Loading

மறு பதிப்பு:

ஊனோடு உறைந்து விடு – அத்தியாயம் 1
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு பெரும் அமைதியும், நன்றாக உற்றுப் பார்த்தால் மட்டுமே அருகில் இருப்பவர் மங்கலாகத் தெரியும் அளவுக்கு கடும் இருளும் சூழ்ந்திருக்க, நள்ளிரவு 2 மணிக்கும், அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தது அந்த பிரம்மாண்ட வீட்டில்.

அந்த வீட்டின்  வெளி காம்பவுண்ட் சுவற்றில் ஏறி நின்று கொண்டு  மூன்று ஜோடி விழிகள், அந்த வீட்டினையே வெறித்தது.

மூவரும் ஒரு சால்வையை அணிந்திருக்க, நடுவில் ஒரு பெண்ணும், அவளுக்கு ஒரு புறம் ஒரு ஆணும், மற்றொரு புறம் ஒரு ஆணும் நின்றிருக்க, மூவரும் ஒருவரை ஒருவர், ‘எப்படி அந்த வீட்டினுள் நுழைவது’ எனப் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்,

சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க

என்று ஒருவனின் கைப்பேசி அலறியது.

அந்த பெண், “டேய் பன்னாடை! பரதேசி! போனை ஆஃப் பண்ணுடா”  என்று அமைதியான குரலில் அழுத்தத்துடன் அதட்ட,

அவன் “அதுக்கு தான் பங்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்…” என்று போனை பதட்டத்துடன் கையாண்டு அணைத்து வைத்தான்.

மற்றொருவன், “இதுக்கு தான் சொன்னேன், இதெல்லாம் வேணாம்னு. இந்த நேரத்துல எல்லாரும் தூங்கிருப்பாங்கன்னு சொல்லி, கூட்டிட்டு வந்துட்டு… இப்போ பாருங்க வீட்ல லைட் எரியுது!” என்றவனின் குரலில் இன்று செத்தோம் மரண பயம் தெரிந்தது.

அந்த பெண் ‘இவன் வேற, நேரம் காலம் புரியாமல்’ என்று மனதினுள் புலம்பிவிட்டு,

அவனிடம், “விது உள்ள போறவரைக்கும் நீ உன் வாயை திறக்கவே கூடாது!” என்று எச்சரித்து விட்டு, மற்றொரு புறம் திரும்பியவள்,

அவள் அத்தை பையன் அஜயிடம், “எல்லாம் உன்னால வந்தது பங்கு. தலைவர் படம் நைட் ஷோ தான் பார்க்கணும்னு இப்படி கூட்டிட்டு போய் கோர்த்து விட்டுட்டியே?” என்று அவனை முறைத்தாள்.

அஜய் பேச வருவதற்குள், விது என்கிற, விதுன், “ஆமா எல்லாம் உன்னால தான்! இப்போ பாரு, சொந்த வீட்டுக்கே காம்பௌண்ட் சுவரை ஏறி குதிக்க வேண்டியதா இருக்கு” என்றான் புலம்பலுடன்.

அஜய் “ஏன், பக்கத்துக்கு வீட்டு சுவத்துல வேணும்னா ஏறி குதியேன்…” என்று கலாய்க்க, அந்த பெண் கடுப்பாகி, “டேய் நிறுத்துங்கடா! முதல்ல ஒவ்வொருத்தரா குதிங்க!” என்றாள்.

அஜய் ‘அப்போ நீ எதையும் முதல்ல பண்ணமாட்ட’ என்று முறைத்து விட்டு, ஒவ்வொருவராய் குதித்து, யாரும் அறியாமல், பைப் மேலே ஏறி, ஒரு அறைக்குள் நுழைந்தனர்.

‘ஹப்பாடா தப்பிச்சோம் யாரும் பார்க்கலை’ என்று ஆசுவாசமாக நிமிர, அங்கு அவர்களின் மொத்த குடும்பமும் அவர்களை தீயாய் முறைத்து கொண்டு நின்றிருந்தது.

மூவரும் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க, அஜய் “ஹி ஹி எல்லாரும் இன்னுமா முழிச்சுருக்கீங்க?” என்றவன் அப்பொழுது தான் அங்கு அவனின் அருமை அண்ணன் அர்ஜுன் நிற்பதைப் பார்த்தான்.

‘டேய் துரோகி இதுக்கு நீ தான் காரணமா?’ என்று மூவரும் அவனை முறைத்து நைசாக அங்கிருந்து நழுவ போக,  அந்த வீட்டின் மூத்தவரும், விதுனின் அப்பாவும், அந்த பெண்ணின் பெரியப்பாவும், அஜயின் தாய் மாமாவுமான கருணாகரன், “உத்ரா” என்று கடுங்கோபத்துடன் அழைத்தார்.

உத்ரா, “கூப்டீங்களா பெரியப்பா” என்று மிகவும் அடக்கத்துடன் கேட்க, அவர் சரமாரியாக பொரிய ஆரம்பித்தார்.

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க மூணு பேரும்? அர்த்த ராத்திரியில படத்துக்கு போயிருக்கீங்க அதுவும் சொல்லாமல் கொள்ளாமல்…” என்று கத்தியதில்,

உத்ரா பாவமாக “பெரியப்பா… நாங்க படத்துக்கு போனோம்னு உங்களுக்கு யாரு சொன்னது? நாங்க இவ்ளோ நேரம் ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங்ல இருந்துட்டு இப்போதான் கிளம்புறோம்” என்று அப்பாவியாய் சொல்லிவிட்டு,

அஜயிடம், “இல்ல பங்கு” எனக் கேட்க, அவன் ‘ஐயோ இவள் வேற சமாளிக்கிறோம்ன்ற பேர்ல உளறுறாளே!!! இன்னைக்கு சண்டே ஆஃபீஸ் லீவு பங்கு’ என்று அவளை பரிதாமாய் பார்த்து பலவீனமாய் தலையாட்டினான்.

“ஆ… ஆமா மாமா… இவ்ளோ நேரம் நாங்க ஆஃபீஸ்ல தான் இருந்தோம்… இல்லடா மாமா” என்று விதுனிடம் கேட்க,

அவன் அவனின் அப்பா பார்த்த பார்வையில், “அப்பா நான் வேணான்னு தான் சொன்னேன்… இவங்க ரெண்டு பேரும் தான், தலைவர் படத்துக்கு போயே ஆகணும்னு என்னையும் கூட்டிட்டு போனாங்க” என்று எப்பொழுதும் பயத்தில் அவர்களை போட்டுக் குடுப்பது போல் அனைத்தையும் உளறிவிட்டான்.

‘அட பயந்தாக்கொள்ளி நாயே’ என்று அவனை முறைத்தனர் இருவரும்.

அர்ஜுன், வந்த சிரிப்பை மிகவும், கடினப்பட்டு அடக்கி கொண்டு நிற்க,

கருணாகரன், “உங்களுக்கு படம் பார்க்கணும்னு தான்  நம்ம வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வச்சுருக்கேன். எதுக்கு வெளியில போய் பாக்குறீங்க? அந்த படம் எவ்ளோ கோடியா இருந்தாலும், அதை வாங்கி வீட்லயே போட்டு பார்க்க வேண்டியது தான. அதை கூட நான் பண்ண மாட்டேனா? என்ன உத்ரா பதில் பேசு?” எனக்கேட்டார் கோபத்துடன்.

உத்ரா தன்னை நொந்து, “பண்ணுவீங்க பெரியப்பா” என்று தலையை குனிந்து சொல்லிவிட்டு,

மனதினுள், ‘நல்லா பண்ணுவீங்க. மனுஷனை ஜோக்குக்கு கூட சத்தமா சிரிக்க விடாம, விசில் அடிக்க விடாம, பொம்மை மாதிரி பார்க்கணும். அப்படியும், இல்லைனா ரொம்ப நேரம் படம் பார்க்க கூடாதுன்னு, பாதியில ஆஃப் பண்ணிட்டு, நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லுவீங்க…’ என்று தனக்குள் புலம்பினாள்.

“என்ன உத்ரா நான் சொல்றது சரி தான?” என்று கருணாகரன் மீண்டும் கேட்டதில் தான், அவள் ‘அய்யோயோ இவ்ளோ நேரம் மைண்ட் வாய்ஸ்ல பேசிகிட்டு இருந்துட்டு, இவரு பேசுறதை கேட்காம விட்டுட்டோமே. இவரு வேற மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்பாரே…” என்று தன் அத்தையும், அர்ஜுன், அஜயின் அம்மாவுமான லக்ஷ்மியை பாவமாய் நோக்கினாள்.

அவர் இவளின் சேட்டையைக் கண்டு சிரிப்பை அடக்கி கொண்டு, கருணாகரனிடம், “விடுங்க அண்ணா… இனிமே இந்த மாதிரி வெளிய போனா.
பார்த்துக்கலாம். இந்த ஒருதடவை மன்னிச்சுடலாம்”  என்றிட,

அவர் “நீ குடுக்குற செல்லம் தான் இவங்க இப்படி பண்றாங்க” என்று திட்டியதில்,

லக்ஷ்மியின் கணவர் கர்ணன், “விடுங்க மச்சான்! சின்ன பசங்க விளையாட்டு தனமா போய்ட்டாங்க” என்று ஆதரவுக்கு வந்தார்.

கருணாகரன் “நீங்களும் தான் மச்சான் இவங்க இப்படி டிசிப்பிளீன் இல்லாமல் இருக்குறதுக்கு காரணம்” என்று அவரிடம் பாய, அவர் கப்சிப் தான்.

இறுதியில், கருணாகரனின் மனைவி அன்னம் சொன்ன பிறகே அவர்களை விடுவித்தார். அனைவரும் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று அவரவர் அறைக்குள் ஓட, அவர்களின் பின்னே வந்த அர்ஜுன் “ஹாய் கைஸ்” என்று கூறி முடித்ததும் உத்ராவும், அஜயும் அவனை கும்மி எடுத்தனர்.

உத்ரா, “விளக்கெண்ணெய்… நீ காலைல தானடா வரேன்னு சொன்ன, இப்போவே ஏன்டா வந்த? நீ வந்தனால தான் மொத்த குடும்பமும் தூங்காம இருந்துருக்கு” என்று அவனை முறைத்தாள்.

அர்ஜுன், “நான் என்ன உதி பண்றது? மார்னிங் ஃபிளைட் கான்செல் ஆகிடுச்சு. அதான் அதுக்கு முன்னாடி இருக்குற பிளைட்ல வந்தேன். இங்க வந்ததும் உங்களை காணோம்னு தேடுனாங்க. நான் அலெர்ட் பண்றதுக்கு போன் பண்ணுனேன் நீங்க தான் எடுக்கல” என்றான் தோளைக் குலுக்கி.

அஜய் ஏதோ யோசித்து விட்டு, “பங்கு, பிளைட் கான்செல் ஆனா நீ அடுத்த பிளைட்ல தானடா வரணும்? அதென்ன முன்னாடி பிளைட்ல வந்துட்ட?” என்று கேட்க,

உத்ரா, “வேற எதுக்கு, நம்மளை கோர்த்து விட தான் பங்கு” என்று அஜயிடம் கூறி விட்டு அவனை மொத்தி எடுத்தாள்.

விதுன் அப்பொழுதே அவன் அறைக்குள் சென்று அடைந்து விட்டான், இல்லை என்றால், இருவரும் சேர்ந்து தன்னை கொலையே செய்து விடுவார்கள் என்று தெரியாதவனா அவன்.

கருணாகரனின் தம்பி மகளான உத்ராவின் அம்மா சிறு வயதிலேயே இறந்து விட, அவளின் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, மனைவி மற்றும் உத்ராவின் அண்ணனுடன் வெளிநாட்டில் வசித்தார்.

உத்ராவிற்கு அவள் அப்பாவைத் தவிர அவர்கள் யாரையும் பிடிக்காமல் போக, அத்தை, பெரியப்பா  வீட்டிலேயே இருந்து கொள்கிறேன் என்று பிடிவாதம் பிடித்து, அவர்களுடனே இருந்து விட்டாள். சில வருடங்களுக்கு முன் அவளின் தந்தையும் இறந்துவிட்டார்.

அர்ஜுன், அவளை விட இரண்டு வயது பெரியவன். மருத்துவராக இருப்பவன், கான்ஃபெரென்ஸ் க்காக வெளியூர் சென்று விட்டு ஒரு மாதம் கழித்து இன்று தான் வீடு திரும்பினான். அஜய்க்கும் உத்ராவிற்கும் ஒரே வயதுதான். இவர்கள் இருவரும் அவளுக்கு இரு கண்கள் மாதிரி.

அவளின் அத்தை லட்சுமி அவளுக்கு அம்மா பாசத்தை சேர்த்தே கொடுப்பவர். அவளின் மாமா கர்ணன்  அவளுக்கு தந்தை பாசத்தை கொடுப்பவர். இவர்கள் ஐவரும் தனி வீட்டில் தான் வசிக்கின்றனர். ஆனால், ஏதாவது விஷேஷம் என்றாலோ, இல்லை விடுமுறை என்றாலோ கருணாகரன் வீட்டில் அனைவரும் கூடி விடுவர்..

கருணாகரன் வீட்டில் அனைவரிடம் கண்டிப்புடன் இருப்பார். பிள்ளைகளின் அக்கறையைப் பற்றி யோசிப்பதில், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் வரும் அப்பாவையே மிஞ்சி விடுவார். அதற்கு இந்த படம் விஷயமே உதாரணம்.

அவரின் மனைவி அன்னம் , பாசத்தினாலேயே அந்த கூட்டினை காப்பவர். அவருக்கு இரு மகன்கள். மூத்தவன் அகிலன், அவரின் மனைவி வாசுகி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது தான் விதுன்.

அப்பாவிற்கு மிகவும் பயந்தவன். அர்ஜுனிற்கும் அவனுக்கும் ஒரே வயதுதான், ஆனால் உத்ரா மற்றும் அஜய் செய்யும் அத்தனை சேட்டைகளையும் பயத்திலேயே உளறி விட்டு இருவரிடம் பலமாக அடி வாங்குபவன்.

மூவருமாக அரட்டை அடித்து, உறங்கப் போக 3 மணி ஆகி விட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை, விதுன் “எழுந்திரு உதி எழுந்திரு” என்று உலுக்கியதில், அவள் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து பார்க்க, மணி 5.30 தான் ஆனது.

“ஏண்டா அண்ணா இப்படி நட்ட நடு ராத்திரியில எழுப்புற…?” என்று சிணுங்கியபடி கேட்ட உத்ராவிடம்,

விதுன் “வேகமா எழுந்திருச்சு ஜாகிங் போ! அப்பா எந்துருச்சுட்டாரு!” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஒரு சாமியாரின் ‘மோட்டிவேஷன் ஸ்பீச்’ அந்த அந்த வீடெங்கும் எதிரொலித்தது.

அவள் காதை பொத்திக் கொண்டு “குடும்பமாடா இது? இல்ல குடும்பமானு கேட்குறேன்? உங்க டார்ச்சர் தாங்க முடியாம தான் டா நான் இந்த வீட்டு பக்கமே வர்றது இல்லை. எல்லார் வீட்டுலையும் காலைல சுப்ரபாதம் பாடுனா நம்ம வீட்டுல தான் மோட்டிவேஷன் ஸ்பீச்ன்ற பேருல மொக்கை போறீங்க” என்று புலம்பினாள்.

அதற்கு விது “நீ தான் சுப்ரபாதம் போட்டா ஏதோ தாலாட்டு பாட்டு பாடுற மாதிரி தூங்குறியே அதான் அப்பா கேசட்டை மாத்திட்டாரு” என்று சிரிக்க, அவள் அவனை முறைத்தே வெளியில் அனுப்பி விட்டாள்.

வெளியே வந்தவள் அஜய் அறைக்கு செல்ல, அங்கு அவனின் கட்டிலில் போர்வை எல்லாம் அழகாக மடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, அங்கிருந்த வேலையாட்களை அழைத்து, “அஜய் எங்க?” என்று கேட்டாள்.

“ஐயா அப்போவே எந்துருச்சுட்டாரு போலம்மா..” என்று பதில் வர,

“இந்த நாய் அப்டிலாம் பண்ணாதே!’ என்று யோசித்து விட்டு உள்ளே சென்றவள் அறையெங்கும் அவனைத் தேடினாள்.

பின், பால்கனி கதவை திறந்தவள், “அடப்பாவி” என்று பார்த்தாள்.

அங்கு அஜய் பெரிய போர்வை ஒன்றை விரித்து, கொசுவலையை கட்டி அழகாக உறங்கி கொண்டிருந்தான்.

உத்ரா அவன் அருகில் வந்து ‘இவ்ளோ சத்துலயும் இவன் எப்படி இப்படி தூங்குறான்?’ என்று எண்ணி அவன் அருகில் சென்று பார்க்க, காதில் பஞ்சை வைத்து அடைத்திருந்தான்.

அதனைப் பார்த்தவள் ‘அட பக்கிப் பயலே’ என்று திட்டி விட்டு, அங்கிருந்த நீரை எடுத்து அவன் மேல் ஊற்ற, அவன் அசையவே இல்லை.

உத்ரா தான் ‘பே’ வென விழித்தாள். பின், அவன் படுக்கைக்கு அருகே அவன் போனில் வெளிச்சம் பரவியதைக் கண்டவள், அதில் அவன் ஏதோ டைப் செய்து வைத்திருப்பதைப் பார்த்து, அதனை படிக்க ஆரம்பித்தாள்.

“மை டியர் அத்தை மகள் ருத்தினமே..” என்று ஆரம்பிக்க, அவள் “என்னது ருத்தினமா?” என்று முழித்து விட்டு, “ஓஒ ரத்தினமா! கருமம் கருமம் உன் தமிழ்ல தீயை வைக்க…” என்று தலையில் அடித்து கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“யாம் பெற்ற துன்பம் இவ்வையகமும் பெறுக என்ற தங்களின் உயர்வான சிந்தனை யாம் அறிந்ததே…” என்று இருக்க, அவள் “ஹக்கும் இதுல சுத்த தமிழ் வேற” என்று சலித்து விட்டு, மேலும் படித்தாள்.

“தங்களின் உறக்கத்தை கலைத்து விட்டதால், எம்முடைய உறக்கத்தையும் கலைக்க ஆவலுடனும் ஆசையுடன் தாங்கள் ஓடோடி வருவீர்கள்! என்று என் ஏழாம் அறிவு எனக்கு அறிவுறுத்தியது. ஆகவே, நான் தூங்கும் முன்பு சில பல தூக்க மாத்திரைகளை உண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்.

9 மணி அளவில் எம்முடைய உறக்கம் கலைந்து, நானே அலுவலகம் வந்து விடுவேன். தாங்கள் வெளிவேலைகளை முடித்து விட்டு, மற்ற கிளைகளுக்கு  சென்று பார்வை இட்டு  விட்டு, அலுவலகம் வந்து விடுங்கள்…” என்று இருக்க, அதனைப் படித்தவள் “உன்னை!” என்று அந்த போனை தூக்கி ஏறிய போக பின், அதில் மேலும் எழுதி இருந்ததை படித்தாள்.

“நோ நோ போனை எல்லாம் தூக்கி எறியப்படாது… அப்பறம் நான் டைப் பண்ணி வச்சுருக்குறதை டெலிட் பண்ணிடாதீங்க யுவர் ஆனர். அடிக்கடிலாம் என்னால டைப் பண்ண முடியாது. ஆகவே அதனை எடுத்த இடத்திலேயே அதே மாதிரி வைத்துவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் யுவர் ஆனர்… மிகத்  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்…” என்று எழுதி இருந்ததில், கலகலவென சிரித்தவள், அவனுக்கு நன்றாக போர்வையை போர்த்தி விட்டு அங்கிருந்து நகன்றாள்.

வரவேற்பறைக்கு வந்தவள், பெரியம்மாவிடமும், அண்ணியிடமும் வம்பு வளர்த்து விட்டு, “அர்ஜுன் எங்க?” என்று வினவ,

லட்சுமி, “பாவம் அவன் நைட் தூங்கலாம்னு போறப்ப, அவனுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து உடனே வரணும்னு போன் வந்து கிளம்பி போய்ட்டான்” என்றார் பரிதாபப்பட்டு.

உத்ரா தான் ‘டேய் அஜ்ஜு! வீட்ல இருந்தா தூங்க விட மாட்டாங்கன்னு நீ தெளிவா ஹாஸ்பிடல்ல போய் தூங்குற. அது தெரியாமல் இவங்கல்லாம் உன்னை புகழ்ந்து கிட்டு இருக்காங்க. என்னைக்கு சிக்குரியோ அன்னைக்கு உனக்கு டெஃபினிட்லீ சங்கு தான்…’ என்று வறுத்து விட்டு, மேலும் வீட்டில் இருப்பவர்களை படுத்தி எடுத்து விட்டு, கருணாகரனின் சத்தம் கேட்கவும் தான் கிளம்பினாள்.

சிவப்பு நிறத்தில் கருப்புப் புள்ளிகள் ஆங்காங்கே தெறித்த, காட்டன் புடவை அணிந்து, நெற்றியில் சிறிதாக ஸ்டிக்கர் பொட்டு வைத்து, கூந்தலை போனி டைலில் அடக்கி விட்டு, கம்பீர நடையுடன் படி இறங்கினாள் உத்ரா. 

அவ்வளவு நேரம் அவளிடம் இருந்த குறும்புத்தனம் மாறி கண்ணில் கூர்மையுடன், ‘என்னிடம் மோத நினைக்காதே’ என்ற எச்சரிக்கையை முகத்தில் சுமந்து வந்தவளை எப்பொழுதும் போல் ரசனையுடன் பார்த்தார் லட்சுமி.

அவளுக்கு திருஷ்டி சுற்றி விட்டு, “இன்னைக்கு என் கண்ணே பட்டுடும் போல இருக்கு உதிம்மா” என்க, அவள் லேசாய் சிரித்து விட்டு, “தினமும் ஒரே வசனமா அத்தை” என்று சலித்துக் கொள்வது போல் அவரை கட்டிக்கொண்டு, பின் அவர் கொடுத்த உணவை விழுங்கி விட்டு, அவசரமாக கிளம்பினாள்.

வெளியில், அவளின் பி.ஏ ராஜா அவளுக்காக காத்திருக்க, அவனிடம் வேகநடை போட்டபடி, “சைட்ல வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதா?” என்று கேட்க, அவனுக்கு தான் அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

“எல்லாம் கரெக்ட் ஆ போகுது மேம் பட்…” என்று இழுத்தவனை, அவள் ஒரு நிமிடம் நின்று கூர்மையாகப் பார்த்தாள்.

அவன் “நம்ம ஃபுட் ஃபாக்டரில தான்” என்று மேலும் இழுக்க,

“சொல்ல வந்ததை கட் அண்ட் ரைட் ஆ சொல்லணும் ராஜா!!!” என கடுமையுடன் கூற, அவள் அதட்டலில் மடை திறந்த வெள்ளமாக பேச ஆரம்பித்தான்.

“நம்ம குழந்தைங்களுக்கு பண்ற ஆர்கானிக் சத்து மாவுக்கு, Mr. வேணு கோபாலன் கிட்ட இருந்து இருந்து வாங்குன ப்ரொடக்ட்ஸ் குவாலிட்டி இல்லாமல் இருக்கு மேம்” என்று சொல்ல,

அவள் ‘அதை அவர்கிட்ட கேட்டீங்களா?’ என்று கேட்க வருவதற்குள்,

அவனே “அதை அவர்கிட்ட  கேட்டோம் மேம். அதற்கு அவரு குவாலிட்டிலாம் இப்போ யாரு பார்க்குறா? அதுவும் இல்லாமல் குழந்தைகளுக்கு கொடுக்குறதுல டேஸ்ட் தான் முக்கியம்ன்னு சொல்லி கன்வின்ஸ் பண்றாரு…” என்றான்.

அவள் காரினுள் செல்ல போகையில், “அந்த குவாலிட்டி இல்லாத, அவரோட ஃபாக்டரி இருக்கவே வேண்டாம். லேபர்ஸ் எல்லாரும் வெளிய போனதும்… ஃபயர் இட்” என்று அசட்டையாக கூற, இரண்டு வருடமாய் அவள் எடுக்கும் அதிரடி முடிவில் தற்போது பழகி இருந்தாலும், இப்பொழுது பலமாய் அதிர்ந்தான் ராஜா.

“மேம் அந்த ஆளு பெரிய பிசினெஸ் மேன்” என்று கூற வர, அவள் பார்த்த பார்வையில் “ஓகே மேம்” என்று விட்டான்.

பின், உத்ரா “உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம்ல? லீவ் எடுக்காமல் இங்க என்ன பண்ற?” எனக் கேட்க,

“இல்ல மேம் கொஞ்சம் ஒர்க் இருந்தது… அதான்”

உத்ரா அவன் கையில் வைத்திருந்த ஃபைலை தன் கையில் வாங்கி கொண்டு, “ஃபாமிலி இஸ் மோர் இம்போர்ட்டண்ட் மேன். இதெல்லாம் நான் பார்த்துக்கறேன். யு ஜஸ்ட் டேக் லீவ்” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

எப்போதும் போல் அவளை ஆச்சர்யமாக பார்த்தான். ஷப்பா என்னா தைரியம்? எவ்ளோ வேகமான முடிவு…? என்று யோசித்தவனுக்கு அவளிடம் வேலை பார்ப்பது மிகவும் பெருமையாக இருக்கும்.

இருக்காதா பின்னே இந்தியாவில் இருக்கும் டாப் 3 பிசினெஸ் வுமன் இல் உத்ராவும் ஒருவள். இந்த வருடம் அவளின் ‘உத்ரா குரூப் ஆஃப் கம்பனிஸ்’ தான் முதலிடம் இருக்க போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

வெளி வேலைகளை முடித்து விட்டு, அலுவலகம் வந்தவள், அங்கு அனைவரும் எப்பொழுதும் விட ஒரு பரபரப்பில் இருப்பதை உணர்ந்து, அவர்கள் சொல்லும் காலை வணக்கத்தை, கெத்துடன் ஏற்று கொண்டு, சேர்மன் என்ற அவளின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு அவளின் கல்லூரி தோழியுமான, மேலும் அவளுக்கு வலது கையுமான சுஜி என்கிற சுஜிதாவிடம்,

“என்ன பங்கு எல்லாரும் ஒரே பரபரப்பா இருக்காங்க?” என்று வினவ, அப்பொழுது, புயலென உள்ளே நுழைந்த அஜய், “கைஸ் கம் டு மீட்டிங் ஹால்…” என்றான் பரபரப்பாய்.

உத்ரா தங்களின் பதட்டத்திற்கு காரணம் என்னவோ?” எனக் கேட்க, அவன் ஒற்றை வார்த்தையில் “துருவேந்திரன்” என்றான்.

அதே நேரத்தில், ஆஸ்திரேலியா மாகாணத்தில், அந்த பெரிய கண்ணாடி கட்டடத்தின் உள்ளே, ஒருவனை சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான், அஜயின் பதட்டத்திற்கு காரணமானவனான துருவ் என்கிற துருவேந்திரன்.
 
“உங்களுக்கு அவசரமா வெளிய போகணும்னா உங்க வேலையை வேற யார்கிட்டயாவது குடுத்துட்டு போகணும், இல்லை அந்த வேலையை முடிச்சுட்டு போகணும். இப்படி பாதியில விட்டுட்டு போனா என்ன அர்த்தம் ஹான்?” என்று கண்ணில் ரௌத்திரம் தெறிக்க, முகத்தில் இயல்பாகவே இருக்கும் கடுமையுடன் பேசியவனை நடுக்கத்துடன் பார்த்தவன்,

“இல்ல சார் ஃபேமிலில ஒரு பிரச்சினை…” என்று பேச வர,

துருவ் ஃபைலை தூக்கி அவன் மேல் எறிந்து விட்டு, “ஃபேமிலி லாம் செகண்டரி தான். எனக்கு என் வேலை முடியனும்… ரைட் நொவ்” என்றான் தீப்பொறி பறக்க.

பின் அவனின் செக்கரட்டரியான மீராவிடம், “அந்த உத்ரா குரூப் ஆஃப் கம்பனிஸ்கிட்ட பேசியாச்சா? நாளைக்கு அந்த கம்பெனி சேர்மன் மிஸ் உத்ராவை நான் மீட் பண்ணனும்னு இன்ஃபார்ம் பண்ணிடீங்களா?” என்று கேட்க, 

மீரா தான் தற்போது உத்ராவிடம் இருந்து வந்த தகவலை அவனிடம் எப்படிக் கூறுவது என்று தெரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டு நின்றாள்.

உறைதல் தொடரும்
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
36
+1
87
+1
5
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்