948 views

ரகுவரன் 1

(நிறைய நாள் எடுத்துக்கிட்டேன் மன்னிச்சிடுங்க. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம போன கையோட எனக்கு நிச்சயதார்த்தம் பண்ண வேண்டிய சூழ்நிலை. அடுத்த வருடம் திருமணம் முடிவாகி இருக்கு. அதோட வேலையால தான் கதை எழுதுறது தள்ளிப் போயிடுச்சு. இனி தினமும் அத்தியாயங்கள் வரும். காத்திருந்தமைக்கு நன்றிகள். )

கொடைக்கானல் குளிருக்கு இணையாக இருந்தது சென்னை குளிர். பார்க்கும் இடமெல்லாம் வெண்ணிற பனிகள் படர்ந்து இருந்தது. அந்த குளிரும் போதாது என்று அறையில் இருக்கும் இயந்திரத்தை அலற விட்டிருந்தான் அறை முழுவதும் குளிர் வர. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இரண்டும் குளிரில் போர்வைக்குள் சுருங்கிக் கொள்ள, படர்ந்த முதுகோடு படுத்து கிடந்தான் ரகுவரன்.

போர்வை தேவைப்படாத தேகத்தில் இரவு நேர ஆடை மட்டும் குடியிருந்தது. முன்பை விட உடம்பில் சதை ஏறி இருந்தது குடும்பஸ்தன் ஆனதால். ரகுவரனின் உயிர் நாடி மான்விழி குளிர் தாங்க முடியாமல் தந்தையோடு ஒட்டிப் படுத்தது.

அதுவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்தவன் உடனே திரும்பினான் அவள் அசைவை கண்டுகொண்டு. பெண் மகளின் நடுக்கத்தில் குளிர்சாதனைப்பெட்டியை நிறுத்தியவன்,

“தங்கத்துக்கு ரொம்ப குளிருதாடா, அப்பா கிட்ட வாங்க.” என்றவன் போர்வையை தன் உடலோடு போர்த்திக் கொண்டு அதன் மேல் பிள்ளையை சாய்த்துக் கொண்டான். மகளின் குளிருக்கு இதமாக அவளுக்கு மேல் ஒரு போர்வையை போர்த்தி விட, ஒட்டிப்பிறந்த இரட்டையாக அக்கா கூடவே புரண்டு வந்தது ரகுவரனின் நகல்.

சிறு முறைப்பு தந்தையிடம். மகளின் உறக்கம் கலையாதவாறு மகனை பக்கத்தில் படுக்க வைத்தவன் அவனுக்கும் போர்வையை சேர்த்து போர்த்தினான்.

“இன்னும் கொஞ்ச நேரம் தான் என் தங்கத்துக்கு குளிரு தெரியாது.”  மான்விழியின் நடுக்கம் குறையும் வரை வருடிக் கொண்டிருந்தான் தலையை.

பிள்ளையின் உறக்கத்தை உறுதி செய்தவன் மகனை தள்ளிப் படுக்க வைத்து விட்டு தன்னருகில் மகளை படுக்க வைத்தான். தூக்கத்தில் பொம்மை போல் அசைந்த மான்விழி சிணுங்கிக் கொண்டே படுத்தாள். இருட்டில் அந்த அழகை ரசித்தவன், “தங்க புள்ள.” என்று முத்தம் வைத்தான்.

பிள்ளைகளுக்கு தந்தையாக நடந்து கொண்டவன் மனம் மனைவி படுத்திருக்கும் இடத்தை திரும்பிப் பார்த்தது. அவள் இருக்கும் இடம் காலியாக இருக்க, கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான். பார்வை அறையில் இருக்கும் குளியலறையில் விழ, விளக்கு எரியாமல் இருக்கும் அறை சொல்லியது அவள் அங்கு இல்லை என்று.

அடுத்தடுத்து வரும் கொட்டாவிகளை வெளியே விட்டவன் போர்வையை விலக்கி எழுந்தான். பால்கனி கதவை திறந்து பார்க்க, அங்கு அவனது மனைவி இல்லை. எதற்கோ இருக்கட்டும் என்று குளியலறை கதவையும் திறந்து பார்த்தான். அங்கும் அவள் இருந்ததற்கான அடையாளம் இல்லை.

பிள்ளைகளின் உறக்கத்தை ஒரு முறை உறுதி செய்து கொண்டவன் அறையை விட்டு வெளியேறினான். அடிக்கடி கும்மாளம் போடும் மொட்டை மாடிக்கு சென்றவன் தேடினான் அவளவனை. பரந்த மொட்டை மாடி எங்கும் அவள் தடம் தெரியவில்லை.

பெரிதாக கவலை கொள்ளாதவன் தேடினான் தங்கி இருக்கும் கட்டிடத்தை முழுவதுமாக சுற்றி வந்து. பெரியவர்கள் இருவரும் தங்கியிருக்கும் வீடு எப்போதும் திறந்து இருப்பதால் கவலை கொள்ளாமல் கதவை திறந்தவன் அங்கு மனைவியை தேடினான். அங்கும் இல்லாத பின்பு தான் அவனின் புருவங்கள் சிக்கிக்கொண்டது ஒன்றோடு ஒன்று.

லேசாக திறந்திருக்கும் சாந்தியின் அறை கதவை அவருக்கு தொந்தரவு தராத வகையில் திறந்து, மனைவியை தேடினான். இங்கு இருக்க மாட்டாள் என்று தெரிந்தே தேடியதால் பெரிதாக ஏமாறாமல் தன் அன்னை இருக்கும் அறை கதவையும் திறந்து பார்த்தான். அங்கும் அவனுக்கான பதில் கிடைக்கவில்லை.

தேடிய இடத்தில் எல்லாம் மீண்டும் ஒருமுறை தேடியவன் கடைசியாக அவர்கள் இருக்கும் அறைக்கு வர, பிள்ளைகள் மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அறையின் விளக்கை போட்டவன் யோசனையோடு அவள் உபயோகிக்கும் பொருட்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.

கைப்பேசி இல்லாததைக் கண்டு திடுக்கிட்டவன் பதற்றமானான். கிரிமினல் லாயரின் மூளை வேகமாக செயல்பட்டு அறையை துலாவியது கண்களால். சிக்கியது அவனுக்கு நேராக இருக்கும் மேஜையில் உள்ள காகிதம். காத்தாடியின் உதவியால் அசைந்து கொண்டிருக்கும் பேப்பர் மீது விழி அசையாமல் நிலைத்தது.

நகராமல் அப்படியே நின்றவன் தன் மனதை மாற்றிக் கொண்டு அதை கையில் எடுத்தான். படிக்கும் துணிவு இல்லாமல் கண்மூடியவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திறந்தான். முதல் வரியே மனதை கனக்க செய்தது.

“நான் போறேன் ரகு. தயவு செஞ்சு என்னை தேடி வராத. இனியும் என்னால உன்னை சமாளிக்க முடியாது. குழந்தைகளை பத்திரமா பார்த்துக்க. முக்கியமா மகிழ்வரன் கிட்ட மூஞ்சிய காட்டாம இரு. அவனும் நம்ம பெத்த மகன் தான். மானு கிட்ட பொறுமையா எடுத்து சொல்லு அவ புரிஞ்சுப்பா. நான் போன கோபத்தை யார்கிட்டயும் காட்டாத. என்னால அவங்க யாரும் கஷ்டப்பட வேணாம். நான் சொன்னதையும் மீறி என்னை தேடி வந்தா… முடிவு இன்னும் மோசமா இருக்கும்.” என்ற கடிதத்தை படித்ததும் ரகுவரன் கண்கள் சிவந்தது.

மனைவியின் முடிவை நினைத்து வருந்தி கலங்கிக் கொண்டிருக்கும் வேலை அவனுக்குள் மறைந்து போன ரகுவரன் முனக்கென்று முன்னே வந்து நின்றான். சுள்ளென்ற கோபத்தீ உடல் முழுவதும் பற்றி கொண்டது. இப்படி ஒரு முடிவை அவள் எடுப்பாள் என்று சிறிதும் எதிர்பார்க்காதவன்,

“தொல்லவிட்டுச்சுன்னு நான் என் குழந்தைங்க கூட சந்தோஷமா இருப்பேன்டி. ஒரு நாளும் உன்ன தேடி வர மாட்டேன். நீயும் தப்பி தவறி கூட மனசு மாறி திரும்ப வந்துடாத. அப்புறம் இந்த ரகுவரனுக்குள்ள இருக்க வில்லன் பல வருஷம் கழிச்சு வெளிய வர வேண்டியதா இருக்கும். இனி நீ என் வாழ்க்கைல இல்ல.” என மனைவியிடம் கோபத்தை கொட்டுவதாக எண்ணி காகிதத்திடம் கொட்டிக் கொண்டிருந்தான்.

“உன்கிட்ட அடங்கிப்போனதால இந்த ரகுவரனை வெத்து வெட்டுன்னு நினைச்சுட்டியா. பாசத்துக்காக மட்டும் தான்டி உன் கூட இத்தனை வருஷம் வாழ்ந்தேன். என்ன வேணான்னு போன உன்ன இனி என் வாழ்க்கையில நான் பார்க்கவே கூடாது. என் கண்ணுல சிக்கிடாதடி கொலை பண்ற அளவுக்கு வெறில இருக்கேன்.”  சத்தம் கேட்டு  பிள்ளைகள் எழுந்து விடாத வண்ணம் தனக்குள் பேசிக் கொண்டான்

அவளைத் தேடிச் செல்ல ரோஷம் இடம் கொடுக்காததால் படுத்துக்கொண்டான் தன்னிடத்தில். கோபம் பாரங்கள் போல் இறுக்கமாக இருப்பதால் கண்கள் துடித்துக் கொண்டே இருந்தது தூங்கவிடாமல். அசைந்து படுத்து அவள் நினைவை ஒதுக்கி வைத்தவன் முடியாமல் நினைக்க ஆரம்பித்தான். இனிமையாக வாழ்ந்த தருணங்கள் கண் முன் காட்சியளித்தது.

“பொண்டாட்டி சின்னதா ஒரே ஒரு உம்மா…” என்று சேர்த்து வைத்த உதட்டை அவள் அருகில் கொண்டு செல்ல, “உன் பசங்க இருக்கிற வரைக்கும் நல்லவன் மாதிரி நடிக்கிற. கொஞ்சம் கண் அசைந்துட்டா போதும் சுருட்டி வச்ச வாலு நீண்டுக்குதுடா.” தன்னிடம் வந்த உதட்டை அடித்து அவன் செய்கையை நிறுத்தினாள்.

உதட்டை தடவி வலியை குறைத்தவன், “புருஷனுக்கு கொஞ்சமாது மரியாதை கொடுக்கணும்னு தெரியுமாடி என் வக்கீலு.” முத்தம் கொடுத்து மகிழ்விக்க நினைத்த மனைவியின் உதட்டை பிடித்து தன் இஷ்டத்திற்கு வளைக்க ஆரம்பித்தான்.

“டேய்! பொறுக்கி வலிக்குதுடா, விடு.”

“பொறுக்கியா சொல்ற இருடி இன்னையோட இந்த உதட்டை பிச்சி எடுத்திடுறேன்.”

சொன்னது போல் செய்ய துவங்கினான். சைக்கோ ரகுவரனிடம் சிக்கிக்கொண்ட மகிழினி படாதப்பாடுபட்டு தன் உதட்டை காப்பாற்றிக் கொள்ள போராட, அசுரனின் இரு இதழ்களும் விடுவதாக இல்லை மனைவியின் இதழை.

நேரம் செல்வது போல் அவளின் வலிகளும் அதிகமாக, பொறுக்க முடியாமல் ஒத்துழைப்பது போல் நடித்து அவன் இதழ்களை தனக்குள் வைத்துக் கொண்டவள் பழிவாங்கி விட்டாள் கடித்து.

“அம்ம்ம்மாமா” என்று அலறியவன் அவளை விட்டு தள்ளி படுக்க,

“தேவையாடா ரகுவரா இது உனக்கு.” என்று சிரித்து வெறுப்பேற்றினாள்.

கடி வாங்கிய இடம் விடாமல் எரிச்சல் கொடுப்பதால் திரும்பி தாக்க முடியாமல் முறைத்துக் கொண்டு இருந்தான் ரகுவரன். உள்ளுக்குள் முறைக்கும் கணவனின் அழகை ரசித்தவள் வெளியில் கண்டுகொள்ளாமல் தூங்க ஆரம்பித்தாள் திரும்பி படுத்து.

விழி மூடியவளின் எண்ணங்கள் தன்னை ஆளும் கணவனின் வருகையை எதிர்பார்த்தது. தன்னிடம் வருவான் என்ற அவளின் எதிர்பார்ப்பு பொய்யானதால் திரும்பிப் பார்த்தாள். கண்கள் இரண்டின் மீதும் கையை தாங்கிக் கொண்டு படுத்திருந்தான் ரகுவரன்.

கணவனின் செய்கையில் பிடித்தமின்மை மகிக்கு ஏற்பட, முறைப்போடு திரும்பி படுத்தாள். இரு நொடி அமைதியாக இருந்தவள் அவன் அருகில் நெருங்கி படுக்க, அசைவு இல்லை கள்வனிடம்.

சத்தமிட்டு அழைக்காமல் சீண்டிப் பார்த்தாள். அப்போதும் அவனிடம் அசைவு ஏற்படாமல் இருக்க, நெருங்கி படுத்தாள். நெஞ்சில் சாய்ந்து கொண்டு தன் உடல் எடையை அவனுக்கு காட்டியவள், “டேய் ரகுவரா நீ தூங்கலன்னு தெரியும் மரியாதையா எந்திரிச்சிடுடா.” என்ற பின்னும் அசையாமல் படுத்திருந்தான்.

“டேய்!”

“ரகுவரா…”

“உம்மா உம்மா வேணாமா”

“இப்ப மட்டும் நீ திரும்பல தூங்கிட்டு இருக்க உன் பசங்கள எழுப்பிடுவேன்.” அவனது பலவீனத்தை மிரட்டலாக மகிழினி கையில் எடுத்தாள்.

முகம் சுருங்கி உஷ்ண மூச்சுக்கள் அவளிடமிருந்து வெளிவருவதை உணர்ந்தாலும் ரகுவரன் பதில் கொடுக்கவில்லை. பொறுத்துப் பார்த்தவள் கோபமாக தன் பிள்ளைகள் இருக்கும் பக்கம் நகர, குண்டுகட்டாக அப்படியே மெத்தையில் சாய்த்தவன், “என் பசங்க எழுந்தாங்க கடிச்சிடுவேன்.” என்று அவள் மீது அமர்ந்தான்.

தன்னை சிறை எடுத்திருக்கும் கைகளை தட்டி விட்டவள் அவனைப் பார்க்காது திரும்பிக் கொள்ள, “நீ தானடி ஓவரா சீன் போட்டு கடிச்சு வச்ச” என்றவாறு அவள் முகத்தை திருப்ப, “தொடாத போடா” என்று தட்டி விட்டாள்.

அவள் வார்த்தைக்கு எதிராக அடிக்கடி தொட்டு அடிகளை வாங்கிக் கொண்டான் ரகுவரன். அவனது சேட்டைகள் எரிச்சலை கொடுக்க, தள்ளிவிட்டு பழையபடி திரும்பி படுத்து கொண்டாள். புன்னகையோடு முதுகை உரசி கொண்டு படுத்தவன், “இந்த மெத்தைய விட இந்த மெத்தை செமையா இருக்குடி” என்றவாறு நட்ட நடு முதுகை கடிக்க,

“கறிக்கு செத்தவனே போடா” தள்ளிவிட்டு முதுகை தேய்த்துக் கொண்டாள்.

புன்னகையோடு மீண்டும் படையெடுத்தவன் அவளிடம் தோல்வியை தழுவிக் கொண்டு முகத்தை உம்மென்று வைத்தான். அதைக் கண்டு கொள்ளாத மகி தொல்லை விட்டால் போதும் என்று தூங்க ஆரம்பித்தாள்.

தன்னை தூங்க விடாமல் சதி செய்த மனைவியின் தூக்கத்தையும் பறிக்க எண்ணியவன் அசுர வேகத்தில் அவளிடம் தாக்குதல் நடத்த, “ரகு எரும விடுடா” என்று கதற மட்டுமே முடிந்தது அவளால்.

ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு புதிய இன்பத்தை அனுபவித்தவன் பழைய நினைவை கலைத்தான். மனதில் கோபம் இருந்தாலும் கை தன்னை அணைத்துக் கொண்டு தூங்கும் மனைவியை எதிர்பார்த்து மெத்தையை தடவியது. அவள் இல்லாத இடம் தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தவன் வேகமாக எழுந்தான்.

“ஏண்டி இப்படி பண்ண? நான் சொன்ன வார்த்தைல அப்படி என்ன தப்ப பார்த்துட்ட. உன்கிட்ட இதை கூட நான் கேட்க கூடாதா? நீ என்ன என்னை வேணாம்னு சொல்றது எனக்கு நீ வேணாம்டி. திரும்பி வந்து இந்த ரகுவரன் கால பிடிச்சு கெஞ்சுனா கூட உன்னை மன்னிக்க மாட்டேன்.” என்று புலம்பிக் கொண்டு அந்த இரவை கடத்தினான்.

எப்பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்தவன் நின்றான் சாந்தி முன்பு. அவரோ மருமகள் செயலை அறிந்து எதுவும் பேச முடியாமல் நிற்க, “இந்த மாதிரி அவ பண்ணதுக்கு காரணமே நீதான்.” என்ற ருத்ர வார்த்தையோடு நின்றான் ஆகாஷ்.

“இது எனக்கும் என் மனைவிக்கும் நடக்கிற பிரச்சினை. உனக்கு இதுல வேலை இல்லடா.” பட்டென்று நீ உள்ளே வராதே என்ற வார்த்தையை ஆகாஷிடம் கொடுக்க,

“பாரு, உங்க அண்ணன் எனக்கு எவ்ளோ மரியாதை கொடுக்குறான்னு. எத்தனை வருஷம் ஆனாலும் இவன் குணம் மாறவே மாறாது.” என்றவன் முன்பு நின்றவன் அவன் சட்டையை பிடித்தான்.

அண்ணனின் செயலில் பதறிய இனியா, “அண்ணா இதெல்லாம் நல்லா இல்ல. என் புருஷனை இப்படி மரியாதை இல்லாம  பண்றதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.” என்று ரகுவரனின் கோபத்தை இன்னும் கிளறி விட,

“உன்னை யாரு சும்மா இருக்க சொன்னா, நீயும் உன் புருஷனும் ஜிங்கு ஜிங்குன்னு நடு வீட்டுல  ஆடுங்க. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆயிரம் பிரச்சனை நடக்கும் அதுல தலையிட இவன் யாரு? என்னைக்காது உங்களுக்குள்ள நடக்கிற பிரச்சனைக்கு நடுவுல நான் வந்து இருக்கனா? உங்க இடம் எதுவோ அங்கயே இருந்துக்கோங்க அதுதான் உங்களுக்கு மரியாதை.” என்றான் கோபத்தை முழுமையாக வார்த்தையில் காட்டி.

“கோபப்படாதீங்க அண்ணா. உங்கள மாதிரி அவருக்கும் மகிழினி வீட்ல இல்லன்ற வருத்தம் இருக்க தான செய்யும். நாளைக்கு உங்க தங்கச்சி இப்படி பண்ணா நீங்க கேள்வி கேட்க மாட்டீங்களா?” ரகுவரனிடம் குரல் உயர்த்தாமல் மிக மென்மையாக பேசினாள் இனன்யா.

“இன்னும் இவ எனக்கு தங்கச்சி இல்ல கேள்வி கேட்டுட்டு இருக்க. புருஷன் பொண்டாட்டி பிரச்சினைக்கு நடுவுல இவன் மட்டும் இல்ல யாரு வந்தாலும் தப்பு தான். உங்கள சொல்லி தப்பு இல்லை அவளை சொல்லணும். கைல மட்டும் சிக்கெட்டும் அப்ப தெரியும் இந்த ரகுவரன் கோபம் என்னன்னு.”

“என்னடா பண்ணுவ அவள? இந்த மாதிரி நீ பண்ணதால தான் உன் உறவே வேண்டாம்னு எங்கயோ ஓடிப்போயிட்டா. இதுக்கு மேல நீ பண்ண என்ன இருக்கு.”

“சதீஷ் இவன் வாயை மூட சொல்லு.”

“என் வாய மூட சொல்ல நீ யாருடா?”

“சதீஷ் கடைசியா சொல்றேன் இவனை சும்மா இருக்க சொல்லு.” ரகுவரனின் கோபத்தை உணர்ந்த சதீஷ்,

“பாஸ் நீங்களாது கொஞ்சம் பொறுமையா இருங்க. இப்ப நமக்கு மேடம் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சாகணும் அதுதான் முக்கியம்.”

“எதுக்கு பொறுமையா இருக்கணும் சதீஷ். இவன் இல்லாத வேலையெல்லாம் பண்ணி அவ நிம்மதிய கெடுத்து வீட்டை விட்டு அனுப்புவான் நான் பேசாம இருக்கணுமா.”

“டேய் வாய மூடுடா!”

“மரியாதையா பேசலனா உனக்கும் மரியாதை கிடைக்காது” என்றவன் ரகுவரனை பார்த்து விரல் நீட்ட, அவ்வளவுதான் காளையை அடக்க முடியவில்லை யாராலும்.

பாய்ந்து ஆகாஷ் சட்டையைப் பிடித்தவன் விடாமல் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தான். ஆகாஷும் விடுவதாக இல்லை. அக்கா கணவனின் சட்டையை பிடித்துக் கொண்டு பதில் வாதம் புரிந்தான். வீட்டின் பெரியவர்கள் இருவரும் இவர்களை அடக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டனர். இனியா, இனன்யா, சதீஷ் மூவரும் அடக்க பெரும்பாடு பட்டனர் வெகு நேரம்.

ரகுவரனின் நிதானம் இரவே அவனை விட்டு சென்று விட்டதால் மொத்தமாக மனைவி மீது இருக்கும் கோபத்தையும் காட்டினான் மச்சானிடம். அக்கா எடுத்திருக்கும் முடிவால் கோபம் கொண்டவன் மறைக்காமல் காட்டினான் ரகுவரனிடம். முட்டிக்கொண்டு முறைக்கும் காளைகள் பட்டென்று புன்னகைத்தனர்….

“அப்பா” என்ற மான்விழியின் குரலில்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்