வானம் – 08
தாங்கள் வந்து நின்ற இடத்தைக் கண்டு அதிர்ச்சியோடு தன் தோழியை பார்க்க, “சரி, வா உள்ள போகலாம்” என்றவள் முன்னேறிச் செல்ல அவளது கைகளைப் பற்றி தடுத்தவள், “லூசா டி நீ? நேத்து அந்த பொண்ணோட அப்பா என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்கா… இல்ல, மறதி நோய் எதுவும் வந்துருச்சா?” என்றாள் கோபத்தோடு.
புன்னகையோடு அவளது கேள்வியை ஏற்றவள், “எதையும் மறக்கவும் இல்ல, எந்த மறதி நோயும் இல்ல. நான் ரொம்ப நல்லா தெளிவா தான் இருக்கேன். இப்போ உள்ள போகலாமா?” என்றாள் சரயு.
“நீ பண்றது எதுவும் சரியில்ல டி, ப்ளீஸ் இப்படியே ரிட்டன் போய்றலாம். வா” என அவளது கைப்பற்றி அழைத்துச் செல்ல முற்பட, “நீ மொத உள்ள வா” என அவளை இழுத்துக்கொண்டு சித்தார்த்தின் சூப்பர் மார்கெட்டிற்குள் நுழைந்தாள் சரயு.
“நான் வர மாட்டேன்” என அவள் முரண்டு பிடிக்க, “வா சம்யு” என அவளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றவள் சித்தார்த்தின் முன் நிற்க, கணினியில் கண்களை பதித்திருந்தவன் தன்முன்னே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்தான்.
“வணக்கம் சார்” என இரு கரங்களையும் கூப்பி சரயு வணக்கம் வைக்க, பதிலுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது அவனது முறையாயிற்று. ‘இப்ப எதுக்கு இந்த பணிவு!’ எனத் தோன்றினாலும் அவள் வணக்கத்தை ஏற்றதற்கு அடையாளமாய் தலையசைத்து வைத்தான் சித்தார்த்.
“என் பேரு சரயு, இவ என் பிரண்ட் சம்யுக்தா. ரெண்டு பேரும் பக்கத்துல உள்ள காலேஜ்ல தான் எம். எஸ்சி பைனல் இயர் படிக்கிறோம்” என அவள் தன் ஜாதகத்தையே ஒப்புவிக்க, சித்தார்த்தோடு சம்யுக்தாவுமே குழப்பத்தோடு அவளைப் பார்த்தனர்.
“உங்க ஷாப்ல பார்ட் டைம் ஷாப் வேகென்சி இருக்கிறதா கேள்விபட்டோம். எனக்கு தெரிஞ்ச ஆன்ட்டி ஒருத்தவங்க சொன்னாங்க. அதான் ரெண்டு பேரும் வந்தோம்” என்றாள் சரயு.
“அந்த ஆன்ட்டி பேர் கொஞ்சம் சொல்ல முடியுங்களா மேடம்?” என்றான் சித்தார்த். “ஓ… தாராளமா சார்” என்றவள், “கற்பகம்மாள்” என்றாள் சரயு.
“பெரிய இடத்து ரெகமன்டேஷன் போல!” என்றவனின் குரலில் இருந்தது கேலியா இறுக்கமா என்பதை பிரித்தறிய இயலாத வண்ணம் அமைந்திருந்தது அவனது வார்த்தைகள். ‘அவ்வளவு சொல்லியும் இங்க வந்துருக்கல்ல’ என அவனது கண்கள் கேள்வி எழுப்பவும் மறக்கவில்லை.
“சம்யு, எந்தவொரு உறவுக்கும் பேஸ்மட்டம் ஸ்ட்ராங்க்கா இருந்தா வேற ஒருத்தர் உள்ள வந்துருவாங்களோனு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல தான!” என வினவியவளின் பார்வை சம்யுக்தாவை பார்த்து இருந்தாலும் கேள்வியோ சித்தார்த்தை நோக்கித் தான் இருந்தது.
அது தனக்கான கேள்வி என்பதை புரிந்துக் கொண்டவன், “எனக்கு வேலைல சுத்தம் ரொம்ப முக்கியம். வேல நேரத்துல இப்படி வாயடிச்சுட்டு இருக்கக் கூடாது. அப்புறம் கஸ்டமர் என்ன கேட்டாலும் பக்குவமா பதில் சொல்லணும். உங்க கோபதாபங்களை எல்லாம் அவங்கமேல காட்டக்கூடாது. இதுக்கெல்லாம் சரினா இன்னிக்கே கூட நீங்க ரெண்டு பேரும் வேலைல சேர்ந்துக்கலாம்” என்றவன், அவர்களது பதிலுக்காக காத்திராமல் கணினியில் மீண்டும் கண்களைப் பதித்தான்.
“வேலைன்னு வந்துட்டா நாங்களும் சரியா தான் இருப்போம் சார்” என்றவள், “இன்னிக்கே வேலைல சேர எங்களுக்கு சம்மதம்” என்றாள் சரயு. சம்யுக்தாவோ அவளது கைகளைப் பற்றி முறைக்க அவளோ காதோரம், “கூல் பேபி, நீங்க சில்லுனு ஆக ஒரு ஜஸ்கிரீம் வாங்கித் தரவா!” என்றாள் சரயு.
“ஒரு மண்ணும் வேண்டாம். உன்கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என புலம்பிக்கொள்ள, அது சித்தார்த்தின் காதிலும் விழுந்தது.
“பாண்டியா” என பாண்டியனை அழைக்க, கிட்டத்தட்ட சித்தார்த்தின் வயதை ஒத்த ஒருவன் அவர்கள்முன் வந்து நின்றான். “இவங்க ரெண்டு பேரும் புதுசா வேலைக்கு வந்துருக்கிறவங்க. என்ன என்ன பண்ணனும்னு சொல்லிக் கொடுத்துருங்க” என்றவன் கர்மசிரத்தையாய் மீண்டும் அவனது பணியைத் தொடர, இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள் சரயு.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவர்களே தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்வார்கள் என்பதால் இவர்களுக்கு வேலை ஒன்றும் அத்தனை கடினமானதாக அமையவில்லை. வாடிக்கையாளர் தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே இவர்கள் அதனை தேடி எடுத்துக் கொடுப்பதும், எந்த பொருளாவது ஸ்டாக் தீர்ந்து விட்டால் உடனே அதனை பாண்டியனிடம் தெரிவிக்க வேண்டும். இதுதான் அவர்களின் பணியாக அமைந்திருந்தது.
குடோனில் பொருள்களை இறக்குவதற்கும் சரக்கு தீர்ந்துவிட்டால் அதனை சித்தார்த்திடம் தெரிவிப்பது, அங்கு வேலை செய்பவர்களை மேற்பார்வை இடுவதும் தான் பாண்டியனின் வேலையாக இருந்தது. கூடவே இன்னும் இரண்டு பேர் அங்கு வேலை பார்க்க, அவர்களோடு அதிகம் ஒட்டி உறவாடாவிட்டாலும் பார்க்கும்போது ஒரு சிறு புன்னகையோடு கடந்து சென்றார்கள் சரயுவும் சம்யுக்தாவும்.
சரயு வந்த அடுத்த அரைமணி நேரத்தில் இதழிகாவும் தன் தாத்தாவோடு அங்கு வந்திருந்தாள். “ப்பா” என்ற அழைப்போடு உள்ளே நுழைந்தவளைக் கண்டதும் அனிச்சையாக அவனது பார்வை அங்கே வாடிக்கையாளருக்கு ஏதோ பொருள் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த சரயுவின் மேல் தான் படர்ந்தது.
“இதழி மா” என்றவாறே அவளை தூக்கிக் கொண்டவன், தன் வேலையை செய்துகொண்டே அவளோடு சிறிதுநேரம் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, அதுவரை சரயு அவர்களின் பக்கம் வராமல் இருப்பது ஏனோ ஆச்சரியத்தை உண்டாக்கியது.
‘உண்மையாவே இந்த பொண்ணு வேலைக்காக தான் வந்துருக்கா… இல்ல நான் எதுவும் சொல்லிருவேன்னு இதழி மா பக்கம் வராம இருக்கா! ஆனா, அதுக்கு வாய்ப்பில்லயே. பேஸ்மட்டம் அது இதுனு டயலாக் விட்டுச்சே! டே சித்தார்த் உன்னையவே ரொம்ப குழப்புது இந்த பொண்ணு. எதுக்கும் அதுகிட்ட எச்சரிக்கையா இரு’ என மனதினுள் பேசிக் கொண்டிருந்தவனை உலுக்கினாள் இதழிகா.
நீண்டநேரம் அவனது கவனம் சரயுவின் மேல் இருந்ததால் அவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்று உணர்ந்த இதழிகா, “ப்பா” என அவன் கன்னம் தட்டினாள்.
“சொல்லு டா இதழி மா” என்க, அவளோ கண்களை சுருக்கி அவனை முறைக்க, “என் செல்லக்குட்டி ஏன் இப்போ முறைக்கிறாரு, அப்பா அப்படி என்ன தப்பு செஞ்சேன்?” என்றான் கொஞ்சலாய்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டு இருந்தேன் ப்பா?” என எதிர்கேள்வி கேட்க, அவனோ திருதிருவென முழிக்கத் தொடங்கினான். சரயு பற்றிய யோசனையில் தன் மகள் பேசிக் கொண்டிருந்ததை காது கேட்டிருந்தாலும் அது மூளையில் சென்று பதிவாகாததால் “ஙே” என முழிக்க அவனை செல்லமாய் முறைத்தவள்,
“நான் சரயு கூட போய் வேல செய்றேன் ப்பா” என்றவாறே அவனது கைகளில் இருந்து தானாகவே இறங்கி அவனது பதிலை எதிர்பார்க்காமல் சரயுவிடம் ஓடினாள். அவளை தடுக்க முடியாமல், “மெதுவா போ இதழி மா. கீழ விழுந்துறாத!” என்று மட்டுமே கூற முடிந்தது அவளிடத்தில்.
“சரயு” என ஓடி வந்தவளை வாரி அள்ளிக் கொண்டவள், “கியூட்டி” என்றவாறே அவளது முகமெங்கும் முத்தங்களைப் பதித்தவளின் பார்வை தன்னிச்சையாக சித்தார்த்தை நோக்கியது.
அவனும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அடுத்த நொடியே அவனை கண்டுகொள்ளாமல் இதழிகாவின் புறம் திரும்பி அவளோடு பேச ஆரம்பித்தவள், “நான் நேத்து சொன்ன மாதிரி நம்ம வேலைய ஸ்டார்ட் பண்ணுவோமா கியூட்டி?” என கண்ணடிக்க, இதழிகாவின் தலை சரியென வேகமாக ஆடியது.
“சரி வாங்க” என்றவள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்த பகுதிக்குள் நுழைந்தவள், “இதுதான் இனி உங்களோட ப்ளேஸ் கியூட்டி. இங்க தான் நீங்க உங்க வேலைய ஆரம்பிக்கணும்” என்றாள் சரயு.
கட்டை விரலை உயர்த்தி சரியென்றவள், அங்கு அவளையொத்த வயதுடைய குழந்தை ஒன்றோடு ஒரு பெண் வருவதைக் கண்டு, “நான் போய் என் வேலைய செய்றேன் சரயு” என்றவள் வேகமாக தன் வேலையை பார்க்கச் சென்றாள்.
அவர்கள் இருவரும் பேசுவது அவனுக்கு கேட்கவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் குழந்தைகள் பகுதிக்கு செல்வதைக் கண்டு, “அங்க எதுக்கு போறாங்க ரெண்டு பேரும்” என்ற யோசனையோடே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
இருவரும் கட்டைவிரலை உயர்த்தி ‘ஆல் தி பெஸ்ட்’ கூறிக்கொண்டு தன் வேலையை பார்க்க சரயு நகர, இதழிகாவும் அங்கு வந்த பெண்ணிடம் பவ்யமாக, “உங்களுக்கு என்ன வேணும் ஆன்ட்டி?” என தன் வேலையை ஆரம்பித்தாள்.
தன் மகளை ஒத்த பெண் விற்பன்னராக இருப்பதைக் கண்டு ஆச்சரியத்தோடு, “நீங்க இங்க என்ன பண்றீங்க பாப்பு?” என வினவினார்.
“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்” என தலைசாய்த்து கூறியவளைக் கண்டு, “ஆஹான், நீங்க தான் இந்த கடையோட ஓனரம்மாவா!” என்றார் புன்னகையோடு அந்த பெண்.
“எப்படி கண்டுபிடிச்சீங்க, அவரு தான் எங்க அப்பா” என சித்தார்த்தை நோக்கி கைக்காட்ட, “குட் கேர்ள்” என்றவர், தன் குழந்தைக்கு தேவையான சிறுசிறு பொருட்களை கேட்க ஆர்வமாக அந்த பொருட்களை எல்லாம் தேடிப்பிடித்து காட்டத் துவங்கினாள் இதழிகா. அதனை சற்று தொலைவில் இருந்து பார்த்த சரயுவின் முகத்தில் புன்னகை தோன்றி மறைய சித்தார்த் தான் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
ராமமூர்த்தி தன் மகன் அருகே வர, “இங்க என்ன பா நடக்குது?” என வினவியவனிடம் நேற்று நடந்தவைகளைக் கூறத் தொடங்கினார் அவர்.
ஹாலில் அமர்ந்து சிவாஜி படமொன்றை பார்த்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. “ஆன்ட்டி” என்றவாறே சரயு கதவைத் தட்டினாள்.
கதவு திறந்திருந்ததால் அவளைக் கண்டுகொண்ட ராமமூர்த்தி, “உள்ள வா மா” என அழைத்தவர், “கற்பகம், கொஞ்சம் இங்க வா மா” என தன் மனைவியையும் அழைக்க பேத்தியை இடுப்பில் வைத்தவாறே சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் கற்பகம்மாள்.
“வா மா சரயு” என்றவாறே அவர் வெளியே வர, “சரயு” என்றவாறே அவளிடம் தாவிக் கொண்டாள் இதழிகா. “நீங்க என்னைத் தேடி ஹாஸ்டல் வந்ததா வார்டன் சொன்னாங்க ஆன்ட்டி. அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றவள், நின்றுகொண்டே இருக்க, “முதல்ல உட்காரு மா” என்றார் ராமமூர்த்தி.
அவள் முதலில் மறுக்க, மீண்டும் வற்புறுத்தவும் அங்கிருந்த ஷோஃபாவில் அமர்ந்தவள் இதழிகாவை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் சரயு.
“சாரி ஆன்ட்டி, ரெண்டு, மூணு நாளா ப்ராஜெக்ட் வொர்க்னால ஹாஸ்டலுக்கு வரவே நைட் ஆகிருச்சு. அதான் கியூட்டிய கூட பார்க்க வர முடியல” என மன்னிப்பு வேண்ட, “அச்சோ பரவால்ல மா, அதுக்கு எதுக்கு சாரிலாம் கேட்டுக்கிட்டு. உன்னை பாக்காததால குட்டிமா தான் ரொம்ப ஏங்கிப் போய்ட்டா, அதான் உனக்கு உடம்பு எதும் சரியில்லாம இந்த பக்கம் வராம இருக்கியோனு நினைச்சு உன்னை பார்க்க வந்தேன்” என்றார். இருவருமே ஆளுக்கொரு காரணம் கூறிக் கொண்டாலும் சற்று நேரம் அங்கு கனத்த அமைதி நீடித்தது.
அந்த அமைதியை கலைத்தது கற்பகம்மாள் தான். “யாராச்சும் ஏதாவது சொல்லிப்புட்டாங்களோனு பயம். அதான் உன்னை பார்க்க வந்துட்டேன், தப்பா எடுத்துக்க வேண்டாம் மா” என அவர் தான் வந்ததன் உண்மையான நோக்கத்தை கூறிவிட வேகமாக மறுதலித்தாள் சரயு.
“அப்படிலாம் இல்ல ஆன்ட்டி” என்றவள், “ஆன்ட்டி நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என சரயு தயங்க, “சொல்லு மா” என்றார் கற்பகம்மாள்.
“நேத்து உங்க கடைக்குப் போய்ருந்தேன். அங்க பார்ட் டைம் ஜாப் வேகென்சி இருக்கிறதா நோட்டிஸ் ஒட்டி இருந்தாங்க. ப்ராஜெக்ட் வொர்க் இருக்கிறதால பிரிண்ட் எடுக்க, கம்யூட்டர் வொர்க்னு கொஞ்சம் செலவு அதிகமா ஆகுது. ஏற்கெனவே ஹாஸ்டல் பீஸ் வேற அதிகமா இருக்கிறதால அப்பாகிட்டயும் கேட்க முடியல. அதான் ஈவ்னிங் டைம்ல வொர்க் போகலாம்னு நானும் என் பிரண்டும் முடிவு எடுத்திருக்கோம். உங்க கடைல எங்களுக்கு வேல போட்டு தர முடியுமா?” என்றாள் சற்று தயங்கியவாறே.
“அட, இதுக்கு ஏன் மா தயங்கிக்கிட்டு இருக்க. இந்த வயசுலயே அப்பா, அம்மாவ சிரமப்படுத்த வேண்டாம்னு உன் செலவுக்காக வேலைக்கு போறேனு சொல்ற. இது ரொம்ப நல்ல விசயம் மா. நாளைக்கு நீயும் உன் பிரண்டும் நம்ம கடைக்கு போய் வேலைல சேர்ந்துக்கோங்க. நான் சித்தார்த் வந்தோனே சொல்லிடறேன்” என்றார் கற்பகம்மாள். அவர் மனதில் சரயு இன்னும் கொஞ்சம் பலமாக அடிதளமிட ஆரம்பித்திருந்தாள்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவள், “அப்புறம் இன்னொரு விசயம்…” என தயங்கியவாறே, “கியூட்டிக்கு இங்க யாரும் பிரண்ட்ஸ் இல்லனு நினைக்கிறேன். அவ இந்த வயசுக்கான சந்தோசத்தை அனுபவிக்காம வீட்டுக்குள்ளயே இருந்தா நாளைக்கு பெரிய பொண்ணானதும் இந்த சமூகத்த சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா ஆகிரும் ஆன்ட்டி. நீங்க வயசுல மூத்தவங்க, உங்களுக்கு நான் சொல்லி புரியணும்னு இல்ல. இங்க இருந்தா தான கியூட்டிய யாராவது ஏதாவது சொல்லிருவாங்கனு பயப்படுறீங்க. இதே, அவ உங்க கடைக்கு வந்தா அந்த பயம் இருக்காதுல்ல” என்றவள் அவர் முகம் பார்த்திட, கற்பகம்மாளோடு ராமமூர்த்தியும் அவள் சொல்ல வருவது புரியாமல் அவளைப் பார்த்தனர்.
“ஈவ்னிங் டைம்ல கியூட்டிய கடைக்கு கூட்டிட்டு வந்து விட்டா என்கூட அவளும் வேல பார்க்கட்டுமே… கடைல குட்டீஸ்களுக்கான செக்ஷன் இருக்குல்ல. அங்க கியூட்டி இருந்தா வர்ற கஸ்டமருக்கு தன் குழந்தைகளுக்கு தேவையானத தேர்ந்தெடுக்க இன்னும் ஈசியா இருக்கும். பேரெண்ட்ஸ் கூட வர்ற குழந்தைகளோட பழகிற வாய்ப்பும் கியூட்டிக்கு கிடைக்கும்” என்றவள் அவர்களின் சம்மதத்தை எதிர்பார்த்து அவர்களை நோக்கினாள் சரயு.
அவள் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது. ஒரு தைரியத்தில் இதனைக் கூறி விட்டாள் தான். அதிக பழக்கமில்லாத தான் அவர்களிடம் இவ்வாறு கூறுவதை இருவரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயபந்து மனதில் உருண்டுகொண்டு தான் இருந்தது.
கற்பகம்மாளும் ராமமூர்த்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, இதழிகாவோ எதுவும் புரியாமல் சரயுவிடம் ‘என்ன’ என வினவினாள். ‘ஒரு நிமிடம்’ என கண்களாலே அவளை அமைதிப்படுத்தியவள் கற்பகம்மாளை பார்க்க, அவரோ புன்னகை முகத்தோடு, “நாங்க இதுவரைக்கும் இப்படி ஒரு கோணத்துல யோசிக்கவே இல்ல மா. எங்க பேத்தி எப்பவும் சந்தோசமா இருக்கணும். அதுனால எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்” என்றவர், “ஆனா சித்தார்த் என்ன சொல்லுவான்னு தான் தெரியல மா” என்றார் தயக்கமாய்.
“அவர்கிட்ட இதப்பத்தி சொல்ல வேண்டாம் ஆன்ட்டி. நாளைக்கு நாங்க வேலைக்கு சேர்ந்தோனே கியூட்டிய அங்கிள் கடைக்கு கூட்டிட்டு வரட்டும். மீதிய நான் பார்த்துக்கிறேன்” என்க, இருவரும் சரியென்றனர்.
இதழிகாவிடமும் பக்குவமாய் எடுத்துக் கூறியவள் அத்தோடு, “நம்ம ரெண்டு பேரும் தினமும் மீட் பண்ணனும்ல. அப்போ நீங்களும் சமத்துப் பொண்ணா தாத்தாவோட கடைக்கு வந்தறணும். ஓ கே’வா” என்றிட இதழிகாவோ அவளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே வேகமாய் தலையசைத்தாள்.
“குட் கேர்ள்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டவள், “நாளைக்கு நம்ம கடைல மீட் பண்ணலாம்” என அவள் கிளம்ப தன் பேத்தியை பற்றிய பயம் சற்று விலகியது போல் இருந்தது கற்பகம்மாளிற்கு.
தன் தந்தை கூறியதைக் கேட்டவன் சரயுவை பார்க்க, அவளோ கர்மசிரத்தையாய் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். அடுத்து அவனின் பார்வை இதழிகாவின் புறம் திரும்ப, முகமெங்கும் பூரிப்போடு ஓடிஓடி ஒவ்வொரு பொருளாய் எடுத்துக்கொண்டே வாடிக்கையாளரிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. அதற்கு காரணமானவளை பார்த்தவன் மனதினுள் மானசீகமாக நன்றியை தெரிவித்துக்கொள்ள ஏதோ ஒரு உந்துதலில் அவனை நோக்கினாள் சரயு. இருவரின் கண்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கத் தொடங்கியது.
_தொடரும்
Next epi epo varum sagi
Oru kallula rendumangava 🥰🥰🥰