வெண்மேகமாய் வந்து தாலாட்டவா
பதிவு 1
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து,
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வேளைவரும் போது விடுதலை செய்து,
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…
நிலவு மகளின் குளுமை பரப்பிய வெளிச்சமழையில் பெண்ணவளின் மெல்லிய அதரங்கள் தான் ஒவ்வொரு வார்த்தைகளையும் செவிவழி பாய்ந்த இன்னிசையோடு சேர்த்து முணுமுணுத்தபடி இருந்தது… விழிகளின் ஓரம் கசிய இதழ்களோ புன்னகைப் பூவை சூடிக்கொள்ள விழிகளோ சுற்றுப்புறத்தை ஆவலாய் நோக்கியபடி இருந்தது…
இன்னும் அரைமணிநேரத்தில் இந்த வருடத்திற்கான காதலர் தினம் துவங்கிவிடும்… காதலர் தினத்தை வரவேற்பதற்காய் தான் பார்க்கும் இடம் யாவும் இரவை பகலாக்கும் முயற்சியில் வண்ண வண்ண விளக்குகளும், மலர் அலங்காரங்களும், பலூன்களின் அணிவகுப்புகளும் என ஊரே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது… ஜோடி ஜோடியாய் ஆடவரும் பெண்டிரும் தங்கள் காதலை கொண்டாடும் விதமாய் கரங்கள் கோர்த்தபடி, ஒட்டிக்கொண்டும், கட்டிக்கொண்டும் நடனமாடி குதூகளித்தபடி இருந்தனர்… அவர்களின் நடனத்திற்கென ஒலிப்பெருக்கியில் இசைத்த பாடலைத் தான் இவளது இதழ்களும் அசைபோட்டபடி இருந்தது…
இன்றைய தினமதை நினைத்தால் அத்தனை இளசுகளின் இதயமும் துள்ளலிடுவதைப் போலத்தான் இவளது இதயமும் ஒருகாலத்தில் துள்ளல் போட்டது… விடியல் துவங்கும் சமயம் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடரும் என்று நினைத்து ஆசை ஆசையாய் இரவுபொழுதை இதே போல, இதே இடத்திலேயே அமர்ந்து நெட்டித்தள்ளிவிட்டு காத்திருக்க, அவளே எதிர்பாரா நொடிதனில் வாழ்வே சூன்யமானதை என்றுமே மறக்கமுடியாது… சூன்யமாக்கியவர்களை மன்னிக்கவும் முடியாது…
பழைய நினைவுகளில் மூழ்கி, தன்னிலை மொத்தமும் மறந்து பாடல் வரிகளிலேயே தன்னைத் தொலைத்தவளாய் அமர்ந்திருந்தவளை அவளது தோழியின் தொடுகையுடன் கூடிய குரலே நனவுலகம் மீட்டுக்கொண்டு வந்தது…
“இந்தாப்ள மேகா…” என்று முதுகிலேயே நச்சென்று ஒன்று வைத்துவிட்டு இடுப்பில் கைவைத்தபடி முறைத்தபடி நின்றவளை, திரும்பி பார்த்தவள் ஒன்றும் நடவாதது போல புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டு வைக்க, அதற்கும் அவளிடத்தில் இருந்து முறைப்பே பதிலாய் கிடைத்தது…
“என்ன குட்டி கூப்ட இப்ப ஏதுஞ்சொல்லாம மொறச்சுக்குன்னே இருக்க? என்ன சேதி?…” என்றவள் தலையிலேயே நங்கென்று குட்டு வைத்தவள்,
“இந்த எடத்துலயே வந்து ஒக்காராத ஒக்காராதன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்… ஏம்ப்ள என் பேச்சயே கேக்கமாட்டேங்கிறவ? இத்தன ஒசரத்துல வந்து ஒக்காரத்தேன் ஒனக்கு புடுச்சுருக்காக்கும்? கீழ குனிஞ்சு பாத்தாலே பயமா இருக்குது… கொஞ்சங்கூட பயமே இல்லாம இங்கன உக்காந்துட்டு இருக்க…” என்று சொன்னவளின் வார்த்தைகளை கேட்க இவளுக்கு சிரிக்கத்தான் தோன்றியது…
“என்னது ஒனக்கு பயமா இருக்கா?…ஏன் ஏன் பயமாருக்கு?…” என்று மொட்டைமாடியின் சுற்றுச்சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டியபடியே அவள் கேட்க, இவளோ தலையில் அடித்துக்கொண்டாள்…
“ம்ம்ம் ஏ தாயே கேக்கமாட்ட நீயி… நாலடுக்கு இருக்க கட்டிடத்தோட மொட்டமாடியில ஒக்காந்துட்டு காலாட்ட ஒனக்கு வேணா பயமில்லாம இருக்கலாம்… எனக்கு பயமா இருக்குப்பா… இதுலருந்து கீழ வுழுந்தா என்னாவும் தெரியும்ல? கொடல் குந்தாணியெல்லா சட்னியாயிப்புடும்… முதல்ல நீ இங்குட்டு எறங்கு… ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று தோழியின் கைப்பிடித்து இந்த பக்கமாக இறக்கிவிட, அவளும் இதற்கு மேலும் இவளை பயமுறுத்த வேண்டாம் என்று இறங்கி நின்று அவளை பார்க்க, ஏதோ சரியில்லாதது போல் இருந்தது…
என்றுமில்லா திருநாளாய் தழையத்தழைய பட்டுப்புடவை கட்டி, மல்லிகைப்பூ சரம் தோள்களில் புரள, மஞ்சள் பூசிய முகத்துடனும், கண்ணாடி வளையலுகளுடனும் நின்றவளை மேலிருந்து கீழாக ஒற்றைப் பார்வை பார்த்தவள், தோழியின் விழிகளையும் கவனிக்க மறந்தாள் இல்லை…
“என்னப்ள சீவி சிங்காரிச்சு எங்கயோ கெளம்பிருக்காப்புல இருக்கு? கண்ணெல்லா வேற செவந்து போய் கெடக்கு… எங்கன போறவ?…” என்ற மேகாவின் தோற்றத்தையும் ஒரு பார்த்தவள், சிறு தயக்கத்துடனே!
“அதுவந்து வீட்டுக்குத்தாம்ள… நீயும் வாரியல்ல…” என்று கேட்டு வைக்க, அவள் வார்த்தைகளை கேட்டவளுக்கு தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது…
“இந்தாபாரு தேனு… ஒனக்கு ஓ வீட்டாளுவள பாக்கணும் போவணும் வரணுமுன்னா போ வா… நான் எப்பயும் ஒன்ன தடுக்கவு மாட்டேன் ஏன் எதுக்குனு கேக்கவு மாட்டேன்… ஆனா என்னையும் வா போன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு திரிஞ்ச, அப்பறம் என்ன மனுசியாவே பாக்கமாட்ட சொல்லிப்புட்டேன்…” என்று கடுகடு முகத்தோடு முகம் சிவக்க பேசிவிட்டு, விருவிருவென்று முகத்தை திருப்பிக்கொண்டு சென்றவளை ஏனோ இவளுக்கும் தடுக்கவோ! சமாதானப்படுத்தவோ தோன்றவேயில்லை…
“மனுசியா பாக்கமாட்டோமாமுல்ல… ஆளப்பாரு இப்ப மட்டுமா மனுசியாட்டமா இருக்கா? ராட்சசி… இவளுக்காவ தானே ஆத்தா அப்பன்னு யாரையும் பாக்கப்போகமா கெடக்கேன்… ஆளும் மண்டையும்… இவள… போயிட்டு வந்து வெச்சுக்கிடுதேன்…” என்றுவிட்டு இவளும் சிட்டாய் மாறி பறக்க, இவளுங்க பேசிகுகிறத பார்த்தா நமக்குமே எங்கேயோ இடிக்கிறாப்புல இருக்குல… இடிக்கட்டும் இடிக்கட்டும் அதெல்லா என்ன சேதிண்டு பொறவு பொறுமையா பாத்துப்போம்… இப்போதைக்கு இன்னொரு எடத்துக்கு போவோம்…
கீச்கீச் என்று ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, என பல வண்ணங்களின் நிற்பதும் பறப்பதுமாய் இருந்த காதல் பறவைகளை கூண்டிற்கு வெளியே நின்றபடி ரசித்துக்கொண்டிருந்தான் அவன்… சிலுசிலுக்கும் தென்றல் காற்று கேசம் கலைத்தாட வெகுதூரமாய் தெரிந்த கடலும், கரையை வந்து சத்தமின்றி முத்தமிட்டு ஓடும் கடல் அலையும், பறவைகளின் கீச் கீச் ஒலியும் அவனை உற்சாகமாய் வைத்திருந்தது…
புதிய இடம் என்ற சிறு சங்கோஜத்தை தவிர வேறு எந்த அசௌகரியமும் அவனுள் எழவேயில்லை… வரவில்லை, பிடிக்கவில்லை, வேண்டாம் என்று விடாமல் தாயிடம் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்குமே செல்லுபடியாகமல் போக, அதன் பயனாய் தான் இன்று இப்படியொரு சூழலில் வந்து நிற்பதும்… சுற்றுப்புறம் உண்மைக்குமே பிடித்திருக்கிறது அழகாய் இருக்கிறது என்று எதார்த்தமாய் சொல்லிவிட்டால் கூட அது அவனை எங்கெங்கோ கூட்டி செல்லும் என அமைதியாக காத்திருந்தான்… ஆம் அந்த நிமிடம் அவன் காத்திருக்க தான் செய்கிறான்… அதுவும் ஒரு பெண்ணுக்காக…
தன்னை நினைக்கவே கொஞ்சம் சிரிக்கத்தான் தோன்றியது… திருமணம் என்ற ஒன்றே தன் வாழ்வில் இருக்காது, இருக்கவும் கூடாது என்று ஒரு முடிவோடு வலம் வருகையில் பெற்றவர்களின் பிடிவாதத்திற்காக இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் அவசியம் தானா! என்று தோன்றியது… அநாவசியமாய் தன் விருப்பமின்றி அம்மா ஏதோ வாக்கு கொடுத்துவிட்டார், உறவுகளில் மத்தியில் அவருக்கு அவமானமாய் போய்விடும் என்று அவருக்காக வந்து நிற்பது தன் முடிவில் ஏற்பட்ட முதல் சறுக்கலோ என்றும் தோன்றியது…
விருப்பமேயில்லாமல் உறவுகள் படை சூழ கிளம்பி வந்து, சபையில் அசடு வலிய அமர்ந்து, காபியோடு வந்த பெண்ணை நிமிர்ந்தும் பாராமல் கடனேயென வாங்கி கொஞ்சமாய் உறிஞ்சிவிட்டு இதோ கிளம்பிவிடுவோம் என காத்திருக்க, தேவையேயில்லாமல் அந்த பெண்ணோடு தனிமையில் சிறிதுநேரம் பேச சொன்னால் என்னவென்று சொல்வது? சபை நடுவே மறுத்துப் பேசமுடியாமல் தாயையும் தந்தையும் பார்த்து முறைத்து வைக்க, அவர்களோ விழிகளால் இறைஞ்சியபடி தான் இருந்தனர்… வேறுவழியே இல்லாமல் எழுந்து அவர்கள் காட்டிய மாடிப்படியில் ஏறிவந்து நின்றால் அந்த பெண் அங்கிருந்து அவனை ஈர்த்தாளோ! இல்லையோ! காணும் இடம் யாவும் அவனை அவன்பால் ஈர்த்துவிட்டது…
சில மணித்துளிகள் பறவைகளை பார்த்தபடியே அமைதியாய் நின்றிருப்பான், திடிரென்று மல்லிகையின் மணத்தோடு, கலகலவென்ற வளையல்களின் சப்தமும், கொலுசொலியும் கேட்க, திரும்பிப் பார்த்தால் அவள் நின்றிருந்தாள் கொஞ்சமே கொஞ்சம் வெட்கப்பூக்களை சூடியபடி…
“ஓ… ஹலோ… வந்து ரொம்ப நேரமாச்சா?…” என்றவனின் கேள்விக்கு உதட்டை சுழித்து இல்லை என்பது போல் கொஞ்சமாய் தலையாட்ட, அவளின் தலையாட்டலில் காதில் கிடந்த குடை சிமிக்கியும் அழகாய் நர்த்தனமாடியது… இயற்கையை இயல்பாய் ரசிப்பவன் அதனையும் ரசிக்கமாட்டானா, விழிகளில் பொதித்துக் கொள்ளத்தான் செய்தான்… அதன்பிறகு இருவரும் என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாகிவிட, அவனே தான் அவர்களின் மௌனத்தையும் உடைத்தான்… பின்னே அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே… பேசினால் தானே எல்லாம் என்று அவளை பார்த்தவன்,
“இங்கயிருந்து கடல் எவ்ளோ தூரத்துல இருக்கும்?…” என்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏனோ கழுத்தை வலிப்பது போலத்தான் இருந்தது…
‘யப்பா இவ்ளோ உயரமா? இவருக்கு நான் ஷோல்டருக்கு தான் இருப்பேன் போலயே…’ என்று அவனது உயரத்தை விழிகளில் அளக்க, அவனோ அவள் முன் சொடுக்கிட்டு அவளது கவனத்தை திருப்பினான்…
“ஹலோ… எக்ஸ்யூஸ்மீ… என்னாச்சு?… நான் மட்டும்தான் பேசிட்டே இருக்கேன் நீங்க ஏதுமே பேச மாட்டுறிங்க?…” என்க, உதட்டிற்குள்ளே புன்னகையை தேக்கியவளோ!
“தௌசண்ட் மீட்டர்ஸ்க்குள்ள தான் இருக்கும்…” என்க, அவனோ கடலை பார்த்தபடியே,
“ஓ…” என்றுவிட்டு அமைதியாய் பறவைகளை பார்த்தபடியே அவளிடத்தில் எப்படி உண்மையை சொல்வது என்று தயங்கியபடியே நிற்க அவளது குரலே அவனை திசை திருப்பியது…
“ஒங்களுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல தானே!…” என்று சிறிதும் யோசியாமல் சட்டென்று கேட்டவளை திரும்பி பார்க்க, அவளோ கூண்டிற்கு அருகே வந்து கைகளை கட்டியபடியே நின்றிருந்தாள்…
“ஆமா அதெப்படி ஒங்களுக்கு?… சாரி…” என்றவாறு நிற்க,
“ப்ச்… அட விடுங்கங்க… எனக்கே மேரேஜ் பண்ணிக்கவெல்லா இப்போ இன்ரெஸ்டேயில்ல… மேல படிக்கணும்னு தான் ஆசை… அப்ளே பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… எங்கப்பத்தா கெழவி தான் சும்மா இல்லாம ஒங்க அம்மா அவங்களுக்கு ஒன்னோ ரெண்டோ விட்ட தூரத்து மக ஒறவுன்னு ஒங்கள கூப்பிட்டு வச்சுருக்கு…” என்று கூலாய் சொல்ல, இவனுக்கு அத்தனையும் சுலபமாய் போனதை போன்றதொரு உணர்வு…
“அதுசரி… ஆமா ஒங்களுக்கு எப்படி எனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லையின்னு தெரிஞ்சது?…” என்று நேரடியாகவே கேட்க,
“ஒரு கெஸ்ஸிங் தான்… கார்ல இருந்து இறங்கும் போதே எல்லாருக்கும் கடைசியா தான் இறங்குனிங்க… வீட்டுக்குள்ள வந்த போதும் யாரையும் அவ்ளோவா கவனிச்ச மாதிரி தெரியல… எல்லாத்துக்கும் முக்கியமா என்ன நீங்க நிமிர்ந்து பார்க்கவேயில்லை… தனியா பேசுறிங்களான்னு கேட்டப்ப கூட வேண்டாமுன்னு தான் தலை அசைச்சிங்களே தவிர எழுந்துக்க நினைக்கல… இங்க வந்துமே…” என்று படபடவென அடுக்கடுக்காய் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த இவனுக்கு தான் இதழ்கள் தானாய் விரிந்தது…
இந்த தேனு தான் மேகா மூக்க உடைச்சு நாக்அவுட் பண்ணுறாளா😂😂.
Haahaa பேர் சூப்பர், ரெண்டு பேரும் பேசிக்கரத பார்த்த , எதோ வித்தியாசமா இருக்கு, மொழி நடை ரொம்ப நல்லா இருக்கு….
இந்த புள்ள ஏன் ஊர் பேர கேட்டதும் இப்படி.கோவப்படுது….இம்புட்டு நேரம் அமைதியா இருந்த புள்ளைய ஊருக்கு.வானு கூப்டதும் கோவப்படுதுனா என்ன காரணமா இருக்கும்?
Enakum etho idikurapla iruku…. Y parents pakka maga pola…. Boss ku ethu love story irukumo??? Nic starting sis .. keep going….