Loading

சற்றுமுன் முகில்களற்ற நீலநிறம் கொண்ட வானிவெளியில் பல பொத்தல்கள் விழுந்தததோ? வான்மகனின் பெருஞ்சீற்றத்தின் பிரதிபலனாக அந்தரத்தில் பல அருவிகள் உதயமாகி பேரிரைச்சலுடன் புமித்தாயினை பிளந்து உள் நுழைந்தான். இவனின் சீற்றம் தாளாமல் மேற்புறத்தில் மண்ணை அரித்துக் கொண்டு ஓட அவளின் மேனியில் பல பொத்தல்கள் விழுந்தது.  அவன் உரிமையுள்ளவன் என்றாலும் வன்புணர்வை அனுமதிக்க இயலாதே. அதனால் அவளும் போராடி பார்த்தாள். ஆனால் பலனோ சுழியம் தான். அவன் தான் முன்னறிவிப்பு ஏதுமின்றி அவளை ஆட்கொள்கிறானே. காதல் கொண்டு, ஆயிரம் கரம் கொண்டு அவளைத் ஆரத் தழுவியிருந்தால், அவள் ஆதுரமாக அகப்பைத் திறந்து, மேனி சிலிர்க்க, அவனை ஊடுருவ விடுவாளே. அதில் என்றோ விதைத்த விதைகளை உழுதிடலாம் இவன்… ஆனால் அவனோ துளியும் காதலின்றி அவளை  அலைக்கழிக்கிறான். அவனின் சீற்றத்தால் பாளம்‌ பாளமாக வெடித்து பிளந்த மணற்திட்டுகளை அவனின் வெள்ளத்தில் கரைத்து அவனோடு எடுத்துச் சென்றான். அதில் வேரூன்றியிருந்த விருட்சங்களும் அடக்கம். ஆற்றுப் படுக்கைகளை நிரப்பி, வழியறியாது கடலில் சென்று கலந்த பின்பும் அவனின் சீற்றம் குறைந்தபாடில்லை. 

 

எண்ணிலடங்கா நீர்திவலைகளை வைத்திருப்பவன் மனம் வரண்ட பாலைநிலமாய் இருக்கும் போல. மனதில் சற்றேனும் ஈரம் இருந்திருந்தால் இப்படி அவளை வாரி சுருட்டிக் கொண்டு சென்றிருக்க மாட்டான் அவன். எந்த நீதி தேவதையிடம் சென்று முறையிடப் போகிறாளோ… நிச்சயம் நம்மிடம் வரமாட்டாள். வந்தாலும் நீதி என்பது எள்ளவும் கிடைக்கப் போவதில்லை. நம்மிடமே பல வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் இருக்க அவளுக்கு நீதி வழங்க நாம் மூடர்களா என்ன. மேலும் அவளை பாளம்‌ பாளமாக வெட்டி கூறு போட்டு வீடு கட்டி குடி புகுந்த வேட்டைக்காரனிடம் நியாயம் வேண்டி நிற்க அவள் வெட்கம் கெட்டவள் இல்லையே…

 

புயலின்‌ கோர தாண்டவம் சென்னையை உலுக்கி எடுத்த காட்சியை விழிகளில் வெறுமையுடன் ஒருவன்‌ நோக்கி கொண்டிருந்தான். பெயர் திராவிடன். பெயருக்கு ஏற்றார் போல் திராவிடம் பேசுவதில் வல்லவன்தான் இவன். சில தினங்களுக்கு முன் இவன் மர்மமான முறையில் தாக்கப்பட்டு சுயநினைவிழந்திருந்தான். அவன் ஊராரைப் பொறுத்தவரை இவனை காத்து கருப்பு அடித்து விட்டது. அங்கு இருக்கும் சில ஏக்கர் நிலங்களுக்கு அருகில் மட்டும் யாரும் செல்வதில்லை. விவசாயி ஒருவன் தூக்கு மாட்டி இறந்துவிட்டான். காரணம் என்னவோ கடன் தொல்லைதான். நமது நாட்டில் விவசாயிகளுக்கு வேறு இன்னல்கள் இருக்க வாய்ப்பில்லையே. வானம் சில நேரம் பொய்த்துப் போகலாம். ஆனால் கடன் பல நேரம் பொய்த்துதான் போகிறது. மேல்தட்டு வர்க்கத்தினரின் தட்டில் உயர்ரக அரிசியை படைத்துவிட்டு, அவன் குருணையில் கஞ்சி காய்ச்சி குடிக்கிறான். அதுவும் அவனுக்கு அதிமென்று அவன் மென்னியை திருகிவிடுகிறோம் நாம்.

 

அந்த ஊரில் சில வருடங்களாகவே பல மர்மங்கள் நிகழ்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பலரில் இவனும் ஒருவன். இறந்து போன விவசாயியின் நிலத்தின் அருகே யாரும் செல்லக்கூடாது என்பது ஊரின் விதி. அதையும் மீறி செல்பவர்களுக்கு இம்மாதிரி ஏதேனும் நிகழும். இறந்து‌ போனவன் அங்கு அருபமாக உலவுவதாக நம்பினர். அவனுடைய நிலத்தை பாதுகாக்க இப்படி காத்தாய்‌ சுற்றித் திரிகிறான் என்று நம்பினர். 

 

திராவிடன் சற்று துடுக்குத் தனமானவன். படித்துவிட்ட மமதையாக இருக்கும். இப்பொழுது அவன் இருப்பது மருத்துவமனை. அதுவும் சென்னையில். அவன் சென்னை வந்ததும் பெரிய‌ கதை. அவன் ஊர் அத்தியூர். ஒரு கிராமம். திரும்பும் திக்கெட்டும் பசும் போர்வை‌ போர்த்தியிருக்கும் கிராமம். பின் சோழன்‌ ஆண்ட இடம் பல நூறாண்டுகள் கடந்தாலும் சோடை போகுமா என்ன.. தஞ்சையின் அருகில் இருக்கும் கிராமம்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். இவனைப் பற்றி கதையின் ஓட்டத்துடனே தெரிந்து கொள்ளலாம்.

 

காத்தும் இல்லை… கருப்பும் இல்லை என்று நிரூபணம் செய்ய இவன் நடுநிசியில், ஊரின் கட்டுப்பாட்டை மீறி அங்கு சென்றான். அதனால் வந்த வினையிது. இந்த காத்து கருப்பெல்லாம் புதிது அல்ல அந்த ஊருக்கு. காலங்காலமாய் நிலவி வரும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. அங்கு இன்னும் சில மர்மங்களும் நிகழ்கிறது. அங்கு உள்ள மக்கள் அதனால் ஆரம்ப காலத்தில் திக்கு முக்காடி போயிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காலம் ஆக ஆக அதை ஏற்று‌ கொண்டு அதனுடன்‌ வாழ பழகிவிட்டனர். ஆனால் ஆராய்ந்து பார்க்க நினைத்த‌ ஒருவரும் சுயநினைவுடன் இல்லை. ஒரு சிலர்‌ காணாமல் போய் இருக்கின்றனர். ஒரு‌ சிலர் கோமாவிலும் போயிருக்கின்றனர். அதில் தப்பிப் பிழைத்தவன் திராவிடன் ஒருவனே.

 

நல்ல வேளையாக இவன்‌ கோமாவில் போகவில்லை. அவர்கள் ஊரில் உள்ள மருத்துவமனையில் இவனை சேர்த்திருந்தனர். ஆனால் நினைவு திரும்பவில்லை. அதனால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பொதுவாக அவர்கள் ஊரைவிட்டு யாரும் வெளி வருவதில்லை. எதற்காகவும் என்று கூட சொல்லலாம். இன்னும் சில விசித்திரமான கட்டுப்பாடுகள் கூட இருக்கிறது அந்த ஊரில். அதில் ஒன்று தான் ஊரைத் தாண்டி வெளி வருவதில்லை என்பது. 

 

ஆனால் இப்பொழுது காணாமல் போனவர்களில் ஒருவன் அந்த ஊரைச் சேர்ந்தவன். அதனால் காவல் துறை‌ அந்த வழக்கை அங்கு தொடங்குவதாக இருந்தது.‌ அங்கு நிகழும் மர்மங்களுக்கும் இந்த வழக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று எண்ணம்‌ கொண்டதால் அந்த ஊரில் இருந்து விசாரணை தொடங்கியது. அதன் பொருட்டே இவனை‌ விசாரிக்க சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவன் சென்னை வந்து கதை இதுதான்.

 

புயல் என்னவோ வலுவிழந்து அமைதியை பரிசளித்து சென்றிருந்தது. ஆனால் அதன் பாதச்சுவடுகளை சென்ற இடமெல்லாம் பரப்பி சென்றிருந்தது. புயலின் மிச்சமாய் அமைதி நிலவுகிறது. அதை கலைக்கும் வண்ணம் ஜன்னல் கம்பிகளில் சொட்டு சொட்டாய் நீர் ஒலியெழுப்பி தேங்கியிருந்த நீரில் விழுந்தது. அக்காட்சியை இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பைத்தியக்காரன் அவன். இது ஊரார் அவனுக்கு சூட்டிய பெயர். 

 

****************

 

சென்னை ஆதம்பாக்கம் புறநகர் காவல் நிலையம். அங்கு இருந்த நாப்பது இன்ச் தொலைக்காட்சி பெட்டி இடைவிடாமல் அலறிக் கொண்டே இருந்தது. தற்பொழுது தமிழ்நாட்டில் சில நாட்களாக மர்மமான முறையில் சில மனிதர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கவில்லை. 

 

இரண்டு தினங்களுக்கு முன்பு‌ அது தலைப்பு செய்தியாக இருந்தது. ஆனால் இப்பொழுது மணிக்கொருமுறை‌ தட்டச்சு செய்யப்பட்ட செய்தியாக சுழன்று‌ கொண்டிருந்தது. அதைப் பற்றி செய்தியை கூற ஒரு நிமிடம் கூட இல்லை‌ இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பிய செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பும் செய்தியலை ஊடகங்களுக்கு.

 

புயலின்‌ கோர தாண்டவம் பற்றியும் அரசின் நடவடிக்கைகள் பற்றியும் விவாதம் நடந்து கொண்டிருந்து. வேறு சில ஊடகங்களில் அரசின் மெத்தன போக்கை இடைவிடாது ஒளிபரப்பு செய்தனர். கணியன்‌ கோபமாக அங்கிருந்த தொலைநிலையை(ரிமோட்) எடுத்து தொலைக்காட்சி பெட்டியில் ஒளிர்ந்து கொண்டிருந்த பிம்பங்களுக்கு ஓய்வளித்தான். பின் வேகமாக எழுந்து சென்றான்‌‌ அவனுடைய அலுவல் அறைக்கு. அவனுடைய தலையங்கியை அவிழ்த்து மேசை மேல் வைத்தவன், அலைபேசியில் யாருக்கோ அழைத்து சில கட்டளைகள் இட்டான்.

 

பின்‌ விழிகளில் வெறியுடன் வெண்பலகையில் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களை குறிக்க ஆரம்பித்தான். இதை நூறு முறை செய்திருப்பான். ஆனால் காணாமல் போனவர்கள் யாருக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பது போல் தெரியவில்லை. அவனும் அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து விட்டான். ஒன்றும் ஒத்துப் போவதாயில்லை.அவன் இதுவரை பார்த்திராத வழக்கு இது. ஏனெனில் ஒவ்வொரு வழக்கிலும் ஒரு குறிப்பிட்ட நபர் காணாமல் போவார்கள். அவர்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை இருக்கும். வரிசையாக இளம் பெண்கள் காணாமல் போனால் அந்த வழக்கை எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிவான் அவன். வரிசையாக குழந்தைகள் காணாமல் போனால், எங்கு தொடங்க வேண்டும்… எங்கு முடிக்க வேண்டும் என்பதையும் நன்றாக அறிவான். பொதுவாக கடத்தல் வழக்குகளில் ஏதாவது ஒரு ஒற்றுமை இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும். ஆனால் இப்பொழுது நிகழ்ந்த கடத்தலில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கம் இருப்பது போலும் தெரியவில்லை. 

 

இளம்பெண்கள் இருவர், வயதானவர் ஒருவர், ஒரு கர்ப்பிணிப் பெண், ஒரு குழந்தை, ஒரு இளைஞன் மற்றும் இன்னும் சிலர். இப்படி கலவையாக கடத்தல் நடந்திருக்கிறது. இதில் பதியப்படாத வழக்குகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த கடத்தலில் உள்ள ஒரே ஒற்றுமை காணாமல் போனவர்கள் அனைவரும் எப்படி காணாமல் போனார்கள் என்றே தெரியவில்லை. இருக்கும் வேற்றுமைகளில் புலனாகிய ஒரே ஒரு ஒற்றுமை இதுதான்.

 

பல வழக்குகளை எளிதாக உடைக்கும் கணி, இந்த வழக்கின் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் மிகவும் அவதியுற்றான். இதில் இந்தப் புயல் வேறு மொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டது.ஏற்கனவே வழக்குத் ஓய்ந்து போயிருந்த நிலையில் மிகவும் தளர்வுற்று இருந்தது. கிடைத்த தகவலை கோர்வையாக கூட பார்க்க முடியவில்லை. அரசாங்கமும் பெரிதாக  எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. ஏன் இரு‌ தினங்கள் முன்பு அலறிக் கொண்டிருந்த ஊடகங்கள் கூட தற்பொழுது அமைதி காக்கிறது. அவர்களுக்கு அரைக்க அவல் இல்லையா என்ன..? இருக்கவே இருக்கிறது.‌ புயல் பற்றிய தகவலை நிமிடத்திற்கு நிமிடம் சுடச்சுட வழங்குகிறார்களே. அதில் அலங்கார வர்ணம் குழைத்து அரசியலாக்கி விடுவார்கள். தன்னிலையோடு சுயமாய் செயல்பட்ட புயலும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பது நகைப்புக்குறிய விடயமா இல்லை வியப்புக்குறிய விடயாமா என்பது விடையில்லா வினா.

 

ஆனால் இந்த வழக்கை கணி விடுவதாய் இல்லை. அரசு அமைதி காக்கிறது என்றால் இதில் நிச்சயம் பெரிய தலைக்கட்டுகளின் சம்பந்தம் இருக்கிறது என்ற நாடியை பிடித்துவிட்டான். அவன் இந்த வழக்கை விடாமல் தீவிரமாக விசாரணை செய்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவன் அணிந்திருக்கும் காக்கிச்சட்டை ஒரு காரணமாய் இருந்தாலும், அவனுடைய காதல் மனைவி மது பல்லவியும் இதில் கடத்தப்பட்டு இருப்பதுதான் அதி முக்கிய காரணம். ஏனெனில் அவள் இப்பொழுது ஈருயிராய் இருக்கிறாள். கைகளில் வேறு இரு வயது குழந்தை. அவள் தந்தையின் பாவச்சுமையை இன்றளவும் சுமந்து வருகிறாள். கைகளில் பாசச்சுமை, வயிற்றில் காதல் சுமை என்று சுமந்திருப்பவளைக் காணவில்லை என்றால் பதட்டம் வராதா என்ன. 

 

இவன் இந்த வழக்கில் தீவிரமாக இருப்பதைக் கண்டு, இவனை புயலுக்கான நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு ஆணை வேறு வந்தது. பணியின் நிமித்தமாக வேலைகளைச் சரியாக செய்ய வேண்டுமே. அதனால் அதனை பார்த்து கொண்டவன், கடத்தலுக்கான துப்பு கிடைக்குமா என்றும் அலைந்து திரிந்தான்.

 

********************

 

ஈரமற்ற ஈனச்செயல் புரிந்த புயலென்னும் அரக்கன், மக்களின் குடியிருப்புக்குள்ளும் புகுந்துவிட்டான். கப்பல்‌ கட்டும் கணித்ததை மறந்த வீரத்தமிழனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது இவனால். அம்… அன்று ஆழியில் மிதக்க மீப்பெரு மரக்கலம் கட்டியவன், இன்று வீட்டில் ஓடும் சாக்கடை நீரில் காகித கப்பல்கள் செய்துவிடுகிறான். மரபணுக்கள் பல மாற்றங்களுக்கு உற்பட்டாலும், இன்னும் கொஞ்சம் கப்பற் கணிதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது போல. அதன் வெளிப்பாடு தான் காகித கப்பல் போல.‌ துண்டிக்கப்பட்ட மின்சாரம், தொலைதொடர்பு சேவை என்று ஒரு தீபகற்ப தீவுக்குள் பல சுதந்திர தீவுகள் உருவாகிவிட்டது. சற்று உயர்த்தில்‌ பறந்து கொண்டே பரந்து விரந்த நிலப்பரப்பைப் பார்த்தால் தற்காலிக வெனிஸ் நகரம் உருவாகியது போல்‌ தோற்றமளித்தது. நீரில்லை என்று பஞ்சப்பாட்டு படித்தவன் வீட்டின் வாசலில் கங்கை ஓடுகிறது. குழாய்கள் மூலம் நீரைக் கொணர்ந்த முதல் தளத்தில் இருந்தவனுக்கு, குழாயை புறக்கணித்து நேரில் சென்று கதவுடைத்து நலம் விசாரித்தது. பின் தன்‌ கூட்டாளிகளைக் திரட்டிக் கொண்டு உருண்டு திரண்டு பிரண்டு பள்ளங்களின் மருண்டு சுதந்திரமாய் ஓடியது. மனிதன் அடைத்து வைத்துவிட்டானே. இந்த சுதந்திரம் இனி எப்பொழுது கிடைக்குமோ. அதனால் சலசலத்து ஓடியதால் வந்த களிப்பு. இது வெறும் வெற்றிக் களிப்பு அல்ல. என்னில் முகம் பார்க்கும் உன் பிம்பம் கலைத்து என்றாவது அச்சுருத்துவேன் என்ற எக்களிப்பு. என் தன்மை மறந்து திரியும் உனக்கொரு பாடம் என்ற எகத்தாளம். அதில் காகித கப்பல்களுடன் சேர்ந்து பல லட்சம் மதிப்புள்ள மகிழுந்துகளும் மிதவையாக மாறியிருந்தது. பரவாயில்லை. தமிழனின் கப்பற் கணிதம் போற்றுதலுக்குறியதுதான். ஏனெனில் அயல் நாட்டினரின் இயந்திரத்தை விட காகித கப்பல் சற்றே அதிக நேரம்‌ தாக்கு பிடிக்கிறது. அதைப் பார்த்து கைக்கொட்டி சிரிக்கிறது பிஞ்சு ஒன்று. அடித்துச் செல்லப்பட்ட மகிழுந்தை கண்டு வெதும்பி நின்றது முதிர்ந்த விழிகள் இருண்டு.

 

*********************

 

அடர் பனி படர்ந்து அழகாய் புலர்ந்த காலைப் பொழுது. வெண் புகை அடர்த்தி அதிகமாகி அவள் அவ்விடத்திற்கு மூடு பனியாகினாள். தன் பணியை சிரத்தையுடன் செய்து புலர்ந்த காலைப்பொழுதுக்கு மூடுவிழா நடத்திக் கொண்டிருந்தாள். அதில் ஊசியாய் தைத்த குளிர் உடலெங்கும் பரவி உடல் முழுக்க சில்லிட்டு இருந்தது தணிகைக்கு. நரம்புகளும் நாளங்களும் உறை பனியால் உறைந்து விரைத்துக் கொண்டிருக்க, வெள்ளை பணி சிறிது விலக, வெண்மை நிற ஆடையில் ஒரு உருவம் தென்பட்டது. அதுவும் அடர்ந்திருந்த பனியால் முகம் காண முடியவில்லை அவனால். யாரென்று இனம் காணவும் முடியவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு பனி புகைகளை கைகளால் துழாவி விலக்கினான். அவன் எப்படியும் அந்த உருவத்தை கண்டு விடுவது என்று வலுக்கட்டாயமாக கண்ணிமைகளை மூடாமல் பார்த்தான். 

 

வழக்கமாக அவனுக்கு இப்படி கனவுகள் வரும். பனிபடர்ந்த மலை பிரதேசத்தில் தன்னுடைய கனவு தேவதையை காண்பதற்காக இவனும் துயில் கலையாமல் பலமுறை முயன்று இருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட அவளின் முகம் கண்டதில்லை. அதற்குள் கனவு கலைந்துவிடும். செஞ்சூரியன் பனியை உருக்கி மண் தரையில் ஊற்றி விடுவான். இன்று எப்படியும் அவளின் வதனம் கண்டு விடுவது என்றுமுடிவு செய்து விட்டதால், கைகளால் துழாவி துழாவி தன் கண்களை மறைத்திருந்த பனிப்புகையை விலக்கினான்.

 

இவன் மனதில் வித்திட்டிருந்த ஆவலுக்கு இன்று செவி மடுத்தது சூழல். பனி விலகி கொஞ்சம் கொஞ்சமாக வதனம் புலப்பட ஆரம்பித்தது‌. வடிவாய் வளைவுகளுடன் அப்சரஸ் நங்கையினை எதிர்ப்பார்த்தவன் விழிகள் ஏமாற்றமடைந்தது. பின் அவனுடைய முகத்தை காணவா இத்தனை தவம்.  

 

“அடச்சை” என்று சலித்துக் கொண்டவன் அதிர்ந்து விழித்தான். இதயம் செயல்பாட்டை நிறுத்தி விட்டது.

 

‘அது சரி நான் என் கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். ஊனை ஊடுருவும் குளிருக்கு ஏன் என்னுடல் சிறிதும் சலனமில்லாமல் இருக்கிறது’ என்று பலவாறு சிந்தித்தவனுக்கு தூக்கி வாரி‌போட்டது. அவன் கண்டது பனிப்பிரதேசமும் இல்லை. அவனை சூழ்ந்திருந்தது உறைபனியும் அல்ல. பிணக்கிடங்கில்  இருக்கும் குளிர்பதன பேழை. அவனுடைய முகத்தை அந்த பேழையினுள் கண்டால் அவனுடைய இதயம் துடித்துடிக்காதா என்ன..? அவ்வளவு தான் போதும் கனவு என்று நினைத்தவன் வாரிச்சுருட்டி எழுந்து அமர்ந்தான்.

 

கனவில் இருந்து மீண்டு வந்தவனுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவன் இருக்கும் இடமே அவன் இதுவரை கண்டதில்லை. வழக்கமாக அவனுடைய அறையில் தானே உறங்கிக் கொண்டிருப்பான். இது என்ன விசித்திரமான ஒரு இடம் என்று அவன் பார்வையைச் சுழற்றி, தன்னை தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். ஒருவேளை இது  கனவுக்குள் ஒரு கனவா என்று.

 

அதீத ஆர்வத்தில் கொஞ்சம் அழுத்தமாக கிள்ளிவிட்டான் போல.

அவன் சதை பிடித்து கிள்ளிய இடம் நன்றாக கன்னிப் போக, மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு அந்த இடத்தை நோட்டமிட்டான். ஒன்றும் புலப்படுவது போல் தெரியவில்லை. அவன் இதுவரை மூளையை பெரிதாக பயன்படுத்தியதில்லை. பத்து நிமிடம் முன்பு அறுவடை செய்த கொத்தமல்லி தழையாய் புதிதாக இருந்தது மூளையில் இருந்த அணுக்கள் அனைத்தும்.

 

அவனைப் போல சிலர் அங்கு துயில் கொண்டிருந்தனர். துயில் கொண்டிருந்தனரா இல்லை மயக்கத்தில் இருந்தனரா என்று சிந்திக்கும் திராணியற்று அவன் மூளை திண்டாடியது. ஒவ்வொரு ஆளாய் ஊர்வலம் நடத்தியது அவன் விழிகள்.

 

இரண்டு இளம்பெண்கள் ஒரே உருவத்தில் இருந்தனர். இரட்டையர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் அருகில் மற்றொருத்தி. திருமணமானவள் போல. அவள் அருகில் இரண்டு வயது பெண் குழந்தை. 

 

அவர்களின் வலப்பக்கம் ஆஜானுபாகுவாக ஒருவன் படுத்திருந்தான். அப்பப்பா என்னவொரு உடற்கட்டு அவனுக்கு. ஒரே நேரத்தில் 20 நபர்களை வதைத்து விடுவான் போலவே என்று நினைத்தவன், அவனை முடி முதல் அடி வரை ஆராய்ந்த தணிகைக்கு ஒன்று புலப்பட்டது. இவன்தான் அவர்கள் அனைவரையும் கடத்தியவனாக இருப்பான் என்று. ஆனால் அவன் உறங்கிக் கொண்டிருக்கிறானே என்று நினைத்தவன்,  கடத்தி வந்த களைப்பில் உறங்குகின்றான் என்று முடிவு கட்டினான். மீண்டும் பார்வையை சுழல விட்டான். வயதில் முதிர்ந்த ஒருவர் படுத்து கிடந்தார். அவர் வலப்பக்கம் இவனையொத்த ஒருவன்.

 

இவன் தணிகைச் செல்வன். பொறியியல் படித்தவன். இன்னும் உருப்படியாக ஒரு வேலை கிடைத்தபாடில்லை. அதனால் வேலையில்லா பட்டதாரி என்று கூறலாம் இவனை. பெரிதாக வசதி வாய்ப்பும் இல்லை. இவனுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததுதான். அதனால் மிகவும் குழப்பம் அடைந்திருந்தான். தன்னை கடத்துவதால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்ற வினா எழுந்தது அவன் மூளையில். விசித்திரமாக அவன் மூளை சிந்தனை செய்ய ஆரம்பித்தது. ஆனால் அதை தட்டியவன் அவனே அதற்கொரு பதிலையும் கண்டறிந்தான். ஆள் மாற்றி கடத்திவிட்டனர் என்று.

 

அப்போது அந்த இரட்டையர்கள் இருவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.  அவர்களும் இவனைப்போல் திருதிருவென்று விழித்து, அந்த இடத்தை ஆராய்ந்து, சுய நினைவுக்கு வருவதற்கு பத்து நிமிடங்கள் பிடித்தது. அதுவரை அமைதியாக அவர்களைப்‌ பார்த்து கொண்டிருந்தான்.

 

இருவரும் என்ன நினைத்தனரோ.. வேகமாக எழுந்து வந்து தணிகையை அடித்து துவைக்க ஆரம்பித்தனர். இவர்களின் இந்த அதிரடியை அவன் துளியளவும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

“டேய்… ஸ்டுபிட், இடியட்… ஹவ் குட் யூ டூ திஸ்…” என்றாள் ஒருத்தி.

 

“ஹவ் டேர் யூ டூ திஸ்… எங்கள யாருன்னு நினைச்ச…?”

 

“தாயி… சத்தியமா தெரியாது‌ தாயி… உங்கள நான் கடத்தல… என்னைய விட்ருங்க…” என்று‌ கதறினான்.

 

இருவரும் சற்று நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தனர்.

 

“அப்பறம் வேற‌ யாரு கடத்துனா…”

 

“அதை மொதவே கேட்டுட்டுல்ல கை வச்சிருக்கணும் என்‌ மேல…”

 

“இப்ப சொல்லு… இல்ல இன்னொரு ரவுண்ட் போக வேண்டி இருக்கும்..”

 

“என்னைய‌ யாரு கடத்துனானே தெரியல… இதுல உங்கள கடத்துனது யாருன்னு எனக்கு எப்பிடி தெரியும்.”

 

“என்ன தெரியலையா..?”

 

“இங்க பாருங்க எத்தனை பேரை கடத்திருக்காங்க… இவுங்க எல்லாரும் முழிச்சா வேணா ஏதாச்சும் துப்பு கிடைக்கும்..”

 

அவனைப் பார்த்தாலும் பாவமாக தான் இருந்தது. இதில் அவனை அடித்து விட்டோமே என்று வருந்தினர் இருவரும். அவன்‌ களைந்து‌ போன சிகையும், விழியில் குடி கொண்டிருந்த மருட்சியும் சொல்லாமல் சொல்லியது, அவனும் இவர்களைப் போல் தெளிவற்ற நிலையில் இருக்கிறான் என்று. தங்களைப் போல் அவனும் கடத்தப்பட்டு இருக்கிறான் என்பதை நன்றாக புரிந்து கொண்டனர்.

 

“சாரி ப்ரோ… என்னோட பேரு ஆறெழில். இவளோட பேரு நேரெழில்..” என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டாள் ஒருத்தி.

 

“என்னைய அடிச்சு நொறுக்கிட்டு‌ இது ரொம்ப முக்கியம் இப்ப.. என் பேரு ஆறு… இவ பேரு நேரு… அவ பேரு ஏறுன்னு… மூஞ்சிய பாரு… பொம்பள பிள்ளைங்கதானே நீங்க… கையா அது… இல்ல உலக்கையா… உங்க வீட்ல நல்லது சொல்லி வளக்கல… ஒரு ஆம்பளைய கை நீட்டி அடிக்கிறீங்க..”

 

“அதெல்லாம் நிறைய‌ சொல்லி கொடுத்து வளத்துருக்காங்க.. அதோட கராத்தேயும் சேர்த்து சொல்லி கொடுத்திருக்காங்க..”ஆறெழில்.

 

“நான் என்ன சோதனை எலியா..? நீ கத்துக்கிட்டத எங்கிட்ட சோதிச்சு பாக்குற.. நான் என் மூளைக்கு கூட வேலை கொடுக்க மாட்டனே… என் உடம்பை இப்படி புன்னாக்கி வச்சிருக்காளுங்க…”

 

“சரி வெட்டியா‌ பேசாம அடுத்து என்ன செய்யலாம்னு‌ யோசி இப்பவாச்சும்… உங்கூட எங்கள கடத்தி எங்களைக் கேவலப்படுத்திட்டாங்க..” நேரெழில்.

 

“இந்த கிண்டல் நக்கல் நய்யாண்டி எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத.. பொலந்துருவேன்…” என்று‌ அவன் கூற,  இருவரும் ஒன்றாக நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தனர். 

 

“அதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்தோமே நீ பொலந்தத..” ஆறெழில்.

 

“நக்கலா பேசுறத விட்டுட்டு எப்படி தப்பிக்கலாம்னு யோசிங்க.. இந்த மாமிச மலை முழிக்கிறதுக்குள்ள..” என்று அவன் கூற, அவன் கைகள் சென்ற திசையைப் பார்த்த இருவருக்கும் பக்கென்று இருந்தது. ஏனெனில் அவருடைய உருவம் அப்படி.

 

அடுத்து மது பல்லவி விழித்தாள். விழித்தவள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அந்த இடத்தை ஆராய ஆரம்பித்தாள்.செவ்வகமாக இருந்த அந்த நீண்ட அறைக்குள் இவர்களைத் தவிற வேறு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. ஆங்காங்கு சிறிய பூந்தொட்டிகள். ஏன் இது பகலா இல்லை இரவா என்று கூட புலப்படவில்லை. கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. மீண்டும் களைப்பு தாளாமல் கண்களை மூடிக்கொண்டாள். 

 

அறெழில் அவள்‌ கன்னம் தட்டி எழுப்ப முயல, நேரெழில் தணிகையுடன் அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து வந்து அந்த மாமிச மலையின் தலையில் போட்டாள்.

 

எறும்பு கடித்தவன் போல் எழுந்து தட்டிவிட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான் அவன்.

 

ஆரல் தொடரும்…

 

அற்றைத் திங்களில் வர கணியும் மது பல்லவியும் இந்த கதைலையும் வராங்க. அற்றைத் திங்களில் பார்ட் 2னு கூட சொல்லலாம் இந்த கதையை. கொஞ்சம் காமெடி கலந்து நிறைய மர்மங்களோட இந்த கதையை நகர்த்த முடிவு செஞ்சிருக்கேன். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்