள் பேயறைந்த மாதிரி.

அவளை கண்டதும் நல்லவேளை இவளை எப்படி கூப்புட்றதுன்னு நினைச்சோம் அவளே வந்துட்டா… என எண்ணி அவசரமாக அவளை வெளியில அழைத்து செல்ல, அவளோ அதனை கூட உணராது  திகைத்த படியே கோவிலுக்கு வந்தாள். கடவுளை வழிபட்டு விட்டு, ஓரிடத்தில் அமர்ந்தும் அவள் அப்படியே இருக்க சித்ராக்ஷி தான் அவளை உலுக்கி “அக்காஆ? ஏன் இப்படி இருக்க” என்றாள்.

செல்வி தான், இன்னைக்கு என்ன ஆச்சு? ஏன் திடீர்னு உனக்கு பார்த்த மாப்பிள்ளை அப்படி கேட்டாரு? அதுக்கு அவரு என்ன சொன்னாரு? ஜாதகம் பொருந்தாதுன்னு தெரிஞ்சும், ஏன் அம்மா குடுத்து விட்டாங்க” என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டவளுக்கு நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. கண் வேறு கலங்கியது. அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவள் தோளை ஆதரவாக பற்றியவள், “அக்கா! ரிலாக்ஸ். உன்னை பொண்ணு பார்த்துட்டு போயிருக்காங்க அவ்ளோ தான். எனக்கு என்னவோ அவங்க வீட்ல ஏற்கனவே இதை பத்தி யோசிச்சுருப்பாங்கன்னு தான் தோணுது. இல்லைனா இளா அப்படி நேரடியா கேட்பாரா உன்கிட்ட? ஜாதகமும் கண்டிப்பா பொருந்தும் அக்கா. நீ இதுக்குலாம் பீல் பண்ண மாட்டியே இப்போ என்ன ஆச்சு” என்று அவளை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவளோ “தெரியல…” என்றாள் விசும்பலுடன்.

“அச்ச்சோ அக்கா… இதுக்குலாம் போய் யாராவது அழுவங்களா? சரி சொல்லு உனக்கு முகுந்தை பிடிச்சிருக்கா?” என விழி உயர்த்தி குறும்பாக கேட்க, அவளோ திகைத்து “அப்பா அம்மாவுக்கு பிடிச்சு ஜாதகமும் பொருந்துனா எனக்கு சம்மதம் தான்” என்று முணுமுணுப்புடன் கூற, அதில் பெருமூச்சு விட்ட சித்ரா :அக்கா, நான் இந்த டயலாக் சொன்னா ஒரு நியாயம் இருக்கு. நீயும் இப்படியே சொன்னா என்ன அர்த்தம்?” என்று முறைக்க,

அவளோ “இல்ல சித்ராம்மா. நம்ம எதுலயும் உடனே ஆசைப்பட கூடாது. எதிர்பார்க்கவும் கூடாது. அப்பறம் அது கிடைக்கலைன்னா நம்ம மனசு தான் ரொம்ப பாதிக்கப்படும். அவரை குறை சொல்ற மாதிரி எதுவுமே இல்ல. சொல்ல போனா அவருக்கு நான் பொருத்தமா இருப்பேனான்னு தான் எனக்கு தெரியல. நான் இப்போ எதுவும் சொல்லல சித்ராம்மா. அப்படியே ஜாதகம் பொருந்துனா கூட, பிடிச்சுருக்கு பிடிக்கலைன்னு கல்யாணம் பண்ணிட்டு அவரை பத்தி தெரிஞ்சுட்டு சொல்றேன்…” என்று தலை சாய்த்து கூற, சித்ரா தான் வியந்து பார்த்தாள். 

திருமணத்தை பற்றிய அவளின் எண்ணமும், இவ்வளவு காயப்பட்டும் கூட அவளின் தெளிவும் சித்ராவை வியக்க வைத்தது. படிப்பும், நவ நாகரிகமும், அதன் விளைவால் நன்றாக சிந்திக்கும் முன் தோன்றும் சில உடனடி காதல்களும், திருமணத்தை தாண்டாது முளையிலேயே கிள்ளி எறியப்பட, அப்படியே  திருமணம் செய்தாலும் அதனின் அர்த்தமும் புனிதமும் உணராது, காலப்போக்கில் காதல்கள் கோர்ட் வாசலில் விற்கப்படுவதும், என திருமணங்கள் பந்தையங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலத்திலும் தன் தமக்கையின் முற்போக்கு சிந்தனை சித்ராவை தவறு செய்த குழந்தையாய் மேலும் குறுகுறுக்க வைத்தது.

காலம் கடந்த பின்னும், கடந்து சென்ற காதலை எண்ணி மனம் இனித்தால் அல்லவோ அது உண்மை காதல். அதுவே தவறிழைத்து விட்டதாய் கசந்தால், அது காதலென்றே பொருள்படுமா? என்ற விடையறியா பல கேள்விகள் அவளுள் முணுக் என தோன்றி, தலையை குடைந்தது.

அப்போது,  “என்னை விட்டுட்டு என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க?” என்ற இளமாறனின் குறும்பு குரல் கேட்க, சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

செல்வி அவனை பார்த்து பேந்த பேந்த விழிக்க, :என்ன செல்வி டியர்? இன்னும் உன் ஷாக் கௌண்ட் முடியலையா?” என நக்கலாக கேட்டவன், “சரி நீ வீட்டுக்கு போ, நான் உன் தங்கச்சி கூட பேசணும்” என்று கூற, செல்வி தான் சித்ராக்ஷியை புரியாமல் நோக்கினாள்.

அவளோ அதற்கு மேல் விழிக்க, செல்விதான் இவரு நார்மலாவே பேச மாட்டாரு போல என சற்று முறைத்து விட்டு, அங்கிருந்து ஓடி விட்டாள்.

சித்ராக்ஷி தான், உடனே “முகுந்த் மாமா வரலையா? நான் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ண தான் வரசொல்றீங்களோனு நினைச்சேன்” என்று கேட்க, இளமாறன் அவளை பார்த்தபடி, “வந்தான், செல்வி பேசுனதை கேட்டான். போய்ட்டான்” என்று தோளை குலுக்கினான்.

அவள் தான் “ஏங்க? என்ன ஆச்சு? ஏன் பேசாம போனாங்க” என பதற, “ஹே! டென்ஷன் டாஃபிகோ! கூல்! அவன் உன் அக்கா மாதிரி கல்யாணத்துக்கு அப்பறமே பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுக்குறேன்னு போய்ட்டான்” என்றான் குறும்பு மின்ன.

அதில் விழி  விரித்தவள், “அப்போ மாமாவுக்கு அக்காவை பிடிச்சிருக்கா?” என ஆர்வமாக கேட்டிட,  “ம்ம், அவனுக்கு உன் அக்காவை பிடிச்சுருக்கு. ஐ ஹோப். செல்விக்கும் அவனை பிடிச்சுருக்கு. எனக்கும் உன்னை பிடிச்சுருக்கு. உனக்கு…?” என்று கேள்வியாய் நிறுத்தியவன் அவள் முகத்தை காண அவள் முகம் தான் வெளிறி போனது. பின் தன்னை சமன்படுத்தியவள், “நான் உங்க கிட்ட பேசணும்” என்றாள் அவனை பாராமல்.

அவனோ “ம்ம் பேசு!” என்று கையை கட்டியபடி அவளை பார்க்க, அவளோ போட்டிருந்த சல்வார் ஷாலை திருகிக் கொண்டு பேச்சு வராமல் திணறினாள். இதில் அவன் வேறு அவளை துளைக்கும் பார்வை பார்க்க, அது வேறு அவளை கொய்தது. பின் மூச்சை இழுத்து விட்டவள், “அது…” என பேச வர, அவனோ “அச்சோ! சஸ்பென்ஸ் ஸ்நாக் பார்… ஏன் ஒவ்வொரு டைமும் என்  ஹார்ட் பீட்டை எகிற வைக்கிற? சொல்ல வர்றதை சட்டுன்னு சொல்லு…” என்றான் இடுப்பில் கைவைத்தபடி.

அவளோ, சட்டென “நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தனை லவ் பண்ணேன். கல்யாணம் வரைக்கும் போச்சு. அப்பறம் கல்யாணம் நின்னுடுச்சு” என்று கூற, இந்த வார்த்தைகளை கூறி முடிக்கும் முன்னே, அவளுக்கு பலமாக மூச்சு வாங்கியது.

அதில் அவன் முகத்தில் சில அதிர்வலைகள் தெரிந்தாலும், அதனை மறைத்துக் கொண்டு, “அப்பறம்?” என  வினவ, அவளோ “என்ன அப்பறம்? அவ்ளோ தான்…” என்றாள் ஏனோ இதற்கு மேல் பேசிட அவள் மனதில் தெம்பும் இல்லை.

இளமாறன் அவளை குறுகுறுவென பார்த்துக்  கொண்டே, “இப்போ எதுக்கு இதை நீ சொல்ற? என்கிட்ட மறைக்க கூடாதுனு சொல்றியா? இல்ல, உன்னால அவனை மறக்க முடியாதுனு சொல்றியா?” என அழுத்தமாக வினவிட, சடாரென நிமிர்ந்தவள் அவனை முறைத்துப் பார்த்து, “உங்ககிட்ட மறைக்க கூடாதுன்னு தான் சொன்னேன்… இதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் அது உங்க இஷ்டம். இது எதுவும் என் அக்கா கல்யாணத்தை பாதிக்காதுன்னு நம்புறேன். தட்ஸ் இட். நான் கிளம்பலாமா?” என சற்று கோபத்துடன் வினவ,  அவனோ கோவில் வாசலை நோக்கி அசட்டையுடன் கண்ணை காட்டினான் கிளம்பு என்று.

அத்தியாயம் 7

இளமாறன் அவளை கிளம்ப சொன்னதில், ஏதோ ஒரு ஏமாற்றம் மனமெங்கும் பரவ, அவன் என்ன நினைக்கிறான் என புரியாது தவித்த சித்ராக்ஷி, நீர் கோர்த்த கண்களுடன் எதுவும் பேசாமல் வாசல் நோக்கி சென்றாள். அவளின் விழி அசைவுகளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இளமாறன், “ஏய் அழுமூஞ்சி அமுல் சாக்லேட்!” என்று சிறிது சத்தத்துடன் அவளை அழைத்தான்.

அவனின் அழைப்பில் சுற்றி முற்றி யாரும் பார்க்கிறார்களா என பதட்டத்துடன் பார்த்தவள் திரும்பி அவனை குழப்பத்துடன் நோக்க,  “நான் கூட ஒரு பொண்ணை லவ் பண்ணேன். கல்யாணமே பண்ணிக்கிட்டேன். எனக்கு குழந்தை கூட இருக்கு…” என்று அதே சத்தத்துடன் கூற, அதில் ஒரு நொடி திகைத்தாள்.

பின், அவனே குறும்பாய் “பொண்ணு கூட உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்…” எனக் கூறியதில் அவள் மொத்தமாக குழம்பி, “யாரு?” என்றாள். அவனோ “வேற யாரு? நீ தான். நேத்து தான் கனவுல கல்யாணம் பண்ணினேன்…” என்று தோளை குலுக்க, அவள் தான் சில நொடிகள் பேச்சற்று நின்றாள்.

பின், பக்கென புன்னகைத்து விட்டவளை கண்டவனின் இதழ்களிலும் லேசான புன்னகை தோன்றி, “கண்ணை துடைச்சிட்டு போ!” என்றான் மென்மையாக. அதன் பிறகே தன் கண்கள் கலங்கி இருக்கிறது என்றே உணர்ந்தவளுக்கு, ஏனோ அந்த நொடி அவனை விட்டு செல்ல மனமே இல்லை.

மனதிலிருக்கும் அனைத்தையும் கொட்ட வேண்டுமென்று தோன்ற, ஆனால் அந்த நேரம் தான் அவளுக்கு சாதகமாக இல்லை. அப்பொழுதே நன்றாக இருட்டி இருந்ததில், ஏதோ ஒன்றை அவனிடம் தொலைத்து விட்ட உணர்வு. நிச்சயமாய் படங்களில் வருவது போல் அவனிடம் தொலைத்தது தன் மனதை அல்ல. அவன் மேல் ஈர்ப்பும் அல்ல, காதலும் அல்ல. அதையும் தாண்டிய ஒரு உணர்வு. அவனின் மென்மையான குரலும், அவனின் களங்கமில்லாத குறும்பான பார்வையும் அவளுக்கு மனதில் ஒரு நிம்மதியை தந்தது.

“வரேன்” என தலையை மட்டும் அசைத்து விட்டு, அவள் மீண்டும் வீடு நோக்கி நடக்க, இளமாறன் தான் குழம்பி நின்றான். அவளுக்கு இந்த திருமணத்தில் பெரியதாக ஈடுபாடு இல்லை என்பது அவளின் முதல் அறிமுகத்திலேயே  அவன் உணர்ந்தது தான். ஆனால், அதற்கு காரணம் என்ன என்று புரியாமல் குழம்பியவனுக்கு அவளை இழக்கவும் மனமில்லை. எங்கே திருமணத்தை நிறுத்தி விடுவாளோ! என்றே சற்று பயந்து அவசரமாக முடிவெடுத்தான்.

நேற்று பேசவேண்டும் என்று சொன்ன போதே, ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவாளோ என அவன் இதயம் தாறுமாறாய் துடித்தது. அந்த நேரம் அவனை காப்பாத்த என்றே, முகுந்த் போன் செய்திட, அந்நேரத்தை பயன்படுத்தி அவளிடம் பேசாமல் தப்பித்து விட்டான். இருந்தும், இவள் காதல் என்று சொல்வாள் என்றெல்லாம் அவன் சிந்திக்கவில்லை. இப்போது அவள் கூறியதை கேட்டு, அவனுக்கு கோபமும் அதிர்ச்சியும் வந்தாலும், அதனை தனக்குள் மறைத்துக் கொண்டு, கிளம்ப சொன்னான். ஆனால் அவளின் கலங்கிய விழிகள் அவனுக்கு தான் செய்வது தவறு என உணர்த்த, அவளிடம் இயல்பாக பேசி அனுப்பி வைத்தான்.

செல்வி பேசியதை கேட்டு, வீட்டிற்கு வந்த முகுந்துக்கு இதழ்களில் புன்னகை உறைந்தே இருந்தது. நியூஸ் பேப்பரை எடுத்து அமர்ந்தவனுக்கு அதிலெல்லாம் மனம் செல்லாமல் செல்வியிடமே உறைந்திருக்க, சாரதா வந்தவர் “முகுந்த் கண்ணா! பேப்பர் ல ஏதாவது ஜோக் போட்டுருக்காங்களா?” எனக் கேட்டார் நக்கலாக.

அவன் அதனை உணராது, “இல்ல அத்தை, பொண்டாட்டி  புருஷனை சரமாரியாக வெட்டிக்கொலை … ன்னு போட்டுருக்கு” என்று அதற்கும் புன்னகைத்த படியே ஹெட் லைன்ஸ் பார்த்து பதில் பேச,  :அட நாரப்பயலே?” என்று அவனை வெறியாய் முறைத்தார் சாரதா.

அதன் பிறகே சுயநினைவுக்கு  வந்தவன், ஐயோ! என தலையில் அடித்துக் கொண்டு, சாரதாவை பார்த்து இளித்து வைக்க, அவரோ அவனை வெகுவாக சீண்டிக்கொண்டிருந்தார். அந்நேரம், யோசனையுடன் உள்ளே வந்த இளமாறனை கண்டு சாரதா, “மாறா இங்க வந்து உங்க நொண்ணனை என்னென்னு கேளு. மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்” என்று அவனை துணைக்கு அழைக்க, “ஐயோ அவனை ஏன் அத்தை கூப்புட்ற?” என்று அவரின் வாயை பொத்தினான் முகுந்த்.

ஆனால் இது எதையும் உணராமல், அவன் அறைக்குள் சென்றிட, இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். பின் இருவரும் அவன் பின்னே சென்று மாறன் முன் நிற்க, சில நிமிடங்கள் கழித்தே நிமிர்ந்த இளமாறன் “ஹே! நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்தீங்க?” என்றான்.

முகுந்த், “அது சரி, சார் வந்ததுல இருந்து என்ன தீவிர சிந்தனையில் இருக்கீங்க? அடுத்து யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா உத்தேசம்” என கிண்டலுடன் கேட்க, அதற்கு இளமாறன் சிறு புன்னகையையே கொடுத்தான்.

அவனிடம் ஏதோ சரி இல்லை என உணர்ந்த சாரதா, “ஏதாவது பிரச்சனையா மாறா?” எனக் கேட்டார் பதற்றமாக. அவன் இல்லை என தலையசைக்க, முகுந்த், கூர்மையாக “ஆர் யூ ஆல்ரைட் டா?” என்று கேட்டான்.

அதற்கு ஒரு நொடி அமைதி காத்து விட்டு, நோ, “ஐ ஆம் நாட் ஆல்ரைட்…!” என்றான் மெதுவாக. சாரதாவோ, “அடிங்க, இதை தானடா நான் தமிழ் ல கேட்டேன். இப்போ என்னமோ ஆல்ரைட் ஆல் தப்புன்னு ரெண்டு பேரும் பீட்டர் விட்டுட்டு இருக்கீங்க. இதுக்கு தான் படிச்சா பயலுகளோட பழக்க வழக்கம் வச்சுக்க கூடாது” என்று சிலுப்பிக்கொண்டதில், இளமாறன் நன்றாகவே சிரித்து விட்டான்.

முகுந்த் தான் சாரதாவை முறைத்து விட்டு, “என்னடா ஆச்சு?” எனக் கேட்டான் தன் தம்பியிடம். பொதுவாக அவன் சடாரென அனைத்திலும் முடிவெடுத்தாலும் அவனுக்கு என்று ஒரு குழப்பம் வருகையில், முகுந்த்தும் சாரதாவும் அதனை தீர்த்து வைக்காமல் விட மாட்டார்கள்.

அவனும் தான் அந்த குழப்பத்தோடு தவறான முடிவை எடுத்து விடக் கூடாது என்று, அவர்களிடம் கூறி அவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே ஒரு முடிவுக்கு வருவான். இப்போதும், சித்ராக்ஷியை பார்த்த முதலான விஷயங்களை கூறியவன்,  சிறிது நேரம் முன்பு சித்ராக்ஷி கூறியதையும்  அவர்களிடம் கூறியவன், குழப்ப முகத்துடன் இருக்க, முகுந்த், “சரி அவளுக்கு பாஸ்ட் ல ஒரு லவ் இருக்கு. அதை அவளே சொல்லிட்டா இதுல என்னடா குழப்பம்?” எனக் கேட்க, இளமாறன், “தெரியலையே! எனக்கு இதை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியலைடா… நான் அவளை ஹர்ட் பண்ணிடுவேனோ னு பயமா இருக்கு” என்றான் பாவமாக.

முகுந்த், “அவள் தான் ஆரம்பத்துல இருந்து இன்டெரெஸ்ட் இல்லாம இருந்தாள்ன்னு சொன்னியே அப்போவே நீ இந்த மாதிரி இருக்கும்னு கெஸ் பண்ணலையா?” எனக் கேட்டான் வினாவாக. அதற்கு இளமாறன் இல்லை என தலையாட்ட, முகுந்த் அழுத்தமாக, “கெஸ் பண்ணலையா? இல்லை கெஸ் பண்ண பிடிக்கலையா?” என்றான் மீண்டும்.

அதில் மாறனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதில் பெருமூச்சு விட்டு முகுந்த் சாரதாவை பார்க்க, அவர் நான் பார்த்துக்கிறேன் என்று கண்ணை மூடி திறந்தவர், மாறனின் அருகில் சென்று அமர்ந்தார். “மாறா, நான் கேட்குறதுக்கு கோபப்படாம பதில் சொல்லு…” என பீடிகையுடன் ஆரம்பித்தவர், “நீ அந்த பொண்ணை சந்தேகப்படுறியா?” எனக் கேட்டார் பட்டென.

அதில் அவரை தீயாய் முறைத்த மாறன், “நான் போய் அப்படி நினைப்பேனா அத்தை?” என்றான் கனலுடன். “அதுவும் அந்த சந்தேக புத்தியால நீ கஷ்டப்பட்டதை பார்த்ததுக்கு அப்பறமும் ஒரு பொண்ணை சந்தேகப்பட மனசு வருமா?” என்று கேள்வியுடன் நிறுத்தியவனை கண் கலங்க பார்த்த சாரதாவின் கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி. அவரிடம் பல இன்னல்களுக்கு ஆளாகிய பிறகே, வாழ்க்கையை வெறுத்து அண்ணன் வீட்டில் தஞ்சம் புகுந்தவர், அண்ணன் மகன்களே தன் வாழ்க்கை என ஆகிப் போனார்.

ஆனால், சிறு வயதில் இளமாறனின் மாமா வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்வதையும், அதற்கு சாரதா கண்ணீர் விடுவதையும் கண்டவனுக்கு அது அனைத்தும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. சாரதா மீண்டும் நிகழ்வுக்கு வந்து,

“இங்க பாரு மாறா! எந்த விஷயத்தையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு இருந்தா நம்ம மனசு தான் குப்பையாகும். நம்ம மனசுல என்ன ஓடுதோ அதை சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசி,  தெளிவு படுத்திக்கிட்டா நம்ம மனசு அமைதியாகிடும். அதுக்கு அப்பறம் கெட்டதை கூட நம்ம மனசு நல்லதாவே நினைக்க ஆரம்பிக்கும். உனக்கு அந்த பொண்ணை பிடிச்சுருக்குல…? அந்த பொண்ணும் உங்கிட்ட மறைக்காம உண்மையா இருக்குல்ல? அப்போ நீ மனசு விட்டு பேசு. உனக்கு என்ன கேட்கணுமா அதை அந்த பொண்ணுக்கிட்டயே கேளு. காதலிக்கிறது ஒன்னும் தப்பில்லையே.

ஒரு பொண்ணு காதலிச்சு அது கல்யாணத்துல முடிஞ்சுட்டா பார்க்குறவங்க பெருமையா பேசுவாங்க. அதே ஒரு பொண்ணுக்கு அவள் நினைச்ச வாழ்க்கை தோல்வியில் முடிஞ்சுட்டா அந்த பொண்ணை வாய்க்கு வந்த படி பேசுவாங்க. ஆசைப்பட்ட வாழ்க்கையில கிடைச்ச ஏமாற்றத்தை விட, அதுக்கு அப்பறம் அவளுக்கு கிடைக்குற பேர்ல தான் அந்த பொண்ணு ரொம்பவே மனசு உடைஞ்சு போவா.

இப்போ இந்த நிலைமையில தான் சித்ராவும் இருக்கா. முடிஞ்சா அவளை புரிஞ்சுக்கிட்டு நல்லா பார்த்துக்கோ. இல்ல அவள் காதலிச்சதை உன்னாலே ஏத்துக்க முடியலைன்னு தோணுச்சுன்னா, தயவு செஞ்சு அவளை கல்யாணம் பண்ணிக்காத… அது உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம். நீயே யோசிச்சு முடிவெடு!” என்றவர் முகுந்தை வெளியில் அழைக்க, அவனும் இளமாறனை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியில் செல்ல போக, மாறன் “அத்தை!” என்றழைத்தான் கண்டிப்பாக.

அவர் என்னவென்று பார்க்க, “உங்கிட்ட இந்த அட்வைஸ் லாம் நான் கேட்டேனா? நான் எப்போ அவள் லவ் பண்ணது தப்புன்னு சொன்னேன்? நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லையான்னு குழப்பமா இல்ல. அவளை எப்படி கரெக்ட் பண்றதுனு தெரியாம தான் குழப்பமா இருந்தேன். பிரீ யா அட்வைஸ் யாராவது கேட்டா போதுமே, உடனே வந்து பக்கம் பக்கமா டயலாக் பேச வேண்டியது…” என்று கேலியாய் முறைக்க,

முகுந்த் வாயை பொத்தி சிரித்த படி, “இந்த அவமானம் உனக்கு  தேவையா அத்தை? ஒழுங்கா என்கூட பேப்பர் படிச்சுருக்கலாம் நீ…” என நக்கலடிக்க, சாரதா, இளமாறனை அடிக்க துரத்தினார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடியவன், வித்யாவின் பின் சென்று ஒளிந்து அவரை சீண்ட என்று அந்த இரவு பொழுது இனிமையாக நகர, அவனின் மனதில் இருந்த குழப்பமும் முற்றிலுமாக மறைந்திருந்தது. மறுநாள், காலையில் அவனின் வீடே பரபரப்பாக இருந்தது.

செல்வியின் வீட்டிலும் மகிழ்ச்சியாக திருமணத்திற்கு சம்மதிக்க, அடுத்த நாள் இரு ஜோடிகளுக்கும் கோவிலிலேயே ஒன்றாக நிச்சயம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு உறவினர்களை அழைக்க, துணிமணி வாங்க என்று அவ்வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து வழிய, செல்விக்கு தான் ஒரே படபடப்பாக இருந்தது.

இதில், உடை எடுக்க பெண்களையும் அழைத்து செல்வோம், அவர்களின்  விருப்பப்படியே உடை  எடுக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டில் கூறிவிட, முகுந்தை காண வேண்டுமே என்று அவளுக்கு தான் உதறல் எடுத்தது. நீலா, “செல்வி கிளம்பிட்டியா?” என குரல் கொடுக்க, “வந்துட்டேன் மா” என்றவள் கால் நடுக்கத்தை மறைத்த படி வெளியில் வந்தாள். 

ராஜேந்திரன் போனில் நடராஜிடம் “நாங்க முன்னாடி போறோம் நீங்க பின்னாடி வாங்க…” என்று பேசிக்கொண்டு வர, செல்வி “ஏன் பா,  எல்லாரும் ஒன்னாவே போகலாமே?” என்றதில் நீலா, “நீ வாயை மூடு. அவள் கூட என்னால எங்கயும் வரமுடியாது” என்றார் சித்ராக்ஷியை குறிப்பிட்டு.

அதில் கடுப்பான செல்வி, ஏதோ கூறும் முன், ராஜேந்திரன் “ப்ச்! ரெண்டு பேரும் அமைதியா வர்றீங்களா?” என அதட்டலை போட, செல்வி நீலாவை முறைத்த படி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

“சித்ராம்மா, உன் பெரியப்பா எல்லாரும் கடைக்கு போய்ட்டாங்களாம்… நம்மளும் கிளம்பிடலாமா?” என நடராஜ் தன் மகளிடம் கேட்க, அவள், “அப்பா! நான் கண்டிப்பா வரணுமா? அதுவும் பெரியம்மா நான் வந்தா தேவையில்லாம பிரச்சனை பண்ணுவாங்க…” என்று முகத்தை சுருக்க, பார்வதி “எப்படினாலும் இனிமே ஒண்ணா தான எல்லா காரியமும் பண்ணனும். பொண்ணை கட்டிக்குடுக்குற இடத்துல அக்காவால ஒன்னும் பேசமுடியாது.  நீ எதுவும் கண்டுக்காத சித்ராம்மா” என்று அவர்கள் வற்புறுத்த தன்னை நொந்து கடைக்கு சென்றாள்.

இரண்டு அடுக்கு கட்டிடமாக இருக்கும், அப்பெரிய துணிக்கடையின் மேல் மாடியில் மேலும் இரு மாடிகள் கட்டும் கட்டட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே, சித்ராக்ஷி உள்ளே வந்தாள்.

அங்கு இளமாறனின் பெற்றோரும், சாரதாவும் இருக்க, பெரியப்பா குடும்பமும் இருந்தது. செல்வி சித்ராக்ஷியை கண்டதும் அவளருகில் வந்து நின்று “ஏண்டி இவ்ளோ நேரம்” என்று முறைக்க, அவள் கிண்டலாக “நான் வரலைன்னா என்னக்கா, நீ மாமா கிட்ட பேசிட்டு இருக்க வேண்டியது தான? எங்க என் மாமா” என்று முகுந்தை தேட, அவன் பெயர் சொன்னதும், செல்வியின் கன்னங்கள் சிவந்து நின்றது.

சித்ராக்ஷி விழி விரித்து, “அச்ச்சோ! அக்கா! வெட்கத்துல கன்னம் சிவக்குறதுன்னு கேள்வி பட்டிருக்கேன் இப்போ தான் நேர்ல பார்க்குறேன்… செம்ம ஸ்வீட் கா…” என்று அவள் கன்னம் பிடித்து கொஞ்ச, செல்வி “போடி… நான் ஒன்னும் வெட்கப்படல” என்று சிணுங்க, நீலா தான் இருவரையும் கோபக்கனலுடன் பார்த்திருந்தார்.

அப்போது, உள்ளிருந்து முகுந்தும் இளமாறனும் வர, சித்ராக்ஷி “வாங்க மாமா! இந்த கண் கொள்ளாக் காட்சியை நீங்க பார்க்காம விட்டுடீங்கன்னு நினைச்சேன்… அக்கா” என்று பேச வர, செல்வி பதற்றத்தில் அவள் கையை நறுக்கென கிள்ளினாள். அதில் சித்ராக்ஷி, கையை தேய்த்துக் கொண்டே, “கிள்ளாத கா… முக்கியமான விஷயம் பேசுறேன்ல” என்று மீண்டும் சீண்டியதில், முகுந்த் செல்வியை ரசனையாக நோக்க, செல்வி ஐயோ! என்று தலையை தரையில் புதைத்தாள்.

இளமாறன் “என்ன செல்வி டியர்? தரையில எதுவும் புடவை இருக்கா? டிசைன் பாக்குறியா?” என்று அவன் பங்குக்கு கேலி செய்ய, வித்யா தான் அவன் தலையில் தட்டினார். “டேய்! அவள் உனக்கு அண்ணி முறை வேணும். டியர், பியர்ன்னு சொல்லிட்டு இருக்க?” என்று போலியாய் அதட்டினார்.

அதில் கெக்க பெக்கவென இளமாறன் சிரித்து, “இந்த அப்புராணியை அண்ணின்னு கூப்புடலாம் வரலைம்மா…” என்றதில், சித்ராக்ஷி அவனை முறைத்தாள். அவனோ ஒரு புருவத்தை உயர்த்தி என்ன எனக் கேட்க, அதில் அவள் தான் சட்டென வேறு புறம் திரும்பினாள். ஆளையும் பார்வையையும் பாரு! என மனதினுள் வறுத்தபடி.

பின், அனைவரும் புடவைகள் பிரிவுக்கு செல்ல, பெண்கள் அனைவரும் புடவையில் மூழ்கினர். செல்வியுடன் சித்ரா ஏதோ பேசிக்கொண்டே புடவையை காண, செல்வி ஒரு புடவை நன்றாக இருக்கிறது எனக் காட்டியதில், சித்ரா “எது பஞ்சுமிட்டாய் கலர்? நல்லாருக்கு?” என்று முறைத்ததில் செல்வி அசடு வழிந்தாள்.

இதில் நீலா சித்ரா மட்டும் கேட்கும் வண்ணம், “ஆமா, எல்லாத்தையும் சரியா செலக்ட் பண்ண மாதிரி தான். கூட இருக்குறதுங்க  வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்குதுங்க” என்று முணுமுணுக்க, சித்ராக்ஷிக்கு சுள்ளென வலித்தது. அதில் அவள் மெதுவாக நகர்ந்து தனியே நிற்க, அப்போது தான் சித்ரா அங்கு இல்லாததை உணர்ந்த செல்வி “சித்ரா வா” என கண்ணாலேயே அழைத்தாள்.

அவள் மறுப்பாக தலையாட்டி “நீ பாரு” என்று கூற கண்ணை சுருக்கி தன் தங்கையை தீயாக முறைத்தாள். பின் அவளருகில் வர போக, இளமாறன் சித்ராவின் அருகில் வருவதை கண்டாள். அதில், அவள் ‘இவளை என்ன தான் பண்றதுன்னு தெரியல’ என்று புலம்பிய படி, நீலா கேட்ட கேள்விக்கு பதில் கூற, இளமாறன், “நீ புடவை பார்க்காம இங்க என்ன பண்ற?” என்றான் கேள்வியாய்.

அவனை எதிர்பாராதவள், “அது… அதான் அவங்க பார்க்குறாங்களே. கடைசியா செலக்ட் பண்ணிக்கலாம்” என்றாள் மெல்லிய குரலில். 

“கடைசியான்னா எப்போ நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்பறமா?” என்றவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள், பேசாமல் அமைதியாகிட, அவன் பணியாள் ஒருவனை கண் காட்டி, இங்கு வர சொன்னான். அவனும் கை நிறைய பட்டுப்புடவையுடன் சித்ராவின் அருகில் வந்து டேபிளில் விரிக்க, சித்ராக்ஷி தான் பேந்த பேந்த விழித்தாள்.

“எதுக்குங்க இவ்ளோ புடவையை இங்க வந்து வைக்கிறாங்க?” என கிசுகிசுப்பான குரலில் மாறனிடம் வினவ, அவனும் அதே குரலில் “என் மரமண்டை மில்கி பார் செலக்ட் பண்ணத்தான்” என்று கண் சிமிட்ட, சித்ராக்ஷி 
திகைத்து உறைந்தாள்.

அவள் முன் சொடுக்கிட்டவன், “ஹே! கேண்டி! ம்ம்…” என்று புடவையை காட்ட, அவள் தன் பெற்றோரை பார்த்த படி, தயங்கி நின்றாள். “ப்ச்!” என சலித்தவன், ஒரு ஒரு புடவையாக அவள் மேல் வைக்க அவளோ மேலும் திகைத்து நெளிய, “ஏண்டி நெளியுற? ஒழுங்கா நில்லு” என  அதட்டியதில், அவள் “இளா எல்லாரும் பார்க்குறாங்க” என்றாள் பதட்டமாக.

அவளின் முதல் அழைப்பில் கிறங்கி போனவன், “இப்போ என்ன சொன்ன?” எனக் கேட்டான் அருகில் வந்து. சித்ராவோ “எல்லாரும் பார்க்குறாங்கன்னு சொன்னேன்…” என்றாள் பல்லைக்கடித்த படி. சாரதா தான், “டேய் மருமவனே! நல்லா செலக்ட் பண்றடா நீ…!” என்று நக்கலடித்தவர் முகுந்தை தேடினார். அவனோ இதில் எல்லாம் கலந்து கொள்ளாமல் ஓரமாய் நின்று, போனை பார்த்துக் கொண்டிருக்க, இதுலாம் என்னைக்கு தான் கரெக்ட் பண்ண போகுதோ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.

ஆனால், அவன் சாரதாவிற்கு தான் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். “என் ஆளுக்கு எடுத்த புடவை உன் மூஞ்சி மாதிரியே இருக்கு. ஒழுங்கா நல்லா செலக்ட் பண்ணல எல்லார் ட்ரெஸ்ளையும் இங்க் ஊத்தி விட்டுடுவேன்!” என்ற மிரட்டலுடன்.

வித்யாவோ “சித்ரா, இதெல்லாம் நோட் பண்ணி வச்சுக்கோ. கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படிலாம் செலக்ட் பண்ணுவாங்க. கல்யாணத்துக்கு அப்பறம் நம்மளை டீல் ல விட்ருவாங்க…” என்றதில், இதழை மீறி வந்த புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் சித்ராக்ஷி.

மாறன் தான், “மா, நான் ஒன்னும் அப்பா மாதிரி உங்களை டீல் ல விட மாட்டேன். என் பொண்டாட்டி க்கு எல்லா புடவையையும் நானே செலக்ட் பண்ணுவேன்” என்று ரசித்து கூற, செந்திலோ நான் என்னடா பண்ணேன் உனக்கு? என்று மிரண்டு தன் தாரத்தை பார்த்தார்.

செந்திலை கண்ட சித்ரா கலகலவென சிரித்து “ஐய்யோ இளா, பாவம் மாமா… இப்படி மாட்டி விட்டுடீங்களே?” என்று மேலும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, அவன் அதனை ரசித்த படி, “இது என்ன இடம்?” என்றான் சம்பந்தமில்லாமல்.

அவளோ சிரிப்பதை நிறுத்தி விட்டு, “ஹான்?” என்று பார்க்க, “ஹப்பாடா! நான் கூட நீ சிரிக்கவும் நம்ம எதுவும் வேற இடத்துக்கு மாறி வந்துட்டோமோன்னு நினைச்சு பயந்துட்டேன். அப்போ நான் கரெக்ட் ஆன இடத்துல தான் இருக்கேனா?” என்று சந்தேகமாக கேட்டு அவளை வார, சித்ராக்ஷி இடுப்பில் கை வைத்த படி அவனை முறைத்தாள்.

அதில் புன்னகைத்தவன், அவளை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு புடவையாக தள்ளி நின்று அவள் மேல் வைப்பது போல் பாவனை செய்து, தேர்ந்தெடுக்க அவளுக்கோ ஏதோ மாதிரி இருந்தது. அது என்ன உணர்வென்று புரியாமல் திணறியவள்,  ஒரு சிவப்பு நிற பட்டுப்புடவையில் நீல நிற பார்டர் தோய்ந்த படி இருந்த புடவை ஒன்றை அவன் எடுப்பதை கண்டு மாறனை பார்க்க, அவனும் ரசனையாக அவளை பார்த்தபடி
அந்த புடவையை காற்றிலேயே அவளுக்கு வைத்து பார்த்தான்.

இருவரும் ஏதோ ஒரு உணர்ச்சியின் பிடியில் சிக்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அவளை அப்பொழுதே அப்புடவையை கட்டி பார்க்க வேண்டும் என ஆவல் அவனை வெகுவாய் துரத்தியது. ஆனால், அந்நாள் அவன் வாழ்வில் வருமா? என்ற விதியின் கேள்வியை அவனும் அவளும் அறிந்திருக்கவில்லை.

அத்தியாயம் 8

இளமாறனும், சித்ராக்ஷியும் ஒருவரை ஒருவர் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையில் வந்து சாரதா, ‘லொக்கு லொக்கு’ என இருமினார். அதில், சித்ரா தன்னிலை பெற்று, ‘சே! நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோம்?’ என்று தன்னையே திட்டியபடி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, இளமாறன், “நீ இரும்புறதுக்கு இந்த இடம் தான் கிடைச்சுச்சா?” என்று முறைத்தான்.

அவரோ, “நீ இப்படி ஒரு சேலைய வச்சே, டூயட் பாடிட்டு இருந்தன்னா, மத்த ஜாமான்லாம் யாருடா வாங்குவா…? போ! போய்! நீயும் உன் நொண்ணனும் ட்ரெஸ் எடுங்க…” என்று அவன் வைத்திருந்த புடவையை வெடுக்கென பிடுங்கி கொள்ள, “கல்யாணம் முடியட்டும் உன்னைய பார்த்துக்கிறேன் அத்தை…” என முணுமுணுத்தபடி அவன் முகுந்தை இழுத்துக் கொண்டு நகர, செல்வியோ திருதிருவென விழித்தபடி நிற்க, சித்ராக்ஷி, “குடும்பமாடா நீங்க…” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பின், முகுந்த் அனுப்பிய வண்ணத்திலேயே செல்வி அறியாமல் அவளுக்கு சாரதாவே தேர்ந்தெடுக்க, செல்விக்கும் அது பிடித்தே இருந்தது. “நீங்க நல்லா புடவை செலெக்ட் பண்றீங்கம்மா…” என வெள்ளந்தியாய் செல்வி கூற, அவளின் அழைப்பில் அவர் தான் ஒரு நொடி திகைத்து விட்டு, பின் மென்முறுவலுடன் அமைதியாகி விட்டார்.

நீலா  இதனை கவனியாமல், ஏதோ சிந்தித்தபடி இருக்க, மற்ற பெரியவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. அதோடு, தேவையான மற்றவற்றையும், கூடவே புடவைக்கு ரவிக்கையையும் அங்கேயே தைக்க கொடுத்து விட்டு மாலை வீடு திரும்பியவர்களுக்கு ஏகப்பட்ட வேலை இருந்தது.

அன்று இரவு, சித்ராக்ஷிக்கு இளமாறன் போன் செய்ய, அவளும் எடுத்து, “ஹெலோ” என்றாள். “என்ன பண்ற கேண்டி…?” என மாறன் கேட்க, அவளோ “இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க? தூங்க தான் போறேன்…” என்றாள் வெடுக்கென.

“ஏன் தூங்குற? நாளைக்கு நிச்சயம் வச்சுட்டு யாருக்காவது தூக்கம் வருமா? நீ என்ன பண்ற இன்னைக்கு நைட் புல்லா என்கிட்ட போன்ல பேசுற? ஓகே வா?” என சாவகாசமாக கூறியவன், “சாப்டியா கேண்டி? என்ன சாப்பிட்ட?” என்று இயல்பாய் பேசுவது போல் பேச, அவளுக்கு தான் ஐயோ என்றிருந்தது. அவள் பதில் பேசாமல் இருக்கவும், “உன்னை தான்!” என அவன் அழுத்திக் கேட்க, அவள் “சாப்பிட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்.

“ம்ம், அடுத்த கேள்விக்கு பதில்?” என சற்று நக்கலாக கேட்க, “நான் என்ன சாப்பிட்டா இப்ப உங்களுக்கு என்ன?” என குரலில் காரத்தை ஏற்றி கேட்டதும், அவனோ கூலாக, “இல்ல, நான் இப்போ அங்க வந்து உனக்கு லிப் டு லிப் கிஸ் குடுக்கலாம்ன்னு இருக்கேன். நீ கார சட்னி ஏதாவது சாப்ட்ருந்தா எனக்கு உரைக்கும்ல அதான் கேட்டேன்…” என்றவனின் குரலில் எகத்தாளம் இருந்ததோ என எண்ணியவள் அவன் பேசியதில் உறைந்திருந்தாள். “எ… என்… என்ன?” என காற்று மட்டுமே வெளியில் வர, சிலையாகி நின்றவளுக்கு சில நிமிடம் பேச்சே வரவில்லை.

“ஓய்! லைன் ல இருக்கியா?” என அவன் மென்மையாக கேட்டிட, அவளோ போனை வைத்தால் வீம்புக்கு இங்க வந்தாலும் வந்து விடுவான் என்றெண்ணி, கலங்கிய கண்களுடன் “ம்ம்” என்றாள் நடுங்கிய குரலில்.

அவள் கலங்கி இருப்பதை உணர்ந்த மாறன், “நீ என்கிட்ட எப்படி பேசுறியோ அதை பொறுத்து தான் நான் ரியாக்ட் பண்ணுவேன். என்கிட்ட பேசும்போது பார்த்து பேசு… குட் நைட்!” என்று போனை வைத்து விட்டவனுக்கு, அவள் திமிராய் பேசியதில் முதலில் கோபம் தான் வந்தது. காலைல நல்லா தான இருந்தா? இப்போ என்ன வந்துச்சு இவளுக்கு…? என அனலடித்தவன், பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு, மீண்டும் அவளுக்கு போன் செய்தாள்.

அவளோ அவன் வைத்ததை கூட உணராமல், அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தாள். அவனின் கோபம் மட்டும் அவளை வெகுவாக பாதிக்க, ஏன் கலங்குகிறோம் என்றே புரியாமல் தவித்தவள், அவனிடம் தான் கூற வரும் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வான் என்று வேறு புரியாது குழம்பினாள். அவனிடம் வேண்டுமென்றே சண்டை பிடிக்க வேண்டும் என நினைத்தவளுக்கு இப்போது அது முடியும் என்று தோன்றவில்லை. அவள் மனமோ வேக வேகமாக சிந்திக்க, இறுதியில் அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.

அது தெளிவு என அவள் தான் நினைத்துக் கொண்டாள். ஆனால் ஏனோ அவளுக்கு அப்போது மனம் முழுதும் காரணமில்லா வலியே பிறந்தது. அப்போது அவனிடம் இருந்து அழைப்பு வர, நடுங்கிய கரங்களுடன் அதனை எடுத்து காதில் வைத்தாள்.

ஒரு சில நொடிகள் இருவரும் எதுவுமே பேசவில்லை. பின் அவனே, “ஹே! சைலன்ஸ் சால்ட் சாக்லேட்…” என்றழைத்தவன், “சாரி” என்றான் அமைதியாக. அவளிடம் இருந்து அப்போதும் பதில் வரவில்லை என்றதும், “நீங்க தைக்க குடுத்தது நாளைக்கு மதியம் வந்துடும்… அதை சொல்ல தான் கால் பண்ணேன். ஈவினிங் தான பங்க்ஷன்… சோ அதுக்குள்ள ஏதாவது கரெக்ஷன்னா குடுத்து விடு…” என்றவன் “வச்சுடவா?” எனக் கேட்டான்.

அவள் திக்கி திணறி, “நான் நான் உங்ககிட்ட பேசணும்…” என்றதும், அவன் புருவம் சுருக்கி, “பேசு கேண்டி! போன் சார்ஜ் தீருற வரை பேசு, காலைல சன் வர்ற வரை பேசு, பேசிக்கிட்டே இரு… ஆனால், நான் இடையில தூங்கிட்டா, நீயே போனை வைச்சுடு” என குறும்பாக பேசியவனை, போனிலேயே முறைத்தவள், “இவனை…” என பல்லைக்கடித்தாள்.

அவள் திட்டியது அவனுக்கும் கேட்க, “என்னை? என்ன பண்ண போற கேண்டி?” என ரகசியமாய் கேட்டவனின் குரல் அவளை வசியம் செய்ய, பேச்சிழந்து நின்றாள்.

“ஓய் கேண்டி! என்ன பேச வந்த சொல்லு!” என்றான் குறும்பாக. அவள் பேச வந்ததை மட்டும் முன்னமே அறிந்திருந்தால், அப்பொழுதே போனை வைத்து விட்டு சென்றிருப்பானோ?!

அவளும் தன்னை அவனிடம் இருந்து மீட்டுக் கொண்டு, “நான் நான், சொல்லுவேன். ஆனால் நீங்க கோபப்படக்கூடாது.” என்றாள் பீடிகையுடன். அதில் புன்னகைத்தவன், “நான் கோபப்பட மாட்டேன் கேண்டி சொல்லு” என்றதும், “நான் சொல்ல வர்றதை புருஞ்சுப்பீங்கள்ல… இல்ல நான் சொன்னதும் வீம்புக்கு பண்ணுவீங்களா?” என்றவளின் வார்த்தைகள் நலுங்கிய நிலையில் வெளிவர, அதில் ஏதோ நம்மளை வச்சு செய்யப்போறா என உணர்ந்தவன், தன் வீம்பை விட்டு விட்டு,

“கடைசி வரை, நம்ம ஒண்ணா வாழ போறோம். நீ பேசுறதை நானும், நான் பேசுறதை நீயும் புரிஞ்சுக்க முடியலைன்னா, அந்த ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமா இருக்காது கேண்டி. கண்டிப்பா நான் புருஞ்சுப்பேன். எனக்கு புரியலைன்னாலும் நீ புரியற மாதிரி சொல்லு…” என்றவனின் சொற்களில் தான் எத்தனை அழுத்தம், எத்தனை புரிதல்! என விழி விரித்தவள், “அப்போ நம்ம… நம்ம இப்போ கல்யாணம் பண்ணிக்க வேணாம்…” என கூறும் போதே அவள் குரல் உள்ளே சென்றிட, மறுமுனையில் இருந்து பெரும் அமைதி.

அவளோ பதறி, “இளா? லைன் ல இருக்கீங்களா?” என கேட்க, அவன் “ம்ம், காரணம்?” எனக் கேட்டான் கடினத்தன்மையுடன். சித்ராக்ஷி தான், “நீங்க கோபப்படமாட்டேன்னு சொன்னீங்க?!” என சற்று விசும்பியபடி கேட்க, அதில் தன்னை அரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டவன், “நான் கோபப்படல… காரணம் என்னன்னு சொல்லு. இப்போ கல்யாணம் வேணாமா? இல்ல கல்யாணமே வேணாமா?” என்று கேட்டவனின் உள்ளம் தான் சுக்கு நூறாகியது.

அவனின் அந்த கேள்விக்கு பதில் கூறாமல், “இளா நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்!” என்றவள் சிறிது இடைவெளி விட்டு, “இதுக்கு முன்னாடி ஒரு தடவை இதே மாதிரி, எனக்கும் என் அக்காக்கும் ஒரே நேரத்துல மேரேஜ் பிக்ஸ் ஆகி, அப்பறம் கான்செல் ஆகிடுச்சு. அக்கா ஜாதகத்துல ஏற்கனவே தோஷம் இருந்துச்சு… அப்போ மறுபடியும் ஜோசியர் கிட்ட கேட்டப்போ, இந்த மாதிரி ஒண்ணா கல்யாணம் வைக்க கூடாது, அவளுக்கு முதல்ல கல்யாணம் ஆகணும் னு சொன்னாங்க… அதான்… முதல்ல அவள் கல்யாணம் முடியட்டும்…” என்றாள் எச்சிலை விழுங்கியபடி.

அதில் மாறன் தான், “ஓ! ஆனால் நான் பார்த்த ஜோசியர் அப்படி எதுவும் சொல்லலையே?” என சந்தேகமாக கேட்க, அவள் தடுமாறி பின் “அது அது… தெரியல… ஆனால் எதுக்கு அப்படி மனசுல இந்த நெருடலோட ஒண்ணா க.. கல்யாணம் வைக்கணும்… ஏதாவது ப்ராப்லம் வந்தா அப்பறம் இதுனால தான்னு…” என பேச முடியாமல் பேசியவளை தடுத்தவன்,

“செல்வி அம்மா கூட இந்த மாதிரி எதுவும் சொல்லலையே? லைக் ஜாதகத்துனால கல்யாணம் நின்னுடுச்சுன்னு? அது போக, அப்படி பார்த்தா, உனக்கு தான் முதல்ல மாப்பிள்ளையே பார்த்தாங்க? அப்போ அவளை விட்டுட்டு நீ மட்டும் கல்யாணம் பண்ண தயாராகிருக்கலாமா?” என்று விடாப்பிடியாய் கேட்க,

அவளோ தன்னை நொந்து, “அது… அப்போ, அப்போ அவளுக்கும் தான் மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. அப்படியே எனக்கு ஓகே ஆகியிருந்தாலும், தனி தனியா தான கல்யாணம் நடந்துருக்கும். இப்போ ஒரே வீட்டுக்கு வேற போக போறோம். சோ, முதல்ல அவள் கல்யாணம் முடியட்டுமே…” என்றாள் ஒப்புக்கொள்வானா மாட்டானா என்ற பதட்டத்துடன்.

“மனசுல நெருடல், அக்கா கல்யாணமா? இல்ல உன் கல்யாணமா? இதெல்லாம் என்ன நம்ப சொல்றியா? உன் பெரியம்மா எங்க கிட்ட ஜாதகம் பார்க்க சொன்னப்போ உன் முகத்தை நான் பார்த்தேன். உனக்கு ஜாதகம் பார்க்குறது பிடிக்கலைன்னு அப்போவே புரிஞ்சுக்கிட்டேன். அப்படி இருக்கறவ, ஏதோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னு இப்படி சொல்ற?” என்று நக்கலுடனும் கோபத்துடனும் எகத்தாளமாக கேட்டவனின் கேள்விக்கு பதில் கூற தெரியாமல் விழித்தபடி நின்றவளை, அவனின் “இதை உன் அப்பா, அம்மா கிட்ட கேட்கவா? உண்மையா பொய்யான்னு?” என்ற வினா, அவளை மேலும் உறைய செய்தது.

அவளோ, “நான் உண்மையை தான் சொல்றேன்” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுக்க கண்ணில் இருந்து வந்த நீரும் போனை நனைத்தது. அதில் பெருமூச்சு விட்டவன், “கல்யாணத்தை நிறுத்தணுமா? நிச்சயத்தையும் நிறுத்தணுமா?” என மனதில் தோன்றய வலியை வார்த்தையில் தேக்கி கேட்க, அவள் “நிச்சயத்தையும்…” என்றாள் அவன் வலியை தாங்க இயலாமல்.

“ம்ம், சரி நிறுத்துறேன்… நாளைக்கு முகுந்த்க்கும் செல்விக்கும் மட்டும் நிச்சயம் நடக்கட்டும், அவங்க கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் தான?” என கேள்வியாய் கேட்டவனுக்கு பலவீனமாய் ம்ம் கொட்டினாள்.

“பட், எனக்கு ஒரு உண்மை தெரியணும்…?” என்றான் இளமாறன். அவள் புரியாமல் “என்ன?” எனக் கேட்டதில், “இப்போ உண்மையான காரணம் என்னன்னு சொல்லு… எதுக்கு நிச்சயத்தை நிறுத்த சொன்ன?” என்றான் கூர்மையுடன்.

அதில் அவள் தான் திணறி விட்டாள். “நான் நான் சொன்னேனே? அதான் காரணம்!” என சமாளிக்க, அவன் “உண்மையான காரணம் சொல்லு… நான் நீ சொல்றதை கேட்குறேன். இல்லைன்னா, நாளைக்கு நிச்சயம் இல்ல, எல்லார் முன்னாடியும் உனக்கு தாலியே கட்டி, உன் கூட குடும்பமே நடத்துவேன்… உனக்கு பிடிச்சுருந்தாலும் இல்லைன்னாலும்… எப்படி வசதி?” என பல்லைக்கடித்து மிரட்டலுடன் கேட்டதில், அவள் தான் மிரண்டு விட்டாள்.

“இளா, நான் உண்மைய தான் சொல்றேன்…” என அவள் அழுகாத குறையாக கூற, “சித்ரா! என் கோபத்துக்கு ஆளாகாத… அதை உன்னால தாங்க முடியாது. எனக்கு வேண்டியது உண்மையான காரணம்… தட்ஸ் இட்!” என கடுங்கோபத்தில் அவன் அவளுடன் வாதம் செய்ய, “இளா!” என பாவமாக அழைத்தாள் சித்ராக்ஷி.

அவன் அழுத்தத்துடன், அப்படியே இருக்க, அதில் மூச்சுக்களை இழுத்து விட்டு ஆசுவாசமானவள், “நான் லவ் பண்ணவனை என்னால மறக்க முடியல… மறக்க முடியும்னு தோணல…” என சலனமின்றி கூறியதில், அவன் எழுந்த பெரும் வலியை அடக்கிக்கொண்டு “ஓ! அவ்ளோ லவ்வோ?” என்றான் வெறுமையாக.

அவளோ அவளை மீறி வெளிவர துடிக்கும் கேவலை உள்ளிழுத்துக் கொண்டு, “ம்ம் ஆமா… சின்னதா இருந்தாலும் பெருசா இருந்தாலும் காதல், காதல் தான… அது குடுக்குற பாடமும், பாதகமும் ரொம்பவே வலிமையானது. அதுல இருந்து வெளிய வர்றது, சுழல்ல சிக்கிக்கிட்டு தவிக்கிற மாதிரி தான்” என எங்கோ வெறித்தபடி உளற, அதன் பிறகே தான் என்ன பேசிக்கொண்டிருக்கோம் என்று உணர்ந்தவள், “நான் காரணம் சொல்லிட்டேன். இப்போ ஓகே வா?” என வினவிட, எதிர்முனையில் போன் பட்டென அணைக்கப்பட்டது.

அதில், வெகுநேரம் கண்ணீர் சுரக்க கூட மனமற்று, போனையே வெறித்தபடி நின்றிருந்தாள். அங்கு, மாறனின் நிலையும் அது தான். அன்றைய பௌர்ணமி நிலவை தன்னவளுடன் ‘ஸ்வீட் நத்திங்’ பேசியபடியே ரசிப்பதற்காக மொட்டை மாடிக்கு வந்தவனுக்கு, அவனின் மனம் கவர்ந்த வெள்ளி நிலா, இன்று ஏனோ கலங்களாக தோன்றியது.

இதுவரை உணராத காதல் வலியை முதன் முறை அனுபவித்தவனுக்கு, அவனால் விவரிக்க இயலாத வேதனை ஒன்று, தொண்டையில் சிக்கி, கோபம், வருத்தம், வலி, அழுத்தம் என அனைத்து உணர்வுகளும் ஒருங்கே தோன்றி, அவனை அலைக்கழிக்க, ‘காதல் காதல் தான்டி…! அது எனக்கும் உனக்கும் ஒரே மாதிரி காயத்தை தான் குடுக்கும்… ஆனால் உன் காதல் வலி, என்னோடது இல்லைலடி…!?’ என விழிகள் சிவப்புற, கீழுதட்டை  கடித்து மனதில் தோன்றிய பாரத்தை அடக்க முயன்றவன், “போடி!” என அவனின் கண்ணுக்கு தெரியாமல் மேகத்தில் மறைந்த நிலவை முறைத்து விட்டு, அவன் அறைக்குள் புகுந்து கொண்டவன், மறுநாள் 10 மணி ஆகியும் வெளியில் வரவே இல்லை.

வித்யா, “முகுந்த் கண்ணா, மாறா இன்னும் ரூம்லையா இருக்கான். கடையில வேலை இருக்கு, சாயந்தரதுக்குள்ள முடிச்சுட்டு வரேன்ன்னு சொல்லிட்டு இருந்தான். இன்னும் கடைக்கே கிளம்பல… என்ன ஆச்சு?” என வினவிட, அவனுக்கும் அதே கேள்வி தான். ஆனால் அவனின் தம்பி தான் கதவை திறக்கவே இல்லையே. வீட்டினருக்கோ எப்போதும் இப்படி இருக்க மாட்டானே? என்று பதற, சில நிமிடங்கள் கழித்து அவனே வெளியில் வந்தான்.

வந்தவன், “என்ன எல்லாரும் என் ரூமையே முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க?” என்று வலுக்கட்டாயமாக வரவைத்த புன்னகையுடன் கேட்க, செந்தில், “இவ்ளோ நேரம் நீ ரூம் ல இருக்க மாட்டியே அதான் பார்த்தோம்…” என்றதும், அவன் “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுக்கு என்னம்மோ குடும்பமே பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க… என்ன அத்தை நீயுமா இப்படி நிக்கிற” என்று கிண்டலடிக்க,

அதில் நிம்மதி ஆனா வித்யா, “ப்ச், பூஜை ஜாமான் லாம் நிறைய வாங்க வேண்டியது இருக்கு மாறா. லிஸ்ட் இங்க இருக்கு. எதாவது விட்டு போயிருக்கான்னு சொல்லு. ஏன்னா எது வாங்குனாலும் ரெண்டு பொருளா வாங்கணும். இன்னைக்கு முகூர்த்த நாள் வேற. நானும் முகுந்தும் போய் வாங்கிட்டு வந்துடுறோம். சொந்தக்காரங்களை நான் நேரடியா கோவிலுக்கே வரசொல்லிட்டேன்” என அவர் பாட்டிற்கு விளக்கம் சொல்லிக்கொண்டு போக, அவன் லிஸ்டை வாங்கி ஒரு முறை பார்த்து விட்டு, “என்ன வேணுமோ நீங்களே வாங்குங்கமா… ஆனால், எல்லாமே முகுந்துக்கு மட்டும் வாங்குங்க…” என்றான் அமைதியாக.

அதில் அனைவரும் அவனை புரியாமல் பார்க்க, முகுந்த் “என்ன சொல்ற?” என முறைத்தபடி கேட்க, மாறன், செந்திலிடம், “பா, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டேன்… அன்னைக்கு ஜாதகம் பார்க்க போனப்போ… ஜோசியர் ரெண்டு கல்யாணமும் ஒண்ணா வைக்க கூடாதுனு சொன்னாரு. முதல்ல முகுந்த் கல்யாணம் முடியட்டும்” என்றதில் அவர் திகைத்து, சாரதாவை பார்க்க, சாராதாவோ பே வென விழித்தார். கொய்யால அன்னைக்கு எங்கடா நம்ம ஜோசியர் கிட்ட போனோம்? நம்ம தான் ஜாதகமே பார்க்கலையே என குழம்பிய படி.

“என்ன உளறுற மாறா? இதை ஏன் அன்னைக்கே சொல்லல? அப்படின்னாலும் நீ இதெல்லாம் நம்புற ஆள் இல்ல…” என்னும் போதே, “பா, நான் அதை நம்பலை தான். ஆனால், இப்போ ஏன் நம்பக்கூடாதுன்னு தோணுது.” என்றதும் முகுந்த் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

அவனின் வாடிய முகமே அவனுக்கு எதையோ உணர்த்த, மாறன் அவனை பாராமல், “இப்ப என்ன நான் கல்யாணம் வேணாம்னா சொன்னேன். முதல்ல முகுந்த் கல்யாணம் நடக்கட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்” என்றதும், சாரதா, “சரிடா, கல்யாணம் தனி தனியா வைக்கலாம், இன்னைக்கு நிச்சயம் மட்டும் நடக்கட்டும்!” என்றிட, அவன் அழுத்தமாக “அவன் கல்யாணம் முடியவும் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்” என்றான் அழுத்தமாக.

செந்தில் கடுப்பாகி, “மாறா என்கிட்ட அடி வாங்கிட்டு போயிடாத! சித்ரா வீட்டுல எவ்ளோ ஏமாந்து போவாங்க? உனக்கு என்ன அவ்ளோ அழுத்தம்?” என வழக்கத்துக்கு மாறாக, அவனை அதட்டியதில், “நான் அவங்க கிட்ட பேசுறேன் பா…” என்றான்.

அதில் அவர் அவனை அறைந்தே விட, மற்றவர்கள் பதறி விட்டனர். முகுந்த், அவரை தடுத்து, “அப்பா, விடுங்க… அவனுக்கு எப்போ தோணுதோ அப்போ பண்ணட்டும். சித்ரா வீட்டுல அவங்க சங்கடப்படாத மாதிரி நான் பேசுறேன்…” என்றதில் செந்தில் மாறனை முறைத்து விட்டு வெளியில் செல்ல, முகுந்த் அவனை எரிக்கும் பார்வை ஒன்றை வீசி விட்டு, சித்ரா வீட்டில் சென்று இதே ஜாதகத்தை பற்றி கூற, அவர்களோ முதலில் மனம் வருந்தினாலும், செல்வியும் அவர்களின் பெண் தானே. இதனால் அவளின் திருமணம் தடைபடக்கூடாது என்றும், இப்ப இல்லைனா இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ சித்ராக்கு கல்யாணம் ஆக தான போகுது… என தங்களை தேற்றிக் கொண்டு ஒப்புக்கொள்ள, இதனை கேட்ட சித்ராவுக்கு தான் இரவெல்லாம் அழுது சிவந்திருந்த கண்கள் மேலும் சிவப்பேறியது.

அந்த கோவில் பிரகாரத்தில், ஆளுக்கொரு விதத்தில் சங்கடத்துடன் அமர்ந்திருக்க, முகுந்த் தன் தம்பியை முறைத்த படியும், செல்வி நிச்சயப்புடவையில் நடப்பது அறியாது குழப்பத்துடனும் அமர்ந்திருக்க, சித்ரா “அக்கா கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரேன்…” என்றாள் அவள் காதருகில். செல்வியோ “சித்ரா, உன் நிச்சயம் ஏன் நடக்கல? என்ன ஆச்சு?” என கிசுகிசுப்பாக கேட்க, அவள் “அப்பறம் பேசலாம் நீ சும்மா இரு…” என்று அமைதியாகிட, இளமாறன் சித்ராக்ஷி முகத்தை கூட பார்க்கவில்லை.

அவனின் தவிர்ப்பு அவளுக்குள் தவிப்பை கொடுக்க, முகுந்தை காண வெட்கப்பட்டு அவனை பாராமலே இருந்த செல்வியின் பார்வை இப்போது முகுந்தை கண்டது. ஏன் என் தங்கச்சி நிச்சயம் நடக்கல என்ற குற்றப்பார்வையுடன்.

அவனோ மாறனை கண் காட்ட, அவள் குழப்ப முகத்துடன் இருக்கும் போதே, இனிதே தாம்பூலம் மாற்றப்பட்டது. நீலா ராஜேந்திரனின் கண்களில் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி மின்ன, நீலாவுக்கு மனம் நிம்மதியாய் இருந்தது. அடுத்த ஒரு மாதத்தில் தேதி குறிக்கட்டு, திருமண பத்திரிக்கையும் வாசிக்க, சம்பந்தப்பட்டவர்களோ  தங்களின் உடன் பிறந்தவர்களின் வாழ்வை எண்ணி ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

பின், பெரியவர்களாய் பேசிக்கொண்டிருக்க, சாரதா “முகுந்த் கண்ணா, செல்வியை கூட்டிகிட்டு கோவில் பிரகாரத்தை சுத்திட்டு சாமி கும்புட்டுட்டு வாங்க… சித்ரா நீயும் கூட்டிட்டு போ உன் அக்காவை…” என்றதும், சித்ரா திருதிருவென விழிக்க, செல்வி இது தான் சமயம் என, “வா சித்ரா” என உடனே எழுந்தாள்.

முகுந்தும் இருக்கையில் இருந்து எழுந்து, மாறனை வா என தலையசைக்க, அவன் பெருமூச்சு விட்டு, அவனுடன் எழுந்து சென்றான். செல்வி தர தர வென சித்ராவை மறைவாய் கூட்டி சென்று, “என்ன ஆச்சு சித்ராம்மா, நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணா தான நிச்சயம் நடக்கிறதா இருந்துச்சு?” என்று  பதட்டத்துடன் கேட்க, அவள் என்ன சொல்வதென தெரியாமல், “அக்கா, அர்ச்சனை தட்டை எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீ மாமா கூட போ நான் வரேன்…” என்று அங்கிருந்து நகர, முகுந்த், செல்வியை நோக்கி வந்தான்.

அவளோ அனைத்தும் மறந்து, “ஏன் இப்படி பண்ணீங்க? அன்னைக்கு என்மேல கோபமான்னு கேட்டேன்ல… அப்போ கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ நிறுத்திட்டீங்க. உங்களுக்கு என் மேல தான கோபம். அதை என்மேல காட்டலாம்ல” என தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்க, முகுந்ததோ, கொலை வெறியுடன் அவளை பார்த்தான். 

செல்வி கேட்ட கேள்வியில் இருந்து தப்பித்ததில் சித்ராக்ஷி அவசரமாக நிச்சயம் நடந்த இடத்திற்கே வேகமாக நடக்க, திடீரென வலுவாக யாரோ அவள் கரம் பற்றி இழுத்ததில் அதிர்ந்தவள், அவளை இழுத்த இளமாறன் நெஞ்சில் சாய்ந்து நின்றாள்.

அவன் என அறிந்த பிறகே சற்று நிதானமானவள், அவனை பார்க்க இயலாமல் திணறியபடி, “எதுக்கு இப்படி புடிச்சு இழுத்தீங்க…” என்றாள் சற்று குரலை உயர்த்தி.

அவனோ அவள் கையை விடாமல் அழுந்த பற்றி, அவளை ஆழமாய் பார்த்துக் கொண்டே, “கீழ எண்ணெய் இருந்துச்சு… நீயா வழுக்கி விழுக போன. அதான் புடிச்சு இழுத்தேன்!” என்றதில் அவன் உள்குத்துடன் பேசுகிறானோ என ஒரு நொடி திகைத்தவள் பின், “அதான் விழுகலயே… கையை விடுங்க!” என்றாள் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயற்சித்த படியே.

இளமாறனோ, “நீ விழுகல… ஆனால், என்னை தள்ளி விட்டுட்டீல?” என்று கூர்மையுடன் கேட்க, அவள் முகத்திலோ அதிர்வு ரேகைகள். அவன் மேலும், “சரி, நீ சொன்ன மாதிரி நான் நிச்சயத்தை நிறுத்திட்டேன். இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்…! ரைட்?” என்றான் எக்ஸ்ரே பார்வையுடன்.

அவளோ “நான் ஏன் கேட்கணும்?” என அமிழ்ந்த குரலில் கேட்க, “ஏன் கேட்க கூடாது கேண்டி… இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகல, தாலி கட்ட நான் ரெடி…” என்று ஒரு புருவத்தை நக்கலாக உயர்த்த அதில் அரண்டவள், “என்ன பண்ணனும்னு சொல்லுங்க!” என்றாள் தன்னை நொந்து.

அதில், உதட்டோரம் சிறு புன்னகையை வீசியவன், “தட்ஸ் குட் க்ரன்ச்(crunch) சாக்கோ… முதல்ல பிரகாரத்தை சுத்திட்டு வருவோமா?” என கேட்டுவிட்டு, அவள் உள்ளங்கையை இறுக்கமாக அவனின் விரல்களின் இடுக்கில் சிறையெடுத்து, அவளை கிட்டத்தட்ட இழுத்து செல்ல, அவள் தான் அவன் தீண்டலில் திகைத்திருந்தாள்.

அத்தியாயம் 9

சித்ராக்ஷி கையை பிடித்து இழுத்துக் கொண்டு போன இளமாறன் அர்ச்சனை செய்து விட்டு தீவிரமாக வேண்டிக் கொள்ள, அவளும் படபடத்த மனதுடன் கண்ணை மூடி வேண்ட ஆரம்பித்தாள். அவளின் கருவிழிகள், அங்கும் இங்கும் உருள, முகமோ குழப்பத்திலும், வேதனையிலும் நிறைந்து இருந்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த, இளமாறன் “என்ன வேண்டுதல் லிஸ்ட் பெருசா?” என அவள் காதருகில் வந்து கேட்க, அதில் சட்டென நகர்ந்தவள், “இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு” எனக் கேட்டாள். அவனோ, “நீ தான் என் பிரச்சனை கேண்டி! அதே மாதிரி என் பிரச்சனைக்கு தீர்வும் நீதான்!” என்று அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டு கூற, அவளோ திருதிரு வென விழித்தாள்.

இங்கு, செல்வி முகுந்திடம் நியாயம் கேட்டு அழுது கொண்டிருக்க, அவனோ கோபத்துடன், “ஏய் லூசாடி நீ? முதல்ல அழுகையை நிறுத்துடி” என சற்று சத்தமாக கூற, அவனின் அதட்டலில் வெளிறியவள், கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, உதட்டை கடித்துக் கொண்டு நிற்க, அவனுக்கு தான் சே! கத்திவிட்டோமோ என்றிருந்தது. 

“எனக்கும் இங்க என்ன நடக்குதுன்னு புரியல செல்வி!” என்றவன், மாறன் கூறியதை கூற, அவள் முகத்திலோ கடும் குழப்பம் குடியேறியது. “என்னங்க சொல்றீங்க? உங்க தம்பி அப்படியா சொன்னாரு. ஜாதகத்துல தோஷம் இருந்தது உண்மை தான். ஆனால் ரெண்டு கல்யாணம் ஒண்ணா நடக்குறதுக்கும் ஜாதகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அப்படின்னா இதுக்கு முன்னாடி கூட, எங்களுக்கு கல்யாணம் பேசும் போது, ஜோசியர் சொல்லிருப்பாரே…?” என்று புருவம் சுருக்கி கேட்க, முகுந்துக்கு தலையை சுற்றியது.

அப்பறம் ஏன் அவன் அப்படி சொன்னான்…? என அவன் சிந்தித்துக் கொண்டிருக்க, செல்வியின் முகம் தான் வாடியது. அதில் முகுந்த், தான் திட்டியதற்கு வருத்தப்படுகிறாள் என்றெண்ணி “சாரி செல்வி… ஒரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்துற அளவு நான் மோசமானவன் இல்ல. நீ அப்படி சொல்லவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. அதான் திட்டிட்டேன்.” என்று அவன் மன்னிப்பு கேட்க, அவளோ அவனை விழித்து பார்த்து விட்டு, திக்கி திணறி “நீங்க போய் என் கிட்ட சாரி லாம் கேட்டுகிட்டு…” என்றவள், “நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் தலையை குனிந்த படி.

அவனோ சிறு புன்னகையுடன் குனிந்து, “அப்போ இப்போ சரியா புருஞ்சுக்கிட்டியா?” என குறும்பாக கேட்க, அவனின் குரல் அவளுக்கு, வெட்கத்தையும் கூச்சத்தையும் கொடுக்க, ஏன் சிவக்கிறோம் என்றே தெரியாமல் தலை தாழ்த்தியே இருந்தாள்.

“சுத்தம்! ரொம்ப கஷ்டம் டா முகுந்தா…” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவன் அவளின் வெகுளித்தனத்தை ரசிக்கவே செய்தான். பின், அவர்களும் அர்ச்சனை செய்ய செல்ல, அங்கு இருவரும் நிற்பதை கண்டு, முகுந்த் மாறனை முறைத்தான்.

செல்வி, சித்ராக்ஷியை பார்த்து, “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எங்க போன?” என்று முணுமுணுக்க, அவளோ மாறனை பார்த்தபடி நெளிந்தாள். மாறனோ, “என்ன செல்வி டியர் கேட்ட உன் தங்கச்சிகிட்ட?” என்று கேட்டதில், அவளோ இப்போயும் டியரா? என்று விழித்து விட்டு, “ஏன் நிச்சயத்தை நிறுத்துனீங்க?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

அவன்தான், “அதை ஏன் என்கிட்டே கேட்குற? உன் தங்கச்சி கிட்ட கேளு. அவள் தான் நிறுத்த சொன்னா” என்றதில் இருவருமே அதிர, சித்ராக்ஷியோ இப்படி பட்டென சொல்வான் என்று எதிர்பாராமல், அவனை வெறித்தாள்.

செல்வியோ பதறி, “என்ன சித்ரா இது? நீ நிச்சயத்தை நிறுத்துனியா? ஏன் நிறுத்தின?” என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, சித்ராக்ஷி, அக்கா “அது… அது…” என்று இழுத்தபடி மாறனை பார்த்தாள். அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் நிற்க, செல்வி அழுத்தமாக “சித்ரா உன்ன தான் கேட்குறேன். ஏன் நிறுத்தின?” என்றவள், அவளை சற்று தனியே அழைத்துச் சென்று மீண்டும் கேட்க, ஏதேதோ சமாளித்தவள், பின் மாறனிடம் கூறிய காரணத்தையே கூற, அதில் செல்வி அவளை பளாரென அறைந்தாள்.

தன்னிடம் சிறு கோபத்தை கூட காட்டாத தன் தமக்கை அடித்ததில் திகைத்தவள், உதட்டை பிதுக்கியபடி நிற்க, முகுந்தோ வேகமாக அருகில் வந்து, “செல்வி என்ன பண்ற?” என்று தடுத்தான். “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… இப்படி சொல்ல உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? சித்தி சித்தப்பாவை அசிங்கப்படுத்தணும்னு முடிவோட இருக்கியா?” என்று கோபத்துடன் திட்டி தீர்த்தவள், அவள் “அக்கா” என அழைக்க வருகையில், மீண்டும் அறைய போனாள்.

அதில் மாறன் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி, “உன்னை நான் உன் தங்கச்சி கிட்ட கேட்க தான் சொன்னேன். அடிக்க சொன்னேனா?” என சற்று கடுமையாக கேட்க, அவளுக்கோ கடவுளே! இதை இவரு எப்படி எடுத்துப்பாரோ… இப்படி முட்டாள்தனமா இவர்கிட்ட போய் இப்படி சொல்லி வச்சுருக்காளே என்று தவித்து போனாள்.

முகுந்ததோ ஒன்றும் புரியாமல், “இங்க என்ன நடக்குது? மாறா என்னடா?” என்று கேட்க, அவனோ, “செல்வியை கூட்டிட்டு போ முகுந்த்…” என்ற தம்பியின் வார்த்தையில், செய்வதறியாது நிற்க, செல்வி சித்ராக்ஷியை கடுமையாய் முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். முகுந்தும் யோசனையுடன் அவள் பின்னே செல்ல, சித்ராக்ஷி தான் கன்னத்தில் கை வைத்தபடி, கண் கலங்கி நின்றிருந்தாள்.

மாறன், அவள் கன்னத்தில் இருந்த கையை எடுக்கப் போக, அவன் வெடுக்கென கையை தூக்கவும் அடிக்கப்போகிறானோ என்று அவள் திடுக்கிட, அவனோ அவளை மென்மையாய் பார்த்து “அறிவிருக்கா… என்கிட்ட சொன்ன காரணத்தை ஊர் முழுக்க சொல்லுவியா? லூசு! வா…” என அவள் கைப்பிடித்து, வெளியில் அழைத்து செல்ல,

அவள் தான், “இளா கையை விடுங்க… எங்க கூட்டிட்டு போறீங்க” என்றாள். அவன் “ம்ம், பொங்கலும் புளியோதரையும் வாங்க…” என்றவன், காரில் ஏற்றி சென்று ஒரு ஹோட்டலில் நிறுத்த, அவள் புரியாமல் பார்த்தாள்.

“காலைல இருந்து எதுவும் சாப்பிடல… இப்போ ஒரு ஜுஸ் குடிப்போம் வா” என்றதும், அவள் முகம் சுருங்கி விட்டது. என்னால தான் சாப்பிடாம இருக்காரோ என்றெண்ணி அவனை வருத்தமாக பார்க்க, அவன் அதனை கண்டுகொள்ளாமல் இருவருக்கும் ஆர்டர் செய்தான். அவள் அமைதியாக இருக்கவும், “என்ன ஒரு ஆச்சர்யம், இந்நேரம் நீ வேணாம்னு சொல்லிருக்கணுமே…” என்று யோசனையுடன் கேட்டதில், சித்ராக்ஷி “நானும் சாப்பிடல…” என்றாள் மெதுவாக.

“எதுக்கு சாப்பிடணும்… அதான் வயிறும் மனசும் நிறையிற மாதிரி நிச்சயத்தை நிறுத்திட்டியே…” என்று சுள்ளென உரைத்ததும், அவளுக்கு தான் விழியில் நீர் நிறைந்து விட்டது. அவன் ஆர்டர் செய்த ஜுஸ் வரவும், மாறன் அவள் புறம் நகர்த்தியதில், அவள் அதனை எடுக்காமல் குனிந்தபடியே இருக்க, “சித்ரா குடி!” என்றான் உத்தரவாக.

“எனக்கு வேணாம்… பசிக்கல!” என வதங்கிய குரலில் கூறியவளுக்கு, கூடவே, அக்கா கிட்ட அடியும் வாங்கி குடுத்துட்டு,பேசுறதையும் பேசிட்டு, ரொம்ப தான் அக்கறை என்று உள்ளுக்குள் அவனை பொரிந்தாள்.

சித்ராக்ஷியின் முகத்தையே பார்த்த மாறன், எழுந்து அவளுக்கு அருகில் வந்து அமர, அதில் திகைத்தவளை கண்டு, “சாரி… எடுத்து குடி!” என பரிவாக கூறினான். இதற்கு அவன் கோபமாகவே பேசிவிடலாமோ, மனம் ஏன் இப்படி தறிகெட்டு இவன் குரலில் சென்று சாய்கிறது என்று தன்னையே திட்டியபடி இருந்தவள், “அது எப்படி பண்றதையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சாரி கேட்குறீங்க?” என்றாள் வரவழைக்கப்பட்ட கோபத்துடன்.

அவனோ, “நான் என்ன பண்ணேன் கேண்டி?” என சிந்திப்பது போல் பாவனை செய்தவன், “ஓ உன் அக்கா கிட்ட அடி வாங்கி கொடுத்ததை பத்தி சொல்றியா? ஆக்சுவல்லி, காலைல என் அப்பா என்ன அடிச்சாரு. நான் உன்ன அடிக்க முடியல. அதான் உன் அக்கா கிட்ட சொன்னேன். ஆனால் அந்த புள்ள பூச்சிக்கு இவ்ளோ கோபம் வந்து அடிக்கும்னு நானே எதிர்பார்க்கல… அடி கொஞ்சம் பலமோ?” என்று அவள் கன்னத்தை குறும்பாக ஆராய்ந்த படி பேசியதில் அவள் தான் மலைத்து விட்டாள்.

கடவுளே! இவன் என்ன பிறவின்னே தெரியலையே என நொந்தவளுக்கு, தன்னை அவனால் அடிக்க முடியவில்லை என்று கூறியது ஒரு சிலிர்ப்பையே தந்தது. கூடவே, தன்னால் அடி வாங்கி இருக்கிறானே என்று வருத்தமும் அடைய, “மாமா எதுக்கு அடிச்சாங்க…?” எனக் கேட்டாள்.

“பின்ன, நிச்சயத்தை ஏற்பாடும் பண்ணிட்டு, நிறுத்தவும் செஞ்சா அடிக்காமல் என்ன பண்ணுவாங்க…?” என்று அவன் விழி உயர்த்தி சற்று திமிராக கேட்க, அவளோ “சாரி” என்றாள் கலங்கிய முகத்துடன். ஒரு நொடி அவளை பார்வையால் ஊடுருவியன், “அது எப்படி பண்றதையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி சாரி கேட்குற?” என்று அவளை போலவே விழிகளை உருட்டி கேட்டிட, அதில் விழைந்த புன்னகையை அடக்க அரும்பாடுபட்டாள் சித்ராக்ஷி.

பின் “உன் சாரி வச்சு நான் என்ன பண்ண போறேன்… உனக்கு குடுத்த அடியும் பத்தலை… சோ கல்யாணம் முடியிற வரை, நீ என் கஸ்டடில தான் இருக்க!” என கூறியவனை அவள் மலங்க மலங்க பார்த்தாள்.

மாறனே தொடர்ந்து, “என்ன ஃபிரீசிங் பைவ் ஸ்டார்… புரியலையா…? உன் அக்கா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னா, நீ நான் சொல்ற ரெண்டுல ஒரு விஷயம் பண்ணனும்…” என்று அவள் கையை பிடித்து, இரு விரல்களை எடுத்து நீவி விட்டான். அவனின் தொடுதலில் பேச்சிலும் உறைந்து இருந்தவள், அப்படியே அமர்ந்திருக்க, “ஒன்னு, நீ ஏன் நிச்சயத்தை நிறுத்த சொன்னன்னு உண்மையான காரணம் சொல்லணும்… இல்லைன்னா என்ன லவ் பண்ணனும்…!” என்று நிறுத்தி நிதானமாக கூற அவளோ அதிர்ந்து விட்டாள்.

“இளா நான் தான் காரணம் நேத்தே சொன்னேனே!?” என குழப்பமாக கேட்க, அவனோ உதட்டைக்கடித்த படி, “பொய் சொல்லி பெப்பர் மிண்ட்… இன்னொரு தடவை அந்த பொய்ய சொன்ன, நேத்து நைட் நான் போன் ல சொன்னதை நேர்ல செய்வேன்” என்றான் ரசனையாக.

அவன் பேசியதில் படபடத்த மனதுடன் “என்ன சொன்னீங்க?” என்று புருவம் சுருக்கி கேட்க, அவனோ அவள் இதழ்களை விழிகளால் வருடியபடி, “லிப் டு லிப் கிஸ் தான்…” என்றான் குறும்புடன்.

அவன் பார்வையில் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க, கன்னங்கள் அவள் அறியாமல் சிவந்து விட்டது. கூடவே கண்களும் கலங்க, “நான் உண்மைய தான் சொன்னேன். நான் லவ் பண்ணது உண்மைதான்” என்றாள் அமைதியாக.

இளமாறனும், “நான் இல்லைன்னு சொல்லலை. அது உண்மை தான் ஒத்துக்குறேன். ஆனால், அவனை மறக்க முடியலன்னு சொன்னது பொய். வேற ஏதோ ரீசன் இருக்கு” என்று அவளை பார்வையால் அளந்த படி கூறியவன், “அவன் எதுவும் உன்ன பிளாக் மெயில் பண்றானா? லைக் ஏதாவது போட்டோஸ் வச்சு…” என்று சற்று தயங்கிய படி கேட்க, அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், “எதையும் காட்டி பிளாக் மெயில் பண்ற அளவு, நான் அவன் கூட க்ளோஸ் இல்ல” என தளர்வாய் கூறி, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக் கொண்டாள்.

அவனோ பெருமூச்சு விட்டு, “உனக்கு அந்த மாதிரி ஏதாவது ப்ராப்லமோனு நினைச்சு தான் கேட்டேன். ஒருவேளை அப்படி ப்ராப்லம் வந்தாலும் மறைக்காம சொல்லு. நான் கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன்” என்றதும் விலுக்கென அவன் புறம் திரும்பியவள், ஒரு நொடி அவனை பார்த்து விட்டு, “சில விஷயத்தை தெரிஞ்சுக்குறதை விட தெரியாமல் இருக்குறதே நல்லது…” என்றாள் மென்மையாக.

அதில் “ஊஃப்” என நெட்டி முறித்தவன், “சரி, எனக்கு தெரியவே வேணாம்… அப்போ செகண்ட் சாய்ஸ் ஆ நீ என்னை லவ் பண்ணனும்…” என்று அசட்டையாக கூற பே வென பார்த்தவள், “கோவில்ல நம்மளை காணோம்னு எல்லாரும் தேடுவாங்க வாங்க போலாம்” என்றாள் பதில் கூறாமல்.

அதற்கு மாறன் தான், “ஆமா நம்ம எல் கே ஜி பசங்க காணோம்னு தேடுறாங்க பாரு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என அதட்டலாக கேட்டதில், “உளறாதீங்க…” என்றாள் கடுப்பாக.

அதில், அவள் கையை அழுத்தமாக பற்றியவன், “என்னை பார்த்தா உனக்கு உளர்ற மாதிரி இருக்கா? நீ சொன்னதை நான் கேட்டேன்ல.இப்போ நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும். இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…: என்றான் பல்லைக்கடித்து அவளை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டு.

அவன் கூற்றில், அவள் தான் மிரண்ட விழிகளுடன் அவனை காண, அதில் தன்னை அடக்கியவன், கூலாக “ஓகே லவ்வபில் லாலி பாப்… நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு கோல்டன் பீச்சல மீட் பண்ணலாம்… லவ் பண்ணலாம். அப்படியே கல்யாண  வேலையும் பார்க்கலாம் ஓகே வா” என தலையை சாய்த்து மறைமுகமாக உத்தரவிட்டவன், பாக்கெட்டில் இருந்து ஒரு கிட்கேட் சாக்லேட்டை எடுத்தான்.

அதனை அவள் கைக்குள் திணித்து, மெல்ல அவளின் கரங்களில் இதழை ஒற்றியெடுத்து, “லவ் யூ கிட்கேட்…” என வார்த்தையில் கூட ரசனையை ஏற்றி கூறிட, அவளோ அவனின் ப்ரோபோசலில் பேந்த பேந்த விழித்தாள்.

அத்தியாயம் 10

இளமாறன் செய்த செயலிலும், உரைத்த காதலிலும் திகைத்த பெண்ணவள், வெடுக்கென அவள் கையை பின்னிழுத்து, அவனை முறைத்தாள். பின், கோபமாக எழுந்தவள், காரின் அருகே சென்று நிற்க, அவளை சிறு புன்னகையுடன் பார்த்தபடி, அங்கு வந்த இளமாறன், காரை ஸ்டார்ட் செய்து விட்டு சித்ராக்ஷியை நோக்கினான்.

அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, காரில் அமர்ந்ததும், அவன் அமைதியுடனே கோவிலுக்கு வந்தான். திருமணம் பற்றி விவாதித்து விட்டு, நிச்சயத்தை சிறப்பாய் முடித்து விட்டு, அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றிட, செல்வி சித்ராக்ஷி முகத்தை கூட காணவில்லை.

இங்கு முகுந்தோ இளமாறனை முறைத்தபடி இருந்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அந்நாள் கழிய, மறுநாள் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சித்ராக்ஷியின் கண்களில் இளமாறன் கொடுத்த கிட்கேட் சாக்லேட் தட்டுப்பட்டது. அவன் கையில் கொடுத்த போதே, அதனை கீழே போடவும் மனது வராமல், ஏதோ குழப்பத்தில் இருந்தவள் அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து டேபிளில் வைத்திருந்தாள்.

இப்போது அதனை கையில் எடுத்தவளுக்கு இன்று ஐந்து மணிக்கு கடற்கரை வரசொல்லியது வேறு நினைவு வர, போவோமா? வேண்டாமா எனக் குழம்பியபடியே அலுவலகம் வந்தடைந்தாள்.

“உனக்கு என்னடா பிரச்சனை?” என இளமாறனை முறைத்த படி முகுந்தும், சாரதாவும் நிற்க, அவனோ “இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேட்டான் நக்கலாக. அதில் இருவரும் மேலும் முறைக்க, “போய் செல்வி கூட கடலை போடுவானா இங்க வந்து நின்னுட்டு இருக்கான்… போடா முதல்ல” என்றவன் வெளியில் சென்று விட, முகுந்த் தான் என்ன தான் அவன் சாதாரணமாக பேசினாலும் அவன் முகத்தில் தெரிந்த சிறு சோர்வில் மனம் வருந்தினான்.

பின், செல்வியின் பெயர் கூறியதும் முந்தைய நாள் அவளின் கோபத்தை நினைத்தவனின் கைகள் தன்னிச்சையாக அவன் கன்னத்தை தேய்த்தது. ‘என்னா அடி. தங்கச்சிக்கே இப்படின்னா… கல்யாணம் பண்ணதும் புருஷன்காரனை சும்மா விடுவான்னா நினைக்கிற முகுந்தா…?’ என தனக்குள்ளேயே மிரண்டு கொண்டிருந்தவனை சாரதா தான் உலுக்கினார்.

“என்னடா கன்னத்தை தேய்ச்சுகிட்டு நிக்கிற? சரி சரி வெட்டியா நிக்காம, செல்வியை கூட்டிட்டு எங்கயாவது வெளிய போயிட்டு வா!” என யோசனை கூற, அவனோ “எதுக்கு அடி வாங்கவா? நான் கல்யாணத்துக்கு அப்பறமே கூப்பிட்டு போறேன்” என்று விட்டு, வெளியில் ஓடி விட, ‘இவனுங்களை வச்சுக்கிட்டு’ என்று அவர் தான் தலையில் அடித்தார்.

மாலை ஆக ஆக பாவையவளின் மனம் தான் தறி கேட்டு ஓடியது. கூடவே, எப்படியும் தன்னை வரவைத்து விடுவான். அதற்கு நம்மளே சென்று விடலாம் என எண்ணிய சித்ராக்ஷி, பெர்மிஷன் கேட்டு விட்டு, கிளம்பிலானாள்.

கடந்த அரை மணி நேரமாக கடற்கரையில் சற்று கடுப்புடன் தங்கமாய் மின்னிய அலைகளை பார்த்திருந்தான் இளமாறன். ‘என்னை கடுப்பேத்துறதே வேலையா வச்சுருக்கா… நீ மட்டும் இன்னைக்கு வராம போ. அப்பறம் பார்த்துக்கிறேன் உன்ன’ என்று மனதினுள் தன்னவளை வெகுவாக கடிந்து கொண்டிருந்தவனுக்கு அவனவளே போன் செய்தாள்.

அதனை கோபத்துடன் எடுத்தவன் பேசும் முன், “இளா, எங்க இருக்கீங்க… கொஞ்சம் சூர்யா ஹாஸ்பிடல் வரமுடியுமா?” என்று பதட்டத்துடன் பேசிட, அவளின் பதற்றத்தில் அவன் கோபம் மொத்தமாக கரைந்து, அவளுக்கு என்ன ஆனதோ என திகைத்தவன், “கேண்டி என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு ஹாஸ்பிடல் க்கு? உனக்கு ஒன்னும் இல்லைல!” என்றவனின் தவிப்பு அவளுக்கு சிறு தூரலை மனதில் தூவ தான் செய்தது.

பின், “எனக்கு ஒன்னும் இல்ல இளா. நான் பீச்க்கு வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட். ஒருத்தருக்கு அடி பட்டுடுச்சு. ரொம்ப ரத்தம் வேற. அதான் ஒரு மாதிரி படபடன்னு இருக்கு” சற்று மிரண்டு பேச, உடனே வண்டியை எடுத்திருந்தவன், “நான் அங்கதான் வந்துக்கிட்டே இருக்கேன் கேண்டி. நீ என்கிட்ட பேசிக்கிட்டே இருக்கியா? உன் டென்சன் கொஞ்சம் குறையும்” என்று மென்மையாய் அவளின் பதட்டத்தை போக்க, அவளோ “வேணாம் இளா. போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டாதீங்க. மெதுவா வாங்க. அதுவரை நான் மேனேஜ் பண்றேன்” என்றவளுக்கு விபத்தை முதன் முறை நேரில் பார்த்ததும் ஒரு பயம் வந்து விட்டது.

உடனே மனம் ஒரு துணையை நாட, யோசியாமல் இளமாறனுக்கு போன் செய்து விட்டாள். தன்னவள் சொன்ன வார்த்தைக்காகவே மிக கவனமாகவும், அதே நேரம் வேகமாகவும் மருத்துவமனை வந்தடைந்தவனுக்கு ஒரே மகிழ்ச்சி தான். அவள் மனம் எந்த இக்கட்டிலும் தன்னை நாடுகிறது என்று.

கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தவளின் அருகில் சென்ற இளமாறன், “கேண்டி” என்ற அழைக்க அதன் பிறகே நிம்மதி ஆனவள், “இளா, ஐசியூ ல இருந்து இன்னும் யாரும் வெளியவே வரல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கண்களே கலங்கி விட, அவனோ “ரிலாக்ஸ் கேண்டி. ஒன்னும் ஆகாது. நீ முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு. உள்ள இருக்குறவங்க உனக்கு தெரிஞ்சவங்களாடா…?” என அவளை தன் தோளோடு அணைத்தபடி கேட்டான்.

அவளோ “இல்ல. எனக்கு தெரியாது. நான் யாருன்னு சரியாவும் பார்க்கல. நான் உங்களை பார்க்க தான் பீச்க்கு வந்துட்டு இருந்தேனா. அப்போ ஒரு பெரிய லாரி வந்து, கார் ல இடிச்சுருச்சு. கார் அப்படியே கவுந்துருச்சு.” என்றவளுக்கு இப்போது நினைத்தாலும் நடுங்க ஆரம்பிக்க, பின், “அப்பறம் நான் தான் ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணி, இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள்.

“ஓகே ஓகே… கூல். நீ தான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டீலடா. இதுக்கு மேல எதுவும் நம்ம கையில இல்ல…” என்ற போதே, ஐசியூவில் இருந்து ஒரு தாதியர் வந்து, “இவங்க குடும்பத்துக்கு தகவல் குடுக்கணும். இதுல அவரோட போன் இருக்கு. அவர் பேமிலி க்கு மட்டும் இன்பார்ம் பண்ணிடுறீங்களா?” என அவசரமாக பேசி அதனை கொடுக்க, சித்ரா “அவரு எப்படி இருக்காரு?” எனக் கேட்டாள்.

தாதியரோ, “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது…” என்று விட்டு மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைய, சித்ரா இளமாறனை பாவமாக பார்த்தாள்.

“ஹே! அப்செட் அல்மான்ட் ஜாய்! என்ன இது? அழுதுகிட்டு. நீ உன் கடமையை செஞ்சுட்ட அதுக்கு மேல நடக்குறத நம்ம அக்செப்ட் பண்ணிக்கணும். புரிஞ்சுதா… வா ஒரு காபி குடுச்சுட்டு வரலாம்” என்றழைக்க, அவள் இப்போதும் உனக்கு செல்ல பேர் கேட்குதுல்ல என்று எண்ணிவிட்டு, அப்போது தான் அவன் அணைப்பில் இருப்பதை உணர்ந்து வேகமாக விலகினாள். “அவங்க பேமிலிக்கு சொல்லல?” என மெல்லிய குரலில் கேட்டவளுக்கு “ஏன் கேன்டீன்ல இருந்து பேசுனா யாரும் போன் எடுக்க மாட்டாங்களா?” எனக் கேட்டான் நக்கலாக.

அதில் அவள் பயம் மறைந்து முறைக்க, குறுநகை புரிந்தவன், “வா… கேண்டி!” என்று இழுத்து சென்றான். அவளுக்கு சர்க்கரை அதிகமாக ஒரு காபி வாங்கி கொடுத்து, அவள் குடிக்கும் வரை காத்திருந்தவன், “இப்போ பெட்டரா கேண்டி?” என அக்கறையாய் வினவ, ம்ம் என தலையை உருட்டினாள்.

அதில் சற்று இலகுவானவன், அந்த போனை பார்க்க அது உடைந்திருந்ததை கண்டு, அதனை ஆன் செய்தான். ஆனால் பட்டன் எதுவும் வேலை செய்யாமல் இருக்க, ஏதேதோ நோண்டியவனுக்கு இறுதியில் அவரச நேர எண்ணாக ஒரே ஒரு எண் மட்டும் ‘சன்’ என்று சேமிக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணை அவன் போனில் டயல் செய்ய, அங்கு என்று பார்த்து அவனுக்கு டவர் கிடைக்கவில்லை.

பின், “இங்க டவர் கிடைக்கல சித்ரா நான் வெளிய போய் பேசிட்டு வரேன்” என்க, அவளோ “என் போன் ல இருந்து பண்ணலாம்” என போனை எடுக்கவும், அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவளுக்கு எண்ணை கூற, அவளும் போன் செய்ய போகையில் தான், ஏற்கனவே அவளின் போனில் அந்த எண்கள் ‘ரோஹித்’ என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, புருவம் சுருக்கினான்.

சித்ராக்ஷியோ அதிர்ந்தபடி அமர்ந்திருந்தாள். “உனக்கு தெரியாதுன்னு சொன்ன? இப்ப இந்த நம்பர் உன் போன்ல இருக்கு? யாரு சித்ரா இது?” என்று அவன் எதார்த்தமாக தான் கேட்டான். ஆனால் அவளுக்கு தான் அவன் குத்தி காட்டி பேசியது போல் இருக்க கண்ணை கரித்தது. “நிஜமாவே நான் அவர் யாருன்னு பார்க்கல” என்று தேம்பியபடி கூறிட.

அதில் பதறியவன், “ஹே! இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ அழுகுற? உனக்கு தெரிஞ்சவங்களான்னு தான கேட்டேன்” என்றதில் அவள் போனையே வெறிக்க, அவனுக்கு தான் ஏதோ நெருடியது. பின், “இந்த ரோஹித் தான் நிச்சயத்தை கூட நிறுத்துற அளவு உன்னால மறக்க முடியாத முன்னாள் காதலனோ?” என்ற நக்கல் குரலில் கேட்டதில், அவளுக்கு மேலும் சுள்ளென இருந்தது.

அதில் “ஆமா!” என சட்டென கூறிட, அவன் தான் அவளை குறுகுறுவென பார்த்தான். அதன் பிறகே தான் கூறியதை உணர்ந்து தன்னை நொந்தவள், தலையை நிமிர்த்தாமல் இருக்க, அவள் போனை வாங்கி ரோஹித்திற்கு அழைத்தான்.

எதிர்முனையில், “ஹெலோ! சித்ரா” என ரோஹித் இவள் பெயரை சொல்ல, இளமாறன் மொட்டையாக “உங்க அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்.” என்று விவரம் கூறியவன் அவனை வர சொல்லி விட்டு பதிலை எதிர்பாராமல் போனை வைத்து விட்டான்.

அவளோ, எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, அவளைக் கண்டவனுக்கு தான் பாவமாக இருந்தது. “சரி வா… உன் ட்ரெஸ்லாம் ரத்தமா இருக்கு வீட்ல போய் மாத்திட்டு வரலாம்” என்றிட, அவள் அமைதியாக எழுந்து சென்றாள். அவனே அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல, அங்கோ அவளின் தாய் தந்தை வெளியில் சென்றிருக்க, வீடு பூட்டி இருந்தது.

அவள் பேகில் இருந்து ஒரு சாவியை எடுத்து திறந்தவளிடம், “அத்தை மாமா எங்க?” எனக் கேட்க, “தெரியல. பக்கத்துல எங்கயாவது போயிருப்பாங்க” என்று முணுமுணுத்தவள் அவனை சோபாவில் அமர சொல்லி விட்டு, அறைக்குள் சென்று அடைந்தாள்.

சிறிது நேரத்தில் வேறொரு சல்வார் அணிந்து வெளியில் வந்தவள், தண்ணீர் எடுத்து அவனுக்கு கொடுக்க, இளமாறன், தண்ணீரோடு சேர்த்து அவளையும் பிடித்து, அவன் புறம் இழுத்தான். அதில் தடுமாறியவள் திகைத்து அவன் மடி மேலேயே அமர்ந்து விட, அவளை ஒரு நொடி அமைதியாக பார்த்தவன்,

“காதலிக்கிறது ஒன்னும் அவ்ளோ பெரிய கொலை குத்தம் இல்ல சித்ரா. சில நேரம் நம்ம மனசு ஆசைப்பட்டது நடக்கலைன்றதுக்காக ஆசைப்பட்டதே தப்புன்னு நினைக்கிறது முட்டாள்தனம். உன் பாஸ்ட்ல என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாது. ஆனால், இப்போ உன் மனசுல அவன் இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லாவே தெரியும். நீ தயங்குறதுக்கோ, இல்ல எதார்த்தமா நடக்குற ஒரு விஷயத்துல கூட நான் தப்பா நினைக்கிறேனோன்னு நீ வருந்தவோ தேவையே இல்ல. நான் உன்மேல கோபப்படுவேன். திட்டுவேன். ஆனால் கண்டிப்பா சந்தேகப்பட மாட்டேன். அதை விட ஒரு பொண்ணை சாகடிக்க கூடிய ஆயுதம் எதுவும் இல்லைன்னு எனக்கும் தெரியும்” என உறுதியுடனும், சற்று பிசிறடிக்கும் குரலுடனும் பேசியவனை வியப்புடனும், தன்னை புரிந்து பேசிய வார்த்தைகள் தன்னுள் பெரும் தைரியத்தை கொடுப்பதையும் எண்ணி விழி விரித்து அவனை பார்த்தவளை, சீண்டிட தோன்றியது அவனுக்கு.

குறும்பாக “அப்படியே அவன் உன் மனசுல இருந்தாலும், நான் தூக்கி வெளிய போட்டுருவேன் காம் கேட்பரி(calm cadbury).  ஏன்னா, உன் ஹார்ட் என்னோட பிளேஸ். அதை யாருக்கும் விட்டு தர மாட்டேன்” என்றவன், அவள் முகத்தை தன் முகத்தருகே இழுத்து, “லவ் யூ கிட்கேட்…” என ரசனையாக கூறியதில், அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

வெடுக்கென அவனிடம் இருந்து எழுந்து தள்ளி நின்றவள் அவனை முறைத்தாள். அவனோ “ஸ்ஸ்… இதை மறந்துட்டேன்” என்றவன், பாக்கெட்டில் இருந்து ஒரு கிட்கேட் சாக்லேட்டை எடுத்துக் கொடுக்க, அவள் அதனை வாங்காமல், மேலும் முறைத்தாள்.

இளமாறன் “இப்போ நீ வாங்குறியா? இல்ல, நானே சாக்லேட்ட பிரிச்சு, உனக்கு ஊட்டி…” என்று ஆரம்பிக்க, செஞ்சாலும் செய்வான் என்றெண்ணி சட்டென வாங்கி கொண்டாள்.

அந்நேரம், செல்வி அங்கு வந்தவள் இளமாறன் இருப்பதை கண்டு திருதிருவென விழிக்க, அவனோ “என்ன செல்வி டியர்! எப்பயாவது ஷாக் ரியாக்ஷன் குடுத்தா பரவாயில்ல. நீ எப்போவுமே ஷாக் ரியாக்ஷன் குடுக்குற?” எனக் கேலி செய்ததில், சித்ரா நமுட்டு சிரிப்பு சிரிக்க, செல்வி தான், அவளை முறைத்து விட்டு இளமாறனை முறைத்தாள்.

மாறன், “கேண்டி, நீ போய் ஒரு நல்ல காபி போட்டு எடுத்துட்டு வா… கேன்டீன்ல காபி நல்லாவே இல்ல” என்று அவளை உள்ளே அனுப்ப, அவள் சென்றதும், செல்வி மேலும் அவனை முறைத்தாள். அதில் அவன் “ஐயோ அண்ணி அப்படிலாம் முறைக்காதீங்க ரொம்ம்ம்ம்ப பயமா இருக்கு!” என்று அழுத்தி கூற நக்கலடிக்க,

“ப்ச்! கொழுந்தனாரே! விளையாடாதீங்க. நீங்க அவள்கிட்ட கல்யாணம் பத்தி பேசுறேன்னு என்கிட்ட ப்ராமிஸ் பண்ணீங்கள்ல. பேசுனீங்களா?” என்று ஹஸ்கி குரலில் கேட்க, அவனோ அதே குரலில் “எங்க? அதுக்குள்ள இடையில ஒரு டிஸ்டர்பன்ஸ். நீ வேணா அவளை கரெக்ட் பண்ண ஒரு ஐடியா குடேன்” எனக் கேட்டான்.

அவளோ, “நீங்க அவளை கல்யாணம் பண்ணுங்க. அதுக்கு அப்பறம் வேணா நான் ஐடியா தரேன்” என்று தான் தான் ஒரு நல்ல பிள்ளை என்று நிரூபிக்க அதில் தலையில் அடித்தவன், “அதுக்கு அப்பறம் நீ என்ன ஐடியா சொல்றது. நானே கரெக்ட் பண்ணிடுவேன். உன்னை வச்சு என் அண்ணன் ஓட்டனும்னு அவன் தலையில எழுதிருக்கு…” என்றதில், அவனை பாவமாக பார்த்தவள், “கல்யாணத்துக்கு முன்னாடி…” என்று ஆரம்பிக்க, அவளிடம் கையெடுத்து கும்பிட்டவன், “உனக்கு உன் தங்கச்சியே பரவாயில்ல. போம்மா முதல்ல” என கடுப்பானான்.

அதில் வாயை பொத்தி சிரித்தவள் பின், “நிஜமா நீங்க அவளை தப்பா நினைக்கலைல?” என கேட்க, “இதோட நேத்துல இருந்து இந்த கேள்வி 50 ஆவது தடவை. இன்னொரு தடவை கேட்டன்னு வையேன்” என கோபமாக பேசியவன், சட்டென “நான் அழுதுடுவேன்” என்றான் பாவமாக.

அதில் சத்தமாகவே சிரித்து விட்டவள், சித்ராக்ஷி வருவதை கண்டு, சட்டென சிரிப்பை நிறுத்தி அமைதியாகி விட, சித்ராக்ஷி தான், ‘இப்போ இங்க ஏதோ பேச்சு வார்த்தை நடந்த மாதிரி இருந்துச்சே!’ என எண்ணிய படி, அவனுக்கு காபியை கொடுக்க, அவனோ அவளின் முகத்தை சுவாஸ்யமாய் பார்த்தான்.

கிட்கேட் உருகும்💔
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
40
+1
6
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.