Loading

 

 

(தீய பழக்கம், மது போன்றவற்றை ஊக்கப்படுத்தும் அல்லது பெண்கள், இரண்டாம் திருமணம், உறவுமுறை போன்றவற்றை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும் இக்கதை எழுதப்படவில்லை. தன்னை சுற்றி நடந்த கருவை மனதில் வைத்து கற்பனை கதாபாத்திரங்களாக உங்களிடம் கொடுக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

 

 

பிரதிலிபியில் தனித்தனியா வரும் மூன்று அத்தியாயங்களை இங்கு ஒரு அத்தியாயங்களாக பதிவிடுவேன். இரண்டிலும் பின் தொடர்பவர்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். 20 அல்லது 22 அத்தியாயங்களில் கதை முடிந்து விடும். நவம்பர் மத்திக்கு மேல் ரகுவரன் வருவான் 🙈🙈🙈🙈🙈🙈.  

 

 

 

 

பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருக்கிறது அவளுக்கு. திருமணம் என்ற ஒரு வார்த்தையில் பல கனவுகளை உள்ளடக்கியவள் எதற்கு இந்த நாள் பிறந்தது என்ற சோகத்தில் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றி இருந்த உறவினர்கள் சிரிக்குமாறு கட்டாயப்படுத்த,

 

“சிரிக்கிற மாதிரியா நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க. ரெண்டாம் தரமா வாக்கப்படுற அளவுக்கு என் நிலைமை கீழ்த்தரமா போயிடுச்சுல. ச்சீ! இன்னொருத்திக்கு சொந்தமானவனை யூஸ் பண்ண வேண்டிய நிலைமை வந்துடுச்சே!”  

 

“அகல்யா வாய மூடு! என்ன பேச்சு இதெல்லாம்? யூஸ் பண்றேன் அது இதுன்னு. பெத்தவ நான் உன்ன ஒன்னும் அப்படியே பொதக்குழியில தள்ளிட மாட்டேன். அந்தப் பையன் ரொம்ப நல்லவன். அவன் மட்டும் இல்ல அந்த குடும்பமே நல்லவங்க. சந்தர்ப்ப சூழ்நிலை விவாகரத்து ஆயிடுச்சு. இந்த நாட்டுல யாருக்கும் ரெண்டாவது திருமணம் ஆகுறது இல்லையா!” என்ற அம்மாவின் பேச்சில் சகித்துக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றவள்,

 

“நல்லவனுக்கு எதுக்கு டிவோர்ஸ் ஆகப்போகுது. எந்த பொண்ணும் வேண்டா வெறுப்பா விவாகரத்து பண்ணிட்டு போக மாட்டா.” என்ற அகல்யா அன்னையை நெருங்கி,

 

“என்ன கேட்ட? இந்த உலகத்துல யாருக்குமே ரெண்டாவது திருமணம் ஆகுறது இல்லையான்னு தான… அதெல்லாம் அவங்க விருப்பத்தோட நடக்குது. நீங்க எனக்கு அப்படியா பண்ணி வைக்கிறீங்க?. என் கல்யாணத்தை நினைச்சு நான் எவ்ளோ கனவு கண்டிருப்பேன்னு தெரியுமா உங்களுக்கு. இன்னொருத்தி வேணாம்னு தூக்கி போட்ட ஒருத்தன இந்தா வச்சுக்கோன்னு என் கையில கொடுக்குறீங்க. அருவருப்பா இருக்கு நினைக்கவே.” என்றவள் விழிகள் கண்ணீரில் கரைந்தது.

 

 

அகல்யாவின் தாய் சுகன்யாவுக்கு அவள் நிலை புரிந்தாலும் அவள் விருப்பத்திற்கு செவி சாய்க்க மனமில்லை. அவருக்கும் வர இருக்கும்  மருமகன் பற்றி முழுதாக தெரியாது. இருந்தும் நம்பிக்கையோடு மகளை கொடுக்க சம்மதிக்கிறார். 

 

 

இதே பிடிவாதத்தோடு மணமேடையில் அமர்ந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் அவர் சமாதானம் செய்ய வர, 

 

“அகல்!” என்று அழைத்துக் கொண்டு அவள் முன்பு நின்றார் ஆதிலட்சுமி.

 

 

நேற்று வரை அவள் வேலை பார்த்த  முதலாளியை பார்த்ததும் புன்னகைத்தவள் வேண்டா வெறுப்பாக திரும்பிக் கொள்ள, “உன்னோட கோபம் புரியுது. ஆனா நீ நினைக்கிற மாதிரி என் மகன் தப்பானவன் இல்லை. பல தடவை அவன் விவாகரத்தை பத்தி உன்கிட்ட பேச முயற்சி பண்ணிட்டேன். நீ தான் காது கொடுத்து கேட்க மாட்ற.” என்றவரின் பேச்சில் விருப்பமில்லாதவள்,

 

 

 

“என்ன காரணமா வேணா இருக்கட்டும். எனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிட்டு போறதுல விருப்பமில்லை. உங்க ஆபீஸ்ல நான் ஒருத்தி மட்டும் தான் பொண்ணா! யாருக்கு விருப்பம் இருக்கோ அவளுக்கு உங்க பையன கட்டி வைக்க வேண்டியது தான. உங்க மேல எவ்ளோ மரியாதை வைச்சிருந்தேன். ஒரு பொண்ணோட வாழ்க்கைய பாழாக்குறோம்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா.” என்று வெடித்தாள்.

 

 

“என்னடி இது! பெரியவங்கன்னு இல்லாம இப்படி பேசுற.” 

 

“கொஞ்ச நேரம் சும்மா இரு ம்மா. என் மனசுல இருக்குறதை இப்பவாது கேட்டுக்குறேன். நல்லா வசதியா தான இருக்காங்க. உங்க வசதிக்கேத்த மாதிரி யாரையாது பார்த்து கட்டி வைக்க வேண்டியது தான. அது என்ன தன்னை விட கீழ இருக்க பொண்ணா பார்க்குறது!” என்றவள் கோபம் புரிந்தது ஆதிலட்சுமிக்கு.

 

அவர் ஒன்றும் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணை உபயோகிக்கும் நோக்கில் இத்திருமணத்தை நடத்தவில்லை. அகல்யாவை நான்கு ஆண்டுகளாக தெரியும் அவருக்கு. வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாதவள். மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக யார் என்று தெரியாத பெண்ணையே  ஏற்றுக் கொண்டவர்… நன்கு தெரிந்த நல்ல பெண்ணை விட மனம் வருமா! மகனுக்காக நின்றார் அகல்யாவின் தாய் முன்பு.

 

 

முதலில் அவர் மறுத்தாலும் நம்பிக்கை கொடுத்து திருமணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டார். இவ்வளவு தூரம் முயன்றவருக்கு மருமகளின் மனதை மாற்ற மட்டும் முயலவில்லை.

 

 

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக நிற்கும் ஆதிலட்சுமியை முறைத்தவள், “என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையா இல்ல உண்மைய எப்படி சொல்றதுன்னு தயக்கமா!” என்றவளை அடக்க பெரும்பாடு பட்டார் சுகன்யா.

 

அன்னையின் கைகளை உதறியவள், “ஏன்னா ரெண்டாவது திருமணத்துக்கு உங்க ஸ்டேட்டஸ்ல இருக்க எவளும் ஒத்துக்க மாட்டா. எங்களை மாதிரி நடுத்தர வர்கத்தை தேடி தான் வந்தாகணும். அப்பா இல்லாத குடும்பம்னு தெரிஞ்சு எங்களை அடிமையாக்க நினைச்சுட்டீங்க. 

 

கேள்விப்பட்டேன் என் தம்பிய இனிமே நீங்களே படிக்க வைக்கிறீங்கன்னு சொன்னதை. உங்க மகன் கூட வாழ போற வாழ்க்கைக்கு சன்மானமா! ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோங்க. நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நாளும் உங்க மகன் கூட நான் வாழ மாட்டேன். இன்னொருத்தி கூட குடும்பம் நடத்துனவன் கையால தாலி வாங்கப் போறதை நினைச்சா எனக்கே என்னை பிடிக்கல. 

 

 

இவங்களுக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்களோ! ஒரு வாரமா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணிட்டு இருந்தாங்க. எங்க அம்மா கட்டாயப்படுத்துனதால தான் உங்க வீட்டுக்கு வரேன். மத்தபடி என்னை அடக்கி உங்க காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்காதீங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்த அகல்யா வேற. இனிமே நீங்க பார்க்க போற அகல்யா வேற. பண திமிர்ல என்னை அடக்கி பணிய வைக்கணும்னு நினைச்ச உங்களுக்கு தண்டனையே இனி தான் இருக்கு.” என்ற சவாலோடு அவரை விட்டு நகர்ந்தாள்.

 

 

நகர்ந்தவள் திரும்பி நின்று, “அப்புறம் உங்க மகன் கிட்டயும் சொல்லி வச்சிடுங்க. ஒருத்தி போதாதுன்னு இன்னொருத்திக்கு ஆசைப்பட்ட அவனுக்கு இனிமே தான் கெட்ட காலம்னு.” என்றாள்.

 

 

அகல்யா பேசியதற்காக சுகன்யா வருங்கால சம்மந்தியிடம் மன்னிப்பு வேண்ட, “அவ கோபம் ரொம்ப நியாயமானது. எந்த பொண்ணும் இதை ஏத்துக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அதுல ஒரு சின்ன மாற்றம். அவ சொன்ன மாதிரி நீங்க ஒன்னும் கஷ்டப்படற குடும்பம் இல்லை. என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு ஆசைப்பட்டனே தவிர ஸ்டேட்டஸ் பார்க்கல இன்னைக்கும்… என்னைக்கும். நான் எடுத்திருக்க முடிவு நிச்சயம் சரியாகும்.” என்றார் பல வருடங்களாக தனக்குள் அடங்கி இருக்கும் துயரத்தை வெளிக்காட்டாமல்.

 

 

***

 

 

பல கனவுகளை அழித்து மணமேடை ஏறினாள் அகல்யா. கண்கள் சிவந்து இருந்தது ஆனந்தத்தில் அல்ல வருத்தத்தில்! பக்கத்தில் இருப்பவன் வாசத்தைக் கூட தன்னருகில் சேர்க்கக்கூடாது என்பதற்காக விலகியே அமர்ந்திருந்தாள். அவளின் நிலை புரியாமல் ஐயர் சடங்கை நிறைவேற்ற குறியாக இருக்க,

 

‘எதுக்குமா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்த.’ அன்னையைப் பார்த்து வெதும்பினாள்.

 

மகளின் கண்ணீரில் இப்பொழுது அவர் மனம் பரிதவிக்க, செய்யக்கூடாத தவறு செய்து விட்டதாக உணர்ந்தார். அவர் எண்ணத்தை அறிந்த ஆதிலட்சுமி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய,

 

 

“இது சரியா வருமா ஆதி” என்றார் அவரின் கணவர் தயாளன்.

 

“வரும்’ங்க! அந்த நம்பிக்கையில தான் பிடிவாதமா இருந்தவனை செத்துடுவேன்னு மிரட்டி அங்க உட்கார வைச்சிருக்கேன். இத்தனை வருஷம் கேட்காதவன் இப்ப கேட்டிருக்கானா இது எல்லாமே அதோ! அந்த கடவுளோட செயல்.” என்றவர் கைகாட்டினார் அவர்களுக்கு பின்னால் இருக்கும் தெய்வத்தை.

 

ஒரு முறை அதை பார்த்துவிட்டு, “இந்த வாழ்க்கையாது என் மகனுக்கு நல்லபடியா அமையனும்.” மனதார வேண்டிக் கொண்டார் தயாளன்.

 

 

கணவன் வேண்டுதல் எதுவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் கையெடுத்து கும்பிடாமலே கடவுளை வணங்க, “இந்த பொண்ண நினைச்சா தான் கவலையா இருக்கு ஆதி. விருப்பமில்லாத பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்றோம்னு குற்ற உணர்ச்சியா இருக்கு.” என்றவர் திகைத்தார் ஆதிலட்சுமியின் கண்ணீரில்.

 

 

கணவனின் அதிர்வில் சோகத்தை மறந்து புன்னகைத்தவர், “உங்களை விட எனக்கு தான் அதிக குற்ற உணர்ச்சி. ஆனா நியாயத்தை விட இப்போ எனக்கு ஒரு அம்மாவா என் மகன் வாழ்க்கை ரொம்ப முக்கியம். இப்படியே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இல்லாம போய்டும். 

 

நாலு வருஷமா இந்த பொண்ண பார்த்துட்டு இருக்கேன். எல்லா விதத்துலையும் நம்ம பையனுக்கு பொருத்தமா இருப்பா. ரெண்டு பேரோட வாழ்க்கை நல்லபடியா அமையும். பேரன் பேத்தி’னு மடி நிறையுற அளவுக்கு நம்ம சந்தோஷமா இருக்க போறோம்.” என்று நம்பிக்கை கொடுத்தார்.

 

 

இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிறு துளி கூட இல்லை அகல்யா மனதில். மனம் முழுவதும் கொதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு எதிரில் இருக்கும் அக்னி குண்டத்தை போல். பெரியவர்களும் திருமணத்தை நடத்தி வைக்கும் ஐயரும் சொல்லிய அனைத்தையும் வேண்டா வெறுப்பாக செய்து முடித்தவள் நொடிக்கு நொடி அதிர்ந்து கொண்டிருந்தாள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தை எதிர்பார்த்து.

 

 

எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஐயர் தட்டை அனைவரிடமும் ஆசீர்வாதம் செய்யும்படி கொடுக்க, தலை தெறிக்க ஓட முடிவெடுத்தது அகல்யாவின் மனம். ஒரு வார காலமாக எவ்வளவோ சமாதானம் செய்து விட்டாள் சுகன்யாவை. அவரோ பிடிவாதமாக ஆதிலட்சுமியை போல் தற்கொலை பயத்தை காட்டி மிரட்டாமல் பாசத்தைக் காட்டி மிரட்டினார்.

 

 

இருபத்தி ஆறு வயதாகிறது அவளுக்கு. பலமுறை திருமணத்திற்கு முயற்சி செய்து பார்த்து விட்டார். சரியான வரன் அமையாமல் தள்ளிக் கொண்டு இருந்தது. அவளுடன் படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி கையில் குழந்தை இருக்க, மகளின் எதிர்காலத்தை நினைத்து அழுது புலம்புவார் .

 

ஆதிலட்சுமி பேச வந்ததும் முதலில் மறுத்தவர் யோசிக்க ஆரம்பித்தார். இதுதான் கடவுளின் முடிவாக இருக்குமோ என்று சிந்தித்தவர் திருமண தேதியை குறித்து மகளையும் அழைத்து வந்து விட்டார்.

 

 

மாங்கல்யத்தை பிடித்த ஐயர் மாப்பிள்ளையிடம் கொடுக்க, அவன் கைகள் நடுங்கியது. அதை கவனித்த அகல்யா அவனை நிமிர்ந்து பார்க்காமல்,

 

“என்னமோ முதல் தடவை கட்ட போற மாதிரி சீன் போடுற. உனக்கு இதெல்லாம் பழசு தான.” என்றாள்.

 

கண்களை மூடிக்கொண்டு அவள் வார்த்தையை உள்வாங்கிக் கொண்டிருந்தான் அவன். இருவரும் பேசிக் கொள்வதை அறிந்த ஆதிலட்சுமி ஐயரிடம் சைகை செய்ய, மணமகன் கையில் தாலியை திணித்தார். மணமேடையில் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தார்கள் அந்த நொடி வரை. கண்ணில் நீர் கோர்க்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அகல்யா. 

 

திரும்பும் பொழுது அவளின் கண்ணீர் காட்சியளித்தது அவனுக்கு. நொடி தயங்கி தாலியை பின்னெடுக்க, ஆதிலட்சுமியின் அழுத்தத்தில் தாலி கட்டுவது போல் இல்லாமல் ஏதோ மூட்டைக்கு கயிறு கட்டுவது போல் இறுக்கமாக மூன்று முடிச்சு போட்டு முடித்தான் அவன். 

 

யாரவன்!

 

 

*****

 

தாரைதாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது அகல்யாவிடம் இருந்து. அதில் ஒன்று தாலியில் குங்குமம் வைக்கும் போது அவன் கையில் விழ, அப்பொழுது தான் முகத்தை முழுவதாக பார்த்தான். 

 

‘இந்த பொண்ணா!’ என்ற அதிர்வோடு அவன் அன்னையை ஏறிட, அவரோ புருவம் உயர்த்தினார். உடனே அவன் முகம் சிவந்து விட்டது. மணமேடையை விட்டு எழுந்தவன் யார் பேச்சையும் கேட்காமல் சென்று விட்டான். அகல்யா போனால் போகட்டும் என்ற தோரணையில் அமர்ந்திருக்க, சுகன்யா தான் மகளின் வாழ்வை நினைத்து கலங்கினார்.

 

“நல்லா அழு ம்மா. பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கினதுக்காக இனி நீ தினமும் அழ வேண்டியதா  இருக்கும்.” என்று அவரை நோகடித்தாள்.

 

 

மருமகளின் வார்த்தையை கேட்டாலும் அமைதியாகவே நின்றிருந்தார் தயாளன். எப்படியும் சென்றவன் திரும்பி வரமாட்டான் என்பதால் அவர் அழைக்க செல்லவில்லை. பின்னால் கத்திக் கொண்டு ஆதிலட்சுமி வர,

 

“போதும் மாம் என் பின்னாடி வராதீங்க. யாரைக் கேட்டு இவளோட எனக்கு கல்யாணம் பண்ணிங்க. ஐ ஹேட் வெரி மச் மாம். அவளைப் பார்த்தாலே எனக்கு பிடிக்காது. எனக்கு சொந்தமான ஆபீஸ்ல உட்கார்ந்து சட்டம் பேசுவா. என்னால அவளோட வாழ போறதை பத்தி யோசிக்க கூட முடியாது. அவளை இங்கயே விட்டுட்டு வீட்டுக்கு வாங்க.” என்றவன் கத்திக் கொண்டிருக்கும் போதே…

 

“பரவாயில்லையே தரணி!” என்று புன்னகைத்தார் ஆதிலட்சுமி.

 

அன்னையின் சிரிப்பில் பற்களை கடித்தவன் எதற்கு என்று பார்க்க, “நேத்து வரைக்கும் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன் இன்னைக்கு அவளோட வாழ மாட்டேன்னு வாழ்க்கைய சேர்த்து வைச்சு பேசுறான். என் மகன் சீக்கிரம் மாறிடுவான் போலையே.” என்று மீண்டும் புன்னகைத்தார்.

 

“அம்ம்மா!” என்று கத்தினான் அவர் பேச்சை கேட்க விரும்பாத தரணீஸ்வரன். 

 

“அவளோட வாழ போறன்னு நான் எப்ப சொன்னேன். என் வீட்ல அவ இருக்க போறது எனக்கு பிடிக்கல. அவளைப் பார்த்தாலே அப்படி ஒரு எரிச்சல் வரும் எனக்கு. இவதான்னு முதல்லே சொல்லி இருந்தா இங்க வந்து இருக்கவே மாட்டேன். அவளும் அவ மூஞ்சியும்.” என்றவன் கடுப்பில் தரையில் இருக்கும் கல்லை ஓங்கி அடித்தான்.

 

 

“அவ உன்னோட பொண்டாட்டி இந்த மாதிரி பேசுறதை இத்தோட நிறுத்திக்கோ. ஒரு தடவை நீ முடிவெடுத்த, நான் சம்மதிச்சேன். இப்ப நான் முடிவெடுத்து இருக்கேன் நீ சம்மதிச்சு தான் ஆகணும். உனக்கு பிடிக்குதோ இல்லையோ அவ தான் இனிமே உனக்கு பொண்டாட்டி. உள்ள போ தரணி.” கராராக மகனிடம் உரைத்து விட்டார்.

 

 

“நீங்க சொல்ற எல்லாத்தையும் என்னால கேட்க முடியாது. அவளை இங்கயே விட்டுட்டு வீடு வந்து சேருங்க.” என்றவன் அவர் வார்த்தையையும் மீறி கிளம்பி விட்டான் அங்கிருந்து.

 

மகனின் செயலில் உள்ளம் நொறுங்கியவர் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அகல்யா முன்பு நின்றார். மகளின் வாழ்வை நினைத்து அழுது கொண்டிருந்த சுகன்யாவை பார்த்ததும் அவரின் குற்ற உணர்ச்சி அதிகமாக, 

 

“எங்க ஆதி அவன்?” என்றார் தயாளன்.

 

பதில் சொல்லாமல் தடுமாறியவரை, “அவங்க எப்படி பதில் சொல்லுவாங்க. பெத்த பிள்ளை அவங்க பேச்சைக் கேட்டா தான. இந்நேரம் எங்க குடிக்கப் போனானோ!” என்றாள் அகல்யா.

 

 

“என் மகன் குடிகாரன் இல்லை.”

 

“மகா குடிகாரன்!” என்று வெறுப்பேற்றினாள் அவரை அகல்யா.

 

மகளின் வார்த்தையில் திடுக்கிட்ட சுகன்யா, “என்னடி சொல்ற மாப்பிள்ளை குடிப்பாரா?” அழுகையோடு கேட்க,

 

“அது கூட தெரியாம தான் உன் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கியா. எனக்கு தாலி கட்டுனானே ஒருத்தன் அவன் மட்டும் இல்லன்னா நம்ம ஊரு ஒயின்ஷாப் அத்தனையும் நஷ்டத்துல நாசமா போய்டும்.” என்று அவரை அதிரவிட்டாள்.

 

மகள் கொடுத்த அதிர்ச்சியில் கண்ணீர் நின்று விட்டது சுகன்யாவிற்கு. உடனே பார்வை சம்மந்தியை மொய்க்க, அவரோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அவர் முன்பு நின்றவர், “என் பொண்ணு சொல்றது உண்மையா? உங்க பையன் குடிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

 

“உங்க பொண்ணு சொல்ற மாதிரி எல்லாம் இல்லை. கொஞ்சமா குடிப்பான்.” 

 

“அது என்ன கொஞ்சம்? குடிக்கிறதே தப்பு. இதுல உங்களுக்கு பெருமை வேற.” சிடுசிடுத்தாள் மருமகள் மாமியாரிடம்.

 

“என்னங்க இதெல்லாம்? பொண்ணு கேட்டு வரும்போது அவ்ளோ பேசினீங்க ஒரு வார்த்தை கூட என் மகன் குடிப்பான்னு சொல்லல. ஏமாத்தி என் பொண்ண உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா. ஒரு குடிகாரனோட சேர்ந்து என் பொண்ணு எப்படி வாழ்வா. நீங்களும் ஒரு பொண்ணு தான… எப்படி இந்த உண்மைய மறைக்க உங்களால முடிஞ்சது.” அடிக்காத குறையாக கேட்டுவிட்டார் சுகன்யா.

 

மனைவியின் மனம் உணர்ந்து தயாளன் சமாதானப்படுத்த, அங்கிருந்த சுகன்யாவின் சொந்தங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அத்தனைப் பேரையும் அடக்கிய ஆதிலட்சுமி ஒரு வழியாக சுகன்யாவையும் சமாதானப்படுத்த,

 

“இவ்ளோ பெரிய உண்மைய மறைச்ச உங்க வார்த்தைய நான் எப்படி நம்புறது. தாலி கட்டுன கையோட என் பொண்ணு எப்படி நிக்கிறான்னு பாருங்க. எந்த பொண்ணுக்காது இப்படி ஒரு நிலைமை வருமா. தப்பு பண்ணிட்டேன்னு இப்ப யோசிக்கிறேன்.” என்றார்.

 

“நீங்க வருத்தப்படுற மாதிரி என் மகன் மோசமானவன் இல்லை. இனிமே என் மகன் மாறிடுவான் அந்த நம்பிக்கையில தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.”

 

 

“ஓஹோ! உங்க பையன திருத்துறதுக்காக டீச்சர் வேலைக்கு எடுத்து இருக்கீங்களா என்னை.” இடைப் புகுந்தாள் அகல்யா.

 

 

பேச்சுக்கள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டது ஆதிலட்சுமி தயாளனை. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார்கள். தயாளன் மகனுக்கு அழைப்பு விடுக்க, அவன் எடுக்கவில்லை. 

 

“தயவு செஞ்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க. இப்ப எந்த பிரச்சினையும் பண்ணாம வீட்டுக்கு வாங்க அவன் வீட்ல தான் இருப்பான். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க. நாளைல இருந்து எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.” என்றவர் வார்த்தைக்கு சுகன்யா பதில் கொடுக்கும் முன்,

 

“என்னது வரணுமா! தாலி கட்டிட்டு தனியா வர சொல்றீங்க. என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்தானே அவனை வர சொல்லுங்க. அவனோட சேர்ந்துதான் நான் உங்க வீட்டுக்கு வருவேன். இல்லன்னா எங்க வீட்டுக்கு போய்டுவேன்.” என்று மிரட்டினாள்.

 

“அகல்! அவன் பிடிவாதத்தை பத்தி உனக்கே நல்லா தெரியும். நீ கொஞ்சம் ஒத்துழைச்சா தான் அவன சமாதானப்படுத்த முடியும். இந்த ஒரு தடவை மட்டும் என் பேச்சைக் கேளு.”

 

 

“யார் நீங்க உங்க பேச்சை கேட்க? எனக்கு இப்போ தாலி கட்டுனவன் இங்க வந்தே ஆகணும். இல்லன்னா தாலி கட்டி ஏமாத்திட்டீங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன். இங்க இருந்த அத்தனை பேரும் அதுக்கு சாட்சி. குடும்பத்தோட ஜெயில்ல தான் உட்காரனும் அப்புறம். உடனே அவன வர சொல்லுங்க.” இவ்வளவு நேரம் குரலில் இருந்த கடுமையோ எதிர்ப்போ இல்லாமல் திமிர் தெரிந்தது அவள் பேச்சில்.

 

 

கையறு நிலையில் பெற்றோர்கள் இருவரும் மகனுக்கு அழைப்பு விடுக்க, அவனோ அழைப்பை நிறுத்தி வைத்திருந்தான். தாலி கட்டி இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது முழுமையாக. தரணீஸ்வரனும் வரவில்லை அகல்யாவும் அங்கிருந்து நகரவில்லை. 

 

என்ன செய்வதென்று தெரியாமல் தயாளன் வீட்டிற்கு கிளம்ப எண்ண, காவல் உடையில் நான்கு பேர் கோவிலுக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் தயாளன் மருமகளை பார்க்க, அவள் பார்வையோ மாமியாரை அலட்சியம் செய்து சிரித்தது.

 

“என்னம்மா இங்க பிரச்சனை. யாரு கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்றவருக்கு பதில் சொன்னாள்,

 

“நான் தான் சார் உங்களுக்கு கால் பண்ணி இருந்தேன். இதோ இங்க நிக்கிறாங்களே இவங்க கட்டாயப்படுத்தி அவங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. எனக்கு தாலி கட்டுனவன் தாலி கட்டின கையோட இங்க இருந்து கிளம்பிட்டான். இவங்களும் சரியான பதில் சொல்லாம என்னை இங்கயே ரெண்டு மணி நேரம் இருக்க வச்சுட்டாங்க. நீங்க தான் என்ன ஏதுன்னு விசாரிக்கணும்.” என்று.

 

“அகல்யா இதெல்லாம் எதுக்கு பண்ண?” என ரகசியமாக சுகன்யா அவளிடம் கேட்க,

 

“கல்யாணம் பண்ணதோட உங்க கடமை முடிஞ்சுது. இனி என் வாழ்க்கை என் விருப்பம். தலையிடாதீங்க!” என மொத்தமாக அவர் பேச்சை அடக்கி விட்டாள்.

 

“உங்க பையன் எங்க?” என்று காவல்துறையினர் விசாரிக்க, பொறுமையாக நடந்ததை விவரித்தார் தயாளன். காவல் துறையினர் தரணீஸ்வரனின் நம்பரை வாங்கி அழைப்பு விடுக்க, அதுவோ சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

 

தயாளனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்து அலங்கோலம் செய்திருந்தான் தரணீஸ்வரன். தந்தையோடு வந்து நிற்கும் காவல்துறையை பார்த்து அவன் கேள்வி எழுப்ப, அவர்களோ வந்த காரணத்தை உரைத்தார்கள். 

 

கோபம் கொண்டு கத்த ஆரம்பித்தான் தரணீஷ்வரன். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காதவன் அங்கிருந்து கிளம்ப பார்க்க,

 

“தாலி கட்டிட்டு அந்த பொண்ண ஏமாத்த பார்க்கறீங்களா? ஒழுங்கா அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்துற வழிய பாருங்க. இல்லன்னா உங்க மேல கேஸ் பைல் பண்ண வேண்டியது வரும்.” என்று விட்டனர் முடிவாக.

 

வேறு வழியில்லாமல் மீண்டும் கோவிலுக்கு சென்றான். முதலில் அவன் பார்வையில் விழுந்தது ஆதிலட்சுமி தான். தலை குனிந்து நின்று இருந்தார் குற்ற உணர்வோடு. அன்னையைப் பார்த்தவன் மனம் கதி கலங்கி போனது. மீண்டும் மீண்டும் தன்னால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படும் அவரை நினைத்து கலங்கினான்.

 

 

“வாங்க தாலி கட்டுனவரே…வருவிங்க! தாலி கட்டுவீங்க! போவீங்க! இந்த மாதிரி தாலி கட்டிட்டு ஓடுறதுக்கு பதிலா முன்னாடியே  ஓடி இருந்தன்னா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். உன்னோட அறிவு இவ்ளோ லேட்டா வேலை செய்ய வேணாம்.” என்றவளை கடுமையாக முறைத்தான் உஷ்ண பார்வையில்.

 

அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் தன் வேலை முடிந்து விட்டதாக திரும்பிக் கொண்டாள். காவல்துறையினர் போதுமான அறிவுரையை கூறிவிட்டு நகர, மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் தன் வீட்டிற்கு.

 

நடந்ததை எல்லாம் ஓரம் தள்ளி வைத்த ஆதிலட்சுமி இந்த நிலைமையை மாற்றுவேன் என்ற சபதத்தோடு வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றினார் இருவருக்கும். இருக்கக் கூடாத மனநிலையில் காலடி எடுத்து வைத்தாள் புகுந்த வீட்டில் அகல்யா.

 

 

அவள் உள்ளே வந்ததும் மீண்டும் அங்கிருந்து வெளியேற பார்த்தான் தரணீஸ்வரன். மகனை தடுத்து நிறுத்திய தயாளன்,

 

“உங்க அம்மாவ பாரு கொஞ்சம். இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாங்க இந்த மாதிரி அசிங்கப்பட்டு நிற்கணும். அந்த பொண்ணு திரும்பவும் ஏதாச்சும் பண்றதுக்குள்ள உன்னை நீயே மாத்திக்க பாரு. இல்லன்னா உங்க அம்மா சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் மொத்தமா போயிடுவோம்.” என்றார்.

 

நடையை திருப்பியவன் எதிரில் நிற்பவளை வெறிக்கொண்டு முறைத்தான்.

 

****

 

 

 

திருமணம் இருமனம் இணையாமல் நடந்ததால் எந்த சடங்கையும் ஏற்பாடு செய்யவில்லை ஆதிலட்சுமி. மகளோடு இருந்த சுகன்யா நாகரிகம் கருதி தன் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அகல்யாவின் தம்பி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். 

 

தரணீஸ்வரன் அறையில் அகல்யா அமர்ந்திருக்க, “உள்ள வரலாமா அகல்!” என உத்தரவு கேட்டபடி அறை வாசலில் நின்றார் அவளின் மாமியார்.

 

 

பதில் எதுவும் சொல்லாமல் அகல்யா மௌனம் காக்க, “உன்னோட கோபம் புரியுது. நீ நினைக்கிற மாதிரி உனக்கு நான் எந்த துரோகமும் செய்யல. உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. நீ என் மருமகளா வந்தா என் மகனோட வாழ்க்கை மட்டும் இல்ல இந்த குடும்பமே நல்லா இருக்கும்னு நம்பி தான் முயற்சி எடுத்தேன். கண்டிப்பா உனக்கு இது ஒரு நாள் புரியும். 

 

அதுவரைக்கும் அவசரப்பட்டு எதுவும் செய்யாம கொஞ்சம் பொறுமையா இருக்க பாரு. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நான் என்னைக்கும் வர மாட்டேன். அதே மாதிரி என் மகனா நீயான்னு வந்தா என் ஆதரவு உனக்கு தான் இருக்கும்.” என்றவரை அப்பொழுது தான் பார்த்தாள் அகல்யா.

 

 

“கல்யாணம் மட்டும் தான் உன் விருப்பம் இல்லாம நடந்திருக்கு. மத்ததெல்லாம் நீ எப்ப சொல்றியோ அப்போ. அதுவரைக்கும் என் மகன் பக்கத்து ரூம்ல தங்கிப்பான்.” 

 

 

“கல்யாணமே விருப்பம் இல்லாம நடந்திருச்சு. இனி என்ன இருக்கு என் விருப்பத்தோட நடக்க. மகன் வாழ்க்கைக்காக என் வாழ்க்கைய பலியாக்கிட்டீங்க. எத்தனை நாள் கனவு கண்டிருக்கேன் தெரியுமா ராமர் மாதிரி எனக்கு ஒரு புருஷன் கிடைக்கணும்னு. 

 

அதுக்கு தகுதியா இருக்கணும்னு என் மனச இப்ப வரைக்கும் கண்ட்ரோலா வச்சிருக்கேன். அப்படிப்பட்ட என்னை இந்த மாதிரி ஒருத்தனோட சேர்த்து வச்சுட்டீங்களே.  “

 

“முதல் வாழ்க்கை சரியா இல்லன்னா இன்னொரு வாழ்க்கை தேடக் கூடாதா?”

 

“உங்க மகன் மாதிரி வாழ்க்கை இழந்த ஒருத்திக்கோ இல்ல சரியா வாழ்க்கை அமையாத ஒருத்திக்கோ உங்க தேடலை கொடுத்து இருக்கலாம்.”

 

“நான் சேவகம் பண்ண ஆள் தேடலை. உன்ன மாதிரி நல்ல பொண்ண மட்டும் தான் தேடுனேன். ஒருவேளை உனக்கு அந்த மாதிரி ஆகி இருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பேன்.

 

“ஓஹோ! அவ்ளோ நல்ல உள்ளமா நீங்க. அப்போ நான் உங்க குடும்பத்துக்கு ஒத்து வரலைன்னா கூட தூக்கி போட்டுட்டு மூணாவதா ஒரு பொண்ண பாருங்க தப்பில்லை. ஆம்பள திமிரு, காசு இருக்க கொழுப்பு எத்தனை கல்யாணத்த வேணாலும் நடத்தி வைக்கும்.”

 

“கொஞ்சம் பார்த்து பேசுமா. என் பொண்டாட்டி நீ நினைக்கிற மாதிரி தப்பானவ இல்ல. ஒரு அம்மாவா மகனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அவ படாத கஷ்டம் இல்ல. உன்ன ரொம்ப பிடிச்சதால தான் கட்டாயப்படுத்த வேண்டியதா போச்சு. 

 

நேத்து ராத்திரி கூட உனக்காக அவ்ளோ நேரம் அழுதா. நான் உன்னை வேணான்னு தடுக்கும் போது கூட இவதான் எனக்கு சரியான மருமகள்னு உறுதியா சொன்னா. இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்குறதுக்குள்ள அவ மனம் எவ்ளோ பயந்துச்சுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்டவள புரிஞ்சுக்கலனாலும் பரவால்ல வெறுத்து ஒதுக்காத.” மனைவியை கடுமையாக பேசிக் கொண்டிருக்கும் மருமகளின் பேச்சை கேட்டவர் பொறுக்க முடியாமல் பேசிவிட்டார்.

 

 

எழுந்து அவர் அருகில் சென்றவள், “நீங்க சொல்ற எல்லாம் உண்மையா இருக்கலாம். அதுக்காக என் வாழ்க்கைய எதுக்காக வீணாக்குனீங்க. எத்தனை தடவை உங்க கிட்ட சொல்லி இருப்பேன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. அதையும் மீறி இதோ…” என்றவள் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் தாலியை அவர்கள் முன்பு நீட்டி,

 

“இதுக்கு என்னை கட்டுப்பட வச்சிட்டீங்களே!  நீங்க வேணா அந்த மருமக இடத்துல என்னை வைக்கலாம். என்னால அதை ஜீரணிச்சுக்க முடியல. இந்த ரூம் முதல் கொண்டு எல்லாமே இன்னொருத்தி யூஸ் பண்ணி தூக்கி போட்டது. 

 

அதை யூஸ் பண்ணவே எனக்கு அருவருப்பா இருக்கும் போது உங்க மகனை எப்படி ஏத்துப்பேன். என்னோட இத்தனை வருஷ கனவ மொத்தமா ஒரு கல்யாணத்துல ஒடச்சிடீங்க. நான் என்னைக்கும் உங்கள மன்னிக்க மாட்டேன். தயவுசெஞ்சு கொஞ்ச நாளைக்கு என்கிட்ட எதையும் பேசாம விலகி இருங்க.” இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல் அவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

தம்பதிகள் இருவரும் பேச்சுக்களுக்கு இடம் இன்றி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க, படியேறிக் கொண்டிருந்த தரணீஸ்வரன் இவை அனைத்தையும் கேட்டான். தன்னை ஒருத்தி அருவருப்பாக நினைப்பதை நினைத்து அவன் உடல் அருவருத்தது. என்ன இருந்தாலும் அவள் சொல்வது உண்மை தானே! இன்னொருத்தி வேண்டாம் என்று தூக்கி எறிந்த தன்னை அவமானச் சின்னமாக நினைத்தவன் வந்த வழியே சென்று விட்டான்.

 

 

***

 

காலையில் இருந்து அந்த வீட்டில் யாரும் உணவு உண்ணவில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் தெம்பாக இருக்க வேண்டும் அல்லவா! தன்னைத்தானே தேற்றிக்கொண்டு இரவு உணவை தயார் செய்தார் ஆதிலட்சுமி. அவரின் கணவர் மனைவிக்கு பக்க துணையாக அனைத்து உதவிகளையும் செய்ய, அவர்களின் புதல்வன் வெளியில் கிளம்பி கொண்டிருந்தான்.

 

 

அதை கவனித்த தயாளன், “எங்கப்பா கிளம்பிட்ட?” கேட்டிட, பதில் சொல்லாதவன் இலகுவான இரவு நேர உடைய அணிந்து கொண்டு சென்று விட்டான். 

 

 

சமையலறை வந்தவர் நடந்ததை மனைவியிடம் விவரிக்க, “கவனிச்சுட்டு தாங்க இருந்தேன். அவனை இனி நம்மளால திருத்த முடியாது. மேல இருக்க நம்ம மருமக கிட்ட அந்த பொறுப்ப ஒப்படைக்க வேண்டியது தான்.” என்றவர் தன் வேலைகளை கவனிக்க,

 

 

“நம்ம பையனுக்கு மேல வீம்பு அந்த பொண்ணு. முதல்ல அகல்யாவை மாத்தணும்.” என்றார் தயாளன்.

 

“அவளை எதுக்குங்க மாத்தணும்? அதுக்கு அவசியம் இல்லை. கொஞ்ச நாள் நிதானமா இங்க நடக்குறதை கவனிச்சா போதும் அவளே… அவளோட சேர்த்து தன்னோட புருஷனையும் மாத்திப்பா.”

 

 

“ஆரம்பத்துல இருந்து அகல்யா மேல அதிக நம்பிக்கை வச்சுட்ட ஆதி. அதான் என்ன நடக்குதுன்னு புரியல உனக்கு. அந்தப் பொண்ணு கல்யாணம் ஆனத அசிங்கம்னு நினைக்குது. இதுல எப்படி நம்ம மகன் கிட்ட பேசும்னு நினைக்கிற?”

 

 

“அவ கல்யாணத்தை அசிங்கம்னு நினைக்கலங்க. கட்டிக்கிட்டவனை அசிங்கம்னு நினைக்கிறா. என்ன கேட்டா ஒரு பொண்ணா அவளோட எண்ணங்கள் சரின்னு தான் சொல்லுவேன். நமக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்து இவ வயசு இருக்கும் போது ரெண்டாந்தாரமா கட்டி கொடுக்க சம்மதிப்போமா.”

 

 

“இவ்ளோ சப்போர்ட் பண்ற நீ எதுக்காக ஆதி இந்த பொண்ண கட்டாயப்படுத்தி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க.”

 

 

“நியாயம், தர்மம் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை வந்தா மாறுங்க. எனக்கு என்னோட மகனைத் தவிர வேற எதுவும் இப்போதைக்கு முக்கியமில்லை. அவன் பழைய மாதிரி ஆகணும். என் மகன் முகத்துல அந்த சந்தோஷத்தை நான் பார்க்கணும். அதெல்லாம் அகல்யாவால முடியும்னு நம்புனதால தான் இந்த முடிவு. எனக்கு நம்பிக்கை இருக்குங்க.  நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் மாறும்.”

 

 

***

 

 

அழைத்தால் தன் மருமகள் சாப்பிட வர மாட்டாள் என்பதை அறிந்த ஆதிலட்சுமி அவள் இருக்கும் இடத்திற்கு உணவைக் கொண்டு சென்றார். சிறிது கூட மதிக்கவில்லை அவள். இருந்தும் மனம் தளராதவர், 

 

“கோபத்தை சாப்பாட்டுல காட்டாத.” என்றார்.

 

 

அவ்வார்த்தையில் திரும்பி மாமியாரை முறைத்தவள் அருகில் இருக்கும் தட்டை தள்ளி விட, அதுவோ கீழே விழுந்து அலறியது. விழுந்த தட்டை கவனித்த அகல்யா மாமியாரை இன்னும் அதிகமாக முறைக்க,

 

 

“தெரியும்! நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவன்னு. அதனால தான் வெறும் தட்ட மூடி வச்சேன். இந்த மாதிரி கோபப்பட்டு தட்ட தூக்கி அடிக்க கூட தெம்பு வேணும். அதனால தான் சொல்றேன் வீம்பு பிடிக்காம சாப்பிடு.” என்றவர் மீண்டும் ஒரு தட்டை அவள் முன்பு வைத்து விட்டு புன்னகைத்தார்.

 

 

எதுவும் செய்ய முடியாத மனநிலையில் அவள் அமைதியாக இருந்து கொள்ள, “எனக்கு தெரியும் நீ ரொம்ப தன்மானம் பார்க்குற ஆள்’ன்னு. உனக்கு உரிமை இல்லாத வீட்டுல சாப்பிட கூச்சமா இருந்தா எப்பவும் போல வேலைக்கு போகலாம். ஆனா ஒரு கண்டிஷன் அந்த எப்பவும் போல’ன்றது நம்ம ஆபீஸா தான் இருக்கணும்.” என்றவர் முடிக்கும் முன்னர்,

 

 

“திரும்பத் திரும்ப என் கோபத்தை கிளறிட்டு இருக்காதீங்க. வயசுக்கு மரியாதை கொடுத்து ரொம்ப பொறுமையா இருக்கேன். நான் எப்போ சாப்பிடணும் எங்க வேலை பார்க்கணும்ங்கிறது  என்னோட விருப்பம். இதை செய் அதை செய்னு கண்டிஷன் போடுற வேலை என்கிட்ட வேணாம்.” என்றாள் அவரின் கோபக்கார மருமகள்.

 

 

 

“உன்ன கோபப்படுத்த இப்படி சொல்லல. மிஸ்ஸஸ் தரணீஸ்வரன் வேற ஒரு ஆபீஸ்க்கு போனா யாரும் வேலை தர மாட்டாங்க. உன் புருஷன் சம்பாதிச்ச பேரு அப்படி.”

 

 

நக்கல் பார்வையுடன் மாமியாரை ஏறிட்டவள், “கூடவே குடிகார பட்டத்தையும் சேர்த்து வாங்கி வச்சிருக்கான்.” என்றாள் கேலியோடு.

 

 

“ஆமா! என் மகன் குடிகாரன் தான்.” என்றவர் மருமகள் போல் நக்கல் பார்வையுடன், “எங்க நீ சொல்லு பார்ப்போம்! நான் ஒரு குடிகாரனுக்கு பொண்டாட்டின்னு.” என்றவரின் வார்த்தையில் அவளின் நிதானம் குறைய ஆரம்பித்தது. 

 

 

மருமகளின் கோபப் பார்வையில் அதை உணர்ந்து கொண்டவர், “இனிமே என் மகன்னு சொல்றதை விட உன் புருஷன்னு சொல்றது தான் சரியா இருக்கும். அதனால எதை பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசு.  என்னை மாதிரி நாலு பேரு உன்னை பார்த்து சிரிச்சிட கூடாது.” 

 

 

அவர் வார்த்தையும் தன்னிடம் கொடுக்கும் பார்வையும் எரிச்சலை கொடுத்தது அகல்யாவிற்கு. என்ன பேசி இவரை அசிங்கப்படுத்துவது என்று அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, “நீயா நானான்னு போட்டி போட எனக்கு விருப்பம் இல்லை அகல். ஏன்னா உன்கிட்ட விரும்பியே தோற்றுப் போக நான் தயார். என் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி நீ.” என்றதும் அவள் மறுத்து பேச வர,

 

 

“ஏற்கனவே ஒரு மகாலட்சுமி இருக்கா… அதான.” என்று அவள் வாயை அடைத்தார் ஆதிலட்சுமி.

 

 

“திரும்பவும் சொல்றேன்  தரணீஸ்வரன் உனக்கு மட்டுமே சொந்தமானவன். சும்மா ஒரு வார்த்தைக்காக கூட அவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்காத. நீ ஆயிரம் காரணம் சொல்லி மறுத்தாலும் என் மனசுல நின்ன முதல் மருமகள் நீதான். கடைசி வரைக்கும் நீ மட்டும் தான் இந்த வீட்டோட மகாலட்சுமி.

 

 

உன்னோட கோபத்தை எவ்ளோ முடியுமோ அவ்ளோத்தையும் என்கிட்ட கொட்டு. அதோட வீரியம் எந்த அளவா இருந்தாலும் தாங்க நான் தயார். அதே மாதிரி ஒரு மாமியாரா நான் தர அத்தனை அன்பையும் ஒதுக்காம ஏத்துக்கோ.” என்று தன் நீண்ட உரையை முடித்தார்.

 

 

சில்லென்ற காற்று காத்தாடியின் உதவியால் ஆடையை நனைத்தாலும் இருக்கும் சூழ்நிலை அவளை குளிர்விக்க மறந்தது. இதற்கு மேல் பேசி தொந்தரவு செய்ய விரும்பாதவர் சாப்பிடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர, வாழ்க்கையின் விசித்திரத்தை திறவுகோல் கொண்டு திறந்த நாளை எண்ணி துயரத்தில் ஆழ்ந்தாள் அகல்யா.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
79
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்