Loading

பேரதிர்ச்சி என்றால் என்னவென்று இப்போது தான் உணர்கிறாள் சஹஸ்ரா. கழுத்தில் மாங்கல்யம் ஏறி முழுதாய் இருபது நாள் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி ஒரு விபத்தா? நினைக்க நினைக்க கண்ணீர் அரும்பியது அவளுக்கு.

“மிஸஸ். தீரன் ஆத்ரேயன்.” தாதியர் குரல் கொடுத்ததும், கண்ணீரை துடைத்தபடி இருக்கையில் இருந்து எழுந்த சஹஸ்ரா, “நான் தான். அவர் கண்ணு முழுச்சுட்டாரா?” கேட்கும் போதே தொண்டை அடைத்தது.

“லேசா கண்ணை சிமிட்டினாரு மேடம். இன்னும் நினைவு திரும்பல. எதுக்கும் நீங்க ஒரு தடவை பேசி பாருங்க. உங்க குரலுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவும் வாய்ப்பு இருக்கு…” தாதியர் கூறியதும் செய்வதறியாமல் கையை பிசைந்தாள்.

அவனிடம் சென்று என்ன பேசுவது என்று அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை. அப்படியே நின்றவளை தாதியரின் பார்வை வித்தியாசமாக மொய்த்ததில், மேலும் அங்கு நிற்க இயலாமல் தீரனைக் காண சென்றாள்.

தலையில் பெரிய கட்டிட்டு, சுயநினைவின்றி படுத்திருந்தான் தீரன். அவனை அந்நிலையில் கண்டதும், கண்கள் மழையை உருவாக்கிட, முயன்று கட்டுப்படுத்தியவள்,

“தீரன்… நான் பேசுறது கேட்குதா?” என அவன் அருகில் சென்று மெல்ல பேசினாள்.

அவனிடம் எவ்வித அசைவும் இல்லை. “நா… நான்… உங்க வைஃப். என் குரல் உங்களுக்கு தெரியுதா?” மீண்டும் கேட்டவளுக்கு, ஆயாசமாக இருந்தது.

அலுவலகத்தில் தேனீ போல சுறுசுறுப்பாக சுற்றி வருபவன். இப்போது இப்படி படுத்து இருக்கிறானே என எண்ணும் போதே நெஞ்சம் பதறியது.

அதில், முதன் முதலில் அவனைப் பார்த்த நாள் நினைவில் உருவெடுத்தது.

“சஹா… நீ தேவை இல்லாம ரொம்ப யோசிக்கிற. ஆத்ரேயன் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் பத்தி பிசினெஸ் துறைல இருக்குற எல்லாருக்குமே நல்லா தெரியும். அவரு கூட நீ டை – அப் வச்சுக்குறது உனக்கு நல்லது தான்.” தன் தோழி சஹஸ்ராவின் குழம்பிய மனதைத் தேற்றினாள் அவளின் உற்ற தோழியான தேவிகா.

“அது சரி தேவ். ஆனா, எனக்கு தான் மனசு இன்னும் தெளிவாகல. அப்பா போனதுக்கு அப்பறம், என்னால இந்த பிசினஸை தனியா ரன் பண்ண முடியல. அதுக்காக ரெண்டு பேர்கிட்ட டை – அப் போட்டு, அப்பறம் அவங்க நடைமுறை பிடிக்காம, எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டேன்.

இப்போ, மறுபடியும் ‘டை – அப்’ன்னா ரொம்ப யோசனையா இருக்கு. எனக்கு என் அப்பாவோட தொழில்ல சின்ன தப்பு கூட நடக்க கூடாது தேவ். அதுக்காக தான் நான் இவ்ளோ யோசிக்கிறேன்.” என பரிதாபகமாக தோழியைக் கண்டாள்.

சஹஸ்ராவின் தந்தை விஸ்வநாதன், பெரிய தொழிலதிபர். அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம்.

சஹஸ்ரா கட்டட உள்துறை வடிவமைப்பு படிப்பை முடித்ததும், அவளுக்காகவே ஆரம்பித்தது தான் இந்த சஹா இன்டீரியர் கம்பெனி. அதற்கும் மகளுக்கு பெரியதாக வேலை வைக்காமல், அவரே அனைத்தையும் திறம்பட முடித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். சஹஸ்ராவின் திறமையும் ஒரு காரணம் என்றாலும், முழுமையாய் இதனை பொறுப்பேற்றது விஸ்வநாதன் தான்.

ஆனால், எலி சுரண்டுவது போல அவரின் சொத்துக்களும் பணமும், வேறொரு வழியில் காட்டாற்று வெள்ளமாய் சரிந்து கொண்டிருந்ததை அவர் அறியவில்லை.

அதற்கு முழு முதற்காரணம், விஸ்வநாதனின் மனைவி சுலோச்சனாவும், அவரின் மூத்த மகள் வினோதினியும் தான். அளவுக்கு அதிகமான பணத்தை அளவுக்கு அதிகமாக செலவு செய்ய, அவர்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை.

நம் மனைவி மக்கள் தானே, என அசட்டையாக விட்ட விஸ்வநாதனுக்கு உடல்நிலை ஒத்துழைக்காமல் போனதில் பெரிய அடி விழுந்தது. இத்தனை வருடமாக, ஒற்றை ஆளாய் அனைத்தையும் கட்டி ஆண்டவர், அவருக்குப் பின், மகள்களுக்கு தொழிலைப் பற்றி போதிக்க தவறி விட்டார். சஹஸ்ராவிற்கும் அவள் படிப்பு சம்பந்தப்பட்ட தொழிலை தவிர மற்றவை பற்றி பெரிய ஞானம் இல்லை.

அவர் உடல் நிலை சரிய தொடங்கும் போதே, விழ தயாராக இருந்த தொழில்கள் அனைத்தும் படுத்து விட, ஒவ்வொன்றாய் விற்க நேரிட்டது.

அப்போதும் வினோதினியின் பண விரயம் குறையவில்லை. அப்படியே இருந்து பழக்கப்பட்டவளாகிற்றே. அவளால் எப்படி, திடீரென இயல்பு வாழ்க்கை வாழ இயலும்?

சுலோச்சனாவிற்கும் இதே நிலை தான்.

சஹஸ்ராவிற்கு தான் தந்தையின் உடல் நிலை சவாலைக் கொடுத்தது. அவளுக்கு தாய், தமக்கையை பற்றி நன்கு தெரியும் தான். பெரியதாக எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர்கள்.

அவளுக்கு அவளைப் பற்றி கூட பயமில்லை. தனக்கு அடுத்ததாக இருக்கும் சிறிய தங்கை சவிதாவை பற்றிய பயமே அதிகம் இருந்தது. இன்னும் வயது கூட வராத 13 வயது சிறுமி. தந்தை மீதும் தமக்கை மீதும் அத்தனை பாசம் வைத்திருப்பவள்.

சஹஸ்ராவிற்கும் தங்கை என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால், சூழ்நிலையை புரிந்து கொள்ளாத வீட்டினரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது எனக் குழம்பினாள். இதே குழப்ப மனநிலையுடன் ஒரு நாள் விஸ்வநாதனும் காலமாக, அவரின் தொழில் ஒவ்வொன்றாக அடிபட்டது.

முதலில் தந்தையின் இழப்பில், தோய்ந்தவள், பின் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவில் கலங்கினாள்.

“அம்மா… அப்பாவோட பிஸினெஸ்ல நிறைய நெருக்கடி இருக்கு. நம்ம கொஞ்சம் சிக்கனமா இருந்து சேர்ந்து அதை சரி செய்யலாம். அக்காவும் ஹெல்ப் பண்ணுனா, கண்டிப்பா நம்ம மறுபடியும் பழைய நிலைக்கு வரலாம். அப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்சது, இப்படி எல்லாமே வீணா போறதை பார்க்க முடியல…” கிட்ட தட்ட கெஞ்சினாள் சிறியவள்.

அதனை காதில் வாங்காத சுலோச்சனா, “என்ன பேசுற சஹா? நமக்கு பிசினெஸ் பத்தி என்ன தெரியும்? வினோவுக்கு கல்யாணம் பண்றதா இல்ல, அவளை பணம் சம்பாரிக்க அனுப்புறதா…? இதெல்லாம் கேட்கவே நல்லா இல்லை. நம்ம வேலை பார்த்து சம்பாரிக்கிறோம்ன்னு வெளில தெரிஞ்சாலே, நம்ம மானம் போகும். எனக்கு நீ பிசினெஸ பாத்துக்குறதே பிடிக்கல. இதுல அவளை வேற இழுக்கிற” என்று கடிந்தார்.

“நம்ம பிசினஸை நம்ம பாக்குறோம். இதுல யார் என்ன சொல்ல போறா? அக்கா நீயாவது புருஞ்சுக்கோ” என்றவள், வினோதினியின் உதவியை நாடினாள்.

அவளோ, எதையும் கண்டுகொள்ளாமல், “இங்க பாரு, அப்பா சேர்த்து வச்சத வித்து சாப்பிட்டாலே, இன்னும் ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம். அப்படி இருக்கும் போது அதெல்லாம் சேர்த்து வச்சு என்ன செய்ய போறோம்?” என்று தோளைக் குலுக்கியவள், அவரின் சொத்துக்களை விற்கவும் ஏற்பாடு செய்ததில் சஹஸ்ரா திகைத்தாள்.

ஆனால், வினோதினி எண்ணியது போல, ஏழு தலைமுறைக்கு சொத்து எல்லாம் இருக்கவில்லை. கடனே இருந்தது. விற்ற சொத்துக்களில் முக்கால்வாசி அந்த அந்த தொழிலுக்கு அவர் வாங்கிய கடனில் கழிந்து விட, சிறிய அளவிலான தொகையே அவர்களுக்கு எஞ்சியது. அதையும் தாம் தூம் என செலவு செய்து சில நாட்களிலேயே கரைத்து விட்டனர். இதில் அவ்வப்பொழுது வினோதினிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் வேறு அரங்கேறியது.

சொல்வதை புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசி பயனில்லை என்ற எண்ணத்தில் அவர்கள் போக்கில் விட்டு விட்ட சஹஸ்ரா, தங்கையை மட்டும் கவனித்துக் கொண்டாள்.

நல்லவேளையாக, அவளுக்காக விஸ்வநாதன் உருவாக்கிய தொழிலில் கடன் ஏதும் இல்லை. அதே போல அந்த தொழிலும் அவள் பெயரில் இருந்தது. ஆனால், அதனை திறம்பட நடத்த தான் தடுமாறினாள். இடையில் ஏற்பட்ட அதிர்ச்சியில், தொழிலில் கவனத்தை செலுத்தாமல் விட்டதில், பல காண்ட்ராக்ட் கை மாறி இருக்க, மீண்டும் அதனைப் பெறும் வழி தெரியாமல் குழம்பினாள்.

ஒரு கட்டத்தில் தனியாக தொழிலை நடத்த இயலாது எனப் புரிந்தவள், பார்ட்னராக தன்னுடன் வேலை செய்ய, ஆட்களை தேடி சோர்ந்தாள்.

அப்படியே சில அலுவலகத்துடன் இணைந்தாலும், அவர்களின் நடவடிக்கை பிடித்தமானதாக இல்லை.

இப்போதோ, ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் இந்த டை அப் வாய்ப்பை உபயோகப்படுத்துவதா வேண்டாமா என்ற பெரும் தயக்கம் அவளை ஆட்டு வித்தது.

அப்போது தான் தேவிகா, “நீ வேணும்ன்னா ஒரு தடவை தீரன் சார் கிட்ட பேசி பாரேன் சஹா. அவரு ரொம்ப டீசண்ட்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

ஆனா, அவருக்கு ஒரு தம்பி இருக்காரு. அவர்கிட்ட கொஞ்சம் கவனமா நடந்துக்கோ. நீ டை அப் செஞ்சாலும், அவரோட தம்பி இந்த பக்கம் வரமாட்டார் தான். நீ தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணு சஹா” என்று ஊக்குவித்தாள்.

இதேதுடா தம்பின்னு இன்னொரு கலகம் என்று நொந்தாலும், தீரனை சந்திக்க ஆயத்தமானாள்.

அவனைக் காண, அனுமதி கேட்கும் போது தான் தீரனின் செகரட்டரி மூலம், அவனே சஹஸ்ராவின் அலுவலகம் வந்து காண்பதாக கூற, அவளுக்கு திகைப்பு தான்.

‘அவ்ளோ பெரிய ஆளு, நம்மளை தேடி வர்றானா?’ என்ற எண்ணம் தோன்றினாலும், மறுகணமே,

‘ரொம்ப யோசிக்காத… அவன் இங்க வர்றது ஆபிஸோட நிலவரத்தை தெரிஞ்சுக்க தான். இங்க எதுவும் பெர்ஃபக்ட் – ஆ இல்லைன்னா, அப்பறம் டை – அப் கூட இருக்காது. இதையும் இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.’ என தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

அடுத்த இரு நாட்களில் தீரன் அவளின் அலுவலகத்திற்கு வருவதாக இருக்க, சஹஸ்ரா பம்பரமாக சுழன்று அத்தனை கோப்புகளையும் சரி பார்த்து டேபிளின் மீது வைத்தாள். இதுவரை செய்த ப்ராஜெக்டின் விவரங்களையும் கோப்பாக தயாரித்தாள்.

“தேவ் எல்லாம் ஓகே தான? நம்ம ஸ்டாஃப் எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டியா?” என்றவளின் குரலில் பதற்றம் உயர,

“ரிலாக்ஸ் சஹா. ஆல் செட்… ஏன் இவ்ளோ பதட்டம்?” எனக் கேட்டவள் நீரை எடுத்துக் கொடுத்தாள்.

அதனை வாங்கிபடியே, “எனக்கு இந்த டை – அப் நல்ல படியா முடியணும்ன்ற பயத்தை விட, வர்ற ஆள் டீசண்ட் – ஆ இருக்கணும்ன்ற பயம் தான் அதிகமா இருக்கு தேவ். அட்லீஸ்ட் என் அப்பா எனக்காக உருவாக்குன இதையாவது நான் காப்பாத்தணும்.” எனத் தவிப்புடன் கூற, தேவிகா நமுட்டு நகை புரிந்தாள்.

அவளை முறைத்த சஹஸ்ரா, “எதுக்குடி சிரிக்கிற?” எனக் கேட்க,

“எனக்கு என்னமோ, அவரு உன்னை பொண்ணு பார்க்க வர்ற மாதிரியும், அதுக்கு நீ டென்ஷனா இருக்குற மாதிரியுமே ஃபீல் ஆகுது…” என நக்கலடிக்க, சஹஸ்ரா அவளை அடித்தாள்.

அங்கு சிரிப்பலை அரங்கேற, இருவருக்கும் தெரியவில்லை, இந்த சந்திப்பு சஹஸ்ராவின் வாழ்வை முற்றிலும் திசை மாற்றப் போகிறது என.

இதோ அதோவென தீரனை நேருக்கு நேர் சந்திக்கும் நாளும் வந்தது.

மகிழுந்தில் இருந்து, சஹா இன்டீரியர் டிசைனர் என்ற பெயர் பலகையையும், அக்கட்டிடத்தையும் உள்வாங்கியபடி உள்ளே நுழைந்தான் தீரன் ஆத்ரேயன்.

மரியாதை நிமித்தம், சஹஸ்ரா பூங்கொத்தை நீட்டி அவனை வரவேற்க, சின்ன சிரிப்புடன் அதனை பெற்றுக் கொண்டவன், “மிஸ் சஹஸ்ரா?” எனக் கேள்வியாய் கேட்க,

“எஸ் சார். ப்ளீஸ் கம் இன்…” என்று அவள் அறையை நோக்கி நடந்தாள்.

அவனது செகரட்டரியான நிக்கோலஸ் தான், “பாஸ்… இது ஏதோ சின்ன கம்பெனியா இருக்கு. இங்கலாம் டை – அப் வேணுமா என்ன?” என தீரனின் காதை கடிக்க, அது தேவிகாவின் காதிலும் விழுந்ததில், திரும்பி அந்த நிக்கோலஸை முறைத்து விட்டு நடக்க, அவன் தான் ‘தீப்பார்வையா இருக்கே’ என மிரண்டான்.

நடப்பதை கண்டுகொள்ளாதவன் போல, சஹஸ்ராவின் அறைக்குள் நுழைந்த தீரன், பார்வையால் அனைத்தையும் அளவெடுத்தான் அவளையும் சேர்த்து. ஆனால், அது உறுத்தாத பார்வை தான். அதனால், அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளாத சஹஸ்ரா, அவனுக்கு கம்பெனி பற்றிய தகவல்களை எடுத்து உரைக்க, பாதியிலேயே கையைக் காட்டி தடுத்து நிறுத்தினான்.

அதில் புருவம் சுருக்கி அவள் பார்க்க, தொண்டையை செருமியவன்,

“எனக்கு இந்த விளக்கம் தேவை இல்ல மிஸ் சஹஸ்ரா. எனக்கு விஸ்வநாதன் சார ரொம்ப நல்லா தெரியும். பிசினெஸ் ஃபீல்டுல, என்ன மாதிரி யங்ஸ்டர்ஸ்க்கு நல்ல ரோல் மாடல் உங்க அப்பா. இன்ஃபேக்ட், விலைக்கு வந்த உங்க அப்பாவோட பிசினெஸ்ல பாதியை நான் தான் வாங்கியிருக்கேன். இப்ப நான் இங்க வந்தது கூட, விஸ்வநாதன் சார் மேல இருக்குற மரியாதைல தான்.” என்னும் போதே,

சஹஸ்ரா வேகமாக, “ஆனா, இதை நான் விக்கல சார்” என்றாள் சட்டென.

அதற்கு மெலிதாக முறுவலித்தவன், “நானும் அப்படி சொல்லலையே! எனக்கு உங்க அப்பா கூட பார்ட்னரா ஒர்க் பண்ணனும்ன்னு ஆசை. ஆனா, அவரோட தொழில் உலகத்துல அவரு யாரையுமே உள்ள விடல. சோ, அட்லீஸ்ட் அவர் பொண்ணு கூடவாவது ஒண்ணா ஒர்க் பண்ணணும்ன்னு எனக்கு ஒரு தாட். அதான், இங்க வந்தேன்.” என்று கூறி முடித்தவனை விழி விரித்துப் பார்த்தாள் பாவை.

“கேட்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு சார்…” என குதூகலித்தவளுக்கு, அவள் தந்தை ஏன் அவனை பார்ட்னராக்க சம்மதிக்கவில்லை என்ற காரணத்தை அறிய மறந்து விட்டாள்.

அதற்கும் மென்னகை ஒன்றைக் கொடுத்தவன், “என்னால, முழுசா இந்த ஆபிஸை எடுத்து நடத்த முடியாது. பட், உங்களை கைட் பண்றேன். பண ரீதியாவும் இந்த பிசினஸை டெவலப் பண்ணலாம். ஷேரிங் 50/50 தான். கொஞ்ச நாளைக்கு, இங்க தினமும் வந்து, ஆர்ட்ர்ஸை எடுத்துக் கொடுக்குறேன். அதை திறமையா செஞ்சு முடிக்கிறது உங்க வேலை. சோ! ஆர் யூ ஓகே வித் திஸ்?” எனப் புருவம் உயர்த்திக் கேட்க, அதன் பிறகு மறுக்க அவளுக்கு என்ன பைத்தியமா!

உடனே, தலையாட்டி விட்டாள்.

“எனக்கு ஓகே சார்…” என்றவளை நோக்கி, கண்ணோரம் சுருங்க சிரித்தவன், “இப்ப நம்ம பார்ட்னர் மிஸ் சஹஸ்ரா. சோ கால் மீ தீரன்.” எனக் கூறிட, “நீங்களும் என்னை சஹான்னே கூப்பிடலாம்.” என்றாள் அவளும்.

“சியூர்!” என நெற்றியில் விழுந்த கேசத்தை பின்னால் கோதி விட்டவனின் செய்கை, இப்போதும் அவள் மனதில் படமாக விரிய, மெல்ல தீரனிடம் அசைவு தெரிந்தது.

அதில், அவன் முகம் பார்க்க, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நொடி, அவன் கண் விழித்ததை நம்ப இயலாமல் உறைந்தவள், “நீங்க எந்திரிச்சுட்டீங்களா? தேங்க் காட்! நான் டாக்டரை கூப்புடுறேன்.” என எழுந்திட, தீரனின் கரம் அவள் விரலைப் பிடித்தது.

கண்ணில் நீர் தேங்க, அவனை என்னவெனப் பார்க்க, அவனோ “யாரு நீ? எதுக்கு என் முன்னாடி உட்காந்து அழுதுட்டு இருக்க?” எனக் கேட்டதில், தூக்கி வாரிப் போட அசையாமல் நின்றிருந்தாள்.

யாரோ அவன்(ள்)
மேகா!

ஹாய் டியர்ஸ், ப்ரதிலிபி நடத்துற ஒரு வித்தியாசமான காதல் கதை சீசன் 2 போட்டிக்காக இந்த கதையை எழுதுறேன். போட்டி தேதிக்குள்ள முடிப்பேனான்னு தெரியல. ஆனாலும் ட்ரை பண்றேன். திங்கள் டு வெள்ளி யூடி வரும் டியர்ஸ். படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க. தேங்க் யூ சோ மச் பார் யுவர் சப்போர்ட்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
81
+1
104
+1
9
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments