Loading

 

கோயம்பத்தூரில் அமைந்திருந்த, அந்த ஓங்கி உயர்ந்த பெரிய திருமண மண்டபத்தின் வாசலில், “ஜீவா வெட்ஸ் கயல்விழி” என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அந்த இடமே பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

அந்த மண்டபத்தின் உள்ளே இருந்த அனைவரின் மனதிலும், முகத்திலும் நிறைவான சிரிப்பு தாண்டவமாடியது.

அங்கிருந்த கலை மற்றும் சிவமூர்த்தி தம்பதியருக்கு பெரு மகிழ்ச்சி, தன் பெண்ணின் வாழ்வு, சிறப்பாக அமையப்போவதை நினைத்து.

மணப்பெண் அறையில், கயல் விழி, கண்ணாடியில் தன் அலங்காரத்தை கண்டு, முகம் மலர்ந்தாள்.

இறக்கை கட்டி பறந்தாள் என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால், அவள் விரும்பி மனதார காதலித்த ஜீவாவைத் திருமணம் செய்து கொள்ள போகிறாளே அதனாலே வந்த பூரிப்பு தான்.

திருமணத்திற்கு வருகை தந்திருந்த கயல்விழியின் தோழி கீதா, “ஆனாலும் நீ லவ் மேரேஜ் பண்ணுவன்னு நான் கனவுல கூட நினைக்கலடி. எப்படிடி கவுந்த” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.

கல்லூரியில், எவ்வளவோ ஆண்கள் கயல்விழியிடம் காதலை சொல்லியும், அவர்கள் அழகாய் பணக்காரர்களாய் இருந்தாலும், அவர்களை ஒதுக்கி விட்டு சென்றவளாயிற்றே.

கயலின் மற்றொரு தோழி பிரேமாவோ, “பின்ன, லவ் பண்ணாம? கயலு ஆளு செம்ம அழகு டி… நேத்து, நலுங்கு அப்போ நடந்து வந்ததை பார்க்கணுமே…

யப்பா! அப்படி ஒரு கம்பீரம். இருக்காதா  பின்ன? எவ்வளோ பெரிய பணக்காரர். ஊட்டில அவருக்கு இல்லாத சொத்து பத்தே இல்லை. அப்பறம் லவ் வரத்தானே செய்யும்” என்று நக்கலடிக்க, கயல் அவளை பார்வையாலே சுட்டெரித்தாள்.

“நான் அப்படி பட்டவளா” என்று அவளைப் பார்க்க,

பிரேமா “ஹே லூசு நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன்டி உன்னை பத்தி எனக்கு தெரியாதா? பணம் காசை காட்டி உன்னை மயக்க முடியுமா என்ன…?” என்றதும், சிறு புன்னகையைக் கொடுத்தவள், அலங்காரத்தை தொடர்ந்தாள்.

கீதா, “ஏண்டி நாங்க லூசு மாதிரி ஏதோ பேசிக்கிட்டே இருக்கோம். நீ என்ன மௌன விரதமா? எதாவது பதில் பேசேன்டி” என்று கூறி முறைக்க, அதற்கும் மலர்ந்த புன்னகையைத்தான் பரிசளித்தாள்.

உண்மையில் சந்தோஷத்தில் அவளுக்கு பேச்சே வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் யாரென்றே அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவளின் சுவாசத்திலேயே கலந்து விட்டவனைப் பற்றி நினைத்தவளுக்கு, இன்னொருவனின் நினைவும் சேர்ந்தே வந்தது.

 உடனே கீதாவிடம், “கார்த்தி போன் பண்ணுணானாடி” என்று கவலையாய் கேட்க, அதற்கு பிரேமா, “இப்போ எதுக்கு அவனை பத்தி பேசுற? அவன் எக்கேடோ கெட்டு போகட்டும். நம்மளை பத்தி கொஞ்சமாவது அக்கறை இருந்தா இப்படி இருப்பானா.” என்று கோபத்துடன் பொரிந்தாள்.

கயல் “அவன் இருந்திருந்தா இன்னும் சந்தோசப்பட்டுருப்பேன்.” என்று அவளின் உயிர் தோழன் கார்த்தியின் வாட்ஸ் ஆப்க்கு உள்ளே சென்று, அவனுடனான உரையாடல்களை பார்வையிட்டு பெருமூச்சு விட்டாள்.

‘நான் அன்னைக்கு ரொம்ப பேசிட்டேனோ?’ என்று மனதில் வலியுடன் நினைத்தவளுக்கு, கார்த்தியின் “என் அண்ணியா வந்துடேன் பட்டி(buddy )” என்ற வாசகம் காதில் எதிரொலிக்க, சிறு சிரிப்புடன் அதனை ஒதுக்கி விட்டு, ஜீவாவை பற்றி நினைத்தாள்.

‘அவனை முதன் முறை எங்கு பார்த்தோம்?’ என்று மனதை அலச, இரண்டு மாதங்களுக்கு முன், அவளின் தோழியின் திருமணம் நடந்த சர்ச் நினைவிற்கு வந்தது.

அன்று, கயல்விழியின் தோழிக்கு சர்ச்சில் திருமணம் நடந்தது. அதற்கு தான் அவள் சென்றிருந்தாள்.

சர்ச் வாசலில் வண்டியை நிறுத்தியவள், தன் சிவப்பு நிற ஜார்ஜட் சேலையை கால் தடுக்கி விடாதவாறு லேசாக தூக்கிக்கொண்டு நடக்க,

அப்பொழுது, “ஹலோ! ஹலோ” என்று ஒரு ஆண்குரல் அவளை அழைப்பது போல் இருந்தது.

“நம்மளை இருக்காது” என நினைத்து அவள் மீண்டும் நடக்க, அவன் “ஹலோ ரெட் சாரி” என்று மீண்டும் கத்த, இப்பொழுது ‘நம்மளை தான் கூப்புட்றான் போல…’ என்று எண்ணி திரும்பினாள்.

அங்கு, நீல நிற வெல்வெட் கோர்ட்டில், முன்நெற்றியில் விழுந்த முடிகளை கைகளால் கோதிக்கொண்டே, கண்ணில் தீர்க்கத்துடன் நின்றிருந்தவனை கண்டவளுக்கு ஒரு நிமிடம் அவன் மேல் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை. ஏதோ ஒரு உணர்வு அவனைக் கண்டதும்.

அழுத்த நடையுடன் அவள் முன் வந்தவன், அவனின் நடையை ரசித்தவளிடம், “உன் வண்டியை எடுக்குறியா? அப்போதான் என் கார எடுக்க முடியும்…” என்றான்.

அவள் எங்கே அதை எல்லாம் கேட்டாள். பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல், ‘பே’ வென்று அவனைப் பார்த்திருந்தாள்.

அவனும் அவளை சுவாரசியமாகத்தான் பார்த்திருந்தான்.

“ஹலோ” என்று அவள் முன் அவன் சொடுக்கிட, அப்பொழுது தான் தன் பூலோகத்திற்கு திரும்பி வந்தவள், “என்ன? என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள் பேந்த பேந்த விழித்துக்கொண்டு.

அவன் “சரியா போச்சு. உன் வண்டியை எடு… என் கார் முன்னாடி பார்க் பண்ணிருக்க” என்று அழுத்தி சொல்ல,

“ஓ சாரி” என்றவளுக்கு அவனின் ஆட்டிட்யூடும், பேச்சும், அவளுக்கு எதையோ நியாபகப்படுத்த, மேலும் அவனுடன் ஏதோ பல காலம் பழகியது போன்ற ஒரு உணர்வை மறைத்துக் கொண்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, வண்டியை எடுக்க முன்னே செல்ல, சரியாக, அவளின் புடவை அவள் காலைத் தட்டி விட்டது.

கீழே விழப் போனவனை தாங்கி பிடித்தவன், “கேர்ஃபுல்!” என்று மட்டும் சொல்லி விட்டு, அவளை விட்டு சாதாரணமாய் விலக, அவளுக்கு தான் ஐயோ என்றிருந்தது.

இத்தனைக்கும் அவள் ஆண்களிடம் பழகாதவள் இல்லை. கல்லூரியில் அனைவரிடமும், கண்ணைப் பார்த்து பேசி, அவர்களை தள்ளி வைத்திருப்பவளின் மனது, இப்படி அவனைக் கண்டதும் ஒரு நிலை இல்லாமல், தவிப்பது அவளுக்கு புரிந்தே இருந்தது.

பின், அவள் வண்டியை தள்ளி வைத்து விட்டு, அவனைப் பார்க்க, அவன் இவளை பாராமல் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்.

அவன் சென்றதும், சில நொடி அங்கு நின்றவள், பின், மீண்டும் உள்ளே சென்று திருமணத்தில் கலந்து கொண்டாள்.

ஜோடிகள் இருவரும் மோதிரத்தை மாற்றி கொள்ள, பின், ஒவ்வொருவராய் அவர்களுக்கு பரிசு கொடுக்க சென்றனர்.

திருமணம் மாலையில் வைத்ததால், அப்பொழுதே இருட்டி விட, கயல் வேகமாக பரிசை கொடுத்து விட்டு கிளம்புவோம் என்று நினைத்து, அவர்களிடம் சென்று பேசிக்கொண்டு திரும்ப, அங்கு சாட்சாத், அந்த கார்க்காரனே கையில் பொக்கேயுடன் மேடை ஏறினான்.

அவனைக் கண்டதும், மீண்டும் அவளின் இதயம் தாறுமாறாய் துடிக்க, அவன் புன் சிரிப்புடன், தம்பதியரை வாழ்த்தி விட்டு, கயலைப் பார்த்தான்.

மணமகன் உடனே, கயலுக்கு அவனை “ஜீவா” என்றும் அவனின் நண்பன் என்றும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, கயலையும் அறிமுகப்படுத்தினான்.

அதற்கும் லேசாக சிறு சிரிப்பை தந்தவன், மேடையை விட்டு இறங்கி, வெளியவே சென்று விட்டான்.

பின், கயலும் வெளியில் வந்து, வண்டியை எடுக்க, அப்பொழுது தான் வண்டி பஞ்சர் ஆனதே அவளுக்கு உறைத்தது.

“மை காட்… எப்படி வண்டி பஞ்சர் ஆச்சு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தான இருந்துச்சு.” என்று குழம்பியவள், அப்பாவை வரச்சொல்லலாமா என்று யோசித்து விட்டு,

பிறகு, ‘இந்த பனியில அவரை அலைய வைக்க வேண்டாம்… ஏற்கனவே உடம்பு சரியில்லை’ என்று நினைத்து, வண்டியை அங்கேயே ஓரமாக நிறுத்தி விட்டு, ஆட்டோவிற்கு காத்திருந்தாள்.

அப்பொழுது லேசாக மழை வேறு தூற, அவள் தான் ‘சே… என்ன இது. இன்னைக்கு இப்படி படுத்தது.’ என்று நொந்து கொண்டு, ‘கேப்’ புக் செய்ய போக, அதுவும் கிடைக்காமல் சோதித்தது.

அப்பொழுது அவள் முன் ஒரு கார் வந்து நிற்க, யாரென்று பார்த்தவள், உள்ளே இருந்து ஜீவா கார் கண்ணாடியை  திறக்கவும், அவனை பார்த்து அதிர்ந்தாள்.

ஜீவா, “என்ன இங்க நிக்கிற.” என்று கேட்க,

அவள் “அது ஆட்டோக்காக..” என்றதும், ‘உன் வண்டி’ என்பது போல் அவன் பார்த்தான்.

“அது வண்டி பஞ்சர் ஆகிடுச்சு. இங்க பக்கத்துல கடை எதுவும் இல்லை” என்றதும், அவன் “சரி வா நான் டிராப் பண்றேன்” என்றான்.

அதில் அவள் தான், என்ன இருந்தாலும் முன்ன பின்ன தெரியாதவன் உடன் எப்படி செல்வது என்று தயங்கி, “இல்ல நான் போய்டுவேன். தேங்க்ஸ்” என்று மறுக்க, அவன் வேகமாக யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு, அவளிடம் கொடுத்தான்.

அவன் என்ன பேசினான் என்று அவளுக்கு கேட்கவில்லை. ஒன்றும் புரியாமல் போனை வாங்கி காதில் வைக்க, மறுமுனையில் அவளின் மணப்பெண் தோழி தான் பேசினாள்.

“அந்த அண்ணாவை எனக்கு நல்லா தெரியும் கயலு… மழை வேற பெய்யுது. எவ்வளவு நேரம் இப்படி நிப்ப. முதல்ல அவர்கூட வீட்டுக்கு போ. அவரை நம்பி நீ தாராளமா  போகலாம்” என்று அதட்டிய படி கட்டளை இட, கயல் தான் அவனை விழி விரித்து பார்த்தாள்.

அவன் எதுவும் பேசாமல், அவன் அமர்ந்திருந்த ட்ரைவர் சீட்டிற்கு பக்கத்துக்கு கதவைத் திறக்க, அவளுக்கு மறுக்கவும் முடியாமல், அவனை எதிர்த்து பேச ஏதோ தடுக்கவும் செய்ய, காரில் ஏறிக் கொண்டாள்.

சிறிது நேரம், இருவரும் எதுவும் பேசாமல் வர, ஜீவாவே, “உன் வீடு எங்க இருக்குன்னு நீ சொல்றியா இல்லை அதையும் உன் ஃப்ரெண்ட்க்கு போன் பண்ணி கேட்கட்டுமா” என்று கேட்டு அவளை ஒரு பார்வை பார்க்க,

அவள் தான் தன் மடத்தனத்தை நொந்து கொண்டு, பிறகு, வழி சொன்னாள்.

சில நிமிடத்தில் அவள் வீடும் வந்து விட, அவள் “தேங்க்ஸ்” என்று சொல்லி, விட்டால் போதும் என்று அவனை பாராமல் உள்ளே சென்று விட்டாள். ஏனோ அவளுக்கு அவன் முன் இருப்பது, ஏதோ சிங்கத்தின் குகையில் இருப்பது போல் இருந்தது.

ஏன் இப்போதும் கூட தான், அதிகமாக அவளிடம் அவன் பேசியது கூட கிடையாது.

ஆனால் அவன் பார்வையிலேயே, என்ன பேச வருகிறான் என்று உணர்த்தி விடுவான். அல்லது, தான் மட்டும் தான் அவன் நினைப்பதை உணர்கிறோமா என்று அவளுக்கு இன்றளவும் புரியாத புதிர் தான்.

அவனுக்கு பெற்றோர், உறவினர் என்று யாரும் இல்லை என்பது வரை மட்டும் தான், அவனின் குடும்ப விவரம் அவளுக்கு தெரியும்.

அது கூட, அவன் காதலை அவளிடம் சொன்ன போதோ, அல்லது இவள் அவனுக்கு சம்மதம் சொன்ன போது கூட இவளுக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை.

அவனின் நினைவில் புன்னகையுடன் அமர்ந்திருந்தவளை கண்ட, தோழிகள் “அடியேய் போதும் நீ கனா கண்டது… அப்பறம் உனக்கு பதிலா நான் மணமேடைக்கு போய்டுவேன்” என்று பொய்யாய் மிரட்ட,

அதில் முறைத்தவள், “நீ போய் உக்காந்தாலும், அவரு உனக்கு தாலி கட்ட மாட்டாராக்கும்” என்று சிலுப்பி கொள்ள,

அவள் “சரி தாண்டி… எப்படி இருந்தவள், இப்போ எப்படி ஆகிட்டாள்.” என்று தலையில் அடித்து கொள்ள, அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

பிரேமா வேகமாக சென்று கதவை திறக்க, வெளியில் நிற்பவனை பார்த்து, விழி விரித்து விட்டு, அப்படியே நிற்க,

ஜீவா, “நான் கயல்ட்ட பேசணும்” என்றான்.

அவன் முகத்தில் என்ன இருந்தது என்று அவளால் ஆராயக்கூட முடியவில்லை.

அப்பொழுது தான் திரும்பி பார்த்த கயலுக்கு, ஜீவாவைக் கண்டு மனம் படபடக்க, ‘இந்த நேரத்துல இங்க என்ன பண்றாங்க’ என்று யோசித்தவள், மற்ற தோழிகளை பார்க்க, அவர்கள் நீ நடத்து என்று அவளை சிவக்க வைத்து விட்டு நமுட்டு சிரிப்புடன் வெளியில் சென்றார்கள்.

கயல், “என்ன ஜீவா… இந்த நேரத்துல, முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. நீங்க கிளம்பல” என்று அவன் உடையை பார்த்து கேட்டாள்.

ஏன் எனில், அவன் இன்னும் பேண்ட் சட்டை  தான் அணிந்திருந்தான்.

உடனே அவன், அருகில் வந்து அவளைப் பார்வையாலே ஊடுருவி, “நான் கிளம்பணுமா வேணாமான்னு நீ தான் முடிவு பண்ணனும்” என்று சொல்ல, அவள் புரியாமல் “நான் என்ன முடிவு பண்ணனும்?” என்றாள்.

ஜீவாவோ, “இந்த கல்யாணம் நடக்காது” என்று அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினான்.

அவன் சொன்னதை உள் வாங்கவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

“ஜீ ஜீவா… என்ன உளறுறீங்க. ஏன் கல்யாணம் நடக்காது?” என்று நடுங்கிய இதயத்துடன் கேட்க,

அவன் “எனக்கு பிடிக்கலை” என்று அசட்டையாக தோளைக் குலுக்கி சொன்னதில் அவள் அதிர்ந்து,

“என்ன பிடிக்கல… எனக்கு ஒன்னும்  புரியல” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

அவனோ அதனை கண்டு கொள்ளாமல், “இப்போ இந்த கல்யாணம் நின்னா என்ன ஆகும்?” என்று கேட்டவன், ஜன்னல் திரையை விலக்கி, கயலின் தந்தை சிவமூர்த்தியை பார்த்து,

“உன் அப்பா… அடுத்த நிமிஷம் செத்துருவாருல.” என்று சந்தேகமாய் கேட்க, அவளுக்குத் தான், நிற்க கூட முடியவில்லை.

“என்ன பேசுறீங்க ஜீவா… எதுக்கு இப்படிலாம் பேசிகிட்டு இருக்கீங்க” என்று சற்று குரலை உயர்த்தியே கேட்க, அவன் அவளை கடுமையாக ஒரு பார்வை பார்த்ததில் அவளுக்கு சர்வமும் அடங்கியது.

மீண்டும் அவள் அருகில் சென்றவன், “உன் குரல் வெளிய வந்துச்சு…” என்று பல்லைக்கடித்து மிரட்டி, “உன் அப்பாகிட்ட இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்ல போறேன். என்ன நடக்க போகுதுன்னு நீயே பாரு” என்று வெளியே செல்ல போக,

கயல், “ஜீவா பிளீஸ் விளையாடாதீங்க. இப்படிலாம் அப்பாகிட்ட சொல்லாதீங்க அவரு ஹார்ட் பேஷண்ட். இந்த அதிர்ச்சியெல்லாம் அவரால தாங்க முடியாது. உங்களுக்கு தான் தெரியும்ல… ப்ளீஸ் ஜீவா… உங்களுக்கு என்ன பிரச்சனை. எதுக்கு இப்படி வித்தியாசமா நடந்துக்குறீங்க.” என்று தவிப்புடன் கேட்டாள்.

அதற்கு இளிவாய் இதழ் விரித்தவன், “நான் வித்தியாசமா நடந்துக்குறேனா… ஹ்ம்… இவ்ளோ நாள் தான் நான் வித்தியாசமா நடந்துக்கிட்டேன். இப்போ தான் கரெக்ட் – ஆ நடக்கிறேன்.

ஹப்பா… உன்னை லவ் பண்ற மாதிரி நடிக்கிறது சே… இட்ஸ் இரிட்டேடிங்” என்று அவள் தலையில் தணலை வாரி  இறைக்க, நொறுங்கிப் போனாள் பெண்ணவள்.

கயல் “ந… ந நடிச்சீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்க,

அவன் தோளை குலுக்கிக் கொண்டு, “சரி… ஓகே. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன். பட் ஒரு கண்டிஷன்.” என்று சொன்னதும், அவள் வெறுமையாய் அவனைப் பார்க்க,

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீ எனக்கு பொண்டாட்டியா இல்லை… என் வீட்டு வேலைக்காரியா தான் இருக்கணும். அதுக்கு ஓகேன்னா சொல்லு… இப்போவே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அவள் தலையில் அடுத்த இடியை இறக்க, கயலுக்கு இதெல்லாம் கனவாக கரைந்து விட கூடாதா என்றிருந்தது.

 சில நிமிடம் அப்படியே நின்றவள், “ஏன் இப்படி பண்ணுனீங்க… இப்போ  ஏன் இப்படி பண்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று இறுகிய குரலில் கேட்க,

அவன், “உன்னை மாதிரி கேவலமான ஜென்மத்துக்கு இப்படித்தான் தண்டனை குடுக்கணும்…” என்றான் கண்ணில் நெருப்புடன்.

விக்கித்து நின்ற கயல், “தண்டனை குடுக்குற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணுனேன்…” என்று அவன் கண்ணை பார்த்துக் கேட்க,

  “அதை உன்கிட்ட சொல்ல முடியாதுடி. ரொம்ப பேசுற…” என அவளை மேலும் கீழும் அளந்தவன், “இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் சொல்லிடறேன்” என்று திரும்பினான்.

அவள் “நில்லுங்க…” என்று சொன்னதும், அவளைத் திரும்பி பார்த்தவனிடம்,

“நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு இந்த தண்டனைன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.” என்றவள் அவன் அழுத்தமாய் அவளை எரிக்கவும்,

“இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம்” என்று உறுதியாய் சொல்ல, அவன் அவளை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியில் சென்றான்.

மனதில் வலியுடன், இவ்வளவு நாள் இனிமையாய் மனதில் நிறைந்த அவனுடனான இரண்டாவது சந்திப்பை, கண்ணீருடன் நினைத்தாள் கயல் விழி.

நேசம் தொடரும்...

-மேகா..

.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
52
+1
97
+1
7
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்