“அக்கா… மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்துட்டு இருக்காங்களாம். கிளம்பிட்டியா?”
“ஆயா பலகாரம் எல்லாம் ரெடி ஆகிடுச்சா…” சத்யரூபா தனது சல்வாரின் துப்பட்டாவை கழுத்தில் சுற்றிக் கொண்டு, கையில் பழப் பொருட்கள் அடங்கிய கட்டைப்பையை வரவேற்பறையில் வைத்தபடி, கத்தினாள்.
அடுக்களையில் வேலையாக இருந்த சாவித்ரி, கரண்டியை பிடித்தபடி வெளியில் வந்தார். வயது 70ஐ தாண்டி விட்டது என்றால் யாரும் நம்ப இயலாத தோற்றம்.
“எத்தனை தடவைடி சொல்றது. தொண்டையை திறக்காதன்னு. அமைதியா பேச மாட்டியா?” எனக் கடிந்து கொள்ள,
“என் குரலே அப்படிதான் ஆயா. உனக்கு தெரியாதா. புதுசா கேக்குற. மசமசன்னு நிக்காம போய் வேலையை பாரு ஆயா. அந்த வீணாப்போன தரகர் இந்த தடவையாவது ஒழுங்கான வரனை கூட்டிட்டு வரணும்…” என்றவளின் முகத்தில் கவலையின் ரேகைகள்.
25 வயது நிரம்பிய துறுதுறுப்பான பெண் சத்யரூபா. அதே அளவு பொறுப்புணர்ச்சியும், குடும்பத்தை தாங்கும் முதிர்ச்சியும் அளவுக்கு அதிகமாகவே வந்து விட்டது.
அவளது 15 ஆவது அகவையில் தந்தை மாரடைப்பில் காலமாகிட, விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அதனை சத்யரூபாவின் தாய் தாமரை பார்த்துக் கொள்ள, அவர்களுக்கு இரு பெண்கள்.
முதல் பெண் வைஷாலி. அமைதியின் மறுஉருவம். வயது 28 ஐ கடந்தும், திருமணம் தான் கூடி வரவில்லை. அதை எண்ணி குடும்பத்தினர் வருந்தாத நாளே இல்லை எனலாம். பாதி வரன்கள், வரதட்சணையால் தட்டிப்போனது என்றால், மீதி வரனை சத்யரூபாவே தவிர்த்தாள்.
தாமரை தான் சில நேரம் சலித்துக் கொள்வார்.
“மாப்பிள்ளை வீடுன்னா சில பிக்கல் பிடுங்கல், குத்தல் பேச்சு எல்லாமே இருக்கும் சத்யா. சில விஷயத்தை பொறுத்துப் போறது தான் நல்லது. மாப்ள வீட்டாளுங்க ஏதாவது ஒன்னு சொல்லிட்டா, உடனே அந்த மாப்பிள்ளை வேணாம்ன்னு சொல்லிடுறது நல்லா இல்ல.”
மூக்கு நுனி சிவக்க அவள் கொந்தளிப்பாள்.
“என்னம்மா நீங்க… வைஷுக்காவுக்கு என்ன குறைச்சல். இந்த வயசுலயே ஐடி வேலைல லட்சக்கணக்குல சம்பாரிக்கிறா. மாப்பிள்ளையையும் உட்கார வச்சு சோறு போடுற அளவுக்கு அவளுக்கு எல்லா தகுதியும் இருக்கு. ஆனா, போன மாசம் வந்துட்டு போன மாப்பிள்ளை வீட்டாளுங்க என்ன சொன்னாங்க…?” என்று சண்டைக்கு வர, சாவித்ரியும் தாமரையும் நொந்து பார்த்தனர்.
வைஷாலி தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “என்ன சொன்னாங்க” என்று கேட்டிட,
“பொண்ணு புது நிறமா இருக்கு… கல்யாணத்துக்குள்ள வீட்லயே இருக்க வச்சு வெளுக்க வச்சுடுங்க.”
“பொண்ணு ஒல்லியா இருக்கு. கல்யாணத்துக்குள்ள நல்லா சாப்பிட வச்சு உடம்ப தேத்துங்க.”
“பொண்ணு கொஞ்சம் உயரம் கம்மி, கல்யாணத்து அன்னைக்கு ஹீல்ஸ் போட்டு நிக்க வைக்கணும் போலன்னு இஷ்டத்துக்கு பேசுறாங்க.
கல்யாணத்துக்குள்ள இதெல்லாம் நடக்கலைன்னா கல்யாணத்தை நிறுத்திட்டு போய்டுவாங்களாமா. அந்த அம்மாவே கரு கருன்னு கருவா கொட்டையா இருக்கு. அதுக்கு என் அக்கா புது நிறமாம். அடிச்சு மூஞ்சியை திருப்பிருப்பேன்.” என்று அனல் அடிக்க கூறியதில்,
“ஏன் அடிச்சுருக்க வேண்டியது தான…” என்று முறைத்தார் தாமரை.
“அதுக்கு பதிலா தான், அவங்க வந்த கார் டயரை கிழிச்சு விட்டேன். இங்க இருந்து அவ்ளோ சீக்கிரம் ஆட்டோ கூட வராது. பொடி நடையா 5 கிலோமீட்டர் நடக்க வச்சதும் தான் மனசு லேசாச்சு.” என அசட்டையாகக் கூற, தாமரை தலையில் அடைத்துக் கொண்டார்.
வைஷுவோ சத்தமாக சிரித்து விட, சாவித்ரி “நல்ல பொண்ணை பெத்து வச்சுருக்க தாமரை. வைஷு கல்யாணம் கூட சுலபமா நடந்துடும் போல. இவள் அடிக்கிற கூத்தை பார்த்தா, இவளோட கல்யாணத்தை நினைச்சு தான் எனக்கு இப்ப பயமே வருது” என்று நெஞ்சைப் பிடித்து கொள்ள,
“உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு ஆயா. எனக்கு இந்த பொண்ணு பாக்குறது… பலகாரம் சாப்புட்றதுலாம் இல்ல. நேரடியா அந்த மாப்பிள்ளைக்காரனை கூப்பிட்டு, இன்டெர்வியூ பண்ணிட்டு தான் கல்யாணமே.” என்றிட,
“அப்ப, இந்த ஜென்மத்துல உன் கல்யாணத்தை நான் பார்க்க முடியாதுன்னு சொல்லு” என்று சாவித்ரியும் நொடித்துக் கொள்ள, அங்கு சிரிப்பலை பரவியது.
சத்யரூபாவின் சொந்த ஊர் தஞ்சாவூரைத் தாண்டி இருக்கும் அதியூர் என்ற சிறு கிராமம்.
அவளது தந்தை இறந்ததோடு, சில கடன்களும் இருந்திட, தாமரை தான் விவசாயம் செய்து, அதன் மூலம் இரு பெண்களையும் பார்த்துக் கொண்டார்.
அவர்கள் இருந்த கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தான் பள்ளிக்கூடம் இருந்தது. மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால், தஞ்சாவூருக்கு தான் செல்ல வேண்டும். அவருக்கும் இரு பெண்களையும் தனியாளாகப் பார்த்துக் கொள்ள சற்று பயமாகவும் இருந்திட, வைஷாலியை விடுதியில் சேர்த்து விட்டார்.
அவளுக்கும் படிப்பின் மீது பெரும் ஆர்வம். சத்யரூபாவோ படிப்பையும் பார்த்துக் கொண்டு, மீதி நேரம் தாயுடன் தோட்டத்திற்கு வந்து விடுவாள்.
தாமரையாலும் அத்தனை வேலைகளையும் தனியாளாக பார்க்க இயலாது என்று அவளுக்கும் தெரியும். சிறு வயதிலிருந்தே பேச்சில் துடுக்குத்தனம் கொண்டவளை, ஊரில் அனைவர்க்கும் பிடிக்கும். அப்போதிருந்தே, அவள் எடுக்கும் முடிவுகளும், சொல்லும் அறிவுரையும் சரியானதாகவே இருக்க, உலகம் அறியாத தாமரையும் அவளிடம் கேட்டே அனைத்தையும் முடிவு செய்வார்.
தாமரையைப் போலவே வைஷாலியும் சற்று பயந்த, அமைதியான சுபாவம். அதனால், அவளுக்கும் சேர்த்து சத்யரூபாவே முடிவெடுத்து விடுவாள். அவள் படிப்பிலிருந்து தொடங்கி, இதோ இப்போது திருமணத்திலும் வந்து நிற்கிறது.
வைஷாலியும் சற்றும் குறைந்தவள் இல்லை. தங்கையின் வார்த்தையே வேதவாக்கென்று வாழ்பவள். சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் தான் வேலை செய்கிறாள்.
அங்கும் விடுதியில் தங்க விருப்பமின்றி, தனி வீடு எடுத்து தங்கிக் கொள்ள, அவளை தனியே விடாதவாறு, ஊரில் சொந்த பந்தமின்றி தனியே இருந்த சாவித்ரி பாட்டியை வைஷாலிக்கு துணையாக அனுப்பி வைத்தாள்.
வைஷாலி மறுக்க முயன்றாலும், “ஹாஸ்டல்ன்னா, துணைக்கு பிள்ளைங்க இருப்பாங்கக்கா. நேரத்துக்கு சாப்பாடும் வரும். தனி வீடுன்னா நீயே எல்லா வேலையும் பார்க்கணும். பேச்சு துணைக்கு கூட ஆள் இருக்காதுல. ஆயா உன் கூட இருக்கட்டும்க்கா” என்று பேசி சரிகட்டிட, அவளும் புன்னகையுடன் சம்மதித்தாள்.
அதன் பிறகு, சாவித்ரி அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டார்.
இன்றும், வைஷாலியை பெண் பார்க்க தான் வருகின்றனர். சென்னையிலேயே மாப்பிள்ளை வீடும் இருக்க, அவர்களை எதற்கு ஊருக்கு வரவழைத்து அலைக்கழிக்க வேண்டும் என்றெண்ணி, வைஷாலி தங்கி இருந்த வீட்டிற்கே வர சொல்ல, அவர்களோ அன்று மாலையே வருவதாகக் கூறியதும் தாமரையும் சத்யரூபாவும் அவசர அவசரமாக காலையிலேயே கிளம்பி சென்னைக்கு வந்திருந்தனர்.
ஆகினும், அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்ற படபடப்பு சத்யரூபாவிற்கு நிறையவே இருந்தது. தாமரை தான், “இந்த தடவையாவது கொஞ்சம் பொறுமையா போ சத்யா” என்று இளையமகளுக்கு அறிவுரை கூறினார்.
————————————-
“ஏன்மா… இப்படி அவசர அவசரமா பொண்ணு பார்க்க போயே ஆகணுமா?” காரில் நொந்து போய் அமர்ந்திருந்தான் சிரஞ்சீவி.
அதனைக் காதில் வாங்காமல், சாலையில் கவனத்தைப் பதித்த பானுரேகா, கையில் அணிந்திருந்த கடிகாரத்தில் மணியையும் பார்த்துக் கொண்டார்.
“அம்மா…” என சிரஞ்சீவி பாவமாக அழைக்க, அவரோ காரை செலுத்திக் கொண்டிருந்த தனது கணவர் பாலகிருஷ்ணனிடம் “வண்டியை நிறுத்துங்க” என்றார்.
அவரும் உடனே நிறுத்தி விட, தன் மகனை நோக்கி திரும்பியவர், “உனக்கு இஷ்டம் இல்லைன்னா இறங்கி போய்டு” என்று இறுக்கத்துடன் கூறிட அதன் பிறகு அவன் வாயை திறப்பானா என்ன?
சில நொடிகளுக்கு பிறகு, கணவனுக்கு கண்ணைக் காட்ட, அவரும் பெருமூச்சுடன் காரை செலுத்தினார்.
“டேய் பிசாசு எங்கடா போய் தொலைஞ்ச?” தலையைக் குனிந்து போனில் யாரையோ திட்டி குறுஞ்செய்தி அனுப்பிய சிரஞ்சீவிக்கு தாயின் மீது அபரிதமான மரியாதை என்பதை விட, பயம் என்றே சொல்லலாம். அவனுக்கு மட்டுமல்ல, மொத்த குடும்பத்திற்கும் தான். ஒருவனைத் தவிர.
“ஆன் தி வே டா…” என்ற பதில் வந்ததில் தான் சிரஞ்சீவி சற்று சாந்தமானான்.
உயர்ரக கார் வீட்டு வாயிலில் வந்து நின்றதும், தாமரையும் சாவித்ரியும் சற்று படபடத்து தான் போயினர்.
சத்யரூபா இயல்பாக அவர்களை வரவேற்று, உள்ளே அமர வைக்க, பானுரேகாவும் மெல்ல புன்னகைத்து விட்டு, உள்ளே வந்து அமர்ந்தார்.
“நான் சத்யரூபா…” என்பதில் ஆரம்பித்து, குடும்ப வரலாற்றையே சில நொடிகளில் சொல்லி முடித்தவள், “ஆயா… அக்காவை கூட்டிட்டு வாங்க. அம்மா குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்க…” என்று இருவரையும் துரத்திக் கொண்டே இருந்தாள்.
இரு ஆண்களும் தான் காதை குடைந்து கொண்டனர். அவள் கொடுத்த சத்தம் அப்படி.
“அப்பா… இந்த பொண்ணு எப்ப பேச்சை நிறுத்தும். எனக்கு காது கொய்ங்ன்னு கேட்குது” என சிரஞ்சீவி தன் தந்தையில் காதில் முணுமுணுக்க,
அவரோ, “நீ வேறடா. எனக்கு ஒரு பக்க காது வேலை நிறுத்தமே செஞ்சுடுச்சு. உங்க அம்மா மட்டும் எப்படி தான் அசராம உட்காந்து இருக்காளோ” என்றார் நக்கலாக.
“அம்மா சவுண்டுக்கு ஈகுவலா இருக்குறனால அவங்களுக்கு ஒண்ணும் தெரியல போல. தங்கச்சியே இந்த கத்து கத்துறாளே. அக்காக்காரி என்ன ஆட்டம் ஆடுவாளோ.” என பயந்தே விட்டான்.
அதற்கு மாறாக, தலையைக் குனிந்தபடி, அமைதியின் சிகரமாக வந்து நின்றாள் வைஷாலி.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த பானுரேகா கேள்விக்கணைகளை தொடுத்தார்.
“என்ன படிச்சு இருக்க?”
“இங்க தனியாவா இருக்க?”
“இது ரொம்ப அவுட்டாரான ஏரியாவா இருக்கே. இங்க இருந்து எப்படி ஆபிஸ்க்கு போவ?”
“சமைக்க தெரியுமா?”
“சமைக்க தெரிஞ்சா பத்தாது, கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும். வேலை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடம்பும் முக்கியம்.”
“கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போவியா?”
எல்லா கேள்விக்கும் பதில் கூறிக்கொண்டே வந்த வைஷாலி, இதற்கு பதில் கூற தெரியாமல் விழித்தாள்.
தனியாக யாரிடமும் கிசுகிசுக்காமல், தமக்கையிடமே அனைத்தையும் நேரடியாகக் கேட்ட விதம் சத்யரூபாவைக் கவர்ந்தது.
வைஷாலி திருதிருவென விழித்ததில் தாமரை தான், “பெரியவங்க நீங்க உங்க குடும்பத்துக்கு எது சரின்னு நினைக்கிறீங்களோ அத தான் அவளும் பண்ணுவா. வேலைக்கு போறதுல உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா, வேலையை விட்டுடுவாங்க.” என்று கூறிட, வைஷாலியும் அதற்கு தலையாட்டி வைத்தாள்.
சத்யரூபா தான் மூக்கு விடைக்க தாயை முறைத்து விட்டு, “மன்னிச்சுருங்கம்மா. அவளுக்கு அவளோட வேலைன்னா அவ்ளோ இஷ்டம். கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்பறமும் வேலைக்கு போவா. உங்களை பார்த்தாலே தெரியுது பணம் இருக்குறவங்கன்னு. அவள் சம்பாரிச்சு தான் உங்களுக்கு நிறையப்போறது இல்ல. ஆனா, அவளோட வேலை அவளுக்கு ஒரு அடையாளம். எந்த நிலைமையிலயும் அவளோட சுயத்தை இழக்காம இருக்குறதுக்கான சாவி. அதனால, அதுல உங்களுக்கு ஆட்சபனை இருந்தா இப்பவே சொல்லிடுங்க.” என்று கட் அண்ட் ரைட்டாக கூறியதில், பானுரேகா அவளை கூர்ந்து பார்த்தார்.
“எனக்கு அவள் வேலைக்கு போறதுல விருப்பம் இல்ல. அதுக்கு மேல அவங்க அவங்க இஷ்டம்.” என்று முடித்து விட, சத்யரூபாவோ தோளைக் குலுக்கிக்கொண்டாள்.
அதற்கு மேல் அந்த வாக்குவாதம் நீடிக்கவில்லை.
“அதாகப்பட்டது, இப்ப இந்த பெண்கள் குழு என்ன முடிவு எடுத்து இருக்குப்பா? அந்த பொண்ணு வேலைக்கு போகணும்ன்னா, போக வேணாம்ன்னா?” தீவிர சிந்தனையுடன் கேட்டான் சிரஞ்சீவி.
அலைபாயும்…
மேகா