Loading

அத்தியாயம் 1

“அவ என்னை என்னைத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தைப் பார்த்துச் செவக்கும் செவக்கும் வெத்தல…”

ஹாரிஸ் ஜெயராஜின் இசை மழையில், ஒற்றைப் படுக்கையறை கொண்ட சிறிய அளவான வீடு நனைந்தது போன்று, அவன் கன்னங்களும் கண்ணீரில் நனைந்தது.

இரவு நேரம். மெல்லிய வெளிச்சம் வீட்டில் எதிரொலிக்க, பொலபொலவெனக் கொட்டிய தமையனின் கண்ணீரை அசட்டையாகப் பார்த்தபடி, கஞ்சியைக் கொண்டு வந்து அவன் முன் டொம்மென வைத்தாள் நிதர்ஷனா.

21 வயது மாநிற அழகி. ஒல்லியான தேகத்திற்குச் சொந்தக்காரி. அரையடிக் கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டிருந்தவள், பாத்திரம் கழுவுவதற்குத் தோதாக நைட்டியைத் தூக்கி இடுப்பில் சொருகி இருந்தாள்.

அடுத்த பாடலுக்கு ரேடியோ தாவியது.

“சர்க்கரை நிலவே இப்பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…”

இம்முறை நிவேதனின் அழுகை அதிகரித்தது. ஆகினும், தங்கை கொடுத்த கஞ்சியை அள்ளி வாயில் திணித்தான்.

அவனுக்கு நேரெதிரே சிறிய சிமெண்ட் தரை கொண்ட பால்கனி போன்ற இடத்தில், பாத்திரங்களை அள்ளிப் போட்டுக் குத்த வைத்து அமர்ந்த நிதர்ஷனா, அவனை முறைத்தபடியே சபீனாவையும், தேங்காய் நாரையும் கொண்டு பாத்திரத்தைப் பரபரவெனத் தேய்த்தாள்.

அடுத்த பாடலாக,

“என்னை விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…” என்ற பாடல் வரிகள் ஒலித்ததும் நிவேதன், ‘ஓ’ வென ஒப்பாரி வைக்கத் தொடங்கினான்.

நிதர்ஷனாவிற்கு வந்ததே கோபம்.

“மவனே, வந்தேன்… தேங்காய் நாரை உன் முகரக்கட்டைல தேய்ச்சுடுவேன். கடன் பிரச்சினைக்கு ஏன்டா, காதல் தோல்விப் பாட்டைப் போட்டு ஒப்பாரி வச்சுட்டு இருக்க?” தண்ணீரை உதறி விட்டு மூச்சிரைக்க எழுந்தாள்.

“கடனுக்குன்னு சிச்சுவேஷன் பாட்டுப் பாட மாட்டேங்குது நிதா இந்த ரேடியோ. அதான் என் பணம் போச்சேன்னு, காதல் இடத்துல பணத்தை வச்சு பீல் பண்ணிட்டு இருக்கேன்.” எனக் கண்ணைத் துடைத்தபடி கூறியவன்,

“ஒரு அண்ணேன்காரன் அழுவுறானே… சமாதானம் செய்வோம்னு தம்மாத்துண்டு அக்கறை ஈக்குதா உனக்கு…” என்றான் நிவேதன்.

“எடு செருப்பை, நாயே… கண்டவனாண்ட ஏமாந்து தொழில் பண்றேன்னு காசைப் பறிகொடுத்ததும் இல்லாம, அந்தக் காசி நாசமாப் போனவனாண்ட லட்சக்கணக்குல கடன் வாங்கியிருக்க நீயி… உருப்படுவியாடா. நாளைக்கு எனக்கு காலேஜ் பீஸ் கட்டணும். செவனேன்னு பத்தாங்களாஸ் முடிச்சோன்னே, நாலு வீட்டாண்ட பத்துப் பாத்திரம் தேய்ச்சு, டைப் ரைட்டிங் க்ளாஸ் போய் ஏதாச்சும் செஞ்சுக்கலாம்னு சொன்னன்லடா. நாமளே அன்னக்காவடி! நமக்கு இன்னாத்துக்கு இந்தத் தொழிலுன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்ல.

படி படின்னு உசுர வாங்கி இப்ப அதுக்கும் பீஸ் கட்ட முடியாம, ரெண்டு நாளா நான் காலேஜூக்குப் போகல.” என்றாள் கோபத்துடன்.

இம்முறை இன்னும் கொஞ்சம் கண்ணீரை வீணாக்கிய நிவேதன், “என்னயப் படிக்க வைக்கத்தான் ஆளில்ல. உன்னைப் படிக்க வச்சுடணும்னு நினைச்சேன்.” என்றவனுக்குத் தங்கைக்கான அன்பு நிரம்பி வழிந்தது.

அவளுக்கும் உள்ளம் உருகியது என்றாலும், கடனை வாங்கித் தொழில் செய்து தோல்வி பெற்றவனைத் தூக்கிக் கொஞ்சவா இயலும். அடுக்கடுக்காய் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமென்றால், தொழிலும் நஷ்டமும் பெரியதாக இருக்காது. நமக்கு?

“சும்மா சென்டிமெண்டா பேசி என் வாயைப் புடுங்காதடா. இப்ப எனக்கு காலேஜ் பீஸ்க்கு என்ன செய்ய?”

“காசிட்டயே கேட்டிருக்கேன் நிதா. நாளைக்கு வீட்டாண்ட வந்து வாங்கிக்கச் சொல்லிருக்காரு.”

“அடேய்! அவன் பத்து வட்டி போடுவான்டா… அவனுக்குத் திருப்பிக் குடுக்குறதுக்குள்ள நம்ம ஆயுசு அட்டெண்டன்ஸ் முடிஞ்சு ஆவியாகிடும்.” நிதர்ஷனா எரிந்து விழுந்தாள்.

“வேற வழி இல்ல நிதா. வெளியூர்ல நான் வேலைக்குக் கேட்டு இருக்கேன். எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல கிடைச்சுடும். இன்னும் ஆறு மாசம் தான உன் படிப்பு இருக்கு. அது வரை ஓட்டுவோம். அதுக்கு அப்பறம் உனக்கும் ஒரு வேலை கிடைச்சுட்டா சமாளிச்சுடலாம்.” என்றான் பாவமாக.

“க்கும்… ஆமா, படிப்பு முடிச்சதும் கலெக்டர் வேலை குடுக்குறதுக்குத் தான் வரிசைகட்டி நிக்கிறானுங்க பாரு. கேம்பஸ்ல கூட, காலேஜ்ல இருந்து டொனேஷன் குடுத்த ஆளுங்களாய் பார்த்துதான் செலக்ட் பண்ண வச்சுருக்கானுங்க. மெரிட், கட் ஆப் வச்சு என்னைப் பெரிய அம்பானியாக்க நினைச்ச உன்னைத்தான் தூக்கிப் போட்டு மிதிக்கணும்.” எனப் புகைந்தவள், “கஞ்சியைத் தின்னுட்டுக் கிண்ணத்தைக் குடு, கழுவப்போட.” என்று விட்டு மீண்டும் பாத்திரம் துலக்கத் தொடங்கினாள்.

—–

“யா பேப்… பிரேக்பாஸ்ட் முடிஞ்சுதா? எப்! ட்ரெட்மில் ஜாகிங். ஓகே பேப்… கால் யூ லேட்டர். லவ் யூ!”

இறுகிய புஜத்திலிருந்து வியர்வை வழிந்தோட, தோளில் போடப்பட்டிருந்த துவாலையால் சிவந்த முகத்தை ஒற்றி எடுத்தபடி ட்ரெட்மில்லில் நடைப் பயின்றவன், தனது காதலியான ரித்திகாவிடம் வழமை போல அலைபேசியில் உறவாடிக் காதலை மொழிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

26 வயதான துடிப்பான இளைஞன். தமிழ் நாட்டைச் சேர்ந்த தாய்க்கும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்தவன், கடந்த சில மாதங்களாக இந்தியாவிலேயே குடியேறி விட்டான்.

ஆங்கிலோ இந்தியன்! இரு நாட்டுக் கலவையில் முகத் தோற்றம் கொண்டவனது, அந்த மஞ்சள்-பசுமை கலந்த ஹேசல் கண்கள், ஜன்னல் வழியே புகுந்த சூரிய ஒளியில் ஒளிர்ந்தன.

ஆடவனின் ஒவ்வொரு பார்வையும் தனக்கென ஓர் அழுத்தத்தைக் கொண்டிருந்தது.

அக்கண்ணில், தான் ஒரு அபாயகரமானவன் என்ற எச்சரிக்கை மின்னியது. ரித்திகாவிடம் பேசுகையில் மட்டுமே மென்மை கொண்ட தேகம், மீண்டும் உடற்பயிற்சியில் இறுகியது.

உடற்பயிற்சி முடிந்ததும் ஜிம்மை விட்டு வெளியில் வரும்போதே அவன் விரல்கள் சொடுக்கிட, தரையைச் சுத்தம் செய்யும் ‘ரோமோ’ எனும் ரோபோட், தனது வேலையைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தது. “தேங்க்ஸ் பார் கமிங் பாஸ்” என்ற நன்றியுடன் அவனை வழியனுப்பி வைத்தது.

தனது அறைக்குச் சென்றவன், “பாத்…” எனக் குரல் கொடுக்க, அவனது குளியலறையில் அவன் குளிக்க ஏதுவாக, அவனே உருவாக்கிய ரோபோட் சிஸ்டம், ஷவரைச் சுடு நீர் கலந்து தயார் செய்திருக்க,

அவன் குளித்து வருவதற்குள், ஆட்டோ பெட்டிங் சிஸ்டம், அவனது கலைந்த படுக்கையைச் சரி செய்து பெட்ஷீட்டை மடித்து, தலையணையை அடுக்கி வைத்தது.

‘ரோமோ’ எனப்படும் தரை துடைக்கும் இயந்திரம், ஆடவனின் காலில் இருந்த சிறு தூசியையும் தரையில் இருந்து அகற்றி விட்டு, மீண்டும் தனது இடத்திற்குச் சென்று விட்டது.

குளித்து முடித்து வந்தவன், கண்ணாடி முன் நின்றான்.

அவன் நின்றதும் கண்ணாடி குரலை எழுப்பியது.

“Good morning, பாஸ். 29°C and humid today. Suggesting breathable cotton fits.” (இன்று வெயில் அதிகமாக இருப்பதால் காட்டன் உடையைத் தேர்வு செய்வது நன்று)

அது ஒரு ஏஐ கண்ணாடி. அவனுக்கு ஏதுவாக, கண்ணாடியில் பல உடைகள் தோன்றின. ஒவ்வொன்றும் அவனின் மேல் விர்ச்சுவலாகப் படர்வது போலான ஒரு மாயையைக் கொடுத்தது.

அவனது மனநிலையைச் சோதித்த ஏஐ, ஆங்கிலத்தில் அவனுடன் கலந்துரையாடியது.

“இன்றும் நீங்கள் கோபமாகவே இருப்பதால், உங்களைத் தணிக்க இளநீல சட்டையைத் தயார் செய்யட்டுமா?” என்று தினமும் கேட்கும் கேள்வியைக் கேட்க,

“ஐ ஆம் குட்! அண்ட் ஐ ஆம் நாட் ஆங்கிரி, எலிசா” அதையும் கோபமாகவே கூறினான் ஆடவன்.

“சாரி பாஸ். உங்களுக்கு என்ன உடையைச் சோதிப்பதென்றே எனக்குக் குழப்பமாக உள்ளது…” என ஏ. ஐ யையே எரிச்சல் படுத்தியது அவனாகவே இருப்பான்.

பின் அவனே தனக்கான உடையைத் தேர்வு செய்து மாடிப்படியில் இருந்து இறங்கும்போதே, அடுக்களையில் ‘ஒன்செஃப்’ எனப்படும் சமைக்கும் ரோபோட், அவனது காலை உணவான ஹெல்த் மிக்ஸ் கஞ்சியைத் தயார் செய்து விட்டு, முன்னரே தயார் செய்து வைத்திருந்த ஏபிசி ஜூஸை கிளாஸில் வைத்திருந்தது.

அவன் அடுக்களைக்குள் நுழைந்ததும், “வெல்கம் பாஸ்! யுவர் ப்ரேக்பாஸ்ட் ரெடி.” என மாஸ்டர் செஃப் மாஸாகச் சத்தம் கொடுக்க,

ஸ்மார்ட் ப்ரிட்ஜ் குரல் எழுப்பியது.

“நாளை உணவிற்கு கேரட் இருக்காது. முந்தைய நாள் வைத்த கீரை சூப் வீணாகி விட்டது பாஸ்…” எனக் குரல் கொடுக்க, அவன் அதனை எடுத்துப் போட்டு விட்டு, பாத்திரம் கழுவும் மெஷினில் வைக்க, அது அவனது கட்டளைப்படி பாத்திரத்தைக் கழுவத் தொடங்கியது.

அடுக்களையில் இருந்து ஹாலைத் தாண்டி நடக்கும்போதே, வீட்டினுள்ளேயே அவன் அமைத்திருந்த தோட்டம் போலான அமைப்பில், அவன் உருவாக்கிய இயந்திரம் நீர் தெளித்து, பிளவர் பாட்டில் மலரை மாற்றி வைத்து, புல்லை ட்ரிம்மிங் செய்து கொண்டிருந்தது.

“குட் ஜாப் எலிசா…” கூறியபடி வேக நடையுடன் வாசலுக்குச் செல்ல, அவன் முகத்தை ஸ்கேன் செய்து, விரலையும் ஸ்கேன் செய்த ஆட்டோமேட்டட் கதவு தானாகத் திறந்தது.

“பை பை பாஸ்!” கதவில் இருந்து குரல் கேட்க, அந்த அதிநவீன ரோபோடிக் பங்களாவில் இருந்து வெளியில் வந்தான் யாஷ் பிரஜிதன்.

கருப்பு நிறச் சட்டையில் அவனது வெளிர் நிறம், சூரியக் கதிர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்க, எஜமானனின் வருகை அறிந்ததும், அவனது மகிழுந்து தானாகக் கதவைத் திறந்தது.

“இன்றும் நீங்கள் கோபமாக இருப்பதால், நானே காரை ஒட்டட்டுமா?” கார் குரல் கொடுக்க, “நோ நீட்!” என்று விட்டு அவனே மகிழுந்தினை இலாவகமாக ஓட்டத் தொடங்கினான்.

“கால் ஆஹில்” யாஷ் உத்தரவு கொடுத்ததும், அவனது அலைபேசியிலிருந்து காரின் ப்ளூடூத்தில் இணைந்து ஆஹில்யனுக்கு அழைப்பு போனதன் அறிகுறியாக ‘ட்ரிங் ட்ரிங்’ ஒலி கொடுத்தது.

சில நொடிகளில் ஆஹில்யன் அழைப்பை எடுத்ததும், “எஸ் பாஸ்…” என்றான்.

“நான் கேட்டது என்ன ஆச்சு ஆஹில்?” யாஷின் குரலின் கடுமை அவனைச் சாடியது.

“பாஸ் நேத்து நைட்டு தான சொன்னீங்க. ப்ராசஸ் போயிட்டு இருக்கு பாஸ்” பதற்றமாகச் சொன்னதில்,

“நேத்து நைட்டே சொல்லிட்டேன் ஆஹில். ஐ நீட் ஒயிஃப், ரைட் நொவ். நான் சொன்ன கண்டிஷன்ஸ் ஞாபகம் இருக்குல்ல. என்னோட ரோபோட் கிட்ட கேட்டா இமீடியட் சொல்யூஷன் சொல்லிருக்கும்.” பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“நீங்க கேட்குற மாதிரி யாரும் இல்ல சார்…” ஆஹில்யன் அழாத குறையாகக் கூற,

“ஃப்பூ… லுக் ஆஹில். பொண்ணு மாதிரி ஒரு ரோபோவைக் கூட ரெடி பண்ணிடுவேன். தட்ஸ் நாட் அ பிக் டீல் பார் மீ. அதுல கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருக்குறதுனால தான், ஐ ஆம் ஜஸ்ட் கீப் சைலென்ஸ். ரெண்டு நாள் தான் உனக்கு டைம். காட் இட்!” என்று கட்டளையிட்டு போனை வைத்தவனின் மூளை, இயந்திரத்தை விடப் பன்மடங்கு வேகமாய் சிந்தித்தது.

அன்பு இனிக்கும்…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
70
+1
8
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்