Loading

“சோழிங்கநல்லூர் யாரும் இறங்கணுமா?” விசிலை வாய்க்குக் கொடுத்துக் கொண்டே அவசர கதியில் கத்தினார் நடத்துனர்.

அப்போதும், அவளிடத்தில் எந்த அசைவும் இல்லை. ஜன்னல் தாண்டி எங்கோ வெறித்திருந்தது அவளது மலர் விழிகள்.

“இந்தாம்மா பொண்ணே. நீ தான ஐ.டி பார்க் டிக்கெட் எடுத்த…!” நினைவு வந்தவராய் ஓட்டுனர் அவளை அழைக்க, அதன் பிறகே பூவுலகம் வந்தவள், பெரிதாக அலட்டாமல், சற்றே நிதானத்துடன் பேருந்தில் இருந்து இறங்கினாள்.

அவளை உமிழ்ந்து விட்டு, நிதானமின்றியே பேருந்து அவளைத் தாண்டித் தாறுமாறாக செல்ல, பெருமூச்சொன்றை இழுத்து விட்ட பெண்ணவள், பல அடுக்குகளைத் தன்னுள் அடக்கிய ஐ.டி வளாகத்தினுள் நுழைந்தாள்.

முதன் முறை அத்தனை பெரிய கட்டடங்களையும், ஆங்காங்கே குழுமி இருந்த இளைஞர்களையும் கண்டவள் முன்போல் என்றால் சற்றே நடுங்கி இருப்பாள்.

ஆனால் இப்போது எதையும் கருத்தில் நிறைக்காமல், அவள் செல்ல வேண்டிய தளத்திற்கு சென்று அடைந்தவளிடம், அங்கு இருந்த ‘ரிசப்ஷன்’ பெண்மணி,

“குட் மார்னிங் மேம். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” எனக் கேட்டாள்.

“என் பேர் வான்மதி. நான் இங்க புதுசா ஜாய்ன் பண்ணிருக்கேன் மேம். ஆன்லைன்ல இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். ஹியர் இஸ் மை அப்பாயின்மெண்ட் ஆர்டர்.” என அலைபேசியில் காட்ட, அதனைக் கூர்மையாக பார்த்தவள், அவளைக் காத்திருக்க கூறி விட்டு உள்ளே சென்றாள்.

‘ஏ. எம் சாஃப்ட்வேர் சொலியூஷன்’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையையும், அதி நவீனமாய் கட்டப்பட்டிருந்த உள் அலங்காரங்களையும் எவ்வித சலனமுமின்றி வேடிக்கைப் பார்த்தவளை மீண்டும் ரிசப்ஷன் பெண்மணி அழைத்தாள்.

“எம்டி ரூம்க்கு போங்க மேம். வெல்கம் டூ அவர் கம்பெனி.” என இதழ் விரிய கூறியவளுக்கு சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டு சென்றவளை விசித்திரமாகப் பார்த்தாள்.

‘எம். டி ஆரவ் முகிலன்’ என்ற பெயர் பலகைத் தாங்கிய அறையினுள், தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் கவின்.

அவனுக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த தன்விக், “ஏன் மச்சான் உனக்குள்ள இவ்ளோ சோகம்…?” என்றான் வராத நீரைத் துடைத்தபடி.

அதற்கு நிமிர்ந்து அவனை முறைத்த கவின், “ஏன்டா நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?” என்று ஆதங்கமாக கேட்டு விட்டு கையில் இருந்த அப்பெண்ணின் பயோ டேட்டாவையே முறைத்தான்.

“விடு கவி. நம்ம கைல எதும் இல்ல.” வெகு தீவிரமாய் சிரிப்பை அடக்கியபடி தன்விக் அவனை ஆறுதல் படுத்த, அந்நேரம் கதவை திறந்து கொண்டு வந்தாள் அவர்களின் தோழியும், அலுவலகத்தின் ஹெச்.ஆர் உம் ஆன, ஹேமா.

அவளைக் கண்டதும் நெற்றிக்கண்ணை திறந்த கவின், “என்ன இதெல்லாம். உன்ன நான் என்ன சொன்னேன். நீ என்ன பண்ணி வச்சு இருக்க.” என்றான் பல்லைக்கடித்து.

சிறு ரப்பர் பேண்டுக்குள் அடங்கி இருந்த போனி டெய்லை ஆட்டியபடி, “நான் என்னடா பண்ணேன். இந்த கம்பெனிக்கு நாயா பேயா உழைக்கிறேன். ஆனா ஒரு ப்ரொமோஷன் கூட தர மாட்டுறீங்க” என்று மூக்கை உறிஞ்சினாள் ஹேமா.

“அசிங்கமா ஏதாவது சொல்லிடுவேன். நம்மளோட புது பிராஜக்ட்க்கு யங் அண்ட் எனர்ஜிடிக் – ஆ ஃப்ரெஷர்ஸ் எடு. அதுவும் முக்கியமா பொண்ணுங்களா எடுன்னு நான் சொன்னேனா இல்லையா.” என கோப மூச்சுக்கள் வாங்க கவின் கேட்க,

“டேய். நான் பொண்ணு தான்டா எடுத்தேன்” என்று ஹேமா பதில் கூறும் போதே, “எக்ஸ்கியூஸ் மீ.” என கதவைத் தட்டி அனுமதி கேட்டாள் வான்மதி.

அவளைக் கண்டதும் மேலும் கடுப்பு எகிற, கவின் “வாட்?” என்க,

“நான் ஃப்ரெஷரா ஜாயின் பண்ணிருக்கென். எம்.டிய பாக்கணும்ன்னு சொன்னாங்க” என வான்மதி தன்மையாக விளக்கம் அளிக்க,

“ஹீ இஸ் இன் மீட்டிங். வெயிட் அவுட் சைட்.” என எரிச்சலுடன் கூறியவனை கண்டுகொள்ளாமல், அவளும் வெளியில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்.

தன்விக் தான், “ஏன்டா அந்த பொண்ணுட்ட எரிஞ்சு விழுற?” என கேட்க,

அவனோ “பின்ன என்னடா… இந்த ஹேமா எருமா, வேலைக்கு ஆள் எடுக்குறதும் எடுக்குறா ஒண்ணு சிங்கிலா எடுக்கணும். இல்லையா கண்ணுக்கு லட்சணமா ஃபேமிலியோட இருக்குற பொண்ணை எடுக்கணும். அதை விட்டுட்டு ஏற்கனவே கமிட் ஆகி கல்யாணம் ஆகி புருஷனை கழட்டி விட்ட பொண்ணை எல்லாம் வேலைக்கு எடுத்து வச்சு இருக்கா.” என்று நொந்து போனதில், இப்போது ஹேமா வெறியானாள்.

“ஏன்டா. நான் பிராஜக்ட்க்கு ஆள் பாக்குறேனா. இல்ல உனக்கு பொண்ணு பாக்குறேனா. மவனே சாவடிச்சுடுவேன்.” என்று பொங்க,

தன்விக் “வாய வச்சிக்கிட்டு சும்மா தான் இருவேன்டா.” என்றான் அதட்டலாக.

அந்நேரம் அவர்களை அமைதி படுத்த வென்றே, சற்று தள்ளி தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை சிணுங்கிட, கவின் வேகமாக அக்குழந்தையை தூக்கிக் கொண்டான்.

“இஷு செல்லம்… உன் அப்பா இன்னும் மீட்டிங் முடிச்சு வரவே இல்ல. அதுக்குள்ள முழுச்சுட்டீங்களா.” என்று கொஞ்சிட, தன்விக் குழந்தை அழத் தொடங்கும் முன் அதன் வாயில் பால் டப்பாவை திணித்தான்.

ஹேமாவோ “அட அறிவு கெட்டவனே… ஏன்டா இவளோ அவசரமா பால குடுக்குற. கொஞ்சம் பொறுமையா தான் இரேன்” என்று திட்ட,

“எதுக்கு. இவன் அழுக ஆரம்பிப்பான். இவன் அப்பங்காரன் வந்து எங்கள அடிப்பான் தேவையாடி…” என்றான் லேசான மிரட்சியுடன்.

கவின் தான், “மச்சி நான் ஒன்னு கண்டுபிடிச்சு இருக்கேன்.” என பெருமையாக இருவரையும் பார்த்தவன், “வருங்காலத்தில இந்த கம்பெனியோட எம்.டி இவனா தான் இருக்க போறான். ஆனா, இவன் எக்ஸ்பீரியன்ஸ் யாருக்குமே இருக்காது.” என்று நிறுத்த இருவரும் ‘ஏன்’ என்று பார்த்தனர்.

“ஆமா, இவன் தான் பிறந்ததுல இருந்து ஆபிஸ்ல வளருறானே. 20 வயசுல 20 வருசம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்ல.” என்று காலரைத் தூக்கி விட, அவன் போட்ட மொக்கை தாங்கமால் குழந்தை இஷாந்த் ‘வீல்’ என்று அலறினான்.

“அட பைத்தியமே…” எனத் தீயாக அவனை முறைத்திருந்த இருவருமே இப்போது சிரித்திருக்க, அதை விட இவனின் தகப்பனிடம் அடி வாங்காமல் தப்பிக்கொள்ள எண்ணி இஷாந்தின் அழுகையை நிறுத்த பெரும் போராட்டமே நிகழ்த்தினர்.

ஆகினும், அதற்கெல்லாம் அசராத இஷாந்த் அழுது அழுது சோர்ந்தே மீண்டும் உறங்கிப் போனான்.

ஏன் அழுகிறான் என்றே தெரியாமல் அவனை கையில் வைத்து விழித்திருந்த நண்பர்கள் மூவருக்கும் நெஞ்சம் வலிக்கவே செய்தது.

கவின், “ஹேமா எரும நீ பொண்ணு தான. உனக்கு கூட பேபி அழுகையை எப்படி நிறுத்தன்னு தெரியலையா.” என்று ஹேமாவை முறைக்க,

“நான் என்ன பத்து பிள்ளையாடா பெத்து இருக்கேன். இன்னும் கமிட் கூட ஆகல.”  என்றாள் அவள் முறைப்பாக.

தன்விக், “பேசாம நம்மளும் கல்யாணம் பண்ணிக்கணும்டா கவி.” எனத் தீவிரமாக உரைக்க,

கவினோ, அதே தீவிரத்துடன் “கண்டிப்பா… டைவர்ஸ் வாங்குறதுக்காகவாவது கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்டா.” என்றதில், இருவரும் அவனை முறைத்தனர்.

“என்ன ஏன்டா முறைக்கிறீங்க. எல்லாரும் ஸ்டைலா பயோ – டேட்டால ‘டிவோர்ஸ்ட்’ ன்னு போடும் போது நான் மட்டும் எத்தன நாள் சிங்கிள்ன்னே போட. அப்டி எதுக்காக தான் டைவர்ஸ் வாங்குறாங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும்ல…” என்று அவன் போக்கில் பேச, தன்விக் அவனை அமைதிப்படுத்த வெகுவாய் முயன்று தோற்றான்.

“என்ன திடீர் சைலண்ட்டு” என மடியில் இருந்த இஷாந்தை பார்த்த படி பேசியவன் மெல்ல நிமிர, எதிரில் நெருப்பாய் தகித்தபடி உக்கிரத்துடன் நின்றிருந்தான் ஆரவ் முகிலன்.

அவ்வளவு தான் இத்தனை நேரமும் வளவளத்த கவினின் இதழ்கள் பசை போல் ஒட்டிக்கொள்ள, ‘அய்யயோ கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?’ என்று நெஞ்சம் பதற தொடங்கியது.

“வெண்ணெ. இவன் வந்துட்டான்னு ஏன்டா சொல்லல.” அடிக்குரலில் தன்விக்கை வஞ்சித்தாலும் அது முழுதாக வெளியில் கூட வரவில்லை.

“மூணு பேரும் என்ன பு****. அவன அழுகாம பாத்துக்க சொன்னா அழுக விட்டு வேடிக்கை பாத்துட்டு ***.” இன்னும் காதால் கேட்க இயலாத கெட்ட வார்த்தைகளால் கத்திய ஆரவ் முகிலன், இஷாந்தை அவன் கையில் வாங்கிக்கொள்ள மூவரும் காதில் இருந்து கையை எடுக்கவே இல்லை.

வார்த்தைகளில் இருந்த உஷ்ணம், தன் மகனை ஏந்துகையில் மெல்லக் குறைந்திட, மலரை விட மென்மையாக அவனின் நெற்றியில் இதழ் பதித்தவன், “போய் வேலைய பாருங்க!” என்றான் விழியால் கட்டளையிட்டு.

மூவரும் அடித்து பிடித்து வெளியில் ஓடி விட, அப்போது தான், ஹேமா வான்மதியைப் பார்த்து, “எம் டி வந்துட்டாரு. நீங்க போய் பாருங்க” என்று சொல்லிட, அவளும் தலையாட்டி விட்டு, கதவை தட்டி அனுமதி கேட்டாள்.

“எஸ். கமின்…” என்ற ஆழ்ந்த குரலில், மெல்ல உள்ளே சென்றவள், கையில் குழந்தையுடன் கோர்ட் சூட் சகிதம் ஒரு ஆண்மகன் அமர்ந்திருந்ததைக் கண்டு சிறிது விழித்தாள்.

அவனின் கூர்ப்பார்வை அவளை மொய்க்க, “ஹூ ஆர் யூ?” எனக் கேட்டான் அதட்டலாக.

அவளின் விழிகளோ இஷாந்த் மீதே இருக்க, தன்னை பற்றிக் கூறியதும், “ஓ! நியூ எம்பிளாயியா?” என்று சற்று தணிந்தவன், “ஃப்ரஷர்ன்னு ஒன்னும் தெரியாம முழிச்சுட்டு இருக்க கூடாது. ஒன் வீக்ல பேசிக்ஸ் லர்ன் பண்ணிட்டு பிராஜக்ட்க்கு செட் ஆகனும். காட் இட்?” என உத்தரவிட்டவன், அவளை அனுப்பி விட, அவளுக்கும் ஏனென்று அறியாமல் லேசாக மனம் நடுங்கியது.

அதனை ஆராயாமலேயே மீண்டும் ஆரவின் திண்ணிய மார்பில் சரிந்து உறங்கிக் கொண்டிருந்த பிஞ்சின் முகத்தை விழிகளில் நிரப்பியவள், அவளின் வேலையைத் தொடரச் சென்றாள்.

மதியவேளை வரையும் புதிய இடம், புதிய வேலை, தன்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டும் சக பணியாளர்களை எல்லாம் சமாளித்தவளுக்கு, டீம் லீடர் கவின் தான்.

வந்த முதல் நாளிலேயே, அவளுக்கு நிறைய வேலைகளைக் கொடுக்க, வான்மதியும் முகத்தில் எதையும் காட்டாமல் முடிந்த அளவு ஈடு கொடுத்தாள்.

தன்விக் தான், “பாவம்டா அந்த பொண்ணு. சின்ன பொண்ணா வேற இருக்கு. யார் மேலயோ இருக்குற கோபத்தை அவ மேல ஏன் காட்டுற” எனக் கண்டிக்க, கவின் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை.

“என் டார்லிங் தான நீங்க. என் பட்டு தான நீங்க. குட் பாயா சாப்டுவீங்களாம்.” என கெஞ்சிக் கொஞ்சி இஷாந்திற்கு செரலாக் ஊட்டிக் கொண்டிருந்தான் ஆரவ்.

முகத்தில் இருந்த இறுக்கம் குரலில் இல்லாது, அதில் அத்தனை மென்மை வழிந்தோடியது.

பொதுவாகவே அனாவசியமாகக் கோபம் கொள்பவன் கிடையாது. ஆனால், ஆத்திரம் வந்து விட்டால் யாரென பாராமல் திட்டித் தீர்த்து விடுவான். சிறு வயதில் இருந்து உறவுகள் இருந்தும் தனியாக வளர்பவனுக்கு, இப்போதிருக்கும் ஒரே உறவு இஷாந்த் மட்டுமே.

அடிப்பதனாலும், அரவணைத்துக் கொள்வதானலும் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவனின் நண்பர்கள் தான். பள்ளிக் காலம் தொட்டு அவனுடைனே பயணிக்கும் அன்பான பயணிகள் அவர்கள்.

மதிய உணவு இடைவேளைக்காக, உணவுடன் அறைக்குள் நுழைந்த மூவரில் கவினை அதிகமாக ஆரவின் விழிகள் சுட, அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்ததில், “சாரி மச்சி” என்றான் முணுமுணுப்பாக.

அதற்கு பதிலேதும் கூறாதவன், “நீங்க மூணு பேரும் சாப்பிட்டுட்டு இவன வச்சுக்கோங்க. அப்பறம் நான் சாப்புடுறேன்” என எப்போதும் போல் ஜன்னல் வழியே இஷாந்திற்கு  வேடிக்கைக் காட்டியவனின் அழுத்த விழிகள் தூரத்தில் கதிரவனை மறைத்த கருமேகத்தையும், அதனால் விழைந்த சிறு தூறல்களையும் வெறுமையாக ஆராய்ந்தது.

வலிமை மிக்க
வெய்யோனாகினும்
வஞ்சம் கொண்ட
வான்மேகத்தின் சதியில்
கண்ணீரைத் தான் தூவுமோ…?

இஷாந்தின் மென் கன்னத்தோடு தன் தாடி முளைத்த கன்னத்தை தேய்த்தபடி, ஆரவ் ஏதேதோ சிந்திக்க, அதற்கு அடுத்த மாடியில் இருந்த ‘ஃபுட் கோர்ட்’ கண்ணாடி ஜன்னலில் நெற்றியை சாய்த்து வான்மதியும் தூறலைத் தான் தூற்றிக் கொண்டிருந்தாள்.

“ஆரவ் நீ போய் சாப்டு!” என ஹேமா இஷாந்தை கையில் வாங்கிக்கொள்ள, தந்தை சாப்பிட அனுமதி கொடுக்காதவன் போல மூவரையும் படுத்தி எடுத்து அழுது தீர்த்தான் இஷாந்த்.

அவசரமாக உணவை விழுங்கியவன், பாதி சாப்பாட்டோடு எழுந்து கொள்ள, தன்விக் பாவமாக, “பேபி சிட்டர் ஆச்சு வச்சுக்கலாம்ல ஆரவ்?” எனக் கேட்டான் ஆதங்கமாக.

ஹேமா, “லூசாடா நீ. பிறந்ததுல இருந்து பாக்குற நம்ம மூஞ்சியே இன்னும் அவன் மனசுல பதியல. நம்ம கிட்டயே இருக்க மாட்டுறான். இதுல பேபி சிட்டர்ட்ட எப்படி செட் ஆவான்?” என்று நியாயமாக கேள்வி எழுப்ப,

அதனை ஒப்புக்கொண்ட கவின், “அது மட்டும் இல்ல. அதெப்படி யாருன்னே தெரியாத ஒருத்தங்ககிட்ட பேபியை விட்டுட்டு இருக்க முடியும். கொஞ்ச நாள்ல அவன் வளர்ந்ததும் சரி ஆகிடுவான்.” என மறுத்ததிலேயே அவனுக்கு இதில் பிடித்தம் இல்லை எனப் புரிய, ஆரவ் அவர்களின் வாதங்களை கணக்கில் கொள்ளாமல்,

“புதுசா ஜாயின் பண்ண பொண்ணு எப்படி பெர்ஃபார்ம் பண்றா?” என வினவினான்.

அதற்கு தன்விக் பதில் கூற வர, அவனை அடக்கிய கவின், “ரொம்ப வொர்ஸ்ட். எனக்கு பிடிக்கவே இல்ல.” என்று முகம் சுருக்கியதில்,

இஷாந்திற்கு டயப்பர் மாற்றிக்கொண்டிருந்த ஆரவ் நிதானமாக நிமிர்ந்து, “நான் உனக்கு பிடிச்சு இருக்கான்னு கேட்கல. ‘ஹொவ் இஸ் ஷீ ஒர்கிங்’ன்னு கேட்டேன்.” என்றான் அழுத்தத்துடன்.

“ஏதோ பண்றா. பட் தேறுவான்னு எனக்கு தோணல.” என விட்டேத்தியாக பதில் கூற, “ஒன் வீக் பாக்கலாம். தென் வில் டிசைட்.” என்ற ஆரவிற்கும் புரியவில்லை. இவனுக்கு ஏன் அந்த பெண் மீது இத்தனை கோபம் என்று.

கவினும் தன்விக்கும் வெளியில் சென்றதும், “என்னாச்சு இந்த பைத்தியத்துக்கு?” என ஹேமாவிடம் கேட்டே விட,

“அதை ஏன் கேக்குற ஆரவ். அந்த பொண்ணு டிவோர்ஸ்ட் போல. அதை அவளோட பயோ – டேட்டால பார்த்ததுல இருந்து கடுப்படிக்கிறான்.” என்று நெற்றியில் கை வைக்க, ஆரவிற்கு மெல்லப் புன்னகை படர்ந்தது.

“அதுக்கு ஏன் இவன் டென்ஷன் ஆகுறான். என்னமோ அவளுக்கு இவன் வாதாடி டைவர்ஸ் வாங்கி குடுத்த மாதிரியும், அதுக்கு அவ வக்கீல் ஃபீஸ் கொடுக்காத மாதிரியும்…” என நக்கலாகக் கேட்க,

அதில் வாயை பொத்தி சிரித்து விட்ட ஹேமா, “சாருக்கு இப்போலாம் டைவர்ஸ்ன்னு பேர கேட்டாலே பிடிக்க மாட்டேங்குதுடா. மே பி அதனால தான நீயும் இஷு பேபியும் சஃபர் ஆகுறீங்க. அதனால கூட இருக்கலாம்.” என தயங்கியபடி கூறியதில்,

அதற்கும் மெலிதாய் முறுவலித்தவன், “இருக்கலாம்!” என்று விட்டு, இஷாந்தின் மீது கவனத்தைப் பதிக்க, அதற்கு மேல் அங்கு நின்று அவனிடம் பேச வார்த்தை வராமல் தன் கேபினுக்கு வந்து விட்டாள் ஹேமா.

பள்ளி சீருடையான டவுசர் அணியும் காலத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் ஆரவ்வை. எதிலும் நிதானம் தவறியதில்லை அவன். அதிலும் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு விவாகரத்துக் கொடுக்கும் அளவு சிந்தனையற்றவனும் கிடையாது.

‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பது போல, அவனின் திருமணம் நிகழ்ந்த முறை அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் விதமாய் அமையவில்லை என்றாலும், அதனை ஏற்றுக்கொண்டு அவனின் குடும்ப வாழ்வு சிறக்க வாழ்த்தியவர்களுக்கு குழந்தை பிறந்த மறுதினமே விவாகரத்தைக் கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

பல முறை சிந்திக்காமல் முடிவெடுக்க மாட்டான் தான் என்றாலும், “ஒரு தடவை நல்லா யோசிச்சுக்கோ ஆரவ்” என்ற ஹேமாவின் கண்டிப்பில், அவன் சிறிதும் கூட யோசிக்கவில்லை. ஆனால், கவினுக்கு கடும் கோபம் தான்.

“இதென்ன பொம்மை கல்யாணமா… வேணும்னா வச்சுக்குறதுக்கும் வேணாம்ன்னா குப்பைல போடுறதுக்கும்.” எனக் கோபத்தை வெளிப்படையாக ஆரவிடம் காட்டி விட, அவன் வாயைத் திறந்து பதிலேதும் உதிர்க்கவில்லை.

அவன் பக்க வாதத்தையாவது முன் வைப்பான் என்று ஏதேதோ பேசி அவன் வாயை பிடுங்க நினைத்தாலும், இப்போது வரை தோல்வியை மட்டுமே தழுவுகின்றனர் மூவரும்.

நாட்கள் சோம்பலாகவே நகர்ந்தது வான்மதியைத் தவிர. அவளைத் தான் சாப்பிடக் கூட விடாமல், கவின் வேலை வாங்கியே அவளின் பொறுமையை சோதித்தானே!

ஆனாலும், அவனுக்கு வியப்பு தான். ஒரு வாரமாக விடாமல் வேலை கொடுத்தும், எப்படி இந்த பெண் சிறு மறுப்பையும் சுளிப்பையும் காட்டாமல் வேலை செய்கிறாள் என்றெண்ணி தோன்றிய வியப்பை மறைக்கவும் இயலவில்லை.

அவ்வெண்ணத்தை துடைத்தெறிவது போல, அவள் வேலையில் சிறு பிழை நேர்ந்து விட, கவினோ இது தான் வாய்ப்பென்று அவளை ‘காச் மூச்’ என கத்தினான். அவளோ அதனை எந்த அலட்டலும் இல்லாமல் கேட்டுக்கொள்ள, அவனுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.

‘எவ்ளோ திமிரு பாரேன்.’ என வாய்க்குள் திட்டிக்கொண்டவன், அவள் செய்த சிறு தவறை ஆரவ் வரைக்கும் கொண்டு சென்று விட்டான். அவன் திட்டினால் தானே கெட்ட வார்த்தைகள் சரளமாக வரும்! அதில் இவள் பயந்து ஓடிவிடுவாள் என தனக்குள் திட்டம் தீட்டியவன், அவளை ஆரவின் அறைக்கு அழைத்து சென்று சிறு பிள்ளை போல புகார் அளிக்க, வான்மதியின் விழிகள் கவினை ‘லூசா நீ’ என்பது போல பார்த்தது.

அதற்கும் மேல், ஆரவிற்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வர,

அதனை அடக்கி, “இனிமே கவனமா வேலை பாக்கணும்” என அவளை நோக்கி கண்டித்தவன், “வாட்ஸ் யுவர் நேம்” என வினவ,

ஏனோ கவின் திட்டும்போது வராத சிறு நடுக்கம் இப்போது ஆரவின் விழிகளில் தெறித்த சிறு கோபத்தில் அவளை மீறி வெளிவர, “வா… வான்மதி சார்” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் கைகள் தன்னிச்சையாக நடுங்குவதை கவனித்த ஆரவ், அவளை இலகுவாக்கும் பொருட்டு, “வான்மதி உன் பேர் ஓகே. ‘வா’ என்ன உன் இனிஷியலா?” என அவள் திக்கி கூறியதை குறிப்பிட்டு கேலியாக கேட்க, ‘இப்ப அவள் இனிஷியல் உனக்கு முக்கியமாடா’ என முறைத்தான் கவின்.

வான்மதிக்கோ அங்கிருந்து வெளியில் வந்தால் போதும் என்றளவு மூச்சு முட்ட, அவள் விழிகளோ அப்போதும் இஷாந்தைத் தான் தேடியது.

அவள் சென்றதும் தான் தாமதம், “அதெப்படிடா நீ அவளை திட்டாம விடலாம். நாங்கல்லாம் தப்பு பண்ணா எங்களை விட்டு கிழிப்பீல. அவளை மட்டும் ஏன் விட்ட?” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கவின் கத்த,

சற்றே கோப விழிகளில் அனலைக் கக்கிய ஆரவ், “உன்னோட தனிப்பட்டக் கருத்துக்களை, உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில வைச்சுக்கோ கவின். ஆபிஸ்ல, அதுவும் இங்க வேலை பாக்குற எம்பிளாயீஸ்ட்ட அதை காட்ட நான் அனுமதிக்க மாட்டேன். நொவ் யூ கேன் கோ!” என வாசலை நோக்கி கண் காட்ட, முகத்தை சுருக்கிக்கொண்டு வெளியில் சென்றான் கவின்.

தேன் தூவும்…!
மேகா!

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். நெக்ஸ்ட் ஸ்டோரி ஓட வந்துட்டேன். இந்த கதை பத்தி சொல்லணும்ன்னா டெம்ப்ளேட் லவ் ஸ்டோரி தான். ஆனா அதை கொஞ்சம் வித்தியாசமா சொல்ல டிரை பண்ணிருக்கேன் (must be different ஆ இருக்கும்ன்னு நினைக்கிறேன். இல்லன்னா என்ன திட்ட கூடாது).

ரொம்ப சோகம் இல்ல. ஆனா ரொம்ப கலகல ஸ்டோரியும் இல்ல. ஆனா கண்டிப்பா நிறய காதல் இருக்கும்💜

அப்டேட்ஸ் கண்டிப்பா ரெகுலரா வராது. அடுத்த மாசம் முழுக்க ரம்ஜான் ஃபாஸ்டிங். சோ நான் டைப் பண்ணி வைக்க போறதை தான் வாரத்துக்கு ஒரு அப்டேட் ஆ குடுக்க போறேன். முடிஞ்சா ரெண்டு அப்டேட் ஆ தரேன். After ரம்ஜான் ரெகுலர் யூடி வரும் drs. 🥰 Share your comments. And thank you sooooo much for your lovable support.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
96
+1
191
+1
9
+1
12

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments