687 views

வணக்கம் உறவுகளே! ❤️❤️❤️

(தேவனின் மஞ்சமெனும் வீணை போட்டிக்காக எழுதிட்டு இருக்கேன். முதல் நான்கு அத்தியாயங்கள் மட்டும் சிறிய அளவில் வரும். அதன்பிறகு வரும் அனைத்து அத்தியாயங்களும் பெரிய அளவில் வரும் 😍😍😍. இங்கு ஒரு அத்தியாயங்களில் வரும் பதிவுகள் பிரதிலிபி தளத்தில் மூன்று அத்தியாயங்களாக தனித்தனியாக வரும். குழம்பிக்கொள்ள வேண்டாம். அன்பான ஆதரவுகளுக்கு நன்றிகள்.)

தேவன் 1

 

நெடுஞ்சாலை மையத்தில் பேருந்து பயணப்பட்டுக் கொண்டிருக்க, பின்னால் வந்த லாரி பெரும் சத்தத்தோடு முன்னே கடந்தது. ஜன்னல் இருக்கையில் தலை சாய்ந்து விழி மூடியவள் தன்னை உரசி கொண்டு செல்லும் லாரியின் சத்தத்தில் கண் விழித்தாள்.

லேசாக தூங்கிய கண்களை சுழற்றி தன்னை தெளிய வைத்தவள் கைபேசியில் மணியை பார்த்தாள். ஐந்து மணி நேரம் கடந்து இருக்க இன்னும் அரை மணி நேரத்தில் சொந்த ஊரை அடையப் போகிறாள்.

தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருந்தவள் பேருந்தில் கேட்கும் மிக மெல்லிய ரகமான காதல் பாடல்களை ரசித்துக் கொண்டு, மடக்கி இருந்த காலை நன்றாக நீட்டி அமர, கைப்பேசி ஒலித்தது.

“கொஞ்ச நேரத்துல முன்னாடி இருப்பேன் ம்மா.” என்றதும் எதிர்புறத்தில்,

“யாழு அப்பா வர லேட் ஆகுமாம்‌. நீயே நம்ம ஊரு காரங்க யாராவது இருந்தா கேட்டு வந்துடு.” என்றார் யாழினி அம்மா பரிமளம்.

சம்மதத்தோடு அழைப்பை துண்டித்தவள் அடுத்த இருபது நிமிடங்களில் தரையிறங்கினாள் சூனாம்பேடு பேருந்து நிறுத்தத்தில். தன் ஊர் மண்ணில் கால் வைத்ததும் தன்னை அறியாமல் சிரிப்பு குடியேற, அவை மாறாமல் பார்வையை சுழல விட்டாள் ஊர் காரர்களை தேடி.

அவள் நேரம் யாரும் தென்படாமல் போக, ஊருக்குள் செல்லும் பேருந்து தேடி நகர்ந்தாள். கண்டவள் அதில் ஏறும் நேரம்,

“பாப்பா எப்ப வந்த.” என்றவாறு அவளை ஒட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்தினான்.

குரலை வைத்தே தன் மாமனை கண்டு கொண்டவள், “அஞ்சு நிமிஷம் ஆகுது மாமா.” என்றாள் புன்னகை மாறாமல்.

“ஒரு போன் போட்டு வர சொல்லி இருக்கலாம்ல.” என்றவன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பிக்க, உரிமையோடு பின்னால் அமர்ந்தாள் யாழினி.

“அப்பா வரேன்னு சொன்னாங்க மாமா அதனால தான் கூப்பிடல.” என்றவளை முன்பக்க கண்ணாடியில் பார்த்தவன்,

“என்ன பாப்பா உடம்பு இளைச்ச மாதிரி இருக்கு. சரியா சாப்பிடுறியா இல்லையா?. நம்ம ஊர் பக்கம் இருக்குறதா பார்த்து படிக்கிறதை விட்டுட்டு இப்படி ஹாஸ்டல்ல தங்கி உன்னை நீயே வருத்திக்கிட்டு இருக்க.” என்றவனை முறைத்துக் கொண்டு வந்தாள்.

அதை உணர்ந்தவன் வாகனத்தை ஓட்டியவாறு திரும்பி அவள் முகத்தை நோக்க, “எனக்குத்தான் இந்த ஊர்ல இருக்க பிடிக்காதுன்னு தெரியும்ல மாமா. நானே எப்படா இங்க இருந்து கிளம்புவோம்னு இருந்தேன். நீ வேற!.”  என்றவளை கண்டு நகைத்தவன்,

“நம்ம ஊர் அருமை தெரியாம பேசிக்கிட்டு இருக்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த ஊரோட அழகு உன் கண்ணுக்கு தெரியும்.” என்று  இருசக்கர வாகனத்தை குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் உருள விட்டான்.

“ஆமா… ஆமா! அழகு தெரியும். இந்தா கீழ இருக்கு பாரு இந்த பள்ளம்  இது ஒரு அழகு. எதிர்ல வருது பாரு ஆட்டு புழுக்கைய அள்ளிக்கிட்டு ஒரு வண்டி அது ஒரு அழகு. இந்தா அந்தக் கிழவிய பாரு வெத்தல பாக்கு போட்ட வாயோட கூழ் வித்துட்டு இருக்கு அது ஒரு அழகு.” என்று அவள் கண்ணிற்கு தென்படும் அனைத்தையும் சலித்து கூறினாள்.

“பாப்பா இவ்ளோ சலிப்பா சொல்லாத இந்த ஊர்ல தான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தணும்.”

“நான் எதுக்கு இந்த ஊர்ல இருக்க போறேன். நான் எல்லாம் நல்லா படிச்ச பையனா பார்த்து டவுனுக்கோ இல்ல சென்னைக்கோ போயிடுவேன். இப்ப வர மாதிரி ஏதாவது ஒரு நல்லது கேட்டதுக்கு மட்டும் தான் இந்த ஊர்ல கால் வைப்பேன்.” என்று ரோஷத்தோடு அவள் பேச,

“உன்னைய யாரு அந்த மாதிரி ஒரு பையனுக்கு கட்டித் தரப் போறா. ஏதோ படிக்கப் போறன்னு பார்த்தா மொத்தமா ஊரை காலி பண்ற ஐடியால இருக்கியா. எங்க போனாலும் சொந்த மண்ணு மாதிரி வராது பாப்பா. உனக்குன்னு பொறந்தவன் இந்த ஊர்ல இருந்தா உன்னால ஒண்ணும் பண்ண முடியாது.” என்ற தேவநந்தன் கழுத்தில் கை வைத்து குலுக்கியவள்,

“மாமா விளையாட்டுக்கு கூட அப்படி ஒரு வார்த்தையை சொல்லிடாதீங்க. என்னால இந்த ஊர்ல குப்பை கொட்ட முடியாது. எனக்குன்னு பிறந்தவன் நிச்சயம் இந்த ஊர்ல இருக்க மாட்டான்.” என்றாள் உறுதியோடு.

தன் மேனி நோகாமல் குலுக்கியவளின் அசைவில் சிரித்தவன், “அது எப்படி பாப்பா அவ்ளோ உறுதியாக சொல்ற.” கேட்டான்.

“இந்த ஊர்ல என்னை கட்டிக்கிற அளவுக்கு ஒரு ஆம்பளையும் இல்லையே மாமா.” என்றவளை ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.

“அழகு மாமா” என்று தேவநந்தன் கன்னத்தை கிள்ளியவள் அவளுக்கு பிடித்தமான நீரோடையில் கால் வைக்க இறங்கினாள். அவளுக்கு இவ்வூரில் சொல்லிக் கொள்ளும்படி பிடித்த ஒரே இடம் இவை தான்.

சிறுவயதில் தேவநந்தனோடு அதிகம் விளையாடிய இடமும் இது தான். இத்தனை வயதாகியும் அவளுக்கு பிடித்ததை மறக்காமல் இருப்பவன், “பாப்பா ரொம்ப நேரம் இருக்க கூடாது.” என்ற நிபந்தனையோடு அழைத்துச் சென்றான் நீரோடை அருகில்.

தேவநந்தன் கைபிடித்து நடந்தவள், “மாமா ஒருவேளை எங்க அப்பா என்னை யாருக்காவது கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சா நீ வந்து தடுப்ப தான.” என்றிட, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் போல் விதி சிரித்தது.

பதில் பேசாமல் வரும் மாமனை திரும்பி பார்த்தவள், முறைத்தாள். அதில் வைரங்கள் தோற்கும் அளவிற்கு சிரித்தவன், “வேற என்ன பாப்பா பண்ண சொல்ற. உங்க அப்பா தான் அவன உனக்கு கட்டி வைக்கணும்னு குதியா குதிச்சிட்டு இருக்காரே. பேசாம அவனை கட்டிக்கிட்டு வாழ பாரு.” என்றவன் அவள் நீரில் வழுக்கி விழுந்து விழாமல் இருக்க கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

“மாமா நான் உன்னை கட்டிக்க சொன்னா கூட கட்டிப்பேன். ஆனா, அவன கட்டிக்க மாட்டேன்.” என்றவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு தடுமாற்றத்துடன் நடக்க, தேவநந்தன் மனம் தடுமாறியது.

அவை உடம்பில் பிரதிபலித்து அசையாமல் நின்றவனை பார்த்தவள், “நடங்க மாமா.” என்றாள் சாதாரணமாக.

இயல்புக்கு மீண்டவன் நடை போட்டுக்கொண்டு பேசினான், “ஏன் பாப்பா அப்படி சொல்ற? அவன உனக்கு பிடிக்காதா?” என்று கேட்டான்.

“தெரியலையே மாமா. உன்னை கேட்டா கண்ண மூடிட்டு சொல்லுவேன் ரொம்ப பிடிக்கும்னு. அவன் மூஞ்ச நாலு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது. என்னைய மாதிரி இந்த ஊரு வேணான்னு வெளி ஊருக்கு படிக்கப் போனவன் தான் இன்னும் ஊர் பக்கம் வரல.

என்னை பெத்தவங்களுக்கு வேற வேலை இல்லை. அம்மாக்கு உன்னைய கட்டி வைக்கணும்னு ஆசை. அப்பாக்கு அவன கட்டி வைக்கணும்னு ஆசை. எனக்கு இந்த ஊர்லயே இல்லாம நல்லா, அழகா, படிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை.” என்றவள் நீரோடை விழும்பில் அமர்ந்துக் கொண்டு மாமனையும் அமரச் சொன்னாள்.

அவளை விட்டு சற்று விலகி அமர்ந்தவன், “ஒருவேளை இப்ப அவனை உனக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிப்பியா பாப்பா.” என்றவன் பார்வை ஓடும் நீரில் தான் இருந்தது.

“அதான் அப்பவே சொன்னனே மாமா இந்த ஊர்ல அப்படி ஒரு ஆம்பளையும் இல்லன்னு அதுல அவனும் தான் வருவான்.” என்றவள் அவனை நெருங்கி அமர்ந்து,

“ஆனா நான் சொன்ன வார்த்தைல ஒரு சின்ன மாற்றம்.” என்றாள் ரகசியமாக.

நெருங்கி வந்தவளின் மனம் கோணாமல் விலகி அமர்ந்தவன் பதிலுக்காக அவள் முகம் பார்க்க, “ஒரே ஒரு ஆம்பள இருக்கான்.” என்று விலகளை குறைத்து நெருங்கிய அமர்ந்தாள்.

மாமன் மகளின் கள்ள கபடம் இல்லாத  உரசலில் மனம் மகிழ, “யாரு அவனா” என்று கேட்டான்.

பதில் சொல்லும் முன் முறைத்தவள்  கை காட்டினாள் ஓடும் நீரை. தெளிவு இல்லாத உருவம் தான் என்றாலும் புரிந்து போனது நீரில் காட்சி அளிக்கும் தன்னை பார்த்தவனுக்கு.

“ஒழுங்கா படிச்சு நீயும் என்னை மாதிரியோ இல்ல அவன மாதிரியோ இருந்திருந்தா உன்னையவே கல்யாணம் பண்ணி இருப்பேன் மாமா.” என்றவள் கையில் இருக்கும் செல்போன் வைப்ரேட் ஆனது.

அன்னை அழைப்பை பார்த்தவள் தேவநந்தனை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் ஊரை நோக்கி. ஏழு நிமிட பயணத்திற்கு பின் யாழினி வீட்டின் முன்பு விட்டவன் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப,

“உள்ள வாங்க மாமா.” என்றாள் யாழினி.

“எதுக்கு காலையிலயே உங்க அப்பா சண்டைக்கு பாயவா.” என்றவன் சிரிப்போடு சென்றான்.

செல்லும் மாமனின் முதுகை பார்த்தவள் அப்படியே நின்று கொண்டிருக்க, “இங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க வீட்டுக்குள்ள வராம.” மகளை வாசலில் பார்த்த பரிமளம் சத்தமிட்டார்.

“மாமா  விட்டுட்டு போச்சு ம்மா உள்ள வர சொன்னேன் ஓடிடுச்சு.” என்றவாறு வீட்டிற்குள் செல்ல,

“உங்க அப்பாக்கு பயந்து தான்  ஓடுறான். மனுஷனுக்கு சின்ன தங்கச்சி மகனை பார்த்தா மட்டும் சிரிப்பு பொங்கும்.” என்றவர் மனதில் தேவநந்தன் தான் பிடித்தமான நாத்தனார் மகன்.

வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்த சண்முகம் மகளை நலம் விசாரிக்க, அவளும் தந்தைக்கு நலம் விசாரிப்புகளை இடமாற்றினாள். தந்தை மகள் இருவருக்கும் பரிமளம் உணவு பரிமாறிக் கொண்டிருக்க,

“யாழு” என்றழைத்துக் கொண்டு உள்ளே வந்தார் தேவநந்தனின் தாய் அன்னம். அவரைப் பார்த்ததும் சண்முகம் கடுகடுக்க,

“வா அன்னம்” சிரித்த முகத்தோடு வரவேற்றார் பரிமளம்.

அண்ணனை கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தவர், “சாமி சொல்லுச்சு யாழு  வந்திருக்கான்னு. அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.”

“அத்தை! முன்னாடியே சொல்ல கூடாதா… எட்டு இப்ப தான்  பின் வாசல் வழியா சோளக்காட்டுக்கு போச்சு. என் அத்தை  பார்க்கணும்னு அதை பிடிச்சி வச்சியிருப்பேன்.” மருமகள் கேலியில் காதை திருடியவர்,

“வாடி என் வீட்டு மருமகளே! வாய நீட்டி எச போட்டு பார்க்குறியா என்கிட்டையே. இந்த நாக்குக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்தவளே நான் தான்.” என்றார் சிரிப்போடு.

“அதனால தான் அத்தை நான் அப்படியே உங்கள மாதிரி வாயை திறந்தா மூடாம பேசுறேன்.” என்று இன்னும் செல்ல அடிகளை வாங்கிக் கொண்டாள் அவரிடமிருந்து.

மூவரும் பேசி சிரிப்பதை பார்த்த சண்முகம், “யாழு சாப்பாட்டுல கைய வச்சுக்கிட்டு என்ன பேச்சு வேண்டி கிடக்கு.” என்று சத்தமிட, சாப்பாட்டில் கவனமானாள் அவரின் புதல்வி.

அண்ணனின் வார்த்தையில் மனம் ஒரு நொடி சங்கடப்பட்டாலும் உடனே சிரித்த முகமாக, “யாழு சாப்பிட்டு வீட்டு பக்கம் வா” என்று நகர்ந்தார்.

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்த சண்முகம், “அந்த வீட்டுக்கு போனா இந்த வீட்டுக்கு வரக்கூடாது சொல்லிட்டேன்.” என்றதோடு பாதி சாப்பாட்டில் விலகினார் .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
33
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *