414 views

அத்தியாயம் 1

நிசப்தம் சூழ்ந்த அவ்வறையில் இருந்த இருவரில் ஒருவருக்கு அந்த அமைதிப் பிடித்தது என்றால், மற்றவருக்கு அது எரிச்சலையே கொடுத்தது.

அமைதியை விரும்பியவளோ,

“இந்த சைலன்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு” என்று ரசித்துக் கூறினாள்.

அது பிடிக்காமல், “என்ன அப்படி பெரிய சைலன்ஸ்? ஒரே மயான அமைதியா இருக்கு. நாம ரெண்டு பேர் இருந்தும் கூட இந்த இடத்துல வேஸ்ட்டா ஒரு சைலன்ஸ்…!” என்று சலித்துக் கொண்டான் அவன்.

“ப்ச்…! எல்லாமே வெறுப்பு தான் உனக்கு”

“ஆமா. வெறுப்பு தான். அதுக்கு என்ன எனக்குப் பிடிக்காததை எல்லாம் பிடிச்சிட்டு திரிய முடியாது”

அவனைப் பார்த்தவள், “என்னைக் கூடத் தான் உனக்குப்  பிடிக்காது. அப்பறம் ஏன் கல்யாணம் செய்துக்கிட்ட? வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் பழி வாங்கப் போறியோ?”

என்றதும், ஹாஸ்யமாய் சிரித்தவன்,

“உனக்குத் தாலி கட்டுனது பழி வாங்குறதுக்காக இல்லை. அப்படி நான் பழி வாங்க ட்ரை பண்ணாலும் அதை நீ பொறுத்துக்க மாட்ட. இந்தக் கல்யாணம் எதேச்சையாக நடந்திருக்கு. அதோட நீயும் இதுக்குச் சம்மதிச்சு இருக்க. உன்னை நான் கார்னர் செய்து கல்யாணம் பண்ணிக்கல. புரியுதா?”

இவ்வளவு சொன்னவன் அவளைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.

ஏனெனில் அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அதை சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டான் அவ்வளவு தான்…!

“எதேச்சையாக நடந்திருக்கு தான். உன் மேல் ரொம்ப கோபம் வருது. அதெல்லாம் மறந்துட்டு  வாழனுமா?”

“மறக்காத.அப்படி வாழனும்னு அவசியமும் இல்லை. நீ நீயா இரு. ஆனா எனக்குப் பிடிக்காத, என் வீட்டுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பண்ணாத” என்றான் திட்டவட்டமாக.

“அதே தான் உனக்கும். இதை நீ ஃபாலோ பண்ணினா நானும் கண்டிப்பாக ஃபாலோ பண்ணுவேன்” என்று சொல்லவும் ,

அதற்கு மட்டும் கோபம் வந்து விட்டது அவனுக்கு.அது ஏன்?

“ஏன் முறைக்கிற? பல்லைக் கடிக்கிற? நீ சொன்னப்போ இதெல்லாம் நான் பண்ணலையே?” என்றாள்.

இவையெல்லாம் இவர்களது திருமணம் முடிந்து, வரவேற்பு வைப்பதற்கு முன்னர் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதே போல், இந்த சம்பாஷணைக்கு முன்னதாகவே அவனது வீட்டாரைப் பற்றி அவளிடம் போதித்து இருந்தான்.

அவளும் அட்சரம் பிசகாமல் தன் வீட்டாரைப் பற்றி அவனிடம் கூறியிருந்தாள்.

மற்ற சடங்கு எல்லாம் முடிந்த பிறகு, இவனது வீட்டிற்கு அவளை விட்டுச் செல்வார்களே! அதுவரை இவளுக்குப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தான்.

“நான் சொல்றதைக் கேட்டியா? நீ கவனிச்ச மாதிரியே இல்லை” என்று குறைபட்டான்.

அவனைத் திரும்பி பார்த்தவள்,

“கேட்டே ஆகனும்னு ஆர்டர் போட்டுட்டு சொன்னா எனக்கு எதுவும் கேட்காது…! நீங்க சொல்றதை சஜஷன் ஆக மட்டுமே எடுத்துப்பேன். அது தான் முடிவு என்று சொன்னா கண்டிப்பாக ஒத்துக்க மாட்டேன்”

அழுத்தமான குரலில் கூறியவளை முறைத்தவன்,

” வீட்டில் எத்தனைப் பேர் இருக்காங்க? என்ன ரூல்? இதெல்லாம் தெரியும் தானே? மறுபடியும் விளக்கனுமா?” கடுப்புடன் கேட்டான்.

“எத்தனைப் பேர் இருக்காங்க என்று தெரியும். ஆனால் ரூல் எதாவது இருந்தால், அதை நான் ஃபாலோ பண்ணனும் என்று மட்டும் எதிர்பார்க்காதீங்க” சட்டென்று கூறிவிட்டு ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.

“எதையுமே கேட்க மாட்டேன்னா எப்படி? நான் தான் உன்னைப் பழி வாங்கப் போவதில்லைன்னு சொல்லிட்டேன்ல?” என்றான் கோபத்துடன்.

” நீ பழி வாங்கலைன்னு சொல்லிட்டா நான் இதெல்லாம் கேட்கனுமா? அவங்க எங்கிட்ட எப்படி பழகுறாங்களோ அப்படித் தான் நானும் பழகுவேன். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும், நமக்கு நல்லது பண்ணவங்களை எப்பவும் மறக்கக் கூடாது. இதெல்லாம் என்னோட எத்திக்ஸ். மத்ததெல்லாம் எதிர்ல இருக்கிறவங்க தான் முடிவு பண்ணனும் ” என்றாள் கூலாக.

அவனுமே பொறுமைசாலி தான். ஏனோ இன்று அவனது பொறுமை இவளால் பலமுறை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது.

“பழி வாங்க வச்சிடாத” என்று கர்ஜித்தான்.

“நீ சொல்றதை எல்லாம் என்னாலயும் செய்ய முடியும். அதை நினைவில் வச்சுக்கோ” என்று அவளும் காரசாரமாக பேசவும்,

அவர்களது உரையாடல் உறவினர்களால் தடை செய்யப்பட்டு, சடங்குகள் நிவர்த்தி செய்யப்பட்டது.

தீனதயாள் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணியும் தங்கள் மகள் அதிரூபாவின் திருமணம் நல்லபடியாக நிகழ்ந்ததை எண்ணி நிம்மதியாக இருந்தனர்.

மணமகன் பிரித்வியின் பெற்றோரும் இவர்களுக்கு நிகராக மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“சடங்கு எல்லாம் முடிஞ்சுருச்சு. சம்பந்தி பொண்ணை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிட்டு எங்க வீட்டுக்கு முறையா கொண்டு வந்து விடுங்க” என்று பிரித்வியின் தாய் சகுந்தலா கூறினார்.

கிருஷ்ணவேணி, “சரி சம்பந்தி. அதி வாம்மா !” என்று மகளைத் தனியறைக்கு அழைத்துச் சென்று முக அலங்காரத்தையும், சேலையையும் நன்றாக சமன் செய்தார்.

“நம்ம வீட்டுக்கு வந்துட்டு தான் டா அங்க போகனும். உன்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடி ஆக இருக்கு.” என்று கூறினார்.

பிரித்வி சிறிது நேரத்திற்கு முன்னர் தன்னிடம் அதிரூபா பேசிய விதத்தைப் பார்த்து சினம் கொண்டான்.

“எடக்கு மடக்காவே பேசுறா..!” என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

🌸🌸🌸

அதிரூபாவின் வீட்டு வாயிலில் இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்துப் போயினர்.

ஒரே மகள் திருமணம் முடிந்து புகுந்த வீடு போகும் போது, கலங்கிப் போய் இருந்தனர் தீனதயாளும், கிருஷ்ணவேணியும்.

அதிரூபாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, அழுது தீர்த்தனர்.

அதற்குப் பிறகு அவளது உடைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, முறையாக புகுந்த வீடு அனுப்பி வைக்க அனைவரும் பிரித்வியின் வீட்டிற்குச் சென்றனர்.

“இந்தாம்மா உன்னோட பை ” என்று அவளது உடைமைகளை வைத்தனர்.

அதிரூபாவின் கண்களில் குளம் கட்டியது.

“அம்மா… அப்பா…!” குரலில் கூட தெம்பு இல்லை அவளுக்கு.

“பாத்துக்கோ டா. எப்பவும் மாப்பிள்ளை கூட சந்தோஷமா இரு. வீட்டாளுங்க கிட்ட அனுசரணையா நட” என்று அறிவுரை வழங்கியவர்கள் மனமே இல்லாமல் மகளை விட்டுப் பிரிந்து செல்ல ஆயத்தமாயினர்.

” நாங்க போய்ட்டு வர்றோம் மாப்பிள்ளை. போய்ட்டு வர்றோம் சம்பந்தி.வர்றோம்மா” என்று பிரித்வியிடமும், அவனது வீட்டினரிடமும் கூறிவிட்டு சென்றனர்.

அதற்கு மேல் அவர்கள் அங்கிருந்தால், தாங்களே அவளை மேலும் அழுக வைத்து விடுவோம் என்று நினைத்து சென்று விட்டனர்.

சகுந்தலா, “விளக்கேத்து அதிரூபா” என்று பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.

விளக்கேற்றி முடித்ததும்,

“இது உன் வீடு போல நினைச்சுக்கோ ம்மா.. ” என்றார் பிரித்வியின் தந்தை மகேஸ்வரன்.

இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

” காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் மா. நீ போய் பிரித்வி கூட பேசிட்டு இரு” என்றவர்,

கணவனிடம்,”நீங்க வாங்க. உங்களுக்கு ப்ளாக் காஃபி போட்டுத் தர்றேன்”

அலங்காரங்களைக் கலைக்க எந்த அறை உள்ளது? என்று தேடிப் பார்த்தாள் அதிரூபா.

அவளது தேடலைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரித்வியின் தங்கை லயா.

“அண்ணி என்ன தேடுறீங்க?”

” இந்த மேக் அப் அப்பறம் சேலை மாத்தனும். கச கசன்னு இருக்கு. எதாவது ரூம் திறந்து இருக்கா? ”

“அண்ணன் ரூம்லயே மாத்துங்க அண்ணி. அவர் இப்போ தான் ட்ரஸ் மாத்தப் போனாரு.” என்று விவரம் சொல்ல,

‘நம்மளை கூப்பிட்டுப் போகாமல் அவன் மட்டும் ட்ரஸ்ஸை மாத்தப் போய்ட்டான்’ அவனை மனதிற்குள் தாளித்தவள்,

” அப்படியா லயா… உங்க அண்ணன் ரூம் எங்க இருக்கு?” என்று வழி கேட்டு அறையின் முன் போய் நின்றாள் அதிரூபா.

கதவைத் தட்டி விட்டு, வெளியே காத்திருந்தாள்.

“வர்றேன் லயா” தங்கை என்று நினைத்து பதில் சொன்னான்.

சில நிமிடங்கள் கழித்து கதவு திறக்கப்பட்டது.

அதிரூபாவைக் கண்டதும்,

” நீ தானா..! இன்னுமா ட்ரஸ் மாத்தாம இருக்க?”

“நீ பாட்டுக்கு வந்துட்ட! இந்த வீட்ல எனக்கு எது எங்க இருக்குன்னே தெரியாது. நான் “பே” ன்னு முழிச்சிட்டு இருந்தேன். லயா தான் உன் ரூம் இங்க இருக்குனு சொன்னா. உன்னைத் தவிர மத்தவங்களுக்கு என் மேல் அக்கறை இருக்கு”

“அக்கறை இருந்தால் சந்தோஷப்படு. ஏன் கடுகடுன்னு பேசுற?”

வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தானே தவிர அவளை அறைக்குள் அனுமதிக்காமல் போக்கு காட்டினான் பிரித்வி.

“ப்ச்… வழியை விடு” என்று அவசர அவசரமாக அறைக்குள் நுழைந்து கொண்டவள், தாழ் போட்டுக் கொண்டாள்.

” பேசிட்டு இருக்கேன்ல…!” என்று உச்சஸ்தாயியில் கத்தினான்.

“அப்படியே பேசிட்டு இரு. நான் ட்ரஸ் மாத்திட்டு வந்துடறேன்”

“ஷிட்…!” என்று கத்தியவன் கீழே போய் விட்டான்.

இவள் சாவகாசமாக உடை மாற்றி விட்டு வந்தாள்.

“அண்ணியைக் கூப்பிட்டுப் போகாமல் நீங்க மட்டும் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டீங்களே அண்ணா. இனிமே இப்படி பண்ணாதீங்க. அவங்க ரொம்ப ஃபீல் பண்ணாங்க” என்று லயா கூறவும்,

“ஓஹோ…!”

அதற்குள் அதிரூபா கீழே வந்து விட, அச்சமயத்தில் சகுந்தலா அவர்களுக்குக் காஃபி கொண்டு வந்து கொடுத்தார்.

மகேஸ்வரன், “ப்ளாக் காஃபி குடிப்பியா ம்மா?” என்று மருமகளிடம் பேச்சுக் கொடுத்தார்.

” எப்போதாவது குடிப்பேன் மாமா. ஆனால் ரொம்ப எல்லாம் பிடிக்காது “

“குட்… ஆனா என்னோட ஃபேவரைட் ப்ளாக் காஃபி தான்” என்று இவர்கள் சுவாரஸ்யமாக பேச,

சகுந்தலாவும், லயாவும் காஃபி குடிப்பதில் கவனமாக இருக்க, பிரித்வி தன்னுடைய கோப்பையை வாயில் வைக்காமல் இவர்களது உரையாடலை அசுவாரசியமாகப் பார்த்தான்.

ஆனால் இதைக் கண்டு கொள்ளாத அதிரூபா, தன் காஃபியை ரசித்துக் குடித்தாள்.

“லன்ச் மெனு சொல்லுங்க மக்களே…!” என்றார் சகுந்தலா.

“அண்ணிக்குத் தான் முதல் சான்ஸ் ம்மா. அவங்களே சொல்லட்டும்” லயா சொல்லவும்,

பிரித்வி, “எனக்கு உருளைக்கிழங்கு சாம்பார், புடலங்காய் கூட்டு ம்மா” என்றான் முந்திக் கொண்டு.

அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்த அதிரூபா,’இதுல கூட போட்டிப் போட்றான் பாரு’ என்று திட்டினாள்.

“டேய் மருமக சொல்லட்டும். டெய்லி உனக்குப் பிடிச்சது தான சமைக்கிறோம். இப்போ அதிரூபாவுக்குப் பிடிச்சதை சமைப்போம்” என்று மகனைக் கடிந்தார் மகேஸ்வரன்.

அவரிடம் கோபித்துக் கொள்ள முடியாது என்பதால், ப்ரித்வியின் கோபம் மனைவியிடம் திரும்பியது.

அவனுடைய முறைப்பை எதிர் கொண்டவள், கடைசி மடக்கு காஃபியைப் பருகி விட்டு,

“தாங்க்ஸ் மாமா…எனக்குப் பீன்ஸ் சாம்பார், முட்டைக்கோஸ் பொரியல் பிடிக்கும் அத்தை” என்க,

” அப்போ அதையே செஞ்சிடலாம்” என்றார் சகுந்தலா.

“பாரபட்சம் பாக்காதீங்க அம்மா. எல்லாரையும் தான கேட்டீங்க? ” என்று தாயிடம் முறையிட்டான் பிரித்வி.

“அடேய்… இதுல என்னடா பாரபட்சம்? லயா சொன்னது வாஸ்தவம் தான?”

இப்போது தங்கையை முறைத்தான்.

“அம்மா…” அவரை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தாள் லயா.

இதையெல்லாம் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்தாள் அதிரூபா.

– தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *