Loading

ஹாய் டியர் பிரெண்ட்ஸ்… அடுத்த கதையோட வந்துட்டேன்🤩 கொஞ்சம் வித்தியாசமான ஜர்னர். ஃபாண்டசி, காதல், காமெடி, நட்புன்னு எல்லாம் கலந்த கதை.
வாரத்துக்கு ரெண்டு அப்டேட் போடுறேன் drs.  இடைல போட முடிஞ்சாலும் கண்டிப்பா போடுறேன். சோ குறிப்பிட்ட டைமிங் சொல்ல முடியல. சொன்னா அந்த டைம் குள்ள kudukkavum விட மாட்டேங்குறான் என் புள்ள 🤣

… இப்ப நாம கதைக்குள்ள போகலாம்… ஹேப்பி ரீடிங்😍😍😍 thank you soooo much all for ur lovable.suport

——————

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்…

கடந்த அரை மணிநேரமாக குளியலறைக்குள் நீராடிக் கொண்டிருந்தாள் விஹானா. தன்னை ஒரு பாடகியாகவே பாவித்து, இத்துடன் பத்து பாடல்களை பாடி முடித்தவள், பதினொன்றாவது பாட்டினை சிரத்தையுடன் ஆரம்பித்தாள்.

அது, தண்ணீர் குழாய்க்கும் பொறுக்கவில்லை போலும். சட்டென தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“ச்சே… ஒரு கலையை வளர்க்க விடுறாங்களா?” என எரிச்சலுற்றவள், “ஷவி டார்லிங்…” எனத் தேனில் குழைத்த குரலுடன் இனிமையுடன் உத்ஷவியை அழைத்தாள்.

கையில், பேப்பரையும் பேனாவையும் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த உத்ஷவி, ஏற்கனவே அவளது பாடல்களால் உண்டான தலைவலியில், அவளது நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன எருமை?” வள்ளென்று கேட்டவளிடம்,

“தண்ணி வரல. மோட்டர் போட சொல்லுடி” எனக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தாள் விஹானா.

உத்ஷவி அவளைக் கடுமையாய் முறைத்து வைத்து, “ஹவுஸ் ஓனர், என்ன உன் அத்தை பையனாடி. சொன்னதும் கேட்குறதுக்கு… அந்த ஆளு மனசு வச்சா தான் மோட்டரே போடுவான். நீ குளிச்சு கிழிச்சது போதும். வெளில வா” என்றாள் முறைப்பாக.

விஹானாவோ, “என்னது வெளில வரவா? இன்னும் நான் மூணாவது தடவை சோப் போடவே இல்லையே.” என்று அதிர, உத்ஷவியும் சேர்ந்து அதிர்ந்தாள்.

“மூணாவது தடவை சோப் போட போறியா…” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், “மாசத்துக்கு உனக்கு சோப்பு வாங்கவே, தனியா திருடனும் போல.” என்றாள் நக்கலாக.

“கண்ணு வைக்காத டார்லிங். சின்ன வயசுல எங்க ஊரு ஆத்துக்குள்ள இறங்குனா குறைஞ்சது ஒரு மணி நேரம் குளிப்போம் தெரியுமா.” என ஊர்ப்பெருமையைக் கூற, “இங்க கூவம் தான் இருக்கு. அதுல இறங்கி குளிக்கிறியா?” என்று கடுப்பானாள் உத்ஷவி.

அதில் முகத்தை அஷ்டகோணலாக்கிய விஹானா, “மோட்டர் போட சொல்லு ஷவி ப்ளீஸ்.” என கெஞ்சலாகக் கேட்க,

“உங்க கூட, ரூமை ஷேர் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு எனக்கு இது தேவை தான்…” என நொந்தபடி, அறையை விட்டு வெளியில் வந்தவள், மீண்டும் நெஞ்சைப் பிடித்தாள்.

ஒரு வாரத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்திருந்த ஸ்நாக்ஸ், உணவுப் பொருட்களை எல்லாம், பொறுமையாக ரசித்து ருசித்து ஒரே நேரத்தில் காலி செய்து கொண்டிருந்தாள் அக்ஷிதா.

“அடியேய்…” என்ற உத்ஷவின் அதிர்வு சத்தம் கேட்டும், சிப்ஸ் பாக்கெட்டினுள் தலையை விட்டுக்கொண்டிருந்த அக்ஷிதா, ஸ்லோ மோஷனில் நிமிர்ந்து பார்த்து, “சொல்லு டார்ல்ஸ்” எனக் கேட்டதில், கொலைவெறியே வந்தது அவளுக்கு.

“என்னடி செஞ்சுட்டு இருக்க? இந்த ரேஞ்சுல தின்னா, உடம்பு பெருத்துடும். அப்பறம் எப்படி, யாருக்கும் தெரியாம, பூனை மாதிரி திருடுறது. யானை மாதிரி அசைஞ்சு அசைஞ்சு திருடி ஜெயில்ல களி திங்க வேண்டியது தான்…” என்றாள் சினத்துடன்.

“கவலைப்படாத ஷவி டார்ல்ஸ். நான் எவ்ளோ சாப்பிட்டாலும் குண்டாக மாட்டேன். இது வைரம் பாஞ்ச கட்ட.” என அவள் கன்னத்தை அவளே கிள்ளி முத்தம் கொடுத்துக் கொள்ள, “ஓ ஜீசஸ்!” என்று அங்கலாய்த்தாள் உத்ஷவி.

தண்ணீருக்காக காத்திருந்த விஹானா, வெறுத்துப்போய் துண்டை சுற்றிக்கொண்டு வெளியில் வந்து விட்டாள்.

“உன்னை மோட்டர் போட சொன்னா, இங்க நின்னு இவ கூட பேசிட்டு இருக்க. இன்னைக்கு குளிக்கிற மூடே போச்சு” என சலித்துக் கொண்ட விஹானாவின் தலையிலேயே நங்கென்று கொட்டினாள்.

“நீ குளிச்சே சாவடிக்கிற. இவ சாப்பிட்டே சாவடிக்கிறா. ஐயோ… உங்களை வச்சுக்கிட்டு நான் திருட வேற செய்யணுமா… இதுல பாஸ் வேற, உங்களை என் டீம்ன்னு சொல்லி தொலைஞ்சுட்டாரு” என்று வெகுவாய் கவலை கொள்ள, அவளை மற்ற இருவரும் முறைத்தனர்.

அக்ஷிதா தான், வீறு கொண்டு எழுந்து, “ஹலோ மேடம்… இதை நாங்களும் சொல்லணும். எங்களை சொல்றியே நீ செஞ்சு வச்ச வேலையை பார்த்தியா…?” எனக் கேட்டு விட்டு, அறைக்கு சென்றவள், உத்ஷவின் கைப்பையை எடுத்து வந்தாள்.

அதில் முழுக்க, விஹானா மற்றும் அக்ஷிதாவின் பொருட்களே இருந்தது. சிறு சிறு ரப்பர் பேண்ட், க்ளிப்ஸ், வாட்ச், கூலிங் க்ளாஸ், ஐ லைனர் என அனைத்தும் இருக்க, விஹானா, “அடிப்பாவி… என் ஐ லைனரை கூட விட்டு வைக்கலையா நீ?” என வாயில் கை வைத்தாள்.

‘என்ன சிம்ரன் இதெல்லாம்…’ என்ற ரீதியில் அக்ஷிதா முறைக்க, அசடு வழிந்து நின்ற உத்ஷவி தான், “நான் ரூம் ஷேர் பண்ணிக்க பிளான் பண்ணும் போதே என்ன சொன்னேன். எனக்கு பிடிச்ச பொருளை சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேட்காம எடுத்து வச்சுக்குற நல்ல பழக்கம் இருக்குன்னு சொன்னேனா இல்லையா?” என்றாள் மூக்கை சுருக்கி.

அதில் பொங்கிய சிரிப்பை அடக்கிய இருவரில் அக்ஷிதா, “அது ஓகே தான். அதுக்காக ரப்பர் பேண்டை கூடவா எடுத்து வைப்ப.” என்றாள் கேலியாக.

“எனக்கு தேவையோ தேவை இல்லையோ, ஆனா, திருடியே ஆகணும். என்னால அந்த அர்ஜ கண்ட்ரோல் பண்ண முடியல டார்ல்ஸ்.” எனப் பாவமான பாவத்துடன் உரைத்தவளுக்கு ‘க்ளெப்டோமேனியா’ என்ற டிஸார்டர் சிறு வயது முதலே உள்ளது.

திருட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், திருடி முடிக்கும் வரை அவளால் நிம்மதியாக இருக்க இயலாது. அதே நேரம், நினைத்ததை முடித்ததும் தான், மனதே நிம்மதியாகும். அதற்காக அவளுக்கு குற்ற உணர்ச்சி தோன்றியதே இல்லை.

‘எனக்கு திருடணும் அவ்ளோ தான்!’ இதனால் பல அவமானங்களை சந்தித்தாலும், மன ரீதியாக இது ஒரு மன கோளாறு என்று புரிந்து கொள்ளாமலேயே அவளது தாயாரும் மறைந்து விட, அவளோ திருட்டையே தனது தொழிலாக்கிக் கொண்டாள்.

அப்படி திருடும் போது, ஏற்படும் மகிழ்வுக்கு வார்த்தையே இருக்காது அவளுக்கு. அவளது மன உந்துதலுக்காக சில சிறு சிறு பொருட்களை திருடினாலும், அவளுக்கு எனக் கொடுக்கப்பட்ட ப்ராஜெக்ட்டை நிறுத்தி நிதானமாக ஸ்கெட்ச் போட்டு தூக்குவதில் அவளுக்கு நிகர் அவளே!

விஹானா தான், “திருட்டு வேலை பாக்குற எங்ககிட்ட இருந்தே திருடுற பார்த்தியா… நீ ஒரு ஜெம் டார்லிங்.” என்று கிண்டலடிக்க,

வெடுக்கென கைப்பையை வாங்கிய உத்ஷவி, “அப்படி கஷ்டமா இருந்தா, நீங்க முன்னாடி மாதிரி ஹாஸ்டல்லயே இருந்துக்கோங்க.” என்றாள் உர்ரென.

அதில் விளையாட்டை கை விட்டவர்கள், “என்ன ஷவி… சும்மா கிண்டல் தான பண்ணுனோம். உனக்கு என்ன திருடணுமோ திருடிக்கோ. நாங்க  கேட்க மாட்டோம். ஓகே வா” என சமாதான உடன்படிக்கைக்கு இறங்கினர்.

அக்ஷிதா, “இதுவரை யார் கூடவும் இப்படி ஒண்ணா இருந்ததே இல்லை தெரியுமா டார்ல்ஸ். தனியா இருந்து வெறுத்து போச்சு. யாரும் என் கூட ஸ்டே பண்ணவும் மாட்டாங்க.” என்று அலுத்துக் கொள்ள,

விஹானாவும், “எனக்கு மட்டும் என்னவாம்… இதுவரை ரூம்மேட்டா இருந்தா கூட யாரும் பேச மாட்டாங்க. நான் முன்னாடி இருந்த ஹாஸ்டல்ல திருட்டு வேலை பாக்குறேன்னு, என்னை அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க. இங்க அப்படி இல்ல, செய்ற வேலையை சொல்லியே நல்லா பேசலாம். ப்ரீயா பழகலாம். ரெண்டு பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்கன்னு, மனசுல ஒரு புது சந்தோஷம் கிடைச்சு இருக்கு டார்ல்ஸ். ஏன் உனக்கு அப்படி இல்லையா?” என வருத்தத்துடன் கேட்டாள்.

உத்ஷவி தான் இருவரையும் முறைத்து, “அப்படின்னு நான் சொன்னேனா. நானும் இதுவரை யார் கூடவும் தங்குனது இல்ல. உங்களை என் டீம்ன்னு பாஸ் சொன்னதும், எனக்கு பிரைவசி போன மாதிரி ஃபீல் வந்தது உண்மை தான். ஆனா, இப்போ உண்மையாவே அந்த மாதிரி தோணவே இல்லை. யூ போத் ஆர் கியூட்டி ப்பை.” என்றாள் சிறு புன்னகையுடன்.

அதில் அவர்கள் முகத்திலும் மலர்வு கண்டதில், அவளே அறியாமல் ஒரு நிம்மதி பரவ, “சரி, நீ சிப்ஸை கன்டினியூ பண்ணு” என்று அக்ஷிதாவிடம் கூறிவிட்டு, “நான் மோட்டர் போட்டுட்டு வரேன். நீ உன் குளியலை ஸ்டார்ட்” பண்ணு என்று விஹானாவிடமும் கண்ணடித்து விட்டு சென்றாள்.

இவர்களின் தோழமை உறவு தொடங்கி வெறும் மூன்று மாதங்கள் தான் ஆகிறது என்றால், அவர்களால் கூட நம்ப இயலாது.

ஒரே ஆர்கனைசேஷனில் ஒரு ப்ராஜெக்டின் மூலம் இணைந்தவர்கள், இப்போது இணை பிரியா தோழிகளாக மாறி விட்டனர்.

எப்போதும் இது தொடருமா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும், இந்த உறவு பிடித்து இருந்தது.

——-

சுருள் சுருளாய் புகை மண்டலமாகக் காட்சியளித்தது அந்த பிரம்மாண்ட அறை. தரையெங்கும் சிகரெட் தூள்கள். மெத்தையெங்கும் துணிகள் பரவிக்கிடந்தது. தலை வாரிய சீப்பில் சிக்கி இருந்த முடியைக் கூட எடுத்துப் போட, அதனுடைய எஜமானனுக்கு மனமில்லை.

கண்கள் இரத்த சிவப்பாகி, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. ஜோஷித் அவ்தேஷ்!

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வெற்று பங்களாவில் வாசம் செய்வது என்ற எரிச்சலுடன், சுவற்றில் ஆளுயர அளவில் மாட்டப்பட்டிருந்தப் புகைப்படத்தை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.

அவனுடன் இரு ஆடவர்கள் முகத்தில் புன்னகை ததும்ப நின்றிருந்தனர்.

“யூ ப்ளடி பிட்ச்…” என வார்த்தைகளை கடித்துத் துப்பியவன், அங்கு இருந்த மலர் குவளை கொண்டு, நொடி நேரத்தில் புகைப்படத்தை உடைத்து நொறுக்கி இருந்தான்.

அந்நேரம், அவனது அலைபேசி அழைக்க, எதிர்முனையில் மேனேஜர் சுந்தரம் தான் பேசினார்.

“சார், இன்னைக்கு 10 மணிக்கு சஜித் சார் மீட்டிங்க்கு வர்றாரு. 11 மணிக்கு ஸ்வரூப் சார் வர்றாரு. நீங்க எப்ப வர்றீங்கன்னு சொன்னா…” என முடிக்காமல் நிறுத்திட,

“ஓஹோ, அவனுங்ககிட்ட டைமிங் கேட்டுட்டு கடைசியா போனா போகுதுன்னு எனக்கு போன் பண்றீங்களா?” என்று பல்லைக்கடித்தான்.

அதில் சுந்தரம் பதறி இருக்க வேண்டும். “ஐயோ இல்லை சார். காலைல முதல்ல உங்களுக்கு தான் போன் பண்ணுனேன். நீங்க எடுக்கல. இன்னிக்கு முக்கியமான கிளையண்ட் மீட்டிங் சார். மூணு பேரும் ஒண்ணா மீட்டிங் அட்டென்ட் பண்ணுனா, பிரயோஜனமா இருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா, மத்த ரெண்டு சாரும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க உங்களோட ஃப்ளெக்சிபில் டைம் சொல்லுங்க சார். நான் பாத்துக்குறேன்” என்றார் வெகு பணிவாய்.

“நான் 11 மணிக்கு தான் மீட்டிங்க்கு வருவேன். ஆனா, அப்போ அவன் இருக்க கூடாது. அவன் டைமிங்கை மாத்த சொல்லு.” என்றான் உறுமலாக.

அவரோ தடுமாறி, “சார்… ஆனா ஸ்வரூப் சார் ஒத்துக்கணுமே…” என்றதில், “அது எனக்கு தெரியாது. அந்த டைம்க்கு தான் நான் வருவேன். அப்போ அவன் இருக்க கூடாது” என்று கடிந்து விட்டு போனை வைத்தவன், மீண்டும் புகை பிடிக்கத் தொடங்கினான்.

——–

தீவிரத்துடன் மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான் சஜித் அவ்தேஷ்.

பக்கத்து அறையில் அவனது சித்தி மகனான ஜோஷித் எதையோ உடைப்பது உணர்ந்து ஒரு நொடி விரல்கள் வேலை நிறுத்தம் செய்திட, மறுநொடி அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தது.

ஆனாலும், உள்ளுக்குள் ஒரு கேள்வி! ‘ப்ச்… நம்மளை விட்டு தொலையவும் மாட்றானுங்க. கூட வச்சுக்கவும் மாட்டுறானுங்க. இன்னும் எத்தனை நாளைக்கு தான், இங்கயே இருக்கணுமோ தெரியல.’ என எரிச்சல் மிக, அந்த நவீன மிகப்பெரிய அறையை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் மடிக்கணினியில் புதைந்தான்.

அந்நேரம், அவனுக்கு மேனேஜர் சுந்தரம் போன் செய்தார்.

“சொல்லுங்க…” அசட்டையுடன் சஜித் கேட்க,

அவரோ, “சார் நான் சொல்றதை கோபப்படாம கேளுங்க. நீங்க 10 மணிக்கு குடுத்த அப்பாயின்மெண்ட்டை கொஞ்சம் மாத்த முடியுமா சார்.” என்று நிலையை விளக்க,

“ஏன், உங்க ஸ்வரூப் சார், 12 மணிக்கு டைமை மாத்திக்க மாட்டாராமா?” எனக் கடுப்புடன் கேட்டதில்,

“அதில்ல சார். அவருக்கு 12 மணிக்கு வேற அப்பாயின்மென்ட் இருக்குன்னு சொன்னாரு” என்று சொல்லி கூட முடிக்கவில்லை. அதற்குள் சஜித் எகிறினான்.

“நான் என்ன தக்காளி தொக்கா…? அவனுங்களுக்கே இவ்ளோ வீம்பு இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும். ஏன் எனக்குலாம் அப்பாயின்மென்ட் இல்லையா. நான் என்ன எங்க ராஜ வம்சத்துல இருக்குற சொத்தை சிகரெட் புடிச்சேவா அழிக்கிறேன்.

அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு தான் நான் வருவேன். அப்போ மத்த ரெண்டு பேரும் இருக்க கூடாது சொல்லிட்டேன்.” என்று கடிந்து விட்டு போனை வைத்தவன், மடிக்கணினியில் திறந்து வைத்திருந்த ‘டேப்’ களை எல்லாம் க்ளோஸ் செய்தான்.

அப்போது, ஸ்க்ரீன் சேரில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் அவனை முறைக்க வைத்தது.

சஜித், ஜோஷித், ஸ்வரூப் மூவரும் ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்த புகைப்படம் தான் அது. அதனை ஓங்கி ஒரு குத்து குத்தியவன், ‘ரொம்ப தான்டா பண்றீங்க ரெண்டு பேரும்.’ என செல்லமாக திட்டிக் கொண்டு, கசந்த முறுவல் பூத்தான்.

——-

கடந்த ஒரு மணி நேரமாக, விடாமல் செய்த உடற்பயிற்சி ஆடவனின் இரும்பு மேனியில் வியர்வைத்துளிகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.

ஆறடிக்கும் அதிகமாக, கம்பீரத்தின் மறு உருவமாக திகழ்ந்தான் ஸ்வரூப் அவ்தேஷ். அவ்தேஷ ராஜ வம்சத்தின் முதன் வாரிசு. ‘ராஜ’ களை என்றும் குறையாதிருக்கும் அழுத்த முகம். நினைத்ததை செய்தே தீரும் பிடிவாதம் நிறைந்த வதனம்.

அப்பிடிவாதம், அவனது தம்பிகளையும் தூர நிறுத்தி இருக்கிறது என்று புரிந்தாலும், அதனை சட்டை செய்யாதவன்.

மேனேஜரிடம் இருந்து வந்த அழைப்பில், துவாலைக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டிருந்தவனின் முரட்டு இதழ்களில் நக்கல் புன்னகை.

“என்ன சுந்தரம்… 11 மணிக்கு வேற யாராவது அப்பாயின்மென்ட் குடுத்து இருக்காங்களா?” எனக் கேட்போரை வாரி சுருட்டி இழுக்கும் அழுத்தத்துடன் கேட்டான்.

அவரோ திணறியபடி, நிகழ்ந்ததைக் கூற, “என்னால, டைமிங்க மாத்த முடியாது சுந்தரம். வேற ஏதாவது இம்பார்ட்டண்ட் விஷயம் இருக்கா?” எனக் கேட்டான், ‘நான் அந்த நேரத்துல வந்தே தீருவேன்’ என்ற மறைமுகக் கட்டளையுடன்.

“இல்ல சார்…” சோர்ந்த குரலில் சொல்லி விட்டு மேனேஜர் அழைப்பைத் துண்டிக்க, அவனும் தோளைக் குலுக்கி விட்டு போனை அணைத்தான்.

அதன் முகப்புப் படத்தில் இருந்த, அவர்களது புகைப்படம் ஒரு நொடி அவனை செயலிழக்க, மறுநொடியே “தேஜா!” என சீற்றக்குரலில் கர்ஜித்தான்.

அதற்கு அடிபணிவது போல, அடுத்த நொடியே கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான் தேஜஸ்வின். அவனது பி. ஏ.

“சொல்லுங்க பாஸ்!” எனக் கேட்டவனை எரிப்பது போல பார்த்த ஸ்வரூப்பின் பார்வை அவனை நடுங்க செய்ய,

“ஜோஷி சார் ரூம்ல இருந்த போட்டோ தான பாஸ். இப்போ மாத்திடுறேன்.” எனத் தலை தெறிக்க வெளியில் ஓடியது அந்த பாவப்பட்ட ஜீவன்.

அடுத்த அரை மணி நேரத்தில், ஜோஷித்தால் உடைக்கப்பட்ட புகைப்படம் சீர் செய்து, புது புகைப்படம் மாட்டப்பட்டது.

அதனை ரௌத்திரத்துடன் ஏறிட்ட ஜோஷித், “யார் எத்தனை தடவை ஒட்ட நினைச்சாலும் நான் உடைச்சுக்கிட்டே தான் இருப்பேன். உறவையும் சேர்த்து…” என்று பங்களாவே அதிர கத்திட,

அப்போது தான், குளித்து உடை மாற்றி, ஷூ, கோட் சூட் சகிதம், முதல் மாடியில் இருந்த தனது அறையில் இருந்து இறங்கி வந்த ஸ்வரூப், இளக்கார நகையுடன், தேஜாவைப் பார்த்தான்.

“எத்தனை தடவை உடைச்சாலும் ஒட்ட வச்சுக்கிட்டே தான் இருப்பேன்.” என பார்வையில் அனல் பறக்கக் கூறியவன், “போட்டோவை மட்டும் தான். உறவை இல்ல.” என்று அழுத்தத்துடன், தம்பியின் அறையை ஒரு முறை ஏறிட்டு விட்டு, வேக நடையுடன் அங்கிருந்து அகன்றான்.

ஸ்வரூப்பின் சத்தத்தைக் கேட்டதுமே, வாய் தானாக மூடிக்கொண்டது ஜோஷித்திற்கு.

சஜித் தான், “இவனுங்க வேற, காலைலயே ஒட்டுறேன், உடைக்கிறேன்னு… கட்டட வேலை பாக்குற மாதிரி கத்திட்டு இருக்கானுங்க.” என டைனிங் டேபிளில் அமர்ந்து ப்ரெட்டில் ஜாமை தடவிக் கொண்டிருந்தவன் வாய்க்குள் தான் முணுமுணுத்தான். அது எப்படி ஸ்வரூப்பிற்கு கேட்டதோ அவனே அறியான்.

டைனிங் ஹாலை கடந்து சென்ற ஸ்வரூப்பின் கால்கள் ஒரு கணம் நின்று, சஜித் இருந்த திசையை கூர்மையுடன் சுட்டெரிக்க, அவன் பார்வையை உணர்ந்தாலும் சஜித் தலையை நிமிர்த்தவே இல்லை.

ஜாம் தடவும் பணியை வெகு தீவிரத்துடன் செய்து கொண்டிருந்தவனுக்கோ, சகோதரனின் துளைக்கும் பார்வையை பார்க்காமலேயே உணர முடிந்தது. நேரம் செல்ல செல்ல அது வலுவானதை உணர்ந்து, பிரெட்டை ஓரமாக வைத்து விட்ட சஜித், தட்டை எடுத்து, ஹாட்பாக்சில் வைத்திருந்த இட்லியை எடுத்து வைத்து பிய்க்கத் தொடங்கினான்.

அதன் பிறகே, ஸ்வரூப் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். சஜித்தோ, “ச்ச்சே… கொஞ்சம் கூட கெத்தை மெயின்டெய்ன் பண்ண முடியல. இவனும் இவன் பார்வையும். பார்த்தே காரியத்தை சாதிக்கிறான்.” என எரிச்சலுடன் சத்தமாகவே முணுமுணுத்தபடி உண்டான்.

அது காரில் ஏறிய ஸ்வரூப்பின் காதுகளிலும் கேட்கவே செய்திட, மெல்ல தலையை ஆட்டி சிரித்துக் கொண்டான்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
37
+1
0
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Indhu Mathy

   சூப்பர் ஸ்டார்ட் ❤️🥰

   ஹீரோஸ் ராஜவம்சம் ஹீரோயின்ஸ் திருடிங்க… நல்ல காம்போ 🤣🤣🤣🤣🤣

   ஸ்வரூப் பார்வையாலேயே மிரட்டுறான்… செம கெத்தா இருக்கான்… 🤩🤩🤩🤩