Loading

 

குற்றங்கள் பல 
குவிந்திடும் குவியலாக…!
(ஏ)மாற்றங்கள் சில
பிறந்திடும் புதுக் குழந்தையாக..!
ஏற்றங்கள் பல
நிறைந்திடும் சிலருக்கு…! – இரக்கமேயின்றி
இறக்கங்கள் ஒன்றே
உறைந்திடும் இயலாதோருக்கு…!

தன்னுடைய சட்ட அலுவலகத்தில் தன்னால் பொறிக்கப்பட்டிருந்த இவ்வாசகத்தை வெறித்திருந்தாள் வசுந்தரா.

சிறிது நேரம் முன்பு அவளறிந்த தகவல் தான் அவளை நிலைகுலைய வைத்திருந்தது. தன்னுடைய வழக்கின் முக்கிய சாட்சியாக விளங்கிய அறிவழகன், சில நிமிடங்களுக்கு முன்னால், ஆளுங்கட்சி எம். எல். ஏ வான ஜிஷ்ணு தர்மனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல் அவளை சினம் கொள்ள வைத்தது.

கோபம் தலைக்கேறியதற்கு அடையாளமாக, வசுந்தராவின் மையிட்ட சிறு விழிகள் சிவப்பேறி இருக்க, கரங்கள் இறுக்க மூடப்பட்டிருந்தது.

குருதி வடிந்த கத்தியை, பேயாய் பொழிந்த மழையில் காட்டி கழுவிக் கொண்ட ஆடவன், தனது வெள்ளை நிற வேட்டியை மடித்துக் கட்டி விட்டு, உயிரற்று சரிந்து கிடந்த அறிவழகனை இதழ் வளைவுடன் ஏளனமாக ஏறிட்டான்.

அவன் வயிற்றிலேயே ஓங்கி ஒரு மிதி மிதித்து, “என் கையால சாவணும்ன்னு அம்புட்டு ஆசையாடா. த்தூ… மனசுல பெரிய தியாகின்னு நினைப்பு. கோர்ட்டுக்கு போறானாம் கோர்ட்டுக்கு.” என அறிவழகன் சடலத்தை பார்த்து நெருப்பை உமிழ்ந்தவன், விழிகளை திருப்பி அவன் ஆட்களை ஒரு பார்வை பார்க்க,

அவர்களோ, “பாடியை நாங்க டிஸ்போஸ் பண்ணிடுறோம் ஜீ.” என உடனடியாக வேலையில் இறங்கினர்.

“ம்ம். இவன் செத்தது இன்னும் அரை மணி நேரத்துல ஃபிளாஷ் நியூஸா வரணும்.” என்ற உத்தரவையும் கர்ஜனையுடன் வழங்கி விட்டு காரில் ஏறி சீறி பறந்தான்.

இவற்றை எல்லாம் மரத்தின் மறைவில் ஒளிந்திருந்து பார்த்திருந்த பரத் சில நொடிகள் அசையாமல் நின்றிருந்தான். வசுந்தராவுடன் நிறைய வழக்கில் வேலை செய்திருந்தாலும், கொலையை நேரலையாக பார்ப்பது இதுவே முதன் முறை.

27 வயது நிரம்பிய அந்த ஆண்மகனுக்கு கால்கள் நடுங்க தொடங்க, அதே நடுங்கும் கரங்களுடன் வசுந்தராவிற்கு அழைத்திருந்தான். அவன் வழியாக தான், முதலில் அவள் விஷயம் அறிந்து ஆத்திரமானது.

“கொலைகாரன், அடியாளை எல்லாம் அரசியல்வாதியா ஆக்கி விட்ட பெருமை நம்ம ஊரை தான் சேரும். ச்சே…” என்றே குட்டி இதழ்களை சுளித்தவளுக்கு, கோபம் அடங்க மறுத்தது. பின்னே, எத்தனை நாட்கள் உறங்காமல் இவ்வழக்கில் தன்னை மறந்து புதைந்து வேலை செய்திருக்கிறாள். அதனை ஒரே நொடியில் தவிடு பொடி ஆக்கியதில் வெறியே எழுந்தது அவளுக்கு.

கன்னிமனூர்… இதனை சுற்றி 5 கிராமங்கள். 20000 க்கும் மேற்பட்ட மக்களை கொண்டது. வெள்ளைப்பாளையம் பேரூராட்சியின் முக்கிய அங்கமாக திகழ்வது கன்னிமனூர். அதனை சுற்றி பரவி இருக்கும் பசுமையும், மலைகளும், இயற்கை விவசாயமும் கன்னிமனூரை சொர்க்கமாக எண்ண வைத்தது.

தலைமுறை தலைமுறையாக விவசாயத்தையே நம்பி வாழும் ஊர் அது. வெள்ளைப்பாளையமும் முழுக்க முழுக்க விவசாயம் தான். கண்ணுக்கெட்டும் தூரம் வரை தென்னந்தோப்பும் வாழைத் தோப்பும் கண்களை கவரும். அது போக, உயர் படிப்பு படிக்க கல்லூரியும், தரமான பள்ளி படிப்பிற்கும் கன்னிமனூர் மக்கள் இங்கு தான் வந்தாக வேண்டும். கன்னிமனூர் பின் பகுதி முழுக்க மலைகள் இருக்க, வெள்ளைப்பாளையத்தை தாண்டியே மற்ற ஊர்களுக்கும் செல்ல முடியும் என்ற நிர்பந்தம்.

மேலும், இரு ஊர்களுக்குள்ளும் தென்படும் ஜாதி வேறுபாடுகளும் அனைத்து வளங்களும் இருந்தாலும் கன்னிமனூரை அனைத்து விதத்திலும் தள்ளியே வைத்திருக்கும். அதிலும், ஜாதி சண்டை என ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை ஒரு சிறு பிரச்சனை கூட வந்தது இல்லை தான். ஆனால், இந்த ஐந்து வருடங்களாக, வெள்ளைப்பாளையம் மக்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஏகப்பட்ட சஞ்சலங்களை சந்திக்க நேரிட்டது.

அரசாங்கமும், அங்கு எந்த வித வசதியும் ஏற்படுத்தி கொடுக்காது போக, இறுதியில் வெள்ளைப்பாளையம்  தொகுதியின் எம். எல். ஏ வான ஜிஷ்ணு தர்மனின் முயற்சியில் இப்போது, கன்னிமனூரை தனி பேரூராட்சியாக அறிவித்து, அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிஷ்ணு தர்மன். அரசியலை அரசியலாக, அடிதடியாக அச்சு பிசகாமல் நடத்துபவன். கன்னிமனூரை சேர்ந்த இளைஞன் தான். ஆனால், அரசியலின் மீது தீராத தாகம் அவனுக்கு. கட்சியிலேயே தொண்டனாக காலத்தை ஓட்டிய அவனின் தந்தை குலசேகரனால் ஏற்பட்ட தாக்கமா? அல்லது, ஜாதியின் பேரில் மறைமுகமாக ஒடுக்கப்பட்டதால் விளைந்த வேகமா? என அவனே அறியான்.

பள்ளிக்காலம் தொட்டே, தற்போது அவனிருக்கும் வந்தாரை வாழ வைக்கும் (வ. வா. வை)கட்சிக்காக, சண்டை அடிதடி என இறங்கி வேலை செய்வான். அதிலும், வெள்ளைப்பாளையம் இளைஞர்களில் பாதி பேர் அவனின் தோழர்கள் என்பதாலும், ஊருக்கு ஒன்றென்றால் உடனடியாக வேலை செய்யும் அவனின் மின்னல் வேகத்தினாலோ என்னவோ அவனுக்கு வெள்ளைப்பாளையத்தை சுற்றி இருந்த அத்தனை கிராமங்களிலும் எதிர்பாரா ஆதரவு கிடைத்தது.

நான்கு வருடங்களுக்கு முன், இப்போது ஜிஷ்ணு எம். எல், ஏ வாக இருக்கும் அதே வெள்ளைப்பாளையம் தொகுதிக்கு ஆளுங்கட்சியான க. கே க்கும், எதிர்கட்சியான வ. வா. வை க்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஏற்கனவே, வெள்ளைப்பாளையத்தை சேர்ந்த மேல்ஜாதிக்கார் தான் வ. வா. வை கட்சிக்காக நின்றிருந்தாலும், அவருக்கு அப்போது அவரின் ஜாதி ஓட்டு தவிர மற்ற ஆதரவுகள் இல்லாத நிலை. நிச்சயம், அக்கட்சிக்கு அந்த தொகுதியின் வெற்றி இன்றியமையாத ஒன்று.

அவர்களின் அந்நிலை தான், ஜிஷ்ணுவை கட்சிக்குள் இழுத்து விட்டது. அல்லது, அவனே அந்நிலையை உருவாக்கி கொண்டானா என்பதை அவனே அறிவான்.

குளுகுளு ஏசி காரில், கண்ணை மூடி சீட்டின் பின்னால் சாய்ந்து கொண்டிருந்தவனின் விரல்கள் ரேடியோவில் ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப தாளமிட்டது. இறுக்கமான உதடுகளோ இளக்காரத்துடன் அப்பாடலை முணுமுணுக்க, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவன் பி. ஏ கௌரவ், “ஜீ…” என அழைத்தான் பணிவாய்.

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா

என்ற பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் உருப்போட்டவன், கௌரவின் அழைப்பில் விழிகளை மட்டும் திறந்து, என்னவென புருவம் உயர்த்தி பார்க்க, “ஒரு பிரச்சனை ஜீ…” என்றான் எச்சிலை விழுங்கிக்கொண்டு.

“ப்ச்…” என சலித்த ஜிஷ்ணு தர்மனோ, மீண்டும் கண்ணை மூடியபடி, “என்ன… நான் அறிவழகனை போட்டு தள்ளுன போட்டோ வெளிய வந்துருக்கா?” என்றான் அசட்டையாக.

கௌரவ் தான் விழி உயர்த்தி, “ஜீ… என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? எவனோ போட்டோ எடுத்து நமக்கே அனுப்பி இருக்கான். இந்நேரம் இது மீடியாக்கு கூட போய் இருக்கும்.” என பதறினான்.

அதில் நிமிர்ந்து அமர்ந்த ஜிஷ்ணு, “எவனோவா… இல்ல எவளோவான்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும்” என்னும் போதே, அவன் போன் ஒலிக்க, நக்கல் நகை பூத்தவன், “இதோ… தெரிஞ்சுடுச்சே.” என்று ஆழ்ந்தக்குரலில் கூறியபடி போனை காதில் வைத்தான்.

எதிர்முனையில், அவனின் ஆருயிர் நண்பன் குமரன் தான் போன் செய்திருந்தான். “மாப்ள. அறிவழகன் விஷயம் லீக் ஆகிடுச்சு. வசுந்தரா அந்த போட்டோ ஆதாரத்தை நேரடியா ஜட்ஜ்கிட்டயே கொண்டு போறா. இப்போ என்ன பண்றது?” என்றான் பதற்றமாக.

“விடுடா பாத்துக்கலாம்.” என அசட்டையாக பேசியவனிடம், “டேய்… நம்ம ஊர் வேலை வேற நடந்துட்டு இருக்கு. இந்த நேரத்துல ஏதாவது பிரச்சனை ஆனா, கன்னிமனூர் ஜென்மத்துக்கும் அடிமையா தான் இருக்கும்.” என்று அவன் கத்த, அதை கேட்க ஜிஷ்ணு எதிர்முனையில் இருந்தால் தானே.

போனை அணைத்து பாக்கெட்டில் வைத்து விட்டு, நெட்டி முறித்தவன், “அவளோட அடுத்த சாட்சி யாரு?” என்று தீவிரத்துடன் வினவ,

கௌசிக் வேகமாக, “வசுந்தராவோட அப்பா ஜீ” என்றான்.   

“ஓஓ… நல்லது. அடுத்த வாரம் அவருக்கு ஒரு நல்ல நாள் பார்த்துடுவோம். இந்த வாரத்துல சட்டசபை மீட்டிங் இருக்கு. அதை முடிச்சுட்டு, அவரை முடிக்கலாம்.” என திருமணத்திற்கு நாள் பார்த்திருப்பது போல இயல்பாக கூறியவன், கூலிங் கிளாஸை ஊதி விட்டு, கண்ணில் போட்டு கொண்டான்.

அருகில் அமர்ந்திருந்தவனோ, மிரண்டு “ஜீ… எனக்கு ஒரு ஐடியா சொல்லவா?” என்றான் தயக்கத்துடன்.

அதில், நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்த ஜிஷ்ணு தர்மன், “ஐடியாவா? எதை பத்தி…? அடுத்த கொலை எப்படி பண்ணலாம்ன்னா?” என ஆர்வமாய் கேட்பது போல அழுத்தப்பார்வை பார்க்க, “இல்ல இல்ல ஜீ. அது… இத்தனை பேரை கொலை பண்றதுக்கு, இதுக்கு எல்லாம் காரணமான வசுந்தராவையே…” என்று கேட்க வந்து விட்டு, நிறுத்தினான்.

நெற்றி நெளிய, தாடையை தடவிக்கொண்டவன், “இதுவும் நல்ல ஐடியா தான். ஆனா…” என ஏதோ அவன் பேச வருவதற்குள், “எனக்கு புரியுது ஜீ. என்ன இருந்தாலும் ஒரு பொண்ணை எப்படி கொல்றதுன்னு தான யோசிக்கிறீங்க. உங்களுக்குள்ளையும் ஈரம் இருக்குன்னு எனக்கு தெரியும்.” என்றான் அவசரமாக.

“ஷப்பா…” என்றபடி, பின்னந்தலை கோதியவன், “ஓங்கி ஒன்னு குடுத்தேன்னு வை. ஈரம் காரம்ன்னுட்டு… அவ ஏதோ ஒன்னும் இல்லாத ஒரு விசயத்துக்காக நம்மளை உள்ள தள்ள திட்டம் போட்டு இருக்கா. அவளுக்கு இன்னும் நம்மளோட முக்கிய திட்டமே தெரியாது. இப்ப அவளை கொன்னு, அவளையே கொன்னுருக்கோம்ன்னா, ஏதோ பெருசா செய்ய போறோம்ன்னு எதிர்க்கட்சிக்காரனுக்கு சந்தேகம் வந்துச்சுன்னு வை… அடுத்த தேர்தல்ல, நீயும் எனக்கு பி. ஏ வா இருக்க முடியாது. நானும் எம். எல். ஏ வா இருக்க முடியாது. கொஞ்ச நாளைக்கு அவ இருக்கட்டும். எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்…” என இதழோரம் கேலி புன்னகை உதிர்த்ததில், இன்னும் குழம்பினான் கௌசிக்.

“முட்டாள். எடுத்தது தான் எடுத்த. வீடியோவா எடுத்திருக்க கூடாது. உன்ன போய் வேவு பார்க்க அனுப்புனேன் பாரு.” என்று காட்டு கத்தாக கத்தினாள் வசுந்தரா.

பரத் தான், “என்ன நீ விளையாடுறியா? இந்த ஒரு போட்டோ எடுக்குறதுக்குள்ள என் கை எப்படி நடுங்குச்சுனு எனக்கு தான் தெரியும்.” என்றதில், அவனை முறைத்தவள், அந்த ஒற்றை புகைப்படத்தை ஜிஷ்ணு தர்மனுக்கு எதிராக திருப்பும் வேலையில் ஆயத்தமானாள்.

அதன் பலனாக, ஜிஷ்ணுவை காவலர் விசாரிக்க, அவனோ அத்தனையையும் இலகுவாக சரி கட்டினான். ஆனால், அவன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு, அவன் கண்டிப்பாக நீதிமன்றம் வர வேண்டும் என்ற உத்தரவு வர, மெல்ல எரிச்சல் மேலோங்கியது அவனுக்கு.

‘வரேண்டி. வந்து உன்னை பார்த்துக்குறேன்.’ என உள்ளுக்குள்ளேயே சீறியவன், அமர்த்தலாக நீதி மன்றத்திற்கு செல்ல, வசுந்தரா அவனை நிமிர்ந்தும் காணவில்லை.

முகத்தில் நிமிர்வும், திமிரும் போட்டி போட, தன் வாதத்தை தொடர்ந்தாள்.

“வணக்கம் யுவர் ஹானர். கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி, வெள்ளைப்பாளையம் பேரூராட்சியின் ஜாதி துணை தலைவரான செங்கமலம் கொலை செய்யப்பட்டார். அதனை அடுத்து, இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட கொலையாளியை கண்டுபிடிக்க, அக்கொலையை நேரில் பார்த்த ஒரு சாட்சியான அறிவழகன் அடுத்த ஹியரிங்கில் இங்கு ஆஜர் ஆக இருந்தார். அவரை, நேற்று முன் தினம், வெள்ளைப்பாளையம் தொகுதி எம். எல். ஏ ஜிஷ்ணு தர்மன், சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்.

அதற்கான புகைப்பட ஆதாரத்தை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.” என்று ஜிஷ்ணுவை பார்வையால் எரித்தபடி கொடுக்க, அவனோ விழி உயர்த்தி, சிறு சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.

வசுந்தராவிற்கு எதிராக எழுந்த குமரன், “அப்ஜக்ஸன் யுவர் ஹானர். புகைப்படத்தை எல்லாம் ஒரு ஆதாரமா எப்படி சொல்ல முடியும். எதிர்க்கட்சி தரப்பு வக்கீல், கொலை செய்யும் போது, கையில கேமராவோட நின்னுருப்பாங்களோ?” எனக் கேட்டதில் அங்கு சிரிப்பலை பரவ,

அவனைக் கண்டு கேலியாக புன்னகைத்தவள், “மன்னிக்கணும் மிஸ்டர் குமரன். இது கேமரால எடுத்தது இல்ல. உங்க கட்சிக்காரர் கொலை செய்யும் போது, அவருக்கு பக்கவாட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.” என்றவளின் நக்கல், அவனை சற்றே தடுமாற வைத்தது.

அப்போதும் ஜிஷ்ணுவின் பார்வை, அவள் மீது பாராட்டும் தொனியில் படிய, கூடவே, அவனின் கை அலைபேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தது.

அந்நேரம், ஜிஷ்ணு தர்மன் குற்றவாளி கூண்டிற்கு அழைக்கப்பட, விறுவிறுவென எழுந்து சென்றவனை நீதிபதி “உங்க மேல சுமத்தப்பட்ட குற்றத்திற்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன்” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு சின்ன சந்தேகம் யுவர் ஹானர். சிசிடிவி மூலமா எடுக்கப்பட்ட போட்டோ இது தான். நான் ஒத்துக்குறேன். ஆனா, சிசிடிவி மூலமா வீடியோவே எடுத்துருக்கலாமே, ஏன் போட்டோ மட்டும் எடுக்கணும். அதை உங்க வக்கீல் மேடம் வசுந்தராகிட்ட தெளிவா கேட்டுக்கோங்க யுவர் ஹானர்” என்றான் வெகுவாய் பணிந்து.

அதில், நீதிபதி அவளை பார்க்க, “வீடியோவும் இருந்துச்சு யுவர் ஹானர். ஆனா, கிராஷ் ஆகிடுச்சு. இந்த ஒரு போட்டோ மட்டும் தான் மிஞ்சுச்சு. அது மட்டும் இல்ல, போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட நேரத்தின் படி, இந்த புகைப்படத்தில் இருக்கும் இடமான நூலகத்தில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு, மிஸ்டர் ஜிஷ்ணு தர்மனின் கார் சென்றதற்கான சாட்சி இந்த ஃபுட் ஏஜ் – ல இருக்கு யுவர் ஹானர்.” என்று அதனையும் கொடுத்தாள்.

“மன்னிக்கணும் யுவர் ஹானர். ஆனா, அறிவழகனோட பாடி கிடைச்சது, காட்டுக்குள்ள. அதுக்கும் நான் லைப்ரரில இருந்து கட்சி ஆபிஸ் போனதுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” தெனாவெட்டாக வசுந்தராவை பார்த்தான்.

“யுவர் ஹானர், குற்றவாளி கூண்டில் நின்றிருக்கும் எம். எல். ஏ ஜிஷ்ணு தர்மனின் மனதில் தான் வக்கீல் என்ற நினைப்பு போல. அவருடைய வக்கீலை வாதம் செய்ய வைக்காமல், அவரே வாதிடுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும், நான் குறிப்பிட்டது, அறிவழகன் பாடி கிடைத்த நேரத்தை அல்ல. அதாவது அறிவழகன் இறந்தது, மாலை 5 மணிக்கு. அவர் இறந்து, இரண்டு மணி நேரம் கழித்தே அவரின் உடல் காவலர்களுக்கு கிடைத்தது.” என்றாள் அழுத்தத்துடன்.

அதற்கான தாள்களை பிரட்டி பிரட்டி பார்த்த நீதிபதி, “வசுந்தரா, நீங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை சரியா பார்க்கலைன்னு நினைக்கிறன். அறிவழகன் இறந்த நேரம் சரியாக 7.30 என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றார் குழப்பமாக.

வசுந்தராவிற்கும் ஒரு நொடி திக்கென தான் இருந்தது. அதே பார்வையுடன் ஜிஷ்ணுவை காண, அவளோ அவள் மட்டும் அறியும் மர்ம புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

அவளுக்குள் கோபம் கொப்பளிக்க, அவனை முறைத்தபடி நிற்க, அதற்குள் குமரனிடம் கௌசிக் சில விவரங்களை கொடுக்க, அவனோ எழுந்து “யுவர் ஹானர், அது மட்டும் இல்ல. எதிர்க்கட்சி தரப்பு வக்கீல் கூறியது போல, அங்கு சிசிடிவி எதுவும் இல்லை. இன்று காலை தான், அவசர அவசரமாக அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், அந்த புகைப்படமும் வெறும் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதற்காக சான்று இதோ.” என்று சில தாள்களை கொடுக்க, அதனை புருவம் சுருக்கி பார்த்த நீதிபதி,

“வசுந்தரா என்ன இது? நீங்க கொடுத்த தகவல் எல்லாமே குழப்பமா இருக்கு. சரியான ஆதாரம் இல்லைன்னா, இதை கொலை கேசா எடுக்க முடியாதுன்னு, டாப் குற்ற வக்கீலான உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லன்னு நினைக்கிறேன்.” என்றவர்,

சரியான ஆதாரம் இல்லாததால், ஜிஷ்ணு தர்மனை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும், பொய்யான ஆதாரங்களை கொண்டு நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்ததற்காக வசுந்தராவை கண்டித்த நீதிபதி எழுந்து சென்று விட, வசுந்தரா கோபத்தின் உச்சியில் திளைத்தாள்.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்.
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் என்னையே சேரும்…

என தனக்கு தானே பெருமையாக பாடிக்கொண்டவன், வசுந்தராவையே கிண்டலாக பார்த்து நகைத்தபடி வெளியில் செல்ல, குமரனோ, “செம்ம மாப்ள. நானே கொஞ்ச நேரத்துல ஜெர்க் ஆகிட்டேன். எப்படிடா, இவ்ளோ வேலை பார்த்த.” என்றான் குதூகலமாக.

“நீ என்னைக்கு ஜெர்க் ஆகாம இருந்துருக்க. உன்னை வக்கீலா வைச்சுட்டு நான் இன்னும் உள்ள போகாம இருக்குறது தான் பெரிய ஆச்சர்யம்…” என்று சலித்தவனை, எதிரில் வந்த கட்சி ஆள் ஒருவன்,

“வணக்கம் ஜீ… இந்த மாதிரி சின்ன கேசுக்கு எல்லாம் நீங்க ஏன் கோர்ட்டுக்கு வந்துட்டு இருக்கீங்க. நாங்க பாத்துப்போம்ல…” என்று கும்பிடு போட்டான்.

“கொலை பண்ணும் போது சுத்தி யாராவது இருக்காங்களான்னு, நீங்க ஒழுங்கா பாத்துருந்தா நான் ஏன் இங்க வர போறேன்…”  என எரிமலையாக நின்றவனை, தலையை சொறிந்த படி பார்த்தவன்,

“ஜீ நீங்க மட்டும் ‘ம்ம்’ ன்னு சொல்லிருந்தா உங்களுக்கு எதிரா கேஸ் போட்ட பொம்பளையை போட்டு தள்ளிருப்பேன். ஆளுங்க இப்ப கூட ரெடி தான். இங்கேயே வச்சு போடட்டா…” என்றான் விசுவாசமாக.

அதற்கு ஜிஷ்ணு பதில் கூறும் முன்பே, வசுந்தராவின் கம்பீரமான குரல் அருகில் ஒலித்தது.

“இங்க வச்சே மர்டர் பண்ண போறீங்களா? வெரி நைஸ். எங்க பண்ணுங்க பாப்போம்…” திமிராக ஜிஷ்ணுவை கண்டவளை, அவனும் அடக்கப்பட்ட கோபத்துடன் வெறித்தான்.

“என்ன மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன் உங்க ஆளுக்கு ‘ம்ம்’ ன்னு சொல்லுங்க. வெயிட் பண்றாருல பாவம்…” என உச்சுக்கொட்டி பாவம் போல அவனை கேலி செய்திட,

அவளின் கேலிதனில் விழி உயர்த்தியவன், “ம்ம்…” என்றான் நக்கல் நகையுடன்.

அதில் அவன் கத்தியை எடுத்து அவளை நோக்கி குத்த வர, ஒரு நொடி அவள் முகத்தில் அதிர்வு படர்ந்தாலும்
மறுநொடியே லாவகமாக அக்கத்தியை தடுத்து அந்த அடியாளை ஓங்கி எத்தியதில் அவன் நான்கு அடி தள்ளி சென்று விழுந்தான்.

அவளோ கர்ஜனையாக, “கருப்பு கோர்ட்டு போட்ட பொண்ணு தான… ஈசியா தூக்கிடலாம்ன்னு நினைச்சீங்களாடா? உங்க அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் இந்த தாராகிட்ட காட்டாதீங்க…” என அடியாளை மிரட்டுவது போல ஜிஷ்ணுவை தெனாவெட்டாக ஏறிட்டவள்,

“இந்த கேஸ்ல, நான் ஜெய்ப்பேன் தர்மா. உண்மையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தி, உனக்கு எதிரா ஆதாரம் இல்லைன்னா கூட பொய்யா கூட உன்ன ஃப்ரேம் பண்ணி உள்ள தள்ளி தூக்கு தண்டனை வாங்கி குடுப்பேன். அதுவரை என் சுண்டு விரலை கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாது…” என்றவள் விழி இடுங்க ரௌத்திரத்தை கக்கினாள்.

இதனைக் கேட்ட ஜிஷ்ணுவோ, “ஹ ஹ ஹ ஹா ஹா…” என வாய் விட்டே சிரித்து விட்டு,

“வக்கீலே, இல்லாத சிசிடிவியை நீ இருக்குன்னு சொன்ன மாதிரி, அதே சிசிடிவியை நீ தான் வைச்சன்னு, நானும் பொய்யா பில்லு காட்டுவேன். உனக்கு சட்டத்துல இருக்குற ஓட்டை தெரியும். எனக்கு அதை எப்படி உருவாக்கணும்ன்னு தெரியும்.” என கண்ணிமைக்கும் நேரத்தில், அவள் கரத்திலிருந்த கத்தியை அவன் கரங்களில் மாற்றி இருந்தான்.

கூடவே, அவளை தன் கைவளைவுக்குள் சுற்றி வளைத்து, கத்தியை நேராக அவளின் வயிற்றுக்கு அருகில் வைத்து அழுத்தினான்.

“இப்போ கூட சத்தமில்லாம குத்தி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்டி. ஆனா என்கிட்டயே சவால் விடுறீல சவாலு. பாப்போம்டி என் வெள்ளை சட்டை ஜெய்க்குதா இல்ல உன் கருப்பு கோர்ட்டு ஜெய்க்குதான்னு…” அமைதியாகவே சீறியவன், அவள் அணிந்த வக்கீல் கோர்ட்டை கோடு கிழித்தான்.

அப்போதும் சிறு அதிர்வை தவிர அவள் விழிகளில் பயம் இல்லை. அவனிடம் இருந்து விடுபட முயன்றவளுக்கு தோல்வியே கிட்ட, அவன் தான், அவளை பார்த்தபடியே அவளின் சுண்டு விரலில் லேசாக கீறினான்.

“சுண்டு விரலை கூட தொட முடியாதோ இப்போ ரத்தமே வர வச்சுட்டேன்…” என்ற ஆணவம் அவனிடம் தெறிக்க வெற்றிப் புன்னகை சிந்தினான்.

வலியில் கையைப் பிடித்துக் கொண்டு அவனை தீயாக முறைத்தபடி நகர போனவள், அவன் கண்ணிமைக்கும் நேரம், அவன் கையில் இருந்த கத்தியைக் கொண்டே அவனின் மணிக்கட்டை பதம் பார்த்தாள்.

“ஏய்…” என ஜிஷ்ணு பல்லைக் கடிக்க, அவளோ அவனிடம் இருந்து கடன் வாங்கிய வெற்றிப் புன்னகையை உதட்டில் ஏற்றி,

“இந்த வக்கீல் வசுந்தராகிட்ட மோதாதீங்க அரசியல்வாதி அடியாளே… எனக்கு சுண்டு விரல் போனா உனக்கு கையே போகணும்…” என கர்வத்துடன் நிற்க, ஜிஷ்ணு அவள் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.

“எனக்கு கை போனா உனக்கு உயிரே போகணும்டி…” என்று வெறுப்பை உமிழ்ந்தவனை அவளும் வெறுப்புடன் நோக்கினாள்.

தீயோ தென்றலோ அவள்(ன்)…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
57
+1
92
+1
9
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment