Loading

1.விடா ரதி….

 

 

கொடைக்கானல்….. 

 

அதிகாலை சூரியனைத் தேடி ஒரு ஜோடி கண்கள் தனது தேநீர் குவளையுடன் தன் அறைக்குள் இருந்த உப்பரிகை கதவினை திறந்து வெளியே வந்தன. 

 

காலை ஏழு மணிக்கு கொடைக்கானலில் வெய்யோனைக் காண நினைப்பது அதிகப்படி தான். ஆனாலும் அவளுக்கு அந்த முதல் கதிர்களின் இளஞ்சூடு மிகவும் பிடிக்கும். ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு இப்போது தான் மீண்டும் தாய் நாட்டிற்கு வந்திருக்கிறாள். கழுத்தில் கட்டியிருந்த புது மஞ்சள் தாலி அவளின் வனப்பை பன்மடங்கு அதிகமாக காட்டியது.  

 

அவள்….. ஸ்வர்ண ரதி…. பெயருக்கேற்றார் போல ஸ்வர்ணத்தில் செய்த ரதி தான். சுருக்கமாக ரதி அனைவருக்கும்.  தந்தை, தாய் மற்றும் ஓர் இளைய சகோதரன் இது தான் அவளது குடும்பம். 

 

“ஹே ரதி….. குட் மார்னிங்….”, என அந்த தெருவில் நடந்து செல்லும் ஒருவர் அவளைப் பார்த்து கையசைத்தார்.. 

 

“குட் மார்னிங் அங்கிள்….. ஜாக்கிங் வாக்கிங் ஆகிரிச்சா?”, அவர் நடந்து செல்வது பார்த்து கேட்டாள். 

 

“நீ என்கூட வா ரெண்டு பேருமே ஓடலாம்… ஐ மீன் ஜாக்கிங் போகலாம்…”, என வெடிச்சிரிப்புடன் கூறினார். 

 

“அங்கிள் ஆண்ட்டியவே கூட்டிட்டு நீங்க ஓடலாம்…. பாருங்க எவ்ளோ வேகமா உங்க பின்னாடி வராங்க….”, பின்னால் அவரின் மனைவி காய்கறிகள் வாங்கிக்கொண்டு நடந்து வருவதை கூறினாள். 

 

“அவ கூட தானே முப்பது வருஷத்துக்கு முன்னவும் ஓடினேன்… ஒரு சேஞ்ச் வேணாமா ரதி?”, மனைவிக்காக நின்றபடி அவளுக்கு பதில் கொடுத்தார். 

 

“ஆண்ட்டி…. கேட்டீங்களா?”

 

“கேட்டேன் ரதி குட்டி…. வீட்டுக்கு வரட்டும் கவனிச்சு விடறேன்… நீ வீட்டுக்கு சீக்கிரம் தம்பி கூட சாப்பிட வாடா… “

 

“வரேன் ஆண்ட்டி…. டேக் கேர் அங்கிள்…. நைஸ் டே….”, சிரிப்புடன் கூறினாள். 

 

அழகான காலை பொழுது, இதை அனுபவித்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது… கடைசியாக இங்கிருந்து வேலை கிடைத்து செல்லும்போது கூட மகிழ்ச்சியான மனநிலை இல்லை. எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் ஓடிவிடும் எண்ணம் மட்டுமே மனதில் மேலோங்கி இருந்தது. 

 

அப்போது சென்றவள் இப்போது தான் மீண்டும் இல்லம் திரும்புகிறாள். 

 

29வயது யுவதி…. வயதை விட இளமையாக தான் தோற்றம் அமைந்திருந்தது. திருமணம் என்னும் பந்தம் வேண்டாம் என மறுத்து இத்தனை ஆண்டுகள் தள்ளிவிட்டாள். அதனால் தானோ என்னவோ திடீரென்று திருமணம் முடிந்து இப்போது கணவனது இல்லத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாள். 

 

சடுதியில் நடந்து முடிந்த அனைத்தும் இன்னமும் அவளுக்கு ஆச்சர்யமும், சங்கடமும் தான் அளித்தன. 

 

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கூட சுந்தரியுடன் பெரும் போராட்டம் நடத்தினாள் இத்திருமணத்தை நிறுத்தச் சொல்லி… ஆனால் அவளின் எந்த எதிர்ப்பும் அவன் முன்னால் வேலை செய்யவில்லை. தாலி கட்டும் நொடி வரையிலும் அவன் அவளை சந்திக்க மறுத்துவிட்டான். ஏன் இப்படி என்று அவளுக்கும் புரியவில்லை. 

 

இறுதியாக வழக்கமான பெற்றவர்களின் பாசத்தின் விளைவு, அவர்களின் கட்டாயத்தை ஏற்றுக் கொள்ள சித்தமானாள். 

 

“யாருமே என்னை புரிஞ்சிக்காதீங்க….. உங்க இஷ்டத்துக்கு என்னமோ செஞ்சி தொலைங்க… நாளைக்கு மட்டும் நான் நல்லா வாழ்ந்துடுவேனா?” , இயலாமை தந்த கோபத்தில் கத்தினாள். 

 

“இப்போ மட்டும் நீ வாழறதா அர்த்தமா ரதி? அவனுக்கு என்ன கொறச்சல்? “, சுந்தரி சூடாக பதில் கொடுத்தாள். 

 

“உனக்கு தெரியாதா சுந்தரி? என் மனசு இன்னமும் ஆறல டி…. என் நேசம் தோத்து பல வருஷம் ஆச்சி…”, கலங்கிய கண்களுடன் கூறினாள். 

 

“யார ஏமாத்த இப்படி சொல்ற ரதி? நீ நேசிச்சவன தான டி இப்பவும் கட்ட போற….. இதுக்கு மேல தள்ளி போட முடியாது டி…”, தோழி சுந்தரியின் கேள்விக்கு பதில் கூறாமல் அமர்ந்திருந்தாள். 

 

“எனக்கு கல்யாணம் வேணாம்ன்னா விடுங்களேன்… என் தம்பிக்கு நான் கல்யாணம் பண்ணா தான் பொண்ணு கிடைக்குமா என்ன?”

 

“உன்ன வீட்ல முழுசா வச்சிட்டு அவனுக்கு எப்படி பண்ண முடியும்? அப்பா அம்மா நிலமைய யோசிச்சு பாரு ரதி…. “

 

“அதெல்லாம் யோசிச்சி தானே இப்படி நிக்கறேன்…. விடு சுந்தரி…. ஒரு வாரம் இருக்கலாம்னு வந்தேன்.. இன்னைக்கே கிளம்ப வச்சிடுவீங்க போல…”

 

“எங்க போவ நீ? எப்பவோ நடந்தத நினைச்சிட்டு இன்னும் பைத்தியகாரி மாதிரி பேசிட்டு இருக்காத….. அன்னிக்கு நடந்ததுல உன் தப்பு தான் அதிகம்…. நீயா ஒன்ன நினைச்சிட்டு இப்படி உன் வாழ்க்கைய வாழாம வீம்பு பண்ணிகிட்டு இருக்க டி….”, சுந்தரி கோபத்துடன் கூறினாள். 

 

“நானா ஒன்ன நெனைச்சிகிட்டேனா? உனக்கு நடந்த எல்லாமே தெரியும் சுந்தரி.. நீயும் என்னையவே திட்டாத…. அன்னிக்கி அவ.. அந்த சுகன்யா என்ன சொன்னா? நம்ம பிரியா என்ன சொன்னா? நீயும் தானே கேட்ட?”, கலங்கிய கண்களுடன் கூறினாள். 

 

“பிரியா உன்கிட்ட கடைசியாக எப்ப பேசினா ரதி?”

 

“அவ கல்யாணம் முன்ன பேசினா… பொண்ணு பொறந்தப்போ ஒரு தடவ… பையன் பொறந்தப்போ மெசேஜ் பண்ணா…. “

 

“ஒன்பது வருஷம் ஆச்சி…. ஒரு அஞ்சி நிமிஷம் உன்கிட்ட பேச அவளுக்கு நேரம் இல்லாத அளவுக்கா அவ பிஸியா இருக்கா?”

 

“இப்போ நம்ம கேங்ல கண்டாக்ட்ல இருக்கிறதே நான் நீ ஸ்வேதா மட்டும் தான். மத்தவங்க எல்லாமே செட்டில் ஆகிட்டாங்க…. ஸ்வேதா கூட இப்போ அப்ராட் போயிட்டா… நீ ஒரு பக்கம் வேலைல இருக்க நான் ஒரு பக்கம் இருக்கேன்…. நாமளே இப்போ தான் இத்தன வருசம் கழிச்சு மீட் பண்றோம்…. “

 

“உனக்கு இன்னும் ஒரு சில விசயம் புரியமாட்டேங்குது ரதி…. இப்ப தெளிவா விளக்க நேரம் இல்ல…. மொத தாலிய வாங்கு அப்பறம் உன் புருஷன் கழுத்த பிடிச்சி உண்மைய தெரிஞ்சிக்க…..”, எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். 

 

“இன்னும் என்ன உண்மை இருக்கு? எதுவுமே சொல்லாம என்னை வெறுக்கர ஒருத்தனுக்கு கட்டிவைக்கறீங்க…. இது மட்டும் சரியா?”, ரதி செல்பவளை பார்த்துக் கேட்டாள். 

 

“அதையும் அவன்கிட்டயே கேட்டுக்க…. ப்ளவுஸ் வாங்க நேரமாச்சு…. என் புருஷன் கடைல வெயிட் பண்ணிட்டு இருக்கார்….”

 

“உன் புருஷனா? உனக்கு எப்ப டி கல்யாணம் ஆச்சி?”, அதிர்வுடன் கேட்டாள். 

 

“உனக்கு முடிஞ்ச ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம்…. உன் புருஷன் வீட்டுக்கு நீ போன அப்பறம் பத்திரிக்கை வைக்கறேன்…. இப்போ ஃபேஷியல் பண்ண ஆள் வருவாங்க கம்முனு மூஞ்ச குடுத்துட்டு படுத்திரு….”, சுந்தரி அவளுக்கு நின்று கூட பதில் கொடுக்காமல் பேசியபடியே சென்றுவிட்டாள். 

 

அடுத்த இரண்டு நாட்களில் திருமணமும் முடிந்தது. அவன் கையால் பொன் மாங்கல்யம் வாங்கிவிட்டாள். இது நடக்க சில ஆண்டுகள் முன்புவரை வேண்டாத தெய்வமில்லை, இன்று நடந்து விட்டது ஆனால் அவளால் தான் மனதார எதையும் ஏற்க முடியவில்லை. சில ஆண்டுகள் முன் இதயத்தில் குத்தியமுள் இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது மாங்கல்யத்துடன் உரசி பெரிதாய் உறுத்துகிறது. 

 

குழப்பமான மனம் அவளது முகத்தில் தெளிவாக தெரிந்தது. தாலி கட்டியவனின் முகமோ எதையும் வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தது. அவன்…. ரகுபதி….. ராக்கி (Rocky)…   

 

ரகுபதி மதுரைவாசி… தாய் தந்தைக்கு ஒரே புதல்வன். பெரிதளவில் விவசாயம் பார்க்கும் குடும்பம் அவனுடையது. ஆனாலும் தொழில் மேலாண்மை பயின்று விட்டு கொடைக்கானலில் பல்வகை துணிகள் விற்கும் நவீன வடிவமைப்பு கொண்ட ஷோரூம் வைத்திருக்கிறான்.

 

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே அவனை மனதில் சுமந்துக் கொண்டிருக்கிறாள். இவன் அவனது நண்பனிடம் அன்று கூறிய ஒரு சொல்லை கேட்டுவிட்டு நாட்டை விட்டே சென்றுவிட்டாள். 

 

இப்போது இவனே அவளுக்கு மணவாளனாக அமைந்தும் அந்நொடியை, அதன் இதத்தை முழுதாக அனுபவிக்க இயலாமல் தவிக்கிறாள் ரதி. அவன் முகம் கண்டாலே உள்ளுக்குள் குதூகலம் கொண்டு தன்னை மறப்பவள். 

 

இப்போது சடங்குகள் செய்யும்போது அவன் முகம் பார்க்க நேரும்போதெல்லாம் தன்னை மறந்து நின்றுவிடுகிறாள். அவனோ, பின்னால் நிற்பவர்களோ தட்டினால் தான் சுயஉணர்வு பெறுகிறாள். அந்தக் கண்களை கண்ட நொடி இன்னும் சுற்றம் மறந்து போகும் அந்த உணர்வு தான், அவளை பெரிதாக ஆட்டிப் படைத்தது. 

 

அப்பப்பா….. என்ன கண்கள் அவை…. பெண்களின் கண்களை எல்லாம் கவிபாடும் புலவர்கள் அவன் கண்களின் ஆழத்தை அறியாமல் சென்றுவிட்டனர். 

 

பார்த்ததும் இழுக்கும் காந்த விழிகள் அவனுக்கு. உதட்டில் உதிர்க்கும் சிரிப்பு கண்களில் தெறிக்கும். அதை பார்த்து ரசிக்க அவளும் அடிக்கடி அவன் வேலையிடம் சென்று வருவாள். 

 

அவனும் கூட அவளைப் பார்ப்பான். அதில் ஆர்வமும், சிரிப்பும் கூட அவ்வப்போது தென்படும். ஆனால் முழுதாக அவளின் மேல் ஈர்ப்பு உள்ளதென அவனும் காட்டியதில்லை, அவளும் அவன் மனதை முழுதாக அறியவில்லை, உணரவுமில்லை….

 

இப்படியாக அவர்களுக்கு ஒரு கடந்த காலம் இருந்தும் ஏன் இத்தனை எதிர்ப்பு அவளுக்கு இந்த திருமணத்தில் ?

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
29
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்