Loading

வானம் – 09

எதேட்சையாய் திரும்பியவள் சித்தார்த் தன்னையே பார்ப்பதை கண்டு, ‘என்ன!’ என விழி உயர்த்த, அவள் தன்னை கண்டுகொண்டதை உணர்ந்தவனுக்கு என்ன சொல்லி சமாளிப்பது எனப் புரியாமல் திருதிருவென முழித்துப் பின், ‘ஒன்னுமில்ல’ என்பது போல் தலையாட்டினான்.

அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் வேலையை செய்யத் துவங்க அவள் அருகில் இருந்த சம்யுக்தாவின் பார்வையில் இருவரின் பார்வை பரிமாற்றங்களும் தவறவில்லை. ‘சம்திங் இஸ் ராங்’ என அவள் மனம் உரைக்க, அவள் இதழ்களோ “எவ்ரிதிங் இஸ் ராங்” என முணுமுணுத்தது.

அவளின் முணுமுணுப்பை உணர்ந்து, “என்ன சம்யு?” என்றாள் சரயு. “ஒன்னுமில்ல டி. நீ வேலய பாரு” என்றவள், ‘ஆண்டவா இது எங்க போய் முடிய போகுதுனு தெரியலயே. ஏற்கெனவே சரயு அம்மா அவ அண்ணன் தன் அண்ணன் பொண்ண லவ் பண்றதயே ஏத்துக்க முடியாம நிறைய வேலத்தனம் பண்றாங்க. அது தெரிஞ்சும் இவ ஏன் இப்போ இப்படி பண்றா… ஆனா ஒன்னு என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியாம பலி ஆடா சிக்கிட்டேன். இன்னும் என்ன என்னலாம் பாக்கணுமோ’ என மனதினுள் புலம்பித் தீர்த்தாள் சம்யுக்தா.

ஜாதகம் பார்த்துவிட்டு வந்தவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே காட்டிக்கொடுத்தது அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் தான் நடந்திருக்கு என்பதை. அவராகவே சொல்வார் என அமைதியாக இருந்தாள் ரேவதி. ஜாதகம் பார்த்துவிட்டு நேராக தனது அண்ணனின் வீட்டிற்கு தான் வந்திருந்தார் தங்கம்மாள்.

“என்னமா ஏதோ வேலையா நீயும் மாப்பிள்ளையும் வெளிய போய்ட்டு வர்றீங்க போல?” என கேள்வியோடு வரவேற்றார் நல்லசுந்தரம்.

“ஆமா ண்ணா” என்றவாறே திண்ணையில் அமர்ந்தார் தங்கம்மாள். அவர் எதிரே நல்லசுந்தரமும் அமர்ந்தவாறே வீட்டினுள் எட்டிப் பார்த்து, “ரேவதி கண்ணு, அத்தைக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வந்து கொடு மா” என்றவர், “என்ன மா என்ன விசயம்?” என்றார் தன் தங்கையிடம்.

“எல்லாம் நம்ம பிரஷாந்த் கல்யாண விசயமா தான் ண்ணா. ஏற்கெனவே பொண்ணு பார்க்கிற விசயத்த உன்கிட்ட சொல்லிட்டு தான் ஆரம்பிச்சோம். இப்ப ஒரு வரன் கூடி வந்திருக்கு. அதான் மொதல்ல ஜாதகத்த பார்த்துட்டு உன்கிட்ட சொல்லலாம்னு ஜாகதம் பார்க்க நானும் அவரும் போய்ட்டு வந்தோம் ண்ணா” என்றார் தங்கம்மாள்.

அதற்குள் அவர்கள் அருகே ரேவதியும் வந்திருந்தாள். “இந்தாங்க அத்த” என சொம்பை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவர், “நம்ம ரேவதிய மருமகளாக்கிக்க தான் எனக்கு குடுப்பினை இல்லாம போய்ருச்சு” என்றவாறே நீண்ட பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவர், “வர்ற வரனாச்சும் நம்ம குடும்பத்தோடு ஒட்டுற உறவா அமையணும்ல ண்ணா. அதான் இங்க பக்கத்துல வந்த வரனையே பார்க்கலாம்னு இருக்கோம். நம்ம பக்கத்தூரு நாட்டாமை மவ, நம்ம ரேவதி, சரயு கூட படிச்ச புள்ள தான். பாக்க கண்ணுக்கு லட்சணமான புள்ளயா இருக்கு. ஜாதகத்துலயும் பத்து பொருத்தமும் இருக்கு. அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உன் வார்த்தைய கேட்டுக்கிடணும்ல ண்ணா. நீ சரினு சொன்னா அவுககிட்ட சொல்லி ரெண்டு குடும்பமும் ஒன்னா ஒருதடவ ஜாதகம் பாத்துட்டு அப்புறம் ஆகவேண்டிய காரியத்த பேசலாமே. என்னண்ணே சொல்ற!” என்றார் தங்கம்மாள்.

நல்லசுந்தரத்தின் பார்வை தன் மகளின்மேல் படிந்து மீண்டது. அவளோ வெற்று ஜடமாய் தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். “அதுக்கு என்னமா, நல்ல பதிலா அவங்களுக்கு சொல்லி அனுப்பு. ஒரு நல்ல நாளா பார்த்து எல்லாரும் ஒன்னா பேசி முடிவு எடுத்துக்கலாம்” என்றவர், பிரஷாந்தின் சம்மதத்தை தெரிந்து கொள்ளும்பொருட்டு “மருமவன் கிட்ட இதப்பத்தி பேசுனியா மா?” என்றார்.

“நம்ம புள்ளைங்க நம்ம பேச்ச மீறிருவாங்களா, என்ன ண்ணா!” என்றவர் பார்வை ரேவதியின்மேல் தான் இருந்தது. “அதெல்லாம் சொல்ற விதத்துல நம்ம தான் பக்குவமா சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கணும் ண்ணா. மொத நம்ம பெரியவங்களா பேசி முடிவு பண்ணிட்டு அவன்கிட்ட சொல்லிக்குவோம் ண்ணா” என்றார் தங்கம்மாள்.

“அப்போ சரி மா” என்றவர், “ஒரு வார்த்தை உன் அண்ணி காதுலயும் போட்ரு மா. அவ தோட்டத்து வரைக்கும் போய்ருக்கா. இப்ப வந்துருவா” என்றவர், “அம்மாடி ரேவதி, நான் வேலையா கொஞ்சம் வெளிய போகணும். உன் அம்மா வந்தோனே சொல்லிரு” என்றவர் வெளியே கிளம்ப, “இங்க வந்து செத்த உட்காரு ரேவதி. உன்கூட படிச்ச புள்ள தான ரம்யா… குணத்துல எப்படி மா? நம்ம பிரஷாந்த்துக்கு ஒத்து வருவாளா, கூட படிச்ச புள்ள… உனக்கு தெரியாதா! நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா?” என மேலும் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

ரேவதியின் கண்களில் இப்பவோ அப்பவோ என எட்டிப் பார்த்து விழக் காத்திருந்தன கண்ணீர்த் துளிகள். அதனை அடக்கிக்கொண்டு ஓரிரு வார்த்தைகளில் தன் அத்தையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பிக்க, அதற்குள் அவளை மீட்க வந்த ரட்சகியாய் அங்கு வந்து சேர்ந்தார் அவளின் அன்னை வாணி.

“அம்மாட்ட பேசிட்டு இருங்க அத்த, வந்தறேன்” என வேகமாய் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் ரேவதி. வாணியிடம் தான் கூற வந்ததை கூறி முடித்துவிட்டு, “நம்ம ரேவதிய கட்டிக்கலயேனு உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லயே அண்ணி?” என கேட்டு வைக்க, தன் மகளின் உள்ளத்தை ஏற்கெனவே அறிந்தவரால் என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல், “இல்லை” என பொத்தாம்பொதுவாய் தலையாட்டி வைத்தார் வாணி.

“சரிங்கண்ணி, நான் போய் சரயுகிட்ட இதப்பத்தி சொல்றேன். ஜாதகம் பாத்துட்டு அவக்கிட்ட சொல்றேனு வந்தேன். அவளும் அங்க எதிர்பார்த்துட்டு இருப்பா” என்றவாறே பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்கு செல்ல, வாணியோ நேராக தனது மகளின் அறைக்குத் தான் சென்றார்.

“ரேவதி கண்ணு” என அவளின் அறைக் கதவை தட்ட, நீண்ட நேரம் கழித்து கதவைத் திறந்தாள் ரேவதி. அவளது கண்கள் சிவந்திருக்க, கண்ணீர் தடங்கள் அவளது கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

“கண்ணு” என்றவரின்மேல் சரிந்தவளின் கேவல் இன்னும் அதிகமாக, தன் மகளை எவ்வாறு சமாதானம் செய்வது எனப் புரியாமல் தவித்தார் வாணி. பிரஷாந்த், ரேவதியின் காதல் விவகாரத்தை அறிந்த நாளிலிருந்தே தன் மகளை எச்சரித்துக் கொண்டே தான் இருந்தார் வாணி.

“என்னதான் பிரஷாந்த் உன் அத்தை மவனாவே இருந்தாலும் இதெல்லாம் சரிபட்டு வராது ரேவதி. உன் ஆசைய இப்பவே மூட்ட கட்டி வச்சுக்க, அதான் உனக்கு நல்லது” என பலமுறை தன் மகளிடமும் கூறி பார்த்துவிட்டார்.

ஆனால் ரேவதியோ, அப்பொழுதெல்லாம் “என் அத்தான் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு மா. என்னை தவிர வேறொருத்தி கழுத்துல அது தாலி கட்டாது. நீ வேணும்னா பாரேன், என் அத்தான் கட்டுன தாலியோட உன் நாத்துனார் வீட்லயே குடித்தனம் நடத்தி உனக்கு பேரபுள்ளைகளா பெத்துக் கொடுக்க போறேன். நீ எப்படி எப்படி பேரபுள்ளைகள வளர்க்கணும்னு இப்பவே யோசிச்சு வச்சுக்க மா” எனக் கூறி சிட்டாய் பறந்துவிடுவாள்.

தன் மகளின் ஆசை நிராசையாக போய்விடுமே என்ற பயம் இருந்தாலும், அவளின் வார்த்தைகளை கேட்டு நூற்றில் ஒன்றாய் அவளது வார்த்தைகள் பலித்துவிட வேண்டும் என வேண்டாத தெய்வங்களும் இல்லை.

“இதுக்கு தான் அப்பவே சொன்னேன், கேட்டியா?” என்ற வார்த்தைகளை தாண்டி அவரிடமும் வேறு வார்த்தைகள் இல்லாததிருக்கவும், அங்கு அழுகை ஒலி மட்டுமே எதிரொலித்தது.

தன் வீட்டிற்கு வந்த தங்கம்மாள் முதல்வேலையாக சரயுவிற்கு அழைப்பு விடுக்க வேலையில் இருந்தவள், தன் அன்னையின் அழைப்பைக் கண்டு, “இன்னிக்கு என்ன எழவ கூட்டப் போகுதோ” எனப் புலம்பியவாறே சற்று தள்ளி நின்று அழைப்பை ஏற்றாள்.

“சொல்லு மா” என வேண்டாவெறுப்பாய் வார்த்தைகள் வர, “பத்து பொருத்தமும் பொருந்தி வந்துருக்குனு நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு கண்ணு, உன் அண்ணன்கிட்ட இப்பயாச்சும் பேசிப் பாரேன்” என்றார் தங்கம்மாள்.

ஏற்கெனவே இதனை எதிர்பார்த்திருந்தாள் சரயு. அவர்களது குடும்ப ஜோசியர் இருவரின் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்து நாளை பதில் சொல்வதாக கூறி இருக்கவும் இன்று தனது அன்னையின் அழைப்பு வரும் என எதிர்பார்த்திருந்தவள், “சொல்றேனு தப்பா எடுத்துக்காத ம்மா. உன் ஜாதக நம்பிக்கைய நான் குத்தம் சொல்லல. பத்து என்ன அம்பது பொருத்தம் நீங்க பாத்து அத்தனையும் இருந்தாலும் மனப்பொருத்தம் ரொம்ப முக்கியம் ம்மா. கொஞ்சம் அவனுக்காக யோசி” என்றாள் பொறுமையாய்.

“ஏன்டி இத்தன நாளா பேசறேன் பேசறேனு சொல்லிப்புட்டு கடைசி நேரத்துல மனசு அது இதுனு கால வார்ற? ஏன், நானும் உன் அப்பாவும் இப்ப சந்தோசமா இல்லயா… எங்களுக்குலாம் யாரு மனப்பொருத்தம் பாத்தது! எல்லாம் பெரியவங்க பாத்து கட்டி வச்சா நல்லா இருப்போம்னு நம்பித் தான கட்டிக்கிட்டு உங்கள பெத்து இதோ இப்போ உங்க கல்யாணம் வரைக்கும் வந்துருக்கு. அதெல்லாம் தாலி ஏறுனா எல்லாம் சரியா போய்ரும். இனி உன்னை நம்பி பிரயோஜனம் இல்ல. நானே பேசிக்கிறேன்” என்றவர் அத்தோடு அழைப்பைத் துண்டிக்க, “அய்யோ அம்மா இன்னும் நீ எந்த காலத்துல இருக்க” என்ற சரயுவின் வார்த்தைகள் காற்றில் மிதந்தன.

_தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்