1,142 views

( May 15, 2021 ) 

அத்தியாயம் 1 ❣️

 அருகில் நின்று கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையான பார்வையால் , தங்கையை வெறித்துக் கொண்டு இருந்தாள் இளந்தளிர்.

அவளது தங்கை சுபாஷினியோ ,

” ஏன் அக்கா என்னை முறைக்கிற ? நான் வேனும்னே எதுவும் பண்ணல ”  அழாத குறையாக கண்ணைக் கசக்கிக்கொண்டே பேசினாள்.

” இதுக்கு மேல நீ என்ன பண்ணனும் ? அதான் இந்த நிலைமைக்கு வந்துட்டியே ?”  

அவளது நிலைமையைச் சுட்டிக் காட்டியபடி பேசிக் கொண்டிருந்தாள் தமக்கை.

இவர்களது பேச்சை அங்கே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து  சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் கோவர்த்தனன்.

அவன் அங்கிருப்பது இளந்தளிருக்கு அசௌகரியமாக இருந்தாலும் , தங்கையை சரியான நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறானே ! 

எனவே முடிந்த அளவிற்கு சுபாவிடம் பொறுமையாக பேச வேண்டும் என்று நினைத்தாள்.

அவளது உடன்பிறந்த தங்கை தான் சுபாஷினி திடீரென்று அவள் சாலையில் மயங்கி விழப் போனவளைக் காப்பாற்றி இங்கு கொண்டு வந்து பத்திரமாக சேர்த்த கோவர்த்தனன் சரியாக இளந்தளிர் தங்கையின் செல்பேசிக்கு அழைத்ததும் , உடனே தகவல் தெரிவிக்க முனைந்தான்.

” ஹலோ…  ஏய் !  சுபா இன்னும் அங்க என்ன தான் பண்ணிட்டு இருக்கியே ? சீக்கிரம் வீட்டுக்கு வா. அம்மா உன்னைக் காணோம்னு தேடிட்டு இருக்காங்க ” 

அதட்டிப் பேசியவளைக் கையமர்த்தும் விதமாக , ” எக்ஸ்க்யூஸ்மி ! ப்ளீஸ் பொறுமையா இருங்க ” என்று பேசிய ஆண் குரலைக் கேட்டதும் தன் தங்கையின் செல்பேசியில் பேசும் இந்த ஆண் யாரென்று தெரிந்து கொள்ளும்  விதமாக பேசினாள் இளந்தளிர்.

” நீங்க யாரு ? என் சிஸ்டர் மொபைல் உங்களுக்கு எப்படி கிடைச்சுது ?” 

மிரட்டலாகக் கேட்டாள்.

” என்னங்க நீங்க ? ஒன்னு அதட்டிப் பேசறீங்க ? இல்லன்னா மிரட்டிப் பேசறீங்க ? பொறுமையாவே பேச மாட்டிங்களா ?” 

அவள் பேசும் தொனியில் இவனுக்குச் சிறிது  கோபம் வந்ததால் இப்படி பேசி விட்டான்.

” பொறுமையாவா ? என் சிஸ்டரோட மொபைல் உங்க கிட்ட எப்படி வந்துச்சுனு ஃபர்ஸ்ட் சொல்லுங்க ?” என்று கேட்டாள் இளந்தளிர்.

” யப்பா !!! ஏங்க உங்க தங்கச்சி ரோட்ல மயங்கி விழுந்துட்டாங்க ? அவங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டேன்.மொபைல் பாஸ்வேர்ட் தெரில.நல்லவேளை நீங்களே கூப்பிட்டுட்டீங்க. விஷயத்தைச் சொல்லிட்டேன் சீக்கிரம் கிளம்பி வாங்க.நேர்லயே சண்டை போடலாம் ” 

அவளுக்கு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அழைப்பை வைத்து விட்டான்.

” அம்மா ! சுபா என்ன வரச் சொல்லிக் கூப்பிட்டு இருக்கா. நான் போய் அவளைப் பிக்கப் பண்ணிட்டு வர்றேன்” 

அன்னை சிவசங்கரியிடம் கூறினாள்.

சிவசங்கரி, ”  அவ அங்க இருந்து இன்னும் கிளம்பலையா ? வரட்டும் பாத்துக்கிறேன் “

அவர் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் இளந்தளிர் தன் ஸ்கூட்டியில் தங்கையைப் பார்க்க மருத்துவமனை சென்றாள்.

ரிசப்ஷனில் விவரங்களைக் கேட்டறிந்து விட்டு தங்கை இருக்கும் அறைக்குச் சென்றாள்.

கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்ததைப் பார்த்து கலங்கிப் போய் அவளிடம் சென்றாள் இளந்தளிர்.

” ஏய் சுபா ! ட்ரிப்ஸ் ஏத்துற அளவுக்கு என்ன ஆச்சுடி ?” பதறிப்போய்க் கேட்டாள்.

” காலைல சாப்பிடாமல் வந்துட்டேன்ல அக்கா. ஓவர் வெயில் வேற ! அதான் மயக்கம் வந்துருச்சு “

பலவீனமாகத் தெரிந்தவளை மேற் கொண்டு திட்ட மனம் வராததால் பக்கத்திலேயே நின்று கொண்டாள்.

அங்கே ஒருவன் இவளை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தவனை அப்போது தான் எதிர்கொண்டாள் இளந்தளிர்.

” நீங்க தான் ஃபோன்ல பேசின ஆளா ?” என்று விசாரித்தாள்.

” ஆமா . என் பேர் கோவர்த்தனன். உங்கப் பேர் என்ன ?”

தானாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம் அவளது பெயரைச் சொல்ல யோசித்தாள்.

அதற்குள் முந்திரிக்கொட்டையாய் முந்திக்கொண்டு , ” என் அக்கா பேர் இளந்தளிர்.பேர் சூப்பரா இருக்குல்ல ?” என்று வாயாடினாள் சுபாஷினி.

” சும்மா இருடி ” அவளைத் திட்டியவள் தன் பெயரைக் கேட்டதும் இவன் முகத்தில் தோன்றி மறைந்த புன்னகையைக் கவனித்து விட்டாள்.

அது வேறு  அவளுள் எரிச்சலைக் கிளப்பியது.

” ஹலோ ! ரொம்ப தாங்க்ஸ். முக்கியமான வேலை இருக்கும் அதனால நீங்க கிளம்புங்க ”  அவனை அங்கிருந்து அகற்ற முயன்றாள்.

தங்கைக்கு உதவியதற்காக சம்பிரதாயமாக நன்றி தெரிவிக்கும் அப்பெண்ணை நோக்கி மென் புன்னகைப்  புரிந்தான் கோவர்த்தனன்.

” இதுக்கு மேல டைரக்ட்டாக கிளம்புங்கன்னு சொல்ல வேற வேர்ட்ஸ் இருக்கா ?”  அவளைச் சீண்டினான்.

” கிளம்புங்க ”   அவனிடம் நேரடியாகவே கூறி விட்டாள் இளந்தளிர்.

“இது நல்லா இருக்கே ! ” கோவர்த்தனனும் எழுந்து கொண்டான்.

” தாங்க்ஸ் கோவர்த்தனன்.இந்த ஹெல்ப்பை மறக்க மாட்டேன்  ” இப்போது பேசியது சுபாஷினி.

தன் நிலையைக் கண்டு அப்படியே விட்டு விடாமல் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தவனிடம் நன்றி நவின்றாள்.

” பரவாயில்லைம்மா . டேக் ரெஸ்ட் .காலைல சாப்பிடாம இருக்காத ” அறிவுரை வழங்கி விட்டு இளந்தளிரிடம் வந்தான்.

” இப்போ கிளம்பறேன் ” 

அவன் செல்கிறேன் என்றதும் இவளோ தலை அசைப்புடன் முடித்துக் கொண்டாள்.

கோவர்த்தனன் வெளியே சென்றதும் சுபாஷினி ,

” அக்கா எதாவது சாப்பிட வாங்கிட்டு வா” 

” இப்போ தான் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கு.இன்னும் நான் இந்த விஷயத்தை அம்மா கிட்ட சொல்லல.அவங்க என்ன சொல்லப் போறாங்கன்னு கொஞ்சம் கூட பயமில்லையா உனக்கு ? ஸ்நாக்ஸ் ரொம்ப முக்கியமா ?” 

சிறுபிள்ளைத் தனமாகப் பேசும் சுபாஷினியைத் திட்டியே சோர்ந்து  விட்டாள் இளந்தளிர்.

” ஆமால்ல.இனி ஒரு வாரத்துக்கு நான் தான் வீட்ல பாவமான ஜீவனாக இருக்கப் போறேன்.அவங்க என்னைத் திட்டியே ஒரு வழி பண்ணிடுவாங்க ” 

புலம்பிக் கொண்டாள்.

” நீ சேட்டைப் பண்ணுனா திட்டு விழத்தான் செய்யும்.ஃப்ரண்ட் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்க.இதுக்குத் தான் அம்மா உன்னைத் தனியா அனுப்ப பயப்பட்றாங்க. நான் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட உண்மையை சொல்லிடுவேன் . உனக்கு எக்ஸ்க்யூஸே கிடையாது ” 

திட்டவட்டமாக கூறிய சகோதரியைப் பரிதாபமாக பார்த்த வண்ணம் இருந்தாள் சுபாஷினி.

” வாழ்க்கையே சோதனையாக இருக்கே !” தாயிடம் வாங்கப்போகும் அடிகளை நினைத்து பயந்தாள்.

” சரி இரு. குளுக்கோஸ் ஏறி முடியறதுக்குள்ள எதாவது ஸ்வீட்டா வாங்கிட்டு வர்றேன் ” 

தங்கையின் முகம் மலர்ந்ததைக் கண்டு இவளுக்கும் நிம்மதியாக இருந்தது.

என்ன இருந்தாலும் மயக்கம் போட்டு விழுந்துள்ளாளே ! என்ற பரிதவிப்பும் தோன்றிட அவளுக்காக உண்ண சிற்றுண்டி ஏதேனும் வாங்கித் தரலாம் என்று எண்ணினாள்.

” திட்டினாலும் செல்ல அக்கா தான்னு எனக்கு நல்லாத் தெரியுமே. பத்திரமா போய்ட்டு வாங்க அக்கா.” 

புன்னகையுடன் வழியனுப்பி வைத்தாள்.

இளந்தளிர் தங்கைக்காக பிடித்த சாக்லேட் வகையை வாங்கி வருவதற்காக மருத்துவமனைக்கு வெளியே வந்தாள்.

அந்நேரத்தில் இன்னும் அங்கிருந்து செல்லாமல்  இருந்த கோவர்த்தனனைக் கண்டாலும் அவனைத் தவிர்க்கும் விதமாக சற்றுத் தள்ளி நடந்தாள்.

அதைப் பார்த்த கோவர்த்தனனும் எதையும் பொருட்படுத்தாமல் , 

“மறுபடியும் வணக்கமுங்க ”  அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

” நீங்க இன்னும் போகலயா ? ” கால்கள் நிற்காமல் நடந்தாலும் வாய் அவனிற்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தது.

” இல்லங்க.ஒரு கால் வந்துச்சு பேசிட்டு இப்போ தான் வந்தேன்.உங்களைப் பார்த்ததும் நாலு வார்த்தைப் பேசத் தோனுச்சு ” 

” நீங்க கோபப்பட்டாலும் உங்க தங்கச்சி மேல அவ்ளோ பாசம் வச்சு இருக்கிங்கன்னு சுபாஷினி சொன்னாங்க.ஆனா பொறுமையா இருங்கன்னு நிறைய தடவை சொல்லி இருந்தும் நீங்க கேட்க மாட்டேங்குறிங்களாம் ”  வளவளத்துக் கொண்டு இருந்தான்.

” நானும் அதையே தான்ங்க சொல்றேன்.பொறுமையா இருங்க.எடுத்தவுடனே ஹைபிட்ச்ல பேச வேணாமே ?”  அறிவுரை வழங்கினான்.

இளந்தளிர் எதுவும் சொல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.

” நீங்களே சொல்லுங்க. இது நியாயமா ? உங்க சிஸ்டர் கரெக்ட்டாத் தானே பேசறாங்க ? அதை அப்படியே அக்சப்ட் பண்ணிக்க வேண்டியது தானே ! ” கண்களில் குறும்பு வழியப் பேசினான் கோவர்த்தனன்.

இளந்தளிர் ,  ” அவ ஏதோ உளறிட்டு இருக்கா ? அதை நான் அக்சப்ட் பண்ணனுமா ? தேவையே இல்லை.நீங்க உங்க வழியைப் பார்த்துட்டுப் போங்க” 

அவனது பேச்சைக் கேட்கத் , தான் தயாரில்லை என்பதை பகிரங்கமாக கூறிவிட்டாள்.

” என்னங்க இப்படி பட்டுனு பேசறீங்க ? என்னைப் பார்த்தா உங்களுக்குப் பாவமாகவே இல்லையா ?” பாவமாகக் கேட்டவனது  முகத்தை ஆராய்ந்தாள் இளந்தளிர்.

கோவர்த்தனனின் வதனத்தைப் பார்த்தவள் ,

துளி கூட கடுமை காட்டிப் பழகியிராத முகமும் ,  முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்த அவனது ஒளி பொருந்திய விழிகளும் பார்த்தவுடனேயே அவளுக்கு அமைதியைக் கொடுத்தது எனலாம்.

அவளுடைய கண்களை ஈர்த்த அவனது கண்ணியப் பார்வை கூட அவளுள் சிலிர்ப்பை உண்டாக்கியது.

” தளிர்  ! என்னாச்சு ?  ”  மெல்லிய குரலில் அழைத்தவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் இளந்தளிர்.

இவனை இப்போதே ரசிக்கத் தொடங்கிய தன் மனதைக் கடிந்து கொண்டு , ” பாய் ” சொல்லி விறுவிறுவெனத்  திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்.

கோவர்த்தனனும் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்த இடம் நோக்கி விரைந்தான்.

இளந்தளிருடன் சரிக்கு சமமாகப் பேசியதை நினைத்து அழகாய்ப் புன்னகைத்துக் கொண்டான்.

” இந்த ஸ்வீட் பெப்பர் ! இவ்ளோ படபடன்னுப் பொரியிறதைப் பார்த்தா க்யூட்டா  இருக்கே தவிர சண்டை போட மனசு வர மாட்டேங்குதே ! கோவர்த்தனா இது என்னடா உனக்கு இப்படி தாட்ஸ்ஸாக வருது. ஸ்வீட் பெப்பரை மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைச்சா மட்டுமே இதைப் பத்தி யோசி இல்லைன்னா வேலையில் கான்ஸன்ட்ரேட் பண்ணு ” 

இளந்தளிரின் ஞாபகங்களை சற்று தள்ளி வைத்து விட்டு தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.

ஒரு மணி நேரம் தாமதமாகி விட்டதால்  தன் உயரதிகாரியின் கோபத்தை எதிர் கொள்ளத் தயாராகிச் சென்றான் கோவர்த்தனன்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *